படித்துத் தெரிந்து கொள்வதுடன், படித்தன் வாயிலாகத் தெளிவுபெற வேண்டியதும் மிக முக்கியமானதாகும். புத்தகங்கள், உண்மை உறங்கும் இடங்களுக்குள் செல்வதற்கான திறவுகோல்கள்.
சீக்கிய குரு தேக் பகதூரின் நினைவு போற்றும் நிகழ்வு அண்மையில் டெல்லி செங்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அடுத்த நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றனர். எந்த செங்கோட்டையில் குரு தேக் பகதூருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, கொல்லப் பட்டாரோ அதே செங்கோட்டையில் அவருக்கு விழா என்று புகழ்ந்தனர். காஷ்மீரப் பண்டிட்டுகளுக்குப் பாதுகாப்பாக இருந்தவர் குரு தேக் பகதூர் என்று போற்றினர்.
இருவர் பேசியதும் உண்மைதான். மொகலாய மன்னர் அவுரங்கசீப்பால் செங்கோட்டையில் கொல்லப்பட்டவர் சீக்கியர்களின் ஒன்பதாவது குரு தேக் பகதூர். காஷ்மீர் பண்டிட்டுகள் தங்களின் பாதுகாப்புக்காக அவரை நாடிவந்ததும் உண்மை.
ஆனால், அவை மட்டும் தானா உண்மை? அதற்கு முன்பும் பின்புமான உண்மைகளும் நிறைய உண்டு. அந்த உண்மைகளை இரத்தமும் சதை யுமாக நமக்கு எடுத்துரைக்கிறது Captivating The Simple Hearted (A struggle for the human dignity in the Indian Sub continent) என்ற புத்தகம். பீட்டர் ஃப்ரெட்ரிக்லி பஜன் சிங் ஆகியோர் எழுதிய இந்தப் புத்தகத்தைத் தமிழில் ‘குருதியில் பூத்த மலர்கள்’ என்ற தலைப்பில் மிகச் சிறப்பாகவும் மூலத்தின் சாரத்தை நேர்த்தியாக வும் தந்திருக்கிறார் எழுத்தாளர் அனிதா என்.ஜெயராம். டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வெளியீடு.
“வட இந்தியாவில் 14 மற்றும் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சக்திமிக்க ‘சந்த்’களின் சாதி எதிர்ப்புப் பாரம்பரியத்தில் வளர்ந்து, குரு நானக்கும் அவருக்குப் பின் வந்த குருக்களும் 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மத இயக்கமாய்ப் படிப்படியாக உருப் பெற்றார்கள். அந்த மத இயக்கம், தீண்டத்தகாதவர்களுக்கும் ‘கீழ்ச்சாதி’ என்று கருதப்பட்ட உறுப்பினர்களுக்கும், தாங்களும் ஒரு மரியாதைக்குரிய சமூக வாழ்கை வாழ அனுமதிக்கப்படவேண்டும் என்ற ஒருங்கிணைந்த கூக்குரலானது.
சாதிய வேற்றுமைகளையும் முரண்களையும் களைய அவர் (குருநானக்) ‘சங்கத்’ (ஒன்றுகூடல்) மற்றும் ‘பங்கத்’ (கூடி உணவருந்துதல்) ஆகியவற்றுக்கான அடித்தளத்தை அமைத்தார். அவ்வாறே பத்து குருக்களும் வர்ண பேதங்களை யும் சாதியையும் அகற்றத் தேவையான செயல்பாடுகளை முன்னெடுத்தனர்” என்கிறது புத்தகத்தின் முகவுரை.
இந்திய ஆதிவாசிகள் மீதான மனிதாபிமான செயல்பாடு களுடன், சாதியக் கட்டமைப்பைத் தகர்ப்பதற்காக ஆட்சியாளர் களைத் துணிந்து எதிர்த்து தங்களையே தியாகம் செய்த சீக்கிய குருமார்களின் வரலாறு இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐந்தாவது குரு அர்ஜூன் மீது மொகலாய மன்னர் ஜஹாங்கீர் கொண்டிருந்த பகையும், குரு அர்ஜூன் துன்புறுத் தப்பட்டு கொல்லப்பட்ட விதமும் புத்தகத்தில் பதிவாகியிருக் கிறது. அத்துடன், மொகலாயப் பேரரசுக்கும் சீக்கிய குருக்களுக் கும் இடையே பகையை வளர்த்த ‘சமஸ்கிருதச் சிந்தனையாளர் கள்’ பீர்பால், சந்துஷா ஆகியோரின் திருவிளையாடல்களும் பதிவாகியுள்ளன.
குரு அர்ஜூனைக் கொன்றால் சீக்கிய நெறிமுறை தகர்ந்துவிடும் என்கிற அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, ஒவ்வொரு குருவும் முன்னிலும் வேகமாக, சாதிக்கெதிரான செயல்பாடுகளை முன்னெடுத்ததையும், உயிர் பறிபோவது பற்றிக் கவலைப்படாமல், தங்கள் தலையைக் கையில் ஏந்திக் கொண்டு செல்லும் மனவலிமையுடன் செயல்பட்டனர் என்பதை யும் புத்தகத்தின் அட்டை முதல் கடைசிப் பக்கம் வரை ஆதாரங் களுடன் பதிவு செய்திருக்கிறார்கள் அதன் ஆசிரியர்கள்.
மொகலாயப் பேரரசின் நிர்வாகத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, “அவுரங்கசீப் தம்முடைய உயர் அலுவலகங்களில் இந்துக் களைப் பணியமர்த்துவதைத் தொடர்ந்தார். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தளபதிகள் நியமிக்கப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ரகுநாத் என்னும் பிராமணர், அவுரங்கசீப் அவையில் தற்காலிக வருவாய் அமைச்சராகப் பணிபுரிந்தார். அவுரங்கசீப்புக்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதியேற்ற ஒரு நிர்வாகக் குழுவுடன் ரகுநாத்தும் இணைந்துகொண்டார். முன்பிருந்த பேரரசர்களின் ஆட்சிக்காலத்தைவிட (அவுரங்கசீப் ஆட்சிக்காலம்) உயர்சாதியினருக்கு (பிராமணருக்கு) மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்கிறார்கள் நூலாசிரியர்கள்.
இத்தகைய செல்வாக்குடன் இருந்தவர் களின் துணையை நாடாமல், காஷ்மீர பிராமணர் களான பண்டிட்டுகள் ஏன் சீக்கிய குருவான தேக் பகதூரை நாடினார்கள்?
“கி.பி. 1400-கள் முதல் காஷ்மீர் பண்டிட்டுகள் பிராமணியச் சித்தாந்தத்திலிருந்து வெகுதூரம் விலகிச்சென்றார்கள். சிலர் சீக்கியர்களாக மாறினார்கள். மற்றவர்கள் இஸ்லாமியர்களோடு கலப்பு மணம் புரிந்தவர்கள். இஸ்லாத்துக்கு மாறாவிட்டாலும், இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் பின்பற்றத் தொடங்கினார்கள். பண்டிட்டுகள், கி.பி.1600-களின் மத்தியிலிருந்தே பிராமணர்களோடு ஒருவித பகைமையை வளர்த்து வந்தனர். இரண்டு சமூகத்தினரும் ஒருவரை ஒருவர் தீண்டத்தகாதவர்களாகவே நடத்தினார்கள்”
-இத்தகைய காரணங்களால் மொகலாயப் பேரரசர்களிடம் பண்டிட்டுகள் நெருங்காதபடி பிராமணர்கள் கவனமாக இருந்தனர். பேரரசில் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பண்டிட்டுகளிடம் விட்டுக்கொடுக்க பிராமணர்கள் தயாராக இல்லை. பகை காரணமாக, பண்டிட்டுகளும் அவர்களை நெருங்கவில்லை. அதனால்தான், அவுரங்கசீப் அரசின் அடக்கு முறையிலிருந்து தங்களைப் பாதுகாக்கும்படி, எல்லா மதங்களின் சுதந்திரத்தையும் வலியுறுத்திய சீக்கிய குரு தேக் பகதூரை பண்டிட்டுகள் நாடினார்கள். அவர்களுக்காக தன் நம்பிக்கைக்குரிய 3 ஆலோசகர்களுடன் அவுரங்கசீப்பை சந்திக்கச் சென்ற நிலையில்தான், ஆலோசகர்களும் குரு தேக் பகதூரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் என்ற உண்மை வரலாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பேரரசர்கள் ஆட்சிக்காலத்திலும் சுதந்திரத்திற்குப் பிறகான ஜனநாயக ஆட்சியிலும் இந்தியாவில் மதவெறி சக்திகள் கலவரம் விளைவிப்பதற்கு காரணம், சாதிப் படிநிலையைக் கட்டியமைக்கும் வருணாசிரம சக்திகளே என்பதையும் இப்புத்தகம் விளக்கியுள்ளது. பாபர் மசூதி இடிப்பு, குஜராத் தில் நடத்தப்பட்ட மதவெறிப் படுகொலைகள், உணவுப் பழக்கத் திற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என அன்று முதல் இன்று வரை ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான அதிகாரத் தில் இருந்தவாறு மற்ற சமூகத்தினரை ஒடுக்குவது யார் என்பதும் விரிவாகப் பதிவாகியுள்ளது.
செங்கோட்டையில் நடந்த விழாவில், சீக்கிய குரு கொல்லப்பட்ட இடத்திலேயே அவரது நினைவைப் போற்று வதாக பிரதமரும் உள்துறை அமைச்சரும் பெருமைகொண்டனர்.
அதே செங்கோட்டையில்தான் 2021 ஜனவரி 26 குடியரசு நாளன்று, வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்துப் போரிட்ட பஞ்சாப் விவசாயிகள் ஒரு கொடியை ஏற்றினர்.
அது ‘காலிஸ்தான்’ கொடி என்று கூப்பாடு போட்டனர் பிரதமரும் உள்துறை அமைச்சரும் சார்ந்திருக்கக்கூடிய காவிக் கொடிக் கட்சியினர். ஆனால், அது சீக்கியர்கள் கோரிய காலிஸ்தான் எனும் தனிநாட்டிற்கான கொடி அல்ல.
சீக்கிய குரு ஹர் கோவிந்தால் தொடங்கப் பட்ட ‘அகால் தக்த்’ என்ற நிறுவனத்தில் கி.பி.1608-ஆம் ஆண்டு ஏற்றப்பட்ட தேசியக் கொடி. அதன் பெயர், ‘நிஷான் சாஹிப்’. அனைத்து மக்களும் சமம் என்பதையும் ஒடுக்கப்படுவோரின் விடுதலையையும் வலியுறுத்தும் கொள்கைக்கான கொடி அது.
அதனை ஏற்றியவர்களை தேசவிரோதி களாக சித்தரித்தவர்கள்தான், தேசத்திற்கு வரலாற்றுப் பாடம் எடுக்கிறார்கள். கைகளிலும் பற்களிலும் படிந்துள்ள குருதிக் கறை மறையா மலேயே!