னவு, ஒருவகையில் கற்பனைபோலத் தோன்றினா லும் சிலசமயம் உண்மையின் எதிரொலியாகவே இருக்கக் காணலாம். அடிப்படை எண்ணங்களின் விளைவு கனவினை உருவாக்குகிறது.

கனவு காண்பதற்கு உள்ளுணர் வின் எழுச்சியும் காரணமாகும். ஒருநிகழ்வின் தொடர்பாகவோ அல்லது யாதொரு தொடர்பு மின்றியோ கனவுதோன்றும்.

பண்டைய மக்கள் கனவுக் குச் சிறப்பிடம் தந்ததாகத் தெரிகிறது. மேனாட்டில் கனவு பற்றிய எண்ணங்கள் மிகுதி யாதலால், அதுகுறித்த ஆராய்ச்சி யில் ஈடுபட்டனர். கனவினால் வருங்காலம் அறியப்படுகிறது என்றுநம்பினர். உளவியல் அறிஞரான சிக்மெண்ட் பிராய்ட் கனவு என்பது மன உணர்வின் வெளிப்பாடு என்ற கருத்தில் ஆய்வு நிகழ்த்தியவர்.

vv

Advertisment

கனவானது வருங்காலத்தின் நம்பிக்கை விடியல் என ரோமானிய ரும் பிரித்தானியரும் எண்ணினர். கிரேக்க மக்கள் கனவு பற்றி ஆழ்ந்த கருத்துடையவர்கள். அரிஸ்ட்டாடிலும், ஹிப்போக்ளிஸும் கனவு, வாழ்வின் பயனைச் சுட்டுவதாகக் கருதினர்.

கனவை இறைவனின் தூதன் என்று கருதியவர் ஹோமர். உறக்கத்தில் காணப்படும் கனவு, விழித்தெழுந்த நிலையில் மறந்து விடுவதும் உண்டு. ஆண்டுகள் பல கழியவும் நினைவில் நிலை பெறுவதும் உண்டு என்ற கருத்தினை பிராய்டு தம் நூலில் எழுதியுள்ளார்.

அறிவியல் அடிப்படையில்,’ செரிமானம் இன்மையாலும், பசித்த பின் உண்ணாத நிலையிலும், உடலில் முறையான குருதிப்போக்கு இல்லாத நிலையிலும் கனவு தோன்றும் எனக் கண்டறிந்துள்ளனர்.

Advertisment

சாக்ரடீஸ் கனவுகள் மனசாட்சியின் குரல் என்கிறார்.

பிளாட்டோ பகுத்தறிவற்ற விலங்கின் மொழி என உணர்த்து வார். அரிஸ்ட்டாடில் கனவைப் பகுத்தறிவு வாய்ந்தவையாகக் கருதுகிறார். வால்ட்டர் உடலியல் தூண்டுதலின் வெளிப்பாடாக மட்டுமல்லாமல், உயிரின் கட்டுக்கடங்கா உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவும் காண்கிறார். காண்ட் கனவுகளுக்கு வயிற்றுக் கோளாறே காரணம் என்கிறார். கதே சிந்தனைக்கு முதலிடம் தருவதாகக் கனவைத் தொடர்புபடுத்துகி றார். இவ்வாறு கனவுகளுக்கான விளக்கத்தை அவரவர் நோக்கில் விதந்து கூறியுள்ளமையால், மனித வாழ்க்கையில் கனவு இன்றியமையாத இடத்தைப் பெற்றிருப்பதை அறியலாம்.

மனித மனங்களை ஆராய்ந்த சிக்மெண்ட் பிராய்ட் கனவுகளின் விளக்கம் என்ற நூலில் கனவு பற்றி ஆராய்ந்து தம் கருத்தைப் புலப்படுத்தியிருப்பதை தி.கு.இரவிச்சந்திரன் எடுத்துக்காட்டியுள்ளார். வாழ்வோடு இணைத்துப் பார்க்கக்கூடிய கனவுகள்''அர்த்தமுள்ளவையாகவும், உட்பொருள் கொண்டதாகவும் விளங்குகின்றன....

பிராய்டின் கனவுக் கோட்பாடும் உளவியல் கோட்பாடும் இணையானவை என்பதோடு கனவுகளைப் புரிந்து கொள்வதன் மூலம் நனவிலியைப் புரிந்துகொள்ளலாம். எனவே கனவுகள் நனவிலிக்கான அரச பாதை என்று வருணித்தார் என்ற கருத்தினை பிராய்டு வழிநின்று எடுத்துக்காட்டுகிறார்.

மேலும் பிராய்டின் கருத்துப்படி ' ஒவ்வொரு கனவுக்கும் பின்னால் ஏதேனும் ஒரு உளக்கூறு அல்லது பல உளக்கூறுகள் தொடர்புபட்டிருக்கும். அந்த உளக்கூறுகளின் உந்தலால்தான் கனவுகள் பிறக்கின்றன. கனவு உருவாக்கத்திற்கான மூலகாரணி இந்த உந்துதலாகத்தான் இருக்கமுடியும் என்பது பிராய்டின் கருத்தாக உள்ளது.

vv

கனவு உருவாக்கத்திற்கு ஆதாரமாக விருப்பங்கள் இருக்கின்றன என்பதை பிராய்ட் வலியுறுத்துவர். நனவிலிக்குள் வரம்பற்ற எண்ணங்கள் இருப்பதால் கனவுகள் தோன்றுவதற்கு வரம்பற்ற விருப்பங்களே மூலகாரணியாகின்றன. இத்தகு விருப்பங்கள்தான் கனவுகளை இயக்குகின்றன.

கனவு தமிழில் துயில், மயக்கம் என்ற பொருளில் வழங்கப்பட்டது கனவு என்பதற்கு தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர், துயில் என்றே பொருள் தந்துள்ளார். 'துயிலில் காண்டலைக் கனவில் காணல்', என்று விளக்குவார். மேலும் 'நனவின்கண் நினைவு மிகுதியாகக் காண்பது' என்றும் சுட்டுவர்.

’கனவலராயினும் காமமெய்ப்படுப்பினும்’ -எனத் தொடங்கும் தொல்காப்பியக் களவியல் நூற்பாவில், காதல் கைம்மிகக் கனவில் அரற்றலும் (தொல். களவு25)என்ற தொடர் காணப்படு கிறது.

உரையாசிரியர் இளம்பூரணர் இத்தொடருக் குத் தரும் விளக்கத்தில், 'காதல் மிகுதியால் தலைவனை எண்ணிக் கனவின்கண் அரற்றுதல்' எனக் குறிப் பிட்டுள்ளார். காதல் மிகுதி காரணமாக, உள்ளத்தின் உந்துணர்வு, கனவை மகிழ்விக்கச் செய்கிறது என்ற உளவியல் சிந்தனை ஏற்புடையதாக இருக்கிறது. மேலே கண்ட தொடர்புக்கு நச்சினார்க்கினியர், 'தலைவியிடத்துக் காதல் கையிகந்து பெருகுங்கால் துயிலா நின்றொழியும் என்று கூறி அரற்றுதல்' என்று விளக்கம் காண்பார். தொல்காப்பியர், மெய்ப்பாட்டியலில், கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் பொய்யாக் கோடல் மெய்யே என்றல் (மெய்.நூற்பா22) -எனக் குறித்துள்ளார்.

கனவொடு மயங்கல் என்பதற்குக் கனவை நனவென மயங்குதல்’ என இளம்பூரணர் இதற்கு விளக்கம் காண்பர். தொல்காப்பியர் அரற்று எனக் குறிப்பிடும் மெய்ப்பாட்டிற்கு (தொல்.மெய்நூற்12)இளம்பூரணர் எழுதியுள்ள விளக்கத்தின்படி,’ கனவுநிலை நனவு போதாமையின் மெய்ப்பாடு ஆயிற்று’ என்பதாகும். இக் கருத்து சிந்தனைக் குரியது.

பேராசிரியர் கனவொடுமயங்கலுக்கு அளித்துள்ள விளக்கம், உளவியல் சிந்தனையோடு நெருங்கிய தொடர்பு உடையது.“தலைவனைக் கண்டு பின்னர் அவன் அண்மையின் மயங்கும் மயக்கம்” என விளக்கம் தருவார் பேராசிரியர். காதல் வயப்பட்டோரின் மெய்ப்பாடு கனவு என்பதைத் தொல்காப்பியர் இவ்வாறு கண்டுள்ளார்.

கனவு, மனத்தின் வெளிப்பாடாகவே சங்க அகப்பாடல்களிலும், திருக்குறளிலும் இடம் பெற்றிருக்கிறது. திருக்குறளில் கனவுநிலை உரைத்தல் என்ற அதிகாரம் நினைந்தவர் புலம்பலுக்குப் பின்வைக்கப்பட்டுள்ளது. இது உளவியல் சார்ந்தது.

எனவே கனவு நனவின் அடித்தளத்தில் தோன்றுகிறது என்பதற்கு ஏற்ப,“காதலில் தனிப்படர்மிகுதி நினைவுக்கு வித்திட முன்கூடிய ஞான்றை இன்பத்தினை நினைந்து தலைமகன் தனிமை எய்தலும், பாசறைக்கண் தலைமகன் தனிமை எய்தலும், நினைந்தவர்க்குப் புலம்பலான நிலையில் கனவுநிலை உரைத்தல் அடுத்து வைக்கப்பட்டுள்ளது என்பர். பரிமேலழகர், “நனவின்கண் கனவுமிகுதியால் காண்டல்”, என்று விளக்கம் தருவர்.

இதுகாறும் உரையாசிரியர் கருத்தை நோக்க நனவின் மிகுதி கனவிற்கு வழிவகுக்கிறது என்பது தெளிவு. உளவியல் அறிஞர் பிராய்டு நனவின் வழியில் கனவு நிகழ்கிறது என்றும் வரவிருக்கும் கனவிற்கும் நெருக்கமான பிணைப்பு உண்டு என்றும் கண்டறிந்துள்ளார். வரம்பற்ற தேவைகளே வேட்கைகளாகின்றன. உளத்தில் எழுகின்ற வேட்கைகள் உணர்ச்சிகளின் ஆக்கங்களே ஆகும். குறிப்பாக, நனவிலி வேட்கைகள் பாலுணர்ச்சி யின் படைப்புகளாகும். அதனால் நனவிலியை வேட்கைகளின் கிடங்கு என பிராய்டு உணர்த்துகிறார்... பெரும்பாலான கனவுகள் வேட்கைத் தீர்வுகளாகின்றன.. கனவுகளை நிறைவேற்றத்திற்கான முயற்சி என்றும் அவர் விளக்குகிறார்.

கனவில், தலைவனைப் பற்றிக் காதல் நிகழ்ச்சிகள் அமைகின்றன.“கனவினால் உண்டாகும் காமம், என்ற தொடரால் வள்ளுவர் கருத்து ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. நனவின் காரணமாகத் தோன்றும் கனவு உண்மை போலத் தோன்றும். அப்படித் தோன்றுவதால் கனவு காமத்தைப் பெருக்குகிறது. நனவில் காணமுடியாத நிலையில், தலைவனைக் கனவில் கண்டு மகிழ்வதாகத் தலைவி எண்ணுவதைக் குறள் காட்டும். கனவிலாவது காதலர் தூது அனுப்பின் ஆறுதல் தருவதாகத் தலைவி கூறுகிறாள் (1211) நனவினால் காணும் இன்பத்தை யெல்லாம் கனவு அள்ளித் தருவதாகக் கூறுகிறாள் (1212). அவளது உயிர், தலைவனைக் கனவிலாவது காணுவதால் நிலைத்திருப்பதாக கருதுகிறாள் (1213)

தலைவியின்நெஞ்சத்தில் காதல் எண்ணம் அரும்ப அரும்ப, கனவே நனவாவதும், கனவு உண்மை போலத் தோன்றுவதும் அவளது காமவயப்பட்ட சிந்தனைகளைக் காட்டுவன. காமம் சார்ந்த கற்பனை உரு கனவால் அமைகிறது என்ற பிராய்டின் சிந்தனையை இதனோடு ஒப்பிட்டுணரலாம். மேற்கண்ட குறட்கனவு கள் பிராய்ட்கூறிய அத்தொடரொடு ஒத்து விளங்குவன.

ஒருவர் காணும் கனவு மீண்டும் தொடரும்; அவ்வாறு தொடர்வதற்கு எண்ண எழுச்சியே காரணமாகிறது. தான் விரும்பியவாறே கனவு காண்பது உண்டு. இத்தகைய கருத்துகளைச் சிந்திக்கிறார் பிராய்ட். நினைவில் தோன்றி அன்பு காட்டாத காதலன், கனவில் வந்து வருத்துகிறான் (1217)என எண்ணுகிற குறள் தலைவி, அவனை எப்போதும் கனவில் காணுவதற்கு விரும்புகிறாள் (1210)நெருக்கமாக உரையாடி மகிழவும், இனிதாய் இருக்கவும் தலைவி கனவைப் பெரிதும் விரும்புகிறாள். எனவே நனவைக் காட்டிலும் கனவே அவளுக்கு சிறப்புடையதாக இருக்கிறது. தான் விரும்பியவண்ணம் காதலனைக் கனவில் கண்டு மகிழலாம் என்ற விழைவே கனவு பற்றிய விருப்பத்தை வளர்க்கிறது. இதனடிப்படையில் குறள் தலைவி நனவினால் உண்டாகும் இன்பத்தை கனவு தருவதாகக் கருதுகி றாள் (1214) கனவிலாவது கூடி மகிழும் காதலர் பிரியமாட்டார் என்று தலைவி எண்ணிக்கொள்வது (1218) நனவி- மனத்தின் வெளிப்பாடே! ஆழ்மனத்தில் உறைந்திருக்கும் நனவே கனவாகிறது. நிறைவேறாத ஆசைகளும் கூட கனவில் வெளிப்பட்டுத் தோன்றும். நனவில் நிறைவேறாதது கனவிலாவது காணமுடிகிறதே என்ற ஆதங்கத்தைக் குறள் தலைவி வெளிப்படுத்துகிறாள்(1213) கனவு நனவி- மனத்தினைத் தூண்டிப் பாலுணர்வை மேலோங்கச் செய்கிறது.

திருக்குறளில், கனவு நிலை உரைத்தல் என்னும் அதிகாரம், காதல் தலைவியின் உள்ளம் விழித்திருப்பதை மிகுதியும் எடுத்துக்காட்டுகிறதோ என்ற எண்ணம் முகிழ்க்கிறது.

காமத்தின் மிகுதிப்பாட்டால் மனம்அழுந்தி வெளிவரும் கனவை வள்ளுவர் காட்டியுள்ளார். கனவுநிலை பற்றிய அதிகாரம் முழுவதும் பிராய்டு கூறுவதுபோல, உள்ளத்தின் விழைவு கனவு ஆகும் என்றாகிறது. நனவில் உறைந்திருக்கும் காமப் பெருக்கின் உச்சநிலை, கனவினைத் தூண்டுவதாகும். எனவே, நனவே கனவிற்கு விதை ஊன்றுகிறது என்பது உறுதியாகிறது. தலைவியின் நனவு மயக்கமும், உள்ளத்தின் விழிப்புமே உளவியல் வழி வள்ளுவர் காட்டுகின்ற கனவின் நிலைகளாகும்.