வாழ்வின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் கதையை விஞ்சும் அளவுக்கு, அழகாகவும், மறக்க முடியாதவையாகவும் அமைவது உண்டு. அப்படியான ஒரு அனுபவம்தான் இது.

மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம் மிக அருமையாக அமைந்தது. நானும் மகனும் உள் பிரகாரத்தைச் சுற்றி வந்தபோதும் நான் “அங்கே பாரேன்... இங்கே பாரேன்... என ஓயாமல் வியந்து வியந்து பேசிக் கொண்டே இருந்தேன். சிற்பங்கள் அடங்கிய தூண் களை அவ்வப்போது கட்டிப் பிடித்துக்கொண்டேன்.

என் மகனோ, அம்மா, குழந்தை மாதிரி பண்ணாதே. எல்லா அம்மாக்களும் அமைதியாகத் தானே போறாங்க.. நீ ஏன் இப்படி? என்றான்.

“அடப்போடா.. நம்ம பாட்டன் முப்பாட்டன் கட்டிய கோவில். எம்புட்டு அழகா இருக்கு பார்த்தாயா!” என்று சொல்லிக்கொண்டே மண்டபத்தினுள்ளே உட்கார்ந்து, பாறைகளால் ஆன தரையைத் தொட்டுத் தடவி மெய்சிலிர்த்துப் போகிறேன்.

Advertisment

கண்களில் பரவசம் மின்ன, “வா வா கோவிலைச் சுற்றி நடக்கலாம்” என்று அழைத்துப் போகிறேன். வெளிப்பிரகாரத்தின் பின்புறமாக நடந்து வருகையில் யானையின் பிளிறல் சத்தம் கேட்கிறது. ஓடோடி அங்குமிங்கும் தேடுகிறேன்.

அதோ அதோ அந்த சாம்பல் நிறம் கலந்த கரிய குன்று ஒன்று அசைந்தாடி வேகமாக என்னை நோக்கி வருகிறது.

வெயில் சுடாமல் இருக்க, தரையில் பூசப்பட்ட சுண்ணாம்பு கலவையாலான வெள்ளைநிறப் பாதையில் அது நடந்து வருகிறது. அதே பாதையில் நானும் அதற்கு எதிராக நடந்து போகிறேன்.

Advertisment

இப்பொழுது என்னை நேராகப் பார்த்தபடி, அது நடப்பதை நிறுத்திவிட்டு அப்படியே நிற்கிறது. எல்லோரும் பயந்து ஒதுங்கிப் போய்விட, நான் மட்டும் அப்படியே நிற்கிறேன். என்னைப் பார்த்து ”தள்ளிப் போங்க!” என்று யானைப் பாகன் சொல்கிறான்.

இப்போது அதனை நடக்கச் சொல்லிக் கட்டளையிடுகிறான்.

அவனுடன் வந்த துணைப் பாகன், அதனை அங்குசத்தால் குத்துகிறான்.

யானை சிறிதும் அசையாமல் நிற்கிறது. இப்பொழுது என்னை பார்த்து இரண்டு பாகன்களும் ஒரே குரலில் ஒருமையில் ”ஏய் தள்ளிப் போ” என்று கத்துகிறார்கள்.

யானையின் கண்கள் என்னையே நிலைகுத்திவாறு பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் காதுகள்கூட அசையவில்லை. கண்கள் இமைக்காமல் தன் தும்பிக்கையையும் வாலையும்கூட இம்மியளவும் அசைக்காமல்... அது அந்த சில வினாடிகள் சிலையாக மாறியிருந்தது, அதன் கண்களின் ஊடே இருந்து கிளம்பிய உணர்வுகள், அலையலையாய் என்னுள் பரவ... மெஸ்மரிஸமானவளைப் போல அப்படியே நின்றேன். என்னை, கருணை, கோபம் இரண்டுமற்ற பார்வையால் யானை வெறித்துப் பார்க்கிறது. எதற்காகவோ கட்டுப்பட்டதுபோல திடீரென்று சிலை போல நிற்கும் அதனைத் தொல்லை செய்யாது, இப்போது பாகன்களும் அமைதியாக நிற்கிறார் கள்.

ee

திடீரென்று ’தபதப’வென்று சத்தம் கேட்கிறது.

அப்பொழுது எங்கிருந்தோ ஓடி வந்த என் மகன் “அம்மா” என்று அழைத்தபடி, என் கையைப் பிடித்திழுக்க... பிரமையிலிருந்து விலகி என்னைப் பிடித்திழுக்க, அவனது இன்னு மொரு கையையும் பற்றிக்கொண்டு வெள்ளை நிற சுண்ணாம்புப் பாதையை விட்டு விலகி நிற்கிறேன்.

மீண்டும் ’தப தப’ வென்று சத்தம் கேட்கிறது. யானையின் பக்கவாட்டில் வந்து நின்று, படபடவென பதைத்து மூச்சு விட்டுக்கொண்டே யானையைப் பார்க்கும் எனக்கு, யானை லத்தி போடுகிற காட்சி தெரிகிறது.

சிறு பிராயத்தில் நானும் பள்ளித் தோழமை களும் பள்ளிவிட்டு வீடு திரும்பும்போது, எங்கள் ஊரில் யானை ஒன்று மாதம் ஒருமுறையேனும் அல்லது இரு மாதத்திற்கு ஒரு முறையேனும் கம்பீரமாக எங்கள் தெருக்களில் வலம் வரும். ஊர் பிள்ளைகள் எல்லோரும் யானையை வேடிக்கை பார்த்துக்கொண்டே அதன் பின்னே நடந்துவருவோம்.

அப்படி நடந்து வரும்போது, யானை எங்காவது ஒரு இடத்தில் நின்று லத்தி போடும். அதை அள்ளி எடுத்து வீட்டிற்குக் கொண்டுசெல்ல எங்களுக்குள் பெரிய போட்டா போட்டியே நடக்கும்.

என்னுடன் படித்த பிள்ளைகள் அதன் லத்தியை மிகப்பெரிய மந்தாரை இலையில் எடுத்து வைத்து, வீட்டிற்குக் கொண்டுசெல்வதை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் நான் யானையின் பின்னே எத்தனை காத தூரங்கள் கால் வலிக்க நடந்து போனாலும், யானை அதன் லத்தியைப் போட்டதேயில்லை.

எனக்கும் அதை அள்ளிக் கொண்டுபோய், வீட்டில் அம்மாவிடம் கொடுக்க வேண்டுமென்று ஆசையாக இருக்கும். ஒரு நாள் மிகப்பெரிய மந்தார இலையை கையில் வைத்துக்கொண்டு நானும் என் தோழியும் யானையின் பின்னே நடக்கலா னோம். என் தோழி யானையின் தந்தத்தை அது அசந்திருந்த நேரங்களிலெல்லாம் தொட்டுத் தொட்டு பார்த்துக்கொண்டே அதனருகே நடந்தாள். நான் யானையின் பின்னே நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று யானை அதன் தும்பிக்கையை நீட்டி என் தோழியின் கையிலிருந்த மந்தார இலையைப் பறித்து வாயில் போட்டு மென்று தின்றுவிட்டது. அதற்குள் பயந்துபோன சிறுமியான என் தோழி, அலறிக் கூச்சலிட்டு அழுதாள். அதைப் பார்த்து அரண்டு போன பாகன், தன் கையிலிருந்த அங்குசத்தால் யானையின் கழுத்தில் குத்தினான். அதைப் பார்த்துக் கொண்டு பின்னால் நடந்து வந்துகொண்டிருந்த நான், என் கழுத்தில் கத்தியை இறக்கியதுபோல வலியை உணர்ந்து, அய்யோ எனக் கூச்சலிட்டு என் கழுத்தைத் தடவிக்கொண்டேன்.

இப்படியாக யானையைப் பின்தொடர்ந்து நடந்ததில் ஒரு நாள் யானையின் லத்தியை அள்ளிக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எவ்வித இடையூறுமின்றி யானை போட்டதை, அது நகர்ந்த அடுத்த நொடியே, சுடச் சுட மந்தாரை இலையில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு ஓடினேன்.

ஏதோ பொக்கிஷத்தை மகள் கொண்டுவந்ததைப் போல முகமலர்ந்து என் கையிலிருந்து அதனை வாங்கிக்கொண்ட என் அம்மா, தோட்டத்திற்கு என்னை அழைத்துக்கொண்டு போய், ஒரு பெரிய பள்ளம் தோண்டி, அந்த லத்தியை இலையோடு போட்டு மண்ணால் மூடினாள்.

அதன்மீது ஒரு ரோஸ் நிற டிசம்பர் செடியையும் நட்டு வைத்தாள்.

நான் தினமும் அந்த செடிக்கு தண்ணீர் ஊற்றத் துவங்கினேன்.

அந்தச் செடி ஆறு மாதத்திற்குள்ளாகவே படர்ந்து விரிந்து விதைகளை பரப்பி, பெரிய டிசம்பர் செடிகளின் கூட்டமாக, ஒரு பெரிய அழகின் புதராக உருவாகவும், டிசம்பர் மாதம் வரவும் சரியாக இருந்தது.

ஒன்றிரண்டு என்று பூக்க ஆரம்பித்த அந்த புதர், பிறகு கூடை கூடையாகப் பூக்களைத் தந்தது. பூக்களைத் தொடுத்து அம்மா எனக்கும் தங்கைகளுக்கும் பின்னலிட்டு தலையில் சூடிவிடும்போதெல்லாம், நான் அந்த யானையை நினைத்துக் கொள்வேன். அம்மா! அந்த யானை இப்பொழுது எந்த ஊரில் இருக்கும்? என்று கேட்பேன்.

அம்மாவோ.. “அது ஏதாவது ஒரு ஊரில் சுற்றிக்கொண்டிருக்கும்.. யாராவது யானையைக் கொண்டு போய்க் காட்டில் விடவா போகிறார்கள்?” என்று பெருமூச்சோடு சொல்லிக் கொண்டே என்னை ஆயத்தப்படுத்தி பள்ளிக்கு அனுப்பிவிடுவாள். பள்ளிக்கு நடந்து செல்லும் வழியில் நான், ’அம்மாவுக்கு எதுவுமே தெரியவில்லை. காட்டில் கொண்டு போய்விட்டால் யானைக்கு யார் சாப்பாடு, தென்னங்கீற்றுகளைப் பறித்துப் போடுவார்கள்? தண்ணீரை யார் தருவார்கள்? அது பாவம் இல்லையா? அதை ஏன் காட்டில் விடவேண்டும் என்று அம்மா சொல்கிறாள்...?’ என்று யோசித்துக்கொண்டே நடந்து பள்ளிக்குச் செல்வேன்.

மீனாட்சி அம்மன் கோவிலில் யானை ஆகப்பெரும் திருப்தியோடு லத்தி போட்டுவிட்டு நிதானமாக மீண்டும் நடந்து செல்லத் தயாரானது.

மக்கள் அனைவரும் பயம் தெளிந்து, புன்சிரிப்போடு அப்பாடா என்று நிம்மதிப் மூச்சோடு கசகசவென்று யானையைப் பற்றி ஏதேதோ பேசிக்கொண்டு கலைந்து செல்லத் தொடங்கினார்கள். யாரோ ஒருவர் குரலை உயர்த்திப் பாகனிடம் ”ஏன்பா? செரிமானக் கோளாறா? மருந்து எதுவும் கொடுக்கக்கூடாதா? யானை லத்தி போடக் கஷ்டப்பட்டதைப் பார்த்து எல்லோரும் பயந்தே போனோம்” என்று சிரித்தார். பாகன்கள் பதிலேதும் சொல்லாமல் யானையை அழைத்துச் செல்வதில் முனைப்பு காட்டினார்கள்.

யானை என்னை விட்டு நகரத் தொடங்கியது.

நான் யானையையும் அதன் லத்தியையும் மாறிமாறிப் பார்த்தவாறு மகனோடு நடந்தேன்.

இப்பொழுது எனது கைகளில் மந்தாரை இலையும் இல்லை, அதன் லத்தியை சென்னைக்கு என் வீட்டிற்கு எடுத்துப்போய் தொட்டியில் புதைத்து வைத்தால், அது ரோஸ் நிற டிசம்பர் பூக்களைப் பூக்குமா? என்றும் தெரியவில்லை.

ஆனாலும் யானை ஆடாமல் அசையாமல் நின்று என்னை நேருக்கு நேராக பார்த்த அந்த ஒரு கணத்தில் எனக்கு ’யானையை காட்டில் கொண்டுபோய் விடவேண்டும்’ என்று தோன்றியது.