து ஒன்றும் பேசாப் பொருளல்ல... யுகம் யுகமாக வயது, தகுதி, மொழி, இனம், நாடு ஏன் யுகங்களை தாண்டி நம்மிடையே உலவி என்றும் இளமையுடன் இருப்பது காதல்.

தினம் தினம் பேசினாலும் எழுதினாலும், புதிதாக தோண்டத் தோண்ட விதவிதமாக இச்சொல் பரிணமித்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

காதலும் கவிதையும் இணைபிரியாத நண்பர்கள்.

ss

Advertisment

காதல் தொட்டால் எல்லோரும் கவிஞனாவார்கள் என்பதை ""At the touch of love everyone becomes a poet"" என்று பிளாட்டோவும், காதலில் தொலைந்து போ, காதல் அனுபவம் இல்லாமல் இருக்காதே என்பதை ""Better to have lost and loved than never loved at all"" என்று எர்னஸ்ட் ஹெமிங்வேயும் பரிந்துரைக்கிறார்கள்.

என் தேடல் தொடர்ந்தது. வேறு வேறு மொழியைச் சார்ந்தவர்களை எல்லாம் அணுகிப் பார்த்தேன். எதற்காக என்ற கேள்வி வருகிறதா நண்பர்களே, பின்வரும் ஒரு கவிதை என்னைத் தேட வைத்தது.

அடிக்கடி நீ சொல்லும் அருவமான காதல் எப்படி இவ்வளவு அழகான உருவமானது என வியந்து கொண்டிருக்கிறேன் உன்னை இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் தன் மெல்லிய எழுத்தால் பலரின் இதயங்களில் இடம்பிடித்திருக்கிற கவிஞர் பழனிபாரதி ஆவார்.

Advertisment

காதல் உருவமா, அருவமா, அரு வுருவமா என்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன.

பிளாட்டோ, ஹெமிங்வேயின் கூற்றுகள் அருவமாகத் தெரிவிக்கின்றன காதலை.

அணுவணுவாய் சாவது என்று முடிவு செய்துவிட்டால் அதற்கு சரியான வழி காதலே என்று கவிஞர் அறிவுமதி சொல்வது அருவமாகவே காதலைக் காட்டுகிறது.

அருவம் என்பது இங்கே உணர் வாகவும் உருவம் என்பது உடலாகவும் புரிந்துகொள்ளப்பட்டால் இந்த வேறுபாடுகள் தெரியும். கவிஞர் பழனி பாரதி உருவம் என்பதை அடித்துச் சொல்கிறார்.

காதல் நீதானா காதல் நீதானா உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா என்ற திரைப்பட பாடல் வரியும் காதலை உருவமாகவே குறிக்கின்றது.

காதல் புனிதமானது என்பதை போலவே ஆழமானது என்ற கருத்தும் உண்டு.

ss

பிரிவு என்ற ஒன்று ஏற்பட்டா லன்றி காதலே அதன் ஆழத்தை அறியாது “Even has it been that love knows not its own depth until the hour of separation’ என்கிறார் லெபனான் கவிஞர் கலீல் கிப்ரான். அவர்தரும் எதார்த்த, ருசிகர செய்தியும் ஒன்றுண்டு.

காதல் தோல்வி என்பது ஏன், எப்போது, எதனால் நிகழ்கிறது என்ற ஒரு கேள்வி உள்ளதே... புரிந்துகொள்ள இயலாத தன்மை தோல்விக்கான காரணம் என்று கலில் கிப்ரான் கூறுகிறார்.

நேரக்கடத்தலுக்கான காரணமாகவே காதலைப் பயன்படுத்தும் இக்காலச் சூழலுக்கு கலில் கிப்ரான் தரும் செய்தி சற்று அதிர்ச்சியானதுதான்.

“உனக்கு நான் முக்கியமா, உன் வாழ்க்கை முக்கியமா’’ என்று காதலி கேட்க “என் வாழ்க்கை’’ என்ற பதில் கிப்ரனிடமிருந்து வர அவரிடம் இருந்து வெளியேறினார். தான் தான் அவரது வாழ்க்கை என்று அறியாமலேயே.

இது எத்தனை வருத்தம்... இங்கே உருவமாக இல்லாமல் காதல் அருவமாகவே இருக்கிறது.

உணர்வுகள் அருவந்தானே...

நான் காதலை ஒரு முத்தத்தில் இருந்து கற்றேன் என்கிறார் சிலி நாட்டு பாப்லோ நெருடா.

பிரேசில் நாட்டு பௌலோ கொய்லோ. “காதல் கட்டுக் கடங்காதது. அதைப் புரிந்துகொள்ள முயற்சித்தால் குழப்பம் ஏற்படும். உன்னை அது அடைத்துப் போடும்’’ என்றெல்லாம் கூறும்போது அது உணர்வான அருவமாகவே தெரிகிறது.

கண்ணதாசன் தமிழ் கவிதை உலகின் காதல் சக்கரவர்த்தி.

காதலாலே பூமி வந்தது... காதல் வந்தது... என்று அவர் கூறுகிறார்.

கவிக்கோ, “சூபித்துவம் காதலே இறைவனை அடையும் வழி’’ என்கிறது என்றும் “பால் யோகிகள் என்ற பிரிவினர் காதலை வழிபாடாக கொண்டிருக்கின்றனர்’’ என்றும் தனது ஒரு கட்டுரையில் (நூல் காற்று என் மனைவி) குறிப்பிடுகின்றார்.

“இறைவன் தான் காதலிக்கப்படவேண்டும் என்று விரும்பியதாலேயே மனிதனை படைத்தான்’’ என்பதும் சூபித் துவம். இங்கு உணர்வான அருவமாகவே காதல் காணப்படுகிறது.

இறுதியாக ரூமியை அணுகினேன். “ஒரு வாழ்நாள் முழுவது மான துன்பம் ஒரு நொடி காதலுக்கு ஈடாகாது’’ (A lifetime of suffering will never be a worth of moment of love) என்ற ரூமியின் காதல் பிரபஞ்சக் காதலாகும்.

ஒரு நல்ல கவிதை தொடர்ந்து நம்மை நச்சரித்துக் கொண்டிருக்கும்.

அலையலையாக சிந்தனைகளை எழுப்பிக் கொண்டிருக்கும் அப்படிப்பட்ட ஒன்று இந்த தேடலுக்கான காரணமாகும்.

இன்றைய இளைஞர்கள் காதலை ஏதோ அன்றாட விதிமுறையாகவும் பொழுதுபோக்காகவும் எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் கொலை மிரட்டல், ஆசிட் வீசுதல் என்ற விபரீத முடிவு எடுக்கிறார்கள்.

சங்க காலத்திலிருந்து காதல் முறையானது, முறையற்றது என்றெல்லாம் வகை பிரித்துப் பார்க்கப்பட்டிருக்கின்றது.

முனைவர் வ.சுப. மாணிக்கனாரின் தமிழ்க் காதல் நூல் சங்ககால காதலை நன்கு விளக்குகிறது.

காதல் பண்டமாற்று வியாபாரம் அல்ல. கவிஞர் மீரா எழுதியது போல சங்க காலத்தில் யாயும் ஞாயும் யாராகியரோ என்பது திரிந்து, நீர்த்து உனக்கும் எனக் கும் ஒரே ஊர் என்று நடமாடிக் கொண்டிருக்கிறது.

சாதி, சடங்கு, சொத்து, கூட்டுக் குடும்பம், தனிக் குடும்பம், வங்கிக் கணக்குகளை கண்டு வருவது காதல் என்றால் காதல் அருவம் உருவம் என்று விவாதிக்க வேண்டியதில்லை.

கவிக்கோ சொல்கிறார்... இல்லை இல்லை கோபமாகவே கவலைப்படுகிறார், ஆமாம் மிகுந்த ஆத்மார்த்தமான வேதனை கலந்த வினா எழுப்புகிறார். “

என் இதயத்தை உடைத்து விட்டாயே இனி எங்கே வசிப்பாய்’’ இன்றைய காதலர்களிடையே இத்தகைய கவலைகள் இருக்கின்றனவா...

தெரியாது, 2000 ஆண்டுகளில் தமிழ்க் காதல் தடம் புரண்டு அல்லது தடம் தவறிப் போனதாகவே என்னால் காணமுடிகிறது.

பழநிபாரதியின் பாடல்கள் நல்ல சிந்தனைகளோடு கண்ணியமான சொற்களோடு வலம்வருபவை. இந்த ஒரு கவிதை என்னை கொஞ்சம் மாற்றுச் சிந்தனையோடு நச்சரித்துக் கொண்டே இருக்கிறது.

“காதல் எப்படி இவ்வளவு அழகான உருவானதென’’ என்ற கேள்வியோடு பல படைப்பாளிகளைக் கடந்து பாரசீகக் கவிஞனை அடைந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களில் எப்போதும் முதலிடம் கவிக்கோவுக்கே.

“காதல் இறைவனின் இன்னொரு பெயர்’’ “உன் காதலால் நான் உடலிலிருந்து உள்ளத்திற்குள் விழுந்தேன்’’ என்ற வரிகள் உள்ளத்தில் ரீங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

உடல் முன்னே நின்றாலும் அடைய வேண்டியது உள்ளமே என்ற ஒரு புரிதலுடன் ரூமியின் வாயிலில் யோசித்தபோது கிடைத்த தெளிவே என் தேடலுக்கான பதிலாகும்.

ரூமியே கேட்கிறார்

“எங்கிருந்து வருகிறது உன் காதல்

உனக்குள்ளே தேடிக் கண்டுபிடி

காதல் ஒருவரது சொற்கள் இல்லை

தெளிவான சிந்தனை’’

“ உன் ஒளியில் கற்றேன் காதலிப்பது எப்படி என்று உன் அழகில் கற்றேன் கவிதை வளர்ப்பது எப்படி என’’ அடடா ரூமியும் காதலை கவிதைக்குரிய ஒரு உன்னத தூண்டலாகக் கூறியுள்ளார்.

அருவம், உருவம் இணைந்து உன் ஒளி, உன் அழகு என கூறலாகிறதே அப்போது பழனி பாரதி சொல்வது சரியா... அழகான உருவமா காதல்?

எனக்கு திருப்தியில்லை... உடன்பாடில்லை.

அதனால் இன்னும் பல நேரங்களில் அட்சய பாத்திரம் ரூமியுடன் யாசித்தேன் என்றே கூற விரும்புகிறேன்.

யாரும் பார்க்காத வண்ணம்தான் சதிராடுகிறாய்

நெஞ்சினில் நீ

ஆனால் ஆனால்

சில கணங்களில் நான் காண்கிறேன்

உன் நடனம்

காதல் ஓவியமாய் விரிகிறது அக்காட்சி

என்ன ஒரு அற்புதமான விளக்கம். காதல் அருவம்,

உருவம், அருவுருவம் எல்லாம் தான். ஆனால் காமம் கலக்காத கண்ணியத்துடன் உருவத்தை உருவம் வெளிப்படுத்தும் நடனத்தை காண்கிறபோது

அங்கு காதல் விரியும் ஓவியமாய்

காதல் சுரக்கும் கவிதையாய்

ஆமாம் நன்றி ரூமி.

கால இடைவெளியிலும் நேர்கோட்டு சிந்தனையாளர்களிடம் ஒருமித்த கருத்துக்கள் கிடைக்கும்.

உனக்கு முன்னால்

உன்னைப் போல

ஒருத்தியைப் பார்த்த

என்னைப் போல

ஒருவன் தான்

வேறு யார்

என்ன கர்வம் இந்த வரிகளில்.

மழையைச்

செல்லமாக

காதல் என்றும் அழைக்கலாம்

என்ன பார்வை இந்த வரிகளில்

எல்லாமே பழநிபாரதிக்குச் சொந்தம். வலித்தாலும் பாடுபடுத்தினாலும் என் வாழ்வில் காதல் இருப்பது ஆசீர்வாதமான வாழ்வு என்று கூறும் ரூமியின் அடையாளங்களை காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்கெங்கு காணினும் காதலடா என்று இருப்பது தவறில்லை. ஆனால் அதை கண்ணிய மான கவிதைகளாகத் தந்தவர்களில் இங்கே நான் பழநிபாரதியின் கவிதை எழுப்பிய கேள்விகளை, ஐயங்களை எடுத்துக்கொண்டு தேடியதில் கிடைத் தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். எத்தனை படைப்பாளிகள், எத்தனை விதமான பார்வைகள்...

வியப்புடன் நிற்கிறேன்