அறிமுகம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறம் சார்ந்த கூறுகளை உள்ளடக்கியவை. ஒவ்வொன்றும் அதனதன் தனித்த போக்கில் இவற்றை விதந்துரைப்பவை. சொல்லுகின்ற முறையில், சொற்களைக் கையாளும் நெறியில் அவற்றின் பொருள் உரைக்கும் பாங்கில் என எல்லா நிலைகளிலும் எளிமையாக மனத்தில் ஆழமாகப் பதியும்வண்ணம் அமைந்த அறங்களைப் பேசுபவை. இக்கட்டுரை ஏலாதி எடுத்துரைக்கும் வாழ்வியல் விழுமியங்கள் குறித்த நிலையில் அமைகிறது.
ஏலாதியின் அமைப்பும் நோக்கமும்
கணிமேதாவியாரின் ஏலாதி எனும் சொல் ஏலம் எனும் சொல்லுடன் ஆதி எனும் சொல்லிணைந்து ஏலாதியாகிறது. ஆறு மருந்துப்பொருள்களாகிய ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு இவை சேர்ந்து ஒரு மருந்தாகி நோய் தீர்ப்பது மட்டுமின்றி உடல்நலத்தை நீண்டகாலம் காத்து நிற்கும். அவ்வாறே ஏலாதி எனும் நூலிலும் செய்யவேண்டியன செய்யக்கூடாதன எனும் நிலையில் ஆறு கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டு மக்களுக்கு பிறவித் துன்பம் நீக்கி வீடுபேற்றையடைய வழி காட்டுவது எனும் நோக்கத்தில் அமைந்தது. இல்லறம், சமூகவியல், துறவியல் எனும் நிலைகளில் இது கருத்துகளை எடுத்துரைக்கிறது. மனித வாழ்வியலில் வாழுங்காலத்து செய்யவேண்டிய செயற்பாடுகளைச் சுட்டி தவிர்க்க வேண்டியனவற்றையும் உணர்த்துகிறது. மேற்சுட்டிய எல்லாச் செயற்பாடுகளிலும் செய்வன தவிர்ப்பன எனும் இரண்டையே மையப்படுத்திப் பேசுகிறது.
ஏலாதி உரைக்கும் வாழ்வியல் செயற்பாடுகள்
எளிமை கருதி ஏலாதி உரைக்கும் வாழ்வியல் கூறுகளில் செய்யக்கூடாதனவற்றை அல்லது தவிர்க்கவேண்டியனவற்றை முதலில் பட்டியலிட்டுக் காணலாம்.
1. கொலை புரியாமை
2. கொல்லாதிருத்தல்
3. புலால் உண்ணாதிருத்தல்
4. பொய் கூறாதொழுகல்
எனும் நான்கை முதன்மைப்படுத்திக் கூறலாம். ஏலாதியின் மொத்தம் 80 பாடல்களில் அதிக விழுக்காட்டுப் பாடல்கள் மேற்சுட்டிய பண்புகளையே அதிகம் எடுத்துரைக்கின்றன. இவற்றைப் பின்வருமாறு காணலாம்.
1. கொலை புரியான் (பாடல்கள் 2, 8, 19, 42)
2. கொல்லான் (பாடல்கள் 2, 8, 17, 20, 42)
3. புலால் மயங்கான் (பாடல்கள் 2, 14, 41, 42, 44)
4. பொய்யான் பொய் (பாடல்கள் 2, 5, 14, 19, 41, 42, 44, 68)
அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ளவை சான்றுக்காகத் தரப்பட்ட பாடல்கள். இன்னும் ஒவ்வொரு பிரிவிலும் பாடல்கள் மிகுந்து உள்ளன என்பது நினைவில்கொள்ளத்தக்கது. இவற்றின் தொடர்ச்சியாக பிறரை வருத்தாமை, வஞ்சம் செய்யாமை, நிலை தாழாமை என்பனவும் சுட்டப் பட்டுள்ளன.
சமணரான கணிமேதாவியார் இயற்றியதால் சமணக் கொள்கைகளில் முக்கியமான கொலை செய்யாமை, கொல்லாதிருத்தல், புலால் உண்ணா திருத்தல், பொய் கூறாதொழுகல் என்பன குறித்த கருத் துக்களை எடுத்துரைக்கும் பாடல்கள் மிகுந்துள்ளன. மேலும் இவை தவிர, தீமைகளைப் பொறுத்தல், இன்சொல் உரைத்தல், ஈகை குணமுடையராயிருத்தல், மன அடக்கம் போன்றவை இவற்றுக்குச் சார்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இவற்றை நமது வசதி கருதி பின்வரும் சிறு தலைப்புகளில் பிரித்து உணர்ந்து கொள்ளலாம்.
ஏலாதி - குடும்பச் செயற்பாடுகள்
சமூகத்தின் ஓர் அங்கம் குடும்பம். குடும்பம் என்பது அப்பா, அம்மா, பிள்ளைகள், உறவுகள்
என்பது யாவரும் அறிந்ததே. குடும்பச் செயற்பாடுகளில் உறவுடன் வாழ்தல், நல்லுணவு வாய்க்கப்பெறுதல், பகைவரை வெல்லுதல் போன்றவை முக்கியமானதாகும். குடும்பத்தின் அடிப்படை நல்லுறவுகளைப் பேணி நல்லுணவை உண்டு நலமுடன் இருத்தல் என்பதே. இது எத்தனை பேருக்கு இன்றைக்கு வாய்த்திருக்கிறது என்பதும் அதற்கான காரணம் என்பதும் அறிந்துணரத் தக்கதேயாகும்.
தமக்குரிய வீட்டை இழந்தவர்க்கும், கண்பார்வை இழந்தோருக்கும், செல்வத்தை இழந்தோருக்கும், விளைந்த நெல்லை, பசு மந்தையை இழந்தோருக்கும் பகலிலும் இரவிலும் உணவு சமைத்துத் தந்து உதவுபவர் எந்நாளும் மனைவி, பிள்ளைகள், சுற்றத்துடன் கூடி இனிய .சுவையுணவுகளை உண்பர். இதுகுறித்த பாடல்
இல்லிழந்தார் கண்ணிழந்தார் ஈண்டியசெல் வம்இழந்தார்
நெல்லிழந்தார் ஆனிரை தான்இழந்தார்க்கு - எல்உழந்து
பண்ணியூண் ஈந்தவர் பல்யானை மன்னராய்
எண்ணிஊண் ஆர்வார் இயைந்து (பாடல் 52)
உறவுடன் சேர்ந்து வாழும் தருணங்களைப் பற்றிப் பேசும்போது குழந்தை பெற்றவர்கள், குழந்தைப் பேற்றின்போது வருத்தமுறுபவர்கள், கருவுற்றவர்கள், குழந்தைகள், வாதநோயால் வருந்தியோர் இவர்களுக்கு உணவைத் தந்து அவர்களின் துன்பத்தைப் போக்கியவர்கள் எப்போதும் உறவினரும் கூடிவாழும் இன்பத்தைப் பெறுவார்கள் என்றும், தாயை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த மனைவியர், ஊமையர், வாணிகத்தில் முதலை இழந்தவர்கள், கையில் உள்ள உணவை இழந்தவர்கள், குருடர்கள் இவர்களுக்கு வேண்டியவற்றைத் தந்தவர்கள் எப்போதும் பொருள்களை மிகுத்து வைத்து சுற்றமுடன் வாழ்வர் என்றும், இழிநிலைக்கு ஆளானவர்கள், புண்பட்ட உடலினையுடையோர் போன்றோர்க்கும் உணவையளிப்பவர்களும் என இவர்கள் எப்போதும் சுற்றத்தினருடன் கூடி மகிழ்ந்து வாழ்வர் என்றுரைக்கிறது.
தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி
வாயிழந்த வாழ்வினார் வாணிகம் - போயிழந்தார்
கைத்தூண் பொருளிழந்தார் கண்ணிலவர்க்கு ஈந்தார்
வைத்து வழங்கி வாழ்வார் (பாடல் 78)
என்றும்
புலையாளர் புண்பட்டார் கண்கெட்டார் போக்கில்
நிலையாளர் நீர்மை இழந்தார் - தலையாளர்க்கு
ஊண்கொடுத்து ஊற்றாய் உதவினார் மன்னராய்
காண்கொடுத்து வாழ்வார் கலந்து (பாடல் 80)
எனவும் உரைப்பதைக் காணலாம்.
ஏலாதி - சமூகச் செயற்பாடுகள்
குடும்பத்தில் ஒழுங்காகச் செயற்படுபவன் யாரும் சமூகத்தில் ஒழுக்கமாகச் செயற்படுவார். குடும்பங்கள் பெருகிய சூழலே சமுகமாக நிலைபெறுகிறது. தான் வாழும் சமூகத்தையும் குடும்பமாகப் பார்க்கும் மனோபாவம் வாய்க்கப்பெற்றவன் ஒழுங்காக சமுகத்தில் இயங்குவதோடு சமுகத்தையும் ஒழுக்கமாக வைத்திருப்பான். இவற்றுக்கான காரணிகளையும் ஏலாதி எடுத்துப் பேசுகிறது.
பிறர் செய்யும் கொலையை விரும்பாதவன், தானும் ஓர் உயிரையும் கொல்லத் துணியாதவன், மற்ற ஊனின் உயிரை அறிவு மயங்கி உண்ணாதிருப்பவன், மற்றவரை வருத்தும் செயலைச் செய்யாதவன், பொய்யான ஒழுக்கம் இல்லாதவன், தன் நிலையினின்று வழுவாதவன் ஆகிய இத்தகைய குணங்களைக் கொண்டவன் மண்ணுலகில் மட்டுமின்றி மேலுலகிலும் மேலானவனாகத் திகழ்வான். இது அடிப்படையான சமுகப் பண்புகளாகும்.
கொலைபுரியான் கொல்லான் புலால் மயங்கான் கூர்த்த
அலைபுரிவான் வஞ்சியான் யாதும் - நிலைதிரியான்
மண்ணவர்க்கும் அன்றி மதும-பூங் கோதாய்
விண்ணவர்க்கு மேலாய் விடும் (பாடல் 2)
அடுத்து ஒரு பாடலில் பிறர் துன்பம் நீக்குதல், பிறரை இகழாதிருத்தல், கீழ்மக்களுடன் நட்பு கொள்ளாதிருத்தல், யாரின் பசித்துன்பத்தையும் போக்குதல், தீயஒழுக்கத்தைக் கைவிடல், இன்சொற்களைப் பேசுதல் போன்ற குணங்களைப் பெற்றவன் சிறந்த கற்றவனுக்கு நிகராவான். இது நல்ல சமூகத்தின் இயங்குபவனின் செயற்பாடுகளே. பிறிதொரு பாடலில்
நிறையுடைமை நீர்மை உடைமை கொடையே
பொறையுடைமை பொய்ம்மை புலால்கண் - மறையுடைமை
வேயன்ன தோளாய் இவையுடையான் பல்லுயிர்க்கும்
தாயன்னன் என்னத் தகும்.
மன அடக்கம், ஈகைப்பண்பு, பிறர் செய்யும் தீமையைப் பொறுத்தல், பொய் கூறாது புலால் உண்ணாதிருத்தல் இந்த இயல்புகள் எல்லா உயிர்க்கும் தாயாகும் பண்புடைத்து என்கிறது இப்பாடல். சமூகத்தின் தேவையான பண்புகள் இவை. இதுபோன்று இன்சொற்களைப் பேசுதல் (பாடல்7) சிறந்த நட்பு, கற்றாருடன் உறவு, பெண்வழிச்சேராமை, வறியவர்க்கு ஈதல் (பாடல் 15) போன்றவையும் சமூகத்தின் செயற்பாடுகளேயாகும். மிகுதியும் கொலை மறுத்தல், கொல்லாதிருத்தல், கொன்ற உயிரை உண்ணாதிருத்தல், ஒழுக்கம் பிறழாமை, பிறரை வருத்தாதிருத்தல், இகழாதிருத்தல் போன்றவற்றைப் பின்பற்றலும் ஈகை, உதவுதல், ஒழுக்கம் பேணல், தீமை பொறுத்தல் போன்றவற்றைப் பின்பற்றலும் நல்ல சமுகத்தின் செயற்பாடுகள் என்பதையும் ஏலாதி எளிமையாக எடுத்துரைக்கிறது.
அதாவது இவற்றைப் பின்பற்ற எளிதானது என்பதேயாகும்.
அறம் உணர்த்துதல் நோக்கமென்றாலும் ஏலாதியும் அவற்றுக்கு விதிவிலக்கல்ல. எனினும் இவற்றில் குடும்பச் செயற்பாடுகளாகவும் சமூகச் செயற்பாடுகளாகவும் இவற்றைக் கடந்து வீடுபேறு எனும் நிலையில் துறவுச் செயற்பாடுகளையும் சுட்டி இவற்றில் செய்வன தவிர்ப்பன இதனால் விளையும் பயன்கள் என்பனவாகப் பட்டியலிட்டு உரைக்கிறது ஏலாதி என்பது அறிய வேண்டியதாகும். மேலும் ஒரு படைப்பு நூல் என்பது அதுவுரைக்கும் கருத்துகளில் வெற்றிபெறுவது அல்லது சிறப்புறுவது என்பது படைப்பாளனின் படைப்பாற்றலையும் சார்ந்து உள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. தான் கொண்ட கருத்தை எடுத்துரைக்கும் நிலையில் பயன்படுத்தப்படும் சொற்கள், அந்தச் சொற்களைக் கையாளும் முறை, உணர்த்தும் பாங்கு என்பவையே பாடலின் சிறப்பை மேன்மைப்படுத்துகிறது.
அவ்வகையில் ஏலாதியின் கணிமேதாவியார் படைப்பாற்றலையும் அறிதல் மேலும் சிறப் புடைத்தாகும்.
ஏலாதி - படைப்பாளுமையின் உத்திகள்
ஏலாதியின் 80 பாடல்களில் எடுத்துரைக்கும் உத்திகள் என்பனவற்றைப் பின்வருமாறு பகுத்தறிய லாம்.
1. ஒரே சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி உரைத்தல்
2. எதிர்ச்சொல்லையும் ஒத்த சொல்லையும் பயன்படுத்தி உரைத்தல்
3. ஒருபொருட் பலசொல்லைப் பயன்படுத்தி உரைத்தல்
4. விகுதிகளைப் பயன்படுத்தி உரைத்தல்
5. சொல்லிணைவு உத்தி
ஒரே சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி உரைத்தல்
ஒரு பாடலில் ஒரே சொல்லைத் தேர்ந்து பயன்படுத்தி உரைத்தல் தான் சொல்ல வந்த கருத்தை வற்புறுத்துவதற்காகப் பயன்படுத்துதல் ஆகும். சான்றாக கடன் எனும் சொல் சங்க இலக்கியத்தில் கடமை எனும்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் (ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே) இது பொருளை ஆழமாகப் படிப்போரின் மனத்தில் விதைப்பதற்காகப் படைப்பாளர் பயன்படுத்தும் உத்தி எனலாம். ஏலாதியில் பின்வரும் சொற்கள் அவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன.
அ. அஞ்சான், ஆ. நோக்கான், இ. வனப்பு
போன்ற சொற்களைக் குறிப்பிட்டுக் காட்டலாம். ஒருவன் சிறந்த வீரனாக இருந்து எவற்றுக்கும்
அஞ்சாதவனாக இருந்தாலும் வீடுபேறு அடைய
அதற்குரிய ஒழுக்கத்தைக் கற்றேயாகவேண்டும். எனும் பாடலில் அஞ்சான் எனும் சொல் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.
வாள் அஞ்சான் வன்கண்மை அஞ்சான் வனப்பு
அஞ்சான்
ஆள் அஞ்சான் ஆம்பொருள் தானஞ்சான் - நான் எஞ்சாக்
காலன் வரஒழிதல் காணின்வீ டெய்திய
பாலின்நூல் எய்தப் படும் (பாடல் 22)
இதேபோன்று நோக்கான் எனும் சொல் குறித்த பாடலையும் பின்வருமாறு காணலாம்.
குணநோக்கான் கூழ்நோக்கான் கோலமும் நோக்கான்
மணநோக்கான் மங்கலமும் நோக்கான் கணநோக்கான்
கால்காப்பு வேண்டான் பெரியார்நூல் காலற்கு
வாய்காப்புக் கோடல் வனப்பு (பாடல் 23)
இப்பாடலில் நோக்கான் என்பது மதியாமை எனும் பொருள்படும். எவற்றையும் மதிக்காதவன் சான்றோர் நூலைக் கற்றால் போதும் அதுவே
அழகாகும் என உரைக்கிறார். அதாவது காலுக்குத் தளையான இல்வாழ்வை மதியாதவன், செல்வத்தை மதியாதவன், அலங்காரத்தை மதியாதவன், திருமணத்தை மதியாதவன், புண்ணியத்தை மதியாதவன், உறவினரை மதியாதவன் எமனுக்கு வாயில் காப்பாகச் சான்றோர் நூலைக் கற்றல்
அழகாகும் என்கிறது. உண்மையான அழகென்பது (வனப்பு) எதுவென்று பின்வரும் பாடலில் சுட்டும்போது வனப்பு எனும் சொல் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.
இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணொடு
எழுத்தின் வனப்பே வனப்பு (பாடல் 74)
இவ்வாறு ஒரே சொல்லைத் திரும்பத்திரும்பப் பயன்படுத்தி உரைக்கும் போக்கு கருத்தின் வற்புறுத்தலை விளக்குகிறது.
எதிர்ச்சொல்லையும் ஒத்தசொல்லையும் பயன்படுத்தி உரைத்தல்
செய்வன, தவிர்ப்பன என்பதுவே ஏலாதியின் அடிப்படை கருத்து கூறும் முறை. இவ்வகையில் பாடலிலும் எதிர்ச்சொல்லையும் அதற்கான ஒத்த சொல்லையும் உரைத்து பொருள் உரைக்கும் முறையும் பின்பற்றப்படுகிறது. அதற்கான பாடல் இது
தவமெளிது தானம் அரிதுதக் கார்க்கேல்
அவமரி தாதல் எளிதால் - அவமிலா
இன்பம் பிறழின் இயைவு எளிது மற்றதன்
துன்பம் துடைத்தல் அரிது (பாடல் 3)
தவம் செய்தல் எளிது அதேசமயம் ஈகை யுடையவனாய் இருத்தல் அரிதாகும். தகுதியுடைச் சான்றோர்க்குக் குற்றம் அரிது அவர்க்கு நல்ல வழியைச் சார்தல் எளிது, முத்தி இன்பம் தவறி பிறவி தொடர்தல் எளிது பிறவித் தொடர்பின் துன்பம் நீக்குதல் அரிது என்பது இப்பாடலின் பொருளாகும். இதில் எளிது எனும் சொல்லும் அரிது எனும் சொல்லும் ஒரு சொல்லின் முன்னும் பின்னுமாகப் பொருள் உரைக்கிறது. இதே சொற்கள் அடுத்தடுத்து பயின்று வரப் பேசும் பாடல் பின்வருமாறு.
சாவது எளிதுஅரிது சான்றாண்மை நல்லது
மேவல் எளிதுஅரிது மெய்போற்றல் - ஆவதன்கண்
சேறல் எளிது நிலைஅரிது தெள்ளியராய்
வேறல் எளிதுஅரிது சொல் (பாடல் 39)
எளிது அரிது எனும் சொற்கள் ஒத்த எதிர்ச்சொல்லாகப் பயன்படுகின்றன. உயிர்விடுதல் எளிது, சான்றோன் ஆகுதல் அரிது எனவும், இல்வாழ்க்கை எளிது அதில் ஒழுக்கம்போற்றுவது அரிது எனவும், துறவறம் எளிது அதில் முடிவுவரை நிலையாயிருத்தல் அரிது எனவும் எதனையும் சொல்வது எளிது தெளிந்த அறிவுடன் அதனைச்
செய்வது அரிது எனவும் ஒத்தச்சொல்லையும் எதிர்ச்சொல்லையும் ஒரே பாடலில் பயன்படுத்திக் கருத்துரைப்பது சிறப்பான உத்தியாகும்.
ஒருபொருட் பலசொற்களைப் பயன்படுத்துதல்
படைப்பாளளின் ஆளுமைத் திறத்தால் ஒரு பொருளைக் குறிக்கக்கூடிய பல சொற்களைக் கையாள்வது உண்டு. இது பாடலுக்கு அணி சேர்ப்பதாகும். கூறவந்த கருத்தின் ஒரு பொருளுக்குப் பல சொற்களைப் பயன்படுத்துதல் கேட்போரின் ஆர்வத்தைக் குறையாது கற்க வைக்கும் கேட்கவைக்கும் உத்தியாகும். இவ்வுத்தியை கணிமேதாவியார் குறிப்பிட்ட சொல்லைக் குறிப்பிட்டு அதற்கிணையாக சொற்களில் எடுத்துரைக்கிறார். சான்றாக கொலை செய்யாதவன் என்பதைக் குறிப்பிடுகையில்
கொலைபுரியான், உடன்படான் (பிறர் கொலைசெய்வதை விரும்பாதவன்), பொய் சொல்லான், பொய்யான் போன்றவற்றில் கொலைபுரியான் எனும் சொல்லுக்கு உடன்படான் என்பது ஒருபொருள்குறித்த சொல்லாக வந்தாலும் இவை பொருள்விரிவாக்க நிலையில் இத்தன்மைக்கு ஆளாகும். இதுபோன்றே பொய்சொல்லான் பொய்யான் எனும் சொற்களும்.
விகுதிகளைப் பயன்படுத்துதல்
விகுதிகளைச் சேர்த்துப் பயன்படுத்துதல் ஒருவகை உத்தியாகும். இவற்றை ஆக்க விகுதிகள் என்றும் கூறுவர். இதுவும் படைப்பாளனின் படைப்பாளுமையின் அழகைப் பிரதிபலிப்பதாகும். ஏலாதியில் பயன்படுத்தப்பட்டுள்ள விகுதிகளைப் பின்வருமாறு காணலாம்.
விகுதி சொற்கள்
மை விளையாமை, உண்ணாமை, ஆடாமை, உளையாமை, களையாமை (பாடல் எண்.13) சாராமை (பாடல் எண்.25) உலையாமை, அலையாமை, நிலையாமை (பாடல் 40)
ஆர் சிறியார் (பா.14,19) துறந்தார், துறவார்,
இறந்தார் (பா.16, 35)
காலில்லார், கண்ணில்லார், நாவில்லார்,
பாலில்லார்,
நூலில்லார் (பா.36)கடம்பட்டார், காப்பில்லார், கைத்தில்லார்,
முடம்பட்டார் (பா.53) பார்ப்பார், கார்ப்பார் (பா.54) ஈன்றார்,
களைந்தார், வாழ்வார் (பா.55)
ஆன் கொலைபுரியான், கொல்லான், மயங்கான், திரியான் (பா.2)
உடன்படான், மடம்படான் (பா.8) பொய்யான், செய்யான்,
இனஞ்சேரான், வையான் (பா.14, 19)
அஞ்சான்(பா, 22)
நோக்கான் (பா.23) உரையான். கூறான் (பா.33.34)
அழப்போகான், கேளான் (பா.37), உண்பான், உண்ணான்(44)
உயர்ந்தான் ஒப்புடைத்தான் (பா.64)
இவ்வகையில் மேலும் ஆளர், ஆளன் (தளையாளர், தாப்பாளர், உளையாளர் - பா.56) ஆல் (எழுத்தினால், வழுத்தினால், ஒழுக்கினால் - பா.38) ஏ (ஆர்வமே, கதமே, ஓர்வமே, உலோபமே, மானமே,
என்னுமே, ஊனமே - பா.61 இதில் ஏகாரத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் இப்பாடலே இல்லை எனலாம். அல் (எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், படுத்தல் பா.69) எனவும் பல விகுதிகள் பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளமை மேலும் பொருளினைச் சிறப்பிக்கிறது.
சொல்லிணைவு உத்தி மொழியியலில் குறிப்பிட்ட சொல்லுடன் குறிப்பிட்ட சொற்கள் இணைந்து வரும் வரை
யறுத்த நிலையை சொல்லிணைவு என்பார்கள். இதுபோன்ற சில சொல்லிணைவுகளை ஏலாதியிலும் பார்க்கமுடிகிறது. அவற்றில் சில சான்றுகளைக் கீழே காணலாம்.
கொலை + புரியான் = கொலைபுரியான் (பா.2,19,20
இதேபோன்று உரையான் எனும் சொல் இணைந்து வரும் சொல்லிணைவுகளைப் பின் வருமாறு காணலாம்.
பொய் + உரையான் = பொய்யுரையான்
மெய் + உரையான் = மெய்யுரையான்
எய் + உரையான் = எய்யுரையான் (பா.33)
சிதைவு + உரையான் = சிதையுரையான்
இயல்பு + உரையான் = இயல்புரையான் (பா.34)
போன்றவற்றையும் சொல்லிணைவுகளாகக் கருதலாம்.
இன்னும் பல்வகைப் பரிமாணங்களில் ஆராய்வதற்குரிய தனித்தன்மையுள்ள. சிறப்பான கூறுகளைக் கருத்துரைக்கும் போக்கிற்காகக் கணிமேதாவியார் பயன்படுத்தியுள்ளமையைக் கண்டறியலாமென்றாலும் அது மேலும் கட்டுரையை விரிக்கும். மட்டுமின்றி நம்பிக்கையுடன் கருத்துகளை எடுத்துரைக்கும் போக்கையும் இப்பாடல்கள் முழுக்கக் காணலாம். நம்பிக்கைதானே வாழ்வின் அடித்தளம் என்பதையும் உணர்ந்துகொள்ளலாம். தாய், தந்தை, தலைவன், துறவி, மன்னன்,
அமைச்சன் என இவர்களின் தகுதிகளையும் ஏலாதி திறம்பட உணர்த்துவதை சில பாடல்கள் வழி அறியலாம்.
அறம் உரைக்கும் சிறந்த நூல்களில் ஏலாதிக்கென்று ஒரு தனித்த இடமுண்டு. உணர்த்தும்போக்கில் இவை சிறந்து நிற்கின்றன. உரைக்கும் அறங்கள் பொதுவானவை என்றாலும் ஒவ்வொருவர் உரைக்கும் படைப்பாளுமை
திறனால் அது மெருகேறுகிறது. மனத்தில் பதிகிறது.
அவ்வகையில் ஏலாதியின் கணிமேதாவியார் தம்முடைய திறனால் மனித வாழ்வின் விழுமியங்களைக் குறிப்பாக ஏற்பன விலக்குவன எனும் போக்கில் பிரித்துப் பகுத்து ஆறு கருத்துகளில் ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கிறார். முக்கியமாக தவிர்ப்பன எனும் நிலையில உயிர்க்கொலை புரியாமை குறித்தும் அறிவைக் கெடுக்கும் கள், புலால் உண்ணாமை குறித்தும், குணத்தைக் கெடுக்கும் பொய்பேசாமை,
பிறரை வருத்தாமை, இகழாமை குறித்தும் விளக்கிவிட்டு வாழ்வில் உறவுகளுடன், சுற்றமுடன், மன்னனுக்குரிய தலைமைப் பண்போடு வாழ்வதற்கு அடுத்தவர்க்கு உதவியும், உணவளித்தும், அவர் செய்யும் தீமையைப் பொறுத்தும் ஒழுக்கமுடன் வாழ்வது என்பன ஏற்பிற்குரியனவாகவும் எடுத்து விளக்குகிறார்.
இவ்வாறு இவற்றை விளக்குதலில் அவர் பல்வேறு உத்திகளைப் பாடல்களில் கையாண்டுள்ளார் என்பதனை இக்கட்டுரை சிறு அறிமுகமாக எடுத்துரைப்பதோடு இன்னும் இதுபோன்ற பல கூறுகள் மேலாய்வுக்கு இடமளிக்குமளவுக்கு ஏலாதி திகழ்கிறது என்பதையும் உணர்த்தி நிறைகிறது.