ழகான அந்த குடும்பப் பெண் சற்று ஒதுங்கினாள். அவ்வாறு ஒதுங்கித்தான் ஆகவேண்டும். அவள் சந்திப்பது- அவள் திருமணமாகாமலிருந்த காலத்தில் நடைபெற்ற ஒரு தவறைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தெளிவான ஆதாரங்களுடன் உலகத்திற்குமுன் வெளிப்படுத்தும் சாத்தியமுள்ள ஒரு பெண்ணை... சுருக்கமாக் கூறுவதாக இருந்தால், கதை இதுதான்... திரேஸ்யாம்மா திருமணத்திற்குமுன்பே கர்ப்பிணியாகிவிட்டாள். திரேஸ்யாம்மா பிரசவித்தாள். இடியும் மின்னலும் காற்றும் மழையுமுள்ள ஒரு கறுத்த அமாவாசை நாளின் இரவுப்பொழுதில் அந்த பிரசவம் நடந்தது. மரியாம்மா என்ற ஒரு தாதிப்பெண் பிரசவம் பார்ப்பதற்காக இருந்தாள். திரேஸ்யாம்மா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அழகான ஆண் குழந்தை... அது முழுமையான பலத்துடன் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தது. என்னவொரு உரத்த ஸ்தாயியிலுள்ள அழுகையாக இருந்தது அது! "நான் இறக்கமாட்டேன். என்னைக் கொல்வதற்கு சம்மதிக்கமாட்டேன். நான் வாழ்வேன்' என்று அந்த குழந்தை உலகத்தைப் பார்த்து சவால் விடுவதைப்போல திரேஸ்யாம்மாவிற்குத் தோன்றியது. வெளியே காற்றின் அட்டகாசத்தையும், கடுமையான மழையின் புலம்பலையும், இடியின் கர்ஜனையையும் மீறிக்கொண்டு அந்த குழந்தை அழுவதைப்போல தோன்றியது. பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் அதன் அழுகைச் சத்தத்தைக் கேட்பார்களோ என்று திரேஸ்யாம்மா பயப்பட்டாள். திரேஸ்யாம்மா அதன் முகத்தைப் பார்க்கவில்லை. அது சத்தம் உண்டாக்காமலிருந்தால் நன்றாக இருக்கும் என்று அவள் விரும்பினாள். அதன் பிறப்பிற்கு மூலகாரணமான மனிதனும் அவ்வாறு விரும்பினான். அதற்காக இருவரும் சற்று முயற்சியில் ஈடுபடவும் செய்தார்கள். விலக்கப்பட்ட கனியை சாப்பிட்டதன் விளைவுதானே அந்த குழந்தை! சைத்தானின் உயிரணு அதற்கு இருக்கிறது. அது இறக்காது...

இறக்கவில்லை. திரேஸ்யாம்மா என்னவெல்லாமோ மருந்துகள் உட்கொண்டும், பலன் உண்டாகவில்லை. உரத்த குரலில் அழுதுகொண்டு அது வெளியே வந்திருக்கிறது. திரேஸ்யாம்மா கூறினாள்:

""என்ன ஒரு தொல்லை! அதன் வாயையும் மூக்கையும் பொத்திப் பிடிங்க மரியாம்மா.''

தாதிப்பெண் மரியாம்மா அதையும் முயற்சிசெய்து பார்த்திருக்கலாமோ என்னவோ? நல்ல வீட்டிலுள்ள ஒரு இளம்பெண்ணின் மானத்தைக் காப்பாற்றவேண்டிய விஷயமல்லவா? ஆனால், அதற்குப்பிறகும் குழந்தை இறக்கவில்லை. மரியாம்மா கூறினாள்:

Advertisment

""அதுக்கு உயிர் கெட்டி. ஆனா ஒரு காலும் ஒரு கையும் மெலிஞ்சு போயிருக்கு. அதைக் கலைக்கறதுக்காக குடிச்ச மருந்தோட விளைவு...''

ஒரு சூழ்நிலையில் அந்த கறுத்த அமாவாசை நாளின் நள்ளிரவு வேளையிலேயே தாதிப்பெண் பிரசவம் நடைபெற்ற கட்டடத்திலிருந்து அந்தக் குழந்தையைக் கொண்டுசென்றுவிட்டாள். அந்த குழந்தை, திரேஸ்யாம்மாவின் வயிற்றில் பிறந்தது என்பதைத் தவிர, அதற்காக மலர்ந்து முகம் கறுத்து, நன்கு வளர்ந்திருந்த மார்பகங்களைச் சுவைக்கவில்லை. தாயின் ஸ்பரிசத்தை அந்த குழந்தை அனுபவிக்கவில்லை. அதற்குப்பிறகும் திரேஸ்யாம்மா கன்னிப் பெண்ணாகவே வாழ்ந்துகொண்டிருந்தாள். நல்ல நிலையிலுள்ள ஒரு திருமண ஆலோசனை திரேஸ்யாம்மாவுக்கு வந்தது. மணமகன் கேட்டதைவிட அதிகமான வரதட்சணையையும் வசதிகளையும் பெண்ணின் பக்கத்திலிருந்து கொடுப்பதற்குத் தயாரானார்கள். மனதிற்குள் கேள்வி கேட்டுக்கொள்வதும், பதில் கூறுவதும் முடிந்தன. புனித பீடத்திற்கு முன்னால் வைத்து திருமணச் சடங்குகள் நடத்தப்பட்டன. திரேஸ்யாம்மா ஒரு நல்ல குடும்பப் பெண்ணாக வாழ்க்கையை நடத்தினாள். அவ்வப்போது தாதிப்பெண் மரியாம்மா அந்த குடும்பத்திற்குள் வருவாள். பிறகு திரேஸ்யாம்மா நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். சுறுசுறுப்பும் அழகுமுள்ள நான்கு குழந்தைகளை திரேஸ்யாம்மா உலகத்திற்குக் கொண்டு வந்தாள். அந்த நான்கு குழந்தைகளும் அவர்களின் தந்தையின் அசல் சாயலில் இருந்தன. அந்த நான்கு பிரசவத்தையும் பார்த்துக்கொண்டது தாதிப்பெண் மரியாம்மாதான். பிரசவம் நெருங்கும்போது, தூரதேசத்திலிருந்தாலும் மரியாம்மாவை வரவழைத்துவிடுவாள். அந்த மரியாம்மா சற்று முகம் கறுத்துக் கேட்டாள்:

""அப்படிச் சொன்னா சரியா இருக்குமா? எனக்கு அதுவொரு சுமையா தோணிக்கிட்டிருக்கு. காலும் கையும் முடியாத ஒரு குழந்தையை வளர்க்கறதுங்கறது... நானும் இல்ல... கதியில்லாத ஒருத்திதான் அதை வளர்த்துக்கிட்டிருக்கா.''

Advertisment

மரியாம்மாவின் முகம் கறுக்கும்போது, திரேஸ்யாம்மா சுருங்கிப் போவதென்பது இயல்பான ஒன்றுதானே?

மரியாம்மா கேட்ட அனைத்தையும் திரேஸ்யாம்மா கொடுத்தாள். மரியாம்மா போய்விட்டாள். ஆனால், அன்றும் இன்றும் மரியாம்மா, திரேஸ்யாம்மாவிற்கு ஒரு பயத்தைத் தரும் கனவுதான். அந்த பயத்தைத் தரும் கனவிலிருந்து தப்பிக்க ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அது- கணவருக்கு முன்னால் அந்த தவறை ஏற்றுக்கொள்வது... பிறகு... காலும் கையும் முடியாத தன்னுடைய முதல் குழந்தையை வீட்டிற்குக்கொண்டு வருவது... பிறகு... மரியாம்மாவைப் பார்த்து பயப்படவேண்டியதில்லை. ஆனால்,

அதற்குப் பிறகான வாழ்க்கை எப்படியிருக்கும்?

திரேஸ்யாம்மாவிற்கு வாழ்க்கையில் ஒரு தவறுதான் நடந்திருக்கிறது. அது- திருமணத்திற்குமுன்பு நடந்தது. எனினும், கணவர் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்? அந்த குடும்பம் தகர்வதற்கான சூழல் உண்டாகிவிடாதா? இப்போது இருப்பதைப்போல கணவர் அவள்மீது அன்பு வைத்திருப்பாரா? அந்த நான்கு குழந்தைகளின் முகங்களையும் அவர் கூர்ந்து பார்க்கமாட்டாரா? இயலாது.... அந்த நிலையை ஏற்றுக்கொள்வதற்கு திரேஸ்யாம்மாவினால் இயலாது. எந்தவொரு பெண்ணுக்கும் அது சாத்தியமில்லை. ஒருமுறை தவறு செய்தவள் பிறகு தவறு செய்யாவிட்டாலும், எப்போதும் தவறு செய்தவள்தான். அப்படித்தான் அவளைப் பற்றி நினைப்பார்கள்.

எப்போதாவது மட்டுமல்ல- எல்லா நேரங்களிலும் திரேஸ்யாம்மாதான் முதலில் பிரசவித்த குழந்தையைப் பற்றி நினைப்பதுண்டு. இப்போது அவன் எப்படி இருப்பான்? மரியாம்மா அந்த குழந்தையை வளர்ப்பதற்கு ஒரு நகராட்சி துப்புரவுத் தொழில் செய்யும் பெண்ணை ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறியிருக்கிறாள். அந்த குழந்தையின் ஒரு கால் நொண்டியாகவும்' ஒரு கை மிகவும் மெலிந்துபோன நிலையிலும் இருக்கின்றதென்று மரியாம்மா கூறியிருக்கிறாள். அந்த துப்புரவுத் தொழில் செய்யும் பெண் குழந்தையை பத்திரமாக- பார்த்துக்கொள் கிறாள் என்று கூறியிருக்கிறாள். எது எப்படியோ அவ்வாறு ஒரு குழந்தை உயிருடன் இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? வெறுமனே பயமுறுத்திக் கொண்டிருக்கிறாள் என்றும் இருக்கலாம். இலலாத ஒன்றை இருப்பதாகக் கூறி பணத்தைப் பிடுங்கக்கூடிய ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். அந்த நிலையில் எதிர்த்தாலும் பாதுகாப்பில்லை. வெளியே கூறுவதற்கான ஒரு பெரிய ரகசியம் மரியாம்மாவிடம் இருக்கிறது.

2

துப்புரவுத் தொழில் செய்யும் பெண்ணான கொச்சு பாருவை தாதிப்பெண் மரியாம்மா சந்திக்கிறாள்.

கொச்சு பாரு கூறினாள்.

""மரியாம்மா... பிரசவ வீட்லயிருந்து நீங்க கொண்டுவந்து தந்த ஒரு குழந்தையை நான் வளர்த்தேன். ஒரு விஷயத்தை நினைச்சுப் பாருங்க- அன்னிக்கு நீங்க என்ன சொன்னீங்கன்னு. தேவையானதையெல்லாம் விரும்புற அளவுக்குத் தர்றதா சொன்னீங்களே... தங்கத்தை அள்ளித் தாங்கன்னு சொல்லல. நீங்க என்ன தந்திங்க? ஒரு மனிதக் குழந்தையாச்சேன்னு நினைச்சு நான் பெத்த குழந்தையைப்போலவே அதை வளர்க்கிறேன். அது வேலை செஞ்சு சம்பாதிச்சு கொண்டுவந்து எனக்குத் தரும்னு நினைச்சில்ல. அந்த குழந்தையை நான் கஷ்டப்பட வைக்கல. இருந்தாலும் நீங்க ஒரு மரியாதையைக் காட்டியிருக்கணும்.''

துணிச்சல் குணம்கொண்ட மரியாம்மா கொச்சு பாருவுக்கு முன்னால் சுருங்கவில்லை. சுருங்கவேண்டிய அவசியம் இல்லையே!

மரியாம்மா கூறினாள்: ""இந்த பணக்காரங்களோட விஷயம் அப்படித்தான் இருக்கும் கொச்சு பாரு. காத்தும் மழையும், இடியும் மின்னலும் இருந்த ஒரு நடுராத்திரி வேளையில நான் அதைக் கொண்டுவந்து உங்கிட்ட ஒப்படைச்சேன். அன்னிக்கு அவ சொன்னா-

கண் இல்லாததையெல்லாம் பொன்னாக்கலாம்னு. அதுவோ... சைத்தானின் குழந்தை வேறு... சாகவும் செய்யாது. காரியம் முடிஞ்சதும் அவ அதை மறந்துட்டா. இப்போ அந்த குழந்தையின் சுமை முழுசும் என் தலையிலும் உன் தலையிலும்னு ஆகிப்போச்சு. தெய்வம் அருள் செய்யும் கொச்சு பாரு. அதுதான் நம்மகிட்ட இருக்கக்கூடிய குணம். கடவுளோட மனஓட்டம்தான் பெருசு.''

கொச்சு பாருவிற்கு ஒரு எண்ணம் தோன்றியது.

அவள் கேட்டாள்: ""அந்த குழந்தையைக் கொண்டுபோய் அதோட தாய்க்கு முன்னால வச்சா என்ன? மரியாம்மா... அதைச் செய்யுங்க. அவளோட தவறான செயலுக்கு அதுதான் வேண்டியது.''

""ஸ்ஸோ! கொச்சு பாரு... அதைச் செய்யலாமா? அது கஷ்டமான விஷயமில்லையா? நல்ல நிலைமையிலயும் வசதி படைச்ச சூழல்லயும் இருப்பவங்களோட மானத்தை நாம் கெடுக்கலாமா?''

அந்த வாதம் கொச்சு பாருவிற்குப் புரியவில்லை. அவள் கேட்டாள்: ""மரியாம்மா... அவ எங்கே இருக்காங்கறதையும், யாருங்கறதையும் கொஞ்சம் சொல்லமுடியுமா? நான் கொண்டுபோய் அந்தக் குழந்தையை அவளுக்கு முன்னால வைக்கிறேன். அவ ஏத்துக்கவோ கொல்லவோ செய்யட்டும். நீங்க கெட்ட பேர் வாங்கவேணாம். கெட்ட பேரை நான் வாங்கிக்கிறேன். ஒரு துப்புரவுத் தொழில் பண்ணும் பெண்ணோட வீட்ல வளரவேண்டிய ஒரு குழந்தையில்ல அதுன்னுதானே நீங்க சொன்னீங்க? அது வளரவேண்டிய இடத்தில வளரட்டும்.''

மரியாம்மா மறுக்கிற அர்த்தத்தில் தலையைக் குலுக்கினாள். ""இல்லை... இல்லை... அதை அவள் செய்யமாட்டாள். அந்த குழந்தையின் தாய் யாரென்று அவள் கூறமாட்டாள். மரியாம்மா கூறினாள்:

""நான் கர்த்தர் பேரைச் சொல்லி சத்தியம் பண்ணினேன் கொச்சு பாரு. அந்த குழந்தையோட, தாயார் யார்னு சொல்லமாட்டேன்னு...

dd

குறைஞ்சபட்சம், மூணு நாலு பேருக்குத்தான் அது தெரியும். சத்தியத்திற்கு எதிரா நான் செயல்பட்டதில்லை. கடவுளுக்கு முன்னால, சமாதானம் சொல்லவேண்டிய விஷயம் இது. அந்த விஷயம் நான் செத்து, என்னோட சவக்குழிக்குள்ளேயே அடக்கமாயிடும்.''

அதிகரித்த கோபத்துடன் கொச்சு பாரு கூறினாள்:

""வாக்கைக் காப்பாத்தாதவங்களோட மானத்தை எதுக்காக காப்பாத்தணும் மரியாம்மா? அவங்களோட மானம் அப்படியே போகட்டும்.''

இல்லை... அந்த பெரிய ரகசியத்தை மரியாம்மா வெளியே கூறமாட்டாள். சத்தியத்தின் பெயரில் ஏற்றுக்கொண்ட அந்த பொறுப்பின் சுமையைத் தாங்கிக்கொள்வதற்குப் பங்காளியாக கொச்சு பாருவும் இருக்கிறாள். மரியாம்மா கூறினாள்:

""நாம ஒரு குடும்பத்தை நாசப்படுத்த வேணாம் கொச்சு பாரு. ஆதாயத்தை எதிர்பார்த்து நாம இந்த பொறுப்பை தலையில சுமக்கலையே! தெய்வம் படைச்சு பூமியில் விட்ட ஒரு குழந்தையை நாம வளர்த்தோம். உயர்ந்த நிலையில இருப்பவங்களோட மானத்தைக் காப்பாத்தினோம். எதுவுமே கிடைக்கலைங்கறதுக்காக தெய்வம். நினைச்சு ஒப்படைச்ச அந்த பொறுப்பை நாம நிராகரிச்சுடக் கூடாது. அது தெய்வத்திற்கு கோபம் உண்டாக்கக்கூடிய விஷயம்.''

மரியாம்மா கொடுத்துச் சென்றது சாதாரண உதவி... அது அழகான ஒரு குழந்தை. பாருவுக்கு அதன்மீது விருப்பம் உண்டாகி, அவள் அதை வளர்த்தாள். உண்மையாகக் கூறுவதாக இருந்தால், அந்த குழந்தை வளர்ந்து வருவதற்கு அதன் தாயின் உதவி அவசியம். அது மட்டுமே கொச்சு பாருவுக்குத் தேவையாக இருந்தது. தன்னுடைய கையில் இருந்தது என்பதைப்போல ஏதோ ஒரு சிறிய பணத்தை மரியாம்மா கொச்சு பாருவின் கையில் கொடுத்தாள். ஒருவேளை இவ்வளவு காலமும் அப்படித்தான் நடந்து வந்திருக்கலாம். தாதிப்பெண் மரியாம்மாவுக்கு அந்த ஒரு பிரசவம், ஒரு நல்ல வருமானத்திற்கான வழியாக இருந்திருக்கலாம். ஒரு கன்னிப் பெண் கர்ப்பம் தரித்தபோது, என்னவெல்லாம் காரியங்கள் நடந்தன. அந்தப் பெண்ணை விழுங்குவதற்கு வாயைப் பிளந்துகொண்டு ஒரு பூதம் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது!

எப்படிப் பார்த்தாலும், அவளுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கிறதா? மனஅமைதி இருக்கிறதா? அவள் ஒவ்வொரு நிமிடமும் பயந்துகொண்டே இருக்கிறாள். நெருப்பைத் தின்றுகொண்டிருக்கிறாள்.

அவளுடைய தாய்மை, ஆறாத ஒரு காயத்தால் எரிந்துகொண்டிருக்கிறது. கண்ணீரால் ஈரமாகாத ஒரு தாயின் முத்தம் அவளுடைய மற்ற நான்கு குழந்தைக்கும் கிடைத்திருக்கிறதா? இல்லை... கிடைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை. அந்த வீட்டின் வசதி, யாசிக்கும் ஒரு அடித்தரையில் அல்லவா கட்டப்பட்டிருக்கிறது? அங்கிருக்கும் இல்லத்தரசன் ஒரு மூட சொர்க்கத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.... பாவம்! ஒரு மெல்லிய மூடுதுணி விலகினால் போதும். அவனுக்கு முன்னால் ஒரு துயரம் நிறைந்த உண்மை பிரகாசமாகத் தெரிவதற்கு... அத்துடன் அவனுடைய வாழ்க்கையும் தகர்ந்துவிடும். நிரபராதிகளான குழந்தைகளின் எதிர்காலமும் அத்துடன் பாழாகிவிடும். தாய் மோசமான பெண்ணாக இருந்தவள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள். தாய்க்கும் பிள்ளைகளுக்குமிடையே இருக்கும் உறவு நொறுங்கும். மரியாம்மாவிற்கு இது ஆதாயமளிக்கக்கூடிய ஒரு விஷயம். இந்த நிலை தொடர்வது மரியாம்மாவுக்கு நல்லது. அந்த ரகசியத்தை ரகசியமாகவே அந்தப் பெண் பாதுகாத்து வைத்திருப்பாள். அப்பாவி கொச்சு பாருவிற்கு ஒரு குழந்தை கிடைத்தது. ஒரு வளர்ப்புத் தாய் என்ற வகையில் அவள் அதன்மீது அன்பு செலுத்திவிட்டாள். அதனால் அவள் அதை வளர்ப்பதற்காக ஏதாவது வேண்டும் என்கிறாள். அவளுக்கு அந்த கன்னிப்பெண் கர்ப்பம் தரித்தது ஒரு பிரச்சினையாகிவிட்டது. இல்லாவிட்டால் அந்த நகராட்சி துப்புரவுத் தொழிலாளியான பெண் தெருவைப் பெருக்கிப் பெருக்கி வாழ்ந்துகொண்டிருப்பாள். பிரச்சினைகள் இல்லாமல், வேறொன்றைக் கூறி மனதிற்குள் பதைபதைப்பில்லாமல்... இன்னும் ஒரு கால் நொண்டியாகவும், கை தளர்ந்த நிலையிலும் இருக்கும் ஒரு சிறுவன் இருக்கிறான். அவனுடைய கதையோ?

3

ந்த குழந்தை கொச்சு பாருவை "அம்மா' என்று அழைக்கிறது. கொச்சு பாரு அவனுடைய தாய்தானே? அவள் அவனுக்கு வயிற்றில் இடம் தரவில்லையென்பது மட்டுமே விஷயம்!

பன்னிரண்டு வயதான அந்த சிறுவன் எப்படியோ ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டான். பக்கத்து வீடுகளில் இருக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும்போது சண்டை உண்டாகி, ஒரு கேடி சிறுவன் ஒருவேளை அந்த ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். இல்லாவிட்டால்... அந்த கேடி சிறுவனின் தாய் அவனை சாபமிட்டுக் கூறியதாக இருக்கலாம். எந்தவகையில் பார்த்தாலும், வேண்டியதில்லை. தான் கொச்சு பாரு பெற்று உண்டானவனல்ல என்பதை அவன் தெரிந்துகொண்டான். அவனுடைய தந்தை யாரென்றும் உறுதியாகத் தெரியவில்லை. ஒருநாள் அவன் தன் தாயிடம் கேட்டான்:

""அம்மா... நீங்க என்னைப் பெத்தெடுக்கலையா?''

அந்த கேள்வி எதிர்பாராத ஒன்றாக இருந்தது.

அதற்கு அவள் நேரடியாக பதில் கூறவில்லை.

அவன்மீது கொச்சு பாரு கோபப்பட்டாள்.

""உருப்படியில்லாததையெல்லாம் ஏன்டா கேட்குறே?''

அவன் பேசவில்லை. ஆனால், எப்போதும் அடக்கி வைத்துக்கொண்டிருக்கும் ஒரு கேள்வியா அது? இல்லை... அப்படி இருக்காது.

கொச்சு பாரு அதை மனம்திறந்து கூறக்கூடாதா?

அவள் எதற்காக அதை மறைத்து வைத்திருக்க வேண்டும்?

அந்த ஏழைப் பெண்ணின் கஷ்டங்களை அவன் புரிந்துகொள்வதுண்டு. தனக்காக தன்னுடைய தாய் கஷ்டப்படுகிறாள் என்ற ஒரு எண்ணம் அவனுக்குண்டு. தன்னைப் பிரசவிக்காத தாய் எதற்காக அவனுக்காகத் துன்பங்களை அனுபவிக்கிறாள் என்பதையும் சில நேரங்களில் அவன் நினைப்பான். துன்பங்களைத் தங்கிக்கொள்ள முடியாத நிலைவரும்போது தன்னையே மறந்து கொச்சு பாரு, மரியாம்மாவைக் குற்றம்சாட்டுவாள். தேவையற்ற சுமையை அவளுடைய தலையில் கொண்டுவைத்துவிட்டாôளே என்று கூறி குற்றம் சாட்டவில்லை... அவளுடன் தொடர்புகொள்ள முடிந்திருந்தால், மனஅமைதி கிடைத்திருக்கும் என்பதுதான் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டு. அப்படி ஒருநாள் மரியாம்மாவைக் குறைகூறிக்கொண்டிருந்தபோது, அவன் கேட்டான்:

""அவங்க என்ன செஞ்சாங்கம்மா?''

கொச்சு பாரு மனமறியாமல் கூறிவிட்டாள். ""உன் பேரைச் சொல்லி அந்த மருத்துவச்சி பணத்தைப் பிடுங்கிக்கிட்டிருக்கா.''

ஆர்வத்துடன் அவன் மீண்டும் தொடர்ந்து கேட்டான்:

""யாருகிட்ட இருந்தம்மா?''

அதற்கு பதிலில்லை. அந்த கேள்விக்கு பதில் கூறியிருந்தால், அவனுடைய கதை வெளிப்பட்டிருக்கும். சந்தேகத்திற்கான இடத்தைவிட்டு, தன்னுடைய நிலை அவனுக்குத் தெரிந்திருக்கும். அப்படியே இருந்தாலும் என்ன?

எந்தப் பெண் அவனைப் பெற்றெடுத்தாள் என்ற விஷயம் கொச்சு பாருவுக்குத் தெரியாது.

அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ஒருநாள் அவன் கொச்சு பாருவிடம் கூறினான்: ""அம்மா... நான் ஒரு விஷயம் சொல்றேன். நீங்க அதுக்கு சம்மதிக்கணும்.''

""என்ன விஷயம் மகனே?''

""நான் பேருந்து நிலையத்திற்குப்போய் பிச்சை எடுக்குறேன். யாராவது எதையாவது தருவாங்கம்மா. அப்போ உங்களோட கஷ்டம் கொஞ்சம் குறையும்.''

அந்த விஷயத்தை திடீரென்று ஒப்புக்கொள்வதற்கு கொச்சு பாருவால் முடியவில்லை. பெரிய நிலையில் வாழ்கிறாள் என்று கூறப்படும் ஏதோ ஒருத்தியின் வயிற்றில் பிறந்தவன் என்ற விஷயம் கொச்சு பாருவுக்குத் தெரியும். அந்த தலையெழுத்துடன் பொருந்துவதற்கு உடனடியாக கொச்சு பாருவால் முடியவில்லை. என்ன ஒரு அதிர்ஷ்டக்கேடான நிலை அது!

ஒரு பெரிய இரண்டடுக்கு மாளிகை கொச்சு பாருவின் கண்களுக்கு முன்னால் தோன்றியது. அங்கு ஓடி குதித்து விளையாடித் திரியவேண்டிய குழந்தை... அவன் பேருந்து நிலையத்தில் இருந்துகொண்டு பிச்சையெடுக்க வேண்டும்! அதைத் தவிர, அவனுக்கு வேறு என்ன விதிக்கப்பட்டிருக்கிறது? எனினும், அதற்கு ஒப்புதல் தர கொச்சு பாருவால் இயலாது. ஒருவேளை அவன் அவள் பெற்றெடுத்து உண்டான குழந்தையாக இருந்திருந்தால், அவள் ஒப்புக்கொண்டிருப்பாள். அந்தவகையில் ஒரு குழந்தையின் வாழ்க்கை பிச்சையெடுப்ப திலிருந்துதான் ஆரம்பமாகமுடியும்.

அவன் தினமும் வற்புறுத்துகிறான். தாயின் கழுத்தைக் கட்டிப்பிடித்துத் தொங்கியவாறு அவன் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறான்.

""அம்மா... நான் நாலணா சம்பாதிச்சுக் கொண்டுவரட்டுமா?''

அவள் அவனுடைய நெற்றியில் முத்தமிடும்போது, கண்ணீரால் அந்த இடம் ஈரமானது.

அவன் கேட்டான்: ""அம்மா... நீங்க ஏன் அழறீங்க?''

அவனுடைய வற்புறுத்தலுக்கு கொச்சு பாரு அடிபணிந்தாள். உற்சாகமடைந்தவனாக, நொண்டி... நொண்டி தளர்ந்த கையை ஆட்டி... ஆட்டி... அவன் பேருந்து நிலையத்திற்குச் சென்றான். முகத்தில் நல்ல அழகைக்கொண்ட ஒரு குழந்தை... ஒரே பார்வை யிலேயே அவனுக்கு எதையாவது தந்துவிடுவார்கள். அவன் இப்படித்தான் யாசிக்க ஆரம்பித்தான்...

"அப்பா... அம்மா... யாருமில்லாத ஒரு நொண்டி. கையும் தளர்ந்து போச்சு... ஒரு பைசா தாங்க.'

அந்த வார்த்தைகள் அவனுக்கு யாரும் கூறி கற்றுத் தந்ததில்லை. தந்தையும் தாயும் இல்லையென்று கூறுவதற்கு அவனுக்கு எப்படித் தோன்றியதோ... தெரியவில்லை.

முதல் நாள் மோசமில்லை. முக்கால் ரூபாய் கிடைத்தது. வீட்டிற்கு வந்து அள்ளி... அள்ளி... பைசாக்களை அவன் கொச்சு பாருவின் கையில் கொடுத்தான். தொடர்ந்து துள்ளிக்குதித்து குலுங்கிக் குலுங்கி சிரித்தான். அந்தச் சிரிப்பு அந்தச் சிறிய குடிசையை பிரகாசமானதாக்கியது.

கொச்சு பாரு அவனை வாரியெடுத்து முத்தமிட்டாள்.

ஆனால்,அவளுடைய கண்ணிலிருந்து இடைவெளி யில்லாமல் நீர் வழிந்தது. அதைப் பார்த்து அவன் கேட்டான்:

""அம்மா, நீங்க ஏன் அழறீங்க?''

தாயின் கண்ணீரைப் பார்த்து அவனுடைய முகம் வாடியது.

""அம்மா, நீங்க எதுவுமே சொல்லலையே?''

மறுநாள் அவன் பிச்சையெடுப்பதற்காகச் சென்றான். அன்றும் அவனுக்கு மோசமானதாக இல்லை. அவன் பிச்சையெடுப்பதற்குக் கற்றுக் கொண்டான். "தந்தையும் தாயும் இல்லாத, யாருமே இல்லாத' என்று அவன் கூறியபோது, ஒருவன் கேட்டான்:

""உன்னோட அப்பாவும் அம்மாவும் எங்கேடா இருக்காங்க?''

அவன் நிலைகுலைந்து போய்விட்டான். தந்தையும் தாயும் எங்கிருக்கிறார்கள் என்று அவன் கூறவேண்டும். இறந்து போய்விட்டார்கள் என்று கூறவேண்டுமா? அவனை இணைக்கக்கூடிய கதை அவனுக்குச் சிறிதளவுகூட தெரியாது. எனினும், அவன் அந்த வார்த்தைகளைக் கூறித்தான் பிச்சையெடுத்துக்கொண்டு வந்தான்.

ஒருநாள் மதியவேளையில் பேருந்து நிலையத்தில் இருந்தவாறு அவன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். நகரும் அரண்மனையைப்போல ஒரு கார் சோடா கடைக்கு முன்னால் வந்து, திடீரென்று நின்றது. காரில் உள்ளவர்களுக்கு சோடா பருகவேண்டும். நான்கு குழந்தைகளும், குழந்தைகளின் தாயும் தந்தையும் அந்த காரில் இருந்தார்கள். அவன் நொண்டியவாறு வேகமாக அந்த காருக்கு அருகில் சென்றான்.

""அம்மா அப்பா யாருமே இல்லாத ஒரு நொண்டி நான்... கையும் தளர்ந்துபோன ஒருத்தன்... ஒரு பைசா தாங்க.''

திரேஸ்யாம்மாவின் கவனம் அந்த நொண்டிக்கொண்டிருந்த காலிலும், மெலிந்து தொங்கிக்கொண்டிருந்த கையிலும் பதிந்தது. அந்த முகத்தை அவள் முதன்முறையாகப் பார்க்கிறாள்.

அவளுடைய கணவரும் அவனுடைய முகத்தை கூர்ந்து பார்த்தார்.

""அம்மா அப்பா யாருமே இல்லாத ஒரு நொண்டி நான்... கையும் தளர்ந்து போன ஒருத்தன்... ஒரு பைசா தாங்க.''

அவர் திரேஸ்யாம்மாவிடம் கூறினார்:

""நல்ல... அழகான பையன். உன் முகச்சாயல் இருக்கு. உன் மூக்கைப்போலவே அவனோட மூக்கும் இருக்கு.''

அவர் ஒரு ஐந்து பைசா நாணயத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

கார் நகர்ந்து முன்னோக்கிச் சென்றது. வெளிறி வெளுத்து, கண்களை மூடி திரேஸ்யாம்மா சாய்ந்து கிடந்தாள். அவர் பதைபதைப்புடன் குலுக்கி அழைத்தார். அவள் முனகியவாறு அழைப்பதைக் கேட்டாள்.

அவர் கேட்டார்:

""உனக்கு என்னாச்சு?''

""எனக்கு ஒருமாதிரி இருக்கு.''

அந்த நகரும் அரண்மனை முன்னோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அது அப்படியே போய்க்கொண்டிருந்தது.