ன்னுடைய வளர்ப்பு நாய் மீனுவின் மரணத்திற்குப் பிறகு, பரமேஸ்வரன் நாயர் காலையில் நடப்பதற்குப் போகாமலேயே இருந்தார். அதன்காரணமாக இருக்க வேண்டும்- அன்று மஃப்ளருடனும், கோலுடனும் அவர் வெளியேறிச் சென்றபோது, படுக்கையில் படுத்தவாறு கமலாக்ஷியம்மா உரத்த குரலில் கூறினாள்: ""பொழுது விடிஞ்ச பிறகு, போனா போதும். ஏதாவது வெறிநாய் ஓடிவந்து கடிச்சா வயித்துல பதினாலு ஊசி போட வேண்டிய நிலை வரும்.''

""கமலாக்ஷி! உனக்கு காலம் மாறிட்டதுங்கற விஷயமே தெரியாது. பதினாலு ஊசி வயித்துல போடவேண்டிய காலம் மாறிப்போச்சு. இப்போ அஞ்சு தடவை போட்டாலே போதும். அதுவும் கையில...''

அவள் வெளி வாசலை நோக்கி நடக்கும்போது, திரும்பிப் பார்க்காமல் கூறினார். அவர் காற்றுக்கு எதிராக நடந்தார். அதனால் அவருடைய வார்த்தைகளைக் கமலாக்ஷியம்மா கேட்கவில்லை. அவள் கதவைப் பூட்டிவிட்டு, மீண்டும் ஒரு முனகலுடன் கட்டிலில் சாய்ந்தாள்.

storyஇரவு முழுவதும் அவர் தன் நாயைக் கனவுகண்டு கொண்டிருந்தார். கண் விழித்தபோதும், அவளுடைய வாசனையை அவர் உணர்ந்தார். தன்னுடைய கனவின் தொடர்ச்சி என்பதைப்போலவே அந்த நடைப்பயிற் சியும் என்று திடீரென்று அவருக்குத் தோன்றியது. மீனு என்ற பெயரைக் கொண்ட தன்னுடைய டாபர்மென், யாருக்குமே தெரியாமல் தன்னை இழுத்துக்கொண்டு செல்கிறதோ? இருட்டைப் பார்த்தவாறு அவர் அழைத் தார்: ""மீனு...''

Advertisment

உயிருடன் இருந்தபோது அந்த ஒரேயொரு அழைப்பு போதும்; எப்படிப்பட்ட ஆழ்ந்த தூக்கத்திலிருந்தும் அவளை எழுப்புவதற்கு. தான் இரவில் எப்போதாவது குளியலறையை நோக்கி நடந்தால், உடனே அவள் சரீரத்தை நெளித்தவாறு எழுந்து தன்னைப் பின்பற்றி வருவாள் என்பதை பரமேஸ்வரன் நாயர் நினைத்துப் பார்த்தார். அவருடைய பாதுகாவலாளி தான் என்ற எண்ணம் அவளுக்கு எப்போதும் இருந்தது.

மீனுவை நினைத்தபோது, அவருடைய கண்கள் நிறைந்தன. தன்னுடைய தாய் மரணமடைந்துவிட்டாள் என்ற தகவல் கிடைத்தபோதுகூட, தான் அழவில்லை என்பதை அவர் நினைத்துப் பார்த்தார். ஆனால் மீனு இரண்டோ மூன்றோ முறை மூச்சுவிட்டு, இறுதியில் நாக்கினை அழுத்திக் கடித்தவாறு உயிரைவிட்டபோது அவர் ஒரு குழந்தையைப்போல தேம்பித்தேம்பி அழுதார்.

அந்த கருப்புநிற நாய் அவருடைய உயிருக்குயிரான தோழியாக இருந்தது... பிறக்காத மகளாக இருந்தது.

Advertisment

வானத்தில் ஒரு வெள்ளிக்கனியைப்போல துருவ நட்சத்திரம் தொங்கிக்கொண்டிருப்பதை அவர் பார்த் தார். நேரம் என்னவாக இருக்கும்? கடிகாரத்தை எடுப் பதற்கு மறந்துவிட்டோம் என்ற விஷயம் கையால் தேடிய போது அவருக்குத் தெரிந்தது. நேரம் ஆறு மணியை நெருங்கியிருக்குமென்று நினைத்துதான் வெளியேறியே வந்தோம் என்பதை அவர் நினைத்துப் பார்த்தார். தெருவிலும் இரண்டு பக்கங்களிலும் பேரமைதி மட்டும்... பறவைகள் கண் விழித்திருக்கவில்லை.

நடப்பதை நிறுத்திவிட்டு வீட்டிற்கு உடனே திரும்பிச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு உண்டாக வில்லை. கமலாக்ஷியின் தூக்கத்தை மீண்டும் பாழ் செய்வது ஒரு கொடூரமான செயல் என்று அவள் நினைத்துக் கொள்வாள். பிறகு சிலுவையில் அறையப்பட்ட தூதரின் முகமூடியை அணிந்துகொண்டு அவள் குளியலறைக்கோ சமையலறைக்கோ நடப்பாள். இல்லை... அந்த தியாக வெளிப்பாட்டை அவரால் மீண்டும் பார்க்க முடியாது. கமலாக்ஷிக்கு வாழ்க்கை வெறுத்துப் போயிருக்கிறது என்று அவர் நினைத்துக் கவலைப் பட்டார். இல்லாவிட்டால்... அவள் சிரித்திருப்பாள். தன்னிடம் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி மட்டுமே உரையாடக்கூடிய குணத்தை சில நிமிடங்களுக்காவது விலக்கி ஒதுக்கிவைத்திருப்பாள். நீண்டகால சேமிப்பு, யூனிட் அறக்கட்டளை, ஐ.டி.பி.ஐ. பத்திரங்கள் ஆகிய விஷயங்களைப் பற்றி மட்டுமே அவள் உரையாடலில் வெளிப்படுத்துவாள். ஆனால், முன்பு... முன்பு... கமலாக்ஷி இப்படிப்பட்டவளாக இல்லை.

இருட்டிற்கு மத்தியில் ஏதோ கண்ணுக்குத் தெரியாத சக்தியால் இழுக்கப்பட்டதைப்போல நடந்துகொண்டிருந் தபோது, அவர் தனக்குத்தானே கூறிக்கொண்டார். கனவிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டுமென்றால், வீட்டிற்குச் சென்று மூன்று கப் தேநீர் பருக வேண்டும்.

"ஹிந்து'வையும் "மாத்ரு பூமி'யையும் கையில் எடுத்துக் கொண்டு கழிப்பறைக்குச் செல்லவேண்டும். அதற்குப் பிறகு மட்டுமே அவரால் உண்மையான உலகத்திற்கு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் திரும்பிவர முடியும்.

அவர் கண்களைச் சுருக்கி வைத்தவாறு தன்னைச் சுற்றிலும் பார்த்தார். அவர் கண்ணாடியையும் மறந்து விட்டார். எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. படிகளில் அமைக்கப்பட்டிருந்த சிங்கத்தின் சிலைகளை அவரால் பார்க்க முடியவில்லை. கால் ஃபர்லாங் தூரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஏழு தளங்களைக் கொண்ட கட்டடம்?

அதையும் பார்க்க முடியவில்லையா? மேற்குப் பக்கம் திரும்புவதற்கு பதிலாக, அவர் கிழக்குப்பக்கம் திரும்பியிருக் கவேண்டும். சாஸ்தமங்கலம் என்ற பெயரைக் கொண்ட பகுதியைவிட்டு, தான் நிமிடங்களுக்குள் அறிமுகமற்ற ஒரு திசையில் வந்துசேர்ந்துவிட்டோமோ? தன் செருப்புகள் தெருவின் நன்கு பழக்கமான கடினத்தன்மையைத் தொடவில்லை என்பதை அவர் ஆச்சரியத்துடன் புரிந்து கொண்டார். அவருடைய கண்கள் மென்மையான மண்ணில் இறங்கிக்கொண்டிருந்தன. பனிவிழுந்து சிலிர்த்து நின்றிருந்த உணர்ச்சிவசப்பட்ட மண்வழி யாக, அதன் வாசனையை முகர்ந்தவாறு அவர் நடந்து கொண்டிருந்தார். அது தெருவல்ல... கீழ்நோக்கிச் செல்லக் கூடிய ஒரு ஒற்றையடிப் பாதை... மழைக்காலத்தில் நதியாக வடிவமெடுக்கும் வாய்ப்புள்ள ஒரு வாய்க்கால்... அதன் இரண்டு பக்கங்களிலும் வளர்ந்து நின்றிருந்த தாவரங் களை அந்த மெல்லிய நிலவு வெளிச்சத்தில் அவர் அடையாளம் தெரிந்துகொண்டார். பல வருடங்களுக்கு முன்னால் அவருடைய பிறந்த ஊரான வடக்குதிசை கிராமத்திலிருந்த மூக்குத்தி, தும்பை, நிலம்பனை, கருவை, பூங்குறுந்தலை- அவருக்கு நன்கு தெரிந்தவர்கள். அப்பா வையும் அம்மாவையும் மாமாவையும் பாட்டியையும் ஞாபகப்படுத்தக்கூடிய பால்ய கால காட்சிகள்... "பரமோ...'

என்று அவரை அழைத்தவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள். அதற்குப்பிறகும் இந்த செடிகள் உயிருடன் இருக்கின்றன- தும்பை, மூக்குத்தி, கருவை, பூங்குறுந் தலை... அவர்களால் அவரை "பரமோ' என்று நீட்டி அழைக்கமுடியாது. திடீரென்று ஒரு ஆதரவற்ற உணர்வு அவருடைய இதயத்தை ஆக்கிரமித்தது. தனக்கு மூச்சை அடைப்பதைப்போல அவருக்குத் தோன்றியது. பரமு என்று தன்னை அழைப்பதற்கும், தான் அருகில் இருப் பதைப் பார்த்து சந்தோஷப்படுவதற்கும் இந்த உலகத்தில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா? கமலாக்ஷி? அவளுக்கு அவர் அருகில் இருப்பதைப் பார்த்து சந்தோஷம் உண்டாகுமா? இல்லை... உண்மையான பரமேஸ்வரனை, கிராமத்தில் மாங்காயை கல் எறிந்து விழச் செய்தும், குளத்தில் மேற்துண்டைத் தாழ்வாக வைத்து மீன் பிடித்தும், மண்ணில் வண்டு தேடியும் வாழ்ந்த அந்தச் சிறுவனை அவளுக்குத் தெரியாது.

அவளுக்கு கட்டடம் உண்டாக்கிக் கொடுத்த மனிதர் அவர்.

அவளுடைய பணத்தை புத்திசாலித்தனமாக சேமித்து வைத்துக்கொடுத்த மனிதர்... முன்னாள் வக்கீல்...

முன்னாள் நீதிபதி... உடற்பயிற்சி முறைகளைச் செய்து கொண்டு, முதுமையை விலக்கி நிறுத்துவதற்கான வீணான முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கும் முட்டாள்... அவளுக்குத் தெரிந்தது- கழியை வீசியவாறு நடந்து செல்லும் இந்த கிழவரைத்தான். இளமையான நாட் களிலும் முதுமையை வலிய அழைத்து வரவைக்கக்கூடிய ஒரு சிறப்பான ஆற்றல் அவளுக்கு இருந்தது. அவளு டைய பார்வைக்கு முன்னால் அவருடைய புன்னகை இறந்துபோய் விடும். எவ்வளவோ முறை அவர் அவளிடம் இதயத்தைத் திறந்துபேச வேண்டுமென்று ஆசைப் பட்டார். தன்னுடைய ரகசிய விருப்பங்களை அவளிடம் வெளிப்படையாக் கூறவேண்டுமென்று... எப்படிப் பார்த்தாலும் அவள் அவருடைய சகபயணி அல்லவா? கமலாக்ஷி.... நீ உன்னுடைய ஆசைகளை என்னிடம் கூறி முடித்துவிட்டாய், நான் அவற்றை நிறைவேற்றியும் விட்டேன். இனி நீ என்னுடைய ஆசைகள் என்னென்ன என்பதைக் கேட்க வேண்டும். நான் பிறந்த ஊரில் மீண்டும் தங்கவேண்டும்... இரண்டு வாரங்களுக்காவது மீண்டும் அந்த வீட்டில் தங்கவேண்டும்... கைகளால் பாசிகளையும் சேற்றையும் நீக்கிவிட்டு, குளத்தில் மூழ்கிக் குளிக்க வேண்டும்... மாமரத்தில் பழுக்கக்கூடிய மாம்பழத்தைச் சாப்பிடவேண்டும்... கிருஷ்ணனின் ஆலயத்திற்குச் சென்று, தீபாராதனையைப் பார்க்கவேண்டும்... அந்த விக்கிரகத்திடம் தனிப்பட்ட முறையில் எந்தவொரு வேண்டுகோளும் இல்லாமல் பிரார்த்தனை செய்ய வேண்டும்...

அந்த ஆசைகளை வெளிப்படுத்த, அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மலத்தை உருட்டிக்கொண்டு செல்லும் வண்டுகளைப்போல அவரும் அவளும் சேர்ந்து ஈர்ப்பே இல்லாத ஒருவகையான அமைதி நிலையை அவர்களு டைய வீட்டில் உண்டாக்கி வைத்திருந்தார்கள். கமலாக்ஷியை முண்டும் மேல்துண்டும் அணியச்செய்து, கோவிலில் நடைபெறும் திருவிழாவுக்கு அழைத்துச் செல்வதற்கு தான் விருப்பப்படுவதாகக் கூறினால், அவள் அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதென்று கூறமாட்டாளா?

அவருக்கு அவராக இருப்பதற்கு தைரியம் இல்லாமலிருப்பது இந்த வீட்டில் இருக்கும்போது மட்டும்தான்- தான் உண்டாக்கிய மணிமாளிகையில்... கமலாக்ஷிக்குப் பொருத்தமான கணவர் தான் அல்ல என்ற உண்மையை அவர் எப்போதோ புரிந்துகொண்டிருந்தார். கிராமத்துப் பெண்ணாவதற்கு அவளால் முடியவில்லையென்றால், ஒரு நாகரிக இளைஞனாவதற்கு அவரால் முடியுமே? அதுதான் நடைபெற்றதும்... அவர் ஆங்கிலத்தில் உரையாடும்போது, அவருடைய கிராமத்து வாசனை கொண்ட உச்சரிப்பு அவளுக்குப் பழமையானதாகத் தோன்றியது, அவள் புன்னகைத்தாள். அவர் வாரத்தில் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுண்டு. தலையின் எண்ணெய்ப்பசை காரணமாக விலைமதிப்புள்ள தலையணை உறைகள் பாழாகின்றன என்றும், சுவரில் அடையாளங்களை இடம்பெறச் செய் கின்றன என்றும் அவள் முணுமுணுத்தாள். வெங்காய சட்னியைச் சாப்பிட்டபோது, "என்னால் அந்த நாற்றத் தைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை' என்று அவள் கூறினாள். ஒருநாள் அவர் அவளிடம் கேட்டார்:

"கமலாக்ஷி.... என்னை கல்யாணம் செஞ்சிக்

கிட்டதுக்காக நீ வருத்தப்படுறியா?'

அவள் பதில் கூறவில்லை. அவள் புத்திசாலியாகவும், பழமையான சிந்தனையும், குடும்பத்தனமான குணமும் கொண்டவளாக இருந்தாள். அவரை வேதனைப்படுத் தக்கூடிய வார்த்தைகளை உச்சரிப்பதற்கு அவள் தயங் கினாள்.

அவர் நடந்து செல்லும் பாதை முடியக்கூடிய இடத்தில் ஒரு புகைப்படலத்தைப்போல பனி உருண்டு திரண்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத ஒரு நாட்டுக்கோழி கூவியது. வானத்தில் நட்சத்திரங்கள் வெளிறிப்போய்க் காணப்பட்டன. பனி என்பது தெரிந்தும் அதைக் கடந்தவாறு அவர் முன்னோக்கி நடந்தார். தன்னுடைய முழங்கால்களில் உண்டாகக்கூடிய வேதனை கிட்டத்தட்ட விலகிவிட்டது என்பதாக அவருக்குத் தோன்றியது. ஒற்றையடிப் பாதையின் எல்லையில் ஒரு தென்னந்தோப்பும் ஒரு ஆலயமும் ஒரு கோவில் குளமும் இருந்தன. குளத்தின் கரையிலிருந்த காஞ்சி மரத்திற்குக் கீழே சில இளம்பெண்கள் ஈரமான ஆடைகளை அணிந்தவாறு நெருப்பு காய்ந்துகொண்டிருந்தார்கள். சுள்ளியும் நார்களும் காய்ந்த இலைகளும் எரிந்தபோது, அவற்றின் நரம்புகள் வெப்பத்தில் வெடித்தன. அந்த மெல்லிய சத்தத்தைக் கேட்டவாறு அவர் அரைநிமிடம் திகைப்படைத்து நின்றார். கன்னங்களில் நெருப்பு ஜுவாலைகளைப் பிரதிபலித்துக் கொண்டிருந்த இளம்பெண்கள் அவரை கண்களைச் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந் தார்கள். நீரிலிருந்து திருவாதிரைப்பாட்டு உயர்ந்தது. கிழவிகளின் நடுங்கிக்கொண்டிருக்கும் குரலையும், அதற்குப் பின்னால் இளம்பெண்களின் மெல்லிய குரலையும் அவர் கூர்ந்துகேட்டார்.

ஈரமான மார்புக் கச்சையையும் ஈரமான மேல்துண் டையும் ஈரமான முண்டையும் அணிந்திருந்த ஒரு இளம் பெண் நெருப்பு காய்வதை நிறுத்திவிட்டு எழுந்து நின்றாள்.

அவளுடைய கன்னத்தின் குழிகள் பிரகாசித்தன.

"இல்லை... பரமு அண்ணாதானே இது?' அவள் கேட்டாள்.

பரமு அண்ணா! அம்மிணி மட்டுமே அவரை அவ்வாறு அழைப்பாள். இவள் அம்மிணியா? தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, அவளுடைய மரணம் பற்றிய தகவலுடன் வந்த அஞ்சல் ஊழியருக்கு ஒரு ரூபாய் கொடுத்த சம்பவம் அவருக்கு ஞாபகத்தில் வந்தது. அது தவறான விஷயம். மரணச் செய்தியைக் கொண்டு வரக்கூடியவர்களுக்கு பணத்தைக் கொடுப்பதா? அழுகை யைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஒரு இயந்திர பொம் மையின் கனமான அசைவுகளுடன் அவர் பர்ஸைத் திறந்து பணத்தையெடுத்து அவனிடம் நீட்டினார். பிறகு கால்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த தன்னுடைய நண்பர்களைப் பார்த்தவாறு சிறிது நேரம் நின்றார்.

அவளை எரிப்பதைப் பார்ப்பதற்குச் செல்லவுமில்லை.

"பரமு அண்ணா... நீங்க நேரா வீட்டுக்குப் போங்க. அங்க எல்லாரும் காத்திருக்காங்க.' அந்த இளம்பெண் கூறினாள்.

"அம்மிணி?'

"ஆமா... பிறகு... நான் யாருன்னு நினைச்சீங்க?'

அவள் குலுங்கிக்குலுங்கி சிரித்தாள். பரமேஸ்வரன் நாயர் அவள் சுட்டிக் காட்டிய திசையை நோக்கி நடந்தார்.

"நரனாக இவ்வாறு பிறந்த மண்ணில் நகர மக்களுக்கு மத்தியில் நான்!'

குளத்தில் திருவாதிரைக்களி நடத்திக் கொண்டிருந் தவர்கள் உரத்த குரலில் பாடினார்கள்.

தன்னுடைய முழங்காலில் வேதனை இல்லாத நிலை, இளமை உணர்வு... இவையனைத்தும் கனவு நிலையா என்று அவர் தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். தன்னுடைய ஒவ்வொரு உரோமக் கால் வழியாகவும் அழகான ஒரு ஆனந்தம் பரவிக் கொண்டிருப்பதைப்போல அவருக்குத் தோன்றியது. இந்த கிராமம் தன்னுடையது... அங்கிருக்கும் வாய்க்கால்களும், பாம்புப் புற்றுக்கும், ஆலய விளக்குகளும், ஈரமாகி சிலிர்த்து நிற்கும் மண்ணும், மூடுபனியும், பறவைகளின் சத்தமும்- அனைத்தும் ஒன்றுசேர்ந்துதான் தான் மனிதனாக உருவாக்கப்பட்டிருக்கிறோம். இவையனைத்தும் தன்னு டைய சரீரம்- அவர் நினைத்தார். இந்த சரீரம் அழிந்து விட்டாலும், அதில் தனிமையாக வாழ்ந்த ஆன்மாவையும் இந்த கிராமம் சொந்தமாக்கிக்கொள்ள முயற்சிக்கும்.

இது ஒரு கனவா? ஒரு கனவின் இரண்டாவது பகுதி? இந்த அழகான விஷயங்கள் ஒரு கனவின் பகுதிகள் மட்டுமா? என்ன நடந்தது? முற்றிலும் சாதாரணமான ஒரு சாயங்கால வேளைக்குப்பிறகு, அவர் தன் மனைவியுடன் சேர்ந்து உறங்குவதற்காகப் படுத்தார். அவருடைய நாய் அந்த கனவில் நிறைந்து நின்றது எழுந்த பிறகும், அவளுடைய வாசனை அவருடைய நாசித் துவாரங்களில் தங்கி நின்றிருந்தது. நேரம் என்னவென்பதைப் பார்க்காமலேயே அவர் ஆடையணிந்து நடப்பதற்காக வெளியேறினார். கமலாக்ஷி வெறிபிடித்த நாய்களைப்பற்றி அவரிடம் எச்சரித்தாள். தொடர்ந்து தெருவின் வழியாகப் பயணிக்கும்போது, அவருக்கு பாதை தவறிவிட்டது. மூக்குத்தியும் தும்பையும் கருவையும் நிலம்பனையும் பூங்குருந்தலையும் வளர்ந்து நிற்பதை அவர் பார்த்தார். மூடுபனிக்குப் பின்னால் ஆலயத்தையும் குளத்தையும் இளம்பெண்களையும்,

அவர்களுடைய கண்களில் பிரதிபலித்த நெருப்பு ஜுவாலை களையும் அவர் பார்த்தார். "பரமு அண்ணா...!'

அம்மிணி மீண்டும் அவருடைய அழைப்புடன் வந்து சேர்ந்தாள். நாம் எப்போதாவது கமலாக்ஷியின் கணவனாக இருந்தோமா? என்றைக்காவது வக்கீலாக இருந்தோமா? நீதிபதியாக இருந்தோமா? மூடுபனி தன்னுடைய மூளைக்குள் நுழைந்து, சந்தோஷமற்ற நினைவுகளை இறக்கச்செய்தது என்பதைப்போல அவர் உணர்ந்தார். கிழக்கு வாசலிலிருந்த கூவிள மரத்தையும் கிணற்றையும் முல்லைக் கொடியையும் மீண்டும் பார்த்தபோது, அவருடைய இதயம் பலமாகத் துடித்தது.

"இங்கு யாருமில்லையா?' தொண்டையைச் சரிசெய்துவிட்டு, அவர் கேட்டார்.

"பரமுவா?' உள்ளேயிருந்து அம்மா உரத்த குரலில் கேட்டாள்.

அம்மா வாசலில் தோன்றியபோது அவர் முதலில் பார்த்தது அவளுடைய பாதங்களைத்தான். இல்லை... வீக்கமில்லை... காலிலும் வீக்கமில்லை... முகத்திலும் வீக்கமில்லை... சிறுநீர் கழிப்பதில் இருந்த பிரச்சினை நீங்கியிருக்கவேண்டும்.

"அம்மா...' நீங்க இங்க இருப்பீங்கன்னு நான் நினைக்கல.'

அவர் கூறினார். உள்ளேயிருந்து வந்தவர்களில் அப்பா வையும் மாமாவையும் பாட்டியையும் அவர் சந்தோஷத் துடன் அடையாளம் தெரிந்துகொண்டார். அவர்களுடன் சேர்ந்து தன்னுடைய வளர்ப்பு நாயையும் பார்க்க முடிந்த போது, அவர் உரத்த குரலில் கேட்டார்: "மீனு இங்க இருக்காளா?'

"பிறகு... அவ எங்க போவா?' அம்மா கேட்டாள்.

அந்தக் காலத்தில் யுதிஷ்டிரான் சொர்க்கத்திற்குச் சென்றபோது ஒரு நாய் அவருடன் சென்றதை மாமா ஞாபகப்படுத்தினார். அந்த கதைகூறும் பாடம் என்னவென்று அவர் ஆராய்ந்தபோது, மாமா குலுங்கிக்குலுங்கி சிரித்தார். சொல்லப்படும் பாடங்களை ஆராய்வது முழுமையான முட்டாள்தனமென்று மாமா கூறினார்.

"மரணத்தில் என்ன பாடம்?' மாமா கேட்டார்.

"வாழ்க்கையில் என்ன ஒரு பாடம்?' அம்மா கேட்டாள்.

மரக்கிளைகளில் பறவைகள் சத்தம் உண்டாக்கின. தன்னிடம் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவது அவையா அம்மாவா என்பதை அவர் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். ஒருவேளை... அம்மாவின் குரல் குயில்களின் குரலைப்போல மிகவும் இனிமையாகிறதோ?

"பூமியில் எண்ணமுடியாத அளவுக்கு மோசமான விஷயங்கள் மட்டுமே...' மாமா கூறினார்.

பரமேஸ்வரன் நாயரின் காலில் மீனு வெறும் மண்ணில் உருண்டுகொண்டும் தன்னுடைய அறுந்த வாலை வேகமாக அசைத்துக்கொண்டும் இருந்தது. கண்ணீர் காரணமாக அவருக்கு சிறிது நேரத்திற்கு எதையுமே பார்க்க முடியவில்லை.

"உள்ளே வந்து உட்காரு பரமு.' அம்மா கூறினாள்.

அவர் தயங்கியவாறு வாசலில் நின்றிருந்தார். அந்த வீட்டிற்குள் நுழைவது அதிகாரத்தை மீறிய ஒரு செயலாக இருக்கும் என்ற சிந்தனை அவரை பாடாய் படுத்தியது. கடந்த காலத்திற்குள் பயணம் செய்யும்போது அந்த பயணத்திற்காக சில உரிமைச் சான்றிதழ்கள், விஸா, பாஸ்போர்ட்... அவரின் கையில் எதுவுமே இல்லை- இந்த பழமையான கழியைத் தவிர. தான் அம்மாவுக்கு என்ன தருவது? பையில் பர்ஸ் இருந்தால், ஆயிரத்தையோ இரண்டாயிரத்தையோ அம்மாவின் உள்ளங்கையில் கொடுத்திருக்கலாம். அந்த அளவுக்கு அதிகமான பணத்தை அம்மா எந்தச் சமயத்திலும் ஒரே நேரத்தில் பார்த்திருக்கவே மாட்டாள். அம்மா எப்போதும் வறுமையில் இருந்தாள். தேங்காய், புளி, மிளகாய் ஆகியவற்றைச் சேர்ந்து துவையல் அரைத்து, அவள் கஞ்சியைக் குடிப்பாள். பலா இலையால் கஞ்சியை அள்ளிக் குடிக்கும்போது, அவரை இடது கையால் அணைத்துக் கொள்வாள். தேய்ந்துபோன பற்களைக் காட்டிச் சிரிப்பாள். அவளுடைய உண்மையான பெயர் என்ன?

சொந்த தாயின் பெயரை அவர் எப்படி மறந்து போனார்? ஞாபகத்தில் கொண்டு வருவதற்கு முயற்சித்த போது, கமலாக்ஷியின் தாயின் பெயர் நினைவில் வந்தது- மகேஸ்வரியம்மா. அவருடைய கிராமத்தில் ஒரு மகேஸ்வரியும் இல்லை. அங்கு லட்சுமியும் மாதுவும் காளியும் வள்ளியும் அம்முவும் அம்மிணியும் இருந் தார்கள். ஆனால், மகேஸ்வரிகள் அங்கில்லை. தன்னு டைய திருமணத்திற்குப் பிறகு தன் அம்மாவைப் பார்ப் பதற்காக மூன்றுமுறை மட்டுமே அவர் கிராமத்திற்குச் சென்றிருக்கிறார். அவர் நினைத்துப் பார்த்தார். அந்த நினைவுடன் கடுமையான ஒரு குற்றவுணர்வும் அவரைத் தளரச் செய்தது. அவர் வசதிபடைத்த வக்கீலானபோதும், பிரபலமான நீதிபதியானபோதும் அவரால் அம்மாவுக்கு எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. அம்மாவுக்கு ஒரு மருந்து புட்டிகூட வாங்கித் தருவதற்கு அவர் முயற்சிக்கவில்லை. அந்த அளவுக்கு கமலாக்ஷியின் குடும்பத்துடன் அவர் நெருக்கமாகி விட்டிருந்தார்.

பறவைகள் சத்தங்களை உண்டாக்கின. தொழுவங் களிலிருந்து பசுக்கள் கத்தின.

"இனிமேலும் நான் வருவேன்' அவர் தன் தாயிடம் கூறினார். முதுமையின் அடையாளங்கள் எதையும் அவர் தன் தாயிடம் பார்க்கவில்லை. அவளுடைய முகம் சிவந்துபோய்க் காணப்பட்டது. தலைமுடி கறுத்திருந்தது.

திரும்பி வந்தபோது, தன்னுடைய வீட்டின் வெளிவா சலுக்கு அருகில் சென்றபோது, அவர் மீனுவின் குரைக்கும் சத்தத்தைக் கேட்டார். சுற்றிலும் பார்த்தாலும், அவளை எங்கும் பார்க்க முடியவில்லை. முதல் பேருந்து குலுங்கிக் குலுங்கி பயணத்தை ஆரம்பிப்பதையும், பால் விற்பவர்கள் சைக்கிள் மணியை எழுப்பி, இல்லத்தரசிகளை தூக்கத் திலிருந்து எழுப்புவதையும் அவர் பார்த்தார். படுக்கைய றைக்குள் நுழைந்தபோது முழங்காலின் வேதனை மீண்டும் வந்து சேர்ந்திருப்பதை அவர் புரிந்துகொண்டார். அவரு டைய மனைவி படுத்திருக்கும் இடத்திலிருந்து எழுந்திருக்காமலேயே கேட்டாள்:

""இன்னிக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்துட்டீங்க?''

அவர் பதில் கூறவில்லை. அந்தப் பெண்மீது காரணமே இல்லாமலும், பலமானதுமான ஒரு வெறுப்பு தனக்குள் வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது என்பதை அந்த நிமிடத்தில் அவர் தெரிந்துகொண்டார்.

____________

வணக்கம்

அனைத்து இலக்கிய உள்ளங்களுக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று முத்தான மலையாளச் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.

"மன்னன்' என்ற கதையை எழுதியவர் நவீன மலையாள இலக்கியத்தின் நட்சத்திரமும், சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான எம். முகுந்தன்... சனிக்கிழமை மதியத்திற்குப் பிறகு அலுவலகம் இல்லாததால், பீர் புட்டிகளுடன் தன் வீட்டிற்குச் செல்ல நினைத்த அசோகன், புதிதாகத் திருமணமான காவலாளி பகதூரின் வீட்டிற்குச் சிறிதும் எதிர்பாராமல் சாப்பிடுவதற்குச் சென்ற மாறுபட்ட கதை... கயிறுமீது நடப்பதைப் போன்ற கதைக் கரு. அதை எந்த அளவுக்குத் திறமையாக முகுந்தன் எழுதியிருக்கிறார் என்பதை நினைக்கும்போது, உண்மையிலேயே அவர்மீது உயர்ந்த மரியாதை உண்டாகிறது. "உள்ளே சென்றான். பகதூரின் படுக்கை... படுக்கையில் சிவப்பு நிற ரவிக்கையையும், வெண்ணிறப் புடவையையும் அணிந்திருந்த மோத்தி...' எம். முகுந்தனின் முத்திரை பத்ந்த வரிகள் இவை!

"தனிமையின் வாசல்கள்' என்ற கதையை எழுதியவர் மூத்த பெண் எழுத்தாளரும், சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான மாதவிக்குட்டி. பொழுது புலர்வதற்கு முன்பே வீட்டிலிலிருந்து வெளி யேறி நடப்பதற்காகச் சென்ற ஒரு மனிதரின் கதை. ஒரு சிறுகதை யின் சில பக்கங்களில் எவ்வளவு கதாபாத்திரங்களையும், சம்பவங் களையும் கொண்டு வருகிறார் மாதவிக்குட்டி! மிகவும் ஆழமாக வாசிக்கவேண்டிய கதை. ஒவ்வொரு வரியிலும் மாதவிக்குட்டியின் எழுத்தாற்றலை நம்மால் உணரமுடிகிறது.

"நேர்காணல்' என்ற கதையை எழுதியவர் மலையாள இலக் கியத்தின் தூண்களில் ஒருவரும், உயர்ந்த விருதான "ஞான பீடம்' விருதைப் பெற்றவருமான தகழி சிவசங்கரப்பிள்ளை. பணிக்கான நேர்காணலுக்கு விமானத்தில் பயணிக்கும் மோகன் என்ற மனி தனின் கதை. மண்வாசனையுடன் கதையை எழுதும் தகழி யிடமிருந்து இப்படியொரு கதையா என்ற வியப்புதான் நமக்கு உண்டாகிறது. எனினும், தகழியின் தனித்துவம் கதை முழுக்க நிறைந்திருக்கிறது. முற்றிலும் மாறுபட்ட கதைக்களம்... அதில் கதாபாத்திரங்களை மிகவும் அருமையாக செதுக்கியிருக்கிறார் தகழி. பணியைத் தேடிச்செல்லும் மோகன், அவ்வப்போது நெருப்பில் எரிந்துகொண்டிருக்கும் தன் இறந்த தந்தையை நினைக்கும் செயல், கண்ணில் நீரை வரவழைக்கக்கூடியது. தகழியைப் போன்ற ஒரு தேர்ந்த எழுத்தாளரால்தான் இப்படியெல்லாம் ஆழமாக எழுதமுடியும்!

நான் மொழிபெயர்த்த இந்த மூன்று கதைகளும் உங்களுக்கு மூன்று மாறுபட்ட அனுபவங்களை நிச்சயம் தரும்.

"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளை வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி.

அன்புடன்,

சுரா