கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்துஎன்று துயரத்தோடு ஆட்சியாளர்களை எச்சரிக்கிறார் வள்ளுவர்.

இதன் பொருள், குடிமக்கள் வருந்தும்படியான செயல்களைச் செய்யும் ஆட்சியாளர்கள், கொலைகாரர்களைவிடக் கொடியவர்கள் என்பதாகும்.

வள்ளுவர் சொல்வதுபோலத்தான், மத்தியிலும், மாநிலத்திலும் இருப்பவர்கள் தமிழக மக்களை நாள்தோறும், ஏதாவது ஒருவகையில் அலறவைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆட்சியாளர்களால் தமிழக மக்களின் நிம்மதி, கொஞ்சம் கொஞ்சமாய்ப் பறிபோய்க்கொண்டிருக்கிறது.

மீத்தேன் எடுக்கிறேன் என்று டெல்டா பகுதி வயல்வெளிகளை ஆக்கிரமித்து விவசாயிகளை ஆரம்பத்திலேயே அலற வைத்தார்கள். ஓ.என்.ஜி.சி. மூலம் எண்ணெய் எடுக்கிறேன் என்று கதிராமங்கலம் பகுதி விவசாய நிலங்களைக் கருகவைத்தும், குடிநீரைப் பாழடித்தும் அப்பகுதி விவசாயிகளைப் பதறவைத்துப் போராட வைத்தார்கள். அதோடு, ஸ்டெர்லைட் ஆலையின் அத்துமீறல்களுக்குத் துணையாக இருந்து, மக்களைப் போராட வைத்து, துப்பாக்கிச் சூட்டின் மூலம் கொலைத் திருவிழாவையும் இவர்கள் கோலாகலமாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.

Advertisment

salem8wayroad

அந்த ரத்தக்கறை கழுவப்படும் முன்பாகவே, 8 வழிச் சாலைத் திட்டம் என்று அறிவித்து சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சி, ஆகிய 5 மாவட்ட மக்களை இப்போது பரிதவிக்க வைக்கிறார்கள்.

Advertisment

அது என்ன 8 வழிச்சாலை?

சேலத்தில் இருந்து சென்னை வரை 274 கி.மீ தூரத்திற்கு ’தங்க நாற்கரசாலை போல், இருமடங்கில், 8 வழிச்சாலையை அமைக்கப்போகிறார்களாம்.

இதற்காகப் பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகள், கடைகள், விவசாய நிலங்கள், தோட்டம், துரவு என 2,791 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியிலும் இறங்கிவிட்டார்கள்.

cm

இந்தச் சாலையால், வழிநெடுக இருக்கும் 854 கிராமங்கள், தங்கள் நிலத்தையும் நிம்மதியைப் பறி கொடுக்கவேண்டுமாம். மேலும் 7500 ஏக்கர் விளைநிலம், 500 ஏக்கர் வனப்பகுதி, 7 ஆறுகள், ஏரிகள், கிணறுகள் என எண்ணற்ற நீர் நிலைகள் பாதிக்கப்படுவதோடு, 8 மலைகளைக் குடைந்தும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளை அழித்தும் இந்தப் பாதை அமைக்கப்படும் என்கிறார்கள்.

விவசாய நிலங்களின் பசுமையை அழித்தும் நீர் நிலைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியும் மலைவளத்தை அழித்தும் உருவாக்கப்படும் இந்தச் சாலைக்குப் பெயர் பசுமைச் சாலையா என்று பொதுமக்கள் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?

இந்த 8 வழிச் சாலையை மக்கள் யாரும் கேட்க வில்லை. மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ இதற்காக எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை. எனினும் யாரும் கேட்காமலே, மத்திய மாநில அரசுகள் 8 வழிச்சாலைத் திட்டத்தை மக்களிடம் திணிக்கமுயல்கின்றன.

அதிலும், இந்தத் திட்டம் வேண்டாம் வேண்டாம் என்று மக்கள் மிரண்டு ஓடுகிற நிலையிலும், இந்தத் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றியே தீருவோம் என்று அடம்பிடிக்கின்றன.

*

தாகத்திற்குத் தண்ணீர் இல்லை. கிராமங்களுக்குள் செல்ல சாலை இல்லை, மருத்துவ சுகாதார வசதிகள் ஏதும் இல்லை. மின்சார வசதிகள் இல்லை. சுடுகாட்டு வசதி இல்லவே இல்லை என்று எத்தனையோ கிராமங்கள் அரசிடம் இன்னும் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருக்கின்றன. எங்கள் ஏரி குளத்தைத் தூர் வாருங்கள், விவசாயத்துக்குத் தண்ணீர் கொடுங்கள் என்று கெஞ்சுகின்றன.

அதுமட்டுமல்லாது குடிமக்களில் பலரும் எங்களுக்கு முதியோர் பென்சன் வரவில்லை. ரேசன் கார்டு கிடைக்கவில்லை. ரேசன் பொருட்கள் தரப்படவில்லை. அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை, அரசின் சான்றிதழ்களைத் தராமல் இழுக்கடிக்கிறார்கள் என்று எத்தனையோ கிடைக்கவில்லைகளோடு அரசிடம் கையேந்திக் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் கவனிக்காத அரசுகள், கேட்டதை எல்லாம் கொடுக்காத அரசுகள், கேட்காத ஒன்றை, மக்கள் விரும்பாத ஒன்றைக் கொடுக்கிறேன் என்று அடம்பிடிக்கின்றன. அய்யா எங்களை விட்டுவிடுங்கள்... எங்களுக்கு எட்டுவழிச் சாலையும் வேண்டாம், நாங்கள் எங்கள் வீடு வாசல்களையும், நிலம் நீச்சைகளை இழக்கவும் வேண்டாம்’ என்று கதறுகிறார்கள்.

ஆனால் முதல்வர் எடப்பாடியோ, மக்கள் தானாக முன்வந்து, தங்கள் நிலத்தை அரசிடம் கொடுக்க முன்வருகிறார்கள் என்று கூசாமல் பொய்சொல்கிறார். உண்மை நிலை என்ன? எங்கள் வீடு, வாசல்களையும் நிலத்தையும் தரமாட்டோம் என்று அன்றாடம் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஊருக்குள் நுழைந்து நிலத்தை அளக்க வரும் அதிகாரிகளை வழிமறித்துப் போராடுகிறார்கள். தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு, எங்களை விட்டுவிடுங்கள் என்று குடும்பம் குடும்பமாக அழுதுபுரள்கிறார்கள்.

salem8wayroad

எடுத்துக்காட்டுக்குச் சொல்வதானால், சேலம் அருகே அடிமலைப்புதூரைச் சேர்ந்த உண்ணாமலை என்ற 75 வயது மூதாட்டி, மலை அடிவாரத்தில் இருக்கும் தம்முடைய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என கண்ணீர் வழிய அதிகாரிகளோடு மல்லுக்கு நின்றார். எங்கள் நிலத்தை எடுக்க நீங்கள் யார்? என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அவரது அழுகையையோ, கேள்வியையோ பொருட்படுத்தாத போலீஸ், அந்த மூதாட்டியைக் கைதுசெய்தது.

இதேபோல் தருமபுரி மாவட்ட பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, இருளப்பட்டி பகுதியில் அதிகாரிகள் நிலத்தை அளக்க வந்தபோது, சந்திரகுமார் என்பவர் தன்மேல் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, எங்கள் நிலத்தில் கால்வைத்தால் குடும்பத்தினருடன் தீக்குளிப்பேன் என்று கதறினார். அதே பகுதியைச் சேர்ந்த மனோகரன், வேலவன் உள்ளிட்ட 14 பேரும் கைகளில் மண்எண்ணெய், பெட்ரோல் கேன்களுடன் தீக்குளிப்போம் என்று குடும்பத்தோடு போராடினர்.

இப்படி குடும்பம் குடும்பமாக எல்லா ஊர்களிலும் மக்கள் கதறித் துடிக்கிறார்கள். ஆனால் 8 வழிச்சாலை எத்தன்களோ மக்கள் தாமாக வந்து எங்கள் வீடு, வாசல்களை, விவசாய நிலத்தை எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அரசிடம் அடம் பிடித்துக் கெஞ்சுவது போல் சொல்லிலிக் கொண்டு ஏமாற்றுகிறார்கள்.

மக்களின் கண்ணீரும் கதறலும் அதிகாரவர்க்கத்தின் மனதைக் கொஞ்சமும் உறுத்தவில்லை. எதிர்ப்ப வர்களை வீடு புகுந்து கைதுசெய்தும், அவர்களுக்காக யாராவது குரல் கொடுத்தால், அவர்கள் சதித்திட்டம் தீட்டினார்கள் என்று கூறி, அவர்கள் மீது சமூக விரோதிகள் என்ற முத்திரையையும் குத்தி, அவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாகவும், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் பேசியதற்காக சமூக செயற்பாட்டாளர்களான பியூஸ் மனுசையும் மாணவி வளர்மதியையும், நடிகர் மன்சூர் அலிலிகானையும் முரட்டுத்தனமாகக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்காக யாரும் குரல் கொடுக்கவே கூடாதா?

இது நாடுதானா? இங்கே நடப்பது குடிமக்களுக்கான அரசாங்கம்தானா?

இங்கே ஆள்பவர்கள் மனிதர்கள்தானா? இவர்களது நெஞ்சுக்குள் துடிப்பது இதயம் என்ற உறுப்புதானா? என்ற கேள்விகள் தானாய் எழுகிறது.

*

இந்தியாவில் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் இருக்கும்போது, அந்த மாநிலங்களை எல்லாம் விட்டுவிட்டு... பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் கூட இந்த 8 வழிச் சாலையை அமைக்க முயலாமல், எதற்காக தமிழகத்தில் அமைக்கவேண்டும் என்ற கேள்வி இயல் பாகவே எல்லோர் மனதிலும் எழுகிறது.

அதிலும் மலைப் பகுதி சூழ்ந்த சேலத்தைக் குறிவைத்து, எதற்காக இந்த 8 வழிச்சாலையை மத்திய அரசு அமைக்க வேண்டும்?

ஒட்டுமொத்த தமிழக மக்களும் சேலத்தைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்பதற்காகவா?

சேலத்துக்காரர்கள் சென்னை நோக்கிக் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வர நினைக்கிறார்களா? அதுவும் இல்லை. சேலத்துக்கும் சென்னைக்கும் சாலை வசதி இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்களா? அதுவும் இல்லை?

8 வழிச்சாலையை அவசர அவசரமாக மத்திய அரசு இங்கே கொண்டுவரத் துடிப்பதற்கு யாருக்காக?

*

கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இரும்புத் தாது, கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்கள் அதிகம். குறிப்பாக திருவண்ணாமலையை அடுத்த கவுத்தி மலையில் உள்ள இரும்புத் தாதுகளை 100 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்டி எடுக்கலாம். அதில் கோடிகோடியாய் லாபம்

அடையலாம். இதேபோல் சேலம் கஞ்ச மலையிலும் இரும்புத்தாது கொட்டிக் கிடக்கிறது. இதையெல்லாம் அள்ளிக் கொண்டுபோக, ஜிண்டால் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் துடியாய்த் துடிக்கின்றன. இந்த நிறுவனங்களோடு கைகோத்துத் திரியும் ஆட்சியாளர்கள், இத்தகைய நிறுவனங்களுக்கு இந்தப் பகுதியையே தாரை வார்த்துக்கொடுத்து லாபம் பார்க்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் கனிம வளத்தை அள்ளிக்கொண்டு போக வசதியாகத்தான் 8 வழிச்சாலையைக் கொண்டு வரத்துடிக்கிறார்கள் என்று இயற்கைவளப் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த 8 வழிச்சாலைக்காக 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி, அதிக ஆர்வம் காட்டுகிறார்.

’வாகனங்கள் பெருகிவிட்டன. அதற்கு ஏற்ப சாலைகளை விரிவுபடுத்த வேண்டியே இப்படிப்பட்ட சாலையைக் கொண்டு வருகிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு பசுமை வழிச்சாலை அவசியம்’ என்கிறார் எடப்பாடி.

முழுக்க முழுக்க மக்களுக்காகவே, மக்களின் நலனுக்காகவே 8 வழிச்சாலைத் திட்டத்தைக் கொண்டுவருவதாகச் சொல்கிறார் எடப்பாடி. ஆனால் விவரமறிந்த அதிகாரிகளோ ‘முழுக்க முழுக்க இந்த சாலைக்கான டெண்டர், முதல்வரின் மாமனார், சம்பந்தி, மைத்துனர் என்று அவரது குடும்பத்தினருக்கே கொடுக் கப்பட இருக்கிறது. எனவே, டெண்டர் மூலம் லாபம் அடையப்போகிறவர்கள் முதல்வர் தரப்பினரே’என்கிறார்கள் அழுத்தமாக.

மக்களின் கண்ணீரிலும் துயரத்திலும் லாப விளைச்சல் பார்க்கத் துடிக்கிறார்கள்.

மக்களின் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் என்று கீழ்க்கண்ட குறளால் எச்சரிக்கிறான் வள்ளுவன்.

‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை’

-இதை ஆட்சியாளர்கள் மறந்து விட்டார்கள்.

மக்களால், மக்களுக்காக, மக்கள் பிரதிநிதிகளால் நடத்தப்படுவதே மக்களாட்சியாகும். ஆனால் இங்கிருக்கும் ஆட்சியாளர்கள், மக்கள் விரும்பாத ஒன்றை எதற்காக மக்கள் மீது பலவந்தமாகத் திணிக்கவேண்டும்?

-ஆதங்கத்தோடு,

நக்கீரன்கோபால்