தியவேளை... அந்தச் சமயத்தில் டாக்டர் சந்திரனின் கன்ஸல்ட்டிங் அறையில் ஆட்களின் கூட்டம் இருக்கா தென்று நினைத்துதான் நான் சென்றேன்.

கேரளத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரக்கூடிய நோயாளிகள் எப்போதும் அங்கு வரிசையில் நின்றிருப்பார்கள்.

எனினும், நான் எப்போது வேண்டுமானா லும், அங்கு செல்லலாம்.

இலக்கியம், தத்துவ சாஸ்திரம், வரலாறு ஆகிய விஷயங்களில் ஆழமான அறிவுகொண்ட அவருக்கு அப்படிப்பட்ட விஷயங்களைப் பேசும் ஒரு மனிதன் கிடைத்ததில் மகிழ்ச்சி. ஆனால், நோயாளிகள் வெளியே நின்றுகொண்டு அலைமோதிக்கொண்டிருப்பார்கள்.

அதற்கு பயந்துதான் மதியப்பொழுதில் சென்றேன்.

நேரம் சரியாக இருந்தது.

யாருமில்லை.

சோதித்துப் பார்த்தார். என் தலை சுற்றல் முழுமையாக குணமாக வேண்டுமென்றால், ஒரு காது கேட்காத நிலைக்கு உள்ளாகும். அந்த அளவுக்கு இப்போது அவசிய மில்லை.

காது சரியாகக் கேட்பதும், தலை இலேசாக சுற்றவதுமாக இருப்பதுதானே நல்லது என்ற எண்ணத்துடன் அவர் கூறினார்: "மருந்து தர்றேன்.'' வேண்டாம் என்று நானும் கூறவில்லை.

தொடர்ந்து என் தாயின் நோயைப் பற்றியும் பேசினார்: "அது...பக்கவாதம். கோயாவின் மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேருங்கள். நான் தினமும் அங்கு வந்து பார்த்துக்கொள்கிறேன்.''

எனக்கு சந்தோஷம் உண்டானது.

கபிலனைப் பற்றியும் கணாதனைப் பற்றியும் பேச்சு ஆரம்பமானது.

திடீரென வாசலைத் தட்டும் சத்தம் கேட்டது.

நான் திரும்பிப் பார்த்தேன்.

மீண்டும் தட்டும் சத்தம்...

"பரவாயில்லை. அங்கேயே உட்கார்ந்திருங்க...'' டாக்டர் தொடர்ந்து கூறினார்:

"நம்முடைய பார்வைகள் எப்படி பௌதிக விஷயங்களிலிருந்து ஆழமான ஆன்மிக விஷயங்களுக்குள்...''

மீண்டும் தட்டும் சத்தம்...

கதவைப் பார்த்தேன்.

கதவைத் தள்ளித் திறந்தவாறு கோடறியைப் போன்ற ஒரு கை உள்ளே வந்தது. கதவின் வழியாக ஒரு மனிதரும்... ஆறடி உயரம்... தொப்பிக்கு மேலே ஒரு தலைக்கட்டு...

வளர்த்துக் கத்தரித்து விடப்பட்ட வட்ட வடிவ தாடி... தொழுகை செய்ததால் இருக்கக்கூடிய தழும்பு... நீண்டு அசைந்து கொண்டிருந்த டெர்லின் சட்டை...

நடக்கும்போது, பட படா என்று அடித்துக்கொண்டிருந்த கனமான வேட்டி...

ஒரு கையை மார்புடன் சேர்த்து வைத்தவாறு ஒரு சூறாவளியைப்போல அந்த பலமான மனிதர் அறைக்குள் நுழைந்துவிட்டுக் கூறினார்: "மன்னிக்க ணும், டாக்டர். நான் இப்போ செத்துடு வேன். நீங்க என்னைக் காப்பாத்தணும்.''

டாக்டர் சந்திரன் அவரை ஒருமுறை பார்த்துவிட்டுக் கேட்டார்:

"நெஞ்சுல வலி இருக்குதா?''

அந்த உறுதியான உடல் படைத்த மனிதர் வாய் பிளந்து நின்றுவிட்டார். தொடர்ந்து கூறினார்: "சரீரத்திற்குள் நுழைந்து இறங்க முடிகிற ஒரு கண்ணை ஆண்டவர் உங்களுக்குத் தந்திருக்கிறார் டாக்டர்.''

டாக்டர் சந்திரன் சற்று புன்னகைத்துவிட்டு அந்த மனிதரிடம் அமரும்படி கூறியவுடன், நான் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தேன்.

தாயின் நோயைப் பற்றிய சிந்தனை மனதை அலட்டிக்கொண்டிருந்தது.

அந்த நோயைப் பற்றி முன்பு ஒரு வைத்தியர் கூறியது ஞாபகத்தில் வந்தது. "ஏழு நாட்களில் குணமாகலாம்... ஏழு மாதங்களில் குணமாகலாம்... ஏழு வருடங்களிலும்...''

அதற்குமேல் சிந்திக்கவில்லை.

மறுநாளே அவளை கோயாவின் மருத்துவமனையில் கொண்டுவந்து அனுமதிக்க, சிகிச்சையும் ஆரம்பமானது. டாக்டர் சந்திரன் மாலை நேரத்தில் வந்தார். அவருடைய வார்த்தைகளைக்கேட்டதும், அம்மாவிற்கு நிம்மதி உண்டானது. டாக்டர் சென்றபிறகு, என்னிடம் கூறினாள்: "கடவுள் நம்பிக்கை உள்ளவர்.''

அந்தத் தீர்மானம் உண்டானதற்கான காரணங்களைப்பற்றி நான் கேட்கவில்லை.

காரிய காரண தொடர்புகளுடன் மட்டுமா இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் நடக்கின்றன? கபிலனைப் பற்றியும் கணாதனைப் பற்றியுமெல்லாம் மீண்டும் நினைவில் மூழ்கினேன்.

திடீரென மூன்று அறைகளுக்கு அப்பாலிருந்து ஆரவாரம் கேட்டது. பந்தயக் குதிரைகள் பாய்ந்துவருவதைப்போன்ற ஒரு பரபரப்பு...

இதற்கிடையே ஒரு முரட்டுத்தனமான சத்தம்... "என் சின்னப் பெண்ணே...

தேவிடியா... நீ என் இதயத்தைப் பாழாக்கியிட்டேல்ல?''

கவலையுடன் வெளிவந்த ஒரு சாப வார்த்தையாக அது இருந்தது.

பாத்திரங்கள் ஒன்றோடொன்று மோதும் சத்தமும், ஓடும் சத்தமும், கை வளையல்கள் குலுங்கும் சத்தமும் தொடர்ந்து ஒலிப்பதைக் கேட்டுவிட்டு நான் வாசலில் நின்றுகொண்டிருந்த நர்ஸிடம் கேட்டேன்: "என்ன....?''

"ஹாஜி ஊசி போட்டுக்கொண்டிருக்கி றார்...'' என்று ஒரு துணியின் ரோலைச் சுற்றுவதற்கிடையே அவள் கூறினாள்.

திருப்தி உண்டாகவில்லை என்றாலும், அதற்குமேல் எதையும் கேட்கவேண்டுமென்று தோன்றவுமில்லை. நான் மெதுவாக அந்தப் பக்கம் நோக்கி நடந்தேன்.

அப்போது அறைக்குள்ளிருந்து அழகு படைத்த ஒரு முஸ்லிம் பெண் ஒரு கையில் ஒரு கண்ணாடி டம்ளருடனும் இன்னொரு கையில் தலைத்துணியின் நுனியுடனும் ஓடி வந்துகொண்டிருந்தாள்.

எதிர் பக்கத்திலிருந்து இன்னொரு பெண் வெந்நீர் இருந்த கெட்டிலுடன் வேகமாக வந்துகொண்டிருந்தாள்.

இருவரும் எங்கே மோதிவிடுவார்களோ என்று நினைத்தேன். ஒரு சென்டிமீட்டர் வித்தியாசத்தில் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக விலகி நடந்தார்கள்.

வேகத்தில் குரூரமான ஒவ்வொரு திரும்பிப் பார்த்தல்களையும் எறிந்துவிட்டார்கள்.

அறையின் கதவு சற்று திறந்திருந்தது. அதன் வழியாக இடது கண்ணின்மூலம் பார்த்தேன்.

நிர்வாணமான ஒரு பலசாலியான மனிதர் குப்புறப் படுத்திருந்தார். ஒரு பெண் முதுகைத் தடவி விட்டுக்கொண்டிருந்தாள்.

அப்போது கண்ணாடி டம்ளரைக் கையில் வைத்தவாறு அழகான பெண் அருகில் சென்றாள்:

"இந்த பார்லியைக் குடிங்க...''

"எனக்கு வேண்டாம்.''- அலறல்.

"நான் தந்தால் நீங்க குடிக்கமாட்டீங்களா?''

"என் இதயம் போயிருச்சுல்ல? அந்த கிளியைப்போன்ற தேவிடியா என் இதயத்துல ஒரு குத்து குத்திட்டு போயிட்டாளே?'' கண்ணாடி டம்ளரில் உதட்டை வைத்தார்.

அப்போது வெந்நீர் கெட்டிலுடன் இன்னொருத்தி:

"கொஞ்சம் ஆவி பிடிக்கணும். இப்போ பார்- குடிக்கவேண்டாம்.''

"களைப்பு மாறுவதற்கு பார்-தான் முதல்ல...''- பார்லியைத் தருபவள் இடையே புகுந்து கூறியது முதுகைத் தடவி விடுபவளுக்குப் பிடிக்கவில்லை. வெடிகுண்டைப் போன்ற பார்வைகள்....

அடக்கிவைத்த சிரிப்புடனும் சத்தமற்ற பாத வைப்புகளுடனும் நர்ஸ்கள் அங்குமிங்குமாக போய்க்கொண்டிருந்தனர்.

பணிவானவள் என்று தோன்றிய ஒரு இளம்பெண்ணிடம் கேட்டேன்: "ஏன் இந்த அழுகையும் ஆரவாரமும்?''

அவள் தாழ்ந்த குரலில் தொடர்ந்து கூறினாள்: "ஒரு ஊசி போட்டுக் கொண்டதால் உண்டான ஆர்ப்பாட்டம்..... சார்.''

"அந்த அளவிற்கு சிரமத்தைக் தரக்கூடியதா ஊசி?''

ss

"இல்லை...''- அந்த பணிவான பெண் கூறினாள்: "இரண்டு... மூணு மனைவிகள் இப்படி பார்த்துக்கொள்வதற்கு இருக்காங்கன்னா... உங்களுக்கு சிரமமாக தோணாதா, சார்?''

"பணிவான பெண்... சரியான பெண்தான்'' என்று மனதிற்குள் நினைத்தவாறு நான் திரும்பிச் சென்றேன்.

Advertisment

சாயங்கால வேளையிலும் இதே கோலாகலம்தான் நடந்தது. அப்போது நான் நோயாளியை அருகில் பார்த்தேன். டாக்டர் சந்திரனின் மருத்துவமனையில் பார்த்த அதே பலசாலி மனிதர்தான்.

மறுநாள் காலையிலும் கோலாகலம்... ஊசி போட்டுவிட்டு நர்ஸ் அறைக்கு வெளியே சென்றபிறகு, ஹாஜி தன் துணியை அவிழ்த்து எறிந்தார். ஒரு கவிழ்ந்து படுத்தல்... ஒரு அலறல் சத்தம்...

"அடியே.... நர்ஸ் பெண்ணே... என் இதயத்தைக் குத்தி ஒரு வழி பண்றேல்ல?''

Advertisment

அப்போது மூன்று மனைவிகளும் கவனித்துக் கொள்வதில் இறங்கினார்கள்.

ஒருத்தி முதுகைத் தடவி விட்டுக் கொண்டிருந்தாள்.

இன்னொருத்தி காலை அமுக்கி விட்டுக்கொண்டிருந்தாள்.

"தண்ணீ...'' என்ற சத்தத்தைக் கேட்டதும், மூன்றுபேரும் கண்ணாடி டம்ளர்களுடன் கதவை நோக்கி ஓடினார்கள்.

கதவைத் தட்டினார்கள்.

இரண்டு கண்ணாடி டம்ளர்களாவது கீழே விழுந்து உடைந்திருக்கும்.

இப்படி சத்தத்திற்கு மத்தியில் ஹாஜிக்கு ஊசிபோடும் சம்பவம் இரண்டு நேரங்களில் நடந்தது.

இதற்கிடையே... என் அன்னையின் நோய் எதிர்பார்த்ததைவிட வேகமாக குணமானது.

அம்மாவை டாக்டர் கையைப்பற்றி நடக்கச்செய்தார். பல நாட்களாக வெற்றிலை போடாத காரணத்தால், தெளிவாக மின்னிக்கொண்டிருந்த என் தாயின் பற்களை வெளியே பார்த்தேன்: "என் குருவாயூரப்பா!'' "அம்மா நல்ல ஆளைப்பிடிச்சு வச்சிருக்காங்களே!''- டாக்டர் தமாஷாகக் கூறினார்.

‌"நம்புவதாக இருந்தால், இந்த பிரபஞ்சம் முழுவதையும் வழிநடத்திக் கொண்டிருப்பவரை நம்புவதுதானே நல்லது?'' அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டு, டாக்டர் புன்னகைத்தார்.

"நல்ல நம்பிக்கைதான்.''

"ஆமாம்...''- அம்மா கூறினாள்: "அந்த அறையில் ஆர்ப்பாட்டம் உண்டாக்கக்கூடிய ஒரு மனிதர் இருக்கிறார் அல்லவா? டாக்டர்...

அவரையும் நம்பிக்கை வைக்கும்படி சொல்லுங்க.''

"சரி'' டாக்டர் சந்திரன் மீண்டும் சிரித்தார். வெளியே சென்றபோது, நான் பின்னால் சென்றேன்.

என் அன்னையின் நோய் விஷயத்தில் கவலைப்பட வேண்டியதில்லை.

அந்த கட்டம் தாண்டிவிட்டது. அப்போது நான் கேட்டேன்:

"இந்த ஹாஜிக்கு என்ன நோய்?''

"சொல்லுறேன்.'' அவர் என்னை கன்ஸல்டேஷன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

"உங்களுக்கு ஒரு சுவாரசியமான கதையாக இருக்கும். கொஞ்சம் காதலும் கலந்திருக்கும் ஒரு நோய் இது.''

நான் டாக்டரின் முகத்தையே பார்த்தேன். அவர் தொடர்ந்தார்: "ஹாஜி குவைத்தில் இருந்தார். அப்போது இரண்டு மனைவிகள் அவருடைய சொந்த ஊரில் இருந்தார்கள்.

கொஞ்சம் பணம் சம்பாதித்துவிட்டு, திரும்பி வந்தார். இங்குவந்து துணிக்கடை, தேங்காய் எண்ணெய் வியாபாரம், மிளகு ஏற்றுமதி ஆகியவற்றை ஆரம்பித்தார்.

தாராளமாக பணம் புழங்கியது.

அப்போது இன்னொரு பெண்ணையும் கட்டிக்கொண்டார். அப்படி கட்டிய வகையிலும் கொஞ்சம் பணம் கிடைத்தது.

இரண்டு சினிமா தியேட்டர்களைக் கட்டினார்.

திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மூன்று மனைவிகளுடன் ஹாஜியார் காரில்வந்து இறங்கும்போது, ஊர் மக்கள் அதை ஒரு திருவிழாவைப் பார்ப்பதைப்போல பார்த்து ரசித்தார்கள்.

நிலைமை இப்படி இருக்கும்போது, உலக அறிவை அதிகமாகப் பெறவேண்டுமென்ற ஆவல் ஹாஜியாருக்கு உண்டானது. செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும். யார் வாசித்துக் காட்டுவது? மனைவிகளுக்கு எழுத்தென்றால் என்னவென்றே தெரியாது.

"கிளியைப் போன்ற ஒரு பெண்ணை நான் திருமணம் செய்தேன்'' என்று கூறியபோது, "நான்காவதாகவா?'' என்று என்னையே அறியாமல் கேட்டுவிட்டேன்.

"நான் நான்கு பேரைக் கட்டலாமே?''- என்பதுதான் ஹாஜியின் பதிலாக இருந்தது. அவளுக்கு வயது பதினேழு.

ஹாஜியின் மூத்த மனைவிக்குப் பிறந்த மூத்த மகனின் வயது இருபத்தாறு.

இரண்டாவது மகனுக்கு பத்தொன்பது வயது. இரண்டாவது மனைவிக்குக் குழந்தை இல்லை. மூன்றாவது மனைவி ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு, நோய் காரணமாக போதுமென நிறுத்திக்கொண்டாள்.

அப்போதுதான் பதினேழு வயது பெண் பத்திரிகையை வாசித்துத் தருவதற்காக வந்து சேர்ந்தாள்.

உணவை சாப்பிட்டுவிட்டு ஹாஜியார் படுத்திருக்கும்போது, அவள் அருகில் அமர்ந்து பத்திரிகையை வாசிப்பாள்.

"அவள் வாசிப்பது கிளி வாசிப்பதைப் போலவே இருக்கு'' என்று ஹாஜியார் கூறுவார்.

ஹாஜியார் அவளுக்கு விலை உயர்ந்த புடவைகள், நிறைய நகைகள் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தார். விலை மதிப்புள்ள கற்களை நான் குவைத்ல இருந்து கொண்டுவந்திருந்தேன். அவை முழுவதையும் அவளுக்குக் கொடுத்துட்டேன்'' என்று கூறியபோது, ஹாஜியின் தொண்டை இடறியது.''

"ஏன்?'' நான் கேட்டேன்.

டாக்டர் கதையைத் தொடர்ந்தார்: "ஒருநாள் உணவு சாப்பிட்டு முடித்து, ஹாஜி அடுக்கியடுக்கி வைக்கப்பட்டிருந்த சென்ட் வாசனை வந்துகொண்டிருந்த தலையணையில் சாய்ந்தவாறு அழைத்தார்: "ஸைனபா... இங்கு வா...''

பத்திரிகை வாசிப்பவள் வரவில்லை.

பிறகும் அழைப்பு.

சத்தமில்லை.

ஹாஜியார் உரக்க... உரக்க அழைத்தார்.

வேகமாக எழுந்து வீடு முழுவதும் அலசினார். ஸைனபா இல்லை.

"அவள் எங்கு போனாள்?''

ஸைனபா எங்கு சென்றாள்?

யாருக்குமே தெரியவில்லை.

கார்கள் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக பாய்ந்தன.

பார்த்தவர்கள் அனைவரிடமும் கேட்டார். யாருக்கும் தெரியவில்லை.

இறுதியில் தேங்காய் வியாபாரியான சுலைமான்தான் விஷயத்தைக் கூறினான்...

ஸைனபாவும் ஹாஜியாரின் மூத்த மகனும் புகைவண்டியில் ஏறிச் செல்வதைப் பார்த்ததாக...

"அதற்குப் பிறகு, அவர்கள் வரவில்லை. டாக்டர், அப்போ ஆரம்பிச்சது... என் இதயத்தின் வேதனை...'' என்று ஹாஜி தேம்பிக்கொண்டே சொன்னாரு.

"அவர் இதய நோயாளியா?''

"இல்லை... வாத நோய்.''

டாக்டர் காரில் ஏறியபிறகு, பின்னால் ஆரவாரம் ஒலித்தது.ஹாஜிக்கு ஊசிபோடும் சம்பவம் ஆரம்பமாகிவிட்டது.

_____________

மொழி பெயர்ப்பாளரின் உரை

வணக்கம். இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று மலையாள சிறுகதைகளை மொழி பெயர்த்திருக்கிறேன் "ஹாஜியின் இதயம்' கதையை எழுதியவர்... மூத்த மலையாள எழுத்தாளரும், தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான உறூப். 1975-ஆம் வருடத்தில் எழுதப்பட்ட கதை இது.

ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இந்த கதை எழுதப்பட்டிருக்கிறது. ஹாஜியாரையும், அவரின் 3 மனைவிகளையும், அவருக்குப் பத்திரிகையை வாசிப்பதற்காக வந்த 17 வயது கொண்ட கிளியான ஸைனபாவையும் நம் கண்களுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறார் உறூப்.

டாக்டர் சந்திரனே ஹாஜியாரின் காதல் கதையை சுவாரசியமாக கூறுவதைப்போல வருவது... நல்ல உத்தி. அதற்காகவே உறூப்பை நாம் பாராட்ட வேண்டும்.

இந்தக் கதையின் இறுதியில் என்ன நடக்கிறதோ, அதுதான் உண்மையான வாழ்க்கையிலும் நடக்கும். பணம் இருக்கிறதே என்பதற்காக மனம் போகும்படியெல்லாம் ஆட்டம் போடும் ஹாஜியாரைப் போன்ற மனிதர்களுக்கு இதைவிட வேறு என்ன தண்டனையை ஒரு எழுத்தாளர் தந்துவிட முடியும்? "பலா மரம்' கதையை எழுதியவர்... நட்சத்திர மலையாள எழுத்தாளரும், கேரள சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான உண்ணிகிருஷ்ணன் புதூர்.

குருவாயூரப்பனுக்கு நேர்த்திக்கடன் செய்வதாக கூறிவிட்டு, அதைச் செய்யாமல் விட்ட ஒரு மனிதனின் கதை. அப்படிப்பட்ட மனிதனுக்கு இறுதியில் என்ன நடக்கும்? புற்றுநோய் பாதித்த பலா மரத்திற்கு அருகில் நின்றுகொண்டு, அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

குருவாயூர் கோவிலில் அதிகாரியாக பல வருடங்கள் பணியாற்றியவர் உண்ணிகிருஷ்ணன் புதூர்.

தன் வாழ்க்கையில் தான் பார்த்த... தனக்கு நன்கு தெரிந்த ஒரு மனிதனைக் கதாபாத்திரமாகப் படைத்து, உண்மையிலேயே நடைபெற்ற சம்பவங்களை மையமாக வைத்து இந்த கதையை அவர் எழுதியிருக்கிறார்.

இந்த கதையை வாசிக்கும் பலருக்கும், இது ஒரு பாடமாகவும் இருக்கும். அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மறந்துவிட்டால், இந்த கதையில் வரும் மனிதனுக்கு உண்டாகும் அவல நிலைதான் யாருக்கும் உண்டாகும்.

"ஒரு பழங்கதை' என்ற சிறுகதையை எழுதியவர்... தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், மலையாள பெண் எழுத்தாளர்களின் அரசியுமான மாதவிக்குட்டி.

தான் உயிரென நேசிக்கும் கிருஷ்ணனுக்கு தன் மனதிலுள்ள எண்ணங்களை...

தான் வைத்திருக்கும் அளவற்ற காதலை...

வெளிப்படுத்தும் ராதாவின் கதை.

ஒரு சிறிய கதையில் எவ்வளவு தகவல்களைக் கூறுகிறார் மாதவிக்குட்டி! அதுதான் அவரின் தனித்துவ எழுத்தாற்றல்!

இந்த மூன்று கதைகளும் இவற்றை வாசிக்கும் உங்களுக்கு மாறுபட்ட பல அனுபவங்களை நிச்சயம் அளிக்கும்.

'இனிய உதயம்' மூலம் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளை வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன்,

சுரா