கட்டுரை இலக்கியம் தனித்த ஓர் இலக்கிய வகை. மேனாடுகளில் மிகப்பெரிய ஆளுமையை அதுகொண்டிருந்த காலங்கள் சிறப்புக்குரியன. கவிதை என்பதை உணர்ச்சியின் வடிகால் என்றால், கட்டுரையை அறிவினைத் தெளிவுற விரித்துரைக்கும் சிந்தனையின் வாயில் எனலாம்.
பேரா. உலகநாயகி பழனி எழுதிய கட்டுரை நூலான 'எட்டையபுரத்து எரிமலை' என்னும் நூல் கட்டுரை இலக்கியத்தில் தனியாக எண்ணத்தக்க நூலாகும். இதில் அமைந்துள்ள பதினான்கு கட்டுரைகளைப் பன்னிற மலர்களின் வண்ணங்களைப் போலத் தம் எண்ணங் களைப் பல்வேறு வகைகளில் பகிர்ந்தளித்துள்ளார்.
அண்ணாவைப் பற்றிய இரு கட்டுரைகளில் தம் கருத்தினைத் தலைப்புக்கேற்றவாறு பதிவுசெய்யும் நூலாசிரியர், இதயம்தொடும் காட்சிகளைத் தம் இதயம் தோய்ந்து எழுதியுள்ளார். அண்ணாவின் அடுக்குமொழி பேசும் அழகினை அழகிய சித்திரமாக்கிக் காட்டுமிடத்து ஆசிரியரின் மொழிநடைப்புலமை வீறுநடை போடுகிறது. அண்ணா வின் அழகிய அடுக்குமொழி வெறும் வார்த்தைகளால் நிரப்பப்பட்டதில்லை. வாழும் வகை அறிவதற்கான வாசலைத் திறக்கும் திறவுகோலாகவே ஆசிரியர் சுட்டிச் சென்றிருக்கிறார். அண்ணாவின் மேம்பாட்டுச்சிந்தனை என்னும் கட்டுரை, இந்நூலின் கருத்துச்சுரங்கமாக அமைந்துள்ளது. நட்பு, தொண்டு, மாணவருலகம், சனநாயகக் கடமை, உழைப்பாளர்மேன்மை, திராவிடர் நிலை, மொழி உணர்வு, மேடைப் பேச்சு, இலட்சியப் பெண் முதலான சிறுசிறு தலைப்புகளில் சிறகடித்துப் பறக்கிறது ஆசிரியரின் சிந்தனைப் பறவை. கலைவாணர், அண்ணா இருவரின் நட்பினைச் சுட்டிக் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது.
சுயமுன்னேற்றமும் பெண்ணிய வெற்றியும் பற்றிய கட்டுரை சுருக்கமாக எழுதப்பட்டிருப்பினும் பரந்துபட்ட பெண்ணியப் பார்வையை விரித்துக் கொள்ளும்படியாக எழுதப்பட்டுள்ளது. 'பிள்ளைகள் நல்லவர்களாகயிருக்க, தாய்தான் வழிகாட்டி' என்ற கருத்தினைக் கதைவழி விளக்கும் விதம் அருமை.
வள்ளலார் பற்றிய கட்டுரையில், திருவள்ளுவரின் அதிகார முறைவைப்பைச் சுட்டிக்காட்டியிருப்பது வரவேற்புக்குரியது. பாரதியையும், அன்னை தெரசாவையும் பற்றிய ஒப்பீட்டுக் கட்டுரையில், 'சமூகப்பண்பாட்டிலும் மனித குல மேம்பாட்டிலும் மிகுந்த அக்கறை கொண்டு, தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுபோல், சமுதாய வாழ்வியல் உண்மைகளை' இருவரும் திரட்டித்தந்துள்ளனர்,' என்ற கருத்து மனத்தில் பதியுமாறு சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் இருவரையும் மனித நேய இரட்டையர் என்று சுட்டிக்காட்டியிருப்பது மிகுந்த போற்றுதலுக்குரியது. இக்கட்டுரையின்கண் விடுதலைக் கனவும், வங்காளக்கனவும் என்ற சிறு தலைப்பில் அமைந்த கருத்து வரவேற்கக்கூடியது.
தமிழர் வாழ்வியலைப் பதிற்றுப்பத்து வழி நோக்கியிருப்பது பண்டைத்தமிழ் இலக்கியத்தில் ஆசிரியருக்குள்ள புலமையின் வெளிப்பாடு.
அதே போல, சங்க காலப் பெண்களின் உரிமை வாழ்வு என்ற நீண்ட கட்டுரை, கருத்தாழத்தோடு அமைந்துள்ளது. சங்ககாலப் பெண்களின் சமூகக் கடமைகளும், கட்டுப்பாடுகளும் இக்கட்டுரையில் சரியாக உணர்த்தப்பட்டுள்ளன. அன்றைய காலச் சமூகப்போக்கில் பெண்களின் உரிமை வாழ்வு நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற கருத்து ஆழமாகப் பதிவாகியிருக்கிறது. இலக்கியம் காட்டும் உணவு முறை என்ற கட்டுரை சிறிதெனினும், விரிவாக உருவாக்கம் பெறவேண்டிய கட்டுரையாக இருக்கிறது. சமயப்பொறையை, மதநல்லிணக்கத்தைச் சிலம்பு, மணிமேகலைவழி காட்டியிருப்பது நூலாசிரியரின் ஒப்பீட்டு முறைக்குச் சான்று பகரும்.
இலக்கிய நயம் சொட்டச் சொட்ட இனிதாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது, திருப்போரூர் முருகனின் பிள்ளைத் தமிழ் என்னும் கட்டுரை. கவி இன்பம் நிறைந்த இக்கட்டுரையில், சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளையுரைத்தமையால் முருகனை 'புனித ஞானக்குரவன்' என்று போற்றியதை எடுத்துக்காட்டியிருப்பது எண்ணி எண்ணி மகிழக்கூடியது. "ஆடவர்கட்கு மொழியாலும் சேர்க்கையாலும் இனிமையுண்டாக்குதலால் "கரும்பனாரும்' என்ற விளக்கமும், கடலில் எப்போதும் அலையொலியுண்மையால் "தமரக் கடல்' என்ற விளக்கமும் பாராட்டுக்குரியன.
பாரதி, மு.வ., குலோத்துங்கன், தமிழச்சி ஆகியோர் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் ஆழமானவை. எட்டையபுரத்து எரிமலை என்று பாரதியைச் சுட்டும் ஆசிரியர், பாரதியின் தேசிய உணர்வையும், அவரைப் படம்பிடித்துக்காட்டும் வரிகளாக,' பாரதி முக்காலமும் உணர்ந்த முனிவர்; எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டிய அதிசயப்பிறவி, தன்னைச் சித்தர் என்றும், ஞானி என்றும் பெருமைசாற்றிக்கொள்ளும் பாரதி நல்ல சித்தாந்தனும்கூட' என்று காட்டியிருப்பது பாரதியை முழுமையாக உணர்த்துகிறது. மு.வ.வின் புறத்தோற்றத்தை அழகிய வரிகளால் காட்டியிருப்பது அழகியதொரு நடைச்சித்திரம். "மு.வ பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக விளங்கியவர்; இனத்தின் முதல்நாடி மொழி. மொழிதான் நமக்கு விழி. இனமும் மொழியும் உயிர் என்பதைத் தம் வாழ்நாளில் மறவாது சொல்லி வந்தவர்' என்று மு.வவைப் பற்றி உரைத்திருக்கும் கருத்து அழகியதோர் உரைநடைச் சிற்பம்.
"ஒன்றை எண்ணி வடிவம் கொடுத்துக் கற்போர் உணர்ச்சியைத் தூண்டுமாறு செய்வதே கவிதை' என்ற நூலாசிரியரின் கருத்து குலோத்துங்கன் கவிதைக் கொள்கைக்குச் சரியான சான்று.
அவரது கவிதைபற்றிய அக்கட்டுரையில், அதனைத் துல்லியமாக அவரது கவிதைகளிலிருந்து தக்க சான்றுகளை எடுத்துக்காட்டியிருக்கிறார் நூலாசிரியர். கவிஞர் குலோத்துங்கன் தமிழகத்தின் புதுநெறிக் கவிஞர்களுள் செம்மாந்து நிற்கிறார் என்பதும், தனிமனிதக் குறிக்கோள் இவர் கவிதைகளின் கருப்பொருளாகவே அமைகிறது என்பதும், நூற்றுக்கு நூறு உண்மை. இது நூலாசிரியரின் நுண்ணியபார்வை. குலோத்துங்கன் கவிதைகளில் தனிமனித ஆளுமை, மனித நேயம், சுயமுன்னேற்றம், மொழிப்பற்று முதலியவற்றை எடுத்துக்காட்டும் நூலாசிரியரின் கருத்துகள் பாராட்டும்படி அமைந்துள்ளன.