பார்கவி அம்மாவின் இரண்டாவது மகன்அப்புக்குட்டன் கார்கிலில் கண்ணி வெடி வெடித்து இறந்துவிட்டான் என்ற செய்தியை திருச்சூர் கலெக்டர்தான் கவலையில் மூழ்கியிருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவித்தார். ஜவானின் தாய் உரத்த குரலில் அழுவதற்கு இரண்டு மூன்று முறைகள் முயற்சித்தாள். வாயில் எச்சில் வற்றி விட்டதைப் போல அவள் உணர்ந்தாள். அவள் வெறும் தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து தன் முகத்தைக் கைகளால் மறைத்தாள்.
பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள்தான் சத்தமாக கூப்பாடு போட்டார்கள். ஆரம்பப் பள்ளிக்கூடத்தின் உடற்பயிற்சி ஆசிரியர்தான் எங்கிருந்தோ கலெக்டர் அமர்வதற்கு பெஞ்சைத் தூக்கிக் கொண்டு வந்தார். அதிக வயது காரணமாக தனக்கு ராணுவத்தில் நுழைவதற்கான தகுதி இல்லை என்ற உண்மைஅவரை கவலையில் மூழ்கச் செய்திருந்தது. இறந்த இளைஞன்மீது மாஸ்டருக்குப் பொறாமை உண்டானது. கலெக்டர் அந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து திகைத்துவிட்டார்.
மரணமடைந்த அப்புக்குட்டனுக்கு இந்த அளவிற்கு நலம் விரும்பிகள் இருப்பார்கள் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. பலவித மதத்தைச் சேர்ந்தவர்கள், வயதானவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள்...அனைவரும் அப்புக்குட்டனின் சிறந்த குணங்களைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார்கள். அவன் கூறிய நகைச்சுவையான விஷயங்களை திரும்ப கூறிக் கொண்டிருந்தார்கள்.
""வெளுத்து... அழகான தோற்றத்துடன் இருந்த இளைஞன். பார்ப்பதற்கு நான்கு கண்கள் வேணும். இந்த பகுதியில்அந்த அளவிற்கு நல்ல ஒரு இளைஞன் இல்லை''- ஊரைச் சேர்ந்த ஒரே பெண் உறுப்பினர் கூறினாள். அப்புக்குட்டனின் தாய்க்கு அரசாங்கம் ஐந்து லட்சம் ரூபாய் அளிக்கும் என்ற விஷயத்தை கலெக்டர் மரியாதை கலந்த குரலில் கூறினார். மக்கள் கற்பனையில் மூழ்கினார்கள்.
பார்கவி அம்மா தன் தேவைகளுக்காக அந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஓலை வேய்ந்த வீட்டை ஓடு வேய்ந்த வீடாக ஆக்கலாம். இல்லாவிட்டால்... மாடி வீடாக ஆக்கலாம். பெண்பிள்ளையைக் கட்டிக் கொடுக்கலாம். மீதி பணத்தை கூட்டுறவு வங்கியில் போடலாம்.
பார்கவி அம்மா மட்டும் கூறினாள்:""எனக்கு ஐந்து லட்சம் வேண்டாம். என் பிள்ளையைத்திரும்பத் தந்தால் போதும்.''
-மாதவிக்குட்டி
தமிழில்: சுரா