ங்கள் குழந்தைப் பருவத்தில், "சென்னை பாம்பே கல்கத்தா, செவுட்ல ரெண்டு கொடுக்கட்டா' என்று ஒரு பாட்டும், "டில்லி பம்பாய் கலகத்தா திருப்பி நானும் கொடுக்கட்டா' என்று எதிர்ப் பாட்டும் பாடிக் கொண்டு திரிவோம். எங்கள் காலத்து நர்ஸரி ரைம்ஸ் இவைகள்தான். இம் மூன்று துறைமுக நகரங்கள் பற்றிய செவிவழிச் செய்தியும் புனைவு களும் குழந்தைகள் வரை, இப்படி வேடிக்கை வரிகளாக உருவாகி உலவிக் கொண்டிருந்தன. தங்கள் வணிக நோக்கங்களுக்காக, பிரிட்டிஷார் இங்கெல்லாம் காலூன்றினர் என்கிற நிதர்சனம், இதன் பின்னணியில் இருப்பது குழந்தைகளுக்குத் தெரியாது. பெரியவர்களுக்கும் தெரியாது என்பதுதான் நாம் அடிமையான சரித்திரம். அநேகமான மேற்கு நாட்டுக் கண்டுபிடிப்புகள் இம்மூன்று நகரங்களில் முதலில் அறிமுகமானது போலவே சினிமாவும், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இங்கேதான், அதுவும் ஒரு சந்தைப் பொருளாகவே அறிமுகமாயிற்று. அதிலும் வங்காளமே முதல் வரவேற்பை நல்கியது. அடுத்து மும்பை, அடுத்து சென்னை. (பின்னால் அது நல்ல கலை வடிவம் பெறத் தொடங்கியது வங்காளத்தில் மட்டும்தான்.) உலகெங்கிலும் நிகழ்ந்தது போலவே, இந்தியாவிலும் இந்த மூன்று இடங்களிலும் சினிமா, நாடகத்தின் நீட்சியாகவே தோன்றின. வங்காள சினிமா என்பது முதலில் நாடகத்தின் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டப்பட்ட துணுக்குகள் போலிருந்தன என்பதாகத் தகவல்கள் உள்ளன.

நாடகங்களே சினிமாவின் ஆதி வடிவமாக அல்லது தாய் வடிவாக இருந்தது என்பதற்கு தமிழ் சினிமாவும் விதிவிலக்கல்ல. ஆரம்ப கால சினிமாவுக்கான வசனம் பாடல்கள் எழுதிய பலரும் நாடகக் கலைஞர்களே.முதல் தமிழ்ப் பேசும் படமான "காளிதாஸ்' படத்திற்குப் பாடல் எழுதியது மதுர கவி பாஸ்கரதாஸ். கிராமஃபோன் ரிக்கார்டுகளுக்கும், பல்வேறு சபாக்களின் தமிழ் நாடகங்களுக்கும் பாடல்கள் எழுதுவதில் வல்லவர் என்று அறியப்பட்டவர். அவருடைய நாட்குறிப்புகள் மிகப் பெரிய நூலாக வந்துள்ளது. அதை வாசிக்கும்போது அவர் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு பாடல்களாவது நாடகங்களுக்கு எழுதி விடுவார் என்று தெரிய முடிகிறது. அவரே மெட்டுப் போட்டு நடிகர்களுக்குப் பாடும் பயிற்சியும், ஆடும் பயிற்சியும் கற்றுத் தந்திருக்கிறார். அவரே தமிழ் சினிமாவின் முதல் பாடலாசிரியராக அறியப்படுகிறார்.

அன்றைய காலகட்டத்தின், வெகுஜன வரவேற்பு பெற்ற பல மேடை நாடகக் கலைஞர்களைப் போலவே தேச பக்தியும், காந்திய பக்தியும் அவரது பேச்சு, மூச்சு, பாடல்களில் இடம்பெற்றிருந்தன.

அப்போதைய எல்லா நாடகங்களிலும், அவை புராண நாடகங்களாக இருந்தாலும்கூட இடையிடையே நாட்டு விடுதலைப் பாடல்கள் முழங்காமல் இருந்ததில்லை. கொக்குகள் என்கிற சொல்லே வெள்ளையருக்கான குறியீடாக பாடல்களில் பாடப்பட்டிருக்கின்றன. வள்ளி திருமணம் நாடகத்திலும், அதுவே சினிமாவாக எடுக்கப்பட்டபோது சினிமாவிலும் ஆலோலம் ஆலோலம் ஆலோலம் அன்னம் கௌதாரிகள் ஆலோலமே வெட்கம் கெட்ட வெள்ளைக் கொக்குகளா விரட்டி அடித்தாலும் வாரீகளா என்கிற பாஸ்கரதாஸின் பாடல் இடம் பெற்றிருக்கிறது. அது வெற்றுப் பிரச்சாரமல்ல பாடலாசிரியரில் இருந்து கலைஞர்கள் வரை ஆத்மார்த்தமான விடுதலை உணர்வோடு பாடி நடித்தவை. நாடக நடிகர்களை பாஸ்கரதாஸ் கள்ளுக்கடை மறியலுக்குச் செல்லக் கூட அனுமதித்திருக்கிறார். அவர், ஆரம்ப கால இந்தியப் படங்களின் கதைக்களன் பெரும்பாலும் மகாபாரத, ராமாயண புராணக் கதைகளையும் அதன் உப கதைகளையும் சார்ந்து அமைந்திருந்தது. தமிழிலும் அதற்கு விதிவிலக்கில்லை என்றாலும் இங்கு மட்டும் வித்தியாசமாக, புனைவுகள் மிகுந்த கந்த புராணத்தின் தாக்கத்தாலும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனை ஐந்து நிலத்தாருமே தமிழ்க்கடவுளாக வழிபட்டார்கள் என்பதாலும், முருகன் வள்ளி கதை சார்ந்த நாடகங்களும் சினிமாக்களும் அதிகமாக வந்து பிரபலமாகவும் இருந்திருக்கின்றன. அதிலும் முருகன் தெய்வானை திருமணம், கதைகளாக நடிக்கப்படவில்லை. அதில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லையோ என்னவோ. என்பதைக் கவனிக்க வேண்டும். அதேபோல, குடிமக்கள் காப்பியமாகிய கோவலன் கண்ணகி கதையும் அதிகமாக நடிக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி அவர் அறியாமலேயே தமிழ் நாடகங்களில், சினிமாக்களில் ஒரு வீர வணக்கத்துக்குரிய நாயகனாக விளங்கினார். பிற்காலத்தில் தமிழ் சினிமா, திராவிட இயக்கங்களின் பிரகடன மேடைகளாக விளங்கியபோது கூட, காந்தி நாயகனாகவே மதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் தன் பாடல்களில் காந்தியை அதிகமாகக் குறிப்பிட்டிருக் கிறார். நிஜ முதல்வராவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஜி.ஆரை நிழல் முதல்வராக்கிப் பார்த்த "எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் பிரதான "நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்' பாடலின் முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார்-இந்த மானிடர் திருந்திடப் பிறந்தார்-இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை-அந்த மேலோர் சொன்னதை மறந்தார் என்கிற வரிகள் மூலமும், இன்னும் பல படங்களின் பாடல்களில் அண்ணாவை தென்னாட்டுக் காந்தி என்று சொல்வதன் மூலமும், காந்தி தமிழ் அரசியலுக்கும் பயன்பட்டார் எனத் தமிழ் சினிமா வரலாறு காட்டுகிறது. தி.மு.க.வின் அதிகாரபூர்வ பிரச்சாரப்படம் என்று சொல்லத்தக்க உதயசூரியன் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வழங்கிய, எஸ்.எஸ். ராஜேந்திரன் நடிக்க, அண்ணா கதை, வசனம் எழுதிய படமான "எதையும் தாங்கும் இதயம்' படத்தில் பொம்மை விற்கும் காட்சி ஒன்றில், வெண்தாடி வேந்தரென்ற இவர்தான் ஜாதி வெறியை விரட்ட வந்த பெரியார் அன்பே உருவான இவர்தான் –நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் காந்தியார் என்று வரும். இதன் மூலம் தி.மு.க. என்ற அரசியல் கட்சியின் நிலைப்பாடுகள் பெரியாரின் சமூக இயக்க அரசியலிலிருந்து எப்படி அகண்ட ஆதரவு வேண்டி மாறின என்பதைக் காணலாம். "ஒன்றே குலம் என்று படுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்' என்று புலமைப்பித்தனும், "ஒன்றே மாந்தர் குலம் ஒருவனே தேவன் என்றே பேசுதல் அறிவாகும், அது நன்றே ஆகும் என உணர்ந்திடாரை மக்கள் என்றே கூறுவது தவறாகும்' என உடுமலை நாராயண கவியும் பாடியது. திராவிடக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டதையே சொல்கின்றன. தமிழ் சினிமாப் பாடல்கள் இதற்கெல்லாம் சாட்சியாக நிற்கின்றன.

Advertisment

தமிழிசை மூவரின் தொடர்ச்சியாக தமிழிசை நால்வராகவே அறியப்பட்ட பாபனாசம் சிவன் தமிழ் மெல்லிசைச் சினிமாப் பாடல்களில் புதிய திறப்பை உண்டுபண்ணினார் எனலாம். தமிழிசை மூவரின் காலமாகிய 19-ஆம் நூற்றாண்டில் தமிழும் சமஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாள நடையிலேயே பாடல்கள் இருந்தன. பொதுவாக அதுவரை பாடப்பட்ட கீர்த்தனைகள் கடவுள்களின் அவதார, அதிசய மகிமைகளை, ஆயிரம் நாமாவளிகளை மீண்டும் அடுக்குகிற விதமாகவே இருந்தன. அதில் ஒரு நவீனமோ கற்பனையோ இல்லை.

பாபனாசம் சிவன் இங்கே மாறுபடுகிறார்.

எந்தன் இடது தோளும் கண்ணும் துடிப்பதேனோ... என்ற சகுந்தலை பாடலில் வருவது போன்ற பேச்சு வழக்குகள் ஊடாடும் திரைப்படப் பாடல்கள் எழுதி, பலவற்றிற்கு அவரே இசை அமைத்து சினிமா மெல்லிசைக்கு வழி வகுத்திருக்கிறார். அசோக் குமார் படத்தின் பாடல்களில் ஒன்றான "பூமியில் மானிட ஜென்மமடைந்து புண்ணியமின்றி விலங்குகள் போல்' என்கிற பாடலில் புத்தரைப் பற்றிய வரிகள், அவரது வாசிப்பு விசாலத்திற்குச் சான்று சொல்லுபவை. புத்தர் பற்றி அதுவரை பாடப்பட்டதில்லை. சிருங்கார ரசம் கொஞ்சும் வர்ணிப்புகளுக்கு, சிவ கவியில் வரும் "வதனமே சந்த்ர பிம்பமோ' ஒன்று போதும். இதன் "சிந்து பைரவி' ராகத்தில் இழையாடும் "புன்னகை தவழ் பூங்கொடியாள்' காலம் கடந்து இதே ராக சாயலில் ஒலிக்கும் "பவளக் கொடியிலே முத்துகள் பூத்தால் புன்னகை' என்றே பெயராகும் என்ற வாலியின் பாடலில் எதிரொலிக்கும் அவர் சினிமாவில் கையாண்ட ராகங்கள் சாகா வரம் பெற்றவை.

Advertisment

அநேகமாக அவற்றைத் தாண்டி புதிய ராகங் களை வெகுசிலரே பயன்படுத்தி இருக்கின்றனர்.

உதாரணம் சாருகேசி யில் அமைந்த "மன்மத லீலையை வென்றாருண் டோ..' பாடல். சாருகேசி இன்று வரை 72 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. சாருகேசி அல்லது அதன் சாயலில் தமிழ் சினிமாவின் பாடல்களின் பயணத்தைப் பார்க்கலாம் 1944- ஹரிதாஸ், 1947- ராஜகுமாரி- மாறன் அவதாரம் மணி மந்திர வாதியிவர்... 1950- வேலைக்காரி- "நோயற்ற வாழ்வே', 1956 மதுரை வீரன் - ஆடல் காணீரோ, 1958 சாரங்கதாரா- வசந்த முல்லை போலே வந்து, 1958- காத்தவராயன் - வா கலாப மயிலே, 1962- குங்குமம்- தூங்காத கண்ணென்று ஒன்று, 1967- அனுபவி ராஜா அனுபவி- முத்துக் குளிக்க வாரீகளா, 1971- ரிக்ஷாக்காரன்- அழகிய தமிழ் மகள் இவள்- 1984- தம்பிக்கு எந்த ஊரு- காதலின் தீபம் ஒன்று என்று நீளும் சாருகேசியின் பயணம். சங்கரபராணத்திற்கு, இன்னொரு பயணப் பட்டியல் இடலாம்.

"ஆடல் காணீரோ' பாடலுக்கும் "முத்துக் குளிக்க வாரீகளா'வுக்கும் ஒரே சாருகேசி ராகம் என்பதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கான பாதையை அமைத்தது பாபநாசம் சிவன் என்றால் மிகையாகாது. அவரைத் தொடர்ந்து வந்த, ஜி.ராமனாதன். எஸ்.எம். சுப்பையா நாயுடு, சி.ஆர். சுப்பராமன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா என்று பலரும் எந்த விதமான பாடலுக்கும் கர்நாடக ராகங்களையே பயன் படுத்தியிருக்கிறார்கள். தமிழிசை இயக்கம் தோன்றியபோது இருந்த அரங்கேற்றச் சங்கடங்களை, மேல்த்தட்டு வர்க்க அரசியலை, திரைப்பட இசை நீக்கியிருக்கிறது என்றால் மிகையில்லை. செவ்வியல் இசையை சினிமா இசை விழுங்கி விட்டது என்று சொல்பவர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.

எந்தத் திரையிசையிலும் கர்நாடக இசையின் ஆதிக் கூறுகள் இல்லாமல் இல்லை. ஆனால் ஒரு சினிமாப் பாடலில் தன்னை மறக்கிற பாமர ரசிகனுக்கு இந்த ராகங்கள் பற்றிய எந்தக் கவலையும் தேவையில்லை. அவன் "போறவளே போறவளே பொன்னுரங்கம்...' பாடலை நாட்டுப் புறப் பாடலாகவே ரசிப்பான். அதில் இருப்பது "மோகன ராகம்' என்பது தெரியாமலே. அவன் இரவு நேரப் பண்பலை வானொலி நிகழ்ச்சிகளின் சோகப் பாடல்களில் தன்னைக் கரைத்துக் கொள்வான்.

அந்தக் கால தெம்மாங்குப் பாடல்களைப் போல உடல் அசதி தோன்றாமல் வேலை செய்யும் நேரத்திலும் பயணத்திலும் இன்றைக்கு திரைப் பாடல்கள் இருக்கின்றன. வீடு கட்டும் தொழிலாளிகள், விவசாயிகள் எல்லோரும் தங்கள் அலைபேசியில் பாடல் கேட்டபடியே வேலை செய்கிறார்கள்.

அவர்களது பெரும்பான்மை விருப்பம் இளையராஜா.

மெட்டுக்கு பாட்டு என்பது சினிமாவின் எழுதப்படாத விதி. எதையாவது முணுமுணுத்துக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர்கள், பாடகர்களின் வாயில் மெட்டுக்கள் வருவது இயற்கை. பிரபலங்கள் தங்களுக்குப் பிடித்த ராகங்கள், டியூன்களுக்கு எழுதும்படியும் சொல்வதுண்டு.

எம்.எஸ் பாடிய "காற்றினிலே வரும் கீதம்' பாடல் வங்காளப் பாடல் ஒன்றின் தழுவல் என்கிறார் வாமனன். ஆனால் அது ரதிபதிப்ரியா என்ற ராகத் தில் அமைந்தது என்கிறார் இசை தெரிந்த ஒரு நண்பர். மெட்டுகளுக்காகப் பலர் பாட்டு எழுதியிருக் கிறார்கள். பாரதிதாசன் "ஆதித்தன் கனவு' படத்தில் ஒரு பாட்டு எழுதி இருக்கிறார். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த "மருதகாசி' ஒரு முக்கியமான கவிஞர். இந்தி சினிமாக்களின் பல கூறுகள் தமிழில் பாதிப்பினை ஏற்படுத்தின. அவற்றில் ஒன்று அருமையான பாட்டு டியூன்கள். பாலிவுட்டின் சினிமாக்கதைகள் எடுத்தாளப்படும்போது அதே படம் அல்லது வேறு படத்தின் பாடல்களின் மெட்டுகள் இங்கும் கையாளப்பட்டன.

மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நிறைய நிகழ்ந்தது இது. அலிபாபா படத்தின் அநேகமான பாடல்கள் இந்திப் படத்தின் தழுவல் மெட்டுகள். எஸ். தக்ஷிணாமூர்த்தி இசை. மருதகாசி, பாடல்கள். இது நீண்ட காலம் தொடர்ந்தது. பின்னாளில் வேதா கண்ணதாசன் கூட்டணியில் பல பாடல்கள் வந்தன. அப்போதும், "நான் மலரோடு தனியாக ஏன் அங்கு நின்றேன்.'“போன்ற காவிய நயம்மிக்க பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். கைதி கண்ணாயிரம் படத்தில் கட்டாயத்தின் பேரில் கே.வி.மகாதேவனே, அதன் ஒரிஜினலான, "கைதி எண் 911' படத்தின் முக்கியமான ’ஙங்ங்ற்ட்ண் ஙங்ங்ற்ட்ண் இஹஹற்ர்ய் நங் இஹஸ்ரீட்ய்ஹ ழஹழ்ஹ’ என்ற பாடலைக் காப்பியிடித்திருந்தார். கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்,’ என்று சுசிலா பாடும் பாடல் மிகப் பிரபலமானது. ஆனால் மருதகாசியின் சொந்தப் புலமையும் அதில் மிளிரும். மருதகாசி தமிழ் சினிமா தந்த ஒரு ஒப்பற்ற பாடலாசிரியர்.

எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும் அழுதாலும் தொழுதாலும் அதில் ஓரெழுத்தும் மாறாதே என்று உமர்கய்யாமின் வரிகளை எளிமையாகத் தமிழ் ஆக்கியிருக்கிறார் மருதகாசி. இவருடைய பல பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியதாகத் தவறாகக் குறிப்பிடும் அளவுக்குபொது உடைமை, திராவிட இயக்கக் கருத்துகள் நிறைந்தவை.

திராவிட இயக்கத் தலைவர்கள் அண்ணா, கலைஞர் போன்றவர்கள் நாடகத்திலிருந்து சினிமா வந்தபோது உடுமலை நாராயண கவி, மருதகாசி, போன்ற பலரும் சினிமாவுக்கு வந்தார்கள். அவர்களுக்கு இயல்பாகவே திராவிட இயக்கச் சிந்தனைகள் இருந்ததில் வியப்பில்லை. மருதகாசியின் பாடல்கள் நாட்டுப்புறத்தன்மையும் உயரிய காதல் சுவையும் கொண்டவை. எம்.ஜி.ஆர் தன் ஆளுமையைக் கட்டமைக்க உதவிய கவிஞர்கள் பலரில் மருதகாசி முக்கியமானவர். கண்ணதாசன், வாலி, மாயவநாதன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் வந்த பின்னும் எம்.ஜி.ஆர் அவரையும் உடுமலை நாராயண கவியையும் அழைத்து தன் படங்களுக்குப் பாடல் எழுதச் சொல்லியிருக்கிறார். உடுமலை நாராயணகவியின் பாடல்களை என்.எஸ் கிருஷ்ணன் தன் கருத்துகளைச் சொல்வதற்கு அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

இருவரும் திராவிட இயக்கப் பின்புலம் உடையவர்கள்.ஆனாலும் உடுமலை நாராயண கவி திருவிளையாடல்ப் புராணக் கதைகளையும், தசாவதாரக் கதைகளையும் எந்த வைதீகப் பாடலாசிரியர்களை விடவும் சிறப்பாக எளிமையாக எழுதி இருக்கிறார். ஆதி பராசக்தியின் பிறப்பையும் சாக்த வழிபாட்டுக் கூறுகளையும் உள்ளடக்கி அவர் ஆதி பராசக்தியில் டைட்டில் சாங் எழுதியிருக்கிறார்.

மருதகாசியின் பிரபலமான "ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை' பாடலின் ஒரு சரணம்,’’

வளர்ந்து விட்ட பருவப் பெண் போல் உனக்கு வெட்கமா-தலை

வளைஞ்சு சும்மா பாக்குறியே தரையின் பக்கமா இது

வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா என்

மனைக்கு வரக் காத்திருக்கும் நீயும் சொல்லம்மா

இதில் கடைசி வரியை நீக்கினாலோ, மாற்றினாலோ,

அற்புதமான ஹைகூவாகி விடும். தமிழின் மிக நீளப் படமான சம்பூர்ண ராமாயணத்தின் பாடல்கள்

அனைத்தையும் எழுதியது மருதகாசி. ராமாயண காவியத்தின் பல பகுதிகளைப் பாடலாகவே எழுதிக் காட்சியாக்கி இருப்பார்.

அந்த வகையில் அது ஒரு குட்டி ராமாயண காவியம். இதற்கு வசனம் ஏ.பி.நாகராஜன். அவர் தனது பிற்காலப் படங்களில் இதே உத்திகளைப் பயன்படுத்தி கதை சொல்லலுக்குப் பாடல்களைப் பயன்படுத்தியிருப்பார். அவருக்கு அப்போது உதவியவர் கண்ணதாசன். சரஸ்வதி சபதம் படத்தின் மையக் கருத்தினை அவர் ஒரே பாடலில் சொல்லி இருப்பார். உதாரணம்,

கல்வியா செல்வமா வீரமா

அன்னையா தந்தையா தெய்வமா

ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா-இதில்

உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா

கண்ணதாசன் தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தம். படத்தின் கதைக்கேற்ப பாடல்கள் எழுதுவதில் சமர்த்தர். அந்தப் பாணியை அவரே ஆரம்பித்து வைத்தார்.

kk

அவருக்கு முந்திய காலங்களின் நாயகன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். மக்களின் புழங்குமொழியிலிருந்து தன் அசாத்தியக் கற்பனைகளை வடிவமைத்தவன். உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகத்தில் எம்.ஜி.ஆர் பற்றிய பாடம் ஒன்று. அதில் அவரது வாழ்வு, அரசியல், சமூக சாதனைகளைவிட அதிகமும் இடம்பெற்றிருப்பது பட்டுக்கோட்டையின் சினிமாப் பாடல்களே. அப்படி அவர் தன் பிம்பத்தைக் கட்டமைக்க பட்டுக்கோட்டையின் பாடல்கள் உதவின. சமூக சீர்திருத்த, பொது உடைமைக் கருத்துகள் பற்றி அவர் அதிகம் பாடியிருந்தாலும் அவர், பக்தி, காதல், நகைச்சுவை என்று எல்லாப் பிரிவுகளிலும் பல முத்திரைப் பாடல்கள் எழுதி இருக்கிறார். ஸ்ரீதரின் அற்புதமான காதல் கதையான "கல்யாணபரிசு' படத்திற்கு ஏற்ற பாடல்களாக எழுதி இருப்பார்.

"துள்ளாத மனமும் துள்ளும்' பாடல், படத்தின் மையக் கதையை நான்கு துயர வரிகளில் சொல்கிற பாடல்

அன்பு மயில் ஆடலுக்கு மேடை அமைத்தான்

துன்பம் எனும் நாடகத்தைக் கண்டு ரசித்தான்

இன்பத்தினை விதிக்கு இரை கொடுத்தான்

இருந்தும் இல்லாத உருவெடுத்தான்

இரண்டையும் கேட்பவர்கள் அவர் இறந்து போன கவிஞன் என்பதை நம்ப மாட்டார்கள். அமர வரிகள் அவை.

உப்புக் கல்லை வைரமென்று சொன்னால்- நம்பி

ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் நாம்

உளறியென்ன கதறியென்ன ஒன்றுமே

நடக்கவில்லை தோழா.. ரொம்ப நாளா

என்கிற பட்டுக்கோட்டையின் வரிகள் தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்புபவை.

தஞ்சை ராமையாதாஸ் பெரும் புலவர் என்றாலும் எளிமையான பாடல்களையே எழுதியவர். என்னால் மறக்க முடியாத இவரது ஒரு வரி, "குலேபகாவலி' (1956) படத்தில் சந்திரபாபு பாடும்

இங்கே எல்லாத்துக்கும் இடம் குடுக்கிற அல்லாவே-நீயும்

ஏமாந்துட்டா போட்டுடுவான் குல்லாவே’’

அது தவிர கதை, வசனம், பாடல்கள் மூன்றும் எழுதுவதிலும் சிறந்தவர். அவரது "மிஸ்ஸியம்மா',

"அடுத்தவீட்டுப் பெண்' போன்ற படங்களின் நகைச்சுவை அம்சம் பிரபலமானது. மொழி மாற்றப் படங்களான தேவதாஸ், பாதாள பைரவி, மாயாபஜார் ஆகியன தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் சில என்றே சொல்லத்தக்க தமிழ்த் தன்மையுடையவையாக மாறியிருக்கும். அசலான திறமைக்கு மரியாதை கிடைக்காமல், மொழி மாற்றப் படங்களுக்கே வசனம், பாடல் எழுதிய ஒரு பாடலாசிரியர் கம்பதாசன். "மொகலெ ஆஜம்'என்ற இந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் அவர் எழுதியிருக்கும் வசனமும் பாடல்களும் அதை ஒரு தமிழ்க் காவியமாகவே மாற்றி இருந்தது. பி.யு.சின்னப்பா நடித்த "மங்கையர்க்கரசி' படத்தின் கதை வசனங்களை கவிஞர் சுரதாவுடன் எழுதியதுடன் அதில் கவிஞன் வித்யாபதியாகவும் நடித்திருப்பார். இந்த நிஜ தேவதாஸின் வாழ்க்கை ஒரு துயர சினிமாவாக முடிந்து போனது.

சுரதாவின் வரிகள், உவமைகள், காவியத் தன்மை நிறைந்தது பிரபலமான சில வரிகள்.

கட்டுக்குலையாத பட்டுத் தளிர் மேனி

கண்ணில் அபிநயம் காட்டுதே இன்பக்

காவியத் தேனள்ளி ஊட்டுதே

*

நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போல்

நேச முகம் இரண்டும் நெருங்குமா’’

*

சுரதா, பாரதிதாசனின் அணுக்கத் தொண்டர். தன் புலமைச் செருக்கை விட்டுக் கொடுக்காமல் இவர் எழுதினார்.

ஏற்கெனவே ஐம்பதுகளில் தன் சக கவிஞர்களான, உடுமலையார், மருதகாசி, பட்டுக்கோட்டை, தஞ்சை ராமையாதாஸ் எல்லோரையும் ஓட்டத்தில் பின்தள்ளி முன்னே வந்தவர் கண்ணதாசன்.

மன்றம் மலரும் முரசொலி கேட்கும் வாழ்ந்திடும் நம்நாடு-இளம்

தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும் திராவிடத் திருநாடு-

வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்தது கிடையாது

வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது

கண்ணதாசனின் கனவுப்படமான "சிவகங்கைச் சீமை'யில் வரும் இந்தப் பாடல் வரிகளில், மன்றம், முரசொலி, நம்நாடு, தென்றல், திராவிட நாடு என தி.மு.க.வின் அனைத்து நாளிதழ்களின் பெயர்களும் வரும். இதை 1959-ல் முதலில் வெளிவந்தபோது படத்தில் வெட்டி விட்டார்கள். பின்னர் 1967க்குப் பின் சேர்க்கப்பட்டது. ஆனால் 1958 இல் வெளிவந்த கண்ணதாசனின் "மாலையிட்ட மங்கை' படத்தில் "எங்கள் திராவிடப் பொன்னாடே கலை வாழும் தென்னாடே' என்று டி.ஆர். மகாலிங்கம் எட்டுக்கட்டையில் பாடும் பாடலை எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. இந்தப் பாடலை அத்தனை தி.மு.க. கூட்டங்களிலும், ஒலிபரப்புவார்கள். அப்படி ஒரு இயக்கத்திற்காக தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தவர் கண்ணதாசன். கலைஞரோ அண்ணாவோகூட இந்த மாதிரியான வசனம் எழுதவில்லை.

தமிழ் சினிமாவில் மட்டும்தான், சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் தீவிர அரசியல் கருத்துக்களால் சினிமா ஆளப்பட்டது. வேறு எந்த மொழியின் படங்களிலும் மொழியைப் போற்றி, பாரம்பரியப் பெருமைகள் பேசி பாடல்கள் வந்ததாகத் தெரியவில்லை. எம்.ஜி.ஆர் தன் நாடகங்களில் பாடப்பட்ட "செந்தமிழே வணக்கம் ஆதி திராவிடர் வாழ்வினைச் சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம்' பாடலையே தனது முதல் தயாரிப்பான "நாடோடி மன்னன்' படத்தில் வைத்தார். கவிஞர் நெ.மா.முத்துக்கூத்தன் எழுதிய பாடல். அவர் நல்ல கவிஞர், நடிகர், துணை இயக்குநர். இதற்குப் பிறகு 9 வருடங்கள் கழித்து அவருக்கு இதே புகழையும் அடையாளத்தையும் வழங்கிய பாடல், "ஆடப் பிறந்தவளே ஆடி வா, புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா' பாடல், வாலியின் "தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக' பாடல், ஆகியன ஜெயலலிதாவைக் கொண்டாடப் பயன் பட்டது.

1950-களின் கடைசி வரையிலான கண்ணதாசனின் நிலைப்பாடு வேறு. அதன்பிறகு எம்.ஜி.ஆரின் சமூகப் படங்கள் வெற்றி பெறத்தொடங்கி, சிவாஜி கணேசன்- பீம்சிங் (நாங்கள் கிண்டலாக ‘பாம்சிங்’ என்போம்) கூட்டணியின் பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை, பாலும் பழமும் படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு கண்ணதாசன் பாடல்களின் பன்முகத் தன்மை இன்னும் வெளிப்பட்டது. அதிலும் அவர் தி.மு.க.விலிருந்து வெளியேறிய பின் அவருக்கு எழுதுவதற்கு நிறைய சுதந்திரங்கள் கிடைத்தது. ஆனால் அப்போது அவர் எழுதிய ஒன்றிரண்டு அரசியல் கவிதைகளில் எந்த ஆத்மார்த்தமும் இல்லை. அப்போது வாலியின் காலமும் இணைந்து கொண்டது. அத்தோடு மாயவனாதன், பஞ்சு அருணாசலம், ஆலங்குடி சோமு என்று பலரும் எழுதினார்கள். அந்த நேரம் 1963-67 கண்ணதாசனின் தனிப்பெரும் சாம்ராஜ்யம் சற்றுச் சரிந்தது. ஆனால் தரம் ஒருபோதும் தாழவில்லை. கண்ணதாசனின் கிருஷ்ண கானம் பாடல்கள் அவரை ஒரு ஆழ்வாராக்கின. மாயவனாதனின் "தண்ணிலவு தேனிறைக்க, தாழை மரம் நீர் தெளிக்க' பாடல் மெல்லிசையின் உச்சம்.

வாலி எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக சினிமாவில் வலம் வந்தார். மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற மூன்றெழுத்துப் பாடலில் பெயர் வாங்கிய இரண்டு எழுத்துக் கவிஞர் என்று குமுதம் வார இதழ் அப்போது வாலியை வரவேற்றது. பாடல்கள் உடனடி ஹிட் ஆகி இசை அமைப்பாளர்களின் பிரியத்திற்குரிய கவிஞராக இருந்தவர். "கண் போன போக்கிலே கால் போகலாமா' போன்ற அறிவுறுத்துகிற பாடல்களைத் தமிழ் சினிமாவுக்கு தொடர்ந்து தந்தார். தமிழ் இலக்கணத்தின் செவியறிவுத் துறையின் தொடர்ச்சியாக இதைக் கொள்ளலாம்.

காவியப் புலவர்களாக அறிமுகமானவர்கள் புலமைப்பித்தன் மற்றும் முத்துலிங்கம். இருவருமே கண்ணதாசனுக்குப் பிறகு அரசவைக் கவிஞர்களாக இருந்தவர்கள். "உன்னுயிரிலே என்னை எழுத பொன் மேனி தாராயோ' போன்ற காவிய வரிகளை சினிமாவிலும் கொண்டுவர முடியும். அதை பாமரர்கள் கூட வரவேற்கவும் செய்வார்கள் என்று, "ஆயிரம் நிலவே வா..' பாடலின் மூலம் நிரூபித்தவர் புலமைப்பித்தன். "கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்' என்ற அறிமுகத்துடன் அழகழகான பாடல்கள் எழுதினார் முத்துலிங்கம். "பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காகப் பாடுகிறேன்' மற்றும் "இரவுப்பாடகன் ஒருவன் வந்தான் நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்..' எல்லாம் முத்துலிங்கத்தின் முத்து வரிகள்.

இளையராஜா, பாரதிராஜா போன்ற இளைஞர் கூட்டம் வந்தபோது, "வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்' என்று வானம்பாடிக் கவிஞர்களின் வார்த்தைகள் போன்றவற்றைச் சினிமாவுக்குப் பாடலாக மாற்றியவர் வைரமுத்து. ஆரம்பத்தில் அவர் தமிழ் சினிமாப் பாடல்களை ஒருவித ரொமாண்டிக் வரிகளுடன் இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றார். பிற்காலத்தில் முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, சிந்து பைரவி போன்ற படங்களில் கதைக்கேற்ப வரிகளை ஆக்குவதில் இன்னொரு கண்ணதாசனாக ஆனால் தனித்துவத்துடன் உருவெடுத்தார். அவரது "கன்னத்தில் முத்தமிட்டால்' பாடலின் "மரணம் ஈன்ற ஜனனம் நீ' என்னும் உருவகம், தமிழ்ப்படம் கேட்டே இராத வரிகள். சினிமாவைத் தாண்டி அவரது "ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க..' இறுதி யாத்திரைப் பாடலை ஒரு புதிய திருவாசகம் எனலாம்.

பழநிபாரதி அறிவுமதியின் பட்டறையில் தயாராகி பிரபலமானவர். காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக போன்ற படங்களின் வெற்றிக்கு பழனிபாரதியின் அழகான பாடல்களே காரணம். "காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில் கீதம் இசைப்பதென்ன', பாட்டின் வரிகள், பூட்டி வைத்த ஒரு பூவின் கதவுகளைக் காற்றில் திறக்கும் வல்லமை கொண்ட பாடல். நவீன கவிதையிலும் நவீன கவிஞர்களுடனும் பரிச்சயம் உள்ள நா.முத்துக்குமாரின் சினிமா வரவு, செல்வராகவன், யுவன்சங்கர் ஆகியோர் கூட்டணியில் நல்ல பாடல்கள் தந்தது. 7 ஜி ரெயின்போ காலனி பாடல்களில் நவீன கவிதையின் பல கூறுகள் சினிமா மெட்டில் அழகாக அமைந்திருந்தன. நடைபாதைக் கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏதோ மயக்கங்கள் சேர்க்கும், "காற்றில் இலைகள் பறந்த பின்னும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை, காதல் படத்தில் "மின்சாரக் கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும் நம் "காதல்' தடைகள் தாண்டும்' என்று பல தெறிப்புகளை மின்ன வைத்தவர் நா.முத்துக்குமார். இரண்டு தேசிய விருதுகளைத் தமிழ் சினிமாவுக்குப் பெற்றுத் தந்தவர்.

அவரது காலகட்டத்தில் "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..' பாடல் எழுதி தேசிய விருது பெற்றுத் தந்தவர் பா.விஜய். இன்னும் கபிலன், யுகபாரதி, லலிதானந்த் போன்ற பல புதிய வரவுகளால் தமிழ் சினிமாப் பாடல்கள் புதிய தடங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பாடலாசிரியர்களின் தொகுப்புகளைப் பார்க்கையில் தமிழில் இவை நவீன தனிப்பாடல் திரட்டு ஆக உருவெடுத்திருப்பது புலப்படுகிறது. .தமிழில் நாடகக் கலையிலிருந்து உருவான தமிழ் சினிமா, விடுதலைப் போராட்டத்திற்குப் பின் தனக்கு வேலையில்லை என்று வேறு வழியைத் தேடிக் கொண்டதில்லை. எந்த மொழியிலும் இல்லாத வகையில் இங்கே சமூக நீதிக்கான ஒரு அரசியலை முன்னெடுத்தது தமிழ் சினிமா. அந்த முன்னெடுப்பு எவ்வளவு தூரம் இன்றும் சாத்தியப்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் ஒரு காலகட்டம் வரை அந்த சாத்தியப்பாட்டிற்கான தமிழ் சினிமாவின் முயற்சிகளில் முன் நின்று பங்களித்ததும், வெகுமக்கள் பண்பாட்டிற்கு அந்நியம் என்று கருதப்பட்ட இசையைப் பாமரனின் நாவில் நடமிட வைத்துப் பொதுமைப்படுத்தியதும் தமிழ் சினிமாப் பாடல் களும் பாடலாசிரியர்களுமே என்பதில் சந்தேகம் இல்லை. சினிமாப் பாடல்கள் என்பது மக்கள் இசை, மக்கள் கலை.