ப்பா கடன்காரர்களுக்கு பயந்து ஊரை விட்டுபோய்விட்டார். எங்கு இருக்கிறார் என்பதைப்பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. போய் ஒரு வருடம் முடிந்துவிட்டது.

மணியார்டரோ கடிதமோ எதுவுமில்லை.

இறந்துவிட்டார் என்றும் இறக்கவில்லை என்றும் செய்திகள் பரவிக் கொண்டிருந்தன.

உயிருடன் இருந்தால், ஒரு கடிதமாவது வந்திருக்கும். அப்பா திரும்பிவர வேண்டும் என்று அம்மா வேண்டிக்கொண்டாள்.

Advertisment

கண்ணீருடன் காத்திருந்தாள்.

வழிபாடுகள் செய்தாள்.

அம்மாவும் பிள்ளைகளும் அனாதைகளாக ஆனதுதான் நடந்தது. முழுப் பட்டினி கிடக்க வில்லை என்பதுதான் மிச்சம். அம்மாவிற்குச் சொந்தமான பத்து பறை நிலம் கைவசம் இருந்தது. இரண்டு போகங்களுக்கு விவசாயம் செய்யலாம்.

Advertisment

விவசாயம் செய்வதற்கு ஆளில்லை. மகனாக ஒருவன் மட்டுமே இருக்கிறான்.

பதினான்கு வயது. தைரியமில்லை.

அதற்கு முன்பே குடும்பத்தலைவனாகி விட்டான்.

கஷ்டப்பட்டுத்தான் என்றாலும், அம்மா ஒன்பதாவது வகுப்புவரை படிக்க வைத்தாள்.

ஒன்பதிலிருந்து பத்திற்கு வகுப்பு உயர்வு கிடைத்த சமயத்தில் அப்பா காணாமல் போனார்.

ஒருவேளை... ஓடி ஒளிந்துவிட்டாரோ?

சிறிய ஒரு வாடகை வீட்டில்தான் வாசம். மாதத்திற்கு ஐந்து ரூபாய் வாடகை.

நெல் விவசாயம் பிறந்த ஊரில்..

பன்னிரண்டு நாழிகை தூரத்தில். நிலத்தை விற்கும் எண்ணம் வந்தது. ஆனால், அப்பாவின் அனுமதியின்றி நிலத்தை விற்பதற்கான தைரியம் அம்மாவிற்கு இல்லை. பங்கு பிரிக்கப்படும் விவசாயம்...

விவசாயம் செய்பவனுக்கு பாதி நெல்லும் வைக்கோலும்... மீதிப்பாதி உரிமையாளருக்கு.

நிலத்தின் உரிமையாளர்கள் என்ற பெயரில்தான் இந்த பத்து பறை நிலத்தின் சொந்தக்காரர்களும் அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டார்கள். நிலத்தின் உரிமையாளர்கள் யாரோ ஒருவனின் கட்டுப்பாட்டில் கிடக்கிறார்கள் என்ற விஷயத்தை உலகினர் மறந்து விட்டார்கள்.

ஜமீந்தார் முறையின் அடிவேருக்குக் கத்தி வைக்கச் செல்பவர்களுக்கு இப்படிப்பட்ட காரியங்கள் எதுவும் தெரியவே தெரியாதா? அப்பாவிற்கு ஒவ்வொரு மாதமும் ஐம்பது ரூபாய் கிடைக்கக்கூடிய வேலை இருந்தது.

வாடகையாக ஐந்து ரூபாய் கொடுத்தாலும், மீதி நாற்பத்தைந்து ரூபாய் இருந்தது.

முப்பத்தைந்து ரூபாயில் குடும்பத்தின் செலவுகள் நடந்து விடும்.மீதமிருக்கும் பத்து ரூபாயில் மற்ற அனைத்து விஷயங்களும் நன்றாக நடந்தன.

அணியக்கூடிய ஆடைகள்... ஓணம், விஷு, திருவாதிரை ஆகிய திருவிழாக்களுக்கு மீதியிருக்கும் இந்த பத்து ரூபாயை வைத்து காரியங்கள் நிறைவேற்றப்பட்டன.

அன்று வாசல் பெருக்கும் மாத்திரி அக்காவிற்கு ஒரு ரூபாய் சம்பளம்.இரண்டு வேளைகளுக்கு உணவு. ஒரு ரூபாய் சம்பளத்தில் அக்காவும் முழு சந்தோஷத்துடன் இருந்தாள். காலம் போன போக்கு...

அப்பாவிற்கு எப்படி இவ்வளவு பெரிய ஒரு கடன் வந்து சேர்ந்தது என்று தெரியவில்லை.

காதில் கேட்டதுதான்.

தேவஸ்தானத்தில் கொடுக்கப்பட வேண்டிய நெல்லை எடுத்து முறைகேடாகப் பயன்படுத்தி விட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு.

எட்டாயிரம் பறை நெல் குத்தகை மூலமும், நான்காயிரம் ரூபாய் ஒவ்வொரு வருடமும் வருமானமாகவும் வரக்கூடிய சேரிக்கல்லின் பொறுப்பாளராக இருந்தார்.

நெல்லைக் களத்தில் குவித்து வைத்திருந்தார். பதர் வந்தது. காய்ந்த நெல் எவ்வளவு வரும் என்பதைக் கணக்கிட்டுகொடுத்தார்..

அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

பதர் நீக்கப்பட்ட நெல்லின் விலையில் கையாடல் செய்வதற்கு அப்பா தயாராக இல்லை.

நெல்லுக்கான விலையை முழுமையாக அடைக்காவிட்டால், வேலையிலிருந்து நீக்கிவிடுவதாக அறிவித்தார்கள்.

வேறு வழியற்ற சூழலில் ஒரு பறை நெல்லுக்கு மூன்று ரூபாய் என கணக்கிட்டு, நானூறு பறை நெல்லுக்கான பணத்தை ஒரே தடவை முழுமையாக அடைக்க வேண்டிய நிலை வந்தது.

கண்டு குளங்கரை கொச்சு வறீது முதலாளி யிடம்தான் ப்ரோநோட் எழுதிக் கொடுத்து கடனாக பணம் வாங்கினார்.

முடிந்தவரைக்கும் சீக்கிரம் பணத்தைத் திரும்ப கொடுத்துவிடலாம் என்ற அடிப்படையில்.

தவணை பல முறைகள் தவற, முதலையும் வட்டியையும் சேர்த்து ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு சிவில் நீதிமன்றத்தில் கொச்சு வறீது புகார் கொடுத்தார்.

முதலையும் வட்டியையும் சேர்த்து வரக்கூடிய தொகையை நீதிமன்றத்தில் கட்ட வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கூறப்பட்ட தேதியிலும் வாய்தா அளிக்கப்பட்ட தேதிகளிலும் பணத்தைக் கட்ட முடியவில்லை.

நீதிமன்றம் வாரண்ட் அனுப்பியது.

ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

அமீனாவும் உடனிருப்பவர்களும் அப்பாவை கஸ்டடியில் எடுப்பதற்கான தயாரெடுப்பில் இருந்தார்கள்.

கையற்ற சூழலில்... கடனைத் தீர்ப்பதற்கு வேறுவழி கண்களில் படாத காரணத்தால்...

சிறையின் கம்பிகளைப் பார்க்காமல் இருப்பதற்காக...

மானத்தைக் காப்பாற்றுவதற்காக.. அப்பா யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் ஊரைவிட்டு ஓடிவிட்டார்.

ss2

எங்களுடைய சிறிய குடும்பத்தை நடுங்க வைக்கும் சம்பவமாக அப்பா ஓடிய சம்பவம் இருந்தது.

பத்து பறை நிலத்தை விற்றாவது அப்பா உண்டாக்கிய கடனைத் தீர்த்து முடித்திருக்க லாமே! அம்மாவிற்கு குடும்பத்திலிருந்து பாகம் பிரித்துத் தரப்பட்ட சொத்தை விற்பதற்கு யார் தடையாக இருந்தது?

ஆபத்தான வேளையில் யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை.

பணக்காரர்களான உறவினர்கள் இல்லாமலில்லை.

அப்பாவிற்கு அந்தக் காலத்தில் நீதிமன்றத்திலிருந்து அனுப்பிய ஜப்தி வாரண்டைப் பார்த்து யாரும் அந்த அளவிற்கு பதைபதைப்பு அடைய வில்லை.

ஊதாரியான அப்பா அதையும்..

அதைத்தாண்டியும்கூட அனுபவிக்க வேண்டும் என்ற சாபம் கலந்த வார்த்தைகள்தான் உறவினர்கள் சிலரின் வாயிலிருந்து உதிர்ந்தன.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கெட்ட தசை வந்துசேரும் என்று நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொள்ள அம்மா படித்திருந்தாள்.

கையிலிருந்த தங்க நகைகள் முழுவதையும் விற்றுத்தான் அம்மா என்னையும் சிறிய தங்கையையும் அந்தக் காலத்தில் வளர்த்தாள். தேர்வுக் கட்டண மான பத்து ரூபாயைக் கட்டுவதற்கு வழியில்லாத நிலையில்தான் நான் அந்த சாகசச் செயலுக்கு முயன்றேன்.

குருவாயூர் கோவிலி-ல் மிகப் பெரிய திருவிழா வரப் போகிறது. விருச்சிக மாதத்தில் சுக்லபக்ஷ ஏகாதசி...

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் திரண்டிருக்கும் மூன்று நாட்கள்... ஏகாதசிக்கு முன்னால் பதினெட்டு விளக்கு திருவிழாக்கள் இருக்கின்றன.

பணக்காரர்களின் சார்பாக கோவிலில் விளக்கு வழிபாடு.

சுவருக்குள் இருக்கும் பதினொரு வரிசை சுற்று விளக்கு நிறைய எண்ணெய்யை ஊற்றி எரிய வைப்பார்கள். எல்லா நாட்களிலும் பக்தர்கள் விளக்குகளை வழிபட்டுச் செல்வார்கள்.

நவமி, தசமி, ஏகாதசி ஆகிய மூன்று நாட்களிலும் தொடரும் பக்தர்களின் வெள்ளம்.

கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் கால் வைக்க இடமில்லாத அளவிற்கு மக்கள் கூட்டம்.

நவமி விளக்கு நாளன்று கோவிலில் எண்ணெய்க்குப் பதிலாக நெய்யை ஊற்றுவார்கள்.

கொளாடி என்பது பெரிய எஜமானரின் விளக்கு. தசமி விளக்கு என்பது வாரியத்து மேனனுடையது.

ஏகாதசி விளக்கு என்பது கோவிலின் பிரதான அறக்கட்டளையைச் சேர்ந்த மானவிக்ரமன் சாமூதிரி ராஜாவிற்கானது.

மறுநாளில் நடைபெறும் துவாதசி வழிபாடு சிறளயத்து தம்புரானின் செலவில் நடைபெறக்கூடியது. மிகப் பெரிய பணக்காரர்களுக்கும் ஊர்களின் தலைவர்களுக்கும் முக்கியத்துவம் இருந்த காலம்...

இன்றைய குருவாயூரல்ல...

நாற்பத்து இரண்டு வருடங்களுக்கு முன்னாலிருந்த கோவிலும் சுற்றுப்புறமும்...

தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கோவிலுக்குள் நுழைவதற்கு அனுமதியில்லை.

கோவிலுக்குள் நுழைவதற்கான போராட்டம் நடந்த பிறகும், பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ளவர்களுக்கு திய்யர்களின் கோவில் வரை மட்டுமே வழிபடுவதற்கான சுதந்திரம் அனுமதிக்கப்பட்டது.

வருடத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே உயர்ந்த.. தாழ்ந்த சாதி வேறுபாடு இல்லாமல் வழிபடுவதற்கு அனுமதிப்பார்கள்...

தசமி, ஏகாதசி... தசமி மதியத்தில் நடை திறக்கப் பட்டால், துவாதசி வரை நடை அடைக்கப்படாது.

அதுதான் எப்போதும் வழக்கம்.

ஏகாதசி காலத்தில் குருவாயூரின் தோற்றமே மாறி விடும். தெரு வர்த்தகர்களின் வெள்ளம்... பல ஊர்களிலிருந்தும் வியாபாரிகள் தங்களுடைய பொருட்களுடன் கோவில் பகுதிக்கு வந்து சேர்வார்கள்.

வினோதமான காட்சிகளின் அரங்கேற்றம்...

கிழக்கிலும் மேற்கிலும் உள்ள நடைகளில் காட்சிகளைப் பார்ப்பதற்காக வருபவர்களின் கூட்டமும் நெரிசலும்... மிகவும் அதிகமாக பொது மக்களின் கவனத்தை ஈர்ப்பது கிழக்கு நடைதான்.

குருவாயூரப்பன் கிழக்குத் திசைநோக்கி திரும்பி அமர்ந்திருப்பதுதான் கிழக்கு நடை கவனத்தை ஈர்ப்பதற்கான காரணம் என்பது வரலாறு.

ஏகாதசி வர்த்தகத்தில் கிடைக்காத பொருட்களே இல்லை. கிழக்கு நடையிலுள்ள வீடுகளின் முன்பகுதி விற்பனை மையங்களாக மாறி விடும். பிராமண மடங்களுக்கு முன்னால் பொரி மூட்டைகளுடன் தமிழர்கள் இடம் பிடித்திருப்பார்கள். பெரிய மாளிகைகளில் வாழ்பவர்களிலிருந்து பாண்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரை சாதிலி மத வேறுபாடின்றி ஏகாதசி வர்த்தகம் செய்யலாம்.

வினோதமான அற்புத காட்சியாளர்களும் ஜால வித்தைக்காரர்களும் ஒன்றுசேர்வது என்பது ஏகாதசியின் ஒரு சிறப்பு. வேறு எந்தவொரு கோவில் பகுதியிலும் அரங்கேறி காணமுடியாத கபட- நாடக காட்சிகள்... கனவும் யதார்த்தமும் களவும் சதியும் பொய் முகங்களும் தங்களுக்குள் ஒன்றோடொன்று போட்டி போட்டு ஆடும் திவ்ய அற்புத லீலைகள்... எல்லாம் பகவானின் மாய விளையாட்டு!

வினோதமான வன விலங்கு காட்சி நடத்தி, பெயரையும் புகழையும் பெற்ற மனிதரான ஆர்.வி.ஸி. என்ற பெயரில் அறியப்படும் ராயிரம் வீட்டில் சேக்குட்டி ஒவ்வொரு வருடமும் அவர் தனக்கேயுரிய பாணியில் ரசிகர்களுக்காக அற்புத காட்சியைக் காட்டுவார். ஆலமரம் இருக்கும் பகுதியில்தான் ஆர்.வி.ஸி. தன் காட்சிகளை நடத்துவார். எல்லா வருடங்களிலும் ஆட்களின் கண்களில் பொடியைத் தூவுவதைப்போல ஏதாவதொரு அற்புத காட்சியுடன் அவர் தோன்றுவார்.

ஒரு வருடம் ஆஃப்ரிக்கன் ஜடாயு பறவையின் காட்சியெனில், மறுவருடம் அரியலூர் ரயில் விபத்தைக் கண்களுக்கு முன்னால் காட்டுவார். சில வருடங்களில் மரணக்கிணற்றிற்குள் சைக்கிள் ஓட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

ஏகாதசி காலத்தில் ஆர்.வி.ஸி. கொண்டு வந்த மரணக் கிணறுதான் நான் முதல் முறையாக பார்த்த அற்புதம். மரணக்கிணற்றின் அடிப்பகுதியில் இருந்து மேல்நோக்கி பாய்ந்து ஏறும் மோட்டார் சைக்கிள்... மோட்டார் சைக்கிள் புறப்பட ஆரம்பிக்கும்போது, மரணக் கிணறும் நடைபாதையும் குலுங்கி அதிரும். மோட்டார் சைக்கிளில் அமர்ந்துகொண்டு இரண்டு கைகளையும் உயர்த்தியவாறு கிணற்றைச்சுற்றி இப்படியும் அப்படியுமாக அதிகமான வேகத்தில் சவாரி செய்யும் வித்தைக்காரரின் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்பதையும், எந்த நிமிடத்திலும் சைக்கிள் சாய்ந்து குழைந்து ஒடிந்து, மூளை வெளியே வந்து ரத்தத்தில் குளித்துக் கிடக்கும் காட்சியை நினைத்துப் பார்த்தபோது, மனம் நடுங்கியது. தலை சுற்றி விழ இருந்தபோது, யாரோ பிடித்துக்கொண்டார்கள்.

என் கண்களில் ஆர்.வி.ஸி. ஒரு அசாதாரண மனிதராகத் தோன்றினார்.

உயர்நிலைப் பள்ளிக்கூடத்திற்கு அருகில் சிறிய ஒரு பெட்டிக்கடையின் உரிமையாளராக இருந்தார் ஆர்.வி.ஸி. பெரிய அரசியல் செயல்பாட்டாளர் தேசியவாதி....

ஆர்.வி.ஸி.யுடன் எனக்கு இருக்கும் நட்பு, பெட்டிக்கடையின் ஒரு வாடிக்கையாளர் என்ற நிலையில் ஆரம்பித்தது.

தொடர்ந்து அந்த நட்பு வளர்ந்தது.

ஆர்.வி.ஸி.யின் ஒரு பெரிய ரசிகனாக மாறினேன். "நான்கு காசுகளைக் கஷ்டப்பட்டு சம்பாதிச்சேன்... நண்பரே!''- என் முகத்தைப் பார்த்து ஆர்.வி.ஸி. கூறிய காட்சி இப்போதும் நினைவு மண்டலத்தில் இருக்கிறது.

இமயத்திலிருந்து நேராக இறங்கி வந்த நாகராஜாவாக வேடம் போடக்கூடிய வாய்ப்பைத் தந்திருக்கிறார்.

முதலில் என்ன வேடம் என்பதே புரியவில்லை. பிறகு விளக்கிக் கூறினார். "ஐடியா பரவாயில்லையே!' என்று நான் நினைத்தேன். அதை விட ஈர்த்தது... முப்பது ரூபாய்தான். முப்பது ரூபாய் சம்பளத்திற்கு மூன்று நாட்கள் நாகராஜாவாக வாழ வேண்டும்.

நாளொன்றிற்கு பத்து ரூபாய். விஷயம் மோசமல்ல.

வாக்கு கொடுத்தால், ஆர்.வி.ஸி.அதன்படி நடக்கக்கூடியவர். ஆசை வார்த்தைகளுடன் சேர்த்து பத்து ரூபாய் நோட்டைக் கையில் தந்தார். மனமில்லா மனதுடன் நோட்டை வாங்கி பாக்கெட்டிற்குள் வைத்தேன். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு யாரிடமும் கெஞ்ச வேண்டியதில்லை.

துவாதசி புலர்ந்து முடிந்தால், இருபது ரூபாய் கிடைக்கும். நல்ல ஒரு சட்டையையும் வேட்டியையும் வாங்க வேண்டும். மீதிப் பணத்தை வைத்து அம்மாவிற்கு ஏகாதசி பலகாரம்... அல்வா, பேரீச்சம்பழம், பொரி, உளுந்து வடை, கரும்பு..

அப்பா எல்லா வருடங்களிலும் ஏகாதசி காலத்தில் கோணிப்பை நிறைய பலகாரங்கள் வாங்கித் தருவார். சிறிய தங்கையையும் நினைக்காமல் இல்லை. மூன்று நான்கு வகைகளில் குங்குமம், கண்ணாடி வளையல்கள்... அப்பா இல்லாத கவலையை அவர்கள் உணரக்கூடாது. இருபது ரூபாய் கிடைத்த பிறகு, செய்ய வேண்டிய திட்டங்களைப் பற்றிய சிந்தனையில் மனம் ஈடுபட்டிருந்தது.

"விழித்துக் கொண்டு நிற்காமல், விஷயத்தைச் சொல்லு. சம்மதமா? இல்லாவிட்டால்... வேறு ஆளைப் பார்க்கணும். காசைத் திருப்பித் தந்தால், போதும்.'' சம்மதித்தேன்.

காட்சிக்கு முன்னோடியாக மூன்று நாட்களுக்கு ரிகர்சல் இருந்தது. விஷயம் வெளியே தெரியக் கூடாது. அனைத்தும் ரகசியமாக இருக்கவேண்டும்.ஆர்.வி.ஸி. எந்த புலிவாலைப் பிடிக்கப் போகிறார் என்று தெரியாத ஒரு பரபரப்பு நிலவியது.

வெளியே தெரியக்கூடிய அளவிற்கு திறமையைக் காட்ட நினைத்தேன்.

சுவாமியார் மடத்தில்தான் ரிகர்சல் நடத்துவதற்கான இடத்தைத் தேர்வு செய்திருந்தனர்.

அன்றைய சுவாமியார் மடம் மனித வாடை இருக்கக்கூடிய இடமாக இல்லை.

இடிந்து சிதிலமான பழைய கட்டிடம். இரண்டு நிலைகள்.

அதற்குள்தான் பிராமணரான தாயும் மகனும் சேர்ந்து கயிறு கட்டி ஒரே அறையில் சில வருடங்களுக்கு முன்னால் தூக்கில் தொங்கிய சம்பவம் நடந்தது. எதற்காக தாயும் மகனும் ஒரே நாளில் ஒரே அறையில் தூக்கில் தொங்கி இறந்தார்கள் என்று தெரியவில்லை.

பகலில் கூட அந்த வழியில் யாரும் நடக்க மாட்டார்கள். மாலை நேரம் வந்துவிட்டால் பிறகு... கூற வேண்டியதே இல்லை.

இரவுப்பொழுது வந்து விட்டால், தாயும் மகனும் சேர்ந்து வழியில் செல்பவர்களை நோக்கி கைகளை நீட்டிக் கொண்டு வருவார்கள் என்று கூறுவார்கள்.

கண்டவர்களும் கேட்டவர்களும் அந்த தாயையும் மகனையும் பற்றி எவ்வளவோ பயங்கர கதைகளைக் கூறி பரவ விட்டார்கள்.

நம்பக்கூடிய.. நம்ப முடியாத கதைகள்...

சுவாமியார் மடத்தின் ரிகர்சல் முகாமில் பங்கெடுப்பதற்கு முதலில் விருப்பமில்லாமல் இருந்தேன். பயம்தான் காரணம்.

முன்பணத்தை வாங்கி பாக்கெட்டிற்குள் போட்டுவிட்ட நிலையில், பயப்பட்டு பயனில்லை.

ஆர்.வி.ஸி. உடன் இருக்கிறார். பிறகு ஏன் பயப்பட வேண்டும்?

காட்சியை நடத்துவதில் ஆர்.வி.ஸி.க்கு உதவுவதற்கு வேறொரு ஆளும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்.

அவர் இந்த ஊரைச் சேர்ந்தவரல்ல.

எங்கிருந்தோ வரவழைக்கப்பட்ட ஒரு திறமை சாலி!

ரிகர்சல் முகாமான சுவாமியார் மடத்திற்குச் சென்றபோதுதான் பார்த்தேன்.... இரு மலைப் பாம்புகளை.

உயிருள்ளதும் உயிரற்றதும்.

ஆர்.வி.ஸி.யும் நாகராஜாவைக் காட்சியாக நடத்தும் ஷோ மேனும் தேவைப்படும் ஆலோசனைகளைக் கூறினார்கள்.

உயிருள்ள மலைப் பாம்பை ஒரு பெரிய... நீளமான பெட்டியில் மயக்க மருந்து கொடுத்து படுக்க வைத்திருப்பார்கள்.

பக்கத்துப் பெட்டியில்...

துவாரங்கள் இருப்பதில்....

நாகராஜாவாக நடிக்கக்கூடிய மனிதன் சுருண்டு படுத்திருக்க வேண்டும்.

இருமக் கூடாது. எந்த சிறு சத்தத்தையும் உண்டாக்கக்கூடாது. இரண்டு பெட்டிகளுக்கும் மத்தியில் ஸ்டஃப் செய்த மலைப் பாம்பை நீண்டு நிமிர்த்திக் கிடத்துவார்கள்.

வாலும் தலையும் வெளியே தெரியாது. பாம்பின் நீளத்தைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்வதற்குத்தான் இந்த வேலை. மனிதனான நாகராஜாவின் கழுத்தும் தலையும் ஒரு ரோமத் தொப்பியால் மூடப்பட்டிருக்கும்.

கண்களும் வாயும் மட்டுமே வெளியே தெரியும். நாக்கை எந்தவொரு காரணத்தைக்கொண்டும் வெளியே நீட்டக்கூடாது.

முடிந்தவரைக்கும் மூன்று நாட்களும் வாயைப் பூட்டிக்கொண்டுதான் படுத்திருக்கவேண்டும். வேறு வழியில்லையெனில் மட்டுமே வாயைத் திறக்கலாம். சிரிப்பும் உதடும் தெரியக்கூடாது. தலையை ஆட்டக்கூடாது. தலையில் போடப்பட்டிருக்கும் கறுத்த தொப்பி அசையவே கூடாது.

கட்டளைகளைக் கேட்டதும், இந்த சிரமங்கள் நிறைந்த செயலைச் செய்வதற்குத் தாவிக் குதித்து கிளம்பியிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று தோன்றியது. முப்பது ரூபாய்களுக்காக மூன்று நாட்கள் மூச்சு அடைக்க இறக்கவேண்டும்.

கறுத்த தொப்பியையும் ரோமத் தொங்கலையும் அணிந்தேன்.

பார்த்தால், பிறவியிலேயே இருக்கக்கூடிய ஜடாமுடி என்று தோன்றும்.

"அனைத்தும் பத்திரமாக இருக்க வேண்டும்.

ஜாக்கிரதையாக இல்லையென்றால், பிரச்சினையாகி விடும்''-ஷோ மேன் மீண்டுமொரு முறை ஞாபகப் படுத்தினார்.

மூன்று தடவைகள் ரிகர்சல் நடந்தது.

ஆர்.வி.ஸி. நினைத்திருந்ததை விட, நாகராஜா நன்றாக இருந்தான்.

கண்களை மூடிக் கொண்டு நாகராஜா இருந்தது... கண்களை மூடி இருந்தபோது, நாகராஜாவின் நிலை...

"சபாஷ்! கங்ராஜுலேஷன்ஸ்.'' -ஷோ மேன் ஆங்கிலத்தில் கூறி, முதுகில் தட்டி உற்சாகப்படுத் தினார்.

இனி சில வசனங்களை மட்டுமே மனப்பாடம் செய்து கொள்ளவேண்டும்.

கேள்விகளும், பதில்களும்...

அடுத்தடுத்து கேட்கக்கூடிய கேள்விகளுக்கு தவறாக பதில் கூறக்கூடாது.

அங்குதான் பார்வையாளர்கள் கண்களில் பொடியை இடவேண்டும்.

சந்தேகம் தோன்ற இடம் கொடுக்கக்கூடாது.

ஒரு வருட செலவிற்கான வழியை அடைய வேண்டிய ஏற்பாடு...

ஏமாற்றும் வேலை என்பது ஆர்.வி.ஸி.க்குத் தெரியாமல் இல்லை.

தட்டவோ வெட்டவோ செய்யாமல், இந்த உலகத்தில் நேர்மையாக பணம் சம்பாதிப்பதற்கு ஏழைகளால் முடியாது என்ற விஷயத்தை ஆர்.வி.ஸி. இளம் வயதிலிருந்தே கற்றுத் தெரிந்திருக்கிறார்.

கேள்விகளும் பதில்களும் தயாராயின.

சொந்த ஊர்: இமயமலை.

பெயர்: நாகராஜா.

வயது: நூற்று இருபது.

ஆயுள்: இரண்டாயிரம்.

உணவு: பால்.

ஐந்தே ஐந்து கேள்விகள். ஒரே வார்த்தையில் இருக்கும் பதில்...

பெரிய முயற்சி எதுவும் இல்லாமலே விஷயத்தைப் புரிந்துகொண்டேன்.பதில் கூறும்போது, பதைபதைப்பு அடைவதோ தொண்டை தடுமாறுவதோ கூடாது. வாயைத் திறக்கக்கூடாது.

கவனமாக இருக்கவேண்டும்.

எங்கிருந்தாவது ஒரு சிறிய தவறு நேர்ந்தால் போதும், கம்பெனி சரிந்து விடும். மக்களுக்கு நாகராஜாவின்மீது இருக்கக்கூடிய நம்பிக்கை இல்லாமல்போய்விடும் என்பது மட்டுமல்ல, அடி கிடைப்பதற்கான வாய்ப்பையும் ஒதுக்கிவிட முடியாது.

ஆர்.வி.ஸி.க்கு அடுத்த வருடமும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவிற்கு ஏதாவதொரு அற்புத நிகழ்ச்சியை பொதுமக்களுக்கு முன்னால் நடத்தியாக வேண்டும்.

மூன்று நாட்கள் நடைபெற்ற ரிகர்சல் முகாமில் பெற்ற பயிற்சி, மனதிலிருந்து கூச்சம் என்ற உணர்ச்சியை விட்டெறியச் செய்ய, பயம் ஓடி ஒளிந்தது.தூக்கில் தொங்கி இறந்த தாயின், மகனின் ஆவிகளின் அடையாளம்கூட அந்த பகுதியில் எங்கும் தெரியவில்லை.

ஆர்.வி.ஸி. நுழைந்து செல்லும் இடத்தில் ஆவிகள் வாழாமல் இருக்க வேண்டும். மனதில் நினைத்துக்கொண்டேன்.

கிழக்கு நடையில், ஆலமரத்திற்கு அடுத்துள்ள ஆரம்பப் பள்ளிக்கூடத்தின் வாசலில்தான் நாகராஜாவின் நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.பாதையில் நடந்து செல்பவர்கள் இழுத்துப்பிடித்து கட்டப்பட்டிருக்கும் பேனரில் எழுதியிருக்கும் வரிகளை வாசிக்கலாம்.

இமய மலையிலிருந்தும் பல்லாயிரம் நாழிகை தூரத்திலிருந்தும் பயணித்து வந்து சேர்ந்திருக்கும் நாகராஜா... பயங்கர விஷம் கொண்ட படமெடுக்கும் சக்தி கொண்ட சர்ப்பங்களின் அரசன்! பூலோகத்தின் எட்டாவது அதிசயம்! அனுமதிச் சீட்டு கட்டணம்... இரண்டு அணா மட்டும். பத்து வயதிற்குக் கீழேயிருக்கும் குழந்தைகளுக்கு பாதிக் கட்டணம்.

ஊர் முழுக்க நோட்டீஸும் ஒட்டப்பட்டிருந்தது.

பக்கத்து ஊர்களிலெல்லாம் செண்டை அடித்து அறிவிக்கப்பட்டது.

நல்ல பிரச்சார உத்தி... அச்சடித்து வினியோகிக் கப்பட்ட நோட்டீஸில் நாகராஜாவின் சிறப்புகள் விளக்கிக் கூறப்பட்டிருந்தன.

நீளம், அகலம், தனித்துவங்கள்...

அனைத்துமே கூறப்பட்டிருந்தன.

மூன்றே மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி மட்டும்... வெறும் எழுபத்து இரண்டு மணி நேரங்கள்.. எழுபத்து மூன்றாவது மணிக்கு எவ்வளவு கூட்டம் இருந்தாலும், காட்சி இல்லை.

நாகராஜா துவாதசி நாளன்று காலையில் திரும்பிச் செல்கிறது.

மிகப்பெரிய மக்கள் கூட்டத்திற்கு மத்தியிலும் நாகராஜாவைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் ஓடி வந்தது. நவமி நாளன்று காலையில் கறுத்த பைஜாமாவையும் கறுத்த முழுக்கை கொண்ட சட்டையையும் அணிந்து உரிய நேரத்தில் நாகராஜா நுழைந்து இடத்தைப் பிடித்தது.

முதல் காட்சி ஆரம்பமாவதற்கு அதிக நேரமில்லை.

குருநாதர்களான பெரியவர்களை மனதில் நினைத்துக் கொண்டேன்.

அப்பாவைப் பற்றிய நினைவு எழுந்து மேலே வந்தது. அறியாமலே கண்கள் நிறைந்துவிட்டன.

பரவாயில்லாத ஒரு பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தும், இப்படிப்பட்ட ஒரு கேடு கெட்ட நிலை வந்து சேர்ந்துவிட்டதே என்ற மனக் கவலை... குறிப்பாக அம்மா ஞாபகப்படுத்திய ஒரு விஷயம் இருக்கிறது.

துவாதசிக்கு கூத்தம்பலத்திற்குச் சென்று துவாதசிப் பணம் வைக்க வேண்டும்.

பிராமணர்களுக்கு துவாதசிச் சடங்கைச் செய்தால், அப்பா திரும்பி வருவார் என்று பிரசன்னத்தில் கூறப்பட்டிருக்கிறது. துவாதசி சடங்கைச் செய்யக் கூடிய நிலை கைவரவில்லை.

அதுவரை துவாதசிப் பணம் வைத்து பிராயச்சித்தம் செய்யவேண்டும்.காணாமல் போன ஆள் திரும்பி வருவார். அது ஒரு எழுதப்படாத சட்டம்.

நாகராஜாவைப் பார்ப்பதற்கான அனுமதிச் சீட்டு விற்பனைக்கு முன்னோட்டமாக வெளியே பேண்ட் வாத்தியம் முழங்கியது. ஷோ மேன் நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு ஒரு மருந்தை எடுத்து வாயில் தேய்த்தார். நல்ல இனிப்பும் வாசனையும் உள்ள லேகியம். நாக்கின் மேற்பகுதியின் வழியாக தொண்டைக்குள் இறங்கிய லேகியம் ஒருவகையான உணர்ச்சியை உண்டாக்கியது. ஏதோ ஒரு புரியாத ஆனந்த அனுபவம்! கனவு உலகத்தில் நடப்பதைப் போல மெதுவாக நடந்தேன். வெளியே இருந்த சத்தங்கள் நிறைந்த ஆரவாரங்கள் எதுவுமே காதில் விழவில்லை. நினைவுகளுக்குக் குறைவு உண்டாகவில்லை.

மெருகும் கூர்மையும்...

கேட்டதற்கு ஒரே வார்த்தையில் பதில்...

நவமியும் தசமியும் முடிந்தன. ஆர்.வி.ஸி.யின் பணப்பெட்டியில் காசுகள் நிறைய வந்து விழுந்தன. அச்சடித்த டிக்கெட்டுகள் முழுவதும் விற்பனையாகி விட்டன. இன்னும் ஒரேயொரு நாள் மட்டுமே காட்சி இருக்கிறது. ஏகாதசி... அன்றுதான் மிகப்பெரிய மக்கள் கூட்டம்... டிக்கெட் அச்சடிக்கும் பணி குன்னம் குளத்தில் உள்ள ஒரு அச்சகத்திற்குத் தரப்பட்டிருந்தது.

இரவோடு இரவாக அச்சடிக்கப்பட்டு வரவேண்டும்.

மரப் பெட்டிக்குள் ஒரே இடத்தில் இருந்தது நாகராஜாவின் சரீரத்தை மிகவும் சோர்வடையச் செய்திருந்தது.

சோர்வு தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக லேகியத்திற்குப் பதிலாக குளிகை தரப்பட்டது. குளிகை என்று கூறினால்... சிறியது அல்ல.

நெல்லிக்காயின் அளவிலிருக்கும் சிறிய உருண்டைகள்.

ஒன்றல்ல...

நான்கைந்தை ஒரே நேரத்தில் விழுங்க வேண்டியிருந்தது.

குளிகை இறங்கிச் செல்வதற்காக நன்றாக இனிப்பு சேர்க்கப்பட்ட, இளம் சூட்டைக் கொண்ட தேநீரைப் பருகுவதற்காகத் தந்தார்கள்.

இரண்டு நாட்களின் கடுமையான உழைப்பு காரணமாக களைத்துச் சோர்வடைந்து போயிருந் தேன்.

தூக்கம் சிறிதும் இல்லை. நாக்கு குழைந்து விட்டது.

நாகராஜாவால் கேள்விகளுக்குப் பதில் கூற முடியவில்லை. நாக்கு உள்ளே போய்விட்டால், எப்படி பதில் கூற முடியும்? உட்கொண்ட குளிகையின் பாதிப்பு நரம்புகளுக்குள் நுழைந்து ஏறியது. பல வண்ணங்களைக் கொண்ட ஒரு ரத்தினக் கம்பளத்தில் நாகராஜா படுத்திருக்கிறான்! வினோதமான ஒரு உலகத்திற்குள் சென்று சிக்கிக் கொண்ட ஒரு அனுபவம்!

நாகராஜாவைப் பார்ப்பதற்காக வந்திருந்தவர்களின் கூட்டத்தில்...அப்பா வந்து நின்று கொண்டிருக் கிறார்!அப்பா மகனை அடையாளம் தெரிந்திருக் கிறார்!

தந்தையை மகனால் மிகவும் அருகிலேயே பார்க்க முடிந்தது. அப்பாவைப் பார்த்ததும், அதிக சந்தோஷத்தால் வெடித்து அழுதேன்.

"என் அப்பா... இவ்வளவு காலமும் எங்களைவிட்டு எங்கு போனீங்க... அப்பா? நீங்க எப்போ திரும்பி வந்தீங்க? முந்தா நாளா? நேற்றா? இன்றா?''

கேள்விகள் அனைத்தும் தொண்டைக் குழியிலேயே தேங்கி நின்று விட்டது. ஒன்றுகூட வெளியே வரவில்லை.

கண்ணீரால் நாகராஜாவின் தாடியும் மீசையும் நனைந்து விட்டிருந்தது.

அப்பா வீட்டிற்கு திரும்பிச் சென்றிருப்பாரோ?

ஆர்.வி.ஸி.யை அழைத்து கேட்கவேண்டும் என்று தோன்றியது.

அடிமனதின் மூலமாக கடந்த கால நினைவுகளில் மூழ்கினேன்.

எங்கு சுற்றுவதற்குச் சென்றாலும், குருவாயூர் ஏகாதசி நாளன்று அப்பா வீட்டிற்குத் திரும்பி வந்து விடுவார்.அப்பா வீட்டிற்கு வந்து விசாரித்த போது, இல்லாமலிருந்த காரணத்தால், தேடி வந்திருப்பாரோ? இறுதியில் நாகராஜாவின் கூடாரத்திலும் ஒரு பார்வையாளர் என்ற வகையில் எட்டிப் பார்த்திருப்பாரோ?

"அப்பா... நான் இங்குதான் உயிருடன் இருக்கிறேன். அப்பா... நீங்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் நாகராஜா...

உங்களின் மகன்தான். வேறு வழியற்ற ஒரு சூழலில் இப்படியும் ஒரு வேடத்தை அணிய வேண்டிய நிலை வந்தது. அப்பா.. நீங்க என்னை மன்னிக்கணும்.'' -சத்தம் போட்டு கூறியதாகத்தான் ஒரு ஞாபகம்...

ஒருவேளை.. பாதி சுய உணர்வுடன் கூறியதால், யாரும் கவனிக்காமல் இருந்திருக்கலாம்.

இல்லாவிட்டால்...

ஆர்.வி.ஸி. ஓடி வந்து வாயைப் பொத்தி மூடியிருப்பாரோ? தெரியவில்லை.

நாகராஜாவிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்காததில் டிக்கெட் வாங்கியவர்களுக்கு ஒரு திருப்தியற்ற நிலை உண்டாகவில்லை.

கண்ணீர் தேங்கி நின்றிருக்கும் நாகராஜாவைப் பார்த்தபோது, பார்வையாளர்கள் மத்தியில் பரிதாப உணர்வுதான் உண்டானது. இமய மலையிலிருந்து வந்த நாகராஜா ஊருக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்க வேண்டும்! சோகத்தில் மூழ்கியிருந்த நாகராஜாவின் கண்ணீர், பார்வையாளர்களின் முகத்திலும் கவலையைப் பரவச் செய்தது.

அமைதியற்ற மனதுடன் பொழுது புலரும் வரை பெட்டிக்குள்ளேயே இருந்தேன்.

காலை ஏழரைக்கு துவாதசி முடியும். துவாதசி பணத்தை வைக்க வேண்டிய நேரம் தவறினால், அப்பா திரும்ப வருவது நடக்காது.

கடுமையான இரவு கடந்திருக்கிறது.

கோவில் குளத்திற்குச் சென்று மூழ்கி குளித்தேன். ஈரத் துணியுடன் உள்ளே சென்று தொழுதேன். "இந்த ஏழையின்மீது கருணை வைக்கணும்!'' என்று மனமுருக வேண்டிக்கொண்டேன்.

கூத்தம்பலத்திற்குள் நுழைந்து துவாதசிப் பணம் வைத்து கடவுளை வழிபட்டேன்.

உள்ளுக்குள் நடுங்கச் செய்துகொண்டிருந்த காய்ச்சலுடனும் குளிருடனும் வீட்டின் வாசற்படியில் கால் வைத்தேன்.

முன்னறையிலிருந்த நாற்காலியில்... அப்பா உயிருடன் அமர்ந்திருந்தார்.

உடனடியாக நம்ப முடியவில்லை.

"மகனே... உன்னைப் பார்க்க முடியாமல் நாங்கள் மூன்று நாட்களாக கவலையில் இருந்தோம்.'' -தொண்டை அடைக்க, வெளியே வந்த அப்பாவின் வார்த்தைகளைக் கேட்டபோது, முழு உடம்பிலும் சிலிர்ப்பு உண்டானது.