கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழ் இலக்கியத்தில் தனித் தடம் பதித்தவர். அவர் நினைவு நாளையொட்டி ஹைக்கூக் கவிதைப் போட்டியை முன்னெடுத்திருந்தார் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி.
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கவிஞர்கள் 8,200 ஹைக்கூ கவிதைகளை இந்தப் போட்டிக்கு அனுப்பியிருந்த நிலையில், இயக்குநர் லிங்குசாமி தலைமையிலான நடுவர் குழு அவற்றைப் பரிசீலித்து, வெற்றி பெற்ற ஹைக்கூ கவிதைகள்' வாடியது கொக்கு ’ என்ற தலைப்பில் நூலாகவும் தொகுக் கப்பட்டன. போட்டிக்கான பரிசளிப்பு மற்றும் இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 2 ஆம் தேதி நடந்தது. அது குறித்த நிகழ்வுகளைப் பார்ப்போம்.
பின்னணிப் பாடகி மகதி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடி, விழாவை இனியமையாக ஆரம்பித்து வைக்க, எழுத்தாளர் ராம கிருஷ்ணன் தலைமையில் நிகழ்ச்சிகள் தொடங்கின. போட்டிக்கு நடுவர்களாகப் பணியாற்றிய இயக்குனர் லிங்குசாமி, பேராசிரியர் இராம. குருநாதன், இயக்குநர் பிருந்தா சாரதி, கவிஞர் விவேகா, கவிஞர் ஜெயபாஸ்கரன் மற்றும் நிகழ்ச்சியையும் போட்டியையும் இணைந்து நடத்திய விஷ்ணு அசோசியேட் ஆர்.சிவக்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அறுபத்தி ஐயாயிரம் கலைஞரின் உருவப்படங்களின் மூலம் உருவாக்கப்பட்ட நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழியின் ஓவியத்தை இயக்குநர் லிங்குசாமி இவ்விழாவில் அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
விழாவில் வரவேற்புரை ஆற்றிய இயக்குநர் பிருந்தா சாரதி, "இன்று ஹைக்கூ தமிழில் ஒரு அன்னிய மொழிக் கவிதை வடிவம் என்று இல்லாது, தமிழ்க் கவிதை வடிவம் போலவே ஆகிவிட்டது. அதற்கு கவிக்கோ அப்துல் ரகுமானின் முயற்சிகளே முக்கிய காரணம். அவருடைய நினைவு நாளில் ஆண்டுதோறும் புதிய ஹைக்கூ கவிஞர்களை ஊக்குவிக்கும்விதமாக, ஒரு கவிதைப் போட்டியை நடத்த வேண்டும் என்று இயக்குனர் லிங்குசாமி முயற்சி எடுத்தார். கவிக்கோ மறைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அது கைகூடியிருக்கிறது. ஹைக்கூ கவிதைப் போட்டியின் முதல் பரிசு ரூ. 25,000, இரண்டாவது பரிசு 15,000, மூன்றாவது பரிசு ரூ 10,000 என்று தீர்மானித்து மேலும் 50 கவிஞர்களுக்கு1000 ரூபாய் வீதம் பரிசு வழங்கப்படுகிறது.” என்று நிகழ்ச்சியின் மைய நோக்கத்தை எடுத்துரைத்தார்.
'வாடியது கொக்கு' தொகுப்பை, கவிஞர் கனிமொழி வெளியிட, இயக்குநர் லிங்குசாமி, எழுத்தாளர் ராமகிருஷ்ணன், விஷ்ணு அசோசியேட் ஆர். சிவக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பரிசுக்குரிய கவிஞர்களுக்கு பரிசுகளும் வழங்கப் பட்டன.
கவிதைகளைத் தேர்ந்தெடுத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட கவிஞர் ஜெயபாஸ்கரன் , “கவிக்கோ அப்துல் ரகுமான் கவிஞர்களின் கவிஞர். தனக்கு கொடுக்கப்பட்ட கவிக்கோ என்ற பட்டத்திற்கு 40 ஆண்டுகள் எந்தக் குறையும் வராமல் அவர் வாழ்ந்தார். கவிக்கோ பெயரில் ஒரு போட்டியை நடத்துவதற்கு முற்றிலும் பொருத்தமானவர் லிங்குசாமி.
போட்டிக்கு வந்த கவிதைகளைப் படித்துத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர் என்னிடம் தந்தார். போட்டிக்கு 8,020 கவிதைகள் வந்தன.
அவற்றிலிருந்து 350 கவிதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன். அவற்றிலிருந்து மேலும் மூன்று நடுவர்கள் துணையோடு லிங்குசாமி இந்த 53 கவிதைகளைத் தேர்ந்தெடுத்தார். இயன்றவரை நடுநிலையோடு எங்கள் தேர்வினை செய்திருக்கிறோம்.
என்றாலும் பரிசு பெறாதவர்கள் தளர வேண்டிய அவசியமில்லை” என்றார்.
தலைமை உரையாற்றிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், “கவிக்கோ அப்துல் ரகுமான் நான் எழுதத் தொடங்கிய காலத்தில் எனக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். என் கதைகளைப் படித்துப் பாராட்டி ஊக்கப்படுத்தி இருக்கிறார். பல நூல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். வார இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகள் உலக இலக்கியப் போக்குகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தின. பல புதிய இலக்கியக் கோணங்களை அறிமுகப்படுத்தியவர் அப்துல் ரகுமான். பல விளக்குகளை ஏற்றிவைத்தவர் அவர். தீக்குச்சியாகவும் இருந்தவர். அணையாத ஒரு சூரியனாக இருந்தவர். சூரியனுக்கு அருகிலேயே இருந்தவர். சூரியனைப் பாராட்டியவர். சூரியனைப் பற்றிக் கவிதை பாடியவர்” என்று கவிக்கோவை அரசியல் சார்ந்து பாராட்டியவர், போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டமுதல் மூன்று கவிதைகளான
* வாடியது கொக்கு
ஓடியவை எல்லாம்
ஜோடி மீன்கள்- (மலேஷியா நடா)
* பனிபடர்ந்த கண்ணாடியில்
கண்கள் வரைந்தேன்
கண்ணீர் வழிகிறது.
(ஆரணி இரா. தயாளன்)
* சுள்ளி பொறுக்குகிறாள் சிறுமி
இறகை விட்டுச்செல்லும்
மயில்
( சென்னை ஜி. கஜபதி)
- ஆகியவற்றை வெகுவாகப் பாராட்டினார்.
வாழ்த்துரை நிகழ்த்த வந்த பேராசிரியரும் ஆய்வறிஞருமான முனைவர் இராம.குருநாதன் தனது உரையில்... “ஜப்பானில் தோன்றிய ஹைக்கூ கவிதைவடிவம் உலகின் பல மொழிகளில் எழுதப்பட்டாலும் தமிழில்தான் மிக அதிகமாக எழுதப்படுகிறது. அதேபோல் இந்திய மொழி களிலேயே அதிக எண்ணிக்கையிலான ஹைக்கூ கவிதை நூல்கள் தமிழில்தான் வந்துள்ளன. கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ கவிதைக்கு செய்திருக்கும் பங்களிப்பு மிகப்பெரியது. அவரால் உந்துதல் ஏற்பட்டு ஹைக்கூ வடிவத்தில் எழுதத் தொடங்கியவர்கள் ஏராளம். ஹைக்கூ கவிதை போட்டியில் என்னிடம் வந்த 300 கவிதைகளில் 30 கவிதைகளை நான் தேர்வு செய்தேன். என்னைத் தவிர மேலும் மூன்று நடுவர்கள் இக்கவிதைப் போட்டியில் கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எழுதிய கவிஞர்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குனர் என். லிங்குசாமியோ “கவிக்கோ எழுதிய கட்டுரையைப் படித்துப் படித்து கவிதை எழுத கற்றுக் கொண்டு எழுத வந்தவன் நான்.
அப்படித்தான் எனக்கு ஹைக்கூ அறிமுகமானது.
நான் டிஜிட்டல் ஓவியங்கள் வரைந்து ஒரு கண்காட்சியை நடத்தினேன். அதில் ஓவியங்களோடு என் கவிதைகளையும் கண்காட்சிக்கு வைத்திருந்தேன். அதைப் பார்க்க கவிக்கோவை அழைத்திருந்தோம். ஓவியங்களையும் கவிதைகளையும் பார்த்துக் கொண்டே வந்தவர் ஒரு கவிதையைப் பார்த்து ரியல் ஹைக்கூ என்று பாராட்டினார். பிருந்தா சாரதி சற்றுமுன் கூறினாரே...
அந்தக் கவிதைதான் அது.
வயல் முழுக்க வண்ணத்துப் பூச்சிகள் என்ன செய்ய ?
அந்த மாஸ்டர் இந்த மாணவனைப் பாராட்டுவதை மனதுக்குள் பல முறை நினைத்து நினைத்து மகிழ்ந்தேன்.
கனிமொழியை இந்த விழாவிற்கு அழைத்த போது, மறுநாள் கலைஞர் பிறந்த நாள் என்பதால், முதல் நாளே அது சம்பந்தமான பணிகள் இருக்கும் என்று தயங்கினார். கலைஞரே இந்த விழாவை விரும்புவார் என நாங்கள் கூறியதும் சிரித்துக்கொண்டே வருகிறேன் என்றார். சினிமா, கவிதை, இலக்கியம் என்று எங்கள் உரையாடல் நீண்டது. அவருடைய எளிமை மாறவே இல்லை. நாங்கள் உதவி இயக்குனராக சென்னை வந்ததிலிருந்து அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். ஒரு முதலமைச்சர் வீட்டுப் பெண் என்ற எண்ணமே இல்லாமல் உலக சினிமா பார்க்க எளிமையாக ஆட்டோவில் வருவார். அதே தன்மையைத்தான் இப்போதும் பார்க்கிறேன்” என்றார் உற்சாகமாக.
கவிஞர் கனிமொழி தனது வாழ்த்துரையில், “கலைஞருக்கும் கவிக்கோவுக்குமான உறவு ஆழமா னது. உறுதியானது. வெற்றி பெறுகிறபோது பலர் வருவார்கள். வெற்றி இல்லாமல் போகிற போது யாரும் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள்.
ஆனால் கவிக்கோ வெற்றி தோல்வி என்ற வேறுபாடு இல்லாமல் கலைஞரோடு எப்போதும் நிலையான தொடர்பில் இருந்தவர். அதனால்தான் தலைவர் கலைஞர் 'வெற்றி பல கண்டு விருது பெற வரும் போது வெகுமானம் எது வேண்டுமென்று கேட்டால் அப்துல் ரகுமானைத் தருக என்பேன்' என்று கவிக்கோவைப் பற்றி கவி பாடினார்.
கவிக்கோ தான் கவிதை எழுதியது மட்டுமல்ல தன்னைச் சுற்றி இருந்த எல்லோரையும் கவிதை எழுத வைத்தவர் . ஹைக்கூ கவிதைகள் தமிழில் பரவ கவிக்கோவின் பங்கு மகத்தானது. லிங்குசாமியே ஒரு அற்புதமான ஹைக்கூ கவிஞர். அவருடைய ஹைக்கூ கவிதைகளை என்னை விழாவிற்கு அழைக்க வந்தபோது கொடுத்தார். மிகவும் ரசித்துப் படித்தேன். 'சட்டென்று எதையாவது உணர்த்திவிட்டுப் போகிறது பறவையின் நிழல் ' என்று ஒரு கவிதை. எவ்வளவு அழகான கவிதை பாருங்கள்.
ஒவ்வொரு கவிதையும் ஒரு அனுபவம். கவிஞன் எழுதுகிறபோது ஒரு அனுபவம். அதைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வோடு கலந்த அனுபவமாக மாறி அவருக்கு வேறு கவிதையாக மாறிவிடுகிறது. ஆகவே சோசலிசம் என்பது கவிதையில்தான் இருக்கிறது என்று சொல்லலாம். எல்லோருக்கும் பொதுவாக, ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுபவத்தை தரும் இந்த ஹைக்கூ கவிதை எழுதி போட்டியில் கலந்து கொண்டவர்களை, பரிசு பெற்றவர்களை,விழாவில் கலந்துகொண்ட கவிஞர்கள் அனைவரையும் பாராட்டி விடைபெறுகிறேன்” என்றார்.
கவிஞர் நெல்லை ஜெயந்தா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, தொகுப்பு நூலை வெளியிட்ட டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் நன்றியுரை ஆற்றினார்.
கவிக்கோ, மறைந்த பிறகும் இதுபோல் இலக்கிய உலகில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்.