பொங்கல் என்பது தமிழர் திருநாள்! உலகத் தமிழினமே, மொழி உணர்வோடும், இன உணர்வோடும் கொண் டாடும் திராவிடத் திருநாள்.
தை பிறக்கும் நேரத்தில், உலகின் ஆதிச் சுடரான சூரிய னுக்கும் விவசாயத் துக்கும் நன்றி சொல்கிற நாளாகவும், உலகின் ஆதி அறிவின் அடை யாளமான திருவள்ளு வரைக் கொண்டாடும் நாளாகவும், உழவுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி பாராட்டுகிற நன்றித் திருநாளாகவும் நாம் கொண்டாடக் கிடைத்த, விழாக்களின் தொகுப்பே தைப் பொங்கல்.
தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழர் புத்தாண்டு என்று 1921-ஆம் ஆண்டு தமிழ்க்கடல் மறைமலையடிகள் தலைமை யில், ஏறத்தாழ 500 தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி அறிவித் தனர். இதையே தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் வழி மொழிய, முத்தமிழறி ஞர் கலைஞரும் இதை முன்னெடுத்து மக்கள் நெஞ்சில் தமிழ்த் திருவிழாவை நடத்தினார்.
இப்படி தமிழர் தம் புத்தாண்டாகவும், விவசாயத் தைக் கொண்டாடும் நன்றித் திருநாளாகவும் பொங்கல் திருநாள் சிறந்து விளங்குகிறது. ஏன் விவசாயத்துக்கு நாம் நன்றி சொல்லவேண்டும்? என்று வள்ளுவரிடம் கேட்டால்....
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ என்கிறார்.
இந்தக் குறளுக்கான பொருள், பல்வேறு தொழில் களைச் செய்வதன் மூலம் இந்த உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. ஆனாலும் அவற்றில், நம் உயிரையே பாது காக்கும் தலையாய தொழில் என்றால், அது ஏரை நம்பி நடத்துகிற விவசாயம்தான் என்ப தாகும்.
ஒட்டு மொத்த மாக இயற்கைக்கு நன்றி சொல்லும் இந்த பொங்கல் திருநாளை, உலகத் தமிழினம் காலம் காலமாகக் கொண்டாடி வருகிறது. நானும் என் பால்ய காலப் பொங்கல் கொண்டாட்டத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்.
*
பொங்கல் என்பது எவ்வளவு இனிமை யான அழகிய அனு பவம்!
எங்கள் குழந்தை பருவத்தில் நாங்கள் கொண்டாடிய பொங்கலின் தித்திப்பு இப்போதும் நினைவில் இருக்கிறது.
""மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னா ளாம்' என்று ஆண்டாள் நாச்சியாரால் சிறப் பிக்கப்படும், மார்கழி மாதம் தொடங்கும் போதே பொங்கலுக் கான முன்னோட்டக் களை தொடங்கிவிடும்.
அப்போது அதிகாலை 4 மணிக்கே தெருமுனையில் இருக்கும் அடிபம்பில் குளித்துவிடுவேன். காரணம் அதில்தான் அந்தக் குளிருக்கு நடுவிலும் கதகதப்பாகத் தண்ணீர் வரும். என் வயதொத்த நண்பர்களும் அதே போல் கும்மாளத்துடன் குளிப்பார்கள்.
அந்த நேரத்திலே அம்மாவும் அக்காவும் எங்கள் வீட்டின் முன்பாக பெரிது பெரிதாகக் கோலம் போட்டு, அதில் வண்ணம் சேர்க்கத் தொடங்கி விடுவார் கள். அதேபோல் தெருப் பெண்கள் அத்தனை பேரும் மார்கழி அதிகாலைப் பொழுதைக் கோலத்தால் அலங்கரிப்பார்கள். எங்கள் ஓட்டு வீடு ஊரின் எல்லையில் இருந்தது. இருள் விலகாத அந்த நேரத்திலேயே ஊருக்கு வெளியே சென்று, தரையில் படர்ந்திருக்கும் பூசணிக் கொடியில் இருந்து, மஞ்சள் நிறத்தில் இருளிலும் சிரிக்கும் பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுப்போம். அவர், கோலத்தின் நடுவே கொஞ்சம் சாணத்தை வைத்து, அதில் அந்தப் பூக்களைச் செருகிவைப்பார். ஒரு பூ மட்டும் கிடைத்தால் நடுவில், சில நாளில் ஐந்து பூக்கள் கிடைக்கும். சிலநாளில் பத்து, பதினைந்து, இருபது என கிடைக்கும். அதற்கேற்றாற்போல் கோலம் முழுவதும் பூசணிப்பூ அலங்கரிக்கும். முதல் நாள் பூ வைத்த அந்த சாணத்தை பத்திரமாக எடுத்து எருவாக்கி, அம்மா காயவைப்பார்கள். அந்த எருதான் தைத்திருநாளில் பொங்கல் சமைக்கவும்...…இப்படி எல்லோர் வீட்டு வாசலிலும், மார்கழி முழுக்க பூசணி பூத்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அடுத்து சிறுவர்களான நாங்கள் ஐயப்பன் கோயில் பஜனைக்குச் செல்வோம். தலைக்கு 25 காசும் சுண்டலும் கிடைக்கும். பொங்கல் நெருங்கி வந்ததும், சுட்ட கிளிஞ்சல்களை வாங்கிவந்து, அதைத் தண்ணீர் ஊற்றி, அது கொதிப்படங்கிச் சுண்ணாம்பாகும் வரையில் காத்திருப்போம். பின்னர் அந்தச் சுண்ணாம்பை வீட்டுச் சுவர்களுக்கு, எல்லோருமாகச் சேர்ந்து நாங்களே அடித்து, காவிப் பட்டைகளையும் தீட்டுவோம். அதுவும் சுகமான அனுபவமாக அமையும். எங்கள் உழைப்பால் எங்கள் வீடுகள் புதுப்பொலிவை இதனால் அடையும். ஊரே திருவிழாக் கோலத்துக்கு மாறிவிடும்.
இதற்கிடையில், நெடுஞ்சாலைத் துறையில் கடைநிலை ஊழியராக இருந்த எங்கள் அப்பாவுக்கு, 200 ரூபாய் அளவுக்கு கோ ஆப்டெக்ஸ் துணிகளை வாங்கிக் கொள்வதற்கான கூப்பன் வந்து சேரும். அதை எடுத்துக்கொண்டு எங்கள் குடும்பத்துக்கே துணி வாங்கும் படலமும் நடக்கும். கோ ஆப்டெக்ஸில் அப்போது, சிறுவர்களான எங்களுக்குப் பிடிக்காத வண்ணத்தில்தான் சட்டை டிராயருக்கான துணிகளை வாங்குவார்கள். மங்கிய கலரில்தான் அப்போது அங்கே பெரும்பாலான துணிகள் இருக்கும். வாங்கும்போது பிடிக்காத அந்தத் துணி, போகப் போக பிடித்தமானதாக மாறிவிடும்.
அதை எங்க தெரு மகாராஜா டைலரிடம் தைக்கக் கொடுத்தால்... அதை பொங்கல் அதிகாலையில் நாங்களே உட்கார்ந்து பொத்தானுக்கு காஜா எடுக்க நேரிடும். இதற்கு மத்தியில் பொங்கல் அன்று ’கண்ணிப் புள்ள செடியையும் வேப்பங்கொத்தையும் ஒவ்வொரு வீட்டின் வாசல் பக்கமும் எரவானத்தில் செருகிவைப்பது அங்குள்ள வழக்கம் என்பதால், முதல் நாளே நண்பர்களோடு கண்ணிப்புள்ள செடியைத் தேடிப் போவோம். அதைப் பறித்துக்கொண்டு திரும்பும் போது, பல வீட்டு அக்காக்களும் அத்தைகளும், ’’எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்துட்டுப் போய்யான்னு கேட்கும்போது, நமக்கு ஒரு ’கெத்து’ வரும் பாருங்க. அடடா...
பொங்கல் அன்று வீட்டு வாசலில் சூரியன் பார்க்க அப்பா முன்னிலையில் அம்மா பொங்கல் விடுவார்கள். முழுக்கரும்புகள் நிமிர்ந்து நிற்க, பொங்கல் பானையைச் சுற்றி இஞ்சி மஞ்சள் செடிகள் கொத்தோடு சுற்றப்பட, பொங்கல் பொங்கி வரும் நேரத்தில் அம்மாவும் சகோதரிகளும் குலவையிடுவார்கள். பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்’ என்று நாங்கள் குரல் எழுப்பிய படியே தாம்பாளத்தைத் தட்டி அதிரவைத்து, பொங்கலை வரவேற் போம்.
பொங்கலுக்கான படையல் இலையில், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கலோடு, அனைத்துக் காய்கறிகளையும் போட்டுச் செய்த அவியல் சாம்பாரும் இடம் பிடித்திருக்கும்.
காலையில் பொங்கல் விட்டதும், மதியம் எங்கம்மா எங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு அவங்க அம்மா வீட்டுக்கு... அதாவது எங்க அம்மாயி வீட்டுக்குப் போவது வழக்கமான ஒன்று.
அன்று காலையில் பழைய டிரங்க் பெட்டியில் இருந்து என் புளூ கலர் சிங்கப்பூர் சட்டையை அம்மா வெளியே எடுத்தால்... அன்று நாங்கள் ஊருக்குப் போகப்போகி றோம் என்று அர்த்தம். மனதில் குஷி கிளம்பிவிடும்.
பரமக்குடி வழியாக பேருந்தில் சென்று கீழக் கோட்டையில் இறங்கி... அங்கிருந்து 3 கி.மீ தூர முள்ள அரியக்குடி புதூரை நோக்கி வயல் வரப்பு வழியாக நடப்போம். கீழக்கோட்டை யில் இறங்கியதுமே, அம்மா அந்த புளூ சட்டையைக் கொடுத்து என்னை மாத்திக்கச் சொல்லுவாங்க. அப்ப தான் சட்டை கசங்காமல் இருக்குமாம். நானும் அக்கா வும் அம்மாவுடன் தட்டுத் தடுமாறி வரப்பிலும் ஒற்றையடிப் பாதையிலும் நடைபோட, அம்மாவின் இடுப்பில் எங்கள் தங்கச்சி இருக்கும். அப்போது தம்பி குருசாமி பிறந்திருக்கவில்லை.
வரப்பில் போகும்போதே எதிர்ப்படும் ஊர்க் காரர்கள்.. ’""அதாரு மாணிக்கம், உம் பிள்ளைகளா?'’
(அம்மா பெயர் ராஜமாணிக்கம்மாள்)என்று
அம்மாவை விசாரிப்பதையும்,
""அட... பாண்டியம்பிள்ளை (தாத்தா) மகளா? நல்லாருக்கியாப்பா?'’ என்று தாத்தா பெயரைச் சொல்லி, அம்மாவிடம் நலம் விசாரிப்பதையும் பார்க்க முடியும்.
ஊரை நெருங்கும்போது, ஊர்க்குளம் வரும்.
அதைத் தாண்டினால் பெரிய புளிய மரம் எதிர்ப்படும். அதைக் கடந்தால் தாத்தா வீடுதான்.
எங்க தாத்தாவுக்கு, அம்மாவையும் சேர்த்து 7 பெண் பிள்ளைகள், ஒரே ஒரு ஆண் வாரிசு. தாத்தாவுக்கு எங்க அம்மா நாலாவது பொண்ணு. இவ்வளவு பேரும் தாத்தா வீட்டில் இருப்பதால் வீடு ஜேஜேன்னு கலகலப்பாகவே இருக்கும். வீடு குடிசை வீடுதான். அதில் திண்ணை இருக்கும்.
எங்க மாமாவுக்கு எங்க மேல் அதீத பாசம். எங்களைப் பார்த்ததும் பக்கத்தில் இருக்கும், களப்புக் கடைக்கு அழைத்துச் சென்று போண்டா வாங்கிக் கொடுப்பார். களப்புக்கடை என்றால் ஒரு வீட்டுத் திண்ணைப் பகுதியில் சின்னதாகக் கடை வைத்திருப் பார்கள்.
மறுநாள் வரும் மாட்டுப் பொங்கல் ஏகத்துக்கும் சிறப்பாகவே இருக்கும். மாட்டின் கொம்புகளில் பெயிண்ட்டைத் தடவி, அதுக கழுத்தில் நெட்டி மாலையைப் போட்டு அலங்கரிப்பதோடு, கூடவே, பணம், தீனி, பனங்கெழங்கு, கரும்புத் துண்டுகள்னு ஒரு துணியில் பரிசுப் பொருட்களைக் கட்டி, தெருவில் விரட்டி விடுவாங்க. அந்த மாடுகளை யார் வேண்டு மானாலும் துரத்திப் பிடித்து, அதுங்க கழுத்தில் இருக்கிற பரிசுப் பொருளை எடுத்துக்கலாம். இப்படி அங்க மினி ஜல்லிக்கட்டே நடக்கும். அந்த மாடுகளைத் துரத்திப் போய், அதுக திமிரத் திமிர மடக்கி, ஊர்க் கார இளவட்டங்கள் காட்டும் சாகசங்கள் இப்போதும் என் கண்களில் இருக்கிறது. அது எங்கள் வேடிக்கை பார்க்கும் வயது. இப்படி யொரு பருவத்திலும் அதன் பதத்தோடு நான் பொங்கலைக் கடந்திருக்கிறேன்.
*
அடுத்து, சென்னை வந்து பல்வேறு வேலைகள் பார்த்து, கடைசியாக ’நக்கீரனை’ ஆரம்பித்து, அதுதான் வாழ்க்கை என்று நிலைத்த நிலையில், அம்மாவுக்காக ஒன்றரை லட்சத்தில் சிறிய அளவில் ஒரு வீட்டை ஊரில் வாங்கினேன்.
பொங்கல் என்றால் எல்லோரும் அங்கே கூடிவிடவேண்டும் என்பது அம்மாவின் உத்தரவு. மதுரையில் இருக்கும் தங்கை, பரமக்குடியில் இருக்கும் அக்கா, சென்னையில் இருக்கும் நான் மற்றும் தம்பி என எல்லோரும் பொங்கல் என்றாலே அங்கே அவரவரும் குடும்பத்தோடு கூடிவிடுவோம். மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், பேரன்-பேத்திகள்ன்னு அங்கே அம்மாவைச் சூழ்ந்து ஒரு சந்தோசமாக உலகம் உருவாகிவிடும். அங்கே உற்சாகமான உறவுத் திருவிழாவே நடக்கும். நக்கீரன் இதழுக்கும் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை அப்போதுதான் விடப்படும்.
நான் சென்னையில் இருந்து ஊருக்குச் செல்லும் போதே எல்லோருக்கும் தேவையான புத்தாடைகளை எடுத்துக்கொண்டுதான் செல்வேன். அம்மா உள்ளிட்ட நாங்கள் அனைவரும் பயபக்தி யோடு சுற்றி நிற்க, அப்பா அங்கே பொங்கல் படையல் போடுவார்கள். பிறகு நான் எடுத்துச்சென்ற அவரவருக்கான உடைகளையும், அப்பாவே தன் கைகளால் எடுத்துக்கொடுப்பார்கள். அதன்பின் எல்லோரும் குடும்ப சகிதமாக அப்பாவிடமும் அம்மாவிடமும் ஆசிர்வாதம் வங்குவோம். அப்போது அப்பா, எல்லோருக்கும் தன் கைகளால் திருநீறு பூசிவிடுவார்கள். தலைக்கு 100 ரூபாயை பொங்கல் காசாக அப்பா எங்களுக்குக் கொடுப்பார்கள்.
அந்த நேரத்தில் எங்கள் எல்லோருக்கும் அப்படி ஒரு ஆனந்தம் ஏற்படும். பின்னர் அந்தப் புத்தாடைகளை அணிந்துகொண்டு, எல்லோரும் வரிசையாக அமர்ந்து பொங்கல் சாப்பிடுவோம். அதன்பின் எல்லோரின் கைகளிலும் கரும்புத் துண்டுகள் ஏறிவிடும். இப்படியொரு சந்தோஷத்துக்கு மனம் இப்போதும் ஏங்குகிறது. அங்கே இருக்கும் போது, தெரிந்தவர்கள், உறவினர்கள் என்று பலரும் எங்களைப் பார்க்க வருவார்கள்.
ஊரில் தங்கியிருக்கும் நாட்களில், அங்கே சுற்றுப் பகுதியில் பொங்கலையொட்டி நடக்கும் ரேக்ளா போன்ற போட்டிகளுக்கும், விழாக்களுக்கும் என்னை அழைப் பார்கள். நான் அதிலும் மகிழ்ச்சி யோடு பங்கேற்பேன். இந்த மகிழ்ச்சி யெல்லாம் 2004-ல் அம்மா மறையும் வரைதான் இருந்தது.
ஜெ.’ஆட்சிக் காலத்தில் ’பொடாவில் நான் சிறை வைக்கப் பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாத அம்மா, அதிர்ச்சியிலும் மன உளைச்சலிலும் உடல் நலக் குறைவுக்கு ஆளாகி, போய்ச் சேர்ந்து விட்டார்கள். இதன் பின்னரும் வழக்கத்தை விட்டுவிடக்கூடாதே என்று 2013 வரை பொங்கலை ஊரில் கொண்டாடும் வழக்கம் தொடர்ந்தது. அதன்பின், கால ஓட்டத்தில் அவரவருக்கும் சிறகு முளைத்து, அவரவர் வாழ்க்கை சூழல்கள், வேலை நெருக்கடிகள் என்று எல்லாம் மாறியதும், பொங்கலை ஊரில் கழிக்கும் நடைமுறையும் நின்றுவிட்டது.
*
இப்படியெல்லாம் எனக்கு நேர்ந்த பொங்கல் அனுபவத்தைப் போல்... அவரவருக்கும் பொங்கல் திருநாள் அனுபவங்கள் இனிமையாகவும் மகிழ்ச்சியாக வும் கடந்த ஆண்டுவரை இருந்தன. ஆனால் இப்போது எல்லாமே பழங்கனவாகி, ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆனால் இப்போது, கொரோனா சாக்கில் ஏற்படுத் தப்பட்ட பொருளாதார நெருக்கடி, மக்களின் வாழ்வையே கவிழ்த்துப் போட்டு, தீபாவளி பொங்கலையே ஓரம் கட்டிவிட்டது.
’கொரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங் கள்’ என்று உபதேசித்தபடியே, இங்கிருக்கும் ஆட்சியாளர்கள் கொரோனாவை வைத்து வாழத் தொடங்கிவிட்டார்கள். சொல்லப்போனால் கொரோனாவை சாக்காக்கி, தங்கள் வாழ்க்கையை அவர்கள் மக்களின் வரிப் பணத்தின் மூலம், நிதி ஒதுக்கீடு களால் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அதே சமயம், அவர்களுக்கு வாக்களித்த மக்களும் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளும், நாளுக்கு நாள் நெருக்கடியில் விழிபிதுங்கி பதறிக் கொண்டே இருக்கிறார்கள்.
அதானி, அம்பானிகளின் அரவணைப்பில் இருக்கும் மோடி அரசு, விவசாயத் தொழிலுக்கு உலை வைக்கும் வேளாண்மை சட்ட திருத்த மசோதா வைக் கொண்டு வந்து விளையாட்டுக் காட்டுகிறது. இங்கிருக்கும் எடப்பாடி அரசும், விவசாயிகளைப் பற்றியோ விவசாயத்தைப் பற்றியோ கவலைப்படாமல், அந்த சட்டங்களுக்கு விசுவாசத்தோடு ஆரத்தி எடுத்துவருகிறது.
ஆனால் பஞ்சாப், அரியானா, உ.பி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளோ தங்கள் ஊரை மறந்து, உறவுகளை மறந்து, உடமை களை மறந்து, தங்கள் வயதுகளை மறந்து... கொரோனாவின் அச் சுறுத்தலுக்கு நடுவிலும், ரத்தத்தை உறையவைக்கும் குளிருக்கு மத்தியி லும், கடந்த நவம்பர் 26 முதல், ஒரு மாதத்திற்கும் மேலாக, அந்த மோசமான சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று, டெல்லி வீதிகளில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களில் அரியானாவைச் சேர்ந்த அஜய்மூர், பஞ்சாபைச் சேர்ந்த மோவா சிங் உள்ளிட்ட விவசாயிகள் சிலர், குளிரில் நடுங்கி விறைத்து உயிரிழந்தும் கூட, அவர் களிடம் இன்னும் பாராமுகம் காட்டிக் கொண்டிருக்கிறார் கல்நெஞ்சரான மோடி.
முதியோர்களும் குழந்தைகளும் பெண்களுமாக, விவசாயிகள் டெல்லிக் குளிரில் நடுங்கிபடியே தங்கள் போராட்டத்தைத் தொடர, அதை வேடிக்கை பார்த்து வருகிறது மோடி சேனை. விவசாயிகளிடம் கருணை யோடு நடந்துகொள்ள வேண்டிய அரசுகள், நன்றி மறந்து, அவர்களின் கண்ணீரையும் துயரத்தையும் அறுவடை செய்துகொண்டிருக்கின்றன.
இந்தக் கொடுமைகளை இனியும் காலம் வேடிக்கை பார்க்காது. தேர்தல் களம், மக்களின் ஜனநாயக ரீதியி லான யுத்தக் களமாக மாறும். மக்களின் ஒவ்வொரு வாக்கும் அதிகார வர்க்கத்தினரின் நெஞ்சைக் குறி வைத்து, ஆவேச அம்புகளாக விரைவில் பாயும்.
காலம் மாறும் என்ற நம்பிக்கையோடும்...
அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளுடன்...
நக்கீரன்கோபால்