"உறுவ'யில் தனியாக இருக்கும் மருத்துவமனையின் மூன்றாவது பிளாக்கில் நான் படுத்திருக்கிறேன். இந்த அறையில் நான் தனியாக இருக்கிறேன். வேறு இரண்டு பேர் இருந்தார்கள். ஆனால், நேற்றும், நேற்றைக்கு முந்தைய நாளும் அவர்கள் ஒவ்வொருவரும் இறந்துவிட்டார்கள். இப்போது எனக்கும் பயம் தோன்றுகிறது. இங்கு இப்படிப் படுக்க ஆரம்பித்து இது ஏழாவது நாள். வீட்டிற்கு எழுதியிருந்தேன். எனினும் யாரும் வந்து பார்க்கவில்லை. ஒருவேளை... என் கடிதம் அங்குபோய்ச் சேராமல் இருக்கலாம்.
இந்த வைக்கோல் படுக்கையில் படுத்துக்கொண்டு திறந்திருந்த சாளரத்தின் வழியாகப் பார்த்தால், வெளியே நடக்கக்கூடிய அனைத்தையும் பார்க்கமுடியும். உறுவ மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரம்... எந்தச் சமயத்திலும் குறைந்திராத மக்கள் கூட்டத்தின் வெள்ளம்தான் அந்த சாலைகளில்... பிளாக்குகளிலும் ஷெட்களிலுமாக இங்கு கிடந்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் எழுபது நோயாளிகளின் "யோக அதிர்ஷ்ட'த் தைப் பற்றி அவர்கள் சிந்திப்பார்களா?
உயிருக்கு உற்சாகம் தரும் குளிர்ந்த காற்றைப்போல ஹெலன் அறைக்குள் நுழைந்து வந்தாள். அப்போது நான் கண்களைமூடிப் படுத்திருந்தேன். அம்மைக் கொப்புளங்கள் பழுத்துக் கிடக்கும் என் நெற்றியில் கையை வைத்தபடி அவள் அழைத்தாள். ""ஓ... பாயி...'' அந்த கரத்தின் ஸ்பரிசம் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது.
அந்த அழைப்பு, இனிமையானதாகவும்... ரொட்டியையும் பாலையும் அலமாரியில் பத்திரமாக அடைத்து வைத்துவிட்டு, அவள் அறையிலிருந்து செல்வதற்கான முயற்சியில் இருந்தாள். அப்போது பலவீனமான குரலில் நான் அழைத்தேன். ""ஹெலன்...''
அவளுக்கு சிரமம் இருந்தது. அவள் எனக்கு அருகில் வந்தால் மட்டும் போதாது. என்னைப்போல எவ்வளவோ வேறு நோயாளிகளும் இருக்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் ஹெலன் இரவுநேர உணவைக் கொண்டு போய்க் கொடுத்துக்கொண்டிருக்கிறாள்.
அவள் மிகவும் சிரமப்பட்டுப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நேரமிது. எனினும் நான் அழைத்ததும். அவள் திரும்பிவந்தாள்.
""நீங்க என்னைக் கூப்பிட்டீங்க இல்லையா?''
""ஹெலன்... இங்கருத்து நான் சீக்கிரம் போக முடிஞ்சா...'' எல்லா நோயாளிகளும்கூறக் கூடிய ஒரு குறையை நானும் கூறினேன். அப்படிப்பட்ட புகார்களையும் வேண்டுகோள்களையும் அவள் எவ்வளவு கேட்டிருப்பாள்! புன்சிரிப்புடன் ஹெலன் அமைதியான குரலில் கூறினாள்: ""நீங்க சீக்கிரம் குணமாயிடுவீங்க.''
""இன்னும் எவ்வளவு நாள் தேவைப்படும்?''
""கொஞ்சம் பொறுமையா இருங்க... கொஞ்சம்...'' இவ்வாறு கூறிவிட்டு, அவள் வெளியே சென்றாள்.
தாங்கமுடியாத அளவுக்கு பேரமைதி... முழு உடலும் வலித்தது. அது பொங்காமல் ஒரு அங்குல இடம்கூட மீதமில்லை. இது என்ன ஒரு கஷ்டம்! இதே நிலையில் இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கவேண்டியதிருக்கும்!
நீர் நிறைக்கப்பட்டு வைத்திருந்த தொட்டியை நான் பார்த்தேன். என் முகம்! கடவுளே... என்னையே என்னால் நம்பமுடியவில்லையே! முழுவதுமாக பொங்கியிருக்கிறது! அவை பழுத்துக் கிடக்கின்றன. "இமிட்டேஷன்' முத்துகள் அள்ளிச் சிதறவிடப்பட்டிருப்பதைப்போல தோன்றியது. உடல்நலக்கேடு சரியானாலும், கொப்புளத்தின் அடையாளங்கள் அங்கேயே இருக்குமோ? அப்படி யென்றால் என் கதை முடிந்தது.
சாயங்காலமானது. வரதன் வந்து லாந்தர் விளக்கைப் பற்றவைத்து, அறையில் தொங்கவிட்டான். வரதன் இங்கிருக்கும் துப்புரவுத் தொழிலாளி. அவனுடைய ஜாதியில் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இங்கு நிறைபேர் இருக்கிறார் கள். அவர்கள் இல்லையென்றால், உறுவயும் இல்லை. மருத்துவமனையுமில்லை. உயிர் உள்ளபோது பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியதும், உயிர் போனபிறகு நீக்கவேண்டியதும் அவர்கள்தான்.
இந்த துப்புரவுத் தொழிலாளிகள்! அவர்களுக்கு பயமில்லையா? யாருக்குத் தெரியும்? ஆனால், சில நேரங்களில் அவர்களுக்கும் இந்த உடல்நலக்கேடு வருகிறது. அவர்களும் இறக்கிறார்கள். எனினும், அதற்குப்பிறகும் இந்தப் பணிக்கு அவர்கள் இங்கு நிற்கிறார்கள். உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் யாரும் இதற்கு வரமாட்டார்களே!
இரவில் கஞ்சியை எடுத்துக்கொண்டு கம்பவுண்டரின் வீட்டிலிருந்து ஹெலனும் குழுவினரும் புறப்படுவார்கள். அங்கு தெரியக்கூடிய விளக்கு அவர்களுடையதுதான். சார்லி ஊறுகாயை எடுத்துக்கொள்வான். ஹெலனும் மேரியும் கஞ்சியை... ஏழு பிளாக்குகளிலும் இரண்டு ஷெட்களிலும் இருக்கும் எழுபதிற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அவர்கள் பரிமாறவேண்டும்.
அவர்களுடைய கைகள் வலிக்காதா? அவர்கள் எப்போது தூங்குவார்கள்? பொழுது புலர்வதற்குமுன்பே எழுந்து, மீண்டும் நோயாளிகளின் உணவிற்கான விஷயத்தைப் பார்க்கவேண்டும்.
வழக்கம்போல கம்பவுண்டரும் மனைவியும் இரவு வேளையில் மருந்து தந்துவிட்டு, சில ஆறுதல் வார்த்தைகளையும் வேடிக்கைகளையும் கூறிவிட்டுச் சென்றார்கள். அவர்களுக்கு என்ன ஒரு பொறுமையும் பக்குவத்தன்மையும் இருக்கின்றன? நோயின் நிலைமைக்கேற்றப்படி பலருக்கு பலதரப்பட்ட மருந்துகளைத் தரவேண்டும். அது தவறினால் விஷயமே முடிந்தது. ஆனால் அவர்களுக்கு எந்தச் சமயத்திலும் தவறு நேராது.
ஒரு கடிகாரத்தின் முட்களைப்போல கவனமாகவும் சரியான நேரத்திலும் அவர்கள் பணியைச் செய்தார்கள். அவர்கள் எந்தவொரு புகாரும் கூறுவதில்லை. முன்பு அவர்கள் தனியாக இருந்தார்கள். இப்போது வயதிற்கு வந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். உதவிக்கு- சார்லியும் ஹெலனும் மேரியும். எல்லா வருடங்களிலும் இந்த நோய் இங்கு உண்டாகும் என்று கம்பவுண்டர் கூறுகிறார்.
எனக்கு சிறிதுகூட தூக்கம் வருவதில்லை. என்ன ஒரு வெப்பம்! இந்த வைக்கோல் படுக்கையில் படுத்திருக்கும்போது, சரீரம் முழுவதும் வலிக்கிறது. வெளியே அருமையான காற்று இருக்கிறது. வராந்தாவில் சிறிது நேரம் போய் நிற்பதால் சிறிதும் கெட்டுவிடப்போவதில்லை.
கம்பவுண்டர் தூங்கவில்லை என்று தோன்றுகிறது. அவருடைய அறையில் வெளிச்சம் இருக்கிறது. ஒருவேளை.... பைபிள் வாசித்துக்கொண்டிருக்கலாம். ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்குச் செல்வதற்கு அவருக்கு நேரம் கிடைப்பதில்லை. போகவேண்டுமென்று ஆசைப்படுவதுமில்லை. எனினும், அவருக்கு என்ன ஒரு பக்தி! குருடனையும் குஷ்டரோகியையும் காப்பாற்றிய ஏசுவைப் பற்றிப் பேசும்போது, அவர் அழுதுவிடுவதை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.
நான் நினைத்துப் பார்க்கிறேன்- ஒரேயொரு வீடுகூட மீதமில்லை. எங்கும் அம்மை இருக்கிறது. மரணமும் அப்படியொன்றும் குறைவாக இல்லை. இந்த மிகப்பெரிய நோய்க்கு ஒரு எதிர்மருந்து இல்லையா? இப்போதே நகராட்சிக்கு மிகப்பெரிய தொகை செலவாகிவிட்டிருக்கிறது. தகவல் கிடைக்கக்கூடிய இடங்களிலிருந்தெல்லாம் நோயாளிகளைத் தேடிப்பிடித்து அவர்கள் இங்கு கொண்டுவந்து சேர்க்கி றார்கள். ஆட்கள் தினந்தோறும் வந்துகொண்டிருக்கி றார்கள். பிளாக்குகளில் இடமில்லையென்ற நிலை வந்ததும், அவர்கள் ஷெட்களைக் கட்டினார்கள். ஆனால், கம்பவுண்டராலும் குடும்பத்தாலும் முடிந்தவரைக்கும் எவ்வளவுபேரை பார்த்துக்கொள்ளமுடியும்?
தலைவலியையும் காய்ச்சலையும் பொறுத்துக் கொள்ள முடியாத நிலை வந்தபோதுதான், நான் அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு மூன்று நாட்கள் படுத்திருக்கவேண்டிய நிலை உண்டானது. வெப்பநிலை நூற்று ஆறு டிகிரிவரை உயர்ந்திருந்தது. நான்காவது நாள் காலையில் காய்ச்சல் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. நான் சந்தோஷப்பட்டேன். நான் இங்கிருந்து சீக்கிரமாகப் போய்விடலாமே?
இரவில் தொடையிலும் முகத்திலுமெல்லாம் சொறிந்துகொண்டிருந்தேன். காலையில் பார்த்தபோது, அங்கெல்லாம் சிறிய கொப்புளங்களைப் போன்ற அடையாளங்கள் இருப்பதைப் பார்த்தேன். கொசு கடித்ததாக இருக்கும் என்று சமாதானப் படுத்திக்கொண்டேன். ஆனால், டாக்டர் வந்தபோது தான் விஷயமே தெரிந்தது. என் முகத்தையே சிறிதுநேரம் கூர்ந்து பார்த்துவிட்டு, அவர் கூறினார்:
""பயப்பட வேணாம்... அம்மை நோய்.''
அம்மை! அதைக்கேட்டதும் நான் சற்று அதிர்ச்சி யடைந்து விட்டேன். டாக்டர் சட்டையை உயர்த்தி இங்குமங்குமாகப் பார்த்தார். அம்மையேதான்! சந்தேகமே இல்லை. இனி நான் என்ன செய்வது?
""உங்களை இங்க படுக்க வச்சிருக்க வழியே இல்ல. ஒண்ணு- நீங்க வீட்டிற்குப் போகணும். இல்லன்னா தனியா இருக்கற மருத்துவமனைக்குப் போயே ஆகணும்.''
நான் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகிவிட்டேன். இங்கு பார்த்துக்கொள்வதற்கு யாருமில்லை. அப்படியே இருந்தாலும், நகராட்சிக்காரர்களுக்குத் தெரியவந்தால், அது குற்றச் செயலும்கூட. ஊருக்கு என்னால் போக இயலாது. தனிமையில் இருக்கக்கூடிய மருத்துவமனைதான் சரணம்! என் தீர்மானத்தைக் கேட்டதும், டாக்டர் மீண்டுமொருமுறை கூறினார்: ""அங்க கொஞ்சம் சிரமங்களைப் பொறுத்துக்க வேண்டிய நிலைமை வரலாம். நீங்க பயப்பட மாட்டீங்க இல்லியா?''
இல்லை... நான் பயப்படவில்லை... நான் உறுதியாக தீர்மானித்தேன்.
உறுவயின் மைதானங்களிலொன்றில் பெரிய ஒரு கட்டடம்... அங்கு சில நோயாளிகளும் அவர்களைப் பார்த்துக்கொள்வதற்கு டாக்டர்களும் ஊழியர்களும் நர்ஸுகளும். என் கற்பனையிலிருந்த தனிமைச் சூழல்கொண்ட மருத்துவமனையாக அது இருந்தது. கிட்டதட்ட இதேபோன்றதுதான். பிறகு நான் எதற்குத் தயங்கவேண்டும்?
ஆம்புலன்ஸ் வந்தது. நான் அதில் ஏறினேன். உச்சி வெயிலின் கடுமைத்தன்மையில்கூட ஆரவாரம் குறைந் திராத தெருக்களின் வழியாக அது உறுவயிக்கு பாய்ந்து சென்றது. ஆம்புலன்ஸில் என்னைத் தவிர, கறுத்த அசுத்தமான ஒரு பெண்ணும் இருந்தாள். கார் வளைவுகளையும் திருப்பங்களையும் கடந்து சென்றபோது, அது பயந்து உரத்த குரலில் சத்தம் போட்டுக்கொண்டிருந்தது.
ஆம்புலன்ஸ் ஒரு இடத்தில் நின்றபோது, நான் வெளியே பார்த்தேன். வெறுமையாகக் கிடந்த ஓரிடத்தில் சில சிறிய பிளாக்குகளும் ஷெட்களும்... அவற்றில் ஒன்றுக்கு முன்னால் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். ஆம்புலன்ஸைச் சுற்றி, அசோகவனத்தில் சீதைக்குக் காவலாக நின்றுகொண்டிருந்தவர்களின் சில நண்பர்கள் வந்து நின்றார்கள்.
அப்படியென்றால்... அதுதான்... தனியாக இருக்கும் மருத்துவமனை... அதாவது- அய்ஸலேஷன் ஹாஸ்பிட்டல்! என் இதயம் சத்தமாகத் துடித்தது. டாக்டருமில்லை... நர்ஸுமில்லை... வரதனின் நண்பர்கள் ஒரு காட்சிப் பொருளைப் பார்ப்பதைப்போல என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் மொழி எனக்குப் புரியவில்லை. என் மொழி அவர்களுக்கும்!
சாதாரண நிலையைவிட சுமாராக இருக்கக்கூடிய வகையில் ஆடைகள் அணிந்திருந்த ஒரு பெண் அப்போது அங்கு வந்தாள். என்னை அவளிடம் ஒப்படைத்துவிட்டு, ஆம்புலன்ஸ் சென்றுவிட்டது. என் கஷ்ட நிலையைக் கேட்டபோது, அவளுக்குக் கவலை உண்டானது. அப்போது அவளுடைய கணவரும் அங்குவந்தார்- கம்பவுண்டர்.
அங்குள்ள நிலைமைகளை அவர்கள் எனக்கு விளக்கிக் கூறினார்கள். அதைக் கேட்பதற்கு முன்பே எனக்கு களைப்பு அதிகமாக ஆரம்பித்தது. கேட்டதும் முழு களைப்பு உண்டாகிவிட்டது. பிளாக்குகளில் ஏராளமான நோயாளிகள் இருந்தார்கள்- ஷெட்டில் மட்டுமே இடமிருந்தது!
அந்த ஷெட்! வாழ்க்கையிலேயே முதன்முறையாக நான் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பார்க்கிறேன். காய்ந்து வெடித்துக் கிடக்கும் புறம்போக்கு நிலங்களைப் போலிருந்த அவர்களுடைய சரீரம்... அந்த வாசலுக்கருகில் நான் செயலற்ற நிலையில் அமர்ந்திருந்தேன். என் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்து விழுந்துகொண்டிருந்தது. தாயையும் வீட்டிலுள்ளவர்களையும் நான் நினைத்துப் பார்த்தேன். நோய்க் கிருமிகள் பரவாமலிருப்பதற்காக ஷெட்டின் நான்கு பக்கங்களிலும் சிதற விடப்பட்டிருந்த பொடியில் சிறுநீர் பெய்யும்போது உண்டாகக்கூடிய கெட்ட நாற்றம் என்னை மூச்சடைக்கச் செய்தது.
அந்த நிலையிலேயே அந்த இரவுப் பொழுதை ஷெட்டில் கழித்தேன். வேறு எந்தவொரு வழியும் இல்லாமலிருந்தது. அங்கு கிடைத்த அனுபவங்கள்! வேண்டாம்... அவை எதையும் கூறாமல் இருப்பதே நல்லது. இதற்குமுன்பும் எவ்வளவோ பேருக்குக் கிடைத்திருக்கக்கூடிய அனுபவங்கள்தான்! இனியும் அனுபவங்கள் கிடைக்கும்.
இரக்ககுணம் படைத்த கம்பவுண்டர் மூன்றாம் பிளாக்கிலிருந்த ஒரு அறைக்கு எனக்கு சீக்கிரம் ஒரு இடமாற்றம் தராமல் இருந்திருந்தால், என் நிலைமை சிரமமானதாக ஆகியிருக்கும். இங்கும் கஷ்டங்களும் தாங்கிக்கொள்ளமுடியாத விஷயங்களுமில்லை என்பதல்ல. ஷெட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நல்ல நிலைமை என்பதே உண்மை.
பாலைவனத்திற்கு மத்தியிலிருக்கும் பச்சையைப் போல பிளாக்குகளுக்கு மத்தியில் கம்பவுண்டரின் வீடு இருந்தது. அந்த பச்சை காய்ந்தால், இங்குள்ள வாழ்க்கையும் அஸ்தமனமாகிவிடும். கம்பவுண்டருக்கு கோட்டோ முழுக்கால் சட்டையோ எதுவுமில்லை. பட்டமும் இல்லை. ஆனால், இங்கு எல்லாருக்கும் அவர் முக்கிய மனிதராக இருந்தார். மிகவும் மோசமான நிலையிலிருக்கும் நோயாளிகளை சில நேரங்களில் இரவு முழுவதும் தூக்கத்தை விலக்கிவைத்துவிட்டுக்கூட அவர் பார்த்திருக்கிறார். மனிதன் புழுவைப்போல நெளிந்து மரணமடைவதை அவர் பார்க்க ஆரம்பித்து எவ்வளவோ வருடங்களாகி விட்டன! எனினும், இப்போதும் அந்த காட்சியைப் பார்க்கும்போது, அவருடைய கண்களில் நீர் நிறைவதுண்டு. சிலர் கூறுவார்கள்- அவர் பலவீனமான இதயத்தைக் கொண்டவர் என்று. இருக்கலாம்...
ஒருமுறை நல்ல வசதிபடைத்த ஒரு புகையிலை வியாபாரி நோய் குணமாகிச் செல்லும்போது, சார்லிக்கு இரண்டு ரூபாய்களை சந்தோஷத்துடன் கொடுத்தார். அவன் அது வேண்டுமென்று எதுவும் கேட்கவில்லை. ஆனால், கம்பவுண்டர் அதை திரும்பக் கொடுக்கச் செய்தார். அவர்கள் பணி செய்வதற்கு நகராட்சியிலிருந்து சம்பளம் கிடைக்கிறது. பிறகு... ஆட்களிடமிருந்து எதற்குப் பணம் வாங்கவேண்டும்? அது தவறல்லவா? கம்பவுண்டர் அப்படித்தான் கூறினார். இந்த சம்பள விஷயத்தை அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர் கூறுவதுண்டு. ஆனால், தொகை எவ்வளவு என்று கேட்டால், சிரித்துக்கொண்டே அவர் கிளம்பிச் சென்றுவிடுவார். அதிகமாக எதுவுமிருக்காது என்பது மட்டும் உண்மை.
கம்பவுண்டரின் வீட்டிலும் விளக்கு அணைந்தது. ஆனால், ஏழாவது பிளாக்கிற்காக இருக்கவேண்டும்- அவர் லாந்தர் விளக்கை எடுத்தவாறு போய்க்கொண்டிருந்தார். ஓ... சரிதான். அந்த வயதான கொங்கணிக்காரர்...
அவருடைய நிலைமை மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. இன்று முடியுமென்று தோன்றவில்லை. சரீரம் முழுவதும் கீறல்களாக இருந்ததால், சேம்பின் இலையில் படுக்கவைத்திருப்பதாக வரதன் கூறினான். பெரிய பணக்காரர்போல... ஆனால், அதனால் என்ன? நேற்று அவருடைய வீட்டிலிருப்பவர்கள் வந்திருந்தார்கள். மார்க்கெட்டிற்கு அருகில் காரை நிறுத்தினார்கள். "வாடகை'க்கு எடுத்த ஒரு கூலியாளை மட்டும் இங்கு அனுப்பினார்கள். பரவக்கூடிய நோயாயிற்றே...
நேரம் அதிகமாகிவிட்டதென்று தோன்றுகிறது. நான் உறங்கவேண்டும்.
ஒரு வாரம் கடந்துவிட்டது. மெதுவாக ஊர்ந்தாலும், நாட்கள் நீங்கிக்கொண்டிருந்தன. இங்குவந்து பதினான்கு நாட்கள் ஆகிவிட்டன. நேற்று நான் குளித்தேன். இன்னும் இரண்டு நாட்கள் கடந்தால், நான் இங்கிருந்து செல்வேன்.
இன்று காலையில் ஒரு சம்பவம் நடைபெற்றது. புதிய ஷெட்டிற்கு நேற்று ஒரு சிறுவனைக் கொண்டுவந்திருந்தார்கள். அவனுடைய கூப்பாடு காரணமாக இரவில் யாருமே உறங்கவில்லை. ஒரு பயங்கர வகையிலுள்ள உடல் நலக்கேடு என்று கூறினார்கள். வாயிலிம் மூக்கிலுமிருந்தெல்லாம் ரத்தம் வழிந்துகொண்டிருந்ததாம்!
ஏதோவொரு பெண் ஷெட்டிற்கு முன்னால் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுதான் நான் வரதனை அழைத்து விசாரித்தேன். தலையை ஆட்டியவாறு ஒரு மரத்துப்போன குரலில் அவன் கூறினான்:
""டெட் பாடி ஸார்... டெட் பாடி...''
இப்படிப்பட்ட காட்சி இங்கு அபூர்வம்... இறந்தால் யாரும் வர மாட்டார்கள். அந்தப் பெண்ணின் ஐந்து பிள்ளைகளில் இறுதியாக இருந்தவன் போய்விட்டான். இதற்கு முன்பிருக்கும் நான்கு பேரின் மரணமும் அம்மை காரணமாகத்தான் நடந்திருக்கிறதுபோல... பாவம்... அந்த தாய் எந்த அளவுக்கு வேதனையை அனுபவித்திருப்பாள்!
காலை வேளைக்கான பால், ரொட்டியுடன் ஹெலன் அப்போது அறைக்குள் வந்தாள். அவளுடைய கண்கள் கலங்கியிருந்தன. அந்தப் பெண்ணின் அருகிலிருந்து அவள் வந்திருக்கலாம். நாங்கள் எதுவும் பேசவில்லை. போகும்போது முத்தைப் போன்ற ஒரு கண்ணீர்த் துளி "ட்ரே'யிலிருந்த ரொட்டித் துண்டில் விழுவதை நான் பார்த்தேன்.
சாயங்காலம் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் கம்பவுண்டரின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். சற்று உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என்பதைப்போல தோன்றியது. இதுவரை அப்படிப்பட்ட யாரும் அங்கு வருவதை நான் பார்த்ததில்லை. அவர்கள் புறப்படும்போது, கம்பவுண்டரிடம் என்னவோ கூறுவதையும், தாயும் தந்தையும் தலைகுனிந்து நின்றுகொண்டிருக்கும் மகளை கவலையுடன் பார்ப்பதையும் நான் பார்த்தேன்.
கம்பவுண்டர் வந்தபோது, ஒரு தமாஷ் என்பதைப்போல நான் கேட்டேன்: ""என்ன சார்... மகளுக்கு ஒரு திருமண ஆலோசனை வந்திருக்குபோல தோணுதே?''
அவர் எதுவும் கூறவில்லை. என்னவோ சிந்தித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கடந்தவுடன், விரக்தியும் கவலையும் நிறைந்த குரலில் அவர் கூறினார்.
""நான் அவகிட்ட சொன்னேன் சார். அதிகபட்சம் இன்னும் எத்தனை வருஷம் நாங்க இங்க உயிரோட இருக்கப்போறோம்? நம்மோட காலத்திற்குப் பிறகும் இங்க இந்த நோய் இருக்கும். அது மட்டும் உண்மை. அப்போதும் ஆட்களை கவனிச்சிக்க நாம இங்கேயே இருப்போமா? இல்லை... நாம போய்ட்டா, வேற யாராவது வருவாங்க. அவங்களும் இறப்பாங்க. அவங்களுக்குப் பிறகும் ஆட்கள் வருவாங்க.
அப்படித்தானே நடக்கும்?''
அவர் திடீரென்று கூறுவதை நிறுத்தினார்.
அந்த முகத்தில் சிந்தனை உண்டாக்கிய சுருக்கங்கள் விழுந்திருந்தன. எங்கோ தூரத்தைப் பார்த்தவாறு, அந்த தந்தை தொடர்ந்து கூறினார்:
"அதுக்குப் பிறகுதான் அவகிட்ட அதிகமா எதுவும் சொல்லல. சொன்னா அவ அழுவா. அவளோட குணம் அதுதான். தங்கையும் அக்காவைப் பார்த்து கந்துக்க நினைக்கிறா. என் கண்கள் மூடுறதுக்கு முன்ன அவளை ஒரு நிழல்ல இருக்கவைக்கணும்னு ஆசைப்படுறேன். ம்... ம்...''
கஞ்சியுடன் இரவில் வந்தபோது, கம்பவுண்டர் கூறிய விஷயத்தைப் பற்றி ஹெலனிடம் கேட்கவேண்டுமென்று நான் நினைத்தேன். ஆனால், பாதி மலர்ந்த ஒரு மலரின் பரிசுத்தத்தையும் பிரகாசத்தையும் கொண்டிருந்த அந்த கன்னிப் பெண்ணிடம் அதைப்பற்றி எப்படி நான் பேசுவேன்? எனக்கு வார்தைகள் இல்லாமல் போயின.
கள்ளங்கபடமற்ற இரு இளம்பெண்களின் முத்திரை பதித்த ஒரு புன்சிரிப்பைப் பரிசாக அளித்துவிட்டு, அவள் சென்றபோது நான் சிந்தித்தேன்.
"பெண்களுக்குப் பொதுவாக இருக்கக்கூடிய உணர்ச்சிகளும் ஆசைகளும் ஹெலனிடமும் இருக்காதா? அம்மை, காலரா ஆகியவற்றிற்கு மத்தியில் சிரமப்படுவதற்கு மட்டுமே உள்ளதா அவருடைய வாழ்க்கை?'
மழை பெய்துகொண்டிருந்தாலும், வெப்பத்திற்கு எந்தவொரு குறைவுமில்லை. சந்தோஷம் காரணமாக இன்றிரவு என்னால் உறங்கமுடியுமா என்பது சந்தேகமே... இந்த கூட்டிலிருந்து நான் நாளை வெளியுலகத்திற்குப் பறந்து போகப்போகிறேன்! எனினும், தாங்கமுடியாத ஒரு நிலையை நான் உணர்கிறேன். அந்த வீட்டைப் பார்க்கும்போது, காரணமேயற்ற ஒரு கவலை எனக்குள் ஊறி அதிகமாகிறது.
தியாகத்தின் வடிவங்கள்...
அந்த குடும்பத்தின் காலத்திற்குப்பிறகு, இந்தப் பணியை ஏற்றுச்செய்வதற்கு யாராவது இருப்பார்களா? ஒருவேளை குறைவான சம்பளம் கிடைக்கக்கூடிய இந்தப் பணிக்கு யாரும் வரவில்லையென்ற நிலை உண்டாகும்!
அந்த வீட்டில் இன்னும் விளக்கு அணைக்கப்படவில்லை. கம்பவுண்டர் பைபிள் வாசித்துக் கொண்டிருப்பார்.