காலத்தின் கோரப் பசிதான் எத்தனை கோரமானது. ஒரு மாபெரும் ஓவியனை விழுங்கிவிட்டு சத்தமில்லாமல் அமர்ந்திருக்கிறது காலம். காலத்தின் வயிற்றினுள் சென்ற கலைஞர்களும் படைப்பாளிகளும்தான் எத்தனை எத்தனை பேர்!

பெண்களே பொறாமை கொள்ளும் ஓவியங்களைப் படைப்பவர் ஓவியர் மாருதி. பேசும் விழியும் வழுவழு கன்னமும் சிரிக்கும் உதடுகளும் முத்துப் பற்களும்,. காதிலுள்ள ஜிமிக்கி மெல்ல காற்றில் அசைவதுபோல தோன்றும்படி,. கூந்தலில் இருக்கின்ற மல்லிகையும் வாசம் வீசும்படி,. கழுத்தில் தொங்கும் நகையை தொட்டுப் பார்க்கத் தூண்டும். வண்ணம் பெண்களைப் படைப்பவர்.. கற்பனையிலும் கனவிலும் வரும் பெண்ணை நம் முன் நிஜத்தில் கொண்டு நிறுத்தவல்லது அவர் தூரிகை!

dd

தூரிகையால் தமிழகத்தை மெய்மறந்து நிற்கச் செய்தவர். வெ. இரங்கநாதன் என்ற இயற்பெயர்கொண்ட மாருதி. அவர் கையெழுத்தே இல்லாதபோதுகூட அவர் ஓவியம் இது யார் வரைந்தது என சொல்லி-விடும். அப்படி ஒரு தனித்துவத்தை தன் ஓவிய பாணியாகக் கொண்டவர் மாருதி.

1966 முதல் பத்திரிகைகளில் வரைந்துவரும் ஓவியர் மாருதி, போஸ்டர் கலர், வாட்டர் கலர் என சமீபத்திய காலம்வரை தூரிகையால் வண்ணம் குழைத்து, வரைந்துகொண்டிருந்தவர். அனைத்து ஓவியர்களும் கம்ப்யூட்டரிலும், டெக்னாலஜியைப் பயன்படுத்தியும் ஓவியங்கள் வரைய ஆரம்பித்த பிறகும் கைகளால் வரைவதிலேயே உயிர் உள்ளது என்று கூறி பிடிவாதமாக கடைசி வரை கையாலேயே ஓவியம் வரைந்துவந்தவர்.

இவரின் அட்டைப் படத்திற்காகவே நாவல்கள் அதிக அளவில் விற்பனையானது. எழுத்தாளர்களுக்கு சமமாக, ஓவியத்திற்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி சாதனை செய்தவர். அட்டைப்படம் வரைவதற்கு முன்பாக... மாதிரி ஓவியத்தை வரைந்து வேண்டிய திருத்தங்களைச் செய்துவிட்டு பின்னர்.

ஒரிஜினல் ஓவியம் வரைவது என பழையகால ஓவியர்களைப் போன்ற முறையான பயிற்சிபெற்று முறையாக, வரைவதும்... தான் வரையும் சிறுகதை ஓவியத்திற்கான தலைப்பையும் தானே எழுதி அந்த பத்திரிகைக்கு அனுப்பி வைப்பதும் இவர் தொடர்ந்து செய்துவந்த பழக்கம்... மிகப்பெரிதாக வரைந்து பிரிண்டிங்கில் சிறிதாக்குவது வழக்கம். ஆனால் நாம் பார்க்கும் ஓவியத்தின் அளவே ஓவியத்தை வரைவதும், அதிலும் நுணுக்கத்தைக் காட்டுவதிலும் மாருதிக்கு இணையாக எவரும் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.

சக ஓவியர்களைப் பாராட்டுவதிலும். புதிய ஓவியர்களை அழைத்து உற்சாகப்படுத்தி அவர்களை அரவணைப்பதிலும் அவர்களுக்கான வாய்ப்பை தானே ஏற்படுத்தித் தருவதிலும், எவரைச் சந்திக்கவேண்டும் என்ற அறிவுரையும் வழங்குவதிலும் அவருக்கு நிகர் அவரே. என்போன்ற வளரும் ஓவியர்களுக்கு பல தவறான விமர்சனங்கள் வருகின்ற சூழ்நிலையில், பதிப்பகத்தாரை அழைத்து, “தொடர்ந்து வாய்ப்பு தாருங்கள்; விமர்சனம் வருகிறது என்றால் அவர் வளர்கிறார் என்று அர்த்தம் என்று கூறி இரண்டு பக்கமும் சரிசெய்து அடுத்தவர் வளர வாய்ப்பளிப்பதும், தான் இருக்கின்ற தொழிலில் அடுத்தவர் வளர்வதை உற்சாகமாகப் பார்க்கின்ற பெரிய மனதும் அவருக்கு மட்டுமே உண்டு.

Advertisment

aa

நாவல்களுக்கு தொடர்ந்து படங்கள் வரைந்துகொண்டிருந்த சூழ்நிலையில் உடல்நலம் குன்றியிருந்த காலகட்டத்தில் அவரால் வரைய இயலவில்லை... அந்த சூழ்நிலையில் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்து.. அதன் பிறகு அவரைச் சந்திப்பதையும் அவரோடு பேசுவதையும் தயக்கத்தோடும், கூச்சத்தோடும் தவிர்த்துக்கொண்டிருந்தபோது... என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள் என்று நண்பர்கள்மூலமாக அழைத்து என்னைச் சந்தித்தார். மிகச் சிறப்பாக செய்கிறீர்கள், சந்தோஷமாக இருக்கிறது, தொடர்ந்து செய்யுங்கள் என உற்சாகப்படுத்தி... தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து, நட்பு பாராட்டி அனுப்பிவைத்தார்.

அந்த சந்திப்பில், அவரை பல ஆண்டுகளுக்குமுன் சந்தித்து சரியாகப் பேசமுடியாமல் பிரிந்த, நான் மறந்த நிகழ்வைப் பற்றி நினைவுகூர்ந்ததுடன் அன்று என்னுடன் சரியாக பேசமுடியாமல் செல்லநேர்ந்த காரணத்தை விளக்கிக் கூறினார்.

வண்ணங்களோடு வாழ்ந்தாலும் இன்னும் வெள்ளைக் காகிதமாக இருக்கின்ற அவர் மனதை என்னும்போது... ஓவியம் விரல்களில் இருந்து மட்டும் வருவதில்லை; ஈரமான அந்த நெஞ்சில் இருந்தும் வருவதால்தான் ஓவியம் உயிரோடு இருக்கிறது என்ற எண்ணம் எழுந்தது..

அவர் ஓவியத்தால் ஈர்க்கப்பட்ட பலர் ரசிகனாகவும். சிலர் ஓவியனாகவும் மாறிப்போனார்கள். அப்படி மாறிப்போன எண்ணற்ற ஓவியர்களின் நானும் ஒருவன்... கிராமத்தில் அனைவரும் என் ஓவியத்தைப் பாராட்டியபோது, மாருதியைவிட சிறப்பாக வரைகின்றேன் என்ற எண்ணத்தோடு சென்னைவந்து இறங்கியபோது, பத்திரிகை அலுவலகத்தில். தேவி ஆசிரியர் ஜேம்ஸ் மாருதியின் ஒரிஜினல் ஓவியத்தைக் காட்டினார்... கையில் வாங்கிப் பார்த்த பிறகுதான் தெரிந்தது நாம் எதுவுமில்லை. இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியதும் கடுமையான பயிற்சியும் வேண்டும் என்ற உண்மையை உணர்த்தியது அவருடைய ஓவியம்.

என்றும் அவர் உயரத்தை எவராலும் தொடமுடியாது என்று உணரவைத்தது காலம். வண்ணங்கள் உள்ளவரை நம் எண்ணத்தில் வாழ்வார் மாருதி. அவரோடு சேர்ந்து விழுந்தது தூரிகை, நலிலிந்தது ஓவியக் கலை!