லகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்றினால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. 2020 மார்ச் இறுதி வாரம் தொடங்கி, டிசம்பர் இரண்டாம் வாரம் வரை இடையிடையே சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டாலும், விழாக்கள் நடத்து வதற்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. கிட்டத்தட்ட ஒன்பது மாத இடைவெளிகளுக்குப் பிறகு, மீண்டும் இலக்கிய விழாக்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

dgg

சென்னை இக்சா மையத்தில் கடந்த டிசம்பர்-19 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அறம் கிளை நடத்திய ‘இப்படிக்கு இயற்கை’ ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா மற்றும் கவிஞர் கலை இலக்கியா நினைவு நூல் விமர்சனப் போட்டியில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

இவ்விழாவில், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் ஹைதராபாத் போன்ற பிற மாநிலத்திருந்தும் 100-க்கு மேற்பட்ட அறம் கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வின் நேரடி இணைய வழி ஒளிபரப்பில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

Advertisment

தமுஎகச-அறம் கிளை கடந்த 2019-ஆம் ஆண்டு சனவரியில் தொடங்கப்பட்டது. அக்குஹீலர் மருத்துவர்களின் சமூக அக்கறை சார்ந்த கலை இலக்கிய ஆர்வத்தினால் விளைந்த இந்தக் கிளை, தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள் செய்திருக்கும் பல பணிகள் பாராட்டுக்குரியன.

மாதந்தோறும் ஏதாவது ஒரு நூலினை முன்வைத்து ‘அகவிழி’ எனும் 24 இலக்கியச் சந்திப்புக் கூட்டங்களையும், 12 சிறுகதை வாசிப்பு முற்றத்தையும், தத்துவப் பயிலரங்குகள், தொல்லியல் இடங்களுக்கு ஆய்வாளர்களுடன் பயணம், மாணவர்களுக்குத் தொல் எழுத்துப் பயிற்சிகள் 40 இடங்களில், படைப்பாளிகளைக் கொண்டாடுதல் நிகழ்வு, நூல் வெளியீடு... என தொடர்ந்து ஆக்கப் பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்து செய்திருக்கிறார்கள் அறம் கிளை நண்பர்கள்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னரே இன்றைக்கு பல அமைப்புகளும் முன்னெடுத்திருக்கும் இணைய வழி கூட்டங்களை அறம் கிளை 2019 சனவரியிலேயே நடத்தத் தொடங்கியது மிகச் சிறந்த முன்னுதாரணமான செயலாகும்.

Advertisment

அறம் கிளை உறுப்பினர் களுக்காக கடந்த ஏப்ரல்-8 அன்று இணைய வழி ஹைக்கூ பயிலரங்கு ஒன்றினை கவிஞர் மு.முருகேஷ் நடத்தினார். கிளைச் செயலாளர் அ.உமர் பாரூக் இதனை ஒருங்கிணைத்தார். இந்தப் பயிலரங்கத்தின் வழியே உத்வேகம் பெற்ற 75 ஹைக்கூ கவிஞர்களின் 250 கவிதைகள் அடங்கிய ‘கண்ணில் தெரியும் கடவுள்’ நூல், இணைய வழியாக ஆகஸ்ட்-2 அன்று வெளியிடப்பட்டது. மேலும், 74 கவிஞர்கள் எழுதிய 254 ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பான ‘இப்படிக்கு இயற்கை’ எனும் ஹைக்கூ கவிதைத் தொகுப்பு கொரோனா கால பெருந்தடைக்குப் பிறகு, சென்னையில் நடைபெற்ற விழாவில் ஓவியக்கவிஞர் அமுதபாரதி வெளியிட, ‘இனிய உதயம்’ இணையாசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் பெற்றுக்கொண்டார்.

நூலை வெளியிட்ட ஓவியக் கவிஞர் அமுதபாரதி பேசும் போது, “இளைய கவிஞர்கள் வாழ்க்கை அனுபவத்தை உணர்ந்து, உள்வாங்கி, செறிவாக ஹைக்கூ கவிதைகளைப் படைத்திருக்கிறார் கள். இன்றைக்கு ஆயிரமாயிரமாய் மலரும் ஹைக்கூ மலர்களில் வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளும் காட்சிகளாக விரிக்கின்றன’’ என்று பாராட்டினார். நூலைப் பெற்றுக்கொண்ட கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், “மகாகவி பாரதியால் 1916-ஆம் ஆண்டில் தமிழுக்கு முதல் அறிமுகமான ஹைக்கூ கவிதைகள், இன்றைக்கு பலரையும் ஈர்த்து கவிஞர்களாக மலர்த்தியிருக்கிறது. எழுத்தாளர் களைச் சமூக மருத்துவம் செய்பவர்கள் என்பார்கள். இயற்கை மருத்துவர்களான நீங்கள் பேனா பிடித்து இலக்கியத்தின் வழியாகவும் சமூக மருத்துவப் பணியைச் செய்திருக்கிறீர்கள்’’ என்று குறிப்பிட்டார்.

நூலைத் திறனாய்வு செய்து கவிஞர் மு.முருகேஷ் பேசுகையில், “ஹைக்கூ என்றாலே வெறும் மூன்று வரிக் கவிதை எனும் தவறான புரிதலோடு பார்க்கும் பார்வை இன்னமும் தொடர்கிறது. சொற்சுருக்கம், காட்சியழகு, கவித்துவத்துடன் கூடிய உள்ளார்ந்த சமூக அக்கறையுடன் எழுதப்படும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் இன்றைக்கு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தொகுப்பில் பங்கேற்றிருக்கும் 74 கவிஞர்களுக்கும் இதுதான் முதல் படைப்பு முயற்சி என்று சொன்னால் நம்பவே முடியாத வகையில் வார்த்தைச் செறிவும், கவித்துவமும் நம்மை அப்படியே ஈர்த்துக் கொள்கின்றன. சமூக நிகழ்வுகளைக் கவிதைகளில் படம் பிடித்திருக்கும் கவிஞர்கள், தொடு சிகிச்சை மருத்துவர்களாகவும் இருப்பதால், இவர்களது கவிதைகள் நம் இதயத்தைத் தொடுவதாகவும் இருக்கின்றன. ஒரு படைப்பை அதன் வடிவம் கருதியோ, பக்க அளவு கருதியோ மதிப்பீடு செய்யாமல், ஒரு படைப்பின் சமூக தேவையைக்கொண்டு மதிப்பீடு செய்வதே சரியானதாகும். மரபுக் கவிதையா, புதுக்கவிதையா, ஹைக்கூ கவிதையா என வடிவம் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளாமல் அது கவிதையாக இருக்கிறதா என்பதை மனதிலிருந்து வாசிக்க வேண்டும்’ என்றார்.

வாழ்த்துரை வழங்கிய நாடகக் கலைஞர் க.பிரகதீஸ்வரன், “கோரோனா போன்ற நெருக்கடியான காலத்திலும் ஜூம் வழி கூட்டங்கள் பல நடைபெற்று வருகின்றன. எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பையும் சரியான அர்த்தத்தோடு பயன்படுத்த வேண்டுமென்பதை ஜூம் வழி கூட்டங்கள் நிரூபித்துள்ளன. இந்தக் கூட்டம் நேரிலும் இணைய வழியேயும் நடைபெறுவது சிறப்புக்குரியது’’ என்றார்.

இன்றைக்கு தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உழைப்பாளி மக்களின் போராட்டம் எப்படி இருக்க வேண்டுமென்பதை அவர்கள் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு போராடும் விவசாயிகளை எப்படி ஒடுக்குவது என்பதற்கான புதுப்புது வழிகளை யோசித்து வருகிறது. நமக்கு உணவிடும் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற, விவசாயிகளின் பக்கம் நிற்க வேண்டிய சமூகக் கடமை படைப்பாளர்கள் அனைவருக்கும் இருக்கிறது’’ என்று தமுஎகச-வின் கௌரவத் தலைவரும் எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வன் தனது நிறைவுரையில் பகிர்ந்துகொண்டார்.

dadf

நிகழ்வை ஒருங்கிணைத்த அ.உமர் பாரூக்கின் நன்றியுரையில், “கொரோனா நம்மை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தாலும், கார்ப்பரேட் தொழில் முறையான ஜூம் வழி கூட்டங்களை அனைவரும் இன்றைக்குப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை அறிந்திருக்கின்றோம். எழுதுவது, கூட்டங்கள் நடத்துவது ஆகியவற்றோடு நில்லாமல், போராடுகிற விவசாயிகளுக்கும் அறம் கிளையின் சார்பாக சிறு நிதியை வழங்கியிருப்பது மனநிறைவான செயலாகும்’ என்றார்.

இலக்கிய உலகை கொரோனா எனும் வைரஸ் இருளெனப் போர்த்தியிருந்த வேளையில், ஹைக்கூ எனும் மூவரிச் சுடர் அந்த இருளினைக் கிழித்தெறிந்த இனிய நிகழ்வாக இந்த விழா அமைந்திருந்தது.

இப்படிக்கு இயற்கை’ ஹைக்கூ நூலிலிருந்து சில தெறிப்பான வரிகள் :

*

வீட்டுத் தோட்டம்

உணர்த்தியது

விவசாயியின் வலியை.

- செ.கல்பனா செந்தில்

*

ஆற்று நீரும்

வானவில்லாய் வண்ணங்களில்

தொழிற்சாலை கழிவு.

- பி.டார்வின் ராஜ்

*

இயந்திரத்தின் இரைச்சலில்

கேட்காமலேயே போனது...

அறுவடை பாட்டு.

- மு.ஜெய்கணேஷ்

*

கொரோனாவுக்கு நன்றி...

இயல்பாய் மூச்சு விடுகிறேன்...

இப்படிக்கு இயற்கை.

- ம.விஜயா

*

இடித்தவனுக்கே

சொந்தமாகிப் போனாளே...

பாபர் மசூதி.

- தியாகு கண்ணன்

*

நீர் தெளித்துவிட்டு

நடந்தே போனாள்

கோலம் போட்டது பாதச்சுவடு.

அ.பாலமுரளி

*

கொட்டும் மழை

தொடரும் வகுப்புகள்

இணைய வழியில் கல்வி.

- சை.பிரியா

*

ஆறடி சிலைக்கு

அறுபது ஏக்கரில் கோவில்

நிலச் சுரண்டல்.

- ரா.கிருஷ்ணவேணி

*

விரல்களின் நாட்டியம்

காற்றுடன் கலந்தது

இசைக்கும் புல்லாங்குழல்.

- து.பரமேஸ்வரி

*

இரவுக்குச் சந்திரன்

பகலுக்குச் சூரியன்

இரண்டுக்கும் நான்.

- க.நளினி பிரியா