மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு’
என்கிறார் வள்ளுவப் பேராசான்.
இதன் பொருள், மறந்தும்கூட பிறருக்குக் கேடு செய்ய நினைக்கக்கூடாது;
அப்படி நினைத்தால் அறமே அவர்களை அழிக்கும் என்பது. இதை அதிகாரத்தில் இருப்பவர்கள் மறந்துவிட்டார்கள். அதனால்தான் மக்களைப் பல வகையிலும் வதைக்கிறார்கள்.
இன்று தமிழகம் நிம்மதியற்ற தனித்தீவாக இருக்கிறது. ஒரு பக்கம், தங்கள் உரிமைக்காக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும், தங்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ மூலம் போராட்டத்தில் குதித்து சிறையை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
பழைய ஓய்வூதிய முறையையே அரசு பின்பற்றவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளோடு வருடக் கணக்கில் குரல் எழுப்பி வருகிறார்கள்.
இவர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி, திணறிக்கொண்டிருக்கும் நிர்வாகத்தைச் சீர்படுத்த வேண்டிய முதல்வர் எடப்பாடி கள்ளமௌனம் சாதிக்கிறார். போராடுபவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும், புதிதாக ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் நியமித்துக் கொள்வோம் என்றும் அவர் அரசு மிரட்டி வருவது கொடுமை யின் உச்சமாகும்.
விவசாயிகள், வியாபாரிகள், அரசு ஊழியர் கள் என சகல தரப்பினரும் நிம்மதியற்று வாழ்கிற மாநிலமாகத் தமிழகம் சீர்கெட்டுப் போயிருக்கிறது. குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
போதாக்குறைக்கு, முதல்வராக இருக்கும் எடப்பாடி மீதே அதிபயங்கரமான குற்றச் சாட்டுகள் வெடித்துக்கொண்டிருக்கிறது. எனினும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அமைதி காக்கிறார் எடப்பாடி.
பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் சந்தேகத்திற்கு இடம் தராதபடி இருக்க வேண்டும் என்பது பொது விதி.
ஆனால் இன்றைய முதல்வர் எடப்பாடியோ, கொலை, கொள்ளை விவகாரங்களில் குற்றம் சாட்டப் பட்டும், அவை குறித்த விளக்கத்தையோ மறுப்பையோ தெளிவாக மக்களிடம் எடுத்துச் சொல்ல முன்வரவில்லை.
யார் வேண்டுமானாலும் என்மீது எந்தப்பழியை வேண்டுமானாலும் போடட்டும். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன். நான் இதற்கெல்லாம் பயப்படுகிற ஆள் அல்ல என்று தெனாவெட்டாகவே இருக்கிறார்.
அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சாதாரணமான குற்றச் சாட்டுக்களா? இல்லை. அதிரவைக்கும் குற்றச்சாட்டுக்கள்.
முதல்வராக இருந்த ஜெ., அப்பல்லோவில் 5-12-2016-ல் மரணடைந்தார்.
16-2-2017-ல் எடப்பாடி முதல்வர் பொறுப்பை ஏற்கிறார். அவர் பதவி ஏற்ற 8-ஆம் நாளே, அதாவது 24-2-2017-ல் ஜெ.வின் கொடநாடு பங்களாவில் கொள்ளைச் சம்பவம் ஒன்று அரங்கேறுகிறது.
அந்த வீட்டின் காவலாளி ஓம் பகதூரைக் கொன்றுவிட்டு, உள்ளே இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக செய்தி வந்து பரபரப்பூட்டு கிறது. இந்தக் கொள்ளை, கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட சயான் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தீபு, சதீசன், உதயகுமார், குட்டி பிஜின், வாளையார் மனோஜ் சாமியார், வயநாட்டைச் சேர்ந்த மனோஜ், சந்தோஷ் சாமி, ஜம்சீர் அ. ஜிதின் ராய் ஆகிய பத்து பேரை கைதுசெய்த போலீசார், குற்றச்சம்பவத்தின் பின்னணியைத் தீவிரமாக விசாரிக்கவில்லை.
இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்குத் தலைமை தாங்கிய ஜெ.வின் கார் டிரைவரான கனகராஜ், 28-4-2017 அன்று சேலம் மாவட்ட ஆத்தூர் பகுதியில் சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் செல்லும்போது, சாலை விபத்தில் உயிரிழக்கிறார்.
மறுநாள், கனகராஜின் நண்பரும் கொள்ளையில் தொடர்பு டையவருமான சயான், தன் குடும்பத்தோடு காரில் சென்றுகொண்டிருந்த போது சாலை விபத்து நடக்கிறது. அதில் சயானின் மனைவி பினுப் பிரியாவும் ஐந்து வயது மகள் நீதுவும் இறந்துபோனார்கள். உயிருக்குப் போராடிய சயான் காப்பாற்றப்பட்டார். அதேபோல், கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. கேமரா ஆபரேட்டராக இருந்த தினேஷ் குமார் மர்மமாக இறந்துபோக, அவர் கண் வலிலியால் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை முடித்தது போலீஸ்.
இப்படி ஜெ. வீட்டுக் காவலாளி ஓம்பகதூர், ஜெ.வின் டிரைவர் கனகராஜ், கனகராஜின் நண்பர் சயானின் மனைவி பினுப்பிரியா, அவர்கள் மகள் நீது, சி.சி.டி.வி. ஆபரேட்டர் தினேஷ்குமார் என அடுத்தடுத்து கொடநாடு எஸ்டேட் தொடர்புடை ஐந்து பேர் வரிசையாக மரணம் அடைய... அந்தக் கொள்ளையை மறைக்க அதில் ஈடுபட்டவர் களை, யாரோ மரணத்தால் துரத்தியதை எல்லோராலும் உணர முடிந்தது. அந்த நபர் யார்? என்கிற மர்ம முடிச்சு அவிழாமல் இருந்தது.
இந்த ஜனவரி 11-ஆம் தேதி புலனாய்வு இதழின் முன்னாள் ஆசிரியரான சாமுவேல் மேத்யூஸ், டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் ஒரு அதிரடி வீடியோவை வெளியிட் டார். அந்த வீடியோவில் கொடநாடு கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு டைய சயான் என்பவரும் வாளையார் மனோஜ் என்பவரும் வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.
அவர்கள் அந்த வீடியோவிலும் வெளியிலும் கொடுத்த வாக்குமூலத்தால் டெல்லிலி மட்டுமல்ல; இந்தியாவே பதட்டமானது. காரணம் கொடநாடு தொடர்பான கொள்ளை மற்றும் அத்தனை மரணங்களுக்கும் காரணமான வர் முதல்வர் எடப்பாடிதான் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
அப்படி என்ன வாக்குமூலம் கொடுத்தார்கள்?
""எடப்பாடி, வேலு மணி, வைத்திலிலிங்கம் உள்ளிட்டவர்களிடம் ஜெயலலிலிதா, சில ரகசிய வாக்குமூலங்களை வாங்கி ஆவணமாக வைத்திருந் தார். அதில் அவர்கள் தொடர்பான விவகாரங்களும் சிலரின் அரசியல் ரகசியங்களும் இருந்தன. அந்த ஆவணங்களைக் கொள்ளையடிக்கும் படி கனகராஜிடம் எடப்பாடி சொல்லிலியிருந்தார். கனகராஜோ, இரிஞ்ஞால குடாவைச் சுற்றி இருக்கும் நாங்கள் இருவர் உட்பட பத்து பேரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். 11 பேராக கொடநாட்டுக்குச் சென்றோம்.
ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக் களாக 33 அட்டைப் பெட்டிகளில் 2 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது.
அதைக் கொள்ளையடிக்கவேண்டும் என்று பொய்த்தகவலைச் சொல்லி, ஆசை காட்டிதான் எல்லோரையும் கனகராஜ் அழைத்துச் சென்றார்.
நாங்கள் நம்பாமல் கேட்டபோதுதான், கொடநாடு பங்களாவில் இருக்கும் ஆவணங்களை எடுக்கச் சொல்லிலியிருக்கிறார் எடப்பாடி. அதை எடுத்துக்கொண்டுபோய்க் கொடுத்தால் ஐந்து கோடி ரூபாய் கொடுப்பார் என்று கனகராஜ் சொன்னார். அதன்படி, கொடநாடு பங்களாவுக்குச் சென்றோம்.
24 மணி நேரமும் தடையிலா மின்சாரம் தரப்படும் கொடநாடு பங்களாவில், ஏற்கெனவே திட்டமிட்டபடி பெரிய இடத்துத் தொடர்பு களால் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. வீடியோ கேமராக்களும் அணைக்கப்பட்டிருந்தன.
அங்கே மற்றவர்கள் வெளியே நிற்க, கனகராஜ், ஜம்ரிஷ் உள்ளிட்ட நாங்கள் நான்கு பேர் மட்டும் பங்களாவிற்குள் சென்றோம். அங்கே கனகராஜிடம் மேலிடம் சொன்னபடி ஆவணங்களை அள்ளிக்கொண்டோம். கொடநாடு காவலாளி ஓம் பகதூரை மடக்கும்போது கையைக் கடித்தார்.
அதனால் அவரை நாங்கள் கட்டிப் போடும்போது அவர் மூச்சுமுட்டி இறந்து போனார்'' என்று அந்த கொள்ளைச் சம்பவங்களை விவரித்தார்கள்...
அதன்பின், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கனகராஜ் உட்பட தொடர்ந்து ஒவ்வொருவராக ஐந்து மரணங்கள் நடந்தன. அதனால் தான் இது எல்லாமும் எடப்பாடியின் வேலைதான் என்று அழுத்தமாகக் குற்றம்சாட்டினார் கள். அவர்களின் குற்றச்சாட்டுக் களுக்கு தெளிவான விளக்கத்தைக் கொடுத்து தன்னை நிரபராதி என்று நிரூபிக்கவேண்டிய முதல்வர் எடப்பாடி, "நான் ஐந்து முறை சிறை சென்றவன். இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன்' என்று மார்தட்டுகிறார்.
மேலும் ஏவிவிடப்பட்ட அம்பு களைக் கைதுசெய்தும், காவல் துறையை வைத்து மிரட்டியும், சிறையில் அடைத்தும் அவர்கள் வாயை அடைக்கப் பார்க்கிறார்.
கொடநாட்டில் என்ன நடந்தது?
என்பது பற்றி விரிவாக விளக்கம் தரவேண்டிய அவர் கள்ள மௌனம் சாதிக்கிறார். இதுதான் அவர் மீதான சந்தேகத்தை மேலும் மேலும் வலுவாக்குகிறது. ஒரு முதல்வர் மீதே இப்படிப்பட்ட குற்றச் சாட்டுக்கள் எழுந்தால், அதைப் பார்க்கும் சமூகவிரோதிகள் தைரியம் கொள்ளமாட்டார்களா? துணிந்து குற்றச்செயல்களில் முன்னிலும் தீவிரமாக அவர்கள் இறங்கமட்டார்களா? இத்தகைய சூழலால் தமிழகமும் தமிழக மக்களும் அச்சமடைந்திருக்கிறார் கள். நம்மை ஆள்பவர்கள் ஆட்சி யாளர்கள்தானா? இல்லை, குற்றவாளிகளா? என்ற குழப்பத்தில் தவிக்கிறார்கள்.
நீதி எப்போதும் உறங்காது. அறம் எப்போதும் அமைதியாய் இருக் காது என்பதை காலம், உணர்த்த வேண்டியவர்களுக்கு விரைவில் உணர்த்தும்.
ஆதங்கத்தோடு,
நக்கீரன்கோபால்