ம் மனித சமூகம் தன்னைத் தானே சிறந்த நாகரிக மனிதர்களாக செதுக்கிக்கொண்டது, ஆசிரியம் என்ற புனிதத் தொழில் மூலம் தான்.

மனிதன் நாவில் சொல் முளைத்தபோதே கற்பித்தலும் கற்றலும் தொடங்கிவிட்டது.

ஆமாம், மண் தோன்றிய காலத்தில் இருந்து கற்றலும் கற்பித்தலும் இயல்பாகவே நடந்து வருகிறது. வெறும் கற்களாக இருப்பவர்களைச் சிலையாகச் செதுக்கும் சிற்பி தான் ஆசிரியர்.

'ஆசு' என்றால் 'குற்றம்' என்று பொருள். 'இரியர்' என்றால் 'திருத்துபவர்' என்று பொருள். நாம் செய்யும் குற்றங்களையும் தவறுகளையும் திருத்துவதே ஒரு நல்ல ஆசிரியருக்கான அழகு.

Advertisment

மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை யாரோ ஒரு ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டேதான் இருக்கிறார். பிறந்த குழந்தைக்கு நடை பழக கற்றுக் கொடுக்கும் தாயும் தந்தையும் சிறந்த ஆசான் தான். அதனால்தான், "சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" என்கிறது புறநானூறு. நிமிடத்திற்கு நிமிடம் பல நூறு விஷயங்களை இந்த உலகம் என்ற ஆசிரியர் நமக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

அறிவுசார்ந்த அறத் தத்துவத்தை உலகறியச் செய்த வீரத் துறவி விவேகானந்தர் உள்ளிட்ட பெரியவர்களும் பைபிளைத் தந்த இயேசுவும் குர்ஆனைத் தந்த நபிகளும் நமக்கு அன்பையும் மனித நேயத்தையும் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள்தான் எனலாம். தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் ஆசிரியர் பிளாட்டோ, பிளாட்டோவின் ஆசிரியர் சாக்கரடீஸ் என்று ஆசிரியராகவும் மாணவராகவும் இருந்து இந்த சமூகத்திற்கு ஆகச்சிறந்த தத்துவங்களைத் தந்தவர்கள் என்றால் அது மிகையாகாது.

தமிழர்களைப் பொறுத்தவரை, பகுத்தறிவைப் போதித்த தந்தை பெரியாரும், சமூக சீர்திருத்தச் சிந்தனைகளை விதைத்த அறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிடத் தலைவர்களும், காலத்தை வழி நடத்தவந்த ஆசிரியர்கள்தான் என்றால் மறுப்பாரில்லை.

Advertisment

ஆசிரியப் பணியை அறப்பணி என்பார்கள். ஏனென்றால், இளைய தலைமுறைக்கு நல்ல அறத் தைக் கற்பிக்கும் பணி அவர்களின் கைகளில் மட்டுமே இருக்கிறது. ஆசிரியப் பணியை தலையாய பணியாகக் கொண்டு வாழ்ந்த ஆசிரியர்களை நாம் வரலாற்றில் இனம் கண்டு கொள்ளலாம். கிரேக்க மன்னன் பிலிப் தன் மகன் மாவீரன் அலெக்சாண்டர் பிறந்த தும் பெருமைப்பட்டாராம். ஏன் தெரியுமா? என் ஆசிரியர் டயோஜனிஸ் இருக்கும்போதே அவன் பிறந்துவிட்டான்; இனி எனக்குக் கவலை இல்லை என உள்ளம் மகிழ்ந்தாராம். இப்படிப்பட்ட நல்ல ஆசிரியர்களின் கைகளில் தான் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

ஆசிரியர்கள் மாணவர்களிடம் இருக்கும் திறமை யைத் தேடுவதும் மாணவர்கள் ஆசிரியர்களிடம் இருக்கும் அறிவைத் தேடுவதும் ஒரே சமயத்தில் நடக்கும்போது கற்ற கல்வியும் கற்றுக் கொடுத்த கல்வியும் அதற்கான பொருளைப் பெறுகிறது. தேடுவதையும் தேடலைத் தூண்டுவதையும் மாணவர்கள் மத்தியில் கொண்டுவரும் தூண்டிலாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நம் சமூகம் பலவிதமான கல்விகளை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறது. வாழ்வில் பொருள் ஈட்டுவதற்காக சொல்லிக் கொடுக்கும் கல்வி ஒருபுறம்; வாழ்க்கைக்கான பொருளைச் சொல்லிக் கொடுக்கும் கல்வி மற்றொரு புறம். இன்றைய தலைமுறை எந்தவிதமான கற்றல் அணுகுமுறையைக் கொண்டிருந்தாலும் அது அறம் சார்ந்து இருக்க வேண்டியது அவசியம்.

தன் பெயருக்குப் பின்னால் பல பட்டங்களை நிரப்பிக் கொண்டு தன் தகுதியை நிலைநாட்டிக் கொள்ளும் ஆசிரியர்களைவிட, ஆசிரியர் என்ற பெயருக்கான தகுதியை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். புத்தகத்தில் இருப்பதை அப்படியே வகுப்பறையில் சென்று திணிப்பதல்ல கற்பித்தல். தான் படித்ததை தன்னுடைய பார்வையில் விளக்கி மாணவர்களின் பார்வையில் அவர்களை சிந்திக்க வைப்பவர் தான் திறமையான ஆசிரியர். மேலும், மாணவர்களை ஆராயும் நோக்கில் வழிநடத்துபவர்களே மிகச் சரியான ஆசிரியர்களாக இருக்க முடியும். "மீன் வாங்கிக் கொடுப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே சரி" என்ற பழைய பழமொழி சொன்ன நினைவூட்டலின் படி பாடங்களையும் குறிப்புகளையும் கையில் எடுத்துக் கொடுப்பதை விட பாடங்களுக்கான புத்தகங்களையும் குறிப்பையும் எப்படித் தேட வேண்டும் எனக் கற்றுக்கொடுப்பதுதான் சிறந்த கற்பித்தலாக இருக்க முடியும்.

சமூகம் பல ஆசிரியர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது. கீரை விற்கும் அம்மாவிடம் மனிதநேயத்தையும் காய்கறிக் கடை வியாபாரியிடம் கணக்கையும் மளிகைக் கடைக்காரரிடம் மண் மணத்தையும் பால்காரரிடம் நேரம் தவறாமையையும் நாம் கற்றுக் கொள்ளலாம். நம் வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் வரும் ஒவ்வொருவரும் நமக்குப் பாடம் கற்றுத் தரும் ஆசான்கள் தான். நம் வாழ்வில் அனுபவம் மிகச்சிறந்த ஆசிரியர். அது நமக்குப் பாடம் எடுப்பதற்கு முன்பாகவே தேர்வு வைத்துவிடும்.

cc

ஆனால், இன்றைய கல்விமுறையில் வகுப்பு, தேர்வு, மதிப்பெண், வீட்டுப்பாடம் என்பதையெல்லாம் தாண்டி மாணவர்களின் உளவியல் அறிதல் அவர்களின் திறமை மற்றும் எதிர்பார்ப்பு இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொள்வது ஒரு நல்ல ஆசிரியருக்கான அழகு. கவலைகள் தான் காலக் கண்ணாடியில் நம் தோற்றத்தை மாற்றிக் காட்டுகிறது. அதற்கான தீர்வு சரியான கற்றலில் தான் இருக்கிறது. மனித வாழ்க்கை எத்தகையதாய் அமையவேண்டும் என பாடம் சொல்லிக் கொடுக்கிறார் பிசிராந்தை யார் என்ற புலவர்.

"யாண்டு பலவாக நரையில ஆகுதல்

யாங்காகியர் என வினவுதிராயின் மாண்ட என்

மனைவியொடு

மக்களும் நிரம்பினர்

யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை

ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே"

என்று பிசிராந்தையார் தனக்கு நரை இல்லாத தற்குக் காரணம் சொல்கிறார். எனக்கு வாய்த்த மனைவி நல்லவள்; என் குழந்தைகள் எண்ணிக்கையில் மட்டுமல்ல அறிவிலும் நிறைந்தவர்கள்; என் சுற்றத் தார்கள் எந்த ஒரு தீங்கும் விளைவிக்காதவர்கள்; என்னிடம் பணிபுரியும் பணியாளர்கள் என் மனம் அறிந்து நடப்பவர்கள்; இந்த நாட்டு அரசனும் யாதொரு தீங்கும் விளைவிக்காதவன்; ஆனால், இவை எல்லாவற்றையும் விட மிகச் சிறப்பானது சான்றோர் கள் அதிகமாக வாழக்கூடிய பெருமை உடையது எங்கள் ஊர் என்கிறார். பன்னாட்டு நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் தொழில்நுட்ப நிறுவனங்களும் அழகு நிலையங்களும் இருப்பதால் எங்கள் ஊர் சிறப்பு என்று அவர் சொல்லவில்லை. சான்றோர் கள் இருப்பதால் எங்கள் ஊர் கவலையில்லாமல் இருக்கிறது என்கிறார். கல்வி கற்ற சான்றோர்கள் இருக்கும் ஊர் என்றும் செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்தும் அற்புதமான பாடல் இது.

பலருடைய வாழ்வில் அவர்கள் சந்தித்த நல்ல ஆசிரியர்கள் கல்வியைப் போலவே கடைசி வரை நினைவில் பயணம் செய்பவர்களாக இருப்பார்கள். அன்றைய ஆசிரியரின் கண்டிப்பும் கவனிப்பும் தான் அவர்கள் நம் மனதில் நீக்கமற நிறைந்து இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால் இன்றைய ஆசிரியர்களால் அதே கண்டிப்போடு மாணவர்களை அணுகமுடிவதில்லை. ஆசிரியரிடம் இருந்து வரும் மிதமான கண்டிப்புகளைக்கூட இன்றைய தலைமுறை மாணவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. மாறாக, மாணவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளால் பல நேரங்களில் ஆசிரியர்களே தண்டிக்கப்படுகிறார் கள். ஆகையால் இன்றைய பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது மிகப்பெரும் சவாலாகவே இருக்கிறது.

மற்றொரு பக்கம் மாணவர்கள் ஆசிரியரைக் கத்தியால் குத்துவது போன்ற வன்முறைகள் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எல்லாப் பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் ஆசிரியர் மாணவர்களிடையே சரியான புரிதல் இல்லாததுதான். தேர்வுக்கான பாடங்களை நடத்த நேரம் ஒதுக்குவதைப்போல மாணவர்களை மனதளவில் தயார் செய்ய ஒவ்வொரு ஆசிரியர்களின்கீழ் குறைந்தது பத்து மாணவர்களையாவது பிரித்து அவர்களுக்கு ஆலோசனை (ஈர்ன்ய்ள்ங்ப்ண்ய்ஞ்) எனத் தனி நேரம் ஒவ்வொரு நாளும் ஒதுக்கவேண்டும். இது ஆசிரியரும் மாணவரும் தங்களுக்குள் மனம் விட்டுப் பேசுவதற்கான நேரம். பல நேரங்களில் வீட்டில் பிள்ளைகளோடு உட்கார்ந்து பேசுவதற்கு பெற்றோர்களுக்குக்கூட நேரம் இருப்பதில்லை. பணம் தேடும் இயந்திர வாழ்க்கையில் பெற்றோர் கள் சிக்கிக்கொள்ளும் பட்சத்தில் குழந்தை களைச் சரியான பாதையில் அவர்களால் வழிநடத்த இயலாமலேயே போய்விடுகிறது. பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் இதே மனநிலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு ஆசிரியர்களின் அரவணைப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட பின்னணியில் இருந்து வரும் மாணவர்களைக் கண்காணிக்க தனி நேரம் ஒதுக்குவதைக் கட்டாயமாக்கினால் அவர்களின் எதிர்காலம் செவ்வனே திட்டமிடப்பட்டதாய் இருக்கும்.

சமீப காலமாக ஆசிரியர்களை கேலிச் சித்திரங்களாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. ஆசிரியர்களை சம்பளத்திற்காகவே படைக்கப் பட்டவர்களாக ஊடகங்கள் காட்டுவது வருத்தத்திற் குரியது. ஏனென்றால் மற்ற துறைகளில் இருப்பவர்கள் ஊதியமே வாங்காமல் சமூகத்திற்காகவே உழைக்கி றார்கள் போலும். ஆனால் ஆசிரியப் பணியில் இருப்பவர்கள் ஊதியத்தைத் தாண்டி மாணவர்களின் மனதிற்குள் பயணம் செய்து அவர்களின் திறமை களை வெளிக் கொணர்கிறார்கள். அப்படிச் செய்ய ஒரு நல்ல ஆசிரியரால் மட்டுமே முடியும். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் படிப்பு என்றாலே பத்தடி தூரம் ஓடும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து வீடு வீடாகச் சென்று பிள்ளைகளைப் படிக்க வைத்த பெருமை மகாலட்சுமி என்ற ஆசிரியரையே சாரும். ஜவ்வாது மலைவாழ் மக்களின் ஒவ்வொரு வீட்டிற்கும் கல்வி விளக்கேற்றியது மகாலட்சுமி என்ற ஆசிரியர்தான் என்றால் அது மிகையாகாது. இன்னும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களின் நலன் விரும்பிகளாக ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் ஆசிரியர்களைத் தவறாக எடை போட்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் இருப்பதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும்.

கவிஞர் கலீல் ஜிப்ரான் சொன்னதுபோல படித்த ஆசிரியர்களைவிட படித்துக்கொண்டே இருக்கும் ஆசிரியர்கள்தான் இந்த சமூகத்திற்கு அதிகம் தேவைப்படுகிறார்கள். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற ஆசிரியர் பள்ளிச் சீருடையிலேயே ஓய்வு பெறும் வரை பணியாற்றுவேன் என மாணவரோடு மாணவராக ஐக்கியமாகி தன்முனைப்போடு செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் தேசிய நல்லாசிரியர் விருதைக் கூட பள்ளிச் சீருடையிலேயே சென்று பெற்ற பெருமை அவருக்கு உண்டு. இதேபோன்று திருத்தணியில் பகவான் என்ற ஆசிரியரின் பணி மாறுதலை மாணவர்கள் தங்களின் அன்பு மழையால் தடுத்து நிறுத்தி னர். தன் கற்பித்தலின் மூலம் மாணவர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆசிரியர் பகவான்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூலிக்கு மாரடிப்போர் என நையாண்டி செய்பவர்களுக்கு நெத்தியடி கொடுக்கும் விதமாக சாதனை படைத்து வருகிறார்கள் இந்த ஆசிரியர்கள். அரசு ஊதியம் பெறும் பள்ளி ஆசிரியர்களாக இருந்தாலும் சரி கல்லூரிப் பேராசிரியர்களாக இருந்தாலும் சரி மாணவர்களோடு மாணவர்களாக தம்மை அர்ப்பணித்துக் கொண்டு அவர்களுக்காக களமிறங்கத் தான் செய்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் தன்னைக் களங்கமில்லாதவர் என நிரூபிக்கும் சூழலில் இன்று ஆசிரியர்கள் சமூகம் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

ஆசிரியப் பணிக்கு வேண்டுமானால் ஓய்வு இருக்கலாம். ஆனால், உண்மையாகக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கு ஓய்வு என்றுமே கிடையாது. அறிவை விரிவு செய்ய மனதை விசாலமாக்க திறமையான ஆசிரியர்கள் நம் கூடவே இருக்கிறார்கள்.

அவர்களை ஊடக வெளிச்சத்தில் அரங்கேற்றுவோம். எத்தனை மாற்றங் கள் மண்ணில் நிகழ்ந்தாலும் பல பகவான்களும் மகாலட்சுமிகளும் நம்மோடு வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆசிரியர் உறவுமுறை பழமையாக இருக்கலாம். கற்றலும் கற்பித்தலும் புதுமையானது.

ஆசிரியர்கள் மீதான புகார் களும் மாணவர்கள் நடத்தை குறித்த சர்சைகளும் அதிகரித்துவரும் நிலையில், இதையெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது.