மறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்!
-என்கிறார் மாகவி பாரதி.
உலகின் முதல்மொழியும் மூத்த மொழியுமான நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பை, இங்கே எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்?
கடந்த 2022-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 26-ஆம் நாள், உலகின் மக்கள் தொகை எண்ணூறு கோடியை எட்டியிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் இந்த எண்ணிக்கையில் மேலும் சில லட்சங்கள் கூடியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஐக்கிய நாடுகள் அவையினால் அங்கீகரிக்கப் பட்டவை, அங்கீகரிக்கப்படாதவை, இன்றளவும் பதிவு செய்யப்படாதவை, வளர்ந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ளவை என இன்றைய உலகில் மொத்தம் 233 நாடுகள் உள்ளன.
ஆனால் ஒரு நாடு எந்த நிலையில் இருந்தாலும் அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பண்பாட்டுத் தேவைகளுக்கு மொழிகள் அவசியமானவை என்னும் அடிப்படையில், இன்றைய உலக நாடுகளில் மொத்தம் 6,500 மொழிகள் பயன் பாட்டில் இருப்பதாக உலக மொழிகள் பற்றிய ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது.
இந்த 6,500 மொழிகளில் தொன்மைச் சிறப்பு கள் வாய்ந்த செம்மொழிகளாக அடையாளம் காணப்பட்டு, உலக மொழி அறிஞர்களால் அங்கீ கரிக்கப்பட்டுள்ளவை தமிழ், கிரேக்கம், சமஸ்கிருதம், லத்தீன், பாரசீகம்,அரபு, எபிரேயம் (ஈப்ரூ) சீனம் ஆகிய எட்டு மொழிகள்தான்.
இந்த எட்டு மொழிகளில் இருந்தும், தனக்கே உரிய தனித்துவங்கள் மிக்க பல்வேறு சிறப்புகளால் வேறுபட்டு, "உயர்தனிச் செம்மொழி' என்று உலக மொழிகளின் உச்சியில் வைத்துப் போற்றப்படுகிற பெருமைக்குரியதும் உயரியதுமாக விளங்குவது நமது தமிழ் மொழிதான்! இக்கூற்றானது நமது தாய்மொழியின் மீதான ஓர் ஆர்வக் கூற்றல்ல, ஆய்ந்தறிந்து வெளியிடப்பட்டுள்ள அறிவியல் உண்மை.
இத்தகைய பின்புலத்தில், நிகழ்காலத் தமிழ்நாட்டில், நமது தாய்மொழியாம் தமிழ் மொழியின் நிலையை உற்றுநோக்கி, அதற்கு நேர்ந்துவருகின்ற பல்வேறு வகையான அவலங் களுக்குத் தீர்வு காண வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.
தமிழ்மொழியுடன் சேர்த்து உலக அளவில் வரையறை செய்யப்பட்டுள்ள எட்டு செம்மொழி களுக்கு மட்டுமல்ல, மற்றுமுள்ள 6,500 க்கும் மேற்பட்ட மொழிகளுக்கும் இழைக்கப்படாத அநீதிகள் நமது தமிழ் மொழிக்கு இழைக்கப் படுகின்றன என்றால் அது மிகையல்ல.
தமிழுக்குத் தொடர்பற்றவர்களைக் காட்டிலும் அதைத் தங்களது தாய்மொழியாகக் கொண்டவர்களே அதற்கு அதிக அளவிலான பின்னடைவுகளையும் தீங்குகளையும் ஏற்படுத்து கின்றனர் என்றால், அதுவும் மிகையல்ல!
தமிழ் நாட்டின் கோடிக்கணக்கான பிள்ளை களுக்கான கல்வி, நீதி, நிர்வாகம், வழிபாடு, இசை வணிகம், வாழ்வியல் பண்பாட்டு நிகழ்வுகள் போன்ற எந்தத் துறையிலும் இந்த மண்ணுக்குரிய மரபுப் பெருமைகள் நிறைந்த தமிழ்மொழியானது பயன்பாட்டில் இல்லை.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள துறைகளின் பயன்பாட்டுக் களங்களுக்கு வெளியே நிற்க நேருகின்ற தருணங்களில் மட்டுமே தமிழர்கள் தங்களுக்குள் தமிழில் உரையாடிக் கொள்கிறார் கள் என்பதும், அதுவும் பல்வேறு வகையான மொழிகளை எவ்விதமான கூச்சங்களுமின்றித் தங்களது தமிழில் கலந்து உரையாடிக் கொண்டி ருக்கிறார்கள் என்பதும் பெருங்கசப்பான பேருண்மைகளாகும்.
ஒரு பள்ளிக்கூடத்தின் வாயில் வரைக்கும் தங்களின் தாய்மொழித் தமிழில் உரையாடிக் கொண்டுவருகின்ற ஒரு தந்தையும் மகனும் பள்ளி மணியோசை ஒலித்தவுடன் இருவேறு மொழியினராகிப் பிரிந்து விடுகின்றனர்.
ஆலயங்களின் கருவறை வரையில் தமிழில் உரையாடிக் கொண்டு வருகின்ற ஒரு தாயும் மகளும், கடவுளின் கருவறை மணியோசைக்கு அமைதியடைந்து, தாங்கள் அதுவரை உரையாடிக் கொண்டு வந்தது வேண்டாத ஒரு மொழி என்பதைப் போல தங்களின் கன் னங்களில் அடித்துக் கொள்கின்றனர்.
நீதிமன்றத்தின் விசாரணை அறைக்கு வெளியே தமிழில் உரை யாடிக் கொண்டிருக் கின்ற வழக்கறிஞரும் அவரது கட்சிக்காரரும், விசாரணை தொடங்கிய தும் தங்களின் வழக்கினை வேறு ஒரு மொழிக்கு மாற்றிக் கொண்டு நீதி கோருகின்றனர். வழக்குத் தொடுத்த கட்சிக் காரர், தனது வழக்கின் நிலையைத் தனது வழக்கறிஞர் மொழிபெயர்த்துச் சொல்வார் என்று காத்திருக்கிறார்.
பாடகர்களும் இசைமன்றங்களின் நிர்வாகிகளும் தமிழில் உரையாடி ஒப்பந்தங்கள் செய்துகொண்டாலும்கூட, இசையரங்கில் பாடகர்கள் பாடும் மொழி வேறாகவும் அமர்ந்து அதைக் கேட்பவர்களின் மொழி வேறாகவும் இருக்கின்றன.
ஒரு திருமணத்தின் பொருட்டான அனைத்து வகையான சிக்கல்களும் தேவைகளும் தமிழிலேயே பேசி முடிக்கப்பட்ட பின்னர், மணமக்களின் திருமணத்தை வேறு ஒரு மொழிதான் உரத்த குரலில் நடத்தி முடிக்கிறது.
திரைப்படம் தமிழிலும், பணங்கொடுத்து அதைப் பார்ப்பவர்கள் தமிழர்களாக இருந்தாலும்கூட, அத்திரைப் படங்களைத் தயாரித்து வழங்குபவை ஆங்கிலப் பெயர் பூண்ட தயாரிப்பு நிறுவனங்களாகவே இருக்கின்றன.
உரையாற்றுபவர் தமிழ்ப் பேச்சாளர், கேட்பவர்களும் தமிழர்கள் என்ற நிலை இருந்தாலும்கூட, ஒலிபெருக்கி நிறுவனத்தின் பெயர் ஏதோவொரு, ‘ஆடியோ' என்றுதான் மின்னுகிறது!
இப்படியாக வணிகங்கள் ஒப்பந்தங்கள் என்று தமிழர்கள் தங்களது வாழ்வியலின் முதன்மையான கூறுகள் அனைத்தையும் வேறு வேறு மொழிகளில் நடத்தி முடித்துவிட்டு, அந்தக் களங்களுக்கு வெளியே நின்று தங்களது தாய்த்தமிழில் உரையாடிக் கொள்வதையே, ‘களங்களுக்கு வெளியே கைபிசைந்து நிற்கிறது தமிழ்' என்று நாம் குறிப்பிடுகின்றோம்.
தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் அனைத்திலும் தலையெடுத்துத் தழைத்து வளர்ந்திருக்கின்ற பன்மொழிப் பயன்பாட்டுக் கலாசாரம், உலகின் வேறு எந்த மொழியின மக்களிடமும் காணப்படவில்லை என்றே சொல்லமுடியும்.
தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டுக் களங்களில், அவர்களின் தமிழ் அதற்குரிய இடத்தில் இல்லை என்பது ஒருபுறமிருக்க, அத்தகைய களங்களுக்கு வெளியே தமிழர்கள் நிகழ்த்துகின்ற உரையாடல்களிலும் அறுபது விழுக்காடு அளவுக்குப் பிற மொழிகள் கலந்திருக்கின்றன.
அவ்வாறு கலந்திருக்கின்ற பிற மொழிச் சொற்களில், ஆங்கிலம் தவிர்த்த பிற சொற்கள் அனைத்தும் தமிழ்ச் சொற்கள்தான் என்று தமிழ் மக்கள் நம்பிக்கொண்டிருப்பது, நமது தமிழுக்கு நேர்ந்து வருகின்ற மறைமுகமான மேலும் ஒரு கூடுதல் பின்னடைவாகும்.
‘என்னது? 'பொக்கிஷம்' என்ற சொல் தமிழ்ச் சொல் இல்லையா?' என்று புகழ் பெற்ற தமிழ்ப் படைப்பாளர் ஒருவரே ஒருமுறை நம்மிடம் அலறினார்!
தமிழறிஞர்களும், தமிழுணர்வு மிக்க அரசியல் தலைவர்களும் மக்களிடையே முன் வைத்த, ‘இயன்றவரை இனிய தமிழ்' என்கிற இறைஞ்சுகிற வகையிலான ஒரு கோரிக்கையைக்கூட, நமது நிகழ்காலத் தமிழ் மக்கள் நாள்தோறும் பொடிப்பொடியாகத் தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இயன்ற வரை எல்லா மொழிகளையும் கலந்து பேசுவதே பெரும்பான்மைத் தமிழர்களின் இன்றைய மொழிக் கொள்கையாக இருக்கிறது.
பல கோடிக் கணக்கில் தங்களது நிலப் பரப்புகளில் அடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு மொழியின் மக்கள், தங்களின் தாய்மொழியைச் சிறுகச் சிறுக இழந்துவிடுவார்களானால், நாளடைவில் அவர்கள் தங்களுக்கு உரிய, தங்களுடையதாக விளங்கிய நிலப்பரப்புகளையும் இழந்துவிடுவார்கள் என்பதே வரலாறாகும்.
ஒரு மொழி அழிந்தால் அம்மொழியின் இனமும் பிளவுண்டுச் சிதைந்து சிறுபான்மைகளாகி அழிந்துவிடும். இந்த பேருண்மை நம்மின மக்களால் உணரப்படவில்லை அல்லது உரிய முறையில் அவர் களுக்கு இன்னமும் உணர்த்தப்படவில்லை.
இன்றைய உலகில் பிரெஞ்சு, ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், ஜெர்மன், சீனம், அரபு, இந்தி, தமிழ் உள்ளிட்ட வெறும் பதிமூன்று மொழிகளே பத்து கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுகின்ற மொழிகளாக விளங்குகின்றன.இந்தப் பதிமூன்று மொழிகளில் தமிழ் ஒன்றைத் தவிர மற்ற அனைத்து மொழிகளுக்கும் அதனதன் மண்ணில் வழங்கப்படு கின்ற மரியாதையும், சிறப்புகளும், உரிமைகளும், பாதுகாப்புச் சட்டங்களும் நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டுசெல்கின்றன. அவற்றுடன் நாம் நமது தமிழை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமது மொழி எந்த அளவுக்குப் பள்ளத்தாக்கில் வீசப்பட்டிருக்கிறது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.
இதற்குச் சான்றாக பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்சு மொழிக்கு வழங்கப்படுகின்ற ஆட்சி நிர்வாகப் பயன்பாட்டு மரியாதைகளையும் அந்தக் கோணத்தில் நமது தமிழ் நாட்டில் தமிழுக்கு வழங்கப்படுகின்ற மரியாதையையும் இங்கே நாம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.
பிரெஞ்சு மொழியைக் காதல் மொழி என்பார்கள். ஆனால் நமது தமிழை, "அறம்' உரைக்கும் மொழி என்பார்கள். "அறம்' ஒரு மூலையில் கிடக்கட்டும் என்றெண்ணி நமது மக்கள் செயல்படுகி றார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
எந்தவொரு வேற்று மொழியும் ஓர் இனத்தின் மக்களைப் பற்றிக்கொண்டு விட்டால், அது அவ்வளவு எளிதில் அந்த மக்களின் மண்ணை விட்டு வெளியேறாது.
அம்மொழியானது அம்மாக்களின் நெடிய தலைமுறைகளின் மீதும் இடையறாமல் பயணித்துக் கொண்டே இருக்கும். அவ்வகையில்தான் ஆங்கிலேயர்கள் வெளியேறிவிட்ட பின்னரும்கூட, அவர்களின் மொழி வெளியேறாமல் வந்தேறிய மண் பரப்புகளிலெல்லாம் வேரூன்றி வளர்ந்து இப்போது அம்மொழி, "உலகமொழி' என்ற இடத்தைப் பிடித்திருக்கிறது.
இப்போதும் நமது கோடிக்கணக்கான தமிழ்ப் பிள்ளைகளின் தலையில் ஆங்கிலம்தான் பயிற்றுமொழி யாக ஏறி உட்கார்ந்து அழுத்திக் கொண்டிருக்கிறது என்பதே இதற்குச் சான்று!
ஒருவர் புல்லுணவு உண்கிற மரபில் பிறந்து அவ்வகை உணவுகளையே உட்கொண்டு வருகிறார் என்றால், அவரது உணவு அறத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு அவ்வகை உணவுகளையே வழங்குகிறார்கள். ஆனால் இந்த இனத்துக்கு இதுதான் தாய்மொழி என்று தெரிந்தும்கூட, அனைத்து வல்லாதிக்கத்தினரும் அவரவர் மொழியை அந்த இனத்தின் மீது திணிப் பதோடு, அவற்றை அந்த இனமக்களின் அன்றாட வாழ்வியலில் நிலைநிறுத்துவதிலும் வெற்றிபெற்று விடுகிறார்கள்.
இது கடைந்தெடுத்த உலகுதழுவிய மொழியியல் வன்முறையன்றி வேறென்ன? வல்லாதிக்க மொழியினரின் இத்தகையக் கலாசார அடாவடித்த னத்தை உணர்ந்துதான் ஐக்கிய நாடுகள் அவையின் மொழிப்பிரிவானது, உலகில் நூறுபேர் மட்டுமே பேசுகிற ஒரு மொழியாக இருந்தாலும் அம்மொழி பாதுகாக்கப்படவேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை இப்போது மேற்கொண்டு வருகிறது.
ஏனென்றால், கடந்த ஐம்பது ஆண்டுகளில் மட்டும் உலக அளவில் "ஏமாளி' இன மக்களின் இரு நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. அவற்றை ஆவணப்படுத்தவும் முடியாத அளவுக்கு அம்மொழி களின் மக்களும் மறைந்து விட்டார்கள்.
ஒரு மொழியை, அந்த இனத்தின் மக்கள் எவ்வகை யிலும் தங்களின் வாழ்க்கைக்குப் பயன்படுத்தாமல் ஒதுக்கிவைத்தால், அந்த மொழி காலப்போக்கில் அழிந்துவிடும். அத்தகைய ஆபத்து தமிழ்மொழிக்கும் நேர்ந்திருக்கிறது என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே "யுனெஸ்கோ' விடுத்த எச்சரிக்கையை இங்கே யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
ஏனென்றால், நமது தமிழ்நாட்டில் தூய தமிழில் உரையாடுவதையே நகைச்சுவையாக்கி இளித்துக் கொண்டு இருக்கிற மக்களுக்கு "யுனெஸ்கோ' நிறுவனத் தின் எச்சரிக்கைகள் எல்லாம் தேவையே இல்லாத ஒன்றாகிவிட்டது.
மேலும் ஆடல், பாடல், இசை, இலக்கியம், கலைகள் என்கிற அளவில் தமிழ் மொழியை ஒரு பொழுதுபோக்கு மொழியாக மட்டுமே கட்டமைத்து உயர்த்திப் பிடிக்கிற வேலைகள் இப்போது வணிக உறுதிபெற்றுள்ளன. இது ஒருவகை சூதாட்டம். இதைச் செய்யும் சூதாடிகளின் முயற்சிகளை நாம் முனைந்து முறியடிக்க வேண்டும்.
ஓர் இனத்தின் தாய்மொழிமீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற அடக்கு முறைகளில் மிகவும் முதன்மையானதாகவும் இழிவானதாகவும் இருப்பது, அம்மொழியின் மீதான மதிப்பைக் குறைக் கும் வகையிலான தவறான பரப்புரை களாகும். இந்த உனது தாய்மொழி உனது வாழ்க்கைக்கு எந்தவகையிலும் பயன்படாது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால், அந்தக் கருத்து கோடிக்கணக்கான மக்களின் பொதுப்புத்தியாக வலிமைபெற்று, அம்மொழியைப் பேசுகின்ற இனத்தின்
மக்களைத் தாழ்வுமனப்பான்மைக்கும் குற்ற உணர்ச்சிக் கும் உள்ளாக்கி, உளத்தளவில் அவர்களை நொறுங்கச் செய்துவிடுகிறது. நிகழ்காலத் தமிழ்நாட்டின் மக்கள் அவ்வகையான தாழ்வு மனப்பான்மைகளுக்கும் குற்ற உணர்ச்சிகளுக்கும் ஆளாகியுள்ளனர்.
"சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்,' "தமிழைப் படித்தாலும் தமிழில் படித்தாலும் அது உன் வாழ்வாதாரத்திற்குப் பயன்படாது, "தமிழ்ப்புலவர் கள் என்றாலும், புலமை என்றாலும் அது வறுமைதான்' "கவிதை கட்டுரையா எழுதுகிறாய்? சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்?' என்பன போன்ற பல்வேறுவிதமான, தமிழுக்கு எதிரான, கருத்துருக்கள் அரைக்கிணறு தாண்டுகின்ற மூடர்களால் வலுவாக உருவாக்கப்பட்டுள்ளன.
அவையனைத்தும் அப்பாவிகளால் உண்மை களாகவும் நம்பப்பட்டு வருகின்றன. மானங்கெட்டு மல்லாந்து படுத்துக்கொண்டு வண்டி வண்டியாக எச்சில் துப்புகிறவர்கள் நம்மிடையே நிறைந்திருக்கி றார்கள்.
வறுமையும் புலமையும் சேர்ந்திருக்கும் என்றால் பிரதமர், குடியரசுத்தலைவர் உள்ளிட்ட மிகப் பெரிய கோடீசுவரர்கள் எல்லாம் ஏன் கவிதை எழுதவும் நூல்களை எழுதவும் முன்வருகிறார்கள்? தாகூர், டால்ஸ்டாய் போன்றவர்கள் மிகப்பெரிய கோடீசுவரர்கள். அவர்கள் ஏன் கவிதை எழுத வந்தார்கள் என்று எவரும் கேள்வி கேட்பதில்லை.
இந்த நாட்டில் தமிழ்ப்புலவர்கள், கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைத்தவிர மற்ற அனைவரும் நீச்சல் குளங்களுடன் கூடிய மாளிகைகளில் வாழ்ந்து வருவதைப்போன்ற ஒரு தோற்றம் இங்கே உருவாக்கப்படுகிறது.
எழுத முடியாதவர்களும், எழுதத் தெரியாதவர் களும், அல்லது ஏதோவொரு பகையுணர்வில் தமிழை விரும்பாதவர்களும், எழுதுவோரைத் தடுத்து அவர் களின் "மொழி முளை'யினைக் கிள்ளி எறிகிற உத்தியே இதுபோன்ற கருத்துருக்கள் ஆகும்.
மொழி பொதுவானது.அதற்கு வளமையையும் வறுமையையும் வேறு படுத்திப் பார்க்கத் தெரியாது. அதனால் தான் பணத்தில் இளைத்த பாரதியிடமும் கவிதை பிறந்தது, பணத்தில் கொழுத்த தாகூரிடமும் கவிதை பிறந்தது.
கொத்துக் கொத்தாகவும், கோடிக் கணக்கிலும் அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் அனைவருமே கவிஞர்களா? புலவர்களா? தமிழறிஞர் களா என்று எவரும் எவரிடத்தும் கேட்பதில்லை.
தமிழ் எழுத்துலகு சார்ந்து இயங்குகின்ற எழுதுகின்ற தனிநபர் ஒருவரின் விழிப்புணர்வற்ற பொருளாதாரத் தோல்வியை, தமிழ்மொழியின் தோல்வியாகப் பொதுமைப்படுத்திப் பேசுவது ஓர் இழிவான கருத்தியல் தொற்று நோயாக நம்மிடையே பரவிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
எழுதத் தொடங்கியவுடனேயே தனக்கு எல்லாம் கிடைத்துவிட வேண்டும் என்கிற பேராசைகளுடன் எழுத்துலகில் கால் பதிப்பவர்களும் தங்களின் தோல்வி நிலையில், தமிழ் நம்மைக் காப்பாற்றாது என்று கருத்துரைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
பல்வேறு வகையில் தனக்கு நேர்ந்து கொண்டிருக் கின்ற இடர்ப்பாடுகளுக்கு இடையிலேயும் பல லட்சக்கணக்கானவர்களை நமது தமிழ் வளமாக வாழ வைத்துக் கொண்டுதான் இருக்கிறது, அவர்களின் சமூக மதிப்புக்கு உரமூட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
தமிழ் தங்களை வாழவைக்கவில்லை என்று புலம்புகிறவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தமிழின் பாதுகாப்புக்கும் அதன் உரிமைகளுக்கும் எதை யுமே கிள்ளிப் போட்டதில்லை. ஆனால், தமிழ் என்பது எங்கள் உயிர் என்று தமிழின் உரிமைகளுக்கான போராட்டங்களில் தங்களை தாங்களே மாய்த்துக் கொண்ட பல நூற்றுக்கணக்கானவர்கள், படிக்காத உண்மையான உணர்வெழுச்சி கொண்ட தமிழர் களேயாவர். தமிழ் அவர்களுக்கு எவ்வகை ஊதியமும் தரவில்லை, சோறும் போடவில்லை. தமிழ் மொழியிடம் அவர்கள் அதையெல்லாம் எதிர்பார்க்கவும் இல்லை.
தமிழர்கள் தமிழைக் காப்பாற்றினால், தமிழ் தமிழர்களை இன்னும் சிறப்பாகக் காப்பாற்றும். இந்த சூத்திரத்தை, "வறுமையும் புலமையும்' குறித்துக் கவலைப்படுகின்ற, இருபத்து நான்கு மணி நேர, "வயிராளிகள்' புரிந்து கொள்ளவேண்டும்.
கிழக்கு - மேற்கு என்கிற திசைகளின் அடை யாளத்தோடு ஒற்றை நாடாக இருந்த பாகிஸ்தான், உருது மொழியா? வங்காள மொழியா? என்றெழுந்த உரிமைப் போராட்டங்களின் விளைவாகத்தான் உடைந்து பிரிந்து இரண்டு நாடுகளாக மாறின.
இத்தனைக்கும் இந்த இருவேறு மொழிகளுக்கும் உரியவர்கள் இஸ்லாமியர்கள்தான் என்றாலும்கூட, 'இறைவன் ஒருவன்' ஆனால் எங்கள் மொழி வங்காளம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து கிழக்குப் பாகிஸ்தானின் மக்கள் தங்களது வங்காள மொழியின் உரிமைகளுக்காக 1948-ஆம் ஆண்டு முதலே போராடத் தொடங்கி 1952-ஆம் ஆண்டு தங்களது போராட்டங்களின் உச்சங்களைத் தொட்டனர்.
பின்னர், 1970-களில் மேலும் தீவிரமாக அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களின் அடக்குமுறைகளில் மேற்குப் பாகிஸ்தான் ராணுவம் முப்பதுலட்சம் வங்காள மக்களைக் கொலைசெய்து மூன்று லட்சம் பாலியல் வன்கொடுமைகளையும் செய்தது. அப்படிப் பட்ட குருதிச் சகதி அடக்குமுறைகளில் உருவானதுதான் வங்காளநாடு.
உலக வரலாற்றில், ஓர் இனமக்கள் தங்கள் தாய்மொழியின் உரிமைகளுக்காக நடத்திய போராட் டங்களில் உருவாகி மலர்ந்த முதல் நாடு வங்காள நாடு என்கிற உண்மையின் அடிப்படையில்தான், அதாவது 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் நாள் வங்காள நாட்டில் டாக்கா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கி மேற்குப் பாகிஸ்தான், ஒன்பது வயது சிறுவன் உட்பட பல உயிர்க் கொலைகளைச் செய்த நாளின் நினைவாக, "உலகத் தாய்மொழி நாள்' கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று 1999-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் அவை தீர்மானம் நிறைவேற்றி அத்தீர்மானத்தை நடைமுறைக்கும் கொண்டுவந்தது.
உலக அளவில் மொழிப்பற்று மிக்க இனங் களில் மிகவும் குறிப்பிடத் தக்கது வங்காள இனம். அதனால்தான் இந்தியாவில்கூட வங்க மொழியில் அடுக்கடுக்கான உலகப் பேரறிஞர்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
"தங்களின் தாய்மொழியான தமிழையும் அதிலுள்ள இலக்கியங்களையும் மதிக்காமல், வேற்று மொழிகளுக்குத் தங்களை அடிமைகளாக்கிக் கொண்ட வர்கள், தமிழ் நாட்டில் இருக்கும் அளவுக்கு வேறு எந்த நாட்டிலும் இல்லை'என்றார், நோபல் பரிசு பெற்ற வங்கமொழிப் பெருங்கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.
"உலகத் தாய்மொழி நாள்' கொண்டாடுவது என்கிற ஐக்கிய நாடுகள் அவையின் கருத்துருவுக்குக் காரணமான வங்காளநாடு, உலக அளவிலான தேசிய இனங்களின் மொழி சார்ந்த விழிப்புணர்வுக்குப் பெருமளவில் வழிகோலியிருக்கிறது என்பதே வரலாற்று உண்மை.
ஆனால், "வங்காள நாட்டுக்கு (1948) முன்னதாகவே அதாவது 1937-ஆம் ஆண்டிலேயே இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழைக் காக்கும் மாபெரும் போராட்டத்தை நடத்தியது நமது தமிழ் நாடு. இந்த போராட்டம்தான் உலக வரலாற்றில் முதல்முதலாக நடந்த மொழிப் போராட்டமாகும். நடு நிலையோடு பார்க்கப் போனால் ஐ.நா.அவையானது தமிழ்நாட்டின் மொழிப்போராட்ட நாளினைத்தான் உலகத் தாய்மொழி நாளாக அறிவித்திருக்க வேண்டும் என்கிறார் மூத்த தமிழறிஞர் முனைவர், "எழுகதிர்' அரு.கோபாலன்.
"தமிழ்மொழி உரிமைப் போராட்டம் ஒரு நாட்டில் நடந்தது. வங்கமொழி உரிமைப் போராட்டத் தில் ஒரு நாடு அமைந்தது!' என்று இதற்குப் விடை சொல்லக் கூடும், ஐக்கிய நாடுகள் அவை!
நன்றி நண்பர்களே! நாளை நலமே விளையுமென்று நம்பிச் செயலாற்று வோம்!
தமிழ் எங்கள் உயிர் என்பதாலே - வெல்லும் தரமுண்டு தமிழர்க்கு இப்புவி மேலே