இன்று தினசரி தலைப்புச் செய்தியாக அச்சு ஊடகங்களையும் காட்சி ஊடகங்களையும் ஆக்கிரமித்து, விவாதப் பொருளாக பல பரிமாணங்களில் அனைவரையும் அச்சுறுத்தி வருவது தமிழகக் கல்வி குறித்தான நிலை என்றால் மிகையாகாது.
ஜனநாயக நாடு என்றாலே கல்வி எல்லோருக்கும் அரசால் இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்தியா என்ற நமது மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் கல்வி விற்பனைப் பண்டமாகி ஏறத்தாழ 25 வருடங்கள் ஆயிற்று.
1990-களுக்கு முன்பு எல்லா இடங்களிலும் அரசுப் பள்ளிகளே இயங்கின. தரமான கல்வியும் சுதந்திரமான கற்றலும் அழுத்தமில்லா வகுப்பறைகளுமே இருந்துவந்தன. காட்ஸ் ஒப்பந்தத்தின் விளைவாக கல்வியும் விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டதுதான் நம் நாட்டு மக்களின் அவநிலை. அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த தனியார் பள்ளிகள், அதற்குப் பிறகு நிறைய உருவாகின. வருடா வருடம் புதிய புதிய தனியார் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு அது 2000-க்குப் பிறகு காளான்களைப்போல பெருகின.
மக்களும் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் சரளமாகப் படித்து பேசி பெரிய பெரிய பதவிகளில் அமர்ந்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பினர். விளைவு, அந்த தனியார் பள்ளிகளில் முறையாக பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்களா, அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா என்பதை எல்லாம் ஆராயாமலேயே தங்கள் குழந்தைகளை சேர்க்கத் துவங்கினர்.
டை, ஷூ, பேருந்து வசதி இவற்றைக் கண்டு, அங்கு பணிபுரிபவர்களைக் கடவுளாகவும், தனியார் பள்ளிகள் கோயில்களாகவும் எண்ணி தவமாய்த் தவம் கிடந்து பள்ளி நுழைவாயிலில் நின்று தங்கள் கனவுகளைக் குழந்தைகளின்மீது ஏற்றிவைத்துக் காத்திருத்தல் நடைபெற்றது.
காலப்போக்கில் பள்ளிகளின் தரம் பலவாறு பிரிந்தன. அதிக பணம் கட்டும் பெற்றோரின் பிள்ளைகள் படிக்க ஒரு வகையான பள்ளி, மிக அதிக, குறைந்த கட்டணம் என பல தரங்களில் தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டு, அரசுப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைய ஆரம்பித்தது. இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்களோ, ஆசிரியர் சங்கங்களோ, அரசாங்கமோ இதுகுறித்து அவசர நடவடிக்கை ஏதும் எடுக்காமல், சிந்திக்கக்கூட தவறியதன் விளைவு இன்று அகில உலக அளவிலான (International school) என்ற பெயர் கொண்ட பள்ளிகளும் ஊருக்கு நான்கு வந்துவிட்டன.
பள்ளிகள் மட்டுமா, 2000-க்குப் பிறகு தனியார் ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களும் புற்றீசலாய் முளைத்தன. இதன் போக்கு பணம் மட்டும் கட்டி வீட்டிலிருந்தபடியே பயிற்சி முடித்த சான்றிதழைப் பெற்று பெரும்பாலானவர்கள் ஆசிரியர் தகுதி பெற்றனர்.
விளைவு, சமூகச் சிந்தனையற்ற ஆசிரியர்கள் பரவலாக உருவாகி இவர்களாலும் பள்ளிக் கல்வி சிதைய ஆரம்பித்தது. ஏனெனில் முறையான பயிற்சியோ கற்பித்தல் முறைகளோ அணுகுமுறைகளோ இல்லாமல் உருவாகிய ஆசிரியர்கள் இவர்கள். அரசு ஆசிரிய ரானால் மாதச் சம்பளம் 5 இலக்கங்களில் வரும் என்ற ஒரே இலக்கால் இப்படிப்பட்டவர்களை ஆசிரியர்களாக்கிய தனியார் கல்லூரி, நிறுவனங் களுக்கும் தமிழகக் கல்வியை உருக்குலைத்ததில் பெரும் பங்குண்டு.
அரசுப் பள்ளிகளில் தரம் இருந்தாலும், சிறப்பான முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டிருந்தாலும் பெற்றோருக்கு நம்பிக்கை வரவில்லை. தனியார் பள்ளிகளை நாடியதற்குக் காரணம் ஆரம்ப காலத்தில் பள்ளியின் தேர்ச்சி சதவீதம், மதிப்பெண்களின் அடிப்படையில் தனியார் பள்ளிகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு அரசும் அதற்கு துணைநின்று தனியார் பள்ளிகளை வளர்த்துவிட்டதுதான்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பணத்தை முதலீடு செய்யும் ஒரு வணிக நிறுவனமாகவே பள்ளிகளும் கல்லூரிகளும் மாறின. விளைவு, கல்வி வியாபாரமாகி தனியார் வசம் சென்றுவிட இன்றும் பெற்றோர்களுக்கு குழப்பம் நிலவிக் கொண்டேயிருக்கிறது, எங்கு நம் குழந்தைகளை சேர்ப்பது என.
பிறந்த குழந்தையை இரண்டரை வயதிலேயே பள்ளிக்கு அனுப்பும் மனநிலை பெற்றோருக்கு வர, தனியார் பள்ளிகள் ருசிகண்ட பூனைகளாகி விட்டன. தாலியைக்கூட அடமானம் வைத்து தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்பும் போக்கு கிராமத்து மக்களிடம்கூட வந்ததுதான் வேதனை.
அரசுப் பள்ளிகளும் ஆங்கில வழிக் கல்வியைத் தர முடிவுசெய்து அறிமுகம் செய்ய ஆரம்பித்தன.
அங்கும் சரி... தனியார் பள்ளிகளிலும் சரி, தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஆசிரியர்கள்தான் பாடம் கற்பிப்பர் என்பதை ஏனோ பெற்றோர் உணராததன் விளைவு இன்று ஆங்கிலமும் தெரியாமல் தமிழும் தெரியாமல் எல்லாக் குழந்தைகளுமே தவிக்கின்றனர்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில வழியில் கற்பிக்க பிரத்யேக பயிற்சி எதுவும் தரப்படுவதில்லை. ஒரு ஆசிரியர் தாய்மொழி வழிக் கல்வியில் மட்டும்தான் ஒரு அறிவியல் பாடத்தை அல்லது சமூக அறிவியல் பாடத்தை குழந்தைகளுக்கு கருத்துப் புரிதலுடன் ஆழமாகக் கற்பிக்க முடியும். ஏனெனில் ஒரு குழந்தை தன் வீட்டில் பெற்றோர், உறவினர், நண்பர், சமூகத்தில் பிறரிடம் என எல்லா இடங்களிலும் தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழில்தான் பேசும். அப்படியிருக்க ஆங்கில வழியில் கல்வி என்பது வெறும் மனப்பாடக் கல்வி மட்டுமே என்றாகி சிந்திக்க வழியற்றுப் போகவைக்கும். இந்த புரிதல் எதுவும் இல்லாமல்தான் அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர் ஆங்கில வழிக்கல்வியை நாடுகின்றனர். மெட்ரிக் பள்ளிகளுக்கும் இவை பொருந்தும்.
தனியார் பள்ளிகளின் அட்டகாசம் கற்பித்தலுக்கு (Teaching) முக்கியத்துவம் தராமல், வெறும் பயிற்சிக்கு (Coaching) முக்கியத்துவம் தரும் போக்கு நோயாகி விட்டது. அரசு அதிகாரிகள் தேர்ச்சி சதவீதக் கெடு வைத்ததால் அரசுப் பள்ளிகளுக்கும் அந்த நோய் தொற்றிக்கொள்ள நல்ல முறையான பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களும் மதிப்பெண்கள் பக்கம் தங்கள் கவனத்தைச் செலுத்தினர்.
ஒரு கட்டத்தில் கற்பித்தல் என்பது வெறும் பெயருக்கு என்றாகி விட்ட நிலையே பெரும் பாலான பள்ளி களில் நிகழ்ந்தது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் ஆசிரியர் எண்ணிக்கையை அரசு குறைக்க ஆரம்பித்தது.
தொடர்ந்து பல சவால்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நிகழ்ந்தன. ஆரம்பப் பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கும் சேர்த்து 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றும் நிலை, மாணவர் எண்ணிக்கைக்கு ஆசிரியர் விகிதம் கணக்குப் படி பார்த்து, ஒருவர் (அ) இருவரே 90% தமிழகப் பள்ளிகளில் பணியாற்றும் சூழல். தனியார் பள்ளிகளிலோ பெற்றோரிடமே பணத்தை வாங்கி வகுப்புக்கு இரு ஆசிரியர்களை நியமிக்கும் நிலை, வகுப்புக்கு ஒரு ஆசிரியரே இல்லாத அரசுப் பள்ளிகளை மக்கள் புறக்கணிக்கும் மனநிலை.
இதுமட்டுமா, கட்டமைப்பு, கழிப்பறை வசதி , குடிநீர் வசதி என அரசுப் பள்ளிகளில் எல்லாவற்றிற்குமே திண்டாட்டம்தான். சரி, தொடக்கப் பள்ளிகளாகட்டும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளாகட்டும் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியைத் தவிர அலுவலகப் பணிகள் மிக அதிகமாகத் தரப்படுகின்றன. வருகையை செயலியில் பதிவுசெய்வது முதல் ஆசிரியர் மாணவர் விவரக் குறிப்புகளை அதற்கான Emis இணையத்தில் பதிவேற்றும் பணி வரையிலும் அவர்கள்தான் செய்ய வேண்டும். மாணவருக்கு சாதிச் சான்றிதழ் பெறுதல், வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் மற்ற எல்லாவற்றையும் பெறவும் பெற்றதை Emis இல் பதிவேற்றவும் என ஆசிரியர்களின் பொழுதுகள் கற்பித்தல் தவிர வேறு பணிகளுக்கே தாரை வார்க்கப்படுகின்றன. ஆசிரியர் நியமனமும் இல்லை, இருக்கும் 2 ஆசிரியர்களுக்கும் மேற்சொன்ன வேலைகள்.. இப்படியான நிலையில் அரசுப் பள்ளிகளில் தரத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?
நான்கு மாதங்களுக்கு முன்பு, ஜூன் மாதம் புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு வெளியிடப்பட்டு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பலமுனை எதிர்ப்புகள் கிளம்பின. சமூகத்தில் செயல்படும் முற்போக்கு இயக்கங்கள், மாணவர் அமைப்புகள் உட்பட ஆசிரியர் அமைப்புகளும் இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து பதிவுசெய்து வருகின்றன.
பொதுப் பட்டியலில் கல்வி இருப்பதால் மத்திய அரசின் தலையீடு மாநிலங்களுடன் ஒத்திசைவாகவே இருந்தது. ஆனால் இந்த தேசியக் கல்விக் கொள்கை வரைவோ மாநிலங்களின் உரிமையை முற்றிலும் பிடுங்கிக்கொண்டு மொத்த கல்வியையும் ஒற்றை அதிகாரக் குவிப்பிற்குள் கொண்டுவருவதாகக் கூறுகிறது. 3 வயது முதலே முறையான கல்வியை அறிமுகப்படுத்துவதும் 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கே பொதுத் தேர்வு என்று அச்சுறுத்துவதோடு 5 ஆம் வகுப்பிலேயே தொழிற்கல்வியை தேர்வு செய் என மாணவரை திசைதிருப்புகிறது கல்விக் கொள்கை.
சமூக நீதியைப் புறந்தள்ளி அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து தனியார் கல்விக் கொள்கையை வலுப்படுத்துமாறு தயாரிக்கப்பட்டுள்ளது. வரைவு தேசியக் கல்விக் கொள்கை தேர்வுகளுக்கு முக்கியத் துவத்தைக் கொடுத்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு தேசிய அளவில் தேர்வு என்கிறது. மறைமுக அரசியலாக வேலைவாய்ப்பு திண்டாட்டம், அரசுப் பள்ளிகள் முற்றிலும் அழிக்கப்படும் நிலை போன்ற பல கூறுகள் இதில் அடங்கியுள்ளன.
நவீன குலத் தொழிலைக் கொண்டுவரும் இந்த வரைவு தேசியக் கல்விக் கொள்கை முதல் தலைமுறைக் குழந்தைகளை கல்வி கற்காத சூழலுக்கு அழைத்துச் செல்லும் அபாயத்தை உள்ளடக்கிய விஷம்தோய்ந்த ஐஸ்க்ரீம் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி வளாகம், மாணவர் சேர்க்கை இல்லாத கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவை மூடப்பட்டு நூலகமாக்குதல் என மாற்றங்கள் என்று கூறி கல்விக் கூடங்களுக்கு மூடு விழாக்களை முன்னெடுக்கும் இப்புதிய தேசியக் கல்விக் கொள்கை மூன்று C-க்களை (Communalization, Commercialization, Centralisation)உள்ளடக்கியுள்ளது எனலாம். பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படும் அத்தியாயங்களே நிறைந்து இருக்கின்றன.
இன்னும் இது பற்றி நிறைய பேசலாம். இது வெறும் வரைவுதானே என்று கூறிவிட்டதை நாமும் நம்பினோம்.
ஆனால் அதில் கூறப்பட்டுள்ள பள்ளிக் கல்வி குறித்த அத்தனை மாற்றங்களும் அரசாணைகளாக தமிழக அரசால் கடந்த 3 வாரங்களாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 5, 8 ஆம் வகுப்புக் குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு குறித்தான சர்ச்சை தற்போது நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த பள்ளி வளாகம், குறுவள மையப் பள்ளிகள் என தொடர்ந்து அரசாணை வெளியீடுகள் .பெற்றோரையோ, ஆசிரியர்களையோ வெளிப்படையாகக் கருத்தையே கேட்காமல் சத்தமில்லாமல் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது ஜனநாயக வன்முறை அல்லவா?
இத்தனையும் அரசுப் பள்ளிகளில் தரத்தை மேம்படுத்தவே என்றே திரும்பத் திரும்ப வலியுறுத் துகிறது அரசு. 15-க்கும் அதிகமான இலவசங்களைக்கூட குழந்தைகளுக்கு அளித்து வருகிறது அரசு. இலவசங் களைத் தந்துவிட்டால் அது தரமான கல்வி ஆகிவிடுமா என்ற கேள்வி நம் முன் எழுகிறது. தொழில்நுட்ப வகுப்பறைகள், கல்வி தொலைக்காட்சி கூட வந்துவிட்டது. ஆனால் பள்ளிகள் பள்ளிகளாக இருப்பதில்லை என்பதே நிதர்சனம். எல்லாவற்றிலும் ஆவணம் மட்டுமே சரியாக இருக்கும் போக்கும் இங்குண்டு.
எல்லோருக்குமான கல்வி இங்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. அரசுப் பள்ளிகளை தரப்படுத்த ஒரே வழி, வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நியமித்து, கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தி, கழிப்பறை, குடிநீர் வசதி, விளையாட்டு மைதானங்கள் என அனைத்தும் மாணவர் நலன் கருதி செய்தால் பெற்றோர் அரசுப் பள்ளிகளை மட்டுமே நாடுவர்.
நாம் கட்டும் கல்வி வரிப்பணம் கல்விக்காக செலவிடப்படுகிறதா என்ற கேள்வியை மக்கள் எழுப்பாத வரை தரமான கல்விக்கு உத்தரவாதம் சொல்ல இயலாது. தனியார்மயக் கல்விக் கொள்கை அறவே ஒழிந்தால்தான் அரசுப் பள்ளிகள் வாழும், அடித்தட்டு மக்களும் மலைவாழ் பழங்குடியினக் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டுமானால் அரசே எல்லோருக்கும் இலவசமான தாய்வழிக் கல்வியைத் தரவேண்டும். அருகமைப் பள்ளிகளுக்கு சட்டம் இயற்ற வேண்டும். பொதுப் பள்ளி முறை வர வேண்டும். இவையனைத்தும் நிகழும்போதுதான் நம் தமிழகப் பள்ளிகளும் தரத்தால் உயரும் என்று நாம் நம்பலாம்.