இது உன் கதையும், என் கதையும், அனைவரின் கதையுமென்று எனக்குத் தோன்றுகிறது. மரணமென்பது முகமற்ற ஒரு மாலுமி. கடல் கரையைநோக்கி வருவதைப்போல சீறிக்கொண்டு முன்னோக்கி வரும். என் சந்தோஷமற்ற சரீரத்தைத் தன் ஆழத்திற்குள் மரணம் பலமாக இழுக்கும். மூழ்கி இறந்தவர்களின் சரீரங்கள் புரண்டு புரண்டு அந்த நீலவெளியில் நீண்டதூரம் பயணிக்கும். நிறைய தூரத்தைக் கடந்து அவை சுழியில்லாத, சலனமற்ற ஓரிடத்தில் அசைவற்றவையாகும். களைகள் அவற்றின் முடி இழைகளிலும்கூட வளரும். ஒட்டுண்ணிகள் அவற்றின் வெளிறிய கைகளையும் கால்களையும் இறுகப் பற்றிக்கொள்ளும்.
ஒருநாள் சங்குகளின் வழியாக நான் உயிரென நினைக்கும் ஆழமான கடலை தரிசித்தேன். பின்னோக்கி நகரும் நண்டுகளும் முட்செடிகளும் என் காலடி களில் படாமலிருக்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்தவாறு, எத்தனையோ வருடங்களுக்குமுன்பு ஒரு சிறுமியாக இருந்தபோது நான் கடல் பகுதியில் நடந்திருக்கிறேன். என் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் நான் அந்தக் கடற்கரையை நினைத்துப் பார்ப்பேனோ?
பல வருடங்களாகக் காத்திருந்தும் சந்திக்கவே முடியாமல்போன நண்பனை நான் நினைப்பேனோ?
ராதாவின் கர வளையத்திற்குள் சிக்கி நின்றிருந்த பதினான்கு வயது கொண்டவனை நான் அப்போது கனவுகண்டேன். தோலில் ஒருநாள் முழுவதும் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரியனின், மீன் வாசனையுடன் இருக்கும் நதியின், பசுக்களின், காட்டு மலர்களின் வாசனையைக் கொண்டவன்.
கனவுகள் காண்பதென்பது என் கண்களுக்குக் கைவந்த கலையாக இருந்தது. இப்போது என் கண்கள் கனவுகளின் தடாகங்கள் மட்டுமே. அவற்றுக்கு ஒட்டுண்ணிகளின் குணம் இருந்தன.
மரணமென்பது செயல்களை முழுமையடையாமல் செய்கிறது. ஆனால், செயல் செய்பவனை முழுமைக் குள் கொண்டுசெல்கிறது. எழுதும் கரங்களை அசைவில்லாமல் ஆக்கி, அது கதையை முழுமையற்றதாக்குகிறது. வீணையை மீட்டும் விரல்களை இயங்கவிடாமல் செய்து, அது இசையை பாதி சுய உணர்வில் இருக்கும்படி செய்கிறது. துப்பாக்கியில் வைத்திருந்த கைவிரலை மரத்துப்போகச் செய்து, மரணம் வீரனைப் போரில் தோல்வியடையச் செய்கிறது. மரண பூஜையின் அடையாளங்களை நான் சுற்றிலும் பார்க்கிறேன்.
சயனைட் நிறைக்கப்பட்ட தாயத்துகளை கழுத்தில் கட்டியிருக்கும் சிறுவர்களை நான் பார்க்கிறேன். தாடியையும் தலைப்பாகையையும் வைத்திருக்கும் பயங்கரவாதிகளை நான் பார்க்கிறேன். பயங்கரவாதிகளின் முகங்கள் சாளரங்களின் கண்ணாடிகளில் தெரிவதைப் பார்த்து பெண்கள் கதறுகிறார்கள். பயங்கரவாதிகளின் முகங்கள் சிங்கத்தின் வெளிறிப்போன முகங்கள்... அவர்களின் மூச்சுக் காற்று கண்ணாடிகளை வெளுக்கச் செய்கின்றன.
பயங்கரவாதிகளின் மூச்சுக் காற்றா அல்லது புலர்காலைப் பொழுது மட்டுமா? இவற்றில் எது என் படுக்கையறையின் கண்ணாடிகளை வெளுக்கச் செய்கிறது? என் சாளரங்களுக்கு திரைச்சீலை இல்லை. நான் உறங்குவதையும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருப்பதையும், இரவில் பாடல்களைக் கேட்பதற்காக வானொலியைத் திருப்பிக் கொண்டிருப்பதையும் வெளியே நிற்பவர்கள் பார்க்கலாம். என் சாளரத்தின் கண்ணாடிகள் வெளுக்கும்போதும், என் அறைகளில் இருட்டு நிறைந்து ரத்தத்தைப்போல உறைந்து நின்றுகொண்டிருக்கும். என் கட்டிலுக்குக் கீழே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் கருப்புநிறப் பூனையின் மஞ்சள்நிறக் கண்கள் புஷ்பராகக் கற்களைப்போல மின்னிக் கொண்டிருக்கும்.
அன்னைகளின் கடமை பிள்ளைகளை வளர்ப்பது. அவர்களுக்கு நோய் பாதிப்பு உண்டாகும்போது கவனித்துப் பார்த்துக் கொள்வது. அவர்களுக்கு பதினெட்டு வயதாகும்போது, மரணித்து இனிய நினைவு களாக மட்டும் எஞ்சுகின்றனர். முதுமையால் உண்டான உறுப்புகள் சரியாக செயல்படாத நிலையாலும் பலவீனங்களாலும் பிள்ளைகளைக் கவலைக்கு ஆளாக்குவது அன்னைகளின் கடமையல்ல.
வானப்ரஸ்தம்... அதற்கு நமக்கு காடுகள் எங்கிருக்கின்றன? அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் நதிகள் எங்கிருக்கின்றன? சாளரங்களை இறுக அடைத்துக்கொண்டு, தூசிபடிந்த திரைச்சீலைகளை இழுத்துப் படுக்கையறைகளை இருள் நிறைந்த அறைகளாக மாற்றி நாமும் வானப்ரஸ்தத்தை அனுபவிக்கலாம்.
ரெஃப்ரிஜிரேட்டரில் கிடந்து மரத்துப்போன இனிப்பான கனிகளை நாம் சாப்பிடலாம். பிளாஸ்டிக் புட்டிகளில் என்றோ நிறைத்து வைத்த நீரை நாம் ஓசை உண்டாகப் பருகலாம். நாகரீகத்தில் திளைக்கும் பிள்ளைகளின், அவர்களின் சமகாலத்தவர்களின் வாழ்க்கை முறையை தொலைக்காட்சியைப் பார்த்து நாம் தெரிந்துகொள்ளலாம். அவர்களுடைய தலைவர்களின் செய்திகளை மனதில் சோர்வுண்டாகும்வரை கவனித்துக் கேட்கவும் செய்யலாம்.
வயதானவர்களின் ஆசிரமத்திற்கு விருந்தாளியாக சென்ற மாதம் நான் சென்றபோது, பசுக்களின் சாந்தம் நிறைந்த கண்களைக் கொண்ட- ஆதரவற்ற முதியோர்களை நான் பார்த்தேன். அவர்கள் சாந்தம் குடிகொண்டிருந்த கண்களால் என்னையே கூர்ந்து பார்த்தார்கள்.
அவர்களுடைய வெளுத்த தலைகளையும் சுருக்கங்கள் விழுந்த கைகளையும் கால்களையும் நான் பார்த்தேன். அவர்களின் கண்கள் என் முகத்தை எதற்காகவோ பார்த்தபோது, கருப்பு எறும்புகள் தோலில் ஊர்வதைப்போல உணர்ந்தேன். அந்த கள்ளங்கபடமற்ற உள்ளங்களை ஆண்- பெண் என்ற பாலின வேறுபாடில்லாமல் கட்டிப்பிடித்து அணைக்க நான் விரும்பினேன். அவர்களுக்கு வேண்டியவளாக...
அவர்களின் மகளாகவும் மகனாகவும் நான் இருக்கிறேன் என அறிவிக்க நான் ஆசைப்பட்டேன்.
ஆனால், அந்த இல்லத்தின் நிர்வாகிக்கு முன்னால் எந்தவொரு உணர்ச்சிவசப்பட்ட செயலின் வெளிப்பாடும் என்னால் செய்ய முடியாதென்று எனக்குத் தோன்றியது. அவரின் கையில் கனமான ஒரு சாவிக்கொத்து இருந்தது. எனக்கு முன்னால் படிகளில் ஏறியும் கூடத்தில் நடந்தும் வழிகாட்டியாக அவர் செயல்பட்டபோது, அந்த சாவிக்கொத்து உரத்து சலசலத்தது.
"பத்தாயிரம் ரூபாய் நன்கொடை. பிறகு... மாதந்தோறும் எழுநூறு ரூபாய்... காலையில் கடுங்காப்பி. எட்டு மணிக்கு தேநீர், தோசை, இட்லி, புட்டு, கடலை, அப்பம்... மதியம் கூட்டுப் பொரியலுடன் சாப்பாடு... மாலை வேளையில் தேநீரும் பலகாரமும்... இரவில் சப்பாத்தி, குருமா அல்லது கஞ்சியும் அவியலும்...'' அவர் கூறினார்.
இரண்டாவது தளத்தில் காலியாகக் கிடந்த, ஒரு அறைக்கென்று இருக்கக்கூடிய குளியலறைதவிர, ஒரு சமையலறையும் இருந்தது. அறைக்குப் பின்னால் உலவுவதற்கும், சலவைசெய்த துணிகளை உலரப் போடுவதற்கான ஒரு வராந்தாவும் இருந்தன.
அந்த வராந்தாவில் சென்று நிற்பவர்கள் திருவனந்த புரம் நகரம் முழுவதையும் ஒரே பார்வையில் பார்க்கலாம். ஆனால், முதியவர்களுக்குப் பார்வைசக்தி குறைவாகவே இருக்கும் என்பதை நான் கவலையுடன் நினைத்துப் பார்த்தேன்.
இட்லி, தோசை, கஞ்சி, சோறு, காப்பி ஆகியவையல்லாமல் தலை சாய்ப்பதற்கு ஓரிடம். அன்பென்ற ஒன்றை மறக்கமுடிந்தால், அங்கு மன நிம்மதியுடன் வாழலாம்; இறக்கலாம்.
புலர்காலைப் பொழுதிற்கு முன்னாலிருக்கும் வேளையில் மரணம் வந்து சேரவேண்டுமென விரும்புவேன்.
கைகளையும் கால்களையும் நீட்டிப் படுத்து என்னை நோக்கி இழுப்பதற்கு முயற்சிப்பதுண்டு. பிரச்சினைகள் அதிகரித்துவரும் இந்த வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்கு வேறென்ன வழியிருக்கிறது?
மரணத்தை விரும்பும்போது, பால்ய காலத்திலிருந்து பார்க்கவேண்டுமென ஆசைப்பட்ட அந்த நண்பன் ஞாபகத்தில் வந்தான். என் கற்பனையில் மட்டுமே அவன் வாழமுடியுமென்ற விஷயம் படிப்படியாக எனக்குப் புரிய ஆரம்பித்தது.
அவனுடைய அழிவற்ற தன்மை உரிமை கொள்வதற்கு இயலாத என் நினைவை நம்பியிருக்கிறது என்பதை நான் தெரிந்துகொண்டேன். அவனுடைய நீலநிறக் கண்களை ஆழ்ந்து பார்க்கும்போது, நான் என்னுடைய முகத்தின் பிரதிபலிப்பைப் பார்க்கிறேன். என் சரீரத்தின் எல்லைக்கு அப்பால் அவனுக்கு சரீரமில்லை. அசைவுகளுமில்லை. என் சரீர எல்லைக்கு அப்பால் எனக்கு தெய்வங்கள் இல்லை. மதங்களும் இல்லை. மரணம்...
இருண்ட இரவுப் பொழுதில் கனமான பேய்மழையைப்போல... அது ஓடி அணைத்து என் போர்வையாக மாறும். கடலி-ருந்து வேகமாக எழும் சூறாவளியைப்போல அது வந்து என்னை ஆக்கிரமிக்கும்.
என் சரீரத்தின் பலம் அதன் செயலில் இரண்டறக் கலக்கும். என் உதட்டில் ஒரு சுண்டுவிரலை வைத்து அது தன்னுடைய ரகசியத்தை யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கும். இரவு வேளைகளில் புதர்கள் விட்டில் பூச்சிகளாலும் வண்டுகளாலும் சத்தமயமாக இருக்கும். காதலிகளும் காதலர்களும் போர்வைக்கடியில் படுத்து, ஒருவரையொருவர் இறுக அணைத்துக்கொண்டிருப்பார்கள். குழந்தைகள் கண் விழித்து முலைகளின் கண்களைத் தேடும். பிரம்ம முகூர்த்தம் என்று முணுமுணுத்தவாறு முதிய மக்கள் எழுந்து தடுமாறும் காலெட்டுகளுடன் மலத் தையும் மூத்திரத்தையும் வெளியேற்றுவதற்கு நிலத்தைத் தேடியோ குளியலறைக்கோ நடக்க ஆரம்பிப்பார்கள்.
துருவ நட்சத்திரம் ஆகாயத்தில் மஞ்சள் வெளிச்சத்துடன் மின்னிக்கொண்டிருக்கும். கரும் பனைமரங்களில் கழுகுகள் சிறகுகளை அசைத்துக்கொண்டிருக்கும். தென்னை மரத்தில் காகமும். மாய வித்தைக்காரனின் புல்வெளியில் இருப்பதைப்போல நான் ஆகாயத்தில் பயணிப்பேன்.
கடுமையான பசியை அனுபவித்துக் கொண்டிருக்கும், மரணம் எனும் இராவணன் கவர்ந்து செல்லும் சீதை... நான். ஆனால், எனக்காக வானரங்கள் கடலில் பாலம் உண்டாக்கவில்லை. எனக் காக யாரும் போர் புரியவுமில்லை. என்னை மறப் பதற்கு யாருக்குமே ஒருவார காலம்போதும். எந்தக் காலத்திலும் முடிவுறாத ஒரு சிறுகதையை எழுத ஆசைப்பட்டவள் நான். ஆனால், என் மரணத்துடன் அந்தக் கதை முழுமையாக முடிந்துவிடும் என்ற விஷயம் இப்போது எனக்குத் தெரிகிறது. மரணமென்பது... முகமற்ற ஒரு மாலுமி.