"அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு''

-என்பார் வள்ளுவர்.

"உயிரும் உடலும் இணைந்திருப்பது போல், அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த வாழ்வாகும்' என்பதே இதன் பொருளாகும்.

Advertisment

இந்தக் குறளின் இலக்கணப்படி, மக்கள் மீது அன்பு வைத்து, அந்த அன்பையே செயலாக்கிக் கொண்டு, மக்களுக்காகவே உழைத்தவர் நமது மரியாதைக்குரிய தோழர் அண்ணன் நன்மாறன் ஆவார்.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றபடி அவர் களுக்காகவே துடித்துக் கொண்டிருந்த அவரது இதயம், கடந்த 28-ஆம் தேதி அமைதியில் உறைந்துவிட்டது.

அவரை அறிந்தவர்கள், ஒரு மாமனிதரை இழந்து விட்டோமே என்று கலங்கியபடியே கைபிசைகிறார் கள். தமிழக அரசியல் கட்சிகள் பலவும் அவருக்காக ஆழ்ந்த இரங்கலை வெளியிட் டன. அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சி யைத் தாண்டியும், அவருக்காக கண்ணீர்த் துளிகள் அதிகம் உதிர்ந்தன. ஒட்டு மொத்த மதுரை மக்களும் கனத்த துயரத்தை இதயத்தில் சுமந்து கொண்டிருக்கிறார்கள். தோழர் அண்ணன் நன்மாறனின் மரணம், ஒரு பெரும் அதிர்வையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

அவரது உடல் மதுரை மஹபூப் பாளையம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட போதும், தத்தனேரி இடுகாட்டில் அவருக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்ட போதும், மதுரை மக்களும் தோழர்களும் பெருமளவில் கூடி இருந்து, அவருக்குப் பிரியாவிடை கொடுத்திருக்கிறார் கள். அவர்களில் துயரத்தில் தெரிந் தது, அவரது உள்ளமும் உயர்வும்.

எளிமைக்கு இலக்கணமானவர். பண்பாளர். ஏழைகளின் தோழர். இல்லாதாரின் உறவினர். கட்சி பேதமின்றி அனைவருக்கும் நண்பராக இருந்தவர். பண்பாளர். அரசியல் எதிரிகளிடமும் நாகரிக நட்பு பாராட்டியவர்.

உயர்ந்த பதவிகளில் இருந்தபோதும், தனது வசதியை அதன்மூலம் உயர்த்திக்கொள்ளாத உயர்ந்த மனிதர். பதவி என்பது பாமரர்களுக்காக உழைக்கக் கிடைத்த வாய்ப்பு என்று கருதிய பேருள்ளம் கொண்டவர்.

dd

சிந்தனாவாதியாகவும் சித்தாந்தவாதியாகவும் நன்மாறன் திகழ்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக அவர் விளங்கினார். 2001, 2006 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல் களிலும், மதுரை கிழக்குத் தொகுதியில் களமிறங்கி, மக்களின் பேரன்பால் வெற்றிபெற்றார். அவரது வெற்றியை தொகுதி மக்கள், தங்கள் வெற்றி யாகக் கருதினார்கள். அந்த அளவுக்கு மக்கள் மனதில் அவர் இடம் பிடித்தார்.

இரண்டு முறை அவர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த போதும்கூட, அவர் கார்களில் வெள்ளைச் சட்டைகள் புடைசூழ பவனி வந்ததில்லை. அவர் மக்களோடு மக்களாய், கையில் துணிப்பையோடு, பேருந்தில்தான் பயணித்தார். எம்.எல்.ஏ. பதவிக்காக அரசால் வழங்கப்படும் மதிப்பூதியத் தைக் கூட கட்சியிடம் அப்படியே கொடுத்துவிட்டு, மாதந்தோறும் கட்சி கொடுத்த ரூ 11 ஆயிரம் ரூபாயில், அவர் தன் வாழ்க்கையை நடத்தினார். மதுரை ஆரப்பாளையத்தில் வசித்த அவர் அந்த 12 ஆயிரம் ரூபாயிலும் 6 ஆயிரம் ரூபாயை வாடகைக்காக கொடுத்துவிட்டு, மிச்ச 6 ஆயிரம் ரூபாயில்தான் தன் மளிகைச் செலவு, மருந்துச் செலவையெல்லாம் செய்யவேண்டிய நிலையில் இருந்தார். இதற்காக அவர் வருந்தியதில்லை. அவரது மக்கள் பணி சுணங்கியதில்லை.

சிலர் அவருக்கு உதவ முன்வந்த போதுகூட அதை ஏற்காமல் மறுத்து, ஒரு சுயமரியாதையுள்ள பொதுவுடைமைத் தோழராகவே தன் இறுதி மூச்சுவரை, வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்.

அவரது கொள்கை உறுதி எந்த நேரத்திலும் தளர்ந்ததில்லை. வலிமை மிகுந்த போராளியாக சட்டமன்றத்தில் சுழன்றார். மதுரை மக்களின் குரலை எதிரொலித்தார். அவரால்தான் மதுரையில் தொழில் நுட்பப்பூங்கா மலர்ந்தது. அவர் எடுத்த தீவிர முயற்சியால்தான், சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை, மதுரையிலேயே அமைந்தது. இப்படி மதுரையை தனது உழைப்பால் அலங்கரித்தவர் அவர். இதுபோல் பல்வேறு திட்டங்கள் மதுரைக்கு வர, பாலமாக இருந்தார் நன்மாறன்.

அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, அவரை பார்க்க மக்கள் காத்திருந்ததில்லை. வார விடுமுறை நாட்களிலும், அவரது சட்டமன்ற உறுப்பினருக்கான அலுவலகம், பாமர மக்கள் புழங்குமிடமாகவே இருந்தது.

ஆரப்பாளையம் பகுதியில் இருக்கும் ரயில்வே கேட் அருகே, இருக்கும் ஒரு தேநீர்க் கடைதான், அவர் கட்சிப்பணி ஆற்றிய இடம் என்று, அவரை அறிந்தவர்கள் சொல்லிச் சொல்லி உருகுகிறார்கள். அந்தக் கடையில் அமர்ந்துகொண்டு, தேநீர் குடிக்க வரும், சுமை தூக்கும் தொழிலாளிகளுக்கு, அவர் தங்கள் கட்சி நாளேடான "தீக்கதிரை'ப் படித்துக் காட்டுவாராம். இதை ஒரு கடைமையாகவே செய்துவந்திருக்கி றார் நன்மாறன்.

vvv

இன்றைய காலத்தில் ஒரு கவுன்சிலர்கூட கத்தை கத்தையாய் பணத்தைப் பையில் திணித்துக்கொண்டு, உயர் ரகக்கார்களில் வலம் வரும்போது, நன்மாறன் எப்படி வாழ்ந்தார் என்பதற்கு ஒரு உதாரண சம்பவம் இது....

சில மாதங்களுக்கு முன்... அவர் பேருந்து ஏற முயன்ற போது, அவர் அணிந்திருந்த செருப்பு ஒன்று கீழே நழுவி விழுந்துவிட்டது. அதனால் அவர் பேருந்தில் இருந்து இறங்கி, செருப்பை எடுக்க ஓடினார். அதற்குள் அந்தப் பேருந்து அவரை விட்டுவிட்டுப் போய் விட்டது.

அவர் திகைத்துப் போய் அங்கே நிற்க, அவரை கவனித்துவிட்ட ஒரு ஆட்டோ டிரைவர், "ஐயா, என் ஆட்டோவில் ஏறுங்க. உங்களை நீங்க இறங்க வேண்டிய இடத்தில் விட்டுடறேன்'' என்று சொல்ல, நன்மாறனோ...

"ஆட்டோவுக்குக் கொடுக்க என்னிடம் பண மில்லை. வெறும் 20 ரூபாய்தான் இருக்கிறது'' என்று தயங்கி இருக்கிறார்.

"அந்த ஆட்டோ ஓட்டுநர் அவரை அழைத்துச் சென்று, வீட்டில் கொண்டுபோய் விட்டு விட்டுப் போனாராம். 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரிடம், பையில் 20 ரூபாய்க்குமேல் இல்லை. இதுதான் நன்மாறன்.

=

தீவிர படிப்பாளியான அவர், சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந் தார். கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், ஸ்டாலின், லெனின் ஆகிய உலகப் பொதுவுடைமைத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியிருக்கிறார்.

நக்கீரன் மீதும் எங்கள் குடும்பம் மீதும் அதிக அக்கறை கொண்டிருந் தார். நம் நக்கீரனின் தீவிர வாசகர். இனிய உதயத்தை விரும்பிப் படிக் கக் கூடியவராக இருந்தார்.

நகைச்சுவையாகப் பேசக்கூடிய சிறந்த பேச்சாளராக வும் அவர் திகழ்ந்தார். இலக்கிய ஈடுபாடுகொண்டு, அந்தத் துறையிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.

அவரைப் பற்றி கம்யூனிஸ்ட் தோழர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, "கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே இறுக்கமான கட்சி. கம்யூனிஸ்டுகள் என்றாலே சிரிக்கவே மாட்டார்கள். சீரியசானவர்கள் என்ற ஒரு இமேஜ் வெகுகாலமாக இருந்து வந்தது. அதை உடைத்துத் தகர்த்தவர் தோழர் நன்மாறன். கம்யூனிஸ்ட் கூட்டங்களில் முதன்முதலில் சிரிப்பலையை உருவாக்கியவர் அவர்தான். கடினமான விஷயத்தையும் எளிமையாகப் பேசி, இருக்கும் இடத்தைக் கலகலப்பாக்கி விடுவார். சின்ன வயதிலேயே கட்சிக்கு வந்தவர், மதுரை அழகரடியில் பிறந்து, ஞாயிற்றுக்கிழமை சந்தைத்திடல் என்று அழைக்கப்பட்ட திலகர் திடலில் நடக்கும் கம்யூனிஸ்ட் கூட்டங்களைக் கேட்டு வளர்ந்தவர். அதேபோல் தந்தை பெரியாரின் பேச்சுக்களைக் கேட்டு அவரால் ஈர்க்கப் பட்டவர். அதனால் பெரியார் பற்றியும் அதிகம் பேசிய கம்யூனிஸ்ட் அவர்'' என்று ஆச்சரிய மூட்டினர்.

மதுரை டி.வி.எஸ். பேருந்தில், ஆரம்பகாலத்தில் நடத்துனராகப் பணிபுரிந்தவர் நன்மாறன். அந்தச் சமயத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி கிளைகளில் பங்கெடுத்தவர். சட்டமன்றத்தில் கலைஞருக்கும் இவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் நகைச்சுவை நிரம்பியதாக இருக்கும். ஒருமுறை, "மதுரையில் டைடல் பார்க்கிற்கு எப்போது அடிக்கல் நாட்டப்படும்?'' என்று கேட்டார் நன்மாறன்.

கலைஞரோ "கல் தயாரானவுடன் நாட்டப்படும்'' என்று சொல்ல சிரிப்பலை எழுந் தது. அடுத்து "டைடல் பூங்கா எந்த அளவில் இருக்கிறது?'' என்றார் நன்மாறன். கலைஞரோ "அந்தப் பூங்கா, அரும்பும் நிலையில் இருக்கி றது'' என்றார். அரும்பிய டைடல் பார்க், கலைஞரால் அங்கே மலர்ந்து, மதுரையின் மதிப்பைத் தொழில்நுட்ப ரீதியாகவும் உயர்த் திக் கொண்டிருக்கிறது.

அதேபோல், மலேசியாவிற்கு அவர் ஒருமுறை சென்றபோது, நிகழ்ச்சி முடிந்து அவரை, அங்குள்ள கடைத்தெருவுக்கு அழைத்துப் போயிருக்கிறார்கள். அங்கு நகைக்கடைகளைப் பார்த்து விட்டு வெளியே வந்திருக்கிறார் நன்மாறன். அவரிடம் சிலர், "என்ன தோழர் ஒன்றும் வாங்க வில்லையா?'' என்று கேட்க, நன்மாறனோ, "என்னால் வாங்க முடியாது. ஏங்கத்தான் முடியும்'' என்றாராம்.

வாழ்க்கை முழுக்க, ஏழை எளிய மக்களின் பிரதிநிதியாகவே திகழ்ந்தவர் நன்மாறன். எப்போதும் அவரைத் தனியாகப் பார்க்க முடியாது. பாமர மக்கள் அவரை மொய்த்துக் கொண்டே இருப்பார்கள். மரணம், அவரை அவர் அன்பர்களிடமிருந்தும் தோழர்களிடம் இருந்தும் பிரித்துவிட்டது.

அவர், வருங்கால அரசியல்வாதிகளுக்கும் இளைய தலைமுறைக்கும் பாடப்புத்தகமாக திகழ்கிறார்.

தமிழகம், குறிப்பாக மதுரை ஒரு மனிதரை இழந்து விட்டது...! அந்த சுயமரியாதைத் தோழருக்கு, அந்த அன்பான மனிதருக்கு, நம் உயர்வான வீர வணக்கம்.

-நெகிழ்வோடு

நக்கீரன்கோபால்