எனக்கு நன்கு அறிமுகமான ஒரு மனிதர் இந்தக் கதையை ஒருநாள் என்னிடம் கூறினார்.
மாஸ்கோவில் நான் ஒரு மாணவ னாக இருந்தபோது, கேள்விக்கு இடமாகக்கூடிய வகையில் இருந்த பெண்களில் ஒருத்தி வசித்துக் கொண்டிருந்த இடத்தில் நான் வாழநேர்ந்தது. அவள் போலண்ட் நாட்டைச் சேர்ந்தவள். அவர்கள் அவளை தெரேஸா என்று அழைத்தார் கள்.
அவள் உயரமானவளாக... பழுப்பு நிறத்தில் அடர்த்தியான கூந்தலைக் கொண்டவளாக... கறுத்த, பரந்த புருவங்கள் உள்ளவளாக இருந்தாள். அவளுடைய அகன்ற முகம், உயிரினங் களை உருவாக்கும் எந்திரம் வடிவமைத்ததைப் போலிருந்தது. பயங்கரமான பார்வையைக்கொண்ட அவளின் கருத்த கண்கள், அவளின் பலமான முரட்டுக்குரல், அவளின் வாகன ஓட்டுநரின் நடை, அவளின் பலத்தைக் காட்டும் தசை, மீனவனின் மனைவியைப் போன்ற தோற்றம்... இவை அச்சமூட்டும் அளவுக்கு என்னைக் கவர்ந்தன.
நான் மேல்தளத்தில் வசித்தேன். அவளின் வசிப்பிடம் எனக்கு எதிரே இருந்தது. அவள் வீட்டிலிருக்கிறாள் என்ற விஷயம் எனக்குத் தெரியும்பட்சம், எந்த சமயத்திலும் நான் என் கதவைத் திறந்துவைத்ததில்லை. ஆனால், இது மிகவும் அரிதாக நடக்கக்கூடியது. சில நேரங்களில் அவளைப் படிக்கட்டிலோ அல்லது கூடத்திலோ நான் சந்திக்க நேர்ந்ததுண்டு. என்மீது அவள் ஒரு புன்னகையைத் தவழவிடுவாள். அந்தப் புன்னகை தந்திரத்தன்மை கொண்ட தாகவும், அலட்சியம் நிறைந்ததாகவும் எனக்குத் தோன்றும்.
எப்போதாவது அவள் மது அருந்துவதைப் பார்ப்பேன். சருகும் கண்களுடனும், விரித்துப் போட்ட கூந்தலுடனும், ஒரு தனித்துவமான திருட்டுத்தனம் கலந்த சிரிப்புடனும் அவள் இருப்பாள். அப்படிப்பட்டத் தருணங்களில் அவள் என்னிடம் பேசுவாள்.
"நீ எப்படி இருக்கிறீர்கள் மிஸ்டர் ஸ்டூடண்ட்?''
அவளின் முட்டாள்தனமான சிரிப்பு அவள்மீது நான் கொண்டிருக்கும் வெறுப்பை மேலும் அதிகாரிக்கச் செய்யும். இப்படிப்பட்ட சந்திப்புகளையும் வாழ்த்துகளையும் தவிர்ப்பதற் காகவே என் வசிப்பிடத்தை மாற்றிவிட நான் விரும்பினேன்.
ஆனால், என்னுடைய சிறிய வசிப்பி டம் அழகான ஒன்றாக இருந்தது. சாளரத்தின் வழியாக பரவலான காட்சிகளைப் பார்க்கமுடிந்தது. கீழேயிருக்கும் தெருவை நன்கு பார்க்கமுடிந்தது. அதனால் நான் பொறுத்துக்கொண்டேன்.
ஒரு காலை வேளையில் என் கட்டிலில் நான் கால்களைப் பரப்பிப் படுத்திருந்தேன். என் வகுப்பிற்குப் போகாததற்குக் காரணத்தைத் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். அப்போது கதவு திறந்தது.
வெறுப்பைத் தரக்கூடிய முரட்டுத்தனமான தெரேஸாவின் குரல் என் வாசலில் கேட்டது.
"நீ நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும் மிஸ்டர் ஸ்டூடண்ட்!''
"உங்களுக்கு என்ன வேண்டும்?'' நான் கேட்டேன். அவளின் முகம் குழப்பங்கள் நிறைந்ததாகவும், கெஞ்சுவதைப் போலவும் இருப்பதை நான் பார்த்தேன்.
அவளின் விஷயத்தில் அது ஒரு வினோதமான முகமாக இருந்தது.
"சார்... உங்களிடம் ஒரு உதவியை நான் கெஞ்சிக்கேட்க விரும்புகிறேன். எனக்கு நீங்கள் அதைச் செய்வீர்களா?''
நான் அங்கேயே அமைதியாகப் படுத்திருந்தேன். எனக்குள் நான் சிந்தித்தேன்.
"பெரிய விஷயம்! தைரியமாக இரு என் பையா! வீட்டிற்கு நான் ஒரு கடிதம் அனுப்ப விரும்புகிறேன். அது இதுதான்.'' அவள் கூறினாள். அவளின் குரல் கெஞ்சுகிற மாதிரியும் மென்மையாகவும் கூச்சம் கலந்ததாகவும் இருந்தது.
"சாத்தான் உன்னைப் பிடிக்கட்டும்.' நான்
நினைத்தேன்.
ஆனால், நான் வேகமாக எழுந்தேன். என் மேஜைக் கருகில் அமர்ந்தேன். ஒரு தாளை எடுத்தவாறு கூறினேன்:
"இங்கே வாருங்கள்... உட்காருங்கள்... சொல்லுங்கள்..!''
அவள் வந்தாள். ஒரு நாற்காலியில் பட்டும் படாமலும் உட்கார்ந்தாள். ஒரு குற்ற உணர்வுடன் என்னையே பார்த்தாள்.
"நல்லது! நீங்கள் யாருக்கு எழுத விரும்புகிறீர்கள்?''
"போலஸ்லாவ் காஷ்புட்... ஸ்விப்ட்ஸியானா நகரம்... வாரிஸா சாலை..."
"நல்லது...! சொல்லுங்கள்..!''
"என் அன்பிற்குரிய போலஸ்... என் கண்ணே! என் நம்பிக்கைக்குரிய காதலரே! கடவுளின் அன்னை உங்களைக் காப்பாற்றட்டும்! நீங்கள் தங்க மனதிற்குச் சொந்தக்காரர். உங்களின் கவலைக்குரிய இளம் புறா வான தெரேஸாவுக்கு நீங்கள் நீண்டநாட்களாக ஏன் எழுதவே இல்லை?''
நான் கிட்டத்தட்ட வெடித்துச் சிரிக்கும் நிலையில் இருந்தேன். "ஒரு கவலைக்குரிய இளம் புறா...!' ஐந்தடி களுக்கு மேலே உயரம்... கல்லைப்போன்ற கை முஷ்டி... அதிகமான எடை.... இளம் புறா தன் வாழ்நாட்கள் முழுவதும் ஒரு புகைபோக்கிக்குள்ளேயே வாழ்ந்து, எந்தச் சமயத்திலும் தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்ள விரும்பாத அளவுக்கு கருத்த முகம். என்னை நானே எப்படியோ கட்டுப்படுத்திக்கொண்டு நான் கேட்டேன்:
"யார் இந்த போலஸ்ட்?''
"போலஸ்... மிஸ்டர் ஸ்டூடண்ட்'' அவள் கூறினாள்.
பெயரைத் தவறாகக் கூறி, நான் மனதைப் புண்படுத்தி விட்டதைப்போல அவள் கூறினாள்:
"அவர் போலஸ்... என் இளம் மனிதர்!''
"இளம் மனிதர்!''
"நீங்கள் ஏன் அந்த அளவுக்கு ஆச்சரியப்படுகிறீர்கள் சார்? எனக்கு இருக்கக் கூடாதா? ஒரு இளம்பெண்ணுக்கு ஒரு இளைஞர் இருக்கக்கூடாதா?''
அவள்? ஒரு இளம்பெண்? சரிதான்!
"ஓ... ஏன் இருக்கக்கூடாது?'' நான் கூறினேன்: "அனைத் துமே நடக்கக் கூடியவைதான். அவர் உங்களுடைய இளம் மனிதராக நீண்டகாலம் இருக்கிறாரா?''
"ஆறு வருடங்கள்...''
"ஓஹோ...'' நான் நினைத்தேன். "சரி... நாம் உங்களுடைய கடிதத்தை எழுதுவோம்...''
"உங்களிடம் மனம் திறந்து நான் கூறுகிறேன். அந்த போலஸின் நல்ல தொடர்பாளராக தெரேஸா அல்லா மல், இவளைவிட கீழான நிலையிலிருக்கும் வேறு யாராவது இருந்திருந்தால், நிச்சயமாக நான் மனப் பூர்வமாக இடங்களை மாற்றியிருப்பேன். உங்களின் கனிவான சேவைகளுக்காக... இதயப்பூர்வமாக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன் சரி.'' தெரேஸா என்னிடம் முழங்காலிட்டு அமர்ந்தவாறு கூறினாள்:
"சொல்லப் போனால்... உங்களுக்கு நான் சில சேவைகளைச் செய்யலாம். சரியா?''
"வேண்டாம்... அனைத்துக்காகவும் மிகுந்த பணிவுடன் உங்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.''
"சரி... ஒருவேளை உங்களுடைய சட்டைகளையோ கால் சட்டைகளையோ சிறிய அளவில் சரிசெய்ய வேண்டிய நிலை இருக்கலாமல்லவா?''
உள் பாவாடைகள் அணிந்திருக்கும் இந்த யானை என்னை வெட்கத்தில் அதிகமாக சிவக்கச் செய்ததைப்போல நான் உணர்ந்தேன். அவளுடைய சேவைகள் எதுவாக இருந்தாலும் எனக்கு அது தேவையில்லை என்பதை அவளிடம் மிகவும் ஆணித்தரமாகக் கூறினேன்.
அவள் கிளம்பினாள்.
ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கடந்துசென்றன. அதுவொரு மாலைவேளை... என் சாளரத்திற்கருகில் சீட்டியடித்தவாறு நான் அமர்ந்திருந்தேன். எனக்குள்ளிருந்து வெளியேறுவதற்கு ஏதாவது பயனுள்ள வழிகள் இருக்கின்றனவா என்பதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தேன். எனக்கு வெறுப்பாக இருந்தது. காலநிலை மோசமாக இருந்தது. வெளியே செல்ல நான் விரும்பவில்லை. கடுமையான சலிப்பு காரணமாக நான் என்னைப் பற்றிய சுய ஆராய்ச்சியிலும், அதைக் கண்டுபிடிப்பதிலும் ஈடுபட ஆரம்பித்தேன். அது வும் சோர்வளிக்கக்கூடிய பணியாகத்தான் இருந்தது. எனினும், வேறு எதையும் செய்ய நான் நினைக்கவில்லை.
அப்போது கதவு திறந்தது. சொர்க்கத்தின் கதவு என்றுதான் சொல்லவேண்டும். யாரோ உள்ளே வந்தார்கள்.
"ஓ... மிஸ்டர் ஸ்டூடண்ட்... உங்களுக்கு அழுத்தக்கூடிய அளவுக்கு வேலையில்லை என்று நான் நினைக்கிறேன். சரியா?''
அது... தெரேஸா. அய்யோ!
"இல்லை... என்ன விஷயம்?''
"நான் உங்களிடம் எனக்கு இன்னொரு கடிதத்தை எழுதித்தருமாறு கேட்கப் போகிறேன்.''
"மிகவும் நல்லது... போலஸுக்கு... அப்படித்தானே?''
"இல்லை... இந்த முறை... அவரிடமிருந்து...''
"என்... ன..?''
"நான் ஒரு முட்டாள். இது எனக்காக இல்லை மிஸ்டர் ஸ்டூடண்ட். என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும். இது என்னுடைய ஒரு ஃப்ரண்டுக்காக. சரியாகச் சொல்வதாக இருந்தால்... ஒரு ஃப்ரண்ட் இல்லை... தெரிந்த ஒரு நபர்... தெரிந்த ஒரு ஆண். அவருக்கு ஒரு இனிமையான இதயம்... இங்கிருக்கும் தெரேஸாவான எனக்கு இருப்பதைப்போல... இது அப்படித்தான் நடந்தது. இந்த தெரேஸாவுக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுதித் தரமுடியுமா சார்?''
நான் அவளையே பார்த்தேன். அவளுடைய முகம் கலவரமடைந்து காணப்பட்டது. அவளுடைய விரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. நான் ஆரம்பத்தில் சற்று பதறிப்போனேன். பின்னர் இது எப்படி வந்திருக்கும் என்பதை நான் எண்ணிப் பார்த்தேன்.
"இங்கு பாருங்கள் என் பெண்ணே!'' நான் கூறினேன்: "போலஸ்க்களோ தெரேஸாக்களோ இல்லவே இல்லை. நீங்கள் என்னிடம் ஒரு மூட்டை நிறைய பொய்களைக் கூறிக்கொண்டே இருக்கிறீர்கள். இனிமேலும் என்னைப் பார்ப்பதற்குப் பதுங்கிக்கொண்டு நீங்கள் வரவேண்டாம். உங்களின் நட்பால் எதையுமே அறுவடை செய்யும் ஆசை எனக்கில்லை. நீங்கள் புரிந்துகொண்டீர்களா?''
திடீரென அவள் வினோதமான வகையில் அதிகாக பயந்துவிட்டதைப்போலவும், நிலைகுலைந்து விட்டதைப்போலவும் தோன்றியது. அந்த இடத்தை விட்டு நகராமலே அவள் பாதங்களை மாற்றி மாற்றி வைக்க ஆரம்பித்துக்கொண்டே தமாஷாக வாய்க்கு வந்ததை உளறினாள். அவள் கூற விரும்பியதை....
"ஆனால், அவர் எழுதவேண்டும்! நான் அவருக்கு எழுதுகிறேன். அவர் உண்மையிலேயே இருப்பதைப் போல... தெரேஸா. அதாவது நான்... அவர் எனக்கு பதில் கடிதம் எழுதுகிறார். பிறகு... நான் அவருக்கு மீண்டும் எழுதுகிறேன்...''
இறுதியில் நான் புரிந்துகொண்டேன். நான் மிகவும் நோய்வாய்ப்பட்டதைப்போல உணர்ந்தேன். மிகுந்த கவலைக்கு ஆளானேன். ஒருவகையில் அதிக அவ மானத்திற்கு உள்ளானதைப்போல இருந்தது. எனக்கு அருகிலேயே... மூன்றடி தூரம்கூட இருக்காது... ஒரு மனிதப் பிறவி வாழ்ந்திருக்கிறது. அன்புடன் நடத்துவதற்கு... பாசத்துடன் இருப்பதற்கு... அதற்கு இந்த உலகத்தில் யாருமே இல்லாமல்... அந்த உயிரினம் தனக்கென்று படைப்புச் செயலில் இறங்கியிருக்கிறது!
"இங்கு பாருங்கள்... நீங்கள் எனக்காக போலஸுக்கு ஒரு கடிதம் எழுதினீர்கள். நான் அதை யாரோ சிலரிடம் கொடுத்து என்னிடம் வாசித்து காட்டச் சொன்னேன். எனக்கு அவர்கள் வாசிக்கும்போது, நான் கவனித்துக் கேட்பேன். போலஸ் அங்கிருப்பதைப்போல மனதில் நினைப்பேன். போலஸிடமிருந்து தெரேஸாவுக்கு...
அதாவது... எனக்கு வருவதைப்போல ஒரு கடிதத்தை எனக்கு எழுதித் தரும்படி உங்களிடம் நான் கேட்டேன். அவர்கள் அப்படிப்பட்ட கடிதத்தை எனக்கு எழுதும்போது, அதை எனக்கு வாசித்துக் காட்டும்போது போலஸ் அங்கிருக்கிறார் என்ற உறுதியான முடிவுக்கு நான் வருகிறேன். அதன்விளைவாக வாழ்க்கை எனக்கு எளிதாகப் போய்க்கொண்டிருக்கிறது.''
"நீ ஒரு அதிர்ஷ்டமற்ற தடைக்கல்!' இதைக் கேட்டபோது நான் எனக்குள் கூறிக்கொண்டேன்.
அதற்குப் பிறகு... தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை நான் போலஸுக்கு ஒரு கடிதம் எழுதுவேன்... போலஸிடமிருந்து தெரேஸாவிற்கு ஒரு பதில் கடிதம் எழுதுவேன். நான் அந்த பதில்களை நன்றாக எழுதி னேன். சொல்லப்போனால்... அவற்றை அவள் கூர்ந்து கேட்பாள்... அழுவாள்... குமுறுவாள். நான் கூறியாக வேண்டும்-
அவளுடைய கட்டைக் குரலில்... கற்பனைக் கதாபாத்திரமான போலஸிடமிருந்து வரக்கூடிய உண்மையான கடிதங்கள் இவ்வாறு அவளைக் கண்ணீர் கடலில் மூழ்கடித்துக்கொண்டிருக்க, பதிலுக்கு எனக்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக... என் காலுறைகளில், சட்டைகளில், பிற துணிப் பொருட்களில் இருக்கக்கூடிய விரிசல்களைச் சரிசெய்து தருவாள்.
காலப்போக்கில்... இந்தக் கதை ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆனபிறகு, ஏதோ சில காரணங்களுக்காக அவர்கள் அவளை சிறைக்குள் அடைத்துவிட்டார்கள்.
சந்தேகமே வேண்டாம்- இந்த நேரத்தில் அவள் மரணத்தைத் தழுவியிருப்பாள்.
எனக்குத் தெரிந்த மனிதர் தன் சிகரெட்டிலிருந்து சாம்பலை உதிர்த்தவாறு, சிந்தனையுடன் வானத்தைப் பார்த்துக்கொண்டே இப்படி முடித்தார்:
நல்லது.... நல்லது...
வாழ்க்கையில் இனிப்பான விஷயங்களைப் பார்த்த பிறகு, அதிக கசப்பான விஷயங்களை ஒரு மானிடப் பிறவி சுவை பார்க்கவேண்டிய சூழல் உண்டாகிறது.
நம் ஒழுக்கங்கள் சுற்றப்பட்டிருக்கும் போர்வைகளை நாம் போர்த்திக் கொண்டிருக்கிறோம். நம் உலகரீதியான குற்றமற்ற நிலையால் தூண்டப்பட்டு, நம் சுய நிறைவேறலின் மங்கலான மறைவின் வழியாக மற்றவர்களைப் பார்க்கும் நாம் இதைப் புரிந்துகொள்ளவில்லை.
காலப்போக்கில் அனைத்து விஷயங்களும் மிகவும் முட்டாள்தனமாகவும், அதிக குரூரத் தன்மை கொண்டதாகவும் மாறுகின்றன. வீழ்ந்த இனங்கள்- நாம் கூறுகிறோம். வீழ்ந்த இனங்கள் என்பது யார்? நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர்கள்....
எல்லாவற்றுக்கும் மேலாக... நமக்கு இருப்பதைப் போலவே அதே எலும்புகளையும் சதையையும் குருதியையும் நரம்புகளையும் கொண்டவர்கள்தான் அவர்கள். இப்போது உள்ளதைப்போலவே பல நூற்றாண்டுகளாக நாம் கூறப்பட்டு வருகிறோம். உண்மையிலேயே நாம் கேட்கிறோம்.
முழு விஷயமும் எந்த அளவுக்கு வெறுக்கக்கூடிய வகையில் இருக்கிறது என்பது சாத்தானுக்கு மட்டுமே தெரியும். மனிதநேயத்தைப் பற்றி சத்தமாகப் பிரச்சாரம் செய்து, நாம் முழுமையாகத் தரமிழந்துவிட்டோமா? யதார்த்த வாழ்க்கையில் நாமும் வீழ்ந்து கிடக்கும் நபர்கள் தான். என் பார்வைக்கு எட்டிய வரையில்... சுய நிறைவென்ற பள்ளத்திலும், நம் சொந்த உயர்நிலையைப் பற்றிய எண் ணத்திலும் மிகவும் ஆழமாக விழுந்து கிடக்கிறோம்.
ஆனால், இது போதும். மலைகளுக்கு நிகராக பழையது இது. மிகவும் பழையது... இதைப்பற்றி பேசுவதே வெட்கக்கேடானது. இருப்பதிலேயே பழையது. ஆமாம்...
அதுதான் இது!
__________
மொழி பெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக நான்கு அருமையான சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.
"மூன்று தலைமுறைகள்' கதையை எழுதியவர் மலையாள இலக்கியத்தின் தலைமகனும், இலக்கியத்திற்காக அளிக்கப்படும் மிக உயர்ந்த விருதான "ஞானபீடம்' விருதைப் பெற்றவருமான தகழி சிவசங்கரப் பிள்ளை. ஒரு வயதான மூதாட்டியையும், அவளின் பேத்தி பானுமதியையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. ஒரு சிறுகதையில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் கதைகளைக் கூறுகிறார் தகழி. அவரைத்தவிர, வேறு யாரால் இப்படிப்பட்ட ஒரு உன்னத கதையை எழுதமுடியும்? இத்தகைய உயர்ந்த இலக்கியப் படைப்புகளால்தான் தகழி சிவசங்கரப்பிள்ளை காலத்தை வென்று வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதைக் கூறவும் வேண்டுமோ?
"மகனின் அதிர்ஷ்டம்' கதையை எழுதியவர் தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மூத்த மலையாள எழுத்தாளரான உண்ணிகிருஷ்ணன் புதூர். தன் மகனின் நல்வாழ்க்கையை மட்டுமே நாளும் நினைக்கக்கூடிய- பாசத்தின் உறைவிடமான ஒரு தாயையும், அவள்மீது அளவற்ற அன்பும் பாசமும் வைத்திருக்கும் மகனையும் பற்றிய கதை. கதையின் இறுதிப்பகுதி நம் கண்களை ஈரமாக்கிவிடும். இரண்டு கதாபாத்திரங்களை வைத்து இப்படியொரு உணர்ச்சிகரமான கதையா? நிச்சயம் நாம் உண்ணிகிருஷ்ணன் புதூரைப் பாராட்டவேண்டும்.
"அவளின் காதலன்' கதையை எழுதியவர் உலகப் புகழ்பெற்ற மாபெரும் ரஷ்ய இலக்கிய மேதையான மாக்ஸிம் கார்க்கி. தெரேஸா என்ற பெண்ணையும், அவளின் கற்பனைக் காதலரான போலஸுக்குக் கடிதங்கள் எழுதித்தரும் மாணவனையும் கதாபாத்திரங்களாக வைத்து எழுதப்பட்ட பண்பட்ட கதை. கதையை வாசித்து முடித்தபிறகும் தெரேஸா நம் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வாள். எப்படிப்பட்ட உயிர்ப்பான கதாபாத்திரம்! கதையை வாசிக்கும்போது நம் மனம் கூறிக்கொண்டேயிருக்கும்...' என்ன இருந்தாலும்... "கார்க்கி... கார்க்கிதான்!'
நான் மொழிபெயர்த்திருக்கும் இந்த நான்கு கதைகளும் உங்கள் அனைவரின் உள்ளங்களிலும் என்றும் வாழும்.
"இனிய உதயம்' அளிக்கும் என் மொழிபெயர்ப்பு ஆக்கங்களை வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
"அறுவை சிகிச்சை' கதையை எழுதியவர் மலையாள பெண் எழுத்தாளர்களின் அரசியும், தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான மாதவிக்குட்டி. இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும் ஒரு குழந்தையைப் பற்றிய கதை. கதையை வாசித்து முடிக்கும்போது குழந்தையைப் பற்றிய கவலை, குழந்தையின் தாய்க்கு மட்டுமல்ல; நமக்கும்தான்.
அன்புடன்,
சுரா