திராவிட மாடல்' தமிழ்நாடு அரசு பொறுப்புக்கு வந்ததிலிருந்தே தமிழுக்கும், தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தொண்டுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்துவருகின்றது. தகைசால் தமிழர் விருது அறிவிப்பாகட்டும், தமிழ் இலக்கிய உலகில் உயரிய விருதுகளைப் பெற்ற தமிழறிஞர்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பாகட்டும், தமிழ் பேசும் நல்லுலகைக் கொண்டாடும் அரசாக விளங்குகிறது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் மொழிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிய 7 தமிழறிஞர்களுக்கு திருவள்ளுவர் விருது, பெருந்தலைவர் காமராசர் விருது உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் விருதுகளை ஜனவரி 13-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தந்தை பெரியாரின் பற்றாளருமான தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியனுக்கு, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது. இவர், 'ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்' என்னும் முழக்கத்தை முன்வைத்து, 2007 ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். சுப வீரபாண்டியன், கலைமாமணி விருது பெற்றுள்ளதுடன், இதுவரை 54 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவரும், 32 ஆண்டுகாலமாக மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பணிவகித்து, மலைவாழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டுவரும் பி.சண்முகத்துக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. இவர், தருமபுரி மாவட்டம். வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தி நீதி பெற்றுத் தந்ததில் பெரும்பங்காற்றியுள்ளார். இவ்விருதை வழங்கிய தமிழக முதல்வர், விருதுத் தொகையாக தலா 5 லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
பள்ளி மாணவர்களுக்கு 1983-ஆம் ஆண்டிலிருந்து திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி, வெற்றிபெறும் மாணவச் செல்வங்களுக்கு விழா எடுத்து ரூ.3 லட்சம் பரிசு வழங்கியும் உலகத் திருக்குறள் மாநாட்டினை மாநில அளவில் இருமுறை நடத்தியும் தமிழ்த் தொண்டாற்றிவரும் பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு, 2023ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் முதன்மைத் தொண்டராக பாராட்டப்பட்டவரும், 18 வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களில் பங்குகொண்டு சிறை சென்றவருமான பத்தமடை பரமசிவத்திற்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது.
தேசியத் தமிழ் கவிஞர் பேராயம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி-யைக்கொண்டு இளங்கோ இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளைத் தொடங்கியவரும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான உ.பலராமனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் முதன்மையான பல்கலைக்கழகங்கள், கேரள மாநில அரசின் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம்பெறும் அளவிற்கு கவிதைகளைப் படைத்த கவிஞரும் பாடலாசிரியருமான பழனிபாரதிக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞரால், 'முத்தரசனாரின் கற்கண்டு கவிதை கேட்டு கழிபேருவகை கொண்டேன்' என்ற பாராட்டைப் பெற்றவரும், தமது 92-வது அகவையிலும் தனித்தமிழ் வேட்கை அகலாமல் அருந்தமிழ்ப் பணியாற்றி வருபவருமான எழுச்சிக்கவிஞர் ம.முத்தரசுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது.
பல்வேறு நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் தகவல்களைத் திரட்டி வரலாற்று நூல்களை எழுதியவரும், சோழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வுசெய்தவருமான ஜெயசீல ஸ்டீபனுக்கு தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது வழங்கப்பட்டது. தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிமையாக கற்கும் வகையில் பாடல்களாக யாத்தளித்த முனைவர் சொற்கோ இரா.கருணாநிதிக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வழங்கப்பட்டது.
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழக முதல்வரின் கரத்தால் விருதுத்தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.
மகாகவி பாரதியார் விருதுபெற்ற கவிஞரும் பிரபல பாடலாசிரியருமான பழனிபாரதியிடம், அவருக்கு கிடைத்த விருது பற்றி கேட்டபோது, "இதற்கு முன்பாக கலைஞரின் ஆட்சிக்காலத்தில் 1997-98ஆம் ஆண்டில் கலைமாமணி விருது பெற்றிருக்கிறேன். காதலுக்கு மரியாதை படத்துக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றிருக்கிறேன். சினிமாத் துறையில் எனது மொத்த சாதனைகளைச் சிறப்பிக்கும் விதமாக கலைவித்தகர் கண்ணதாசன் விருது பெற்றிருக்கிறேன். இந்த மூன்று விருதுகளுமே தமிழ்நாடு அரசின் சார்பாக பாடலாசிரியர் என்ற முறையில் பெற்றிருக்கிறேன். தற்போது தான் முதன்முறையாக எனது கவிதைகளுக்காக தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றிருக்கிறேன் என்ற வகையில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.
எனது தந்தை பாவேந்தர் பாரதிதாசனின் கவிதா மண்டலத்தை சேர்ந்தவர். அவரது மாணவர். அப்பா தான் நான் கவிதை எழுதுவதற்கு உத்வேகமளித்தவர். சிறுவயதிலிருந்தே அவர் சேர்த்துவைத்த நூல்களை வாசித்தது, அவரோடு கவியரங்கங்களுக்கு சென்றது, அவரோடு சேர்ந்து கவிஞர்கள், தமிழறிஞர்களைச் சந்திப்பதுமாகத் தான் நான் வளர்ந்தேன். அதன் தொடர்ச்சியாகத்தான் நானும் ஆர்வத்தோடு கவிதை எழுதத் தொடங்கினேன். அப்பா எனக்கு வைத்த இயற்பெயர் பாரதி தான். பழனி என்பது அப்பாவின் பெயரான பழனியப்பன் என்பதிலிருந்து சேர்த்துக்கொண்டது. தாத்தாவின் பெயர் சுவாமிநாதன் எனபதால் அப்பாவின் பெயர் சுவாமி பழனியப்பன். அதேபோல் எனது பெயர் பழனி பாரதி என வைத்துக்கொண்டேன். திராவிட இயக்கக் கருத்துக்களால் தான் நான் ஒரு படைப்பாளனாக உருவானேன். எனது கவிதை களிலும் அதிக அளவில் தமிழ் மொழி, தமிழ்த் தேசியக் கருத்துக் களைத்தான் வெளிப்படுத்தி வருகிறேன். தற்போது கிடைத்துள்ள விருதின் மூலம் இன்னும் கூடுதலாய் நான் கவனம் பெறுவேன். நிறைய எழுதுவதற்கான உந்துதலை, ஊக்கத்தை அளித்துள்ளது. எனவே இவ்விருதினை வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று தெரிவித்தார்.