நண்பகலை
இழந்துவிட்ட அதிகாலை
இன்னும் எவ்வளவுநேரம்
இப்படியே நிற்கும்?
காத்திருந்து நகரமுடியாமல்
மனம்தளர்ந்த நண்பகல்
என்ன செய்யும்?
அதற்குத் தன்னைக் கைவிட்ட
அதிகாலை பற்றிய கவலையோ
சினமோ இருக்குமா?
அந்தியும் வருமோ வராதோ?
வாராதெனில்
வயது ஐந்தில்
வாழ்வு முடிந்த
ஒரு குழந்தைபோல
நாளின் வாழ்வும்
முடிந்துபோகுமோ?
போகவேண்டிய
பாதைதெரியாமல்
புறப்பட்டுவிட்ட
ஒரு வண்டிக்கும்
பயணப் படத்தைக் கடலில்
நழுவவிட்ட
ஒரு கப்பலுக்கும்
திசைகள்
வருத்தம் தெரிவிக்கலாம்;
வேறு என்ன செய்யமுடியும்?
இலக்கில்லாமல்
செலுத்தப்பட்ட ஏவுகணைபோல்
அதிகாலை நேரம்
என்ன செய்வதென்று தெரியாமல்
விழிபிதுங்கி நிற்கிறது.
ஏவுகணைப் பிணங்கள்
எங்கெங்கும் மிதந்து அலையும்
வானத்தில்
நம்பிக்கை இழந்த நட்சத்திரங்கள்
நடுங்கிச் சாகின்றன
பகலிலேனும் எங்காகிலும்
பதுங்குகுழி கிடைக்காதா என்று
தவிக்கின்றன.
வந்துவிட்ட
அதிகாலைநேரத்தால்,
திரும்பிப்போய்
இரவுக்குள் புகுந்து
படுக்கைபோடவும்
கனவுகளைக் கூப்பிட்டு
விடுகதைகள்போடவும்
வாய்ப்பில்லை!
வெப்பம் தணிந்த பகலும்
ஈரம் படிந்த இரவும்
காலத்தின் மடியில் இப்போது....
கருணையோடு
அவற்றின் தலை தடவியும்
கன்னங்கள் வருடியும்
""வேகம் தடுத்தாளும் ""
காலம்வருமோ..?..
-கவியருவி ஈரோடு தமிழன்பன்