தமிழகத்தின் புகழ்பெற்ற நவீன ஓவியரும், இயங்கு படக்கலைஞரும், உலகக் காண்பியல் தளத்தில் தமிழ் அடையாளத்தை அழுத்தமாகப் பதிவு செய்து வருபவருமான டிராட்ஸ்கி மருது என்னும் மகா கலைஞரின், ஒட்டுமொத்த கலைப் பங்களிப்பையும் பாராட்டி, வையம் அமைப்பு "மருதோவியம்' என்னும் பெயரில் கடந்த 29-ஆம் தேதி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக்கூட்ட அரங்கில் ஒருநாள் திருவிழாவை நடத்தியது.
தமிழக அரசின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத் தலைவராக அண்மையில் மருது நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதுவும் அவரது தூரிகைக் காதலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. எனவே இதற்கும் சேர்த்தே இந்தப் பாராட்டு விழாவை எடுத்திருக்கிறார்கள் வையம் அமைப்பினர். கரும்பனை கலை இலக்கிய ஊடகத் தளம் இந்த நிகழ்ச்சியை அழகாய் ஒருங்கிணைத்திருந்தது.
இதற்கான விழாக்குழுவில் சிந்துவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.(ஓய்வு), சுந்தர் கணேசன், அ.சௌரிராஜன், கவிதாபாரதி, பழநிபாரதி, ரா.கண்ணன், க.பஞ்சாங்கம், விடியல் வேணுகோபால், க.சந்திரசேகரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த மகத்தான நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய பல்துறைப் பிரபலங்கள் சிலரின் உரைகளில் இருந்து இங்கே...
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அண்ணன் மருது அவர்களின் ஓவியத்தைவிட அவருடைய சிரிப்பு என்னை அதிகம் கவர்ந்தது. அவருடன் நான் ஒருவர் காலம் நெருங்கிப் பழகுகிற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு அண்ணன் பிரபாகரன் அவர்களின் அழைப்பை ஏற்று, 2002-ஆம் ஆண்டு ஈழத்துக்குச் செல்கிற வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
அந்தக் குழுவில் அண்ணன் மருது, பா.ஜெயப்பிரகாசம், கவிஞர் இன்குலாப், இயக்குநர் புகழேந்தி தங்கராசு ஆகியோர் இடம் பெற்றிருந் தோம். அப்போது அண்ணன் மருது அவர்களோடு நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு கிடைத்தது. விடுதலைப் புலிகளின் துணை அமைப்பான "கலை இலக்கியப் பேரவை'யின் சார்பில் அதன் பொறுப்பாளர் கவிஞர் புதுவை ரத்தினதுரை ஏற்பாட்டில் அந்த மாநாடு யாழ்ப்பாணம் வீர சிங்கம் மண்டபத்தில் நடந்தது. அங்கே உரையாற்றினோம்.
பிறகு வன்னிக்கு நாங்கள் சென்றபோது, எங்களை வரவேற்க அண்ணன் பிரபாகரன் ராணுவ உடையோடு காத்திருந்தார். எங்கள் ஒவ்வொருவரையும் ஆரத்தழுவி வரவேற்றார். பிரபாகரன் எங்களுக்கு உணவு பரிமாறினார். அந்த மகத்தான தலைவர் எங்களோடு பழகிய பொழுதுகள், எங்களை மிகவும் நெகிழவைத்தன. அப்படி ஒருவார காலத்தை நாங்கள் ஈழத்திலே செலவிட்டோம்.
பிறகு அந்திசாயும் வேளையின் முல்லைத் தீவின் கடலோரத்தில் காத்திருந்த தளபதி சூசை அவர்களை சந்தித்தோம். இரவு அங்கேயே தங்கியிருந்தோம். அங்கே மறுநாள் அங்கயற்கண்ணி என்ற படகில் பயணித்தபோது, எப்படி துப்பாக்கியைக் கையாளவேண்டும் என்று எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தார்கள். அந்த அனுபவம் எங்களுக்கும் உண்டு. எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், அண்ணன் மருது அவர்கள், நான் பிரபாகரனைப் பார்த்தேன் என்று எங்குமே பீற்றிக்கொண்டதில்லை. மருது அண்ணனுக்குப் பொய் சொல்லத் தெரியாது. சிரிப்பு மட்டும்தான் அவரது மொழி. அதனால் அவர் நூறாண்டு வாழ்வார்.
அவருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். தமிழகத்தில் இருக்கும் ஆகச்சிறந்த ஓவியர்கள் ஆயிரம் பேரை ஒரு இடத்தில் திரட்டி, தந்தை பெரியாரை வரைகிற நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்ய்யவேண்டும். அதைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடவேண்டும். அதைக் கண்காட்சியாகவும் நடத்தவேண்டும். பெரியாரை இந்த மண்ணில் கொச்சைப் படுத்துகிற அளவிற்கு ஒரு துணிச்சல் ஏற்படுகிறது என்றால் சனாதனத்தின் கை ஓங்கியிருக்கிறது என்று பொருள்.
அதை நாம் வேடிக்கை பார்க்கமுடியாது. இவ்வளவு பேர் நாம் இருக்கிறபோதே இது நடக்கிறது என்றால், நாம் இல்லாத போது தமிழ்நாட்டின் நிலை என்ன ஆகும் என்ற கவலை யும் அச்சமும் ஏற்படுகிறது.
பெரியார் எத்தகைய ஈகத்தைச் செய்தார்? அது எத்தகைய தாக்கத்தை தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது? என்பதற்கு ஈழ விடுதலைப் போராட்டமும் ஒரு சாட்சி.ஈழ விடுதலை இயக்கத்தில் இருக்கிற அத்தனை பேரும் மதிக்கிற ஒரு மாமனிதர் தந்தை பெரியார். திராவிட இயக்கங்களை பிரபாகரனே விமர்சித்தார் என்பது போன்ற கருத்து இப்போது உருவாக்கப்படுகிறது.இது ஆபத்தான அரசியல்.
நக்கீரன் ஆசிரியர்
மருது அண்ணனைப் பாதுகாக்கவேண்டும் என்று நம்ம பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சொன்னார். இப்ப தமிழக அரசின் திரைப்படக் கல்லூரியைப் பாதுகாக்கும் பொறுப்பு, மருது அண்ணனிடம் வந்திருக்கிறது. அங்கே என்னென்ன செய்யவேண்டும், எதை எதை மாற்றவேண்டும் என்பதை எல்லாம் அவர் சரியாகச் செய்துகொண்டு இருக்கிறார். சொல்லப்போனால் திரைப்படக் கல்லூரிக்கே இன்னொரு கிரஹப் பிரவேசத்தை அவர் நடத்திக்கொண்டு இருக்கிறார்.
அடுத்தவர்கள் ஜெயிப்பதற்கு, இவரைப்போல யாராலும் தட்டிக்கொடுக்க முடியாது. எல்லாவற்றிலும் அவரிடம் சின்சியாரிட்டி அதிகம்.தான் போடும் படத்தை ஒழுங்காக அச்சகங்கள் அச்சடிக்கவில்லை என்று, மருது அண்ணனே ஒரு பிரிண்டிங்க் பிரஸ்சை வைத்திருந்தார். அப்படி ஒரு ஈடுபாடு.
அதேபோல், பண்டைய காலத்தில் தமிழன் எப்படி இருந்தான் என்பதை நம் கண்முன் நிறுத்திய ஒரே ஓவியர் நம்ம அண்ணன்தான். அவர்கள் வாள் பிடிப்பதையும் கேடயம் பிடிப்பதையும் அப்படியே கண்முன் காட்டியவர் அவர்.அதுபோல் இதுவரை யாரும் நம் தமிழனைச் சித்தரிக்கவில்லை. ஈழத்துக்குப் போனதை நம்ம திருமா அண்ணன் நடந்ததை நடந்த மாதிரியே சொன்னார். ஆமைக்கறி சாப்பிட்டதாக அவர் சொல்லவில்லை. ஆனா ஒருத்தன் இங்கே எவ்வளவு பொய் பொய்யாகச் சொல்லிக்கிட்டுத் திரிய றான்? அப்படியெல்லாம் இல்லாம, தரையைத் தட்டாம, கையை ஓங்காம, ஈழ விசயத்தை திருமா சொன்னார்.
அவர் சுட்டிக்காட்டியது போல, நாம இருக்குற காலத்தி லேயே இப்படி பொய்யைச் சொல்றான்களே, இல்லாதப்ப என்ன செய்வானுங்க என்கிற கவலை நம் மனதில் நிற்குது.
ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
நம் சமூகத்தில் ஒரு ஆளுமையை அவர் காலத்தி லேயே கொண்டாடித் தீர்ப்பது என்பதை, நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. அதை மீறி இந்த விழா இங்கே நடந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நானும் மருது அவர்களும் மதுரையில் அருகருகே பிறந்து வளர்ந்திருக்கிறோம். ஆனால் நாங்கள் அங்கே பார்த்துக்கொண்டதில்லை. எனினும் என்னைப் பற்றி அவர் அப்போதே கேள்விப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
பின்னர் காலப்போக்கில் என் உணர்வில் மருது ஒன்றி விட்டார். "சிறகுக்குள் வானம்' என்கிற என் முதல் கவிதை நூலுக்கு அவர்தான் அட்டை வரைந்து கொடுத்தார்.
அதில் என் கவிதைகளுக்கே சிறகு முளைத்தது. கொரோனா காலத்தில் ஒரிசாவில் இருந்தபடி 30 உரைகளை வழங்கினேன். அவை நூலானபோது அதற் கும் மருதுதான் ஓவியம் வரைந்தார். அந்த ஓவியங் களில் முழுக்கட்டுரையின் ஜீவனும் இருக்கும். உத்தர காண்டில் திருவள்ளுவர் சிலை வைக்க அனுப்பியபோது, அது இழிவுசெய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட அந்த கோபத்தை, நான் மருதுவைத்தான் வரையச் சொன் னேன். அவ்வளவு சிறப்பாக வரைந்தார். அந்த நூலை வெளியிட்ட நாரதகான சபா மேடையில், எல்லோரும் திருவள்ளுவரின் தாடியின் கீழ் அமர்ந்திருக்கும்படி, அதன் வடிவமைப்பை நான் ஆசைப்பட்டபடி அமைத் துக்கொடுத்தார். அவர்தான் டிராட்ஸ்கி மருது.
இயக்குநர் கரு.பழனியப்பன்
ஒரு ஓவியரைப் பாராட்ட உலக நாடுகளில் இருந்தெல் லாம் இங்கு பலரும் வந்திருக்கிறார்கள். அவர்களைக் கேட்டால் நாங்கள் ஓவிரைப் பாராட்ட வரவில்லை. எங்கள் அண்ணனைப் பாராட்ட வந்திருக்கிறோம் என்கிறார்கள். எப்போதும் பின் வரிசையிலேயே ஓவியர்களை அமரவைக்கும் இங்குள்ள நிலைமைக்கு மாறாக, இங்கே ஓவியர் மருதண்ணனை முன்னாள் உட்காரவைத்து இந்த விழாவை நடத்தும் நண்பர் களைப் பாராட்டுகிறேன். அண்ணன் மருது எனக்கு முந்தைய தலைமுறை. ஆனால் என் மகள் அவரிடம் ஓவியம் கற்கிறார். என் மகள் அவரோடு உரையாடுகிறார்.
இதுதான் எனக்குப் பெருமை. மகிழ்ச்சி. பெரியாரைப் பற்றியும் அம்பேத்கரைப் பற்றியும் இந்த அரசியலைப் பற்றியும் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருக் கும் மருது அண்ணனை, நாம் தொடர்ந்து கொண்டாட வேண்டும். நம்மோடு அரசாங்கமும் சேர்ந்து கொண் டாடவேண்டும். மருதுவைப்போல நம் சமூகத்துக் காக சிந்திக்கிறவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.
அவருக்கு அரசு வீடு கொடுக்கவேண்டும் என்பது என் ஆசை.
நான் மருதண்ணன் வீட்டுக்குப் போனபோது எனக்கு ஒரு கதை சொன்னார். பெரும்பாலான கிறிஸ்தவ வீடுகüல் வணங்கும் கை இருக்கும். அது அன்னை தெரசா கையின்னும் ஏசு கிருஸ்துவின் கையின்னும் நாம நினைச்சிக்கிட்டு இருப்போம். அந்தக் கையை வரைந்தவர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆல்பர்ட் டியூரர். அந்த கைக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு.
அவர் குடும்பத்தில் 14 சகோதரர்கள். அவர் அண்ணனுக் கும் ஓவியம் படிக்க ஆசை. ஆனால் அவர்கüன் அப்பா, ஒருவரை மட்டும்தான் ஓவியம் படிக்க அனுப்ப முடியும்ன்னு சொல்-ட்டாரு. அப்ப ஆல்பர்ட்டும் அவர் அண்ணனும், யார் ஓவியம் படிக்கப் போறதுன்னு முடிவு செய்ய பூவா தலையா? போட்டுப் பார்த்தாங்க. அப்ப ஆல்பர்ட் கேட்ட மாதிரியே தலைவிழுந்ததால், அவர் ஓவியம் படிக்கப் போனார்.
மூன்று ஆண்டுகüல் அவரோட ஆசிரியர்களை விடவும் சிறந்த ஓவியரா அவர் ஆயிட்டார். அவர் ஓவியங் கள் நல்ல விலைக்கு விற்றது. நாலாவது வருசம் சொந்த ஊரான ஜெர்மனிக்கு, பணக்காரரா திரும்பி வர்றாரு.
உடனே அண்ணனைப் பார்த்து, அண்ணே நான் ஓவியம் படிக்கப் போனேன். படிச்சேன். இன்னைக்கு நல்ல நிலைக்கு வந்துட்டேன், இப்ப, நான் உன்னைப் படிக்க வைக்கிறேன். நீ போன்னு சொன்னார்.
அப்ப, ஆல்பிரட் டுயூரரின் அண்ணன், தன் கால் சட்டைப் பைக்குள் விட்டிருந்த தன் கைகளை எடுத்து நீட்டினார். சுரங்கத்தில் வேலை செய்ததால் அவர் விரல்கள் உடைஞ்சி சேதமடைஞ்சு, வளைஞ்சி நெüச்ச நிலையில் இருக்கு. இதைக் காட்டி, ஓவியம் போன்ற காரியங்களை செய்வதற்கு என் கை விரல்கள் இனி ஒத்துழைக்காதுன்னு அண்ணன் சொல்றாரு. இதைக் கேட்ட ஆல்பர்ட் மன வருத்தத்துக்கு ஆளாகிறார். பிறகு எனக்காக கும்பிடறமாதிரி போஸ் கொடுன்னு கேட்கி றார். அதைப் பார்த்து ஓவியம் வரைகிறார். அந்த ஆல்பர்ட் டியூரரின் கைதான் இன்று அனைத்து கிருஸ்தவ வீடுகüலும் இருக்கிறது. இந்தக் கதையை மருதண்ணன் தான் சொன்னார். உடனே நான் சொன்னேன். படம் வரையிறத விட, இதுவரை வரைந்த படங்கள் பற்றிய கதைகளைச் சொல்லுங்கள் என்றேன்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இணை இயக்குநர் சங்கர சரவணன் எனக்கு இது மிக முக்கியமான நிகழ்ச்சி. அதனால் தான் அழைப்பில் பெயர் இல்லாத போதும் நானாக வந்து பேசுகிறேன் .பேராண்மை என்ற படத்தில் மருது, பிரசிடெண்டா நடித்திருந்தார். அதுலதான் அவரை முதல்முதலாக நான் பார்த்தேன். அண்ணா நூலகத் திறப்பு விழாவின்போது அவர் நிறைய ஓவியங்களை வரைந்து கொடுத்திருந்தார். சம்பளம் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார். 10 வருசத் துக்கு மேல் கூட அவருக்கு பில் போகவில்லை. ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப்படலை. அவருக்கு ஒரு பெக்கூலியரான சிரிப்பு. உற்சாகமாகப் பேசுவார். ரொம்பவும் எüமையானவர். சார் ஓவியத்தை யாராலும் காப்பியடிக்க முடியாது. அவ்வளவு தனித் தன்மை கொண்டவர்.
நடிகர் நாசர்
என் வாழ்க்கையில் மருதுவுக்கு முக்கிய பங்கு உண்டு. அதற்கு நன்றி சொல்லதான் நான் வந்திருக்கி றேன். அவரை முதல்முறை சந்திக்கும்போது என்னை அவருக்கு அடையாளம் தெரியாது. அவரை இப்போதும் பிலிம் மேக்கராகத்தான் பார்க்கிறேன்.என் சினிமா பயணத்தில், என் தேவதை திரைப்படக் கதைக்கு, ஓவியங் களை வரைந்து கேட்டு வாங்கினேன். அந்தப் படங்களை வைத்துதான் கேரக்டர்களைத் தேடிப் பிடித்தேன்.
அந்த படத்துக்கும் அவரே ஆர்ட் டைரக்டராக இருக்க ஒப்புக்கொண்டார். ராஜாக்களின் வடிவத்திற்கு பிரமாண்டங்களைத் திணிக்கத் தேவையில்லை என்று என்னை உணரவைத்தவர் மருது. அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.
மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி நான் சின்ன வயதிலேயே ஓவியம் கற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதைக் கற்றுக்கொள்ளமுடியாத துயரம் இப்போதும் எனக்கு இருக்கிறது.ஓவியத்தை மருது அளவிற்கு அரசியலோடு இணைத்துச் செயல்படுகிறவர்களை நான் பார்த்த தில்லை. இந்த சமூகத்தை நுணுக்கமாக உள்வாங்கி, அதைச் சொல்லுகிற பாங்கையும் நான் மருது அவர்களிடம் கண்டேன். அவர் தமிழ்ச்சமூகத்தின் மிகப்பெரிய படைப்பாளி. இங்கே ஆர்ட்டை அப்ரிசி யேட் பண்ணக்கூடிய சூழல் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை. நம் வீட்டில் யாராவது ஓவியம் வரைய முயன்றால், உன் விரலை உடைப்பேன் என்று சொல்கிற நிலைதான் இருக்கிறது. கல்லூரிகளில்கூட மெக்கானிக்கல் டிராயிங், என்ஜினியரிங் டிராயிங் இருக்கிறது. ஆனால் கிரி யேட்டிவ் டிராயிங் இல்லை. அதனால், புதுமையான படைப்புகள் உருவாவது இல்லை.நம் மருதுவின் ஓவியங்கள் தனித்து நிற்பதற்குக் காரணம் அவற் றில் தமிழின் வேர்கள் இருக் கின்றன. தமிழனின் வரலாற் றுக் கூறுகள் அவர் படைப்பு களில் வெளிப்படுகின்றன.தமிழரின் அழகியலை அவரிடத்தில் காண்கின்றேன்.
தோழர் சி.மகேந்திரன்
70-களுக்குப் பின்னர் தமிழகத்தின் அரசியலிலும் பண்பாட்டிலும் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஆதிமூலம், மருது போன்ற ஓவியக் கலைஞர் கள் தலையெடுத்தார்கள். இவர்களின் முயற்சிகள் வெறும் ஓவியமாக மட்டும் இல்லாமல் சமுதாய மாற்றத்திற்கான அங்கமாக இருந்தன.ஏறத்தாழ 40 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு நமது ஓவியர் மருது வெற்றி பெற்றிருக்கிறார் என்பதையே இந்த விழா காட்டுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் பல ஓவியர்கள் புரட்சியை முன்னெடுத்தவர்களாக இருக்கிறார்கள். அதேபோல் நமது மருது அவர்களின் பங்களிப்பு, கலைவடிவத்தில் நம் சமூகத்திற்குக் கிடைத்திருக்கிறது.
வழக்கறிஞர் அ.அருள்மொழி
போலித்தனம் இல்லாத தன்மைதான் மருது அவர்கள்மீது அனைவருக்கும் ஈர்ப்பு வரக்காரணம் என்று நான் கருதுகிறேன். டிராஸ்ட்கி மருது அவர்கள், பெரியாரை மனதில் நிறுத்தி வைத்திருக்கிறார். பெரியார் என்றால் அவர் காலடியில் இருக்கும் நாயோடு தான் அவர் உருவம் மருது அவர்களின் மனதில் பதிந்திருக்கிறது. எனக்கும் சிறுவயதில், நான் பார்த்த அந்த நாயுடன் கூடிய பெரியாரின் உருவம்தான் பதிந்திருக்கிறது. மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லாத வர்களுக்குதான் நாய் போன்ற பிராணிகள்மீது அன்பு பெருகும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. எப்படி எல்லா நம்பிக்கைகளையும் பெரியார் உடைத் தாரோ, அதுபோல் இந்த நம்பிக்கையையும் பெரியார் உடைத்தார்.போராட்ட காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு சென்று, அவர்களுடையை கலை இலக்கியப் பணிக்கு வேலை செய்தவர் மருது. அங்கு பெரியாரின் பிள்ளை யாகிய மருதுவையும் கவிஞர் இன்குலாப்பையும் அழைத்தவர்கள் பெரியாருக்கு எதிரியாக இருக்க முடியுமா?
டாக்டர் நா.எழிலன் எம்.எல்.ஏ.:
ஓவியர் மருது எனக்கு மட்டும் தந்தையல்ல, முற் போக்கு அரசியல் பேசுகிற, நாட்டுக்காக மொழிக்காக இனத்துக்காக பயணிக்கும் எல்லா இளைஞர்களுக்கும் அவர் தந்தை. அவருடைய தூரிகை என்பது, பல்வேறு சிந்தாந்தங்களைப் பேசுகிற போராளிகளின் கோபத்தின் வெளிப்பாடு. முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் புத்தகங்களை அச்சடிக் கும் போது, அவர்கள் ஓவியத்திற்காக சென்று பெல் அடிப்பது நம் மருது ஐயா வீட்டில்தான். அங்கே யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானா லும் போகமுடியும். புத்தகக் கண்காட்சிக்குப்போனால் எல்லா முற்போக்கு ஸ்டால்களிலும் அவர் வண்ணங்கள் இருந்துக்கிட்டே இருக்கும். அப்படிப்பட்டவரை இங்கே கொண்டாட நினைத்த அத்தனை பேருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரது ஓவியங்கள் வாழ்ந்து கொண்டே இருக்கும். கலைஞர் உருவாக்கிய அண்ணா மேம்பாலம் மிகச்சிறப்பானது. இதை என் தொகுதி நிதியில் இருந்து புனரமைக்க இவரைத்தான் அணுகி னேன். புதுப்பொலிவுடன் அதை அமைத்தோம். இப்போது அதன் அழகான பொலிவான தோற்றத் திற்குக் காரணமாக பின்னணியில் இருப்பவரே நம்ம ஐயா மருதுதான்.
தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன்:
மருது அவர்களுக்கென்று ஒரு லட்சியம் இருக்கிறது. ஒரு அழகான கனவு இருக்கிறது. திரைப்படக் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் அவர், அதன் வழியாகத் தன் கனவை உருவாக்கிக் காட்டுவார் என்று நம்புகிறேன்.
அதேபோல் எல்லா கலை வடிவங்களையும் ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய ஒரு கொள்கை யைத் தயாரித்து, அதை அரசிடம் ஒப்படைக்கும் ஒரு பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்திருக்கி றோம். அதைத் திறம்படக்கையளிப்பார் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு. என் வீட்டில் அவர் வரைந்த ஓவியத்தைத்தான் வைத்திருக்கிறேன், அதேபோல் என் அலுவலகத்தில் பெரியாரும் அம்பேத்கரும் இருக்கும்படி அவர் வரைந்த ஓவியத்தையே மாட்டிவைத்திருக்கிறேன். ஏனென்றால், இந்த அலுவலகம் எதற்காக? இந்த அரசு யாருக்காக? என்பதைக் காட்டுவதற்காக அதை மாட்டி வைத்திருக் கிறேன்.
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன்:
எங்கள் தென்மாவட்டங்களில் சூதுவாது தெரியாத மனிதர்களை வெள்ளந்தியானவர்கள் என்பார்கள். அதுபோல் நம் மருதுவும் வெள்ளந்தியான மனிதர் தான். அவரை சமாளிப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரி களுக்கே கஷ்டம் என்று சொன்னார்கள். அப்படி யானால் அவருடைய துணைவியார் அவரிடம் என்ன பாடுபடுவாரோ என்று நினைத்துக்கொண்டேன். என்னைப் பொறுத்தவரை மருது அவர்கள் அவருடைய கோட்பாட்டில் பிடிவாதமாக இருப்பார்.யாருக்காக வும் அதைத் தளர்த்தமாட்டார் என்பது உண்மை. மருது அவர்கள் சிறந்த பண்பு நலன்கள் நிறைந்த வர். அவர் வரைந்துகொடுக்கிற ஓவியங்களுக்கு, அதை வெளியிடுகிறவர்களிடம் எந்தப் பணமும் பெறுவதில்லை. எனக்கே அந்த அனுபவம் உண்டு.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அவருக்காக ஒரு இடத்தை ஒதுக்கி வைத்திருக்கிறோம். அங்கே அவருடைய பெரிய அளவிலான ஓவியத்தை அமைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். நமக்கு முன் வாழ்ந்த தலைவர்கள் அனைவருக்கும் தனித்தனி கட்சி, கொடிகள் என்று இருந்தாலும், தமிழனுக்கு ஒன்று என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். அதனால்தான் நம் தமிழகத்துக்கு வர இருந்த பல அபாயங்கள் தடுக்கப்பட்டன. இன்று மருதுவைக் கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துக்களைக் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்திருக்கி றார்கள். இது தொடரவேண்டும். நம்முடைய தமிழ் மன்னர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று மருது அவர்கள் இயற்கையாக நமக்கு மிகச்சிறப்பாக வரைந்து அளித்திருக்கிறார். தன் ஓவியக் கலையை அவர் சிறப்பாக பயன்படுத்துவதால்தான் அவரை நாம் பாராட்டுகிறோம்.
டிராட்ஸ்கி மருதுவின் ஏற்புரை:
கிட்டத்தட்ட என் 50 ஆண்டுகால வாழ்வோடு சம்பந் தப்பட்ட, என் அரசியல் செயல்பாட்டில் என்னோடு இருந்த எல்லோரும் இப்போது இங்கே இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எல்லோரையும் பார்த்ததில் அளவில்லாத மகிழ்ச்சி. அற்புதமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவிட்டீர்கள்.பால்ய கால நண்பர்களில் இருந்து, கல்லூரியில் என்னோடு படித்த நண்பர்கள் வரை வந்திருக்கிறீர்கள். எனக் குக் கிடைத்த இந்த வாய்ப்புபோல் யாருக்காவது கிடைக்குமா என்று நானே சொல்லிக் கொள்கிறேன்.
என் தந்தையார் எனக்கு ஏற்படுத்திக்கொடுத்த சூழல் என்னை வளர்த்திருக்கிறது. தந்தை பெரியாரைப் பற்றி என் தந்தையார் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். நானும் தந்தை பெரியார் இருக்கும்போதே, பெரியார் திடலில் சித்திரங்களை வரைகிற வாய்ப்பை 18 வயதில் பெற்றிருக்கிறேன். ஓவியக்கல்லூரியில் படிக்கிற காலத்தில், அதற்குப் பக்கத்திலேயே இருக்கும் பெரியார் திடலுக்கு தினமும் போகிற வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது. அப்போது அந்த வழியாகப் போகும் போதெல்லாம் ஜன்னல் வழியாக பெரியார் என்ன செய்கிறார் என்று பார்ப்பேன். அவர் மரணத் திற்கு முன்புவரை, மதியானத்தில் தூங்கிப் பார்த்த தில்லை. பிரிண்ட் செய்ததை, பெரியார் குனிந்து திருத்திக்கொண்டே இருப்பார். அதேபோல் முக்கிய மான தருணங்களில் நாங்கள் அவர் பக்கத்தில் இருந்திருக்கிறோம். கலரில் இருக்கும் பெரியார் படமெல்லாம் சுபாஸ் சந்திரன் எடுத்தது. அதை எடுக்கும்போது தர்மாக்கோலை பிடித்துக்கொண்டு பக்கத்தில் இருந்தோம். இப்படியொரு சூழலில் இருந்து வந்ததாலும் தனபால் வாத்தியாரிடம் படித்ததாலும் அது என்னை நெறிப்படுத்தியது.
ஈழப் பிரச்சினை வந்தபோது, நான் எல்லா குழுக் களுக்கும் பொதுவாகவே இருந்தேன். அங்கிருந்து காலையில் ஒரு குழு வருவாங்க. மாலையில் ஒரு குழு வருவாங்க. ஒரு குழுவைப் பற்றி இன்னொரு குழுவிடம் பேசமாட்டேன். அங்கே என்ன நடந்தாலும் அதை சித்திரமாக அவர்களுக்கு வரைந்து கொடுப்பேன். அற்புதமான காலகட்டம் அது. திருமா சொன்னதுபோல், நாங்க அங்கே போனபோது, மானுடத்தின் கூடலுக்கான நிகழ்ச்சிக்கு லோகோ வையே நான்தான் செய்து கொடுத்தேன். சுனாமி வந்தபோதுகூட நான் அங்கேதான் இருந்தேன். அதுபோல் மறக்கமுடியாத சம்பவங்கள் நிறைய இருக்கிறது. அவை எல்லாவற்றையும்விட இன்று நான் உங்களோடு இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றி.
-அனைத்துத் தரப்புக் கலைஞர்களும் ஓவியர் களும் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்ற மருதோவியத் திருவிழா, காலத்தின் நினைவுப் பேழையில் என்றென்றும் இனிதாய்ச் சுழலும் வகையில் நிறைவாக நடந்துமுடிந்திருக்கிறது.
-நாடன்