ஸ்ரீதேவி டில்லியில் தனியாக வளர்ந்த ஒரு சிறுமி. நிறம் இளங்கருப்பாக இருந்தாலும், அவள் ஒரு அழகான சிறுமி. "நீ வளர்ந்தபிறகு ஒரு டில்லிக்காரனை கல்யாணம் செஞ்சுக்கிட்டு இங்கயே இருக்கணும்.' சில நேரங்களில் தந்தையும் தாயும் அவளைக் கிண்டல் செய்வார்கள். "வயசான காலத்தில நாங்க ஊருக்குப் போய் செத்துப்போறோம்.'

ஸ்ரீதேவி தினமும் தன் தோழி பிங்கியுடன் சேர்ந்துதான் பள்ளிக்கூடத்திற்குச் செல்வாள்.

அவள் வெள்ளை நிறத்தில் இருப்பாள்.

கைகளும் கன்னங்களும் சதைப்பிடிப்புடன் இருக்கும்.

Advertisment

""ஸ்ரீதேவி... உனக்கு இன்னிக்கு பள்ளிக்கூடம் இல்லியா? பாரு... நேரம் வெளுத்திருச்சு.''

தாய் அருகில்வந்து கூறினாள். சௌதாமினி என்பது அவளுடைய பெயர். அவள் மகளுடைய போர்வையை முகத்திலிருந்து எடுத்தபோது, அவளின் அழகைத் தெரிந்துகொண்டாள். கைத்தறிக் கண்காட்சியின்போது தாய் வாங்கியதுதான் அந்த போர்வை. அன்று அங்கு விற்பனை செய்யப்பட்ட எல்லாவகையான துணிகளுக்கும் முப்பது சதவிகிதம் விலைக்குறைவு செய்யப்பட்டிருந்தது.

தாய் சமையலறைக்குள் நுழைந்து என்னவெல்லாமோ வேலைகளைச் செய்தாள். பணிப்பெண் வருவதற்குத் தாமதமாகும். ஆந்திராவைச் சேர்ந்த அவளுடைய பெயர் குப்பம்மா. தாய் திரும்ப வந்தபோதும், ஸ்ரீதேவி பழையபடியே படுத்திருந்தாள்.

Advertisment

""நல்ல கதை...'' தாய் கூறினாள்.

""பஸ் உனக்காகக் காத்திருக்கும்னு உன்னோட நினைப்பா?'' தாய் நெற்றியில் ஒரு விபூதி அடையாளத்தை வைத்துக்கொண்டிருந்தாள்.

அவள் கழுத்துவரை மூடப்பட்டிருந்த மகளின் போர்வையை விலக்கினாள். முழங்காலுக்கு மேலே ஏறிக்கிடந்த உடுப்பை கீழே இறக்கிவிட்டு அவள் மீண்டும் சுருண்டு படுத்தாள். அவள் ஒரு கனவுகாண ஆரம்பித்தாள். சம்பளம் கிடைத்ததும், தந்தை அவளை "கனாட் ப்ளே'ஸுக்கு அழைத்துச் செல்கிறார். அவளுக்கு ஒரு புதிய ஸ்கர்ட்டையும் டாப்ஸையும் வாங்கித் தருகிறார்.

""அவ இன்னும் கொஞ்ச நேரம் படுத்திருக்கட்டும்.'' தந்தை கூறினார்.

""மணி ஆறு ஆகல.''

தாய் தயாரித்த சூடான தேநீரைப் பருகியவாறு தந்தை அலுவலக விஷயங்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தார்.

""நீங்கதான் பொண்ணைக் கெடுக்குறீங்க.''

தாய் கூறினாள்: ""பிள்ளைங்க சீக்கிரமே கண் விழிக்கணும். அப்படின்னாதான் வீட்ல ஐஸ்வர்யம் உண்டாகும்.''

அவள் மகளுக்கு ஒரு சிறிய அடி கொடுத்தாள். அவள் எழுந்து தொடைகளுக்கு மத்தியில் கைகளை வைத்தவாறு தலையை குனிந்து அமர்ந்திருந்தாள். கணக்குப்பாடம் கற்றுத்தரும் லோபோ மாஸ்டரின் முகம் அவள் மனதில் தோன்றியது. அவர் எப்போதும் அதிக கடுமைத்தன்மையுடனே காட்சியளிப்பார்.

அவர் சிரிக்கமாட்டார். "பிரதம அமைச்சர்னு நினைப்பு...' ஸ்ரீதேவி மனதிற்குள் கூறினாள். மோட்டார் சைக்கிளில் ஏறிப்போகும்போது அவருடைய ஒரு மிடுக்கு! அவள் நினைத்தாள்: "அவருக்கு ஒரு பழைய மோட்டார் சைக்கிள் மட்டும்தானே இருக்கு? என அப்பாகிட்ட புதிய ஃபியட் கார் இருக்கு.

ஒருநாள் அதைச் சொல்லணும்.' அவள் முடிவு செய்தாள்.

""நீ பொழுது விடியறப்பவே கனவு கண்டுகிட்டி ருக்கியா?'' தாய் கூறினாள்: ""பஸ் வந்துட்டுப் போகட்டும்.''

வாசலில் பத்திரிகை வந்து விழும் சத்தத்தைக் கேட்டு, அலுவலகத்தைப் பற்றிய சிந்தனைகளில் மூழ்கி அமர்ந்திருந்த தந்தை சுயஉணர்வுக்கு வந்து கதவைத் திறந்து அங்கு சென்றார். தடித்து உயரமாக இருந்த ஒரு மனிதர்தான் ஸ்ரீதேவியின் தந்தை.

"நீ ஏன் இப்படி குள்ளமா இருக்கே?' பிங்கி கூறுவாள்: "உன் அப்பா எவ்வளவு உயரம்?'

"எனக்கு ஏழு வயசுதானே?' ஸ்ரீதேவி கூறுவாள்: "பத்து வயசுல எனக்கும் உயரம் வரும்னு அம்மா சொல்லுவாங்க.'

"என் அண்ணிக்கு உன் அளவுக்குத்தான் உயரம் இருக்கு.' பிங்கி கூறுவாள்: "அவங்க பார்க்கறதுக்கு எவ்வளவு அழகா இருப்பாங்க!'

பிங்கியின் அண்ணனுக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. பெயர் நந்தினி.

ஸ்ரீதேவி வெளியே சென்றமர்ந்தாள். பனி விழுந்து வாசல்பகுதி நனைந்திருந்தது. நகராட்சி சுத்திகரிப்புப் பணியாள் தெருவைப் பெருக்கி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான். முகத்தில் அம்மைத் தழும்புகள் இருந்த அந்த மனிதன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன். தெருவின் எதிர்பக்கத்திலிருந்த வேப்பமரத்தில் அமர்ந்திருந்த சிறிய பறவைகள் சத்தம் உண்டாக்கின. இலைகள் முற்றிலுமாக உதிர்ந்துவிட்ட அந்த மரத்தில் கிளைகள் மட்டுமே இருந்தன. பள்ளிக்கூட சோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் எலும்புக்கூடு அவளுக்கு ஞாபகத்தில் வந்தது. அந்த எலும்புக்கூட்டின் தோளில் ஒரு பறவை வந்து அமர்ந்திருப்பதாக அவள் கற்பனை செய்து பார்த்தாள்.

""என் ஸ்ரீதேவி... உன் விஷயத்துல நான் தோத்துட்டேன்.'' தாய் கூறினாள்: வாசல்ல போய் நீ என்ன செய்றே? நீ புத்தகத்தை எடுத்து வச்சிட்டியா? ஷூவுக்குப் பாலிஷ் போட்டுட்டியா? உன் டிஃபன் பாக்ஸ் எங்கே இருக்கு?''

ஸ்ரீதேவி மீண்டும் உள்ளே சென்று, பள்ளிக்கூட டைரியிலிருந்த டைம் டேபிளைப் பார்த்தவாறு புத்தகங்களை எடுத்துவைத்தாள். அதற்குப்பிறகு அவள் ஷூக்களை பாலீஷ் செய்தாள். அதற்குள் தாய் சாப்பிடும் மேஜையின்மீது பாலையும் உப்புமாவையும் கொண்டுவந்து வைத்தாள். அவள் மனமில்லா மனதுடன் அங்குபோய் அமர்ந்தாள்.

""என்னடீ நீ எதுவுமே பேசாம இருக்கே?'' தாய் கேட்டாள்.

""எனக்கு உப்புமா வேணாம்.'' அவள் பிடிவாதமாகக் கூறினாள்.

""பிறகு... மேடத்துக்கு என்ன வேணும்?

ss2

தெய்வத்தை மறந்துட்டு விளையாடாதே. நீ ஒரு பெண்பிள்ளை... நாளை ஒருத்தன்கூட சேர்ந்து போகப் போறவ!''

ஸ்ரீதேவி சிறிதும் விருப்பமில்லாமலே ஒரு கவளம் உப்புமாவை எடுத்துத் தின்றாள்.

""உன் டை எங்கேடீ?''

ஸ்ரீதேவி குளியலறையில் முகத்தைக் கழுவிக் கொண்டிருந்தபோது, தாய் உரத்த குரலில் அழைத்துக் கேட்டாள்.

அவள் சீருடையை அணிந்தாள். பாலீஷ் போடப்பட்ட ஷூக்களை அணிந்தாள். அவளுடைய தவிட்டு நிறத்திலிருந்த கோட்டின் பையில் அவளுடைய பள்ளிக்கூடத்தின் "லோகோ' இருந்தது. அவள் பேக்கை தோளில் இட்டவாறு வெளி யேறினாள்.

""பிள்ளைகள்னா கொஞ்சம் கவனமா இருக்கணும்.'' பின்னாலிருந்து தாய் கூறினாள். ""நீ இப்படி ஆமையைப்போல நடந்தா, பஸ் போயிடாதா?''

"பஸ் போய்ட்டா கஷ்டம் எனக்குதானே? தந்தை மனதிற்குள் கூறினார். "தாடியை சவரம் செய்யவோ குளிக்கவோ செய்யாம பன்னிரண்டு கிலோ மீட்டர் காரை ஓட்டி ஸ்ரீதேவியைப் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விடவேண்டியது நான்தானே?' ஸ்ரீதேவியின் பேருந்து அவள் போய் சேர்வதற்கு முன்பே போய்விட்டால், அவருடைய அன்றாடச் செயல்கள் முற்றிலும் தாறுமாறாகிவிடும். அலுவலகத் திற்குப் போவதற்குத் தாமதமாகும். புகைபிடிக்கும் சிகரெட்டின் எண்ணிக்கை அதிகமாகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சாம்பல் நிறத்திலிருக்கும்

ஒரு பழைய பேருந்துதான் ஸ்ரீதேவியின் பேருந்து. அதன் கண்ணாடிகள் எப்போதும் உடைந்தே காணப்படும். ஆண் பிள்ளைகள் செய்யக்கூடிய குறும்புத்தனம் அது.

பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்று தூரத்தில் பள்ளிக்கூடப் பேருந்துகள் வந்து நிற்கும். ஸ்ரீதேவியின் பேருந்தில் ஏறுவதற்காக அவளையும் பிங்கியையும் தவிர, வேறொரு ஆண் பிள்ளையும் அங்குவந்து காத்து நின்றுகொண்டிருப்பான். ஒன்பதாவது வகுப்பிலோ பத்தாவது வகுப்பிலோ படிக்கும் மாணவன். அவனுடைய ஷுக்களில் எப்போதும் மண்ணும் சேறும் படிந்திருக்கும். "என் கடவுளே! இந்த பையன் கொஞ்சம் ஷூக்களுக்குப் பாலீஷ் போட்டா என்ன?' ஸ்ரீதேவி நினைப்பாள்.

முதலில் வருவது கார்மல் பள்ளிக்கூடத்தின் பேருந்துதான். பொருட்களை வைக்கக்கூடிய மேற்தட்டினைக் கொண்டிருக்கும் ஒரு புதிய பேருந்து அது. ஒரு பள்ளிக்கூடப் பேருந்திற்கு அப்படியொரு மேற்தட்டு எதற்கென்று அவள் தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். இரண்டாவதாக வருவது ஏர்ஃபோர்ஸ் பள்ளிக்கூடத்தின் மங்கலான பச்சை நிறத்தைக்கொண்ட பேருந்துமூன்றாவதாக வருவது ஸ்ரீதேவியின் பேருந்து... அந்த முறை எந்த சமயத்திலும் மாறாது.

ஸ்ரீதேவி பேருந்து நிறுத்தத்தை அடையும்போது மேற்தட்டினைக் கொண்ட பேருந்து கடந்து செல்வதைப் பார்த்தாள். இடது பக்கத்திலிருந்த சில மாணவிகள் அவளைப் பார்த்துக் கைகளை அசைத்தார்கள். ஒரு பெண்பிள்ளை அவளைப் பார்த்து முகத்தால் வக்கணை காட்டினாள். வட்டமான முகத்தையும், வெட்டி சிறிதாக்கப்பட்ட தலைமுடியையும் கொண்ட அந்தச் சிறுமி எப்போதும் அவ்வாறு செய்வாள். "ஒரு நாகரிகமும் இல்லாதவ.' ஸ்ரீதேவி நினைப்பாள்.

பேருந்து நிறுத்தத்திலிருந்து பார்க்கும்போது பிங்கியின் வீடு தெரியும். சாலைக்கு அப்பாலிருக்கும் வீடியோ கேசட்கள் வாடகைக்குத் தரும் ஒரு கடைக்கு மேலே அவள் வசிக்கிறாள். ஒருமுறை ஸ்ரீதேவி அங்கு சென்றிருக்கிறாள். இரண்டு அறைகள் மட்டுமே இருக்கும் அந்த வீட்டில் பிங்கியும் அவளுடைய அப்பாவும் அம்மாவும் அண்ணனும் அண்ணியும் வசிக்கிறார்கள். பிங்கியின் அண்ணனுக்கு வீடியோ கேசட் கடையைத் திறப்பதற்குப் பணம் கொடுத்தது நந்தினியின் தந்தைதான். "அண்ணிக்கு என் அப்பாவும் அம்மாவும் எந்தவொரு நிம்மதியையும் தர்றதில்ல.' ஒருநாள் ஸ்ரீதேவியிடம் பிங்கி கூறினாள்: "அண்ணன் இன்னும் ஒரு வீடியோ கேமரா வாங்கறதுக்கான பணத்தை அண்ணி தரணும்னு அவங்க சொன்னாங்க.' வீட்டின் எல்லா விஷயங்களையும் பிங்கி ஸ்ரீதேவியிடம் கூறுவாள். நந்தினியைத் திருமணம் செய்துகொண்டு வந்து, மூன்று மாதங்கள் முடியவில்லை.

ஸ்ரீதேவியின் வீடு பொதுவாகவே பெரியது. அவளுக்கு படிப்பதற்கென்று தனியாக அறை இருக்கிறது.

"பிங்கி ஏன் வரல?' ஸ்ரீதேவி ஆச்சரியப்பட்டாள். ஏர்ஃபோர்ஸ் பள்ளிக்கூடத்தின் பேருந்தும் கடந்து சென்றது. வழக்கமான முறை தவறாமலிருந்தால், இனி வரவேண்டியது ஸ்ரீதேவியின் பேருந்துதான். அதற்குள் ஓட்டுநரின் இருக்கைக்கு அருகில் ஏசுவின் படம் கண்ணாடி போடப்பட்டு மாட்டப்பட்டிருக்கும். ஒன்பதாவது வகுப்பிலோ பத்தாவது வகுப்பிலோ படிக்கக்கூடிய அந்த மாணவன் ஒரு மரத்தில் சாய்ந்து நின்றவாறு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அதுவொரு அரசமரம். பறவைகள் இரையைத் தேடிக் கிளம்பிச்சென்றுவிட்டதால், அதன் கிளைகளில் அசைவே இல்லை.

"உன் தோழிக்கு இன்னைக்கு என்னாச்சு?'' மாணவன் கேட்டான்: ""அவ பஸ்ஸை தவறவிட்டுடுவாங்கறது உறுதி.''

அவனுடைய ஷூக்களை ஸ்ரீதேவி பார்த்தாள். இரு ஷூக்களிலும் சேறு காய்ந்து காணப்பட்டது.

அவளுக்கு வெறுப்பு உண்டானது. எந்தவொரு சுத்தமும் இல்லாத சிறுவன்... "சுத்தமும் உற்சாகமும் இல்லாம பார்க்கறதுக்கு ஸ்டைலா இருந்து என்ன பிரயோஜனம்?' ஸ்ரீதேவி நினைத்தாள். தோளிலிருந்த பள்ளிக்கூட பேக்கின் எடை காரணமாக அவள் வளைந்துபோய்க் காணப்பட்டாள்.

தூரத்தில் பிங்கியின் வீட்டிற்கு முன்னால் ஆட்கள் நின்றுகொண்டிருப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது. சாலையைக் குறுக்காகக் கடந்து சில ஆட்கள் அங்கு செல்வதையும் அவள் பார்த்தாள். வீடியோ கடை திறக்கப்படவில்லை. அடைக்கப்பட்ட கடைக்கு முன்னால் நின்றுகொண்டிருக்கும் ஆட்களைப் பார்த்து அவளுக்கு பதைபதைப்பு உண்டானது.

""பொண்ணு... இதோ... நம்ம பஸ் வந்திருச்சு.'' சிறுவன் அவளிடம் கூறினான். நான்கோ ஐந்தோ வருடங்கள் பழமையான பள்ளிக்கூட டையை அவன் கழுத்தில் கட்டியிருந்தான். அதன்காரணமாக அதற்கு நீளம் அதிகமாக இல்லாமலிருந்தது.

அவன் பேருந்திற்குள் ஏறி, ஸ்ரீதேவிக்காக கதவைத் திறந்து வைத்தான். அவள் பள்ளிக்கூட பேக்கைத் தோளில் தொங்கவிட்டவாறு தயங்கி நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் பிங்கியின் வீட்டிற்கு முன்னாலிருந்த ஆட்களின் கூட்டத்தின்மீது பதிந்து நின்றன. சாலையில் அந்த இடத்தைத் தவிர, வேறு எந்த இடத்திலும் ஆட்கள் இல்லை. நகரம் கண்விழிக்க ஆரம்பித்திருந்தது. அவ்வளவுதான். மற்ற பிள்ளைகள் பேருந்தில் ஏறாமல் நின்றுகொண்டிருக்கும் ஸ்ரீதேவியை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். "அவ வீட்டுப்பாடம் செய்திருக்கமாட்டா.' அவர்கள் தங்களுக்குள் கூறிக்கொண்டார்கள். "அதனாலதான் அவ தயங்கி நின்னுக்கிட்டிருக்கா.'

பேருந்து தூரத்தை அடைந்தபிறகும், சில சிறுமிகள் தலையை வெளியே நீட்டி ஸ்ரீதேவியைப் பார்த்தார்கள். அவள் வளர்ந்துகொண்டிருக்கும் பதைபதைப்புடன் பிங்கியின் வீட்டைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள். அங்குள்ள ஆட்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதைப்போல அவளுக்குத் தோன்றியது. அவள் பள்ளிக்கூடப் பையுடன் சாலையைக் குறுக்காகக் கடந்தாள். வேறொரு பள்ளிக்கூடப் பேருந்தும் அவளைக் கடந்து சென்றது. அதில் பிள்ளைகள் அமர்ந்து நிறைந்திருந்தார்கள். பேருந்து நிறுத்தத்திலிருந்து பார்க்கும்போது, பிங்கியின் வீடு மிகவும் அருகிலிருப்பதைப்போல தோன்றும். நடக்க ஆரம்பிக்கும்போதுதான் தூரமே புரியும்.

சாலையிலும் கடையின் வாசற்பகுதியிலும் நின்றுகொண்டிருக்கும் ஆட்களில் சிலரை ஸ்ரீதேவிக்கு நன்கு தெரியும். வடஇந்தியர்கள் அணிவதைப் போன்ற சட்டை அணிந்திருக்கும் ஆள் அவளுடைய வீட்டிற்கு அருகிலிருக்கும் ரேஷன் கடையின் உரிமையாளர். தலையில் பெரிய பரு இருக்கும் ஆள் அவளுக்கு நன்கு தெரிந்த சிறுமியின் தந்தை. அவள் ஆறாவது வகுப்பில் படிக்கிறாள். ஆனால், பார்க்கும்போது எட்டாவது வகுப்பில் படிப்பதைப் போல தோன்றும். அந்த அளவுக்கு சரீர வளர்ச்சி.

தோழியின் வீட்டில் ஏதோ ஆபத்து உண்டாகி யிருக்கிறது என்பதை ஆட்களின் முக வெளிப்பாடு களிலிருந்து அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவள் சாலையில் தயங்கி நின்றாள். ஆட்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதை அவள் கவனித்தாள்.

""போலீஸ் வர்றவரைக்கும் யாரும் உள்ளே போகக்கூடாது.'' ஒரு இளைஞன் கூறினான்.

"போலீஸுக்கு இங்க என்ன வேலை? நடந்தது நடந்துபோச்சு. இனி ஊர் நடப்பின்படி செய்யவேண்டியதைச் செய்யுங்க.''

""இருந்தாலும்... அந்த இளம்பெண்ணோட ஒரு தலைவிதி... கல்யாணமாகி மூணு மாசம்கூட முடியல...'' ரேஷன் கடையின் உரிமையாளர் கூறினார்.

ஸ்ரீதேவி மிகவும் பதைபதைப்படைந்தாள்.

அவள் ஆட்களுக்கு மத்தியில் வீட்டிற்குள் நுழைய முயற்சித்தாள்.

""கண்ணு... உள்ளே போகாதே.'' தலையில் பரு இருந்த ஆள் கூறினார். அவர் ஸ்ரீதேவியை அடையாளம் தெரிந்துகொண்டார்.

உள்ளே சாளரத்தில் பிங்கியின் முகத்தைப் பார்த்ததும், ஒரே தாவலில் ஸ்ரீதேவி அங்கு சென்றாள்.

தோழியின் கண்களில் நடுக்கம் இருந்தது. ஸ்ரீதேவியை முதன்முறையாகப் பார்ப்பதைப்போல அவள் கண்களை திறந்து வைத்துக்கொண்டு பார்த்தாள்.

முடி பற்றி எரிந்த நந்தினியின் தலை மட்டும் தெரிந்தது. சரீரத்தின் எஞ்சிய பகுதியும் முகமும் ஒரு வெண்மைநிறத் துணியால் மூடப்பட்டிருந்தன.

""பேண்ட் இசை முழங்க, குதிரைமேல ஏறிப்போய் தாலி கட்டிக்கிட்டு வந்தது இதுக்குதான்.'' வெளியேயிருந்து இளைஞன் உரத்த குரலில் கூறினான்.

யாரும் எதுவும் பேசவில்லை.

ஸ்ரீதேவி மேலும் கீழும் மூச்சுவிட்டாள். ஓடியும் நடந்தும் எப்படியோ அவள் வீட்டையடைந்தாள்.

வீட்டிற்கு முன்னாலிருந்த வேப்ப மரங்களில் மீண்டும் இலைகள் தளிர்த்துக்கொண்டிருந்தன. குளிர்காலம் முடிந்து, ஆகாயம் அடர்த்தியான நீலநிறத்தில் தெளிவாக இருந்தது. வசந்தத்துடன் சேர்ந்து ஹோலி பண்டிகை வந்துசேர்ந்தது. தொடர்ந்து நீளம் அதிகரித்துக்கொண்டிருந்த பகல்களும், வெப்பமாகக் காணப்பட்ட ஆகாயமும் கோடைகாலத்தின் வருகையை அறிவித்தன.

அவ்வாறு இருக்க, ஒருநாள் ஸ்ரீதேவி தன்னுடைய வெளுத்த கோடைகால சீருடைக்குப் பின்னால், நனைந்த குங்குமத்துடன் வீட்டிற்குள் நுழைந்து வந்தாள். அவளுடைய கண்களிலும் கன்னங்களிலும் கண்ணீர் காட்சியளித்தது.

""அழாதே.'' தாய் கூறினாள்: ""மகளே...

நீ பெரியவளாயிட்ட. பெண் பிள்ளைங்க வயசுக்கு

வர்றப்போ இது சாதாரணமா நடக்கக்கூடியதுதானே?''

ஸ்ரீதேவியை தாய் சமாதானப்படுத்தினாள். ஆனால், அவளுடைய அழுகை நிற்கவில்லை. அவளுடைய கண்களில், ஒரு கோவில் புறாவின் கண்களில் இருக்கும் பயம் காணப்பட்டது.

ஸ்ரீதேவியின் பயத்திற்கான காரணம் என்னவென்பது அவளுடைய அன்னைக்குத் தெரியவில்லை.

""எப்போதும் நான் குழந்தையாவே இருந்தா போதும்.'' தூக்கத்தில் கண்ணீருடன் அவள் கூறினாள்: ""எந்தச் சமயத்திலும் நான் பெரியவளாக வேணாம்...''