ஒருவன் தான் செய்யும் தொழிலில் தர்மத்திற்குப் பதிலாக அதர்மத்தைக் கடைப்பிடித்தால், அத்தொழிலே அவனைக் கொன்றுவிடும். எனவேதான், ‘செய்யும் தொழிலே தெய்வம் என்றார்கள். ‘அரசியலில் ஒருவர் அநீதி என்று தெரிந்திருந்தும் அதனைச் செய்ய முனைவாரேல், அவரை அறமே கொன்றுவிடும் என்றார் இளங்கோவடிகள். அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம் என்பது அந்த மகாகவியின் வாக்கு. அரசர்கள் பவனி வரும் வீதியிலே, தெரியாமல் ஒரு பசுங்கன்று வந்து வீழ்ந்தமைக்காகத் தன் ஒரே மகனாகிய வீதிவிடங்கனையே தேர்க்காலில் அரைத்து, நீதியை நிலைநாட்டினான் மனுநீதிச்சோழன். சக அமைச்சர்கள் உயிருக்கு உயிர் என்பதற்குப் பதிலாகப் பிராயச்சித்தங்கள் பலவற்றைக் கூறியபோதிலும், ‘தருமம் தன்வழிச் செல்கைக் கடன், என்றான் அம் மாமன்னன்.
அந்தப் புண்ணிய பூமியிலே இன்று ஆச்சரியக் கொடுங்கோலங்கள் பலவற்றைக் காண்கின்றோம். அநியாயமாக உயிரைக் கொல்பவர்களைக் கொல்லுதல் ஒரு வேந்தர்க்குக் கடமை என்றார் திருவள்ளுவர். ஒரு விவசாயி பயிர்களைக் காப்பதற்காக எவ்வாறு களைகளைக் களைகின்றானோ, அவ்வாறே நாட்டுக்குத் தலைவன்; கொலையில் கொடியாரைக் கொன்றொழித் தல் வேண்டும் என்றார், அந்தத் தெய்வப் புலவர். ‘"கொலை யின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ், களை கட்டதனோடு நேர்' என்பது திருக்குறள்.
நாட்டை ஆள்பவர்க்கு இலக்கணம் சொன்ன திருவள்ளுவர், அநீதியை அழித்து நீதியை நிலை நாட்டுபவரே, ஆள்பவர் என்றார். அப்பாவி மக்களு டைய உயிரை வாங்கு பவர்களுடைய உயிரைப் போக்குதல் ராஜநீதி என்றார், அர்த்த சாஸ்த்திரம் எழுதிய
ஒருவன் தான் செய்யும் தொழிலில் தர்மத்திற்குப் பதிலாக அதர்மத்தைக் கடைப்பிடித்தால், அத்தொழிலே அவனைக் கொன்றுவிடும். எனவேதான், ‘செய்யும் தொழிலே தெய்வம் என்றார்கள். ‘அரசியலில் ஒருவர் அநீதி என்று தெரிந்திருந்தும் அதனைச் செய்ய முனைவாரேல், அவரை அறமே கொன்றுவிடும் என்றார் இளங்கோவடிகள். அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம் என்பது அந்த மகாகவியின் வாக்கு. அரசர்கள் பவனி வரும் வீதியிலே, தெரியாமல் ஒரு பசுங்கன்று வந்து வீழ்ந்தமைக்காகத் தன் ஒரே மகனாகிய வீதிவிடங்கனையே தேர்க்காலில் அரைத்து, நீதியை நிலைநாட்டினான் மனுநீதிச்சோழன். சக அமைச்சர்கள் உயிருக்கு உயிர் என்பதற்குப் பதிலாகப் பிராயச்சித்தங்கள் பலவற்றைக் கூறியபோதிலும், ‘தருமம் தன்வழிச் செல்கைக் கடன், என்றான் அம் மாமன்னன்.
அந்தப் புண்ணிய பூமியிலே இன்று ஆச்சரியக் கொடுங்கோலங்கள் பலவற்றைக் காண்கின்றோம். அநியாயமாக உயிரைக் கொல்பவர்களைக் கொல்லுதல் ஒரு வேந்தர்க்குக் கடமை என்றார் திருவள்ளுவர். ஒரு விவசாயி பயிர்களைக் காப்பதற்காக எவ்வாறு களைகளைக் களைகின்றானோ, அவ்வாறே நாட்டுக்குத் தலைவன்; கொலையில் கொடியாரைக் கொன்றொழித் தல் வேண்டும் என்றார், அந்தத் தெய்வப் புலவர். ‘"கொலை யின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ், களை கட்டதனோடு நேர்' என்பது திருக்குறள்.
நாட்டை ஆள்பவர்க்கு இலக்கணம் சொன்ன திருவள்ளுவர், அநீதியை அழித்து நீதியை நிலை நாட்டுபவரே, ஆள்பவர் என்றார். அப்பாவி மக்களு டைய உயிரை வாங்கு பவர்களுடைய உயிரைப் போக்குதல் ராஜநீதி என்றார், அர்த்த சாஸ்த்திரம் எழுதிய கௌடில்யர். நியாய - அநியாயங்களை ஆராய்ந்து நீதி வழங்குகின்ற மன்னன், தெய்வத்திற்குச் சம மானவன் என்றார், திருவள்ளுவர். ‘"முறை செய்து காப்பாற்றும் மன்னன், மக்கட்கு இறையென்று வைக்கப் படும்' என்பது திருக் குறள். திருவள்ளுவரின் கருத்தைச் சார்ந்தே நம்மாழ்வாரும் ‘திரு வுடை மன்னரைக் காணின், திருமாலைக் கண்டேன்’ என்றார். காக்கும் தொழிலைச் செய்பவன் திருமால். நாட்டுத்தலைவரும் காக்கும் தொழிலைச் செய்பவர் என்ப தால், அவரைத் திருமாலுக்கு நிகர் என்றார் நம்மாழ்வார்.
ஒரு விவசாயிக்குப் பயிர்களைக் காத்தல் கடன் என்றால், விவசாயப் பல்கலைக் கழகத்தின் பயிர்களைக் காப்பது, நமது கடமையல்லவா? அநியாயமாக அந்த அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதைக் கவிஞர் மு. மேத்தா, குப்பைக்குத் தீமூட்டிக் குளிர் காய்கின்ற ஊருக்குள்ளே - அந்தக் கொழுந்துகளுக்குத் தீமூட்டிக் குளிர்காய்ந்த பாவி யார்?’’ என வருந்திப் பாடிய வரிகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. உணர்ச்சி வயப்பட்டுக் குப்பைக்குத் தீ வைத்தால் கேடில்லை. ஆனால், உணர்ச்சி வயப்பட்டு கோபுரங்களுக்குத் தீ வைப்பார் உண்டோ? ‘இரண்டு மனித உயிர்களுக்காக மூன்று தெய்வங்களை எரித்து விட்டீர்களே என்று நொந்து நூலாகிப் போனார், சுந்தரப்பெருமாள் கோயில் கவிஞர் ந. இராமலிங்கம்.
தம்முயிரைப் போல இந்த மன்னுயிர்களை எண்ணாத ஆளும் வர்க்கத்தை மகாகவி பாரதி, ‘நாட்டு மாந்தர் எல்லாம் - தம்போல் நரர்கள் என்று கருதார். ஆட்டு மந்தையாம் என்று அரசர் எண்ணி விட்டார், காட்டு உண்மை நூல்கள் பலதாம் காட்டினார்களேனும், நாட்டு ராஜநீதி - மனிதர் நன்கு செய்யவில்லை என அன் றைக்கே வசை பாடியிருக்கிறார்! நீதியியலில் விதி 161 கொலைகாரர்களை மன்னிப்பதற்குரிய சலுகைகளைத் தந்தாலும், ஊரறிய, உலகறிய கொலை செய்தவர்களை விட்டுவிடக்கூடாது என்றும் சொல்லுகின்றது. ‘பொருத்தமற்ற காரணங்களுக்காக, அரசியலில் இலாபத்தை எட்ட வேண்டும் எனும் நோக்கத்திற்காக விடுதலை செய்தால், அது தேசத்திற்கு நாசத்தை உண்டு பண்ணும் என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே எச்சரித்திருக்கின்றது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதல் தியாகி - ஒப்பற்ற தியாகி மாவீரன் பகத்சிங். அந்தப் பகத்சிங்கின் விடுதலையை, மகாத்மா காந்தியடிகள் காந்தி - இர்வின் ஒப்பந்தத்தில் ஒரு கோரிக்கையாகச் சேர்த்திருந்தால், பகத்சிங் விடுதலை பெற்றிருப்பார் என்று மகாத்மாவின் மீது குற்றப் பத்திரிகை வாசிக்கின்ற வரலாற்று ஆய்வாளர்கள் உண்டு. பாரதம் முழுமையும் பகத்சிங்கை ஒரு மாவீரனாகப் பார்த்தாலும், காந்தியடிகள் அவரை ஐக்கிய மாகாண சட்ட சபையில் குண்டுவீசிய ஒரு பலாத்காரவாதியாகவே பார்த்தார். அதைப் போலவே பண்டித ஜவஹர்லால் நேருவும், சந்திரசேகர ஆஸாத்தைக் காப்பாற் றுவதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற ஒரு குற்றச் சாட்டும் உண்டு. ‘கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்’’ என்பதை அவர் கள் நம்பினார்கள்.
ஆட்சித்துறையில் தவறிழைத்த வன் கூடத் தப்பிப்பதற்கு வாய்ப்பு கள் உண்டு. ஆனால், நீதித்துறையில் தவறு இழைத்தவர்கள் பாவத்திற் குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். பிரெஞ்சுப் புரட்சி யின்போது பாமர மக்களைக் கொன்று குவிப்பதற்குப் பதினாறாம் லூயி மன்னனுக்கு ‘கில்லெட்டின்’’ எனும் வெட்டுப் பாறையைக் கண்டுபிடித்துக் கொடுத்தவன் பெயர், கில்லெட்டின். புரட்சியின் முடிவில் அந்தக் கில்லெட்டினையே புரட்சிக்காரர்கள் கில்லெட்டினில் வைத்து வெட்டிப் போட்டார்கள். அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’’ என்பது அங்கே யும் அரங்கேறியிருக்கிறது. அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் ஆட்சிப்பீடத்தை அசைக்கும் என்பது திருவள்ளுவர் வாய்மொழி.
கோவலன் கொலைக்குக் காரணமாகவிருந்த பாண்டிய நெடுஞ்செழியன் உண்மையான குற்றவாளியாகிய அரண்மனைப் பொற்கொல்லனைத் தப்பவிட்டு விட்டு, நிரபராதியைக் கொன்றான்.
அதற்காகப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு யாரும் ஆயுள் தண்டனையோ, தூக்குத்தண்டனையோ வழங்க வில்லை. அவன் வளைத்த கொடுங்கோலே அவனுடைய உயிர்க்கு எமனாகிப் போயிற்று. பாண்டியனால் தப்புவிக்கப்பட்ட பொற்கொல்லனும் இறுதியில் மாள்கிறான். கண்ணகி ஏற்றிய தீயைத் ‘தீத்திறத்தார் பக்கமே சார்க’ என அப்பத்தினித்தெய்வம் ஏவியதால், பொற்கொல்லனும் அவனைச் சார்ந்த கொலைக் கும்பலும் மாண்டிருக்க வேண்டும். பாண்டியனுடைய அநீதியால் பாதிக்கப்பட்ட கண்ணகி, ‘தெய்வமும் உண்டுகொல்! தெய்வமும் உண்டுகொல் எனக் கூறி மதுரையை வலம் வருகிறாள். அநீதி, தீக்கடவுளாகிய மதுராபதி தெய்வத்தையே தெருவுக்கு வரவழைத்தது. இதிலிருந்து தீமைக்குத் துணைபோனால், தெய்வம் மட்டுமன்று இயற்கையும் சினந் தெழும் என்பது தெரிகிறது.
மகாகவி பாரதி, ஜார் மன்னன் வீழ்ச்சியைக் சொல்லும்போது, அவன் கூட்டத்தின் அழிவைச் சொல்லும்போது, புயற்காற்றில் சிக்கிய மரங்களென வீழ்ந்தார்கள் என்பான். இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் ஜாரரசன்! இவனைச் சூழ்ந்து சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி, அறங்கொன்று சதிகள் செய்த சுமடர், சடசடவென்று சரிந்திட்டார். புயற்காற்றும் சூறைதன்னில் திமுதிமுவென மரம்விழுந்து காடெல்லாம் விறகான செய்திபோல, ‘என இயற்கையும் அநீதிக்கு எதிராகக் கொதித்தெழுந்ததைப்’’ பாடிப் போற்றினார்.
மேலும், நீதித்துறையில் தவறிழைப்பவர்களுக்கு என்னென்ன நேரும் என்பதை நல்வழியில் ஔவையார் பட்டியலிட்டுக் காட்டுகிறார். அநியாயத்துக்குத் துணை போனவர்கள் வீட்டில் வேதாளம் நுழையுமாம்! வெள்ளெருக்கம் செடிகள் பூக்குமாம்; படர் சப்பாத்திகள் படருமாம்; மூதேவி நிரந்தரமாகக் குடியேறிவிடுவாளாம்! மேலும் பாம்புகள் புற்றுக் கட்டிக் குடியேறுமாம். "வேதாளம் சேருமே! வெள்ளெருக்கும் பூக்குமே! பாதாள மூளி படருமே! மூதேவி சென்றிருந்து வாழ்வளே! சேடன் குடிபுகுமே! மன்றோரம் சொன்னான் மனை' என்பது ஔவையார் பாட்டு.
ஜார் ஆட்சியின் வீழ்ச்சிக்கே மாதா பராசக்திதான் காரணம் என்றான், மகாகவி பாரதி! "செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்த போதில் அம்மை மனங் கனிந்திட்டாள்..... நோக்கினாள்; முடிந்தான் காலன்' என்பது பாரதியின் வாக்கு.
அநீதிக்கு ஆட்சிப்பீடம் துணை போகின்றபோது, வள்ளலார் போன்ற ஞானியர்கள் ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’’ என்பார்கள். அவர்கள் தவறினால், மதுரையைத் தீக்கடவுள் தீய்த்ததுபோல் இயற்கை முடித்துவிடும். இயற்கையும் தப்பினால், தெய்வம் அப்பணியைத் தலைமேல் ஏற்கும்.