Singer Subramanian

திராவிட இயக்கங்களின் மேடை, இடதுசாரி இயக்கங்களின் மேடை என முற்போக்கு சிந்தனை மேடைகளில் ஏறிப்பாடுகிறவர் மக்களிசைப் பாடகர் சுப்பிரமணியன், மண்ணின் மீதும், மக்கள் மீதும் காதல் கொண்டவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கம்பீரமாக ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் என்கிற குக்கிராமத்தில்பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் என்கிற இளைஞனின் குரல். கல்லூரியில் தகரப்பெட்டியை தாளமாக்கிப் பாடியவர் இன்று மண்ணிசை பாடல்கள் மட்டும் கொண்ட கச்சேரிகளைத் தமிழ்நாடு கடந்து வெளிநாடுகளிலும் நடத்தும் அளவுக்கு சிறகடித்துக்கொண்டு இருக்கிறார்.

Advertisment

இசைஞானி இளையராஜாவின் அன்பைப் பெற்றவர். அவர் தலைமையில் திருமணம் செய்துகொண்டார். திருவண்ணாமலைக்கு இளையராஜா வரும்போதெல்லாம் தவறாமல் சந்திக்கக்கூடிய நபராக சுப்பிரமணியம் இருக்கிறார்.

நாட்டுப்புற இசையால் மக்கள் மனதைக் கொள்ளையடித்து வரும் அவரை நமது இனிய உதயம் இதழுக்காக சந்தித்தபோது...

உங்கள் வாழ்க்கை குறித்து சொல்லுங்கள்?

Advertisment

அப்பா முனுசாமி, அம்மா சின்னத்தாயிக்கு மூன்றாவது மகனாக பிறந்தேன். என்னுடன்பிறந்தவர்கள் ஐந்து பேர். அப்பா அம்மாவுக்கு விவசாயம்தான் தெரியும், விவசாயத்தையும், கிராமத்தையும் தாண்டி எதுவும் அறியாத பெற்றோருக்குப் பிறந்து வளர்ந்தவன் நான். கல்விதான் ஒருவனை உயர்த்தும் அப்படின்னு எங்களை படிக்கவச்சாங்க. திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை வரலாறு முடித்துவிட்டு,

அதன்பின் சென்னை இசைக்கல்லூரியில்எம்.இ. மியூசிக் சேர்ந்து படிச்சேன். இசைஞானி இளையராஜா எங்களுக்கு திருமணம் செய்துவைத்தார்.என் மனைவி தனலட்சுமி, பள்ளியில் இசை ஆசிரியரா இருக்காங்க. கர்நாடக இசைப்பள்ளி வச்சிருக்காங்க. எங்களுக்கு விஜய்ராம்னு ஒரு மகன் இருக்கான்.

test

பாடல்கள் மீது உங்களுக்கு ஈர்ப்பு வந்தது எப்படி?

நான் பள்ளி விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது திரைப்படப் பாடல்களைக் கேட்டு அப்படியே டிட்டோவாக பாடுவேன். இசைக்கு எனது ட்ரங்க் பெட்டியை தட்டிக்கொண்டு பாடுவேன். விடுதியில் என்னுடைய வகுப்புத் தோழர்கள், சீனியர் மாணவர்கள் பாடச்சொல்லிக் கேட்பார்கள். பாடுவேன். கல்லூரியில் எனது வகுப்புத் தோழர்களான நண்பர்கள் இமான், துரை, ராஜா, முருகன் போன்றவர்கள் பாடுடா எனச்சொல்லி ஊக்குவிப்பார்கள், அவர்களின் ஊக்கம் தான் என்னை மேடையேற்றியது.

நீங்கள் பாடல் பாடுவதை யாரிடம் முறைப்படி கற்றுக்கொண்டீர்கள்?

கல்லூரியில், வகுப்பில் நண்பர்கள் மத்தியில் பாடிக்கொண்டு இருப்பேன். ஒருமுறை திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பாடல் போட்டி நடைபெற்றது. சென்னை இசைக்கல்லூரியிலிருந்து நடுவர்கள் வந்திருந்தார்கள். அதில் 69 பேர்கலந்துகொள்ள பெயர் தந்திருந்தோம். நான் 52-ஆவதுநபராக மேடையேறினேன். அதற்கு முன்பு என்ன பாட்டு பாடலாம் என நண்பர்களிடம் கேட்டேன். நல்ல ஹைபிட்சில் ஒரு பாடலைப் பாடுடா எனச்சொன்னார்கள்.

மாலை 4 மணி கல்லூரி முடிந்து மாணவர்கள் வீட்டுக்குச் செல்லும்போது போட்டி நடைபெற்றுக்கொண்டு இருந்தது. நான் மேடையேறி ’வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே உதிர்ந்த மாயமென்ன’ என்ற பாட்டைப் பாடினேன். நான் பாடத்துவங்கியபோது பாவேந்தர் அரங்கத்தில் கூட்டமே இல்லை, நான் பாடத்துவங்கிய அடுத்த சில நிமிடங்களில் அரங்கம் நிறைந்துவிட்டது.அந்த போட்டியில் முதல் பரிசு பெற்றேன்.

என் குரல் சிறந்த குரல் கம்பீரமாக இருக்கிறது எனச்சொல்லி அப்பொழுது தமிழ்த்துறை பேராசிரியராக இருந்த அய்யா வேல. நெடுஞ்செழியன் திரையிசை பாடல் பாட ஆயிரம் பேர் உள்ளார்கள். நீ நாட்டுப்புற பாடல் எடுத்துப் பாடுப்பா அதற்கான பாடகர்கள் தான் மிகமிகக் குறைவு, நாட்டுப்புற பாடல்களை பாடு அப்போதுதான் நீ தனித்துஅடையாளப்படுவாய் என என்னை கண்டெடுத்து அடையாளப்படுத்தினார்.கல்லூரியின் தமிழ்த்துறை நடத்திய முத்தமிழ் மன்ற விழாவில் வரலாற்றுத் துறை மாணவனான எனக்கு கல்லூரி பாடகன் என பெயரிட்டுஅழைப்பிதழில் பெயர் அச்சிட்டு விருது வழங்கினார்.

அந்த மேடையில் பாடச்சொல்லி ஐந்து நாட்டுப்புற பாடல்கள் தேர்வு செய்துதந்தார். அவையெல்லாம் அய்யன் புஷ்பவனம்.குப்புசாமி பாடிய பாடல்கள். அந்த பாடல்களை கல்லூரி விடுதி அறையில் டேப்ரிக்கார்டரில் போட்டுக்கேட்டு அதனைஅப்படியே மேடையில் பாடினேன். முறைப்படி நான் இசையோ, பாடல் பாடுவதையோ அப்போதுகற்றுக்கொள்ளவில்லை. இப்படித்தான் பாடவேண்டும் என எனக்கு யாரும் வழிக்காட்டி இல்லை.அய்யன் புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் பாடல்களை கேட்டு நானே பாட கற்றுக்கொண்டேன். நானே பாட கற்றுக்கொண்டு, நானே பாட மேடை உருவாக ஆரம்பித்தது.

முதன்முதலாக நீங்கள் பாடிய பாடல் எது? உங்கள் முதல் மேடை அனுபவம்?

கல்லூரி மேடைக்கு பிறகு திருவண்ணாமலையில் செயல்படும் கீதம் இன்னிசைக்குழு எங்கள் கிராமமான செல்லங்குப்பத்தில் திருமணத்துக்கு இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். அந்த நிகழ்வில் முதன்முதலாக மேடையேறி டூயட் பாடல் பாடினேன். மேடையில் இசைக் கருவிகள் இருக்கு, ஸ்ருதியோடு பாடனும்.அதற்கு முன்பு வரை நான் மேடையேறி பாடியதில்லை. நான் இசை கற்ற வனல்ல, கேள்வி ஞானத்தால் மட்டுமே பாடிவந்தேன். மேடை ஏறி மைக் கையில் வாங்கியதும் ஒரு படபடப்பு இருந்தது. என்ன பாட்டுன்னு கீபோர்டு வாசிப்பாளர் கேட்டார். புஷ்பவனம் குப்புசாமி பாடிய, ஆளான நாள் முதலா யாரையும் நான் நினைச்சதில்லை என்கிற பாடலை சொன்னதும் அவர் பாடிடுவியா எனக் கேட்டார். நான் மனதுக்குள் இருந்த தயக்கத்தை உதறிவிட்டு நம்பிக்கையோடு தலையாட்டினேன். அவர் வாசிக்க துவங்கினார், நான் பாடத்துவங்கினேன். நான் பாடுவது நான் பிறந்த ஊரில், அங்கிருந்தவர்கள் என் மக்கள் என்பதால் விசில் அடித்து, ரசித்து கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள். நன்றாகப் பாடுகிறேன் என அனைவரும் சொல்ல பயம் போய் கூச்சம் வந்துவிட்டது. அவர்கள் அன்று தந்த ஊக்கம்தான் இன்று மேடை பயம், கூச்சம் இல்லாமல் பாடல் பாட ஊக்குவித்தது. இதற்கு என் ஊர், என் மக்களுக்கு நன்றி சொல்ல என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

இதுவரை எத்தனைமேடைகளில் பாடியுள்ளீர்கள்?

எத்தனை மேடை ஏறியிருக்கிறேன் எனநான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. கடந்த 18 ஆண்டுகளில் தோராயமாக ஆயிரம் மேடைஏறியிருப்பேன் என நினைக்கிறேன். கணக்கு வைத்துக் கொள்ளாததற்கு காரணம், நான் எத்தனை மேடை ஏறினேன் என்பதை விட எந்தளவுக்கு பாடல் பாடினேன்,மக்கள் மகிழ்ந்தார்களா என்றே பார்க்கிறேன். நான் மேடையில் மண்ணிசைப் பாடல்கள், தமிழிசைப் பாடல், கர்நாடக இசைப் பாடல்கள் பாடுவேன். ஆனாலும், ஒவ்வொரு மேடையிலும் என்ன பாடலாம், எப்படி பாடலாம், மேடையின் முன் அமர்ந்து பாடலை ரசிக்கக் காத்திருக்கும் மக்கள் எந்த பாடல் பாடினால் எப்படி மகிழ்விக்கலாம் என யோசித்து மேடையேறுகிறேன். மக்களின் மகிழ்ச்சிக்கே முக்கியத்துவம் தருகிறேன்.

நீங்கள் பாடும் நாட்டுப்புற பாடல்கள் உருவாவது எப்படி?

இயற்கையாகவே நகமும், சதையும் எப்படிஇணைந்துள்ளதோ அதுபோல் என் ரத்தத்தோடு, உயிரோடு, உடலோடு கலந்துள்ளதே மண்ணிசைப் பாடல்கள். இதனை வெகுஜன மக்கள் நாட்டுப்புறபாடல் எனச்சொல்வார்கள். நாங்கள் மக்களிசைப் பாடல், மண்ணிசைப்பாடல் என்றே குறிப்பிடுவோம். புஷ்பவனம் குப்புசாமி நாட்டுப்புற பாடல் என்றால்நாட்டு - புறம் மக்களுக்கு அப்பார்பட்டது எனச்சொல்லி அதனால் நாட்டுப்புற பாடல் எனச் சொல்ல வேண்டாம் மண்ணிசைப் பாடல், மக்களிசைப்பாடல் எனச் சொல்லச் சொன்னார். மக்களிசைப் பாடல் உருவாவது எங்கே எனக்கேட்டால் ஏழை எளிய உழைக்கும் மக்களிடத்தில் இருந்துதான் அது உருவாகிறது.

இன்று ஏர் ஓட்ட, நாற்று நட, களை பறிக்க, நெல் அறுவடை செய்ய என அனைத்துக்கும் இயந்திரங்கள் வந்துடுச்சி. அப்போது அப்படியல்ல. விவசாயி தான் அனைத்தையும் செய்யவேண்டும்.நிலத்தில் ஏர் ஓட்டும்போது கிழக்கு வெளுத்துடுச்சி, கதிர் முளைச்சிடுச்சி, கஞ்சிகொண்டு வாடி புள்ளன்னு அசதி தெரியாமல் இருக்க பாடுவார்.மம்பட்டி மூச்சிக்கு மஞ்சப்பூசி மினுக் கற பொண்ணே அப்படின்னு மனைவி வருகையைப் பார்த்து பாடுவார். பெண் முகம் மம்பட்டியான்னு கேள்வி வரும். மனைவிய மம்பட்டியோட ஒப்பீடு செய்வதற்கு காரணம், ஒரு பாமர விவசாயிக்கு ஏர், கலப்பை, மண்வெட்டி, கலக்கட்டு, சாட்டைக்கோல், தண்ணீர், மண்ணு, நாத்து, நெல்லுன்னுதான் தெரியும். அதை வச்சிதான் அவர் எதையும் வர்ணிப்பார்,

பெண்கள் நாற்று நடும்போது, சேத்து வயலுக்குள்ள நாத்து முடும் முண்டுகளே, நாத்தை கொஞ்சம் நறுக்கிப்போடு, நல்ல மழை பொய்யும்முன்னேன்னு பாடுவாங்க.வண்டி ஓட்டுபவர்,ஒய்யார கொண்டைபோட்டு, ஊருக்குதான் போறப்புள்ள, குளிர்ந்த வார்த்தை சொல்லலியே,குளிர்ந்த வார்த்தை சொல்லலியே என தன் தலைவியைக் காணும்போது தலைவனுக்கு தானாக மனதுக்குள் உதித்து வருவதே மண்ணிசைப்பாடல்.

ஒரு கிராமத்து வண்டிக்காரன் பாட்டு சுங்கடி சேலைகட்டி எங்கடி போறப்புள்ள காசளவு பொட்டுக்காரி, நான் காதல் செய்யும் முகவெட்டுக்காரி எனப்பாடுவது தாளத்தோடு பொருந்தும். ஒரு தாய் வயலில் வேலை செய்யும்போது தாயின் புடவையில் தொட்டிலாக கட்டி குழந்தையை போட்டுவைத்திருப்பார். அப்போது குழந்தை தூங்க ஒரு தாலாட்டுப்பாடல் பாடுவார்.

"என் கண்ணே

தங்கத்தில் தொட்டில் செய்து தாலாட்ட முடியாது

வெள்ளியில் சொம்பு செய்து பாலூட்ட முடியாது.

ஓலக்குடிசை தாண்டா, ஒரு முழு பாயிதாண்டா

கூழும், காஞ்சியும்தாண்டா குடிச்சி நீ வளர்ந்துக் கடா.

நான் வேலைக்கு அனுப்பமாட்டேன்டா

பாடுப்பட்டு பள்ளிக்கூடம் சேர்ப்பேன்டா

கூறுகெட்ட தேசத்தில் நித்தம் நித்தம் போராட்டம்

செல்லமகனே நீ வளர்ந்து சீர்திருத்த வேணுமடா, சீர்திருத்தம் வேணுமடா."

ஒரு தாய் தன் வாழ்க்கை, சமூகம், அவன் வளரவேண்டிய சூழ்நிலை, வளர்ந்த பின் அவன் செய்ய வேண்டியது குறித்து பாடுகிறாள். இப்படியொரு பாடல் இப்போ இருக்கற கவிஞர்களிடம் 10 லட்சம் தந்தாலும் இப்படியொரு பாட்டு வருமா.அதுயெல்லாம் எளிய மக்களிடமிருந்து தான் வரும்.இப்படி ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்குது. உழைக்கின்ற மக்கள் காடு, கழனியில் ஏர் ஓட்டும்போதும், நாற்று எடுக்கும்போதும், நாற்று பறிக்கும்போதும், வேப்பமரத்தில், மாமரத்தில் ஊஞ்சல் கட்டி குழந்தையை தாலாட்டும்போதும், வண்டி ஓட்டும்போதும் தான் வரும். இது யோசித்து வருவதல்ல, மனதில் இருந்து வருவது.தங்களின் வலி, வேதனை, மகிழ்ச்சி, காதல், துயரம், வறுமையை வெளிப்படுத்துவதே பாடல்.

அப்போது அங்கே என்ன தொனி பாடப்படுகிறதோ அதுவே மண்ணிசைப்பாடல். உழைக்கும் மக்களிடம் இருந்துதான் மண்ணிசைப் பாடல் உருவாகும்.அவர்களிடம் இப்படி எழுது, அப்படி எழுதுன்னு யாரும் சொல்வதில்லை. ஒரு கவிஞர் பேனா எடுத்து வைத்துக்கொண்டு அழகே உன் முகம் நிலவுபோல் உள்ளது என எழுதுவதல்ல. அதனால்தான் அது உணர்வுபூர்வமாக இருக்கிறது. மண்ணிசைப்பாடலில் நாம எதை நினைக்கிறோமோ அதைஅப்படியோ பாடலாம்.

மேடையில் பாடும்போது கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளதா?

பாடும்போது கசப்பானஅனுபவம் ஏற்பட்டதில்லை, பாடுவதற்கு முன்பே பல கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. தொடக்க காலத்தில் இங்குள்ள இசைக்குழு ஒன்று அவர்களதுஇசைக்குழுவில் என்னை பாட அழைத்துச் செல்வார்கள், ஆனால் மேடையில் என்னை பாடவைக்கமாட்டார்கள். மண்ணிசைப் பாடல்கள் எல்லாம் யார் கேட்பார்கள் எனச்சொல்லி பாடவிடாமல் அடுத்த பாடல் பாடலாம் இருங்க, அதற்கடுத்த பாடல் இருங்க என தள்ளித் தள்ளி நேரத்தைத் கடத்துவார்கள். கடைசியில் நிகழ்ச்சி முடியும் நேரத்தில் ஒரு பாடலை மட்டும் பாடவைப்பார்கள், பெரும் துயரமாக இருக்கும். அதன் வலி பெரியது.அந்த வலிகளைக் கடந்துதான் வந்திருக்கிறேன். இன்று மண்ணிசைப் பாடல்களுக்கு என்றே நிகழ்ச்சி அமைத்துப் பாடும் அளவுக்கு வந்துள்ளதற்கு மக்களும், என் விடாமுயற்சியுமே காரணம்.

கிராமத்து வாழ்வியலோடு உங்கள் பாடல்கள் அனைத்தும் இருக்கிறதே அது உங்களுக்கு திகட்டவில்லையா?

என் பாடல்கள் அப்படித்தான் இருக்கும். என்னுடைய வாழ்வியலை, என்னுடையபண்பாட்டை, என்னுடைய கலாச்சாரத்தை விட்டுவிட்டு என்னால் வேறு ஒரு கலாச்சாரத்துக்கு மாறவும் முடியாது , மாறவும்கூடாது. இது நான் வாழக்கூடிய மண், இந்த மண்ணில் என்ன இல்லை? எல்லா பாடல் வளங்களும் இருக்கிறது. வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்கே நமது மண்ணின் பெருமையை, நம் பண்பாட்டை தான் பாடுவேன், பாடுகிறேன். மற்றவர்களின் இசைக்குழுக்களிலும் சென்று பாடுகிறேன். ஒருமுறை திருமண நிகழ்வுக்கான மேடையில் மற்ற பாடகர்கள் பாடும்போது அவர்கள் பாடிய பாடல்கள் வரிகளே புரியவில்லை கசமுசா வென இருந்தது.

அப்போது இரண்டு பெரியவர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டு பாடச்சொன்னார்கள், நான் மண்ணிசைப்பாடல் பாடினேன். ஒரு பாடல் பாடச்சொன்னவர்கள், நான் பாடியதைக் கேட்டு விட்டு அனைவரும் இன்னும், இன்னும் எனக் கேட்க ஐந்து பாடல்களைப் பாடினேன். அவ்வளவு பெரிய கைதட்டல், மக்கள் மகிழ்ந்தார்கள். மக்களுக்கே மண்ணிசை பாடல்கள் திகட்டவில்லை. அப்படியிருக்கும்போது மண்ணிசைப் பாடகரான என் காதுக்கும், தொண்டைக்கும் எப்படி திகட்டும்?. தேனினும் இனியது நம் தெம்மாங்கு மண்ணிசைப் பாடல். என்றும் திகட்டாது.

மண்ணிசைப் பாடகராக இருந்து திரைப்பட பாடகராக மாறியுள்ளீர்கள். அந்த அனுபவம் எப்படி இருக்கிறது?

திரை இசையிலும் மண்ணிசை சார்ந்தே பாடல் பாடுகிறேன். மண்ணிசை சாராத பாடலும் பாடியிருக்கிறேன், அது நல்ல அர்த்தமுள்ள வரிகள் கொண்ட பாடல்களாகவே இருப்பதால் பாடினேன். அப்படிப்பட்ட பாடல்களைத்தான் இசையமைப்பாளர்கள் எனக்கு தருகிறார்கள். மண்ணிசைப் பாடகர்களுக்கு திரையிசை தேவை. நான் பட்டிதொட்டி என எங்கு சென்று பாடினாலும் திரையிசையின் வீச்சு என்பது மிகபெரியது. ஒரு பாடல் வெற்றி பெற்றால் நாம் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உற்றுநோக்கப்படுவோம். அதை உணர்ந்திருக்கிறேன். திரை இசையில் பாடச்சென்ற நான் இப்போது பல பாடல்களுக்கு இசையமைத்துப் பாடுகிறேன். என்னுடைய இசையில் அய்யன் புஷ்பவனம் குப்புசாமி மூன்று முருகர் பாடல்களைப் பாடியுள்ளார். திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறேன், அவை விரைவில் திரைக்கு வரும்.அடுத்து ஒரு திரைப்படத்துக்கு இசையமைப்பதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.

திரைப்படத்தில் நீங்கள் இதுவரை எத்தனை பாடல் பாடியுள்ளீர்கள்?

இசைஞானி இசையில் நான்கு படங்கள் உட்பட முத்துராமலிங்கம், சொர்க்கத்தில் குழந்தைகள், மாமுனி, அடுத்த சாட்டை, சுழியம் ஏழு என இதுவரை 18 திரைப்படங்களில் பாடியிருக்கிறேன். சமுத்திரக்கனி நடித்த

அடுத்த சாட்டை என்கிற படத்தில் யுகபாரதி எழுத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில், எங்க கையில் நாட்டைக் கொடுங்க எல்லாத்தையும் மாத்துறோம், ஒட்டை வாங்கி ஏமாத்தாமல், உங்களை ஏத்தறோம் அப்படிங்கற பாடலை பாடினேன். மாமுனி படத்தில் இன்னும் பொறுக்கவேனுமா? இது நியாயமா, இல்லை நேர்மையா என்கிற பாட்டு. மதுரை சிங்காரியே, சிம்மக்கல்லு ஒய்யாரியே அத்தை மகள் எங்கடிப்போற சித்தரக்கல்லு பாட்டு. காதலிச்சி சேர்ந்தவங்க ஆயிரம் பேரு, தோத்துப்போன காதலுக்கு ஆயுசு நூறு, தோத்தவங்க காதலை உலகம் மறக்க முடியுமா பாட்டு என பல பாடல்களைப் பாடியிருக்கிறேன். 300 ஆல்பம்

சாங் பாடியிருக்கிறேன். நான் திரைஇசையில் பாடினாலும் அது மண்ணிசைப் பாடலாகத்தான் இருக்கிறது.

உங்களின் வருங்கால நோக்கம், லட்சியம் என்ன?

திருவண்ணாமலை மாவட்டத்தில்திரையிசைப் பாடல்கள் பாட நிறைய பேர்இருக்கிறார்கள். மண்ணிசைப் பாடகராக நான்மட்டுமே இருக்கிறேன். இது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் சிலரை மண்ணிசைப் பாடல்கள் பாடுங்கள்என அழைக்கிறேன் சரியென சொல்கிறார்கள். வரமாட்டேன் என்கிறார்கள். மக்களிசை,மண்ணிசைப் பாடல்களை மக்களிடம் இன்னும் எடுத்துச்செல்ல வேண்டும் என்பதே என் நோக்கம். தமிழ் மக்கள் உலகம் இருக்கும்வரை உழைக்கும் மக்கள் பாடும் மண்ணிசைப் பாடல் இருக்கும். அதனால் எனக்குப் பிறகு பல பாடகர்களை உருவாக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. என்னைத் தொடர்ந்து பல மண்ணிசை பாடகர்கள் பாட வரவேண்டும், மற்றவர்களை பாட வைக்கவேண்டும். மண்ணிசைப் பாடல்களை பாடுங்கள், பண்பாட்டை பறைசாற்றும் பாடல்களைக் கைவிடாதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்.