அவர் சிரமப்பட்டு மருத்துவமனையை அடைந்தபோது, ஒரு நர்ஸ் அவளைத் தயார் செய்துகொண்டிருந்தாள்.
அவளுடைய வெளிறிப்போன முகத்தையும், இரண்டாக வகுத்த தலைமுடியையும் பார்த்தபோது அவருடைய கண்கள் நிறைந்தன.
திடீரென்று அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். ""இந்த ஆபரேஷன் முடிஞ்சு என் உடல்நலக்கேடு குணமானா நாம ஷாப்பிங் போகணும்.'' அவள் கூறினாள்:
""ஞாபகத்துல இருக்கா? ஏழு வருஷங்களுக்கு முன்னால நம்மோட திருமணம் முடிஞ்ச மாசத்தில... நீங்க எனக்கு ஒரு பச்சைப் பட்டுப்புடவை தர்றதா சொன்னது...
அந்த புடவையை வாங்கணும். வேணாமா?''
""வாங்கணும். எது வேணும்னாலும் வாங்கித் தர்றேன்.'' அவர் கூறினார்.
""ஆனா என் அழகெல்லாம் போச்சு. இல்லையா?''
""இல்ல அம்மு. உன் முகத்தோட அழகு கூடியிருக்கு.'' அவர் கூறினார்.
அவள் சிரித்தாள்.
""எத்தனை மணிக்கு ஆபரேஷன்?'' அவள் கேட்டாள்.
""ஏழு மணிக்கு... இன்னிக்கு முதல் ஆபரேஷன்'' நர்ஸ் பதில் கூறினாள்.
""நீங்க புறப்படுறப்போ குழந்தை கண் விழிச்சிருந்ததா?'' அவள் கேட்டாள்.
""இல்லை... சாய்ஞ்சு படுத்துத் தூங்கிக்கிட்டிருந்தது.'' அவர் கூறினார். அவருடைய தொண்டையில் அப்போதும் ஒரு அழுகை தடைப்பட்டு நின்றிருந்தது.
""நான் இறந்துடுவேனா?'' அவள் கேட்டாள்: ""உண்மையைச் சொல்லுங்க. இந்த ஆபரேஷன்ல நான் இறந்துடுவேனா?''
""ஏய்... இறக்கமாட்டே...'' அவர் கூறினார்.
""நீங்க இறக்கமாட்டீங்க... இப்போதெல்லாம்...'' நர்ஸ் கூறினாள்: ""எவ்வளவு பேர் நோய் குணமாகி இங்கிருந்து போறாங்க!''
""ஆனா புற்று நோய்...''
""நீ தேவையில்லாம கவலைப்படாதே அம்மு. நல்ல விஷயங்களை நினைச்சுப் பாரு...'' அவர் கூறினார்.
""என் குழந்தைக்கு பல் முளைக்கறதையும், அவன் நடக்கறதையும்... எதையுமே நான் பார்க்கமுடியாத நிலை வருமா? அவனை வளர்க்கறதுக்கு எனக்கு அதிர்ஷ்டம் உண்டாகாதா?''
அவள் பதைபதைப்புடன் திரும்பத்திரும்பக் கேட்டாள்: ""நான் இறந்துடுவேனா?''
""இல்ல... இறக்கமாட்ட... நான் சத்தியம் பண்ணுறேன். நீ இறக்கமாட்ட.''
அவருடைய உதடுகள் நடுங்குவதை அவள் பார்க்காமலிருக்க வேண்டுமென்பதற்காக அவர் சாளரத்தின் கதவை நோக்கி நடந்தார்.
""ஏன் வெளிச்சமா இல்ல?'' அவள் கேட்டாள்: ""வெளியே மரங்கள் எதையும் என்னால பார்க்க முடியலையே!''
""வாங்க. நேரமாச்சு...'' நர்ஸ் அவளை எழுப்பியவாறு கூறினாள்: ""வாங்க... நாம போவோம்.''
அவர்கள் மூன்றுபேரும் ஒரு நீளமான கூடத்தின் வழியாக நடந்து, நிறைய விளக்குகள் இருந்த ஒரு தளத்தை அடைந்தார்கள்.
""இங்க உட்காருங்க. டாக்டர் தியேட்டருக்கு வரலைன்னு தோணுது.'' நர்ஸ் கூறினாள்.
""நீங்கதான் மிஸஸ் மேனனா?'' இன்னொரு நர்ஸ் ஒரு புத்தகத்துடன் அவளை நெருங்கி வந்தாள். உணர்ச்சியற்ற அந்த முகத்தைப் பார்த்தவாறு அம்மு தலையைக் குலுக்கினாள்.
""இங்க கையெழுத்து போடணும்.'' நர்ஸ் அவளிடம் கூறினாள்.
அவள் பேனாவை வாங்கி கையெழுத்து போட்டாள்.
""நீ பதைபதைப்பு அடைய வேணாம்.'' அவர் கூறினார்.
""இல்ல... நான் அந்த பட்டுப்புடவையைப் பத்தி சிந்திக்கிறேன். ரெண்டு ஓரங்களிலும் ஜரிகை போட்ட பச்சைப் புடவை...'' அவள் கூறினாள்.
அவர் திடீரென்று அவளுக்கு முன்னால் முழங்காலிட்டு நின்றவாறு அவளுடைய கைகளைத் தன் கைகளுக்கு இடையே வைத்தார்.
""என் அம்மு... நான் உன்மேல எந்த அளவுக்கு அதிகமா அன்பு வச்சிருக்கேன்னு உனக்குத் தெரியாதா?'' ""இப்படி ஒவ்வொண்ணையும் சொல்றதாலதான் எனக்கு அழுகை வருது.''
""நீயும் நானும் சேர்ந்து ஷாப்பிங் போவோம். குழந்தையையும் நடக்கறதுக்கு கூட்டிட்டுப் போவோம். செய்யறதுக்கு என்னவெல்லாம் எஞ்சி இருக்கு!'' அவர் கூறினார்.
""வாங்க... நேரமாகிட்டது.'' நர்ஸ் அறைக்குள் நுழைந்து வந்து கூறினாள்: ""மிஸ்டர் மேனன்... நீங்க தியேட்டருக்குள்ள வரமுடியாது. இங்கேயே இருங்க.''
தியேட்டருக்குள் நுழையும்போது, அம்மு திரும்பிப் பார்த்தவாறு கூறினாள்:
""அந்த பச்சைப்பட்டுப் புடவையை மறந்திடாதீங்க.''
தொடர்ந்து அவள் இறுதியாக அவரைப் பார்த்துச் சிரித்தாள்.
________________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக அருமை யான மூன்று மலையாளச் சிறுகதைகளை மொழிபெயர்த் திருக்கிறேன்.
"குறிஞ்சிப் பூனை' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மூத்த மலையாள எழுத்தாளரான உறூப். இவரின் உண்மையான பெயர் பி.ஸி. குட்டிகிருஷ்ணன். மலையாள மண் வாசனையுடன் எடுக்கப் பட்ட "நீலக்குயில்' என்ற படம் இவர் எழுதிய கதையைக் கொண்டது. "குறிஞ்சிப் பூனை' கதையை வாசிக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் தங்களின் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பார்கள். அனைவரின் வாழ்க்கையிலும் இதில் வருவதைப்போன்ற சம்பவம் நடந்திருக்கும். எத்தகைய அருமையான வாய்ப்புகளையெல்லாம் நாம் கவனக்குறைவால் இழந்திருக்கிறோம் என்று இதை வாசிப்பவர்கள் உணர்வார்கள்... வருந்துவார்கள். இப்போது கவலைப்பட்டு என்ன பயன்? குட்டிசங்கரனுக்கு அவருடைய அத்தை மகள் லட்சுமி மீண்டும் கிடைக்கவா போகிறாள்? ஏங்கி கண்ணீர்விடுவதைத் தவிர வேறு வழி? "சாட்சி' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற நட்சத்திர எழுத்தாளரான டி. பத்மநாபன்.
இந்த கதையில் வரும் மனிதர் கிட்டத்தட்ட பத்மநாபன்தான். பல சம்பவங்களுக்கும் சாட்சியாக இருக்கக்கூடிய உண்மையான மனிதர் அவர். போலித்தனங் களுக்கும், பகட்டுச் செயல்களுக்கும் அவர் எப்படி உடன்படுவார்? அதனால்தான் சிறிதும் அதில் கலக்காமல், தீவுபோல விலகியிருக்கிறார். இப்படிப்பட்ட மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.
"பச்சைப் பட்டுப்புடவை' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மலையாள பெண் எழுத்தாளர்களின் தலைவியான மாதவிக்குட்டி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு "ஆபரேஷன் தியேட்ட'ருக்குள் நுழையும் ஒரு பெண்ணின் பரிதாபக் கதை. பச்சைப் பட்டுப்புடவை வாங்க வேண்டுமென்று அந்தத் தருணத்தில்கூட ஆசைப்பட்டு, அதை தன் கணவரிடம் அவள் கூறவும் செய்கிறாள். "தொடர்ந்து அவள் இறுதியாக அவரைப் பார்த்து சிரித்தாள்' என்ற வரியை எழுதியதன்மூலம், நம் கண்களை ஈரமாக்குகிறார் மாதவிக்குட்டி. அதுதான் அவரின் அபார எழுத்தாற்றல்!
"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளை தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த இலக்கிய உள்ளங்களுக்கு நன்றி!
அன்புடன்,
சுரா