ந்த நாள் நம்முடைய மனமெல்லாம் நெருக்கத்தில், துன்பத்தில், துயரத்தில் துடித்துக் கொண்டிருக்கிற நாளாக இருக்கிறது. ஆயிரம் நிகழ்ச்சிகளை, தமிழ் முழுதறிந்த தன்மையாளராகத் திகழ்ந்த அந்தத் தனிப்பெரும் தலைவரின் புகழை, எந்த வகையிலும் எடுத்துச் சொல்லலாம்.

அவர் அறியாத தமிழ் இல்லை

அவர் தெரியாத சங்கப்பாடல் இல்லை

அவர் எழுதாத உரைவிளக்கம் இல்லை.

Advertisment

ஒன்றுமட்டும் சொல்கிறேன். கோப்பு என்பதைப் பார்க்கிறபோதுகூட அவருடைய இலக்கியத்திறன் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதற்கு ஒரு சான்று நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஏதோ ஒரு கோப்பில் "விதி இதற்கு இடம்தரவில்லை'’என்று நான் எழுதி அனுப்பியிருந்தேன். மறுநாள்காலை முதல்வர் எழுதுகிறார், "விதியை மதியால் வெல்லத் தெரியாதா?'’இதைவிட நாட்டு மக்களுக்கு நலம் செய்கிற தொடர் இருக்க முடியுமா? இன்னுமொன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. திண்டுக்கல் அருகே குஜிலிபாளையம்’என்று ஒரு பகுதி இருக்கிறது. "குஜிலிபாளையம் என்ற சொல்லை மாற்றவேண்டும், அது என்ன பொருள் என்று விளங்கவில்லை' என்று அந்தக் கோப்பு வந்தது. நானும் என்னால் முயன்ற வரையிலும் பார்த்து “குஜிலி“ என்று சொன்னால் குஜராத்தியர்கள் குடியேறிக் கடைவைத்திருந்த இடம் என்பதனால் அந்தக் கடைப்பகுதிக்குப் பெயர் குஜிலிபாளையம் என்று பெயர் வந்திருக்கிறது. இதனை மாற்றுவது என்று சொன்னால் திண்டுக்கல் பகுதியைச் சார்ந்தது என்பதற்காக “குறிஞ்சிப்பாளையம்“ என்று மாற்றலாம் என்று முதலமைச்சரிடம் பணிந்து இந்தக் கோப்பு அனுப்பப்படுகிறது என்று அனுப்பிவைத்தேன். வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றிச் சொல்வார்கள். அவர் தலைமை அமைச்சராக இருந்தது பெரிதில்லை. அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் ஆறு தொகுதிகள்தான் அவருக்கு ஆங்கில இலக்கியத்திலேயே நோபல் பரிசு பெற்றுத்தந்தது. உலகத்தில் சர்ச்சிலுக்கு அடுத்து மாசேதுங்கைச் சொல்வார்கள். அப்படிப்பட்ட இலக்கிய மனம் உடையவர் என்று. இந்த இரண்டு பேரிடத்தும் காணாத ஒருதிறன், நம் கலைஞரிடம் இருந்தது. ஒரு சான்று சொல்வது என்றால்……அவருக்கு அரசியல் தெரியும். இலக்கியம் தெரியும். கலை தெரியும், சிந்தனை தெரியும், எண்ணுகிற எண்ணங்களையெல்லாம் எப்படி என்று எடுத்துக் காட்டவும் தெரியும். அவர் சிந்திய எழுத்தினுடைய துளிதான் என்னைப் போன்றவர்களையெல்லாம் துணை வேந்தராக ஆக்கியது.

kalainagar

12 மணிக்கு நண்பர் சண்முகநாதன் தொலைபேசி யில் கேட்டார் "பொருதடக்கை வாள் எங்கே'’’ என்ற தொடர் எங்கே வருகிறது? என்று. எனக்குக் கேட்டால் எதுவும் நினைவுக்கு வராது. நான் அவரிடத்தில் சொன்னேன். "பொருதடக்கை வாள் எங்கே?'“ என்று பொதுவாகப் போட்டுவிட்டால் போகிறது. யார் அதைக் கவனிக்கப் போகிறார்கள் என்றேன். சண்முகநாதன் சொன்னார், "உங்களுக்கு வேண்டுமென்றால் தூக்கம் வரும். கலைஞருக்கு விடியற்காலை வரையில் தூக்கம் வராது'. அந்தத் தொடரைக் கண்டுபிடித்தால்தான் தூங்குவார். அந்தக் குஜிலிபாளையத்தைப் பற்றிச் சொன்னேனே... அதற்கு ஒரு விளக்கம் எழுதியிருந்தார்.

குறிஞ்சிப்பாளையம் என்று மாற்றுவதில் குற்றமில்லை. ஒரு முதலமைச்சர் எழுதுகிற தொடரைப் பாருங்கள். ஆனால் குஜிலி என்ற சொல் வருகிறபோது அதற்கு பங்கஜம் என்பதைப் பங்கயம் என்று மாற்றுவது போல குயிலம்பாளையம் என்று மாற்றவேண்டும். சிலப்பதிகாரச் சிந்தனை அதைத்தான் சொல்கிறது. இன்றுதான் "இந்து' நாளிதழில் ஒரு கட்டுரையைப் படித்தேன். “எ ரைட்டர் ஸ்டேட்ஸ்மென்“ என்று கலைஞரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். “

எ ஸ்காலர் ஸ்டேட்மென்“ என்று. அவருக்குத் தெரியாத கருத்துக்களே இல்லை. அவர் எதைச்சொன்னாலும் அதிலே ஒரு துளி இருக்கும். சிந்தனை இருக்கும். ஒளி இருக்கும். ஆற்றல் இருக்கும். புறநானூற்றில் அவருக்குப் பிடித்த ஒரு பாடலைச் சொல்லி நான் முடிக்க விரும்புகிறேன்.

அவர் சொன்னார் ஒரு மாமன்னன் மறைந்தபோது அந்தச் சங்கப் புலவன் எப்படி புலம்பினான் என்றால் வேந்தன் என்று சொல்வதா?

மக்களினுடைய உயிர் என்று சொல்வதா?

நாட்டு மக்களினுடைய நாயகன் என்று சொல்வதா?

எவ்வாறு சொல்வேன் என்று புலம்பியதைப் போல

நாடன் என்கோ ஊரன் என்கோ

பாடு இமிழ் பனிகடல் சேர்ப்பன் என்கோ

யாங்கனம் மொழிகோ ஓங்குவாள் கோதையை’’

என்று புறநானூற்றுப் புலவன் புலம்பியது போல அவர் தொடாத துறை இல்லை. எண்ணிப்பார்த்தால் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு கூட நீதியரசர் பேசும் போது எனக்கு நினைவுக்கு வந்தது

"பூமாலை நீயேன் புழுதிமண்மேல் வந்து ஏன் தவழ்ந்தாய்?'“ என்ற பாடல்.

அந்தப் பாடலில்

மாமன்மார் மூவர் தம்பி -உன்

மாம்பழக் கன்னத்தில் முத்த மாரி பொழிந்திடுவார்“

அந்தத் தொடர் எப்படி வருமென்றால் “வெள்ளி

யினால் செய்த ஏட்டில் நல்ல வயிர எழுத்தாணி கொண்டு தெள்ளுதமிழ்ப்பாடம் எழுத...“

எழுபது ஆண்டுகளுக்குமுன்னால் எழுதிய அந்த தொடர்தான் தமிழ் இயக்கத்தைத் உருவாக்கியது. தமிழ் உணர்ச்சியை உருவாக்கியது. அதுதான் தமிழ்எழுச்சியை தந்தது.

எனவே தமிழகம் கலங்கி நிற்கிறது.

அறிவுலகம் புலம்பி நிற்கிறது

புலவர் உலகம் வழியில்லையே என்று நினைத்துத் தவிக்கிறது இவ்வளவு துடிப்புக்குப் பிறகும்கூட நம்முடைய கவிப்பேரரசு சொன்னதைப் போல ஒரு நூற்றாண்டைப் புதைத்திருக்கிறோம் பத்துப் பல்கலைக்கழகங்களைப் புதைத்திருக்கிறோம் ஆயிரக்கணக்கான நூல்நிலையங்களைப் புதைத்திருக் கிறோம் யார் இனித் தமிழகத்தைக் காக்க முடியும் என்றெல்லாம் எண்ணிக் கலங்குகிற இருட்டில்தான் நம்மையெல்லாம் தங்கவைத்துச் சென்றிருக்கிற அந்தத் தங்கத் தலைவருக்கு நம்முடைய தமிழ்தான் துணையாக இருக்கும். அவருடைய வழிமுறைகள்தான் காத்து இருந்து, கடமையை ஆற்றிச் செழிப்பாக்க முடியும் என்பதை அவரே வழிகாட்டியிருக்கிறார்.

ஒன்று சொன்னார். “"தம்பிக்கு' என்று அண்ணா எழுதியிருக்கிறார். அந்த நாளுக்கு அது சரி. கோடிக்கணக் கான தங்கைகளும் மகளிரும் தாய்மார்களும் நம்முடைய கழகத்தில் இருக்கிறார்களே அதை எப்படிச் சொல்வது?“ என்று. எப்படிச் சொல்வது என்றால் அவர் ஏற்கனவே முடிவுசெய்திருக்கிறார் என்று பொருள். எப்படிச் சொல்வது?“ என்றேன். அன்று பிறந்ததுதான் "உடன் பிறப்பே'“ என்ற சொல். உடன்பிறப்பே என்று சொல்கிற சொல்லில் தம்பி, தங்கை, தமக்கை, அண்ணன், மாமன், மைத்துனன் அனைத்து உறவுகளும் அடங்கும் என்று காட்டியதையெல்லாம்... இப்படி நினைக்க நினைக்க நெஞ்சம் பொங்குகிறது. இந்தக் கலங்குகிற மனத்தைத் தேற்றுகிற கரங்கள் பெருக வேண்டும் தமிழகத்தினுடைய இல்லங்களில் உள்ளங்களில், வாழ்வில், நடைமுறையில், சிந்தனைகளில் எல்லாத்துறைகளிலும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் கலைஞர் பெருந்தகைக்கு என்னுடைய மனமார்ந்த புகழ் வணக்கம்.

Advertisment