எழுதுவதிலுள்ள கௌரவம் நிலத்தை உழுவதிலுமிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளாத எந்த சமூகமும் முன்னேற முடியாது’ என்றார் அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளரும் எழுத்தாளருமான புக்கர் டி வாஷிங்டன். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்;
எழுத்தைப்போலவே மனிதஉழைப்பு உண்மையும் சத்தியமுமானது மட்டுமல்ல; மனிதகுல உயர்வை முன்னெடுத்துச் செல்வதுமாகும். மேற்கூறியவற்றோடு இலக்கியம் வளர்ப்பதற்கான பணிகளைச் செய்வதையும் சேர்த்துக்கொள்வதே சரியானது என்பேன்.
ஏனெனில், புதிதாய் எழுதவரும் இளைய தலைமுறை படைப்பாளர் களுக்கு வழிகாட்டுவதும், அவர்களது நூலாக்கப் பணிகளுக்கு துணை நிற்பதுவும் முக்கியமான பணியன்றோ!
இத்தகைய பணிகளைச் சற்றும் மனம்சோர்வடையாமல் கடந்த 46 ஆண்டுகளாகத் தொய்வின்றித் தொடர்ந்து ஆற்றிவந்தவரின் பெயரைமட்டும் சொன்னால், ‘யாரிவர்?’ என்றே சட்டென யோசிக்கத் தோன்றும். இவர் முன்னின்று நடத்திய அமைப்பின் பெயரோடு சேர்த்து சொன்னால் தமிழ்கூறுநல்லுலகம், ‘இவரா… இவரை நல்லாத் தெரியுமே..!’ என்று புன்னகை பூக்கும். அத்தகைய பெருமைக்குரியவர்தான் ‘இலக்கியவீதி’ இனியவன்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பறவைகளின் தாய்வீடாக விளங்கும் வேடந்தாங்கல் அருகேயுள்ள விநாயகநல்லூரில் கவிஞர்களின் வேடந்தாங்கலாக விளங்கிய இனியவன் பிறந்தார். 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் 20 அன்று பிறந்த இவரது இயற்பெயர் லட்சுமிபதி. பெற்றோர் வீராசாமி-பங்கஜம்மாள்.
இனியவனுக்குப் பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளை எழுதுவதில் ஆர்வமுண்டானது. ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் சிறுவர் இதழொன்று நடத்திய சிறுகதைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசினை வென்றார். அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த ‘கண்ணன்’ சிறுவர் இதழில் ‘பொன்மனம்’ எனும் கதையை எழுதி, தொடர்கதை போட்டியில் பரிசுபெற்றார். ஆனந்தவிகடன்’ இதழுக்கு எழுதிய முதல் கதையே முத்திரைக் கதையாக வெளியானது. தொடர்ந்து பல இதழ்களில் கதைகள் வெளியாகின. நாவல்களையும் எழுதினார். இலக்கிய நூல்களைத் தேடியெடுத்து படித்தார்.
எழுத்தாளர் நாரண.துரைக்கண்ணன் செங்கல்பட்டு மாவட்ட எழுத்தாளர் மாநாட்டினை, மதுராந்தகத்தில் நடத்தினார். அந்த மாநாட்டில் எழுத்தாளர்கள் பற்றிய புகைப்படக் கண்காட்சி ஒன்றினை இனியவன் அமைத்தார். கண்காட்சியைத் திறந்துவைத்த பேரறிஞர் அண்ணா, செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்தனை எழுத்தாளர்களா? என்று வியந்து, கண்காட்சியை அமைத்த இனியவனை அழைத்து, தோளில் தட்டிப் பாராட்டினார்.
இச்செயலினால் அதுவரை எழுத்தாளராக மட்டுமே இருந்த இனியவனுக் குள், ஓர் இலக்கிய அமைப்பினைத் தொடங்கி, அதன்மூலமாக எழுத்தாளர் களை ஒருங்கிணைத்து இளையவர்களுக்கான தளத்தினை அமைத்துக் கொடுக்கவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது.
நண்பர்கள் சிலர் இலக்கிய இதழொன்றினைத் தொடங்குமாறு இனியவனிடம் கேட்டுக்கொண்டனர். நடைமுறை சாத்தியமில்லாத நிலையில், அதற்குப் பதிலாக, இலக்கிய விவாதங்கள், திறனாய்வுகள், கவியரங்குகளை நடத்தும்வகையில் 1977-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதியன்று மதுராந்தகத்தில் ‘இலக்கியவீதி’ எனும் அமைப்பினைத் தொடங்கினார் இனியவன்.
வீடுதோறும் கலையின் விளக்கம்; வீதிதோறும் தமிழின் வெளிச்சம்’ எனும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இலக்கியவீதி அமைப்பில் மாதா மாதம் சிறுகதை, கவிதை, கட்டுரை நூல்களின் திறனாய்வும், நூல் அறிமுகங்களும் செய்யப்பட்டன. ‘கவிக்குரல்’ எனும் தலைப்பில் ஒவ்வொரு மாதமும் ஒரு இளங்கவிஞர் அறிமுகம் செய்துவைக்கப் பட்டார்.
இலக்கியவீதியின் தொடக்கக்கால நிதி யாதாரங்களுக்காக யாரிடமும் உதவிகோராமல் நண்பர்களே பகிர்ந்துகொண்டனர். காலப்போக்கில் தனது விவசாய நிலத்திலிருந்து கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை இலக்கிய வயலி−ல் விதைத்தார். அதன் காரணமாக தமிழகமெங்கும் பல்லாயிரம் இலக்கிய இதயங்களை நட்பாகப் பெற்றார் இனியவன்.
இலக்கியவீதி ஒருங்கிணைத்து நடத்திய இலக்கிய விழாக்கள் தமிழகம் தாண்டியும் புதுடெல்லி, அந்தமான் ஆகிய பகுதிகளிலும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் நடைபெற்றன. இலக்கியக் கூட்டங்களை சென்னை போன்ற பெருநகரங்களில் நடத்தினால் எழுத்தாளர்கள் வருவார்கள். போக்குவரத்து வசதி அதிகமில்லாத அந்தக் காலத்தில் சென்னையி−லிருந்து 85 கி.மீ தூரமுள்ள மதுராந்தகத்திற்குத் தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், அகிலன், வலம்புரிஜான், பாலகுமாரன், சு.சமுத்திரம், ராஜம்கிருஷ்ணன் உள்ளிட்ட பலரையும் அழைத்து வந்து கூட்டங்களை நடத்தியது இலக்கியவீதிக்கு மட்டுமேயுரிய தனிச்சிறப்பாகும்.
இலக்கியவீதியின் தலைமைக் கவிஞராக விளங்கிய கவிஞர் தாராபாரதியைத் தொடர்ந்து மலர்மகன், பல்லவன், தளவை இளங்குமரன், இரண்டாம் நக்கீரன், வேடந்தாங்கல் குமணன், அனலேந்தி, கவிமுகில் என பல நூறு கவிஞர்களைக் கவிதைவெளிக்கு கைப்பிடித்து அழைத்துவந்தார். இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திறனாய்வாளர்களை அறிமுகம்செய்துள்ளது இலக்கியவீதி.
இலக்கியவீதியின் பணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டே 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 17 குறுநாவல்கள், 15 நாவல்கள், 2 பயண இலக்கிய நூல்களையும் எழுதிய இனியவன், “புதிதாக எழுத வரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பணிகளில் முழுமூச்சாக இறங்கியபிறகு நான் எழுதுவதைக் குறைத்துக்கொண்டேன்” என்று குறிப்பிட்டுள் ளார். செங்கல்பட்டு மாவட்டத்தின் அகநாட்டு வரலாற்றுநூலான ‘உத்திரமேரூர் உலா’ இனிய வனின் வரலாற்று ஆர்வத்திற்கும் தேடலுக்கும் சான்றான நூலாகும். பறவைகள் குறித்த அரிய தகவல் கள் அடங்கிய நூலொன்றையும் வெளியிட்டார்.
சென்னைக்கு குடிமாறி வந்தபிறகு, ‘இலக்கிய வீதி’யின் செயல்பாடுகளோடு, 2006-ல் சென்னைக் கம்பன் கழகத்தின் செயலாளராகப் பொறுப்பேற்று, திறம்பட செயலாற்றினார். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தோடு இணைந்து ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ எனும் தலைப்பில் மறைந்த முன்னோடி எழுத்தாளர்களைப் பற்றிய சிறப்பு மிக்க நிகழ்வினைப் பல ஆண்டுகாலம் தொடர்ந்து நடத்தினார். அதேநிகழ்வில், வாழும் தலைமுறை படைப்பாளர்களைக் கவுரவிக்கும்வகையில் இலக்கியவீதி அன்னம் விருதினை’ வழங்கிப் பாராட்டினார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டில் நடைபெற்ற ஓர் இலக்கிய விழாவில்தான் முதன்முதலாக நான் இலக்கியவீதி இனியவனைச் சந்தித்தேன். பேசிய சில நிமிடங்களிலேயே பாக்கெட்டில் வைத்திருந்த துண்டுக்காகிதத்தை எடுத்து, எனது முகவரியை எழுதிக்கொண்டார். அன்று தொடங்கி பல இலக்கியவீதி நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பினை எனக்கு வழங்கினார். எதனையும் உடனே ஒரு துண்டுக் காகிதத்தில் மறக் காமல் குறித்துக்கொள்ளும் செயலை இனியவன் தனது கடைசிக்காலம்வரை செய்துவந்தார். நோயுற்று பேசமுடியாத நிலையிலும் தனது மகள் வாசுகியின் துணையோடு இலக்கிய நிகழ்வுகளுக்கு வந்துவிடும் இனியவன், ஒரு துண்டுக்காகிதத்தில் தனது கருத்தினை எழுதிப் பலரிடத்தும் பகிர்ந்து கொண்டார். இலக்கியவீதி இனியவனின் தொடர் இலக்கியச் செயல்பாடுகளைப் பாராட்டி, அமெரிக்க தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் மாட்சிமைவிருது, வேலூர் கம்பன்கழக விருது, கண்ணப்பன் அறக் கட்டளையின் இலக்கிய நாயனார் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன.
2014-ஆம் ஆண்டில் இலக்கியவீதி இனியவனின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளர் ராணிமைந்தன் நூலாக எழுதினார். 2023 ஜனவரி 23 அன்று ‘பொன்விழா நோக்கி இலக்கியவீதி’ எனும் நூலும் சென்னையில் சான்றோர் பலர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை நல்லிலக்கியம் வளர்த்திடவேண்டும், வளரும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்திடவேண்டும் என்பதை மட்டுமே தனது மூச்சாகக்கொண்டிருந்த இலக்கியவீதி இனியவன், 2023 ஜூலை 2 அன்று தனது 81-ஆவது அகவையில் மூச்சை நிறுத்திக் கொண்டார். ஆனாலும் இலக்கியவீதியில் இனிய வனின் மூச்சுக் காற்றும் என்றென்றும் இரண்டறக் கலந்தேயிருக்கும்.