ஒரு தாயின் வார்த்தைகள்
அன்று மதிய உணவு, துபாய் தேரா தமிழ் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்திற்கு திரும்பி நடந்து வந்துகொண்டிருந்தேன். ரெட் பெப்பர் ரெஸ்டாரண்டுக்கு அருகில் இருந்த சிக்னல் க்ளியர் ஆவதற்காக காத்திருந்தேன். அப்போது யுனைடெட் ஹைபர் மார்க்கெட் பக்கம் இருந்து சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு தாய், தன் 8 வயதுள்ள மகளுடன் வந்தார்.
ஒரு கையில் தன் மகளை அணைத்துப் பிடித்திருந்தார். மறுகையில் பெரிய பை. அதில் மளிகை சாமான்கள் நிறைந்து இருந்தன. கையில் வலி எடுத்திருக்க வேண்டும். அந்தப் பையை தரையில் வைத்துவிட்டு, மகளை பிடித்திருந்தார். அந்தக் குழந்தை எங்கோ பார்த்தபடி இருந்தது. சிறிது மனவளர்ச்சி குறைந்த குழந்தைபோல் தெரிந்தது. அவரின் முகத்தில் வியர்வை முத்துகள் பூத்திருந்தன.
சிவப்பு விளக்கு மறைந்து பச்சை விளக்கெரிய அவர் கீழே வைத்திருந்த பைகளை எடுக்க முயற்சித்தார். அருகே நின்றுகொண்டிருந்த நான் ""சிஸ்டர்! இந்த பைகளை நான் எடுத்து வருகிறேன். உங்கள் மகளை நீங்கள் கவனமாக அழைத்து வாருங்கள்'' என்று ஆங்கிலத்தில் சொன்னேன். அவரின் முகத்தில் நிம்மதியும், கண்களில் நன்றியும் மின்னின. சாலையை தாண்டியபிறகு ""நீங்கள் எங்கே செல்ல வேண்டும்?'' என்று கேட்டேன். லூலு சென்டருக்கு எதிர்ப்புறம் உள்ள தெருவில் குடியிருப்பதாக ஆங்கிலத்தில் பதில் சொன்னார்கள்.
என் கையில் இருந்த பைகள் இரண்டும் கனமாய் இருந்தன. அவர் தன் மகளையும் பிடித்துக்கொண்டு, பைகளையும் தூக்கிக்கொண்டு செல்வது அவருக்கு மிகவும் கடினம் என்று உணர்ந்து, அவர்கள் குடியிருக்கும் வீடு வரை பைகளைக் கொண்டு வந்து தர முடிவு செய்தேன். செல்லும் வழியில் அவர்களைப் பற்றி விசாரித்தபோது ""எங்கள் சொந்த ஊர் டெல்லிலி. நான் மெடிக்கல் காலேஜில் லெக்சரராக வேலை பார்த்தேன். இவள் பிறந்தபிறகு, இவளைப் பார்த்துக் கொள்வதற்காக என் வேலையை விட்டுவிட்டேன்'' என்று சாதாரணமாய் அவர் சொன்னபோது ஆச்சர்யமாய் இருந்தது.
படித்த படிப்பையே மகளுக்காக உதறிய அந்த தாயின் உயர்ந்த மனதை, தியாகத்தை நினைத்து நெகிழ்ந்து போனேன். அவரும், என்னைப் பற்றியும், என் குடும்பம் பற்றியும் பரஸ்பரம் விசாரித்தார். அதற்குள் அவர்கள் வீடு வந்துவிட வாசலிலே அவர்கள் பையை கொடுத்துவிட்டு விடைபெற்றேன். ""வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லுங்க பிரதர்'' என்று சகோதர பாசத்தோடு அவர் அழைத்தார்.
""அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது...'' என்று அவரிடம் சொல்லிவிட்டு, அவர் குழந்தையின் தலையை செல்லமாய் தொட்டு ""பேபி... நீ ரொம்ப அதிர்ஷ்டசாலிலி... 24 மணி நேரமும் உன்னைப் பார்த்துக் கொள்ள கடவுள், உன் அம்மாவாக வந்திருக்கிறார்!'' என்று சொன்னேன்.
நான் சொன்னதை அக்குழந்தை புரிந்து கொண்டதா? இல்லையா? என்று தெரியவில்லை... புரிந்துகொண்டதுபோல் கள்ளம்கபடமில்லாமல் அழகுச் சிரிப்பு சிரித்தது. அக்குழந்தை கண்ணன் போலவும், அந்தத் தாய், குட்டி அன்னை தெரஸா போலவும் என் கண்களுக்குத் தெரிந்தார்கள்.
அக்குழந்தைக்கு டாடா காண்பித்தபடியே நான் விடைபெற, அப்பெண் ஈரவிழிகளோடு சொன்னார்; ""பிரதர்! உங்களையும் உங்க குடும்பத்தையும் கடவுள் நன்றாக பார்த்துக் கொள்வார்!''
சிறு நல்ல செயல் செய்த திருப்தியோடு வெகுவேகமாக நடந்து, யுனைடெட் ஹைபர் மார்க்கெட் எதிரில் இருந்த ஹோட்டலை கடந்து, முராக்காபாத் போலீஸ் ஸ்டேஷன் சிக்னலைத் தாண்டினேன். அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது என்ற அவசரத்தில் சிவப்பு சிக்னலைப் பார்க்காமல் பாதிசாலையை கடந்துவிட்டேன். அதேநேரம் எதிரில் மின்னல்வேகத்தில் வந்த கார் என்னை மோதப்போகிறது என்று நினைத்த நேரம்... நல்லவேளை... காரில் இருந்தவர் திடீரென்று வேகத்தை குறைக்க... ஓடி சாலையை கடந்துவிட்டேன்.
சாலையைத் தாண்டி மூச்சிறைக்க நின்றபோது அந்த அன்புத்தாய் சொன்ன வார்த்தைகள் திரும்பவும் என் காதில் ஒலிலித்தன: ""பிரதர்! உங்களையும் உங்க குடும்பத்தையும் கடவுள் நன்றாக பார்த்துக்கொள்வார்!''
இறைவனுக்கு அந்த தாயின் பேச்சு கேட்டிருக்கிறது!
குழந்தைக்கு தெரியும்!
ஒரு வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு துபாய் அல் முதினா ஆஸ்டர் மருத்துவமனை வரவேற்பறையில் காத்திருந்தேன். முன்பே முன்பதிவு வாங்கி இருந்ததால் இப்போது முதல் ஆளாய் நான் செல்ல வேண்டும். வரவேற்பு அறையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்தார்கள்.
அப்போது 25 வயது மதிக்கத்தக்க ஒரு தாய், 3 வயதுள்ள தன் குழந்தையுடன் பதட்டமாய் வந்தார்.
""குழந்தைக்கு நேற்று இரவு முதல் கடுமையான காய்ச்சல். உடனே டாக்டரைப் பார்க்கவேண்டும்'' என்று அங்கேயிருந்த நர்ஸிடம் சொன்னார்.
அதற்கு அந்த நர்ஸ் ""இங்கே காத்திருப்பவர்கள் ஏற்கனவே முன்பதிவு வாங்கி இருக்கிறார்களே... கொஞ்சம் காத்திருங்க'' என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த தாயின் முகத்தில் கவலை தெரிந்தது. கையில் பிடித்திருந்த குழந்தை வாடிய மலரைப்போல் சோர்வாய் இருந்தது. உடனே நான் எழுந்து என் டோக்கனை அந்த தாயிடம் கொடுத்து ""நீங்க போங்க...'' என்றேன். ""அப்ப உங்களுக்கு இன்னும் 2 மணி நேரம் லேட்டாகும். பரவாயில்லையா?'' என்று நர்ஸ், என்னிடம் கேட்டார். ""பரவாயில்லை சிஸ்டர்... இன்று அலுவலகம் எனக்கு விடுமுறைதான்'' என்று பதில் சொன்னேன்.
நர்ஸ் அந்த தாயை அனுமதிக்க, அவர் மருத்துவரின் அறைக்குள் சென்றார். சிறிது நேரத்தில் அக்குழந்தையை மருத்துவரிடம் காண்பித்துவிட்டு வெளியே வந்த தாய், எனக்கு நன்றி சொல்லிவிட்டு, குழந்தையை கையில் பிடித்தபடி, மாத்திரை வாங்க அருகில் உள்ள மருந்து கடைக்குச் செல்வதற்காக வாசலை நோக்கிப்போனார்.
அப்போது அவரின் குழந்தை, அவர் கையை விட்டுவிட்டு திரும்பி ரிஷப்ஷனை நோக்கி ஓடி வந்தது. அந்த குட்டி தேவதை என் அருகே வந்தது! கையில் வைத்திருந்த சாக்லேட்டை தந்தது!! கன்னத்தில் மெத்தென்று ஒரு முத்தமும் தந்தது!!!
ஒரு பசி நாளில்...
துபாய் தேரா அஸ்கான் ஹவுஸ்க்கு எதிரில் உள்ள "டைல்ஸ் வில்லா'வில் தமிழ் நண்பர்களுடன் வசித்து வந்தேன். இந்த வில்லாவில் சுமார் 20-க்குமேல் அறைகள் உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 5 நபர்கள் தங்கி இருப்பார்கள்.
நுழைந்தவுடன் முதலாவது இருப்பது எங்கள் வீடு. சிவாஜி நடித்த "பாரத விலாஸ்' படத்தில் வருவதுபோல் எல்லா மதச்சகோதரர்களும் வாழும் அன்பு நிறைந்த வீடு எங்கள் வீடு!
சேஃப்டி மேனேஜராக பணிபுரியும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த பத்மநாபன் அண்ணா ரூம் இன்சார்ஜ். இன்ஜினியராக பணிபுரியும் கோவையைச் சேர்ந்த சாம்ராஜ், எம்.இ.பி. இன்ஜினியராக பணிபுரியும் சென்னை ஆவடியைச் சேர்ந்த ரகு, செகரெட்டரியாக பணிபுரியும் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த கார்த்திக், டிரைவராக பணிபுரியும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆல்பர்ட். எல்லாருமே நல்ல நண்பர்களாக, அண்ணன் தம்பிகளாக பழகுவார்கள். வெளிநாட்டில் இருப்பதாகவே தெரியாது. தமிழ்நாட்டில் இருப்பதுபோல் உணர்வு இருக்கும்.
இந்த வீட்டிற்கு கார்த்திக்கின் நண்பன் (நடிகர் ஆவதற்கு முன் துபாயில் அக்கவுண்ட்டண்டாக பணிபுரிந்த) விஜய் சேதுபதி வியாழன் இரவு விடுமுறை நாட்களில் இங்கு வந்து தங்கி விட்டுச் செல்வது உண்டு என்று பத்மநாபன் அண்ணா சொல்வார்.
இந்த டைல்ஸ் வில்லா பற்றி ஒரு சுவையான கதை உண்டு. இதன் உரிமையாளரின் அம்மா கருணை மிகுந்தவராம்! அவர், தன் மகனிடம் ""தன் மனைவி, பிள்ளைகளுக்காக அவர்களை எல்லாம் பிரிந்து வந்து, துபாயில் வேலை செய்யும் இவர்கள் தங்குவதற்கு குறைவான வாடகைக்கு இந்த வீட்டைக் கொடு'' என்று சொன்னார்களாம், அதனால் இங்கே குறைவான வாடகை என்று நண்பர்கள் சொல்வார்கள்.
ஒரு மாதக் கடைசி.
எப்போதும் சம்பளம் வாங்கியவுடனே அறை வாடகை, உணவுக்கான பணத்தை மட்டும் நான் வைத்துக்கொண்டு மீதியை ஊரிலிருக்கும் மனைவிக்கு அனுப்பிவிடுவது என் வழக்கம்.
அந்தமாதமும் அப்படித்தான் அனுப்பிவிட்டேன். கைவசம் சிறிது தொகை மட்டுமே வைத்து இருந்தேன்.
நேற்று காலை, அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர், தன் அம்மாவுக்கு திடீரென்று உடல் நலம் சரியில்லை.... மருந்துகள் வாங்க அம்மாவுக்கு பணம் தேவை என்றதும் பர்ஸிலிருந்த பணத்தை அப்படியே அவரிடம் கொடுத்து விட்டேன்.
நேற்று இரவு சுத்தமாய் கையில் ஒரு திர்ஹம்கூட இல்லை.
காசில்லாததால் நேற்று இரவு சாப்பிடவில்லை. அறை நண்பர்களிடம் சொல்லி இருந்தால் ஆர்டர் பண்ணி உடனே உணவு வரவழைத்து தந்திருப்பார்கள். ஏனோ நான் எவரிடமும் என் கஷ்டத்தைச் சொல்லவில்லை...
நாளை சம்பளம் என் வங்கிக் கணக்கில் வரவாகிவிடும்.
இன்று வெள்ளிக்கிழமை விடியற்காலை காலை பாங்கு ஒலி கேட்டு விழிக்கும்போதே வயிற்றை பசி வயிற்றை கிள்ளியது.
அருகில் இருக்கும் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதேன். தொழுதுமுடித்துவிட்டு சிறிது நேரம் அங்கு அலமாரியில் இருந்த திருக்குர் ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை எடுத்து விரித்துப் படித்தேன்.
11:6 உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு உயிரினமும் பூமியில் இல்லை. அவை (வாழ்ந்து) இருக்குமிடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான்.
இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூல் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன'' என்ற வாசகங்கள் மனதிற்கு ஆறுதல் தந்தது.
மறுபடியும் பசி வயிற்றை வாட்டியது... எழுந்து பள்ளிவாசல் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த குளிர்ந்த நீரை பருகினேன்.
எரிந்து கொண்டிருந்த பசித்தீ சிறிது அணைந்தது...
பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது என்னை யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
பள்ளியின் முன்புற வாசலிலில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வெள்ளை பைஜாமா போட்டிருந்த பாகிஸ்தானியர்கள் வட்டமாய் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள்.
அவர்களுக்கு நடுவில் நிறைய குப்பூஸ் ரொட்டிகள் வைத்திருந்தார்கள். (தமிழ்நாட்டில் புரோட்டோ, சப்பாத்திபோல் இங்கே அரபு தேசத்தில் இந்த காய்ந்த ரொட்டி பிரபலம். மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது). பக்கத்தில் சின்ன பேரீச்சம்பழக் குவியல்.
என்னை அழைத்த அந்த வெள்ளை தாடி பெரியவர் தன் அருகே என்னை அமரச் செய்து, ஒரு குப்பூஸை எடுத்து விரித்து அதில் பேரீச்சம்களை வைத்து சாண்ட்விச் போல் சுருட்டி கொடுத்து உண்ணச் சொன்னார்.
பயங்கரப் பசியோடு இருந்த நான் அதை சாப்பிட்டேன். ரொம்ம்ம்பவும் ருசியாக இருந்தது!
நான் அதிகப் பசியோடு இருப்பதை புரிந்துகொண்டு அதுபோல் இன்னொன்றும் செய்து கொடுத்தார்.
ரசித்து ருசித்து சாப்பிட்டேன்... அரண்மனைக்கு அழைத்து இந்த நாட்டு மன்னர் எனக்கு விருந்து கொடுத்தால் எவ்வளவு மகிழ்வேனோ அந்த அளவு மகிழ்ந்துபோனேன்.
வயிறும் நிறைந்து குளிர்ந்து போனது.
இறைவன்... மகா பெரியவன்!
அதன்பிறகு இறைவனுக்கு நன்றி சொல்லி தொழுதுவிட்டு பள்ளியைவிட்டு வெளியே வந்தேன்.
இந்த மாதம் சம்பளம் வாங்கியவுடன் யாராவது ஒரு ஏழைக்கு பிரியாணி வாங்கித்தரணும் என்று நினைத்த அதே விநாடி கையிலிருந்த கைபேசி அழைத்தது.
யாரென்று பார்த்தால்...? கொழும்பு தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ஜின்னாஹ் ஷர்புத்தீன் வாப்பா!
""அஸ்ஸலாமு அலைக்கு சையத்! சுகமாய் இருக்கீங்களா? நேற்றுதான் துபாய்க்கு மகள் வீட்டுக்கு வந்தேன். இன்று மதிய விருந்து உங்களுக்கு எங்கள் வீட்டில், சுவையான எங்க நாட்டு பிரியாணியும், உங்களுக்குப் பிடித்த இனிப்பு சுருட்டப்பமும் உண்டு. வாங்க!'' என்று பாசம் பொங்க விருந்துக்கு அழைத்தார் என் அப்பா சாயலில் இருக்கும் ஜின்னாஹ் வாப்பா!
இறைவன் எல்லாம் அறிந்தவன்!
இறைவன் செய்த உதவி!
நாம் செய்யும் ஒவ்வொரு நற்காரியமும் நிச்சயம் பின்னொருசமயம் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் நிச்சயம் பலனளிக்கும்.
இதனை நான் பலமுறை என் அனுபவத்தில் கண்டுள்ளேன். அவற்றில் ஒரு நிகழ்வை கூறுகிறேன்.
நான் கொழும்பில் வசிப்பவன். வாரமொன்று தங்கியிருக்க குடும்பத்தோடு பிறந்தமண் போயிருந்தேன்.
தலைநகரின் நெருக்குவாரத்தில் இருந்து விடுபட்டு ஊரில் சில நாட்களைக் களிப்பது என் குழந்தைகளுக்கு முதன்மை விருப்பம். அதற்காகவே பள்ளி விடுமுறைக் காக காத்திருப்பர்.
ஒருமுறை ஊர் சென்றோம். சேர்ந்த அன்றே எங்கள் வரவோடு மற்றுமொரு புதுவரவும் குடும்பத்தின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருந்தது. அன்று என் தந்தைக்கு தலைப்பிரசவம்.
வீடு எங்கள் வரவால் மகிழ்ந்து போனாலும், மற்றைய வரவை எண்ணிப் பதற்றமுற்றிருந்தது.
பல மணி நேரங்கள் அரச மருத்துவ மாது தனது முயற்சியில் தளராது இருந்தாள்.
அவள் எங்கள் குடும்பத்தில் பல பிரசவங்களை வெற்றிகரமாக நடத்தி இருப்பதால் அவள் மீது வீட்டவர்கள் அளவில்லா நம்பிக்கை கொண்டிருந்தனர்.
நான் தொழிலால் ஒரு மருத்துவன். இப்போது போலல்லாது பிரசவத்துக்காக வைத்திய நிலையங்களை நாடிச் செல்வதை விரும்பாது, அதனை வீட்டிலேயே நடத்துவதை வழக்கமாக்கிக் கொண்ட மக்கள் வாழும் பிரதேசத்தில் பணிபுரிந்தேன்.
பெரும்பாலான பிரசவங்களை அரச மருத்துவ மாதின் உதவியுடனோ, அன்றி நாங்கள் தனித்தோ வீட்டுப் பிரசவங்களுக்கு கைதருவோம்.
சகோதரியின் பிரசவத்தில் பங்கேற்க முடியாத நான் தாதியை அழைத்தேன். தலைப்பிரசவம் வீட்டில் நடப்பதை நான் விரும்புவதில்லை. என் ஆதங்கத்தைப் புரிந்து கொண்ட அவள் எனக்குத் தெம்பளிப்பதாகவே பதிலளித்தாள்.
நேரம் செல்லச் செல்ல எனக்குள் அச்சம் ஏற்படலாயிற்று. அதற்கு ஏற்றபடி சூழலும் மாறியிருந்தது. அறையுள்ளிருந்து வந்த ஓரிருவரின் முகங்கள்
அவற்றை வெளிப்படுத்தின. அனுபவம் என்னை அந்தரப்படுத்தியது. கால நீடிப்பு எனக்கு கவலையைத் தந்தது. தாதியை அழைக்க வாய்ப்பில்லை.
வீட்டில் இருப்பவர்களுக்கு அவள் மீதிருந்த நம்பிக்கை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பினைத் தடுத்தது.
நான் திக்குமுக்காடிப் போனேன். இறைவனிடம் பாரத்தைப் போடுவதை தவிர எனக்கு வேறுவழி இருக்கவில்லை. பக்கத்திலிலிருந்த பள்ளிவாசலை நோக்கி என்னை அறியாமல் என் கால்கள் நகர்ந்தன.
உடல் சுத்தம் செய்து கொண்டு மசூதிக்குள் நுழைந்த நான், தொழுகையின் பின் பிரார்த்தனையில் என்னை முழுமையாக்கிக் கொண்டேன். பள்ளியில் பிரார்த்தனை முடிந்த மறுகணம் வீட்டுக்கு வந்தேன்.
என் காதுகள் முதல் வாங்கிய குரலொலி ஒரு புதுவரவின் குரலொலிதான். என் தங்கை ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்திருந்தாள்.
செவி இனிக்கும் குரல் கேட்ட நான் மீண்டும் பள்ளியை நாடினேன் இறைவனுக்கு நன்றி சொல்ல.
முன்னர் தொழுத அதே இடத்தில் என் கால்கள் தரித்தன. மண்டியிடும் இடத்தில் காயாது எனது நெற்றிநீர் இருந்தது. இந்த நிகழ்வுடன் என் கடந்தகால நினைவுகள் என் நினைவுக்கு வந்தன; ஒருநாள் காலைத் தொழுகைக்காக எழுந்து கொண்டபோது, வாசற் கதவு பலமாகத் தட்டப்பட்டது. வேகமாக கதவின் தாழ் அகற்றினேன். ஒரு வயதான கிழவி மூச்சு வாங்க நின்று கொண்டிருந்தாள். பேச வாயெழாது தடுமாறியது.
தட்டுத்தடுமாறி அவள் பேசுவதைப் புரிந்து கொண்ட நான், மருத்துவ உபகரணப் பெட்டியுடன் அவளைப் பின்தொடர்ந்தேன். அது ஒரு சிறு மண் குடிசை. தென்னை ஓலையால் வேயப்பட்டது. இருள் மண்டிய அந்தக் குடிசையினுள் ஒரு குப்பி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
அதனுள் ஒரு பெண் பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருந்தாள். என்னை அழைத்தற்கான காரணத்தைப் புரிந்து கொண்ட நான் என் கடமையில் துரிதமானேன். வேறு யாரும் உதவிக்கு கிட்டாதபோது கிழவி தன்னால் இயன்ற மட்டில் எனக்கு உதவினாள். பிரசவத்தாய் ஒரு மந்தபுத்திக்காரி. அவளை எனக்குத் தெரியும்.
பிரசவத்தில் அவளது ஒத்துழைப்பு இல்லாவிடினும், இறைவன் நாட்டத்தால் இயற்கையின் பங்களிப்பு என் கடமையில் வெற்றி பெற உதவியது.
ஆண் குழந்தை பெற்றிருந்தாள். அந்த மகிழ்ச்சியைக்கூட அனுபவிக்கும் மனப்பக்குவம் அற்ற அவள், தன் சுமை குறைந்த திருப்தியுடன் ஏதோ ஒரு உணர்வில் என்னை ஒரு முறை ஏறிட்டபின் கண்களை மூடிக் கொண்டாள்.
குழந்தையை நானே கழுவி சுத்தம் செய்து கிழவியின் கையில் தந்துவிட்டு வீடு நோக்கி நடக்கலானேன்.
கொடுப்பனவு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை.
தருவதற்கும் அங்கு யாரும் இருக்கவில்லை.
இடைவழியில் ஒருவரைச் சந்தித்தேன். அவரொரு பள்ளித் தலைமை ஆசிரியர்.
நான் வேகமாகச் செல்வதைக் கண்ட அவர் காரணத்தை உணர்ந்து கொண்டு என் வரவுக்காகக் காத்திருந்தார்.
என்னைக் கண்டதும் சலாம் சொன்னார்.
நானும் பதில் கூறிக் கொண்டே முன்னால் அடி வைத்தேன்.
""சார், கொஞ்சம் நில்லுங்கள்'' என்றார்.
நானும் என்னை நிறுத்திக் கொண்டு அவரை நோக்கினேன்.
சில அடிகள் முன்வைத்து என் அருகில் வந்த அவர், கண்கள் கலங்க என்னைப் பார்த்து இவ்வாறு கூறினார்:
""சார், நீங்கள் செய்துவிட்டு வரும் காரியத்தை நிச்சயமாக இறைவன் பொருந்திக்கொண்டான். இதற்கான கூலியை கட்டாயம் தருவான்.''
ஏதோ என் தொழிலில் ஒரு கடமையை நிறைவேற்றிய திருப்தியோடு மட்டும் வந்த எனக்கு, அப்போது அவர் கூறிய வார்த்தைகள் ஒரு வாழ்த்துரையாக மட்டுமே இருந்தது.
அதில் ஆழப் பொதிந்திருந்த ஆசீர்வாதத்தை பின்னர்தான் நான் உணர்ந்தேன்.
நாதியற்ற ஒரு பெண்ணின் பிரசவத்தை எந்தவித நலனும் நோக்காது நான் நடத்தி முடித்ததின் பயனாக இப்போது என் சகோதரியை இறைவன் காப்பாற் றினான் என எண்ண வைத்தது.
பேச்சினிலே இனிமை வேண்டும்!
பிரபல பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக துபாய் வந்திருந்தபோது அவரைச் சந்தித்தேன்.
""நல்ல அறிவுரை சொல்லும் ஒரு பக்கக் கட்டுரைகள் நிறைய எழுதி வருகிறீர்கள்! அவை வாசகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று பல நூல்களாக வெளிவந்துள்ளன. பொதுவாக அறிவுரை சொல்லும்போது எல்லோரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உங்களால் எப்படி வெற்றி பெற முடிந்தது?'' என்று லேனா தமிழ்வாணன் அவர்களிடம் கேட்டேன்.
உடனே தோழமையோடு தோளில் கைபோட்டு புன்னகையோடு சொன்னார்: ""சையத்! நீங்கள் சொல்வது ரொம்ப சரி! ஒருவருக்கு நாம் நல்லதே சொன்னாலும் அந்த அறிவுரை அவருக்கு கசக்கவே செய்யும். ஆகவே நேரிடையாக நான் அவருக்கு அறிவுரை சொல்ல மாட்டேன். உதாரணமாக "நீங்கள் கோபப்படக்கூடாது. கோபம் உங்கள் உடல் நலத்தை பாதிக்கும்' என்று சொல்ல நினைப்பதை நான், "நான் அதிகம் கோபப்படுகிறேன்... அது என் உடலையும் மனதையும் பாதிப்பதாக உணர்கிறேன்.... இனி நான் கோபப்படுவதை குறைக்க வேண்டும்' அதை படிப்பவர்களும் அந்த எழுத்தை தங்களோடு ஒப்பிட்டு, அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்''
அட... இந்தனை நாள் இந்த ரகசியம் எனக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று நினைத்துக் கொண்டேன்.