( 2021, ஜனவரி இனிய உதயத்துக்கு தமிழறிஞர் ஔவை நடராஜன் கொடுத்த பேட்டிதான், அவரது கடைசிப் பேட்டியாக அமைந்தது. அதிலிருந்து....)
வட ஆற்காடு மாவட்டத்தில் திருவத்திபுரம் - செய்யாறு என்னும் பேரூரில் தான் நான் 1936 இல் பிறந்தேன். என் தந்தையார் அப்போது நகராட்சிப் பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்தார். தமிழாசிரியராகப் பணியாற்றியபோது செய்யாற்றில் பிறந்த எனக்கு, நான் வளர்ந்த நான்கு ஆண்டுகள் நினைவில்லை. அதன் பிறகு செய்யாறிலிருந்து செங்கம், போளூர் ஆகிய ஊர்களுக்கு மாறுதலானார். பிறகு திருப்பதியில் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கீழ்த்திசைக் கல்லூரியில் பணியேற்கச் சென்றார். நான் திருப்பதிக்குச் சென்ற ஆண்டு நினைவிருக்கிறது. திருப்பதியில் தான் பள்ளி முதல் வகுப்பே தொடங்கியது என்று நினைக்கிறேன். பிறகு திருப்பதியிலிருந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் என் தந்தையார் பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். நான்காம் வகுப்பு முதல் பள்ளியின் பத்தாம் வகுப்பு வரையில் நான் அண்ணாமலை நகரில் பள்ளிக்கல்வி பயின்றேன்.
அண்ணாமலை நகரின் சூழலை நினைத்துப் பார்த்தால், எங்கும் தமிழ் வளம் கமழ்கின்ற ஒரு கலைக்கோயிலுக்குள் இருந்த நினைவு எனக்குத் தோன்றுகிறது. காரணம் தந்தையாருடன் நெருங்கிய நண்பர்களான அறிஞர் வெள்ளைவாரணனார் -
கல்வெட்டு ஆராய்ச்சிப் பேராசிரியர் சதாசிவ பண்டாரத்தார் முதலிய அறிஞர் பெருமக்களுடன் என் தந்தையார் பழகுவதை நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள் பேசிய பேச்சின் இனிமையையும், தமிழ் மொழியின் வனப்பையும் கண்டு எனக்கு இலக்கியத்தின்பால் ஈர்ப்பு இயல்பாக வந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
*
பேராசிரியர் மு.வ.வின் பெரும் புகழ் நாடறிந்ததாகும். நான் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தபோது எனக்குப் பெருமையாக இருந்தது. நாங்கள் விடுதியில் வளர்ந்தோம். பேராசிரியர் மு.வ என்னிடத்தில் மட்டுமல்ல எவரிடமும் சொல்வார், " வாழ்க்கை என்பது வளமாக அமைய வேண்டும். வாழ்க்கையில் செல்வம் சேர்வது என்பது பெருமிதம் தரும் இயல்பாகும். தமிழ்க்கல்வியில் அதற்கு வாய்ப்பிருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனவே அறிவியல், தொழிலியல் கல்வியில் நீங்கள் ஏன் சேரவில்லை?" என்பார். இதனால் அவர் தமிழ்க்கல்வியைத் தடுத்தார் என்று பொருளில்லை. தமிழ் மக்கள் தம் வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் ஓங்கிய சிறப் போடும், உயர்ந்த திறமையோடும் விளங்க வேண்டும் என்ற பேரவா கொண்டிருந்தார் அவர். அந்த வகையில் அறிஞர் மு.வ. அவ்வாறு சொன்னாரே தவிர, தமிழ்க்கல்வியைத் தடுத்தார் என்று நான் கருதவில்லை.
*
நான் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றி இருந்தேன். அங்குப் பணியாற்றிய ஐந்தாண்டுகளில் சனி, ஞாயிறு என்று வந்தால், அயல் ஊர்களுக்குச் சென்று தமிழ்க்கூட்டங்களில் உரையாற்றுவது, மாநாடுகளில் பங்குபெறுவது என்ற வகையில் பாரதியார் விழாவிலும் - பாவேந்தர் விழாவிலும் சங்க இலக்கிய விழாக்களிலும் பங்கு கொண்டு பேசியிருக்கிறேன். என்னுடைய பேச்சை ஆர்வத்தோடு வரவேற்று மிகச் சிறப்பாக நீங்கள் பேசுகிறீர்கள் என்று சொல்லி மூன்று நாட்கள் எனது உரையைக் கேட்ட பெருமை காரைக்குடி நண்பர்களையே சாரும். காரைக்குடியில் தான் நான் பேசுவதை மக்கள் கேட்டுமகிழ்ந்தார்கள். ஒரு மணி நேரம் பேசியதாக நினைவிருக்கிறது. காரைக்குடிக்கு அப்போது நான் வாரந்தவறாமல் சென்று பேசியதும், பின்னர் அழகப்பர் கல்லூரியில் பேசியதும் நினைவில் நிழலாடுகின்றன. காரைக்குடியில் நான் பங்கு கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணாவும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் பங்குகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவே நானும் அமர்ந்து ’இதுவல்லவா இன்பம்’ என்று உரையாற்றியதை இன்றும் நான் நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
*
மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் விரிவுரையாளராகக்கூட இல்லை. உரையாளனாக இருந்தேன். அப்போது உடனிருந்த ஆசிரியர்களைக் காட்டிலும் பிற வகுப்புகளில் பேராசிரியர்கள் வராத நேரத்தில், மாணவர்களின் உரை நிகழ்ச்ச்சிகளுக்குத் போய்த் தலைமை தாங்கும் வாய்ப்பும் எனக்கு வந்தன. அப்போது நான் எனது கருத்துக்களை எடுத்துச் சொல்லவும், அதில் மாணவர்கள் ஆர்வம் காட்டவும், நான் புதிய நூல்களைப் படிக்கவும், கவிதைகளை நயமோடு எடுத்துச் சொல்லவும் ஆர்வம் கொண்டேன். அந்த ஆர்வத்துடைய ஒரு படர்ச்சியாகத்தான் கவிக்கோ. அப்துல் ரகுமான், கவிஞர் மீ .இராஜேந் திரன், கவிஞர் மேத்தா, கவிஞர் அபிபுல்லா, கவிஞர் காமராசன் இருந்தனர். பெயர்களில் சிலவற்றை நான் மறதி காரணமாக விட்டுவிட்டால் நண்பர்கள் வருந்த வேண்டாம் என்று சொல்வேன். ஏறத்தாழ எனது வகுப்பில் படித்தவர்கள் அவ்வளவு பேரும் கவிஞர்களாகவே மாறிவிட்டார்கள். ’ பாடும் பறவைகளின் கூடு’ என்று எனது வகுப்பறையைக் கவிஞர் சுரதா எழுதிப் போற்றினார். அந்த வகையில் அருமையான கருத்துகளைத் திறமையாக எடுத்துக் கூறுவதில் பெரிய ஆர்வம் வந்தது.
*
பச்சையப்பன் கல்லூரியில் நான் இருந்தபோதே எனக்கு பெருமதிப்பிற்குரிய நண்பர் என்று சொல்லமாட்டேன், தலைவர் போன்று விளங்கினார் கவியரசர் சுரதா. எனவே சுரதா அவர்களோடு நான் சுற்றாத இடமில்லை. செல்லாத திரையரங்கமில்லை, அவர் பேசுவதைக் கேட்டு மகிழாத நாளில்லை. பச்சையப்பன் கல்லூரியில் எனது அறையிலேயே பல நாள்கள் அவர் தங்கியிருக்கிறார். அவர் பாடுகின்ற முறையும், விருத்தங்களை அவர் எழுதிக் காட்டுகின்ற நெறியும் பெரிய தமிழ்க்காதலை எங்கள் நெஞ்சங்களில் கிளர்ந்து எழச்செய்தன .
அதன் விளைவாகத்தான் உவமைக்கவிஞர் சுரதா அவர்களுடைய பாட்டுவரிகள் போல அமைய வேண்டும் என்ற எண்ணத்தை எங்குப் பார்த்தாலும் சொன்னேன்.
எண்ணிப்பார்த்தால் 1956 - 58 ஆண்டுகளில் வளர்ந்த கவிஞர்கள் அவ்வளவு பேரும் சுரதா அவர்களின் போக்கில் சாய்ந்தவர்களே. அந்த வகையிலேதான் கவிஞர்களுக்கு நடுவில் என்னுடைய நட்பை நான் வளர்த்துக்கொள்ள முடிந்தது. பச்சையப்பன் கல்லூரியில் என் வகுப்பில் உடன் பயின்ற கவிஞர் நீலமணி ஒப்பற்ற திறமை கொண்டவர். என்னை விழுங்கி ஏப்பம் விடுகிற நீலமணிக்கு எவரும் நிகரில்லை என்று சுரதா கூறினார் . அதே நிலையில் கவியரசனாக மின்னூர் சீனிவாசனும் வல்லம் வேங்கடபதியும் மிளிர்ந்தார்கள். வகுப்பில் பாடம் நடக்கும்போது நான் முதல் வரியில் தொடங்க, வல்லம் வேங்கடபதி தேனாக விருத்தத்தை முடித்துக்காட்டும் திறமையாளர் .
மரபுக் கலைகளும் தமிழுணர்வோடு சார்ந்த விழாக்களும் , மெல்ல மெல்ல நலிந்த நிலையில் தேய்ந்து வருகின்றன. முன்னர் மாநில உணர்வு என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது. தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், தமிழ் மக்கள் நெஞ்சில் எழுச்சித் தீயை அணையாமல் வளர்த்து வந்திருக்கிறார் கள். இதனால் காலத்தினுடைய மாற்றமும் அரசியல் போக்கும் திசை மாறின. இந்த நிலையில் மாநில உணர்வுகள் மிஞ்சினால் இந்திய அரசுக்கு இடர்ப்பாட்டை உருவாக்கும் என்ற பிழையான எண்ணம் படர ஆரம்பித்தது. அந்தப் படர்ச்சி நல்லது இல்லை. மாநிலங்கள் தலைமையும் முதன்மையும் பெறுகின்றபோது, நாம் நினைக்கிற நல்வாழ்வும் நற்கலைகளும் தமிழ்ப் பண்பாடும் சிறந்து ஓங்கும் என்று நம்புகிறேன்.
*
தமிழகத்தில் வாழும் கவியரசர்கள் ஈடில்லாத கவிதைகளைப் படைத்து, எட்ட முடியாத உயரங்களைத் தொட்டிருக்கிறார்கள். அவர்களின் படைப்புகளைக் கண்டு அயல்நாட்டவர் சிலரிடம் நான் மொழிபெயர்த்துக் கூறியதைக் கேட்டு வியந்து பாராட்டியிருக்கிறார்கள். நான் பழகியதில் வாழும் கவிப்பேரரசு வைரமுத்து, கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன், பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும், சாகித்ய அகாதமியின் துணைத் தலைவராகவும் திகழும் கவியரசர் சிற்பி பாலசுப்பிரமணியம், புதுக்கவிதை தமிழகத்தில் பிறந்தபோதே அதனை எடுத்து வளர்த்து எழில் கூட்டிய பெருமைமிகு கவிஞர் மு.மேத்தா, நான் முன்னமே குறிப்பிட்டதைப் போல, கல்லூரியியில் என்னோடு உடன் படித்தவரும், எழுத்துக்கு எழுத்து என்னை இவர் விஞ்சிவிடுவார் போலிருக்கிறது என்று சுரதாவால் குறிப்பிடப்பட்டவருமான கவியரசர் நீலமணி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனிடத்தில் நெருங்கிப் பழகி, அவரது நெஞ்சைக் கவர்ந்து, இன்றுவரை முல்லைச்சரம் கவிதை இதழை நடத்திவரும் கவிஞர் பொன்னடியான், கவியரசர் புலமைப்பித்தன், மறைந்த பொன்னிவளவன், புலவர் இளஞ்செழியன் என என் நெஞ்சைக் கவர்ந்த பலரை நான் நினைக்கிறேன். அதேபோல் கவிஞர் சென்னிமலை தண்டபாணி எளிய நடையில் எழுதும் எரிமலை எண்ணங்களைக் கொண்டிருக்கிறார் . இத்தனை கவியரசர்கள் நம்மிடையே இருந்தும் இதுவரை ஞானபீட விருது, இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காதது வருத்தத்திற்குரியது.
*
ஒரு நிகழ்ச்சி இப்போது என் நினைவுக்கு வருகிறது. நான் தமிழ் வளர்ச்சித்துறையில் செயலாளராக இருந்தபோது, என்னோடு இசை மாமன்றச் செயலாளர் என்ற வகையில், என் நண்பரும் தொழிலதிபரு மான டி.டி.கே வாசு , சங்கீத அகாதமியின் சார்பில் தில்லியில் நடந்த சங்கீத அகாதெமியின் செயற்குழுவுக்கு வந்திருந்தார். அந்த ஆண்டின் விருதுகளை அங்கே அறிவித்த போது, அந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பெயரும் இல்லை. அது நல்ல மாலை வேளையில் நடந்த நிகழ்ச்சி. டி.டி.கே வாசு, இதனால் கோபமுற்றுத் திடுமென எழுந்து நின்று, கைகளை வலுவாக வீசியபடி தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு ஐந்து இடங் களைக்கூடத் தரவில்லை என்றால், உங்களைத் தொலைத்துவிடுவேன் என உரக்க அதட்டிக் கூறினார். அவருடைய உரத்த குரலைக் கேட்டு அஞ்சி ஐவருக்கு விருதுகளை அப்போதே அறிவித்தார்கள். எனவே கையசைத்துக் காட்டி, மிரட்டுகிறவர்களைக் கண்டுதான், அச்சுறுத்துகிறவர்களைக் கண்டுதான் விருதுகள் வரும் என்ற தில்லியின் போக்கு நல்ல போக்காக எனக்கு அப்போதே தெரியவில்லை. இதுதான் ஞானபீடத்துக்கும் விடை .
*
முத்தமிழறிஞர் கலைஞருடைய நெஞ்சத்தில் நிலையான இடத்தைப் பெற்ற பெருந்தகை கவிஞர் கருணானந்தம்போல அன்பு காட்டுகிறவர் என்று இன்னொருவரைச் சொல்ல முடியாது. அவருக்கு எவ்வளவு பெரிய ஆளுமை இருந்தது என்று சொன்னால், கலைஞர் எதையாவது எழுதிப் பாதியில் நிறுத்தியிருந்தால், மீதியை முடித்துக் காட்டுகிறவர் அவர்தான். மேலும் நாள்தோறும் முதலமைச்சர் கலைஞரை ஒரு மணி நேரமாவது அவர் சந்தித்து உரையாடுவார். அப்போது இருவரும் கலந்து பேசி யாருக்கும் தெரியாத அரசியல் முடிவுகளை எல்லாம் எடுத்ததை நான் நன்றாக அறிவேன்.
*
நான் பல்லாண்டுகளாக அறிந்த நண்பர் நக்கீரன் கோபால். அவருடைய நெஞ்சத் துணிவையும் நேர்மைக்குப் போராடுகிற ஆற்றலையும் நான் போற்றியிருக்கிறேன். பார்க்கின்றபோதே அவரது அடர்ந்த மீசை, அவருடைய நெஞ்சத்தில் வழிகிற அன்பு வெள்ளம், இவற்றைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் எப்போதும் போற்றிப் புகழும் கவியரசர் அப்துல்ரகுமான் சொல்லித்தான் இனிய உதயம் இதழ், கலைநலம்பொலியும் வடிவில் வருகிறது என்பதை அறிந்து என் நெஞ்சம் உருகுகிறது. நான் கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதை வரிகளைச் சொல்லிக் காட்டவேண்டும் என்று நினைக் கிறேன். தியாகராசர் கல்லூரியில் அவர், மாணவராக இருந்தபோது, இராசராசன் விழாவைப் பேராசிரியர் இலக்குவனார் நடத்தினார்.
அப்போது கவியரங்கத்தில் அப்துல்ரகுமான் பாடிய போது, வாளெடுத்துப் போர் தொடுத்தல் இவனுக்கு வாடிக்கை!
வீரக் களத்தில் - இரத்த
ஈரக் குளத்தில் ஆடிவருவது
அவனுக்கு வேடிக்கை
என்று சொன்னபோது, நாங்கள் வியந்தோம். அடுத்த எதுகை எப்படி என்று பார்த்தால்,
’ பாடிக் கைநீட்டிப் புலவர்கள் வந்தால்
தருவதற்கு அவனுக்கு இருந்தன கோடிக்கை ’
- என்று பாடியிருந்தார்.
அப்துல்ரகுமானுடைய சிந்தனை, ஆழத்திலும் ஆழம் உடையதாகும். அந்த ஆழ்ந்த சிந்தனையோடு, எழுத்தை எண்ணி எண்ணி கவிதையாகச் செதுக்கிய திறத்தை நான் பலமுறை நேரில் கண்டு நெஞ்சைப் பறிகொடுத்தவன்.
" வந்தாரா நடராசன் என்று வழிபார்த்து வருந்தி நின்றோம்
என் தாரா உடனிங்கு வந்தேன் என்று வந்தவரே
என்றும் எந்நாளும் என் இதயம் உவந்தவரே "-என்று பெங்களூருவில் நடந்த விழாவில் அவர் கூறிய தொடர்கள் என் கண்களை நனைக்கின்றன .
அவருமில்லை - அவர் எழுதிய என் தாராவும் இப்போதில்லை .
அவர் இனிய உதயம் இதழுக்கான வழிகாட்டியாக இருந்தார் என்பதையும், ஏற்கனவே இதழியல் உலகத்தின் திலகமாகத் திகழ்கிற சகோதரர் நக்கீரன் கோபால், அவர் கருத்தை உடனே வரவேற்று ஏற்றுக்கொண்டார் என்பதையும் எண்ணிப் பெருமிதத்தோடு போற்றுகிறேன்.
நண்பர் ஆரூர் தமிழ்நாடன் ஆற்றல் வாய்ந்தவர்.
அவருக்குக் கவிதையும் தெரியும், உரைநடையும் தெரியும், காவியங்களும் தெரியும். இம்மூன்றின் எல்லையைக் கடந்து அரசியலும் நுணுக்கமாகத் தெரியும். எனவே அப்படிப்பட்டவர் உதயத்தின் இணையாசிரியராகத் திகழ்கிறார். இது இனிய உதயம்தான். இது எல்லாப் பொழுதிலும் எல்லாக் காலத்திலும் செழித்துச் சிறப்படைய வேண்டும் என்று நான் மகிழ்சியோடு வாழ்த்துகிறேன்.
*
தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிர்காலம் பொற்காலமாக அமையும் என்பதுதான் என் உறுதியான எண்ணம், கனவு , ஏக்கம், மூடுபனி மறைத்தாலும்கூட முகிலைக் கிழித்துக்கொண்டு வெண்ணிலவு வருவது போல, காலம் வரும்போது, தமிழின் பெருமிதம் ஞால மெல்லாம் கைதொழுது போற்றும் உயர் நிலையை அடையும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு. என்னுடைய அந்த விருப்பம் நிறைவேறி வருவதாக நம்புகிறேன்.
நேர்காணல்: சென்னிமலையார்
உதவி: கே.பிரதாப்
படங்கள்: அசோக்