மிழகத்தின் பிரபல ஓவியர்களில் ஒருவரும், கதை, சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம் என பன்முகப் படைப்பாளுமை கொண்டவருமான "கலைமாமணி' சீனிவாசன் நடராஜனை, நம் இனிய உதயம் வாசகர்கள் சார்பில் கேள்விகளோடு சந்தித்தோம். அப்போது....

* உங்கள் இளமைக் காலம், குடும்பம் பற்றி?

பிறந்தது ராஜ மன்னார் குடியில். அப்பாவுக்குச் சொந்த ஊர் திருவாரூர் பக்கத்தில் காட்டூர். அம்மா வின் ஊர் திருக்குவளை பக்கத்தில் வாழக்கரை. திராவிட இயக்கப் பெரியவர் என்று போற்றப் படும் வாழக்கரை இராஜகோபால் எனக்குத் தாத்தா.

பல ஊர்களில் படித்திருந் தாலும் வைத்தீஸ்வரன் கோவில் அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்தது மறக்கமுடியாதது. அங்கு மாணவர் தலைவராகவும் இருந்தேன். அப்பா தீவிரமான இலக்கிய வாசகர். அம்மா ஓவியம் தெரிந்தவர். அவர், தஞ்சாவூரில் அரசு தையல் பயிற்சி பள்ளியில் படித்தவர். அப்பாவின் வழிகாட்டுதலில் இலக்கியம், கலை, புகைப்படம், நாடகம் அனைத் திலும் சிறுவயது முதலே நான் ஈடுபட்டு வருகிறேன்.

Advertisment

* உங்கள் பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாத ஆசிரியர்கள்?

சீர்காழியில் ஆறாம் வகுப்பு படித்தபோது எங்களுக்கு ஆசிரியராக இருந்த பி.முருகையன் அவர்களை என்னால் மறக்க முடியாது. அவர்தான் பெரியாரின் கொள்கை களை எனக்கு அறிமுகப்படுத்தியவர். சிந்தனா முறையைக் கற்றுத் தந்தவர். கல்லூரியில் இளங்கலை படிக்கும் போது எங்களுக்குப் பேராசிரியராக இருந்த அந்தோணிதாஸும் எப்போதும் என் நினைவுக்கும் நன்றிக்கும் உரியவர். தத்ரூப வகை ஓவியங்களில் இருந்து என்னை விடுவித்துக் கொள்ள அவர் பேருதவியாக இருந்தார்.

*ஓவியராகவும் இலக்கியவாதியாகவும் நீங்கள் இயங்குவது எப்படி? ஓவியத்துறையில் உங்களுக்கு யாரால் ஆர்வம் வந்தது?

Advertisment

கோமல் சுவாமிநாதனின் 'சுபமங்களா' இதழில் வந்த பலருடைய வாழ்க்கையைப் படித்து என்னை சரிபார்த்துக் கொண்டேன். அதற்கு முன்பு "அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்' புத்தகம் ஆறாம் வகுப்பில் படிக்கக் கிடைத்தது. என்னுடைய ஊரில் சிறிய நூலகம் இருந்தது. அங்குதான் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லக்ஷ்மி, கல்கி என்று கலந்துகட்டி படிக்க ஆரம்பித்தேன். ஓவிய நிபுணரான கடைக்காடு மா.சூரியமூர்த்தி எனக்கு அறிமுகமானார். நவீன ஓவியர்களை, போக்குகளை அறிமுகம் செய்து வைத்தார். பல தேற்றக் கோட்பாடுகளை அவர் வழியே அறிந்து கொண்டேன். அதேபோல், காழி சுந்தர், எனக்கு காலண்டர் ஓவியங்களையும் கோவில் சிற்பக் கலைகளையும் கதை விளக்கப் படங்களையும் வரைவதற்குப் பயிற்சி அளித்தார். அவருக்குப் பிறகு அவருடைய வண்ணக்காரர்கள் குடும்பத்தைச் சார்ந்த சேகருடன் இணைந்து பயிற்சி பெற்றேன். அதுதான் நான் முறையாக ஓவியப் பயிற்சி பெற்றது.

ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்த பள்ளிக் கூடத்தில் உடன் பயின்ற லெட்சுமணன், எனக்கு ஓவியம் வரையக் கற்றுக் கொடுத்தான். விபத்தில் அவன் இறந்தபோது அவனது நோட்டுப் புத்தகம் என்னிடம் இருந்தன. அவனுடைய மரணம் என்னை பெரிதும் பாதித்தது. தொடர்ந்து ஓவியப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். அவன் நினைவுகள் என்னை வரைந்தன என்றும் சொல்லலாம்.

அவன் நினைவாக, பிற்காலத்தில் சென்னை ஓவியக் கல்லூரியில் வண்ணக் கலைப்பிரிவில் சேர்வதற்கு இந்த பயிற்சிகள் உறுதுணையாக இருந்தன. 1991-ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் என்னுடைய முதல் ஓவியக் கண்காட்சியை நடத்தினேன்.

அரசுப் பள்ளியில் படிக்கும் போது நான் எழுதிய காதல் கவிதைகளின் தொகுப்பான 'நோட்புக் கவிதை'களையும் வெளியிட்டேன். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஓவியக் கல்லூரியில் படித்த போதுதான் இந்தியா முழுவதும் சுற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு என்னுடைய சிந்தனா முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. 'பயணம் கற்றுத் தருவதைப் போல் படைப்பாளிக்கு, வேறு எந்தப் பயிற்சியும் கற்றுத் தராது' என்பதை உணர்ந்த காலம் அது.

பள்ளிக்கூட நாடகங்களில் கலைஞரின் வசனத் தைப் பேசி நடிக்கும் வாய்ப்பு, அப்பாவின் வழிகாட்டுதலில் புகைப்படம் எடுக்கும் திறன், எல்லாமும் சேர்ந்து என்னுடைய ஆரம்பகால படைப்புகளில் பதிப்போவிய முறையைக் கையாள்வதற்குப் பயன்பட்டது என்றும் சொல்லலாம். ஓவியர் ஆர்.பி.பாஸ்கரன் ஓவிய ஆசிரியராக இருந்து கற்பித்தது, அந்தத் துறையில் தொடர்ந்து பயணிக்க ஊக்கம் கொடுத்தது. எழுத்தும் ஓவியமும் சிந்தனா முறையில் எனக்குள் பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்தன. காட்சிக் கலையையும் எழுத்து வடிவத்தையும் சுலபமாக என்னால் கையாள முடிந்ததற்கு ஒரே காரணம் "பயிற்சியின் விளைவால் கிடைத்த செய் நேர்த்தியைக் கைவிட்டு சிந்தனையின் வெளிப்பாடே கலை" என்ற முடிவிற்கு நான் வந்ததே காரணம். என்னுடைய பாரம்பரிய ஓவியப் பயிற்சியும் நாட்டுப்புற கதைசொல்லல் பயிற்சியுமே அதற்குக் காரணம் என நினைக்கிறேன்.

*உங்கள் ஓவியங்கள் பற்றி?

ஆரம்ப காலத்தில் தத்ரூப வகை ஓவியங்களை பெரிதும் விரும்பி கற்றுக்கொண்டு வெளிப்படுத்தி வந்தேன். பின்னால் நவீனப் போக்குகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. கே.கே.ஹெப்பார் கோடுகள் என்னை ஈர்த்ததால் கோட்டுச் சித்திரங்களை வரையத் தொடங்கினேன். ரெட்டப்ப நாயுடு, எல்.முனுசாமி இருவரின் படைப்புகளும் அதற்கு உதவின. அதன் பிறகு பால்ராஜ் மற்றும் அருள்ராஜின் நீர்வண்ண ஓவியங்கள் என்னைக் கவர்ந்தன. அதன்வழி நிலக் காட்சிகளை நீர் வண்ண ஓவியங்களாகத் தீட்டினேன். அதன்பிறகு மிக்ஸ்டு மீடியா பயன்படுத்தினேன். கல்லூரி மூன்றாம் ஆண்டில் இருந்து பதிப்போவியங்களைப் படைத்து வந்திருக்கிறேன். 'லினோ கட்' முதல் ஆண்டில் சொல்லிக் கொடுத்தவர் பெருமாள் மாஸ்டர். எட்சிங், இண்டக்லியோ, ட்ரை பாயிண்ட், சேஃப் எட்சிங், நியூ மீடியம் எல்லாம் பிறகு கற்றுக்கொண்டு முயற்சித்துப் பார்த்தேன். 1999-இல் டிஜிட்டல் முறைக்கு மாறினேன். தற்போது கித்தானில் அரூபச் சித்திரங்களைப் படைத்து வருகிறேன். கருப்பொருள் ஆரம்பகாலங்களில் விவசாயிகளின் வாழ்வியலைப் பதிவு செய்வதாகவும், பின்னர் பல மாற்றங்களை அடைந்து இன்று அகப்பொருள் சார்ந்த வாழ்வியலை அரூபங்களாகத் தீட்டுவதாகவும் மாறி இருக்கிறது.

dd

*உங்களுக்கு இலக்கிய ஈடுபாடு வரக்காரணம்?

ஊரில் தொடர் சொற்பொழிவுகள் நடக்கும். மகாபாரதம், இராமாயணம், கந்தபுராணம், பெரியபுராணம் என்று மாதம் 10 நாட்கள் தொடர் சொற்பொழிவுகளைக் கேட்பேன். கம்பராமாயணப் பாடல்கள் என்னை பெரிதும் ஈர்த்தன. அதன்பிறகு, ரஷ்ய மொழி பெயர்ப்பு நூல்கள், தி.ஜானகிராமனின் நூல்கள், கல்கியின் புதினங்கள், அவை தழுவல் இலக்கியம் என்றாலும் அந்த வயதில் ஈர்ப்பைக் கொடுத் தது. தொடர்ந்து எஸ்.எஸ்.தென்னரசுவின் சேதுநாட்டு செல்லக்கிளி, அண்ணாவின் சிறுகதைகள், கலைஞரின் சரித்திர நெடுந்தொடர்கள், காமிக்ஸ் புத்தகங்கள் என்னைத் தீவிர வாசகனாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவின.

முற்போக்கு இலக்கியங்கள் அறிமுகமானபோது, அதில் சொல்லப்படும் சமூகத்தின் மீது நடத்தப்படும் வன்முறைகளை, கதைகள் வழி தெரிந்து கொண்டு மனம் கலங்கிப் போனேன். என்னுடைய போக்குகள் மாறத் துவங்கின. சமூகத்தை உற்று கவனிக்கத் துவங்கினேன். அவை எனக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. பலரும் பல வழிகளில் சமூகத்துக்கான பங்களிப்பை செய்து வருவது போல இலக்கிய வழிநின்று நம்முடைய பங்களிப்பை நம்மால் செய்ய முடியும் என்று நினைத்தேன். ஒரு கால்பந்தாட்ட வீரனாக வேண்டும் என்ற முனைப்பில் இருந்த எனக்கு, இலக்கியம் வேறு திறப்புகளைத் திறந்துவிட்டது.

அமைதியான, நமக்கே நமக்கான பிரத்தியேக மொழி வசப்படுவதற்கு நான் சைவசித்தாந்தம் படித்தேன். மூன்று ஆண்டுகள் படிப்பில் திருவாவடுதுறை மடத்தில் 'சித்தாந்த ரத்தினம்' பட்டம் பெற்றேன். தமிழ்மொழி என்னைப் பெரிதும் ஆக்கிரமித்துக் கொண்டது இப்படித்தான்...

*உங்கள் முதல் படைப்பு எது? எதன் தாக்கத்தில் அதை எழுதினீர்கள்?

கோடு போடாத நோட்டு முழுவதும் கவிதைகளை எழுதுவதற்கு என் காதல் மட்டுமே காரணமாக இருந்தது. முழுக்க முழுக்க காதல் கவிதைகள். காதலிக்கத் தொடங்கியதிலிருந்து காதல் தோல்வியில் முடிந்தது வரை எல்லாவற்றையும் கவிதைகளாக எழுதி இருந்தேன். தமிழ்நாடு அரசு 'தாமரை' என்ற பெயரில் இலவசமாக நோட்டுப் புத்தகங்களை வழங்கி இருந்தது. அந்த கவிதைகளைத்தான் 'நோட்புக் கவிதைகள்' என்று முதல் நூலாகக் கொண்டு வந்தேன். இராயப்பேட்டையில் இருந்த 'பானா பிரிண்ட்' என்ற இயந்திரத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் அது. மீதமிருந்த புத்தகங்களையும், கவிதை நோட்டுகளை யும் ஒருநாள் இரவு உணர்ச்சி மேலீட்டில் ஒன்று குவித்து தீவைத்து கொளுத்தினேன். அதன் பிறகு வாழ்க்கை மாறிவிட்டது. கவிதை சாம்பல் ஆனா லும்... காதல் இன்றும் அப்படியேதான் இருக்கிறது.

அதன் தாக்கம் என் படைப்புகளில் இருப்பதாக நினைக்கிறேன்.

*உங்கள் ’தாளடி’ நாவல் பேசப்படுகிறதே?

உண்மைதான். கீழத்தஞ்சை விவசாய மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் நாவல், தாளடி. மேலத்தஞ்சை வேறு கலாச்சார பண்பாட்டைக் கொண்டது. கீழத்தஞ்சை அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. கீழத்தஞ்சையில் உள்ள நாகப்பட்டினம் தாலுகாவை புனைவிலக்கியத்தில் பதிவு செய்தவர்கள் மிகவும் குறைவு. 'தாளடி' அதை செய்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைக்க முயற்சித்திருக்கிறேன். தந்தை பெரியாரை வசைபாடியவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக இந்த நாவல் உண்மைக்குப் பக்கத்தில் புனைவாக இருக்கிறது. பொதுவுடைமை இயக்கத்தின் தியாகத்தை நினைவூட்டுகிறது. வரலாற்றை மறு பரிசீலனை செய்யச் சொல்- விண்ணப்பிக்கிறது. தொலைந்துபோன, நம் மண்ணிற்கே உரித்தான கலைகளை, கலாச்சாரத்தைப் பதிவு செய்கிறது. நம் மக்களின் வாழ்வியலை வெளிப்படைத் தன்மையோடு ஆராய்கிறது. இதன்பொருட்டு 'தாளடி' நாவல் கொண்டாடப்படுவதாக நினைக்கிறேன்.

* உங்கள் படைப்புகள் பற்றி?

எனக்குப் பெரிதும் விருப்பமான மனிதர்களை, அவர்களின் முகங்களை மட்டும் பல ஆண்டுகளாகப் புகைப்படமாகப் பதிவு செய்து வருகிறேன். அ.ச.ஞானசம்பந்தம் முதல் இன்றுவரை பலரையும் பதிவு செய்திருக்கிறேன். ஓவியத்துறையில் தேசிய அளவில் இரண்டு விருதுகளைப் பெற்றிருக்கிறேன். தமிழ்நாடு அரசின் உயரிய விருதான 'கலைமாமணி' விருது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டேன். தமிழ்நாடு அரசின் சிறந்த ஓவியருக்கான விருதையும் பெற்றிருக்கிறேன். 30 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கண்காட்சிகள் நடத்தி வருகிறேன். 'நம்மோடு தான் பேசுகிறார்கள்' நூல், என்னுடைய உரையாடல் தொகுப்பு. "அச்சப் படத் தேவையில்லை', 'கனவு விடியும்', 'கலை அல்லது காமம்' மூன்றும் என்னுடைய கட்டுரைகளின் தொகுப்பு நூல்கள். 'புனைவு' என்னுடைய முகநூல் பதிவுகளின் தொகுப்பு. 'விடம்பனம்', 'தாளடி', 'காகிதப்பூ' மூன்றும் எனது நாவல்கள். 'பிரபஞ்சத்தை வாசித்தல்', 'சிறுகோட்டுப் பெரும்பழம்' இரண்டும் நான் தொகுத்த கட்டுரை நூல்கள். 'கதவிலக்கம்-107' விரைவில் வெளிவர இருக்கும் என்னுடைய நான்காவது நாவல்.

திராவிட இயக்க எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மிகவும் குறைவாக இருக்கும் இந்நாட்களில் திராவிட இயக்கச் சிந்தனைகளைப் புனைவு இலக்கியத்தில், புதிய வடிவ பரிசோதனையில் செய்துபார்ப்பது என்னுடைய படைப்பிலக்கிய வழிமுறை என நினைக்கிறேன்.

dd

*இன்றைய இலக்கியப் போக்கு பற்றி?

புதிதாக நிறைய இளம் எழுத்தாளர்கள் வந்திருக் கிறார்கள். கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம் என எல்லாத் துறைகளிலும் இளம் எழுத்தாளர்கள் ஈடுபடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மொழி, கருத்து, வெளிப்பாடு (அல்லது) கலை, அனுபவம் இவற்றின் வழியிலிருந்து இன்றைய தலைமுறை விலகி நிற்பது கவலைக்குரிய போக்கு. அயல்மொழியில் வரும் தொலைக்காட்சித் தொடர்களை, புத்தகங்களை, திரைப்படங்களைத் தழுவி எழுதும் போக்கு தவிர்க்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன். நம்முடைய மொழியின் அழகை வெளிப்படுத்தும் கலைப்படைப்புகள், நம்முடைய அரசியலை, சித்தாந்தத்தைப் பேசுவதாக அமைய வேண்டும். குறிப்பாக, தமிழ் நிலப்பரப்பின் வட்டார வழக்குகளைக் கையாள வேண்டும் என நினைக்கிறேன்.

தீவிர இலக்கிய சிந்தனா முறை குறைந்து கொண்டு வருவது வருத்தம் தரக் கூடியதாக இருக்கிறது. இன்றைய கலை இலக்கியங்களில் ஈடுபடுபவர்கள், தர்க்கம், விவாதம் ஆழமான நம்பகத்தன்மையுடன் கூடிய தரவுகளின் அடிப்படையில் இல்லாமல் இருப்பதும், அது தேவையில்லை என்று நினைக் கும் மனோபாவமும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என நினைக்கிறேன். வெகுஜன இலக்கிய நடையில் பிரச்சார உத்தியைக் கைவிடும் போக்கு அதிகரித்திருக்கிறது. வெகுஜன நடையில் பிரச்சார இலக்கியங்கள் அதிகரிக்கவேண்டும். தீவிர சிந்தனைப் போக்குகள் மொழிக்காக, இலக்கியத்திற்காக, கலைக் காக பல பரிசோதனை முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். நடனம், நாடகம், சித்திரம், எழுத்து போன்ற துறைகளில் ஈடுபடும் கலைஞர்கள் புதிய பரிசோதனைகளுக்குத் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களின் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தி, கலைகளை ரசிக்கும்படியான மனநிலையை உருவாக்கு வது அவசியம் என்று நினைக்கிறேன். திறந்தவெளி அரங்கங்கள் கிராமங்கள்தோறும் உருவாக்கப்பட்டால் தமிழ் சமூகம் வளமான சிந்திக்கும் திறன் பெற்ற சமூகமாக மாற்றம் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

*உங்கள் தாத்தா சீர்காழி எஸ்.முத்தையா, நீதிக்கட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் அல்லவா?

என் கொள்ளுத் தாத்தா சீர்காழி எஸ்.முத்தையா முதலியார், நீதிக்கட்சியில் இருந்தவர். தந்தை பெரியாரின் நெருக்கமான தோழர். பின்னர் நீதிக்கட்சியில் இருந்து விலகி, சுயாட்சிக் கட்சியின் சென்னை மாகாண முதல்வராக இருந்த சுப்புராயன் அமைச்சரவையில், கல்வி மற்றும் சுங்கவரி அமைச்சராக இருந்தார். அவர்தான் கம்யூனல் ஜி.ஓ.என்னும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டத்தை முதல் முதலில் நடைமுறைப்படுத்தும் 1021 என்னும் முக்கியத்துவம் வாய்ந்த அரசாணையைக் கொண்டுவந்தார். அதுதான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமூகப் புரட்சியைத் தொடங்கிவைத்தது.

அதனால்தான் பெரியார், "தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், ஒரு பிள்ளைக்கு 'முத்தையா' எனப் பெயரிட வேண்டும்" என்று அன்போடு அறிவித்தார். 1947 ஜூலையில், திருச்சியில் நடைபெற்ற திராவிட மாநாட்டில் தாத்தா தலைமை தாங்கி, "ஏன் வேண்டும் திராவிட ஸ்தான் ?" என்ற தலைப்பில் பேசினார். திராவிட நாடு குறித்து மிக விரிவாகவும் விளக்கமாகவும் பேசிய அவரது ஆங்கில உரை மிகவும் முக்கியமானது. இன்று வரை அதன் தாக்கம் இருக்கிறது. இந்திய ஒன்றிய அரசுக்கு வழிகாட்டும் தமிழ்நாடு, அதன் சமூக சீர்திருத்தக் கொள்கையை அவர்தான் துவக்கி வைத்தார்.

*அந்தக் காலத்தில் அவர் கொண்டுவந்த கம்யூனல் ஜி.ஓ. அப்போது கடும் எதிர்ப்ப்புக்கு நடுவே சட்ட மன்றத்தில் அரங்கேற்றப்பட்டது மிகப்பெரிய சாதனை அல்லவா?

சுதந்திர இந்தியாவிற்கு முன்பே மதராஸ் பிரசிடென்சி அமைச்சராக இருந்தவர் என் கொள்ளுத் தாத்தா முத்தையா. 'காலில் செருப்பு அணிவது குற்றம்' என்று கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொடுமையை எல்லாம் உடைத்தெறிந்து, அரசாங்கப் பணியில், வேலைவாய்ப்பில், கல்வியில் அனைவரும் பங்கு கொள்வதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தார்.

அதன் பிறகும் கூட சுதந்திர இந்தியாவில் அண்ணாவின் தலைமையிலான அமைச்சரவை அமையும் வரை அது சரியாக அமல்படுத்தப்படவில்லை என்றே நினைக் கிறேன். ஆனால் அந்தச் சட்டம்தான் அதிகாரப் பரவலை உருவாக்கியது. சமூக சீர்திருத்தத்தை, நீதியை உறுதிப்படுத்தியது. பொருளாதார விடுதலை பெறுவதற்கான நமது முதல் படியும் அதுதான் என்று நினைக்கிறேன். நீதிக்கட்சியின் ஆட்சி அமையாமல் போயிருந்தால், காங்கிரஸ் இயக்கத்தில் கூட பிராமணர் அல்லாத ஒருவர் முதல்வராக இருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. நீதிக்கட்சியின் ஆட்சி முறையால் இன்று நமக்கு கிடைத்திருக்கும் தாக்கம், சுயமரியாதை உணர்வு, சுயசிந்தனை, பகுத்து அறிதல், இவை எல்லாம்...

dd

* சீர்காழி முத்தையா அவர்களின் சாதனைகளுக்கு உந்து விசை எது? நீதிக்கட்சி காலம் குறித்து நீங்கள் அறிந்தவை?

மக்களை விலங்குகளைப் போல் நடத்திய விதம்.

அவர்களை மீட்க கல்வியே ஆயுதம் என்று சீர்காழியார் நம்பினார். சாதி ஒழிப்பு, பொருளாதாரச் சமநிலை, இரண்டும் இந்த மக்களை சுயமரியாதையோடு வாழ வழிசெய்யும் என்று நினைத்தார். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களின் இன்றைய நிலையை தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நீதிக் கட்சியின் ஆட்சிகாலம் எத்தனை அவசியம் என்று நமக்குத் தெரிய வரும்.

*வாழக்கரை இராஜகோபால் தொடங்கி வெங்கடங்கால் சந்தானம் வரை, உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கலைஞரின் நெருங் கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்களே?

ஆமாம். அது எங்கள் பேறு. என்னுடைய குடும்பத் தைச் சார்ந்த அத்தனை பேரும் திராவிட இயக்கத்தில் இருந்தவர்களே. இன்னும் சொல்லப்போனால், திராவிடச் சிந்தனையை ஸ்தாபித்தவர்கள் என்றும் சொல்லலாம். சுதேசி கப்பல் கம்பெனியில் வ.உ.சி- யோடு இணைந்து பணியாற்றிய கே.சி என்று அழைக்கப் பட்ட கே.சிதம்பரநாதர் முதல், இடஒதுக்கீடு அரசாணை வெளியிட்ட சீர்காழி எஸ்.முத்தையா, இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், பண்பாளர் பி.டி.ஆர்., அவர் மைந்தரான அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். வாழக்கரை இராஜகோபால், வெங்கடங்கால் சந்தானம், சிதம்பரம் அன்பகம் குழந்தைவேலு, பரங்கிப்பேட்டை சிவலோகம், நாகப்பட்டினம் ராஜமாணிக்கம், கும்பகோணம் பத்மநாபன் ஆகிய அனைவரும், தலைவர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பர்கள். இன்று வரை எங்கள் குடும்பத்தில் அனைவருமே திராவிடக் கொள்கையின் பற்றாளர்கள். என்னுடைய அப்பா, ஆரம்பகாலம் முதல் இன்று வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர செயல்பாட்டாளராக இருக்கிறார்.

*கலைஞருடனான அனுபவம்?

எங்கள் வீட்டிற்கு எதிரே கலைஞருக்கு ஒரு மிகப்பெரிய மேடை அமைத்து, அப்பா கலைஞரைப் பேச அழைத்திருந்தார். அந்த மேடையின் அமைப்பை வெண்கொற்றக் குடை போல் அமைத்திருந்தார்கள். நான் அப்பொழுது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கலைஞருக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவித்தேன். அவருக்கு பக்கத்தில் சிறிது நேரம் அமரும் பாக்கியம் கிடைத்தது. அதன் பிறகு பல கூட்டங்களிலும் மாநாடுகளிலும் அவரை சந்திக்காமல் இருந்ததில்லை. தொண்ணூறுக்கும் மேற்பட்ட நகராட்சிகளை திமுக கைப்பற்றியபோது எங்கள் ஊருக்கு வந்த கலைஞர் என்னுடைய தாத்தாவின் படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.

இப்படி, பல அனுபவங்களை நேரடியாக பெற்றிருக்கி றேன். அவைகளைத் தொகுத்து தனியாக புத்தகம்தான் போடவேண்டும். "எழுந்து வா தலைவா !" என்று தமிழ்நாடு கதறிய அத்தனை இரவுகளிலும் நானும் கதறியிருக்கிறேன். வேறென்ன சொல்ல?

*உங்கள் அடுத்த படைப்பு எதைப்பற்றி?

ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற எச்சங்களில் நிர்வாகப் பதவிகள், இன்றும் மக்களை அதிகார அச்சுறுத்தலுக்கு ஆட்படுத்துகின்றன. மக்கள் பிரதிநிதிகள் கேலிக்கு உட்படுத்தப்படுவதும், மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கான சேவைகளை செய்யக்கூடிய அலுவலர்களை வழிபாட்டுக் உரியவர் களாக சித்தரிக்கும் போக்கும் மலிந்து கிடக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை கோமாளிகளாக்கி அலுவலர்கள் கோமான்களைப் போல நிறுவப்படுவது எனக்குக் கவலை தருகிறது. மக்களாட்சியின் முழுமையை, ஜனநாயகத்தின் அடிப்படையை மக்களிடம் கொண்டு செல்வதற்கு என்னுடைய மொழியின் துணை கொண்டு ஒரு புனைவை எழுதி வருகிறேன். தி.க.சி-யின் வீட்டில் அறிமுகமான வள்ளிநாயகம் அதன் கதாநாயகன். பொலிட்டிகல் சட்டையராக இந்த நாவல் இருக்கும். ஒரு புதிய வடிவ முயற்சியை இந்த நாவலிலும் பரீட்சித்துப் பார்க்கிறேன்.

* உங்கள் ஊரான வாழக்கரை, திருக்குவளை, கீவளூர் பகுதிகளில் இருந்த அப்போதைய சூழல்? மறக்க முடியாத மனிதர்கள்?

மேலவாழக்கரை, கீழவாழக்கரை, இரண்டு ஊர்களிலும் எங்களுக்கு நிலம் இருந்தது. 'டெல்லி சம்பத்' என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அண்ணா வின் தனிச்செயலாளரின் ஊரும் அதுதான். கலைஞர் அவர்களின் நண்பர் இராஜகோபால், முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நண்பர் குலோத்துங்கன், இப்படி அந்த ஊர் முழுவதுமே தலைவர் அவர்களின் குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தவர்கள்தான். கீவளூர், கச்சனம், கொளப்பாடு, திருக்குவளை, வாழக்கரை, மீனம்ப நல்லூர், திருப்பூண்டி, பரவை, நாகப்பட்டினம் என்று ஒரு வட்டம் வரைந்தால், அங்கு எல்லோரையும் கலைஞர் அவர்கள், பெயர் சொல்லி அழைக்கக் கூடியவர்கள் இருந்தார்கள். இவர்கள் எல்லோரோடும் சீட்டு விளையாடுவது தலைவரின் பொழுதுபோக்குகளில் ஒன்று.

திராவிட இயக்கம், படிப்பகங்களை நிறுவி மக்களை வாசிப்பு அனுபவத்திற்குள் அழைத்து வந்து புதிய கலாச்சார சூழலை உருவாக்கியிருந்தது. மக்கள் தாங்களாகவே முன்வந்து சாதியப் பெயர்களைத் துறந்து தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக் கொண்டார்கள். தனித்தமிழ் இயக்கம், கடவுள் மறுப்பு, சுய மரியாதை, எல்லாம் உச்சத்தில் இருந்தன. நவீன விவசாய முறைகள், முப்போக சாகுபடி எல்லாம் அறிமுகம் ஆயின. உம்பலச் சேரி மாடுகள் காப்பாற்றப்பட்டன. பலருக்கும் அரசியல் விடுதலை கிடைத்தது. அன்று முன்னெடுக்கப்பட்ட எத்தனையோ கொள்கைகள் சட்டமாக்கப்பட்டு இன்று நடைமுறையில் இருந்தா லும், 'திராவிட நாடு கோரிக்கையை நிறைவேற்றித் தருவார்கள் தம்பிமார்கள்' என்று நம்பிக்கை கொண்டு இருப்பவர்களை இன்றும் அங்கே காணலாம்.