ந்து கடவுளர்களில் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவக்கோலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த கோலத்தில் நடராஜ பெருமானை ஓவியமாக வரைவதும், சிற்பமாகச் செதுக்குவதும் கலையம்சம் பொருந்தியதாக இருக்கும். இந்த கோலத்தில், ஒற்றைக் காலை நிலத்திலும், ஒற்றைக் காலை உயர்த்தியும் நிற்கின்ற நிலையில், மொத்த உருவத்தையும் ஒரு வட்ட வளையத்துக்குள் அடக்கி, சிற்பத்தைச் செதுக்குவது மிகவும் நேர்த்தியான கலைஞர்களால் மட்டுமே முடிந்த செயலாகும். நடராஜர் சிலையின் கலையம்சத்துக்காகவே அந்த சிலையை கோவில்களைத் தாண்டி, வீடுகளிலும், அலுவலகங் களிலும் வைப்பதற்கு பலரும் விருப்பப்படுவார்கள்.

அத்தகைய சிறப்புவாய்ந்த சிலையை, உலக சாதனையாக, 23 அடி உயரத்துக்குச் செய்து சாதனை படைத்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்.

h

Advertisment

கலையம்சம் பொருந்திய 23 அடி உயர பிரம்மாண்ட ஐம்பொன் சிலை, கும்பகோணம் அருகே உள்ள திம்மக் குடி கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, திங்கட்கிழமை நடைபெற்ற பூர்த்தி விழாவில், இந்த சிலை வடிவமைப்பதற்கு தொடக் கத்திலேயே நிதியுதவி செய்து ஆதரவளித்த நக்கீரன் ஆசிரியருக்கும், தொடர்ந்து நிதியுதவி அளித்த வேலூர் சக்தி அம்மா நாராயணி பீடத்தின் டிரஸ்டி சுரேஷ் பாபுவுக் கும், சிலையின் வடிவமைப்பாளர்களுக்கும், தெலுங் கானா & புதுச்சேரி ஆளுநர் திருமதி. தமிழிசை சவுந்தர ராஜன் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திம்மக்குடி கிராமத்தில், சிற்பி வரதராஜன், கடந்த 25 ஆண்டுகளாக சிற்பச்சாலை ஒன்றை நடத்திவருகிறார். இவர் தனது கைவண்ணத்தில், இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடவுள் சிலைகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். இவருக்கு, கலையம்சம் பொருந்திய, உலகின் மிகப்பெரிய ஐம்பொன் ஆனந்தத் தாண்டவ நடராஜர் சிலையை உருவாக்க வேண்டுமென்ற ஆர்வம் நீண்டகாலமாக இருந்துவந்தது. ஏற்கெனவே இவர் செய்துகொடுத்த 11 அடி உயர நடராஜர் சிலையே உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையாக இருந்த நிலையில், அந்த சாதனையை அவரே முறியடிக்க விரும்பினார்.

ff

Advertisment

மிகப்பெரிய ஐம்பொன் நடராஜர் சிலையை உருவாக்குவதற்கான ஆசை இருந்தால்மட்டும் போதுமா? அதற்கு தேவையான நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டுமே? ஐம்பொன் சிலையை உருவாக்குவது போலவே, அதற்கான நிதி ஆதாரத்தைத் திரட்டுவதும் மிகப்பெரிய சவாலான காரியமாக இருந்தது. கோடிக் கணக்கான ரூபாயைத் திரட்டுவதென்றால் மிகப்பெரிய விஷயம்தானே? எனவே அவர் விரும்பிய ஐம்பொன் நடராஜர் சிலையை வடிவமைப்பதற்கு உதவக்கூடிய ஸ்பான்சரை தேடியலைந்துள்ளார். அத்தருணத்தில், நக்கீரன் ஆசிரியரைச் சந்தித்த வரதராஜன், தனது எண்ணத்தை வெளிப்படுத்த, நடராஜர் சிலை உருவாக்கத் திருப்பணிக்கு தானே நிதியுதவி செய்வதாக உறுதி யளித்த ஆசிரியர், இதற்காக நீங்கள் ஸ்பான்சரைத் தேடி யலைய வேண்டாம் என்று அவருக்கு மிகுந்த நம்பிக்கை யளித்தார். அதன்பின்னர், வரதராஜன் மிகுந்த மகிழ்ச்சி யோடு சிலை செய்வதற்கான பணியில் இறங்கியிருக்கிறார்.

2010-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த திருப்பணி, விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்க செலவுத் தொகை திட்டமிட்டதைவிட அதிகரிக்கத் தொடங்கி யது. எனவே இந்த அருட்பணியில் வேலூர் நாராயண சக்தி பீடத்தினரும் இணைந்துகொண்டு ஒத்துழைக்க, கிட்டத்தட்ட பத்தாண்டு கால உழைப்பில், சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பில், 23 அடி உயரம், 15,000 கிலோ எடைகொண்ட உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை மிகச்சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட ஐம்பொன் நடராஜர் சிலைக்கு செப்டம்பர் 12-ஆம் தேதி மாலையில் திம்மக்குடி யில் நடைபெற்ற பூர்த்தி விழாவில் அபிஷேகம் நடைபெற்றது. இதில், தெலுங்கானா & புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நக்கீரன் ஆசிரியர், வேலூர் நாராயண பீடத்தின் டிரஸ்டி உட்பட, பக்தர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

உலக சாதனைக்குரிய பிரமாண்ட நடராஜர் சிலை உருவாக்கத்தில் நக்கீரன் ஆசிரியரின் தொடக்க கால உதவியை அன்புடன் நினைவுகூர்ந்த சிற்பி வரதராஜன், "நாங்கள் கோவில்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும், பஞ்ச லோக விக்கிரகங்களையும், சிலைகளையும் செய்துவருகிறோம். கோனேரிராஜபுரம் என்ற ஊரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்த எட்டடி உயர நடராஜர் சிலை தான் உலகிலேயே பெரிய நடராஜர் சிலை யாக இருந்தது. 2003ஆம் ஆண்டில், 11 அடி உயரத்துக்கு நடராஜர் சிலையைச் செய்து, இந்திய அரசின் அனுமதியுடன் ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள அணு ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பினோம். இந்தியாவின் சார்பாக, அப்துல்கலாம் ஐயாவின் மூலமாக அந்த நடராஜர் சிலை வழங்கப்பட்டது. சிலையை நிறுவுவதற் காக நானும் என் தம்பியும் அங்கே சென்றுவந்தோம். நம்முடைய நாட்டில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் பிரமாண்டமாக இருந்தாலும், சிற்பக் கலைக்கே உச்சமான நடராஜரின் ஆனந்தத் தாண்டவ சிலை பெரிய அளவில் எங்கும் இல்லை. கடவுளர்களின் சிலைகளை பிரமாண்டமாக உருவாக்க நினைப்ப வர்களும் ஒரே வார்ப்பாக உருவாக்காமல் தனித்தனி இணைப்பாகத்தான் உருவாக்கு கிறார்கள். ஒரே வார்ப்பாகச் செய்யப்பட்டால்தான் சிலை சக்திவாய்ந்ததாக இருக்கும் என்பது ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை. எனவே 23 அடி உயரத்தில் ஒரே வார்ப்பாக நடராஜர் சிலையைச் செய்யத் தீர்மானித்து, திட்டமிட்டு செயல்பட்டு உருவாக்கினோம்.

ff

நடராஜர் சிலை செய்வதற்கான ஸ்பான்சர்களைத் தேடியபோது, 2010ஆம் ஆண்டில் நக்கீரன் கோபால் அண்ணனைச் சந்தித்தோம். நான் அவரிடம் வேறொரு ஸ்பான்சருக்காகத் தேடிப்போனபோது, 'நீங்க ஏன் தேடி அலையறீங்க, இந்த திருப்பணிக்காக நானே நிதியுதவி கொடுக்கிறேன்' என்று மனமுவந்து ஏத்துக்கிட் டாங்க. அவங்க நிதி உதவியால்தான் இந்த அரும்பணியை முதலில் தொடங்கினோம்.

அதற்கடுத்ததாக, சக்தி அம்மா, நாராயணி பீடத்தின் அறிமுகம் கிடைத்தது. அவங்களும் இப்பணியில் இணைந்து ஊக்கப்படுத்தியதில் தற்போது நல்லபடியாக சிலை நிறைவடைந்துள்ளது. தற்போது அதற்கான பூர்த்தி விழாவில் தெலுங்கானா & புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்கள். சிலைக்கு முதல் அபிஷேகம் அவர்களின் கையால் செய்யப்பட்டது. அடுத்து, நாராயணி பீடத்தாலும், நக்கீரன் அண்ணனாலும், பின்னர் என்னாலும் அபிஷேகம் செய்யப்பட்டது. நடராஜர் சிலைக்கு சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம், விபூதி அபிஷேகம், பன்னீர் அபிஷேகமெல்லாம் செய்து, பூர்த்தி விழா வெகுசிறப்பாக நிறைவடைந்தது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

dd

சிலையின் சிறப்பம்சம்:

திம்மக்குடி நடராஜர் ஐம்பொன் சிலையானது, 23 அடி உயரத்தில், ஒரே வார்ப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் பீடம் 6 அடி உயரம். அதற்கு மேல், 17 அடி உயரம், 17 அடி அகலத்தில் நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மொத்த உயரம், 23 அடியாக உள்ளது. இந்த சிலையின் மொத்த எடை 15 டன் (15,000 கிலோ). இந்த சிலையின் திருவாச்சியில், முதல் வரிசையில் 52 சிம்மங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு அடுத்தபடியாக 56 பூதகணங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கு மேலே 103 தாமரை மலர்கள், 2 மகர பறவைகள், 34 நாகப்பாம்புகள் இருப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளன. இச்சிலையில், 51 சிவ அட்சரங் களைக் குறிக்கும் வகையில் 51 தீச்சுடர்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இந்த சிலையை உருவாக்க சுமார் 4 கோடி ரூபாய் தேவைப்பட்டுள்ளது. இந்த நடராஜர் சிலை, பழமையான நடராஜர் ஆலயங்களில் உள்ள நடராஜரின் உருவமைப்பிலும், சோழர் காலத்து சிறப்பம்சத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட சிலையின் விவரங்களை கின்னஸ் சாதனைக்காக அனுப்பியுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய, ஒரே வார்ப்பிலான ஐம்பொன் நடராஜர் சிலை என்ற கின்னஸ் சாதனையை இச்சிலை பெறவுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தெலுங்கானா & புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "சாதாரண மாகவே நடராஜர் எனக்கு ரொம்ப விருப்பமான இறைவன். எல்லா இறைவனையும் எனக்கு பிடிக்கும். நடராஜர் மீது தனி ஈடுபாடு உண்டு. ஏனென்றால் நடராஜர் இயங்கிக்கொண்டே இருப்பார். அவரைப் போல் எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்பதுதான் எனக்கு பிடிக்கும். அவர் இயங்கிக் கொண்டிருப்பதனால் தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கிறது. சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் தான் உலகின் மத்திய புள்ளி என்று சொல்லப் படுகிறது. ஆக, அப்படிப்பட்ட நடராஜரின் திருவுருவச் சிலையைக் கண்டு இங்கே மிகவும், விவரிக்கமுடியாத ஒரு மகிழ்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் நான் இருக்கி றேன். நம்மைப் படைத்த இறைவனை நம்மாலும் பிரம்மாண்டமாகப் படைக்க முடியும் என்று இந்த சகோதரர்கள் நிரூபித்துக் காண்பித்திருக்கிறார்கள். சிவன் மீது எனக்கு கொஞ்சம் அதிக ஈடுபாடு உண்டு. வெள்ளி, செவ்வாய் தவிர எல்லா நாளும் அசைவம் சாப்பிடும் வழக்கள்ள நான், சிவனை நினைத்து திங்கட்கிழமையும் அசைவத்தைத் தொடவே மாட்டேன். சின்ன வயதிலிருந்தே இதை ஈடுபாட்டோடு கடைபிடித்துவருகிறேன். நான் பிறந்ததும் ஒரு திங்கட்கிழமை தான். பெண்கள் 10 மாதம் ஒரு குழந்தையைச் சுமந்தால், இவர்கள் 10 வருடம் ஒரு குழந்தையை வடிவமைத்துள்ளனர். எல்லாம் வல்ல இறைவன், எல்லோருக்கும் அருள் புரிந்து காப்பார்" என்று பாராட் டினார்.

கலையையும், பண்பாட்டை யும் போற்றக்கூடிய இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், கலை யம்சத்தின் உச்சமான நடராஜர் சிலையை, சிற்பி வரதராஜனின் கைவண்ணத்தில், பத்தாண்டு கால கடின உழைப்பில் ஒரே வார்ப் பாக உருவாக்கி உலக சாதனை படத்துள்ள சிற்பியின் அயராத முயற்சியையும், கலைத் தாகத்தை யும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

- தெ.சு.கவுதமன்