தாங்கள் கடந்து வந்த பாதையைப் பற்றிக் கூறுங்கள்?

90-களில் நாளிதழ்கள் மற்றும் இலக்கிய- வெகுஜன இதழ்களான விகடன், குமுதம், கல்கி, வாசுகி, மாலைமதி, இனிய உதயம், இதயம் பேசுகிறது போன்றவற்றுக்கு வாசகர் கடிதம் எழுத ஆரம்பித்து, துணுக்குகள், கவிதைகள், சிறுகதைகள் என வளர்ந்தது. அப்போது சேலத்தில் இயங்கிய பல இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து ஏதேனும் நிகழ்வுகளை நடத்திக்கொண்டே இருந்தன. எல்லா ஞாயிறுகளிலும் ஏதேனும் நிகழ்ச்சிகள் இருக்கும். சில ஞாயிறுகளில் காலை, மாலை என இரண்டு நிகழ்வுகள்கூட இருக்கும். அப்படிப்பட்ட நாள்களில் இரண்டு கூட்டங்களுக்கு இடைப்பட்ட நேரத்தை காந்தி ஸ்டேடியம், அண்ணா பூங்கா போன்ற இடங்களில் நண்பர் சசியுடன் என்ன படிக்கிறோம், என்ன எழுதுகிறோம், எந்தெந்த இதழ்களில் படைப்புகள் வந்தன, வெளிவந்த படைப்புகளின் குறைநிறை போன்றவற்றை விவாதிப்போம். சிலசமயம் நண்பர் பாலமுருகன் கலந்துகொள்வார். சேலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய அமைப்புகள் இருந்தாலும் படைப்பாளர் பேரவை, பாவலர் எழுஞாயிறு அறக்கட்டளை, வாசகர் பேரவை, வேட்கை, தக்கை, முகடு, எழுத்துக்களம், த.மு.எ.க.ச. அமைப்புகளுடன் நெருக்கமாக பயணித்தேன். இந்த அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளில் கட்டாயம் கவிதை வாசிப்பும் இருக்கும். அவற்றில் கவிதை வாசிப்பதற்காக எழுதி நண்பர்கள் வே.பாபு, சூர்யநிலா, பொன்.குமார் ஆகியோரால் சிற்றிதழ்கள் பக்கம் நகர்ந்தேன். கவிஞராகவும், ஓவியராகவும் என்னை மெருகேற்றிக்கொள்ள சிற்றிதழ்கள் குறிப்பாக சௌந்தர சுகன், சிறகு இதழ்கள் வாய்ப்பளித்தன.

tt

Advertisment

முதல் தொகுப்பான 'இருண்மையிலிருந்து' 2003-ல் எழுத்துக்களம் வெளியீடாக வந்தது. சிறு தொகுப்பாக இருந்தாலும் பரவலான கவனத்தைப் பெற்றது. தமிழக அளவில் படைப்பாளிகளை அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்பளித்தது. இப்போது முகநூல் அதை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் இருண்மையிலிருந்து (2003), பறவைகள் புறக்கணித்த நகரம் (2007), தொடுவானமற்ற கடல் (2017), இனியாவின் இளஞ்சிவப்பு வானம்(2019) வெளிவந்துள்ளன. இதில் தொடுவானமற்ற கடல் தொகுப்பு ஐ.ஐ.டி பேராசிரியர்களான ஸ்வர்ணலதா, ஸ்ரீலதா இருவரின் முன்னெடுப்பால் நவீன அகம்புறம் பெண் எழுத்தை அடையாளமிடுதல் எனும் நிகழ்வில் ஐ.ஐ.டி வளாகத்தில் மூத்த கவிஞர் மீனாட்சி வெளியிட் டார். தமிழகத்தின் முன்னணி பெண் கவிஞர்களான மாலதி மைத்ரி, சுகிர்தராணி, தி.பரமேஸ்வரி, இளம்பிறை, குட்டி ரேவதி, சல்மா, பிருந்தா சேது, எழுத்தாளர் பாமா, அ.மங்கை போன்றவர்களுடன் பங்குபெற்றது மறக்க முடியாத நிகழ்வு. இனியாவின் இளஞ்சிவப்பு வானம் கவிஞர் தாராவின் வசந்தா பதிப்பகம் வெளியிட்டது.

கவிதையில் நவீனம், பின்நவீனம் எனப் பல வகைகள். தங்களுக்குப் பிடித்தது எவ்வகை? தாங்கள் எழுதுவது எவ்வகை?

இலக்கியம் கண்டதற்கே இலக்கணம். படைப்புதான் முதலில். கவிஞர்கள் எழுது கிறார்கள். விமர்சகர்கள் புதுக்கவிதை என்றோ, நவீனம் என்றோ, பின்நவீனமென்றோ வகைப்படுத்துகிறார்கள். இந்த வகைமையில் எழுத வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டு எழுதுவதில்லை. வாசிப்பவர்கள் உள்நுழைய கவிதை அனு மதிக்க வேண்டும். அத்தகைய கவிதைகளே எனக்குப் பிடித்தமானவை. நான் எழுதுவது எவ்வகை என விமர்சகர்கள்தான் சொல்ல வேண்டும்.

கவிதையை எழுதிவிட்டு தலைப்பு வைப்பது: , தலைப்புக்காக கவிதை எழுதுவது... இரண்டில் எதுசரி?

உங்கள் கேள்வி மெட்டுக்கு பாட்டு எழுதுவது, பாட்டுக்கு மெட்டுப் போடுவது எது சரியென கேட்கப்படும் கேள்விபோல உள்ளது. தலைப்புக்காக எழுதும்போது வலிந்து அதையொட்டி சிந்தித்து கவிதையை உருவாக்குகிறோம். இரண்டாவதில் ஏதேனும் ஒரு காட்சி, எங்கேயோ ஒலிக்கும் ஒரு சொல், நுகரும் மணம்கூட கவிதை உருவாக தூண்டலாகிறது. உருவான பின்பு தலைப்பிடுகிறோம். சிலசமயம் தவிர்த்தும் விடுகிறோம். எதுசரி என்பதைவிட தானே தோன்றுகையில் மனம் நிறைவுகொள்கிறது.

கவிதை என்பதற்கு சரியான விளக்கம் என்ன?

கவிதை என்பதற்கு சரியான விளக்கம் சொல்லமுடிந்தால் அதற்கு ஏன் இத்தனை விளக்கங்கள். பாரதி, கவிமணி தொடங்கி இன்றைய கவிஞர்கள் வரை சொல்லிய பின்பும் விளக்கம் தேவைப்படுகிறது என்பதுதான் கவிதையின் சிறப்பு. குளத்தில் வீசப்பட்ட கல் நீரின் ஆழத்தில் அமிழ்ந்துவிட்டாலும் அதன் கனத் தைப் பொறுத்து அது ஏற்படுத்தும் அதிர்வுகள் அழுத்தமாகவும் நீண்டநேரமும் நீடிப்பதுபோலவும் கவிதை மனதில் அதிர்வினை ஏற்படுத்த வேண்டும்.

பெண் மொழி, பெண் உடல்மொழி ஆகிய மொழிகளில் பெண்ணியம் பேச ஏற்ற மொழி எது?

எது என்பதை எழுதும் படைப்புதான் தீர்மானிக்கின்றன.

பாரதி பேசிய பெண்ணியம், பெரியார் பேசிய பெண்ணியம் தொடர்ந்து பெண்ணியம் பேசும் ஆண்களில் தற்போது யாரைக் குறிப்பிடலாம்?

பாரதி பேசிய பெண்ணியத்தை தற்போது பெண்ணிய வாதிகள் கேள்விக்குட்படுத்துகிறார்கள். பெரியாரைத் தொடர்ந்து அதுவும் தற்போது யாராவது அவரைப்போல் ஒருவர் இருக்கிறார் களா?

பெண் படைப்பாளிகளில் பெண்ணியம் பேசாத படைப்பாளிகளும் உள்ளனரே. அவர்கள் குறித்து?

dd

Advertisment

வீடு, குடும்பம், குழந்தைகள், அலுவலகம் என்று ஓடிக் கொண்டிருக்கும் பெண்கள் எழுதவருவதே மகிழ்ச்சிதான். அப்படி எழுதவருபவர்களை இதைத்தான எழுதவேண்டும். இப்படித்தான் எழுதவேண்டும். இப்படி எழுதவில்லையே என்பதை விடுத்து வரவேற்போம்.

தங்கள் இலக்கு?

பெண்கள் எழுதிய நூல்களைக்கொண்ட நூலகம் ஒன்று அமைத்திட வேண்டும் என்று ஓர் ஆசை உண்டு. ஆனால் அது பேராசை. மற்றொன்று வரலாற்றுக் காலந்தொட்டு பெண் பட்ட பாடுகளை ஓவியமாகத் தீட்ட வேண்டும் என்பது. தோள்சீலைக் கலகம், உடன்கட்டை ஏறுதல் இரண்டையும் வரைந்தபோது இப்படியோர் எண்ணம் உண்டானது.

ஏறத்தாழ எல்லா முகநூல் குழுக்களிலும் இருக்கிறீர்கள். தங்கள் இலக்குடன் ஒத்துப்போகிறதா?

முகநூல் பெருங்கடல். ஏறத்தாழ என்பதெல்லாம் அதிகப் படி. நூற்றுக்கு உட்பட்டு இருக்கலாம். இலக்கு என்பதைவிட இரசனை தான் குழுக்களுடன் இணைய வைக்கிறது. படைப்பிலக் கியம், புகைப்படம், ஓவியம், பெண்ணியம், பழைய திரைப்படப் பாடல்கள் தொடர்பான குழுக்களுடன் பயணிக்கிறேன்.

தங்கள் இலக்கியப் பயணத்திற்கு முகநூல் குழுக்கள் தடையாக இருப்பதாகப் படுகிறதே?

அதிகமான முகநூல் குழுக்களில் இருந்தாலும் அதிகம் பங்கேற்பதில்லை. பார்வையாளராகத்தான் இருக்க முடிகிறது. தென்குமரிக் கவிதைக்களம், யாது மாகியவள் இரண்டிலும் துணைத் தலைவராகவும், மதிப்புறு தலைவராகவும் இருக்கிறேன். தென்குமரிக் கவிதைக் களத்தில் ஒரு போட்டிக்கு மட்டும் இரண்டு நடுவர்களுள் நானும் ஒருவராக தேர்வு செய்கிறேன். மற்றபடி 2007க்குப்பிறகு நான் அதிகம் எழுதவில்லை. எழுதாமல் தீராது என்னும் போதுதான் எழுதுகிறேன். எனவே இலக்கியப் பயணத்திற்கு முகநூல் குழுக்கள் தடையாக இருப்பதாக சொல்லமுடியாது. இன்னும் சொல்லப்போனால் பயணத்தில் ஆர்வம்கொண்ட எனக்கு முகநூல் குழுமங்களின் ஆண்டுவிழாக்கள் பயணிக்க வாய்ப்பளிப்பதில் மகிழ்ச்சியே. ஆனால் புத்தக வாசிப்பில் மனம் ஒன்றுவதில்லை. மணிக்கணக் கில் படித்ததுபோய் பத்துநிமிடம் படித்தாலே மனம் அதிலிருந்து விலகி அலைபேசியைத் தேடுகிறது. அது குழுமங்களின் குற்றமல்ல. முகநூல் மட்டுமல்ல, வாட்சப், யூடியூப், கூகுள் என நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. அலைபேசிப் பயன்பாட்டைக் கட்டுக் குள் வைக்க மனம் பழகாதததுதான் காரணம்.

முகநூல் குழுக்கள், கலந்துகொள்பவர்களுக் கெல்லாம் விருதுகள் வழங்குகின்றனவே அது ஆரோக்கியமானதா?

முகநூல் குழுமங்கள் வழங்கும் விருதுகள் குறித்து விமர்சனங்கள் இருப்பதை சிலரின் பதிவுகளில் பார்த்திருக்கிறேன். அதையே நீங்களும் கேட்கிறீர்கள். குழுமங்கள் வழக்கமாக நடத்தும் போட்டிகள் அல்லாது, ஆண்டு விழாக்களுக்கென்றே போட்டிகள் நடத்தி அவற்றில் வென்றவர்களையே விருதாளர் களாகத் தேர்வு செய்கின்றன. தொடர்ந்து ஏதேனும் குழும விழாக்கள் நடைபெறுவதால் விருதுகளை அள்ளிக் கொடுப்பது போன்ற தோற்றமயக்கம் ஏற்படு கிறது. ஆண்டு முழுவதும் போட்டிகளில் பங்கேற்கும் கவிஞர்கள் ஓரிடத்தில் சங்கமிக்க, உரையாட, ஊக்கப்படுத்த விழாக்கள், விருதுகள் உதவுகின்றன. என்னைப்பொறுத்த அளவில் விருதுகளுக்கான பெயர் கள் எனக்கு நெருடலாக இருக்கும். எனக்கு கவித்தாய், தமிழ்த்தாய் என்ற பெயரில் (வயது காரணமாக இருக்கலாம்) தரும்போது அதற்கு நாம் தகுதியாக இருக்கிறோமா என்கிற கேள்வி எனக்குள் வரும்.

interview

இலக்கிய வளர்ச்சியில் முகநூல் குழுக்களின் பங்கு என்ன?

நான் பயணிக்கும் குழுக்களை வைத்து சொல்வ தென்றால் இலக்கிய வளர்ச்சி என்பதைவிட தமிழ் வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டால் தமிழ் எழுதத் தெரியாத, பிழையின்றி எழுதத் தெரியாத பலரையும் தமிழில் எழுதவைத்ததே பெரும் சாதனைதான். மரபுக் கவிதை இன்று புத்துயிர் பெற்றதற்கு முக்கிய காரணம் முகநூல் குழுக்கள்தாம். எங்கள் தென்குமரிக்களம் நாள்தோறும் கவிதைப் போட்டிகள் நடத்துகிறது. யாதுமாகியவள் குழுமம் பனுவல் நாழினி எனும் விருதுக்காக பல பெண்கள் இவர்கள் இந்தப் புத்தகங்களை எல்லாம் படிக்கிறார் களா என வியப்பு கொள்ளும் வகையில் நூல்களைப் படித்துவிட்டு எழுதினார் கள். பெண் படைப்பாளிகளின் ஆக்கங் களை மின்னூல் வடிவில் கொண்டு வந்தது.

என்னுடைய ஓவியங்களைக்கூட மின்னூல் வடிவில் கொண்டுவந்தது. இதன் நிறுவனர் செல்லா மாரிமுத்து இணையவெளியை அதன் சாத்தியத்தை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்பவர்.

அதேபோல் படைப்புக் குழுமம் பலரும் அறிந்த குழுமம். புதிதாக எழுத வருபவர்கள் தொடங்கி தேர்ந்த படைப்பாளிகள் வரை பலரும் பயணிக்கும் குழுமம். படைப்புத் தேர்வில் கறாராக இருப்பார்கள். இந்தக் குழுமத்திலிருந்து தகவு, கல்வெட்டுப் பேசுகிறது என இரண்டு மின்னிதழ்கள் வருகின்றன. தகவு இதழ் தற்கால தமிழ் இலக்கியப் பரப்பில் செயல்படும் நவீன படைப்பாளிகளின் நேர்காணல், படைப்புகளை வெளியிடுகின்றன. பொருளாதாரத்தில் நலிந்த படைப் பாளிகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி அளிக்கிறது. கவிதை, சிறுகதை, ஓவியம், நூல் விமர்சனம் ஆகிய வற்றுக்கான தளமாக விளங்குகிறது.பதிப்பகம் வைத்து நூல்களையும் வெளியிட்டு வருகிறது. மாதமொரு கவிஞருக்கு இக்குழுமம் வழங்கும் கவிச்சுடர் விருது படைப்பாளிகளால் பெருமைக்குரியதாக பார்க்கப் படுகிறது. வாசிப்பும் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுமம் சிறந்த வாசகர்களுக்கு நூல்கள் பரிசளிப்ப தோடு, விமர்சனம் எழுத முன்வருபவர்களுக்கு பதிப்பகங்களிலிருந்து நூல் களையும் பெற்றுத்தருகிறது. இப்படி பல குழுமங்களை சொல்லலாம். ஒருவகையில் பார்த்தால், இன்று முக நூல் குழுமங்கள்தான் அதிகம் தமிழை வளர்க்கின்றன.

ஒரு கவிஞரான நீங்கள் சிறுகதைகளையும் எழுதி யுள்ளீர்கள். ஏன் அத்துறையில் தொடர்ந்து இயங்கவில்லை?

நான் வாசித்த கதைகளுக்கும், எழுதுகின்ற கதைகளுக்குமான இடை வெளி.. தொடரமுடியாமல் போனது.

எழுதும் மனத்தூண்டல் வாய்க்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

கவிதை எழுதுவதற்கும், சிறுகதை எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

சிற்பத்திற்கும் கட்டிடத்திற்குமான வித்தியாசம்தான். எல்லோரும் பார்க்கும் கல் ஒன்றையே சிற்பியும் பார்க்கிறார். அதனுள் மறைந்திருக்கும் உருவம் அவ ருக்கு மட்டுமே தெரிகிறது. தான் பார்த்த உருவத்தை எல்லோரும் காண, தேவையற்ற பாகத்தை உளிகொண்டு கொஞ்சம் கொஞ்ச மாக அவர் நீக்கும்போது, கல் கலைவடிவ மாகிறது. சிற்பிக்கு கல். கவிஞருக்கு சொல்.

சிறுகதையை எழுதும்முன் எழுத்தா ளர் மனதில் ஒரு வடிவம் கொடுத்துவிடுகி றார். போதிய விவரணைகள் இல்லாத வரை படம். எழுத முற்படுகையில் அவர் நினைத் திராத சிறு சிறு குறிப்புகள் அதில் இணைகின்றன. பொறியாளர் தாளில் வரைந்த மாதிரி படத்தை கல்லும் சாந்தும் வைத்துக் கட்டுவதுபோல. கவிதையில் கழிக்கப்படுகிறது. சிறுகதையில் அது கூட்டப்படுகிறது.

தங்களின் இன்னொரு முகம் ஓவியர். ஓவியங்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்த சரியான களமாக உள்ளதா?

கவிதையாக சில உணர்வுகளையும், ஓவியமாக சில உணர்வுகளையும் வெளிப்படுத்த முயல்கிறேன். பெண் பாடுகளை வெளிக்கொணர ஓவியம் கைகொடுக்கிறது.

ஓவியம் முறையாக கற்றுக்கொண்டீர்களா?

ஓவியம் முறையாகப் பயிலவில்லை. சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல பழக்கத்தினால் படிந்ததுதான். போர்ட்ராய்ட் எனப்படும் உருவ ஓவியங்களை வரைய முயல்கையில் முறையாக சித்திரக் கலையைப் பயிலவில்லையே என்கிற குறை தற்போது அதிகம் மேலோங்குகிறது.

ஓவியங்களுக்கு கல்லூரி இருப்பது போல கவிதை, கதைகளுக்கு கல்லூரி தொடங்கினால் என்ன?

புதிய யோசனை. நடைமுறையில் எந்தளவு சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. தமிழ்ச்சூழலில் எழுத்தை முழுநேரமாக கொண்டவர்கள் குறைவு. ஏதேனும் ஒரு வேலையில் இருந்த படி எழுதுபவர்களே அதிகம். இராஜாஜியிடம் ஒருவர் தன்னை எழுத்தாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டார்.சரி, சாப்பாட் டுக்கு என்ன பண்ற என்று இராஜாஜி கேட்டதாக படித்ததுண்டு. அதில் இப்போதும் மாற்றமில்லை. இந்தக் கல்லூரியில் படித்து படைப்பிலக்கியத்தில் ஈடுபடுபவர்களுக்கு எழுத்தால் வாழ்க்கை நடத்துமளவு வருமானம் கிடைக்குமா என்பது ஒருபக்கம். கல்லூரியில் படித்து கதை,கவிதை எழுதமுடியுமா என்றும் யோசிக்க வைக்கிறது. படைப்பிலக்கியங்களை கதை, கவிதை, ஓவியம் போன்றவைகளை எவ்விதம் அணுகுவது, ரசிப்பது, புரிந்து கொள்வது என்பது போன்று பள்ளியிலிருந்தே பயிற்சி அளிப்பது பலன்தருமெனத் தோன்றுகிறது.

கவிதைக்கு கிடைக்கும் வரவேற்பு ஓவியத்திற்குக் கிடைக் கிறதா?

என்னைப்பொறுத்த அளவில் என்னுடைய கவிதைகளை விட ஓவியங்களுக்கு வரவேற்பு அதிகம். பொதுவாகப் பார்த்தால் கவிதைக்கு கிடைக்கும் முன்னுரிமை ஓவியங்களுக்கு கிடைப்ப தில்லை என நினைக்கிறேன்.

தஞ்சாவூர்வாசியான தாங்கள் தற்போது சேலம்வாசியாக உள்ளீர். இதுவும் ஒருவகையில் புலம்பெயர்தல்தானே?

நான் சேலம் மாவட்டம்தான் என்பதை பலமுறை பதிவு செய்தாலும் இந்தக் கேள்வி எழுந்தபடியே உள்ளது. செவ்வாய்ப் பேட்டையிலிருந்த மாதவராய செட்டித் தெருவில் பிறந்தேன்.

இரண்டாம் வகுப்புவரை இங்குதான் படித்தேன். 69-ல் தஞ்சைக் குச் சென்றோம்.78வரை அங்கிருந்தோம். இந்த ஒன்பது வருட வாழ்வு என்மனதில் ஆழப்பதிந்து படைப்புகளில், உரையாடல் களில் பிரதிபலித்து தஞ்சைவாசியாக நினைக்கவைக்கிறது. குறிஞ்சியிலிருந்து மருதம் சென்று மீண்டும் குறிஞ்சிக்கே திரும்பிவிட்டோம். புலம்பெயர்பவர்கள் வலியோடு ஒப்பிடுமளவு எதுவுமில்லை. குட்டிக்கும் நாய்க்கும் குடிபோக சந்தோசம் என்பது போல புதுநிலம். அதுவும் திரும்பிய பக்கமெல்லாம் பசுமை கொஞ்சிய தண்ணீர் தளும்பிய அந்த சின்னஞ்சிறு கிராமம் என் மனதில் அழியாமல் தங்கிவிட்டது. என்வாழ்வின் மகிழ்ச்சியான காலகட்டமென்றே அந்தநாள்களைச் சொல்லுவேன்.

புலம்பெயர்ந்தது குறித்து வருத்தம் உண்டா?

என் பெற்றோருக்கு இருந்திருக்கலாம். உற்றார் உறவினர்களைப் பிரிந்து நல்லது கெட்டதுக்குக்கூட போகமுடியாத சூழல், பல்லாண்டுகளாக பழகிய இடமிட்டு வேற்று நிலத்தில் தனித்திருக்க நேர்ந்தது...

குறிப்பாக என் அம்மாவை மிகவும் வருத்தியிருக்க லாமென இப்போது தோன்றுகிறது. அவருடைய அப்பாவின் சாவுக்குக்கூட போகமுடியாதுபோனது ஆழமான காயமாக இருந்திருக்கும். சிறுமியாக இருந்த நான் அப்படி உணரவில்லை.

சிற்றிதழ்களில் தங்கள் பங்களிப்பு தொடர் கிறதா?

எப்போதாவது என்றுதான் சொல்லவேண்டும். இம்மாத அணங்கு இதழில் என்னுடைய இரு கவிதைகள் வந்துள்ளன.

நூல்விமர்சனம் எழுதுவது குறித்து?

படிக்கின்ற புத்தகங்களைக் குறித்து கருத்துகளை எழுத்து வடிவில் பகிரவேண்டுமென்கிற எண்ணம் உங்களைப் போன்றவர்களால்தான் உண்டானது.

நூற்றுக்கணக்கான நூல்களைப் படிப்பதோடு நில்லாமல் விமர்சனம் எழுதி அதை பல்வேறு இதழ்களிலும் வெளியிட வைக்கிறீர்கள்.அவ்வகையில் இதில் நீங்களே என் முன்னோடி. நான் எழுதுவது மதிப்புரையா, விமர்சனமா என்ற ஐயம் எனக்குண்டு. அதனால் ரசனையுரை எனச் சொல்லலாம். முகநூல் குழுமம் ஒன்றில் 'நான் படிச்சாச்சு... நீங்க?' எனும் தலைப்பில் 100-க்கும் மேற்பட்ட நூல்களைப் பற்றி எழுதிவந்தேன். அது வாரந்தோறும் என்று ஆரம்பித்து, மாதந்தோறும் என்றாகி கடைசியில் நின்றேபோனது.

இப்போது அவ்வப்போது எழுதிவருகிறேன். பல்வேறு நிகழ்வுகளில் நட்பின் நிமித்தம், நான் வாசிப்பேன் எனும் நம்பிக்கையில் என்னிடம் தரப்படும் புத்தகங்களைத் தாமதமாகவேனும் அவை பற்றி எழுதிவிடுவேன்.

கவிதையில் ஓவியத்தில் பேசும் நீங்கள் புகைப்படத்திலும் பேசிவருகிறீர்கள். புகைப்படம் எடுப்பது உங்களுக்குப் பிடித்தமானதா?

புகைப்படம் என்பதை தற்போது ஒளிப்படம் என்றே குறிப்பிடுகிறார்கள். ஒருகாலத்தில் அத்திப்பூத்தாற்போல ஸ்டூடியோவிற்கு சென்று படம்பிடித்து, அதை நடையாய் நடந்து வாங்கிவந்து சுவரில் மாட்டிவைப்போம். இன்று கணக்கற்று பலவித கோணங்களில் எடுத்து அதை பில்ட்டரின் உதவியால் அழகுபடுத்தி சமூக ஊடகங்களில் பகிர்ந்து மகிழ்கிறோம்.

இளவயதிலேயே காமிராவின்மீது காதலெனக்கு. தினமணி நாளிதழ் இணைப்பான தினமணிக்கதிரில் புகழ்பெற்ற ஒளிப்படக்கலைஞர் ஹாரி மில்லர் ஒளிப்படக்கலை நுட்பம் குறித்து தொடர் ஒன்று எழுதினார். அதைத் தொகுத்து வைத்திருந்தேன். புகைப்படம் எடுப்பது எப்படி என மணிமேகலை பிரசுரம் நூல் ஒன்று உள்ளது. இருந்தும் அவை கை கொடுக்கவில்லை.

மேனுவல் காமிரா பயன்பாட்டின் கலைச் சொற்கள் ஷட்டர் ஸ்பீடு போன்றவை புத்திக்குள் உறைக்கவே இல்லை. இருந்தும் கோனிகா பிலிம் கேமராவில் பிலிம்ரோல் போட்டு கண்ணில் படும் நாய், பூனைகளை எடுத்தேன். நான் படம்பிடித்த மனிதர்களுக்கு தலையிருந்தால் உடல் இல்லை. உடலிருந்தால் தலையைக் காணோம். அப்படியும் விடாத முயற்சியில் சில படங்கள் எடுத்துள்ளேன். பிலிம்ரோல், டெவலப், பிரிண்டிங் செலவு கையைக் கடிக்க தொடரமுடியவில்லை. பிறகு சோனி டிஜிட்டல் கையடக்க காமிரா. அதிலும் நான் நினைத்தது போல வரவில்லை. இப்போது அலைபேசியில் எடுப்பதோடு சரி. காலமும் அலையும் யாருக்காகவும் நிற்பதில்லை என்பார்கள். காலத்தை நிறுத்திவைக்கும், உறையவைக்கும் ஆற்றல் ஒளிப்படத்திற்கு உண்டு. காலத்தின் சாட்சி. பலநூறு சொற்களால் விளக்க முடியாததை ஒருபடம் சொல்லிவிடும். ஓவியம், ஒளிப்படம் இரண்டுக்கும் ஒற்றுமை உண்டு. இரண்டிலும் ஒளியும் நிழலும் முக்கியம்.

பெரும்பாலும் எல்லா இலக்கியவாதி களுடனும் புகைப்படம் எடுத்துக்கொள்கிறீர்கள்.

அப்புகைப்படங்களில் யாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் உங்களுக்குப் பிடித்தமா னது ஏன்?

முன்பெல்லாம் பிரபலமானவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கும் பித்து இருந்தது. அதன் நீட்சிதான் இப்போது ஒளிப்படம் எடுத்துக்கொள்வது. நிறைய ஆளுமைகள், கவித்தோழமைகளுடன் படமெடுத்துக் கொண்டிருக்கிறேன். எடுத்துக்கொண்ட படங்களைவிட, எடுத்துக்கொள்ளாத, இனி விரும்பினா லும் எடுத்துக் கொள்ளமுடியாத இருவருடனான படங்கள். ஒன்று என் அம்மாவுடன். மற்றொன்று நடிகர் திலகம். அம்மாவுடனாவது நாங்கள் குடும்ப மாக எடுத்த படம் ஒன்று உண்டு. நான் சிவாஜி ரசிகை என்பதால் சேலம் வரும்போது சிலமுறை சந்தித்திருக்கிறேன். ஒருமுறை அவர் நண்பர் வீட்டில் அவர் தங்கியிருந்தபோது மகளிர் காங்கிரஸ் பெண்கள் சிலருடன் சென்றிருந்தோம். அவருடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தபோது அவரும் சம்மதித்தார். ஆனால் அப்போது ஒளிப்படக்கலைஞர் ஒருவரும் கிடைக்காததால் படம் பிடித்துக்கொள்ள முடியாது போனது.

தாங்கள் இலக்கியத்தில் சாதித்துவிட்டதாக கருதுகிறேன். தங்கள் கருத்து?

கடற்கரையில் அலைகளில் ஆடி மகிழ்ந்து, அழகிய சிப்பிகளை சேகரித்து மகிழும் சிறுமி நான். கடலுக்குள் கலங்களில்கூட இன்னும் பயணிக்க வில்லை.