ன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன் றில்.

-என்பது வள்ளுவர் வாக்கு.

இதன் மூலம் அவர், புகழ் ஒன்றால்தான் இந்த உலகத்தில் நாம் நிலைத்திருக்க முடியும் என்கிறார்.

Advertisment

இந்தக் குறளுக்கு இலக்கணமாக புரட்சிக் கலைஞர் விஜயகாந்த், புகழ் வடிவம் பெற்றிருக்கிறார். நிலையற்ற இந்த உலகத்தில், புகழால் நிலைத்திருக்கும் நிலையை அடைந் திருக்கிறார்.

புகழ் என்பது, ஏதோ திடீரென பணத்தைக் கொடுத்து, வணிக வளாகத்திலோ, சந்தையிலோ வாங்கிவிடுகிற பொருளல்ல.

எவ்வளவு செலவழித்தாலும் அதை நம்மால் உடனடியாக வாங்கிவிட முடியாது.

Advertisment

vv

அனைவர்மீதும் பாரபட்சமின்றி அன்பு காட்டுவதன் மூலமும், ஏழை எளியவர்களுக்கு உதவுவதன் மூலமும், அடுத்தவர் துன்பம் அறிந்து உதவிக்கரம் நீட்டுவதன் மூலமும், சிறந்த செயல்களைச் செய்வதன் மூலமும் சிறுகச் சிறுக வளர்த்துக் கொள்ளும் ஒளி வட்டம்தான் புகழ்.

அந்த புகழ் எப்போது முழுதாகத் தெரியும்? ஒருவர் மறையும்போது அவருக்காகத் திரள்கிற கூட்டத்தின் அளவிலும், அவருக்காக வடிக்கப்படும் கண்ணீரின் அளவிலும், அவருக்காகத் துடிக்கும் இதயங்களில் வலியிலும்தான் அந்தப் புகழை உண்மையாக அளவிட முடியும்.

அப்படியொரு புகழ்பெற்ற ஒருவராக புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் என்பதையே, கட்சி வேறுபாடுகள் கடந்து அவர் மரணத்திற்காக திரண்ட கூட்டமும், அவர் இழப்பிற்காகக் கலங்கிய இதயங்களும் உணர்த்துகின்றன.

அருப்புக்கோட்டை அருகே ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த விஜயகாந்த், மதுரையில் வளர்ந்து, சினிமா ஆசையோடு 70-களின் இறுதியில் சென்னைக்கு வந்தவர். அந்தக் காலத்தில் சினிமா தனக்கென வைத்திருந்த அங்க லட்சண வரையறைகள் எதுவும் இல்லாமல், ஒரு சாமானியனின் தோற்றத்தோடு, திரையுலகை வெற்றிகாணும் வேகத்தில் புறப்பட்டவர் அவர்.

கருகரு நிறமும், துறுதுறு கண்களும், கட்டான உடலும், கிராமத்து முகமுமாய், எளிய தோற்றத்தோடு சென்னைக்கு வந்து, திரையுலகக் கதவுகளை முட்டிமோதித் திறந்து, அதன் புகழ் படிக்கட்டுகளில் வெற்றி கரமாக ஏறிக்காட்டியிருக்கிறார் விஜயகாந்த். இதன் மூலம் தன்னம்பிக்கை இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியாகவும் ஆகியிருக்கிறார்.

79-ல், இயக்குநர் எம்.ஏ.காஜாவின் "இனிக்கும் இளமை' மூலம் தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர், அப்போது சென்னை பாண்டிபஜார் ரோகிணி லாட்ஜில் தங்கியிருந்தபடியே, தன்னைப் போல் திரைத்துறையில் சாதிக்கவேண்டும் என்று வந்த பலருக்கும், அங்கே அடைக்கலம் கொடுத்தார். .அவரால் ஒரு பெரும் கூட்டமே பசியாறியது. அவர் திரையுலகில் வளர்ந்தபோது அவரது உதவும் பண்பும் அவருடன் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தது.

ஏறத்தாழ 160 படங்களில் அவர் நடித்திருக்கிறார். 2010-ல் அவரது கடைசிப் படமான விருதகிரி வந்தது. அதன்பின்னர் அவர் படத்தில் நடிக்கவில்லை.ஆனாலும் அவரது வெளிச்சம் மங்கிவிடவில்லை.

1999-ல் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட விஜயகாந்த், சிங்கப்பூர், மலேசியா என்று பல நாடு களிலும் கலை நிகழ்சிகளை நடத்தி, அந்த வருமானத்தில் நடிகர் சங்கக் கடன்களை எல்லாம் அடைத்து, பலரது பாராட்டையும் பெற்றார்.

2002-ல் காவிரிப் பிரச்சினை உச்சமடைந்தபோது நடிகர்களை எல்லாம் திரட்டிக்கொண்டு போய், "காவிரி நீரைத்தர மறுத்த கர்நாடகத்திற்கு மின்சாரத்தைக் கொடுக்காதே' என்றபடி, நெய்வேலியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி, கர்நாடக அரசை அப்போது மிரள வைத்தார்.

2005-ல் தே.மு.தி.க. என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியவர்,

அதற்கு அடுத்த ஆண்டே விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் தனியொரு ஆளாக காலெடுத்து வைத்தார். 2011 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அவர் கட்சி, 29 இடங்களைக் கைப்பற்றியது.இதைத் தொடர்ந்து அவர் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்தார். எனினும், ஜெ.வின் தெனாவெட்டைக் கண்டு ஆவேசமான விஜயகாந்த், முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அவருடன் நேருக்கு நேர் மோதி, தமிழகத்தையே நிமிர்ந்து பார்க்கவைத்தார்.

vv

இதனால் பல நெருக்கடிகளை அவர் சந்திக்க நேர்ந்தது. தொகுதி நிதி சரிவர ஒதுக்கப்படாத நிலையும் ஏற்பட்டது. எனினும் தனது சொந்தப் பணத்தில் தொகுதிக்கான நலத்திட்ட உதவிகளை சளைக் காமல் செய்தார் விஜயகாந்த்.

2016-ல் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து தேர்தலைச் சந்தித்ததால், அரசியலில் பெரும் பின்னடைவை அவர் சந்திக்க நேர்ந்தது. அதன் பின் அவர் எழவில்லை. அதற்கு, அவரது உடல் நிலையும் காரணமாகி விட்டது. இதனால், ஏழெட்டு ஆண்டுகள் முடங்கி இருந்த நிலையில், மக்கள் மத்தியில் விஜயகாந்தின் புகழ் ஒளி குன்றவே இல்லை என்பதையே அவரது மரணம் நிரூபித்திருக்கிறது.

விஜயகாந்தின் அரசியல் செயல்பாடுகள் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங் கள் இருக்கலாம். கடைசிக் காலத்தில் அவர் கையாளப்பட்ட முறைகளிலும் நமக்கு உடன்பாடு இல்லாது போகலாம். எனினும், அவரது பண்புகளும் ஏழைகளின்பால் அவர் காட்டிவந்த இரக்கமும். அதனால் அவர் கடைப் பிடித்த கொடையும், அவர் உயரத்தை எந்த நிலையிலும் குறைத்து விடவில்லை. முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவு கடந்த பற்றுக்கொண்டவராகவும் விஜயகாந்த் திகழ்ந்தார்.

கலைஞரை எதிர்த்து அரசியல் களத்தில் அவர் வரிந்துகட்டினார் என்றாலும், அவர் மீதான பாசமும் நேசமும் அவருக்குப் போகவே இல்லை. அவரது திருமணமே கலைஞரின் தலைமையில்தான் நடந்தது. 96-ல் கலைஞரின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டும் விதமாக கலைத்துறையின் சார்பில் மாபெரும் விழாவை எடுத்து, அதில் தங்கப்பேனாவை அவருக்குப் பரிசாக வழங்கி மகிழ்ந்தவர் அவர். எந்த நிலையிலும் கலைஞர் மீதான பாசம். அவருக்குத் தணிந்ததே இல்லை.

கலைஞரின் கதை வசனத்தைப் பேசி அவர் நடித்த பல படங்கள் அவரது உயரத்தை அதிகமாக்கியது. குறிப்பாக, சட்டம் ஒரு இருட்டறை, வீரன் வேலுத்தம்பி, மக்கள் ஆணையிட்டால், பொறுத்தது போதும் உள்ளிட்ட படங்களில் கலைஞரின் தீப்பொறி பறக்கும் வசனங்களை விஜயகாந்த் பேசி நடித்ததை ஒரு பெருங்கூட்டமே கைதட்டி ரசித்தது.

கலைஞர் மறைந்தபோது அவர் வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்தார். அந்த செய்தியைக் கேள்வியுற்ற அவர் கதறித்துடித்து அழுதார். தெளிவாகப் பேச முடியாத நிலையில் அந்த உணர்வையே தனது அஞ்சலிச் செய்தியாக வெளியிடச் செய்தார். அதே போல், சிகிச்சை முடித்து தமிழகம் திரும்பிய போது, ஏர்போர்ட்டில் இருந்து நேராக கலைஞர் நினைவிடம் வந்து, விஜயகாந்த் கண்ணீர் விட்டார். அதைக்கண்டு தி.மு.க.வினர் அனைவரும் கலங்கிப்போனார்கள்.

அந்த அன்பின் ஈரத்தை, தி.முக.வும் அவர் மறைவின் போது திருப்பிக் காட்டியிருக்கிறது. அவரை அரசியல் எதிரியாகப் பார்க்காமல், கலைஞரின் பாசத்துக்குரிய விஜயகாந்தாக நினைத்து, முதல்வர் ஸ்டாலின் அவர் உடலுக்கு இரண்டுமுறை சென்று அஞ்சலி செலுத்தினார். அரசு மரியாதையையும் கொடுக்கச் செய்தார். இதிலும் இரு தரப்பிலும் அரசியல் நாகரிகம் வெளிப்பட்டது.

சிறந்த நடிகர் என்றும், ஜெ.வையே எதிர்த்த அரசியல்வாதி என்றும் அவருக்கு பல பிம்பங்கள் உருவானபோதும், மற்றவர் துன்பத்தை சகிக்காத நல்ல மனிதர் என்ற பெயரே அவரது அடையாளமாக நிலைத்திருக்கிறது. தமிழக திரையுலக - அரசியல் வரலாற்றில் விஜயகாந்த் தனது பெயரை அழுத்தமாக எழுதிச் சென்றிருக்கிறார். தன் அன்பான கொடைக் கரங்களால்.

ஆழ்ந்த இரங்கலோடு,

நக்கீரன்கோபால்