மிழ்க்கடலின் அலைகள் ஓய்ந்தன. தமிழ் அறிஞரும், நாடறிந்த நாவலருமான நெல்லை கண்ணன் சிந்திப்பதையும் பேசுவதையும் நிறுத்திக்கொண்டார். உலகமெங்கும் எதிரொலித்த அவரது கணீர் குரல் ஓய்ந்து விட்டது.

தமிழ் மண்ணில் 1945 ஜனவரி 27 ஆம் நாள் பிறந்த இவர், 2022 ஆகஸ்ட் 18 - ல் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டார். உடல் நலக்குறைவாலும் வயது முதிர்வாலும் நெல்லையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த நிலையில், இயற்கையோடு கலந்துவிட்டார் நெல்லை கண்ணன். நெல்லை மண்ணுக்குரிய தமிழின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் நெல்லை கண்ணன்.

dd

Advertisment

யார் இவர் ? பேச்சாளரா? எழுத்தாளரா ? அரசியல் வாதியா? சமூகப் போராளியா? மொழிப் போராளியா? சைவ சித்தாந்தப் பயணியா?இவரது கொள்கை தேசியமா? திராவிடமா?தமிழ்த் தேசியமா? என்றால் அனைத்தும் தான் என்பதே உண்மை. ஒவ்வொரு தலைப்பிலும் அனுபவங்களாக எழுத, தன் வாழ்க்கையில் பல நூறு பக்கங்களைக் கொண்டவர்.

மேடை ஏறினால் தன் பேச்சின் மூலம் மந்தமாருதமாய்த் தொடங்கி சண்டமாருதமாய் முடிப்பார். நண்பர்களை மட்டுமல்ல எதிர்முகாமில் இருப்பவர்களையும் கூட தனது சுந்தரத் தமிழ் மூலம் சொக்க வைத்துக் கவர்ந்து கொள்பவர்.

நெல்லை கண்ணனுக்கு இளங்கோ அடிகள் விருதை தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு .க . ஸ்டாலின் வழங்கினார். வழங்கிய விழாவில் முதல்வர் பேசும்போது, நெல்லை கண்ணன் அவர்கள் வாயைத் திறந்தாலே காப்பியங்கள் அவர் வாயிலிருந்து அணிவகுக்கும் என்று மனமுவந்து பாராட்டி மகிழ்ந்தார்.

ஓர் எழுத்தாளராக அவர் எழுதிய குறுக்குத்துறை ரகசியங்கள், காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள், திக்கனைத்தும் சடைவீசி, பழம்பாடல் புதுக்கவிதை நூல், வடிவுடை காந்திமதியே! -உள்ளிட்ட நூல்கள், அவரது தமிழ் வளத்தைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றன.

அரசியல் சித்தாந்தத்தில் வழிகாட்டியாகக் காந்தியையும் காமராசரையும் கவிதைப் பாரம்பரியத்தில் பாரதியையும், கண்ணதாசனையும் தன் இதயத்தில் இருத்திக்கொண்டு தன் தமிழைப் பரப்பியவர்.இவர்களைத் தொடாமல் இவர் மேடைப்பேச்சை முடித்ததில்லை.

காமராசரின் பாமர உள்ளத்தையும் சேவை செயற்பாடுகளையும் கண்ணதாசனின் வாழ்வியல் தத்துவங்களையும் இவர் தன் பேச்சில் கொண்டு வராமல் இருக்க மாட்டார். தமிழுலகம் முழுதும் இவர் கால் படாத இடங்களும் பேச்சொ- கேட்காத மேடைகளும் இல்லை என்கிற அளவுக்குச் சுழன்று சுற்றியவர்.

dd

Advertisment

சித்தாந்த ரீதியாக கலைஞரை எதிர்த்து எதிர் முகாமில் இவர் இயங்கினா லும் இவரது தமிழ்ப் பேச்சைக் கலைஞர் ரசித்தார். தமிழ்த் தொண்டுக்காகக் கலைஞரை இவர் மதித்தார். கடைசிக் காலத்தில் காங்கிரஸ் தலைவர் களின் போக்கினால் நேரிட்ட மன விலகல்கள் இவருக்கு உவப்பானதாக இல்லை.

வாழ்நாளெல்லாம் தேசியம் பேசினாலும் இவரது தமிழ்ப் பற்றும் தமிழ்க்கொள்கையும் நாளடை வில் தமிழ் மொழியைக் கொண்டாடும் திராவிட இயக்கத்தின் போக்கிற்கு அணுக்கமாய் இருந்தது.

அரசியலில் அவர் போகாத எல்லை இல்லை. சந்திக்காத தலைவர்கள் இல்லை. காணாத உயர்வும் பாராட்டும் இல்லை. ஆனால் எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் எளிமையாக வலம் வந்தவர்.

பழுத்த இலக்கியவாதியான அவருக்குள் ஒரு தீரம் மிகுந்த போராளி இருந்தார். சுயமரியாதைக்காகவும் சமூக நீதிக்காகவும் கருத்து வாள் சுழற்றியவர். பா.ஜ.க. அரசின் சர்ச்சைக்குரிய ‘இந்தியக் குடியுரிமை சட்டத்தை’ எதிர்த்து தன் கருத்தாயுதத்தை சுழற்றிய தால் அவர் கைதாகவும் நேர்ந்தது. எனினும், கருத்துரிமைக் காக கடைசி வரை வாதிடுவேன் என்று நெஞ்சை நிமிர்த்தியவர் நெல்லை கண்ணன்.

கடந்த ஆண்டு விருதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் விழாவில், காமராஜர் சுடர் ஒளி விருதுகொடுத்துச் சிறப் பிக்கப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் இருந்த அந்த மேடையில் அவர்....

”எனக்கு உடல் நிலை மோசமாக இருக்கிறது.

அதனால், என்னை இந்தக் கூட்டத்துக்குச் செல்லக் கூடாது என்று மருத்துவர்கள் தடுத்தார்கள். இந்த விழாவுக்கு வந்து என் உயிர் போகுமென்றால் அது திருமாவளவனின் மடியில் தானே போகும். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டே தீருவேன் என்று சொல்லிவிட்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கி றேன்.”- என்று தழுதழுக்கச் சொன்னார். அந்த உரை உலகத்தமிழர்கள் அனைவரையும் கலங்க வைத்தது.

“தமிழக முதல்வரும். திருமாவளவனும் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ள வேண்டும். ஏனென் றால் உங்கள் இருவரையும் விட்டால், இந்தத் தமிழர் களைக் காப்பாற்ற யாரும் இல்லை. அதனால் நீங்கள் இருவரும் நீண்டகாலம் வாழ வேண்டும்” என்று ததும்பி வந்த அழுகையோடு அவர் வாழ்த்தினார்.

தமிழ்க்கடல் நெல்லை கண்ணனின் மறைவுச் செய்தி இலக்கிய உலகையே துயரத்தில் ஆழ்த்தியது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நம் ஆசிரியர் நக்கீரன் கோபால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டவர்களும் அரசியல் கட்சிப் பிரமுகர்களும், இலக்கிய அன்பர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலத்திலும் ஏராளமானோர் பங்கேற்றுக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலிக் குப் பிறகு திருநெல்வேலியில் உள்ள கருப்பன்துறை மயானத்தில் அவர் உடல் தகனம் நடந்தது.

நெல்லை கண்ணன் அவர்களின் மூத்த மகன் சுரேஷ் கண்ணன் என்ற சுகா திரைப்பட இயக்குநராக இருக்கிறார். மற்றொரு மகனான ஆறுமுகம் கண்ணன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் தவிர 2 பெண் குழந்தைகளும் ஒரு வளர்ப்பு மகனும் அவருக்கு உண்டு. இவரது இல்லத்தரசி பெயர் மாலதி.

நெல்லை கண்ணன் இந்தத் தமிழ் வெளியில் என்றென்றும் உயிர்ப்புடன் வாழ்வார்.

-அருள்

படங்கள்: ராம்குமார்