முட்டாப்பயலை யெல்லாம் தாண்டவக்கோனே- சில
முட்டாப்பயலை யெல்லாம் தாண்டவக்கோனே- காசு
முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே..
கட்டி அழும்போது தாண்டவக்கோனே- பிணத்தைக்
கட்டி அழும்போது தாண்டவக்கோனே- பணப்
பெட்டிமேலே கண்வையடா தாண்டவக்கோனே’’
இந்தப் பாட்டு வரிகள் எழுபதுகளில் எங்கள் ஊரின் நெசவாளத் தோழர்கள் தீபாவளிக்கு முன் பூரிப்பூதியத்தை (போனஸ்) உயர்த்தித்தரக் கோரி நடத்துகிற ஊர்வலத்திற்குப்பின் தேநீர்க் கடைகளில் அமர்ந்துகொண்டு மனம்வெதும்பிப் பாடுகிற வரிகள். இரண்டு பைசா, மூன்று பைசா உயர்வுக்காக மாதக் கணக்கில் வேலைநிறுத்தம் நடைபெறும். ஊர்வலம் போவார்கள். அவர்களின் பாடலுக்குப்பின் எத்தனையோ துயரக் கதைகள் உண்டு. இலங்கை வானொலி யில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்த திரை இசைப் பாடல்களில் இந்தப் பாடல் அடிக்கடி,
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசுமுன் செல்லாதடி- குதம்பாய்
காசுமுன் செல்லாதடி’’
என்று கம்பீரமான இசைச்சித்தரின் குரலில் ஒலிக்கும். 1952-ல் அனல்தெறிக்கும் உரையாடல்களோடு திரைக்கு வந்த "பராசக்தி'யில் ஒலித்த பாடல்.
அரசியல்வாதிகளின் நிலைமைகளை இந்தப் பாட்டு வரிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், செல்வச் சீமாட்டிகளின் முன் வினாக்குறிபோல் வளைந்து நிற்கிற தலைவர்களும், தவழ்ந்து, நெளிந்து, குழைந்து, பணிந்து கிடக்கிற தலைவர்களும் நம் கண்களுக்குக் காட்சி தருவார்கள்.
இப்படி எத்தனையோ சிந்தனைகள் அந்த நாட்டுப்புறக் கவிஞரின் பாட்டு வரிகளுக்குள் தலைநீட்டிக் கொண்டிருந்தன. சீரழிந்து கிடந்த சிந்தனைகள் செம்மைபெற வேண்டும் என்பதற்காகச் சீர்திருத்தக் கருத்துகளைச் செதுக்கிச் செதுக்கித் தந்தவர். அவர்தான் நம் உடுமலை நாராயணகவி. இன்றைய திருப்பூர் மாவட்டம் பூளவாடி என்ற சிற்றூரில் 25-9-1899-ல் கிருஸ்ணசாமி- முத்தம்மாள் தம்பதியினருக்கு இளைய மகனாகப் பிறந்தார். நான்காம் வகுப்போடு ஏட்டுக்கல்வியை மூட்டைகட்டினார். தீப்பெட்டித் தொழில், பருத்தி வணிகம், கதர்க்கடை, நாடக நடிகர் என்று பல நிலைகளைத் தாண்டி 1934-ல் தொடங்கி 1976 வரை நாற்பத்திரண்டு ஆண்டுகள் திரையுலகில் கவிராயராகச் செம்மாந்து நின்று சுமார் 90 திரைப்படங்களில் ஏறக்குறைய 650 பாடல்களை எழுதினார்.
மூன்று நிமிடப் பாடலுக்கு மூவாயிரம் ரூபாய், ஆறு நிமிடப் பாடலுக்கு ஆறாயிரம் ரூபாய் என்று பெருமிதத்தோடு வாழ்ந்தவர். சொர்க்க வாசல் என்ற திரைப்படத்துக்குப் பாடல் எழுதியதற்காக முதன்முதல் ஐம்பதினாயிரம் ரூபாய் பெற்றவர் கவிராயர்தான். 23-5-1981-ஆம் ஆண்டு தன் 82-ஆவது வயதில் மறைந்த கவிராயரின் பாடல்கள் காலங்கடந்தும் இன்றும் காற்றுவெளியில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. தந்தை பெரியார், அண்ணா, கலைவாணர், கலைஞர் ஆகியோரின் சிந்தனைக் கருத்துகளைத் தன் பாடல்களில் பதியனிட்டுக் கொடுத்தவர். இறுதிவரை தன்னை ஒரு நாத்திகன் என்றே முரசறைந்த கவிராயரின் பாடல்களில் தேசியம், காந்தியம், பகுத்தறிவு, பெண்விடுதலை, சமத்துவம், திராவிட ஏற்றம், காதல், இயற்கை, சுயமரியாதைச் சிந்தனைகள் என்று பல ஊற்றுகள் திறந்து வழிகின்றன. கலைவாணரின் கருத்துகளைத் தன் பாடல்களின் வழியே மக்களிடம் பரப்பிய கவிராயர் 1942-ல் அவருக்காக கிந்தனார் கதாகாலட்சேபம் எழுதினார்.
உடுமலையார் 1933-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கல்கத்தா சென்றார். சேலம் ஸ்ரீஏஞ்சல் பிலிம்ஸ் தயாரித்த "ஸ்ரீகிருஷ்ண லீலா' என்ற திரைப்படத்துக்கு வசனமும் பாடலும் எழுதினார். புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. சுமார் 64 பாடல்கள் படத்தில் இடம்பெற்றன. பாபநாசம் சிவனும், கவிராயரும் பங்கிட்டு எழுதினர். 1934-ன் முற்பகுதியில் வெளிவந்த அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது. இதுவே கவிராயரின் திரைத்துறையின் முதல் பாட்டுப் பயணம்... முதல் பாடல் அருந்தவக் குலமணிக் கொழுந்தே-உன்னைப் பிரிந்தே இரேன் மறந்தே!’ என்று தொடங்குகிற ஒரு தர்க்கப்பாடல். இலக்கிய மொழியும், பேச்சு மொழியும் கைகோத்துக் கொண்டு பாட்டில் நடனமாடின.
இளமையில் நாட்டுப்புறக் கலைகளில் நாட்டம் கொண்டிருந்த கவிராயர், அவற்றிலிருந்தும் நாட்டார் பாடல்களில் இருந்தும் சொற்களை எடுத்துக் கொண்டு பின்னாளில் தன் பாடல்களில் கற்பனைகளைப் படரவிட்டார். உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயரிடம் சுமார் பதின்மூன்று ஆண்டுகள் மாணவராயிருந்து இலக்கணம், இசை, பாடல் இயற்றும் முறை போன்றவற்றைக் கற்றுக் கொண்டார். நாடகத்தந்தை சங்கர தாஸ் சுவாமிகளிடம் அவ்வப்போது யாப்பிலக்கணத்தையும், நாடகக் கலை நுட்பங் களையும் அறிந்து கொண்டார். புரட்சிக் கவிஞர் மீது அளவற்ற அன்பு கொண்ட கவிராயர் அவரை அண்ணா என்றுதான் அழைப்பார். வள்ளுவக் கருத்துகளைத் தன் சொல்லுக்குள் வைத்து எழுதிய கவிராயர் வாய்ப்புக் கிட்டிய போதெல்லாம் தன் கொள்கைகளின் கொடியைப் பறக்க விடத் தவறவில்லை.
வாசல் திறந்ததுவே-
சுதந்திர
வாசல் திறந்ததுவே
வாசல் திறந்து மக்கள்
யாவருமே
மன்னராக நல்லவண்ண
மாய்.. நுழையும்
வாசல் திறந்ததுவே’’
என்று பாடிய கவிராயர்தான், நாட்டின் உண்மைநிலை கண்டு தன் கருத்தை உரக்கச் சொன்னார்.
சுதந்திரம் வந்ததுண்ணு சொல்லாதீங்க-சொல்லிச்
சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க நீங்க..
மதம்ஜாதி பேதம்
மனதை விட்டு நீங்கவே-காந்தி
மகான் சொன்ன வார்த்தை போலே
மக்கள் இன்னும் நடக்கலே’’
என்று பாடினார். என்றைக்கோ எழுதிய வரிகள். இன்றைய நிலையையும் சேர்த்து எழுதியிருக்கிறார் போலும். நாட்டு நிலையைக் கூர்ந்து கவனித்த கவிராயர்,
குடிக்கத் தண்ணீர் இல்லாது
பெருங்கூட்டம் தவிக்குது-சிறு
கும்பல் மட்டும் ஆரஞ்சுபழ
ஜுஸ் குடிக்குது.
சோத்துப் பஞ்சம் துணிப் பஞ்சம்
சுத்தமாக நீங்கல்லே
சுதந்திரம் சுகம்தரும் என்றால்
யாரு நம்புவாங்க?’’
என்று கேட்டார். அன்றைய அரசியல் சூழலில் இப்படிப்பட்ட பாடல்கள் அனல் தெறிப்பதாக அமைந்தன. நியாயமான கேள்வி தானே? நம் வரிப் பணத்தில் உலகம் சுற்றி வருகிற தலைவர்களை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். நாளுக்கு ஒரு விளம்பரம், நேரத் துக்கு ஒரு முழக்கம் என்று மக்களை மிரட்டிக் கொண்டிருப்பவர் களையும் பார்க்கிறோம்.
பராசக்தி திரைப் படத்தில் நடிகர்திலகம் முதன் முதலாக வாயசைத்துப் பாடிய பாடல்தான் கா..கா.. கா.. ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க அதில் அன்றைய நிலை எப்படி இருந்தது என்பதை கதாபாத்திரத்தின் வழியே சாப்பாடு இல்லாம தவிக்குதுங்க-ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க-உயிர் காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால் தாப்பாளைப் போடுறாங்க பாருங்க’’ என்கிறார்.
நாட்டின் நிலைகுறித்துத் தன் பாட்டின் மூலம் மக்களின் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தினார்.
இந்தப் பாடலைக் கவிராயர்தான் எழுதினார் என்று மரியாதைக்குரிய ஏ.வி.மெய்யப்ப செட்டியார் உறுதிப்படுத்தியிருக்கிறார். அதுபோலவே மக்கள் திலகம் முதன்முதல் கதாநாயகனாக நடித்த, கலைஞரின் வசனத்தில் மிளிர்ந்த "ராஜகுமாரி'’ (1947) படத்துக்கு 12 பாடல்களையும் கவிராயரே எழுதினார். படம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் கலைஞரின் பெயரோ "உதவி வசனம்' என்றுதான் காட்டப்பட்டது.
அப்படிப்பட்ட காலம் அது.
பக்தி மயக்கம் தெளியாமல் இருந்த காலகட்டத்தில் புராணக் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளிவந்தன. மக்களுக்கு பக்தி ரஸத்தை ஊட்டவேண்டும் என்று நினைத்திருக்கலாம். எனினும் கவிராயரின் பாடல்களில் அங்கங்கே வினாக்கள் வீசப்பட்டன. அப்படித்தான் மோட்சலோகம் பாத்ததற்குச் சாட்சியுமுண்டோ-உங்க மூளையைக் கொளப்பி விட்டே ஆளையும் கொண்டே-கேப்போம்’’ என்று 1947-ல் வெளிவந்த விசுவாமித்திரர் படத்தில் கேட்டார்.
1939-ல் வெளிவந்த திருநீலகண்டர் திரைப்படத்தில் வரும் லாவணிப் பாட்டில் அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்தவிதம் கொழுக்கட்டை தின்னதினால் அண்ணே. அண்ணே..’’
என்றும் 1947-ல் வெளிவந்த கிருஷ்ண பக்தி என்ற படத்தில் சங்கர சங்கர சம்போ-இந்த
சாமியார் விஷயத்தில் ஏனிந்த வம்போ?’’
என்றும்
பிறவியிலே குலபேதமும் ஏது?
பெண்களைக் குறைசொல்வது பெருந்தீது
அறநெறி அதற்கிது அணுவும்தகாது
அரிஹரி என் திருச்செவி கேளாது’’
என்றும் எழுதித் தள்ளினார். கவிராயரின் பாடல்களில் அங்கங்கே சூழலுக்கு ஏற்ப கிண்டலும் கேலியும் கூடி விளையாடின. விரத மகிமைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. சுண்டக் காய்ச்சிய பாலில் முந்திரி, பாதாம், பிஸ்தா என்று இருப்பவர்களைப் பற்றி நாம் அறியாதவை அல்ல.
மானுட நேயத்தை மழுங்கடித்துவிடுகிற
மூடத்தனங்களை எதிர்த்து அவர் முழங்கிய பாடல்கள்
பணந்தேடிச் சேர்த்து
பதுக்கி வைத்துச் சாகாமல்
உணவாக மக்களுக்கு
உதவுவது எக்காலம்?’’
என்று கேட்டன.
கோயிற் சிலைகளைக் காப்பாற்றுவதற்கு
அந்தக் கடவுள்களே வந்து காவல் இருக்கவேண்டும் போலிருக்கிறது. எத்தனை எத்தனையோ மன்னர்கள் ஆலயங்களுக்கு என்ற பெயரில் அள்ளிக் கொடுத்த ஆபரணங்களும் சொத்துகளும் எங்கே போயின?
அப்பாவி பக்தனோ ஆண்டவன் அருள் கிட்டும் என்று அங்குமிங்குமாக அலைந்து திரிகிறான். போதாக்குறைக்குப் புற்றீசல்கள் போல் புறப்பட்டு வருகிற சோதிடக் கூட்டம் பரிகாரங்களை அள்ளி வீசுகிறது.
திருட்டும் புரட்டும் உருட்டும் செய்து
திருப்பணிகள் நடத்தி வைத்து
சீமான் என்றே காட்டிக்கிறவன் ஒசந்துட்டான்.
தில்லுமுல்லும் செய்யாமல்உன்
திருநாமம் சொல்லிச் சொல்லி
ஜீவனம் பண்ணுகிறவன் அசந்துட்டான்’’
என்கிற கவிராயர்
பொங்கல் புளியோதரை வடை லட்டு-சீடை
பூந்தி தோசை அதிரசம் உட்பட்டு
திங்காத உன்பேராலே செஞ்சு படைச்சுப்பிட்டு
தினமும் எவனெவனோ ஏப்பம் போடறான் தின்னுப்புட்டு
உனக்குமில்லே எனக்குமில்லையே- கேட்பதற்கு
ஊருக்குள்ள யாருமில்லையே’’
என்று வேடிக்கையாகப் பாடுகிறார். இது வேடிக்கையான பாடல் மட்டுமா? எத்தனை வேதனை மிக்கது? மூதாதையர்கள் சேர்த்து வைத்த சொத்தை உழைக்காத சோம்பேறிகள் எப்படி ஊதாரித்தனமாக உதறித் தள்ளுகிறார்கள் என்பதை பெரியோர்கள் தேடிய பணத்தால்
திருவாளர் ஆனவர் பலபேர்
பெருமைக்காக சிலவே செய்து
பெரும் சீர்துதி பெறுபவர் சிலபேர்’’
என்கிறார். இதற்காக இப்படிப்பட்டவர்கள் என்ன செய்கிறார்களாம்.? நம்மைப் பார்த்துக் கேட்கிறார் கவிராயர்.
உரிமை போட்டுச் சீட்டை -வாங்கவே
உதறுவார்கள் நோட்டை பின்னாலே
பெரிய பதவி வேட்டை-ஆடியே
பெறுவார் பணமூட்டை-அந்த
மூட்டையோடு கூட்டுச் சேர்ந்து-நம்ம
நாட்டைக் கெடுப்பவர் இங்கே இருப்பதை
உண்டென்பீரோ இல்லை பொய்யென்பீரோ?’’
இதற்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? எத்தனையோ சோதனைகள், எத்தனையோ வழக்குகள்.. என்ன பயன்? இரண்டு நாள்கள் ஊடகங்களில் செய்தி. அவ்வளவுதான். அப்புறம் அடுத்த பரபரப்புச் செய்தி. எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம். வெறுமனே நாடு முன்னேறுகிறது என்று கனவு காண வேண்டியதுதான். கவிராயர் தன் கருத்தை, திரைக்கதைக்கேற்பவும், கதாநாயகர்களுக்கு ஏற்பவும் பாடலாக்கியிருக்கிறார்.
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்.
பள்ளி என்ற நிலங்களிலே
கல்வி தன்னை விதைக்கணும்.
பிள்ளைகளைச் சீர்திருத்திப்
பெரியவர்கள் ஆக்கணும்’’
என்கிறார். இன்றைய நிலையை இப்பாட்டு வரிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நம் உள்ளத்திற்குள் எத்தனையோ காட்சிகள் கதறித் துடிக்கின்றன. கல்விக்கூடங்களில் இன்று எது எதற்கோ பேரம் பேசப்படுகிறது.. பள்ளி என்ற நிலத்தில் எத்தனை களைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன என்பதை நாளும் வருகிற செய்திகள் நடுங்கச் செய்கின்றன. சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் கல்விச்சாலைகளில் இருக்கிறார்கள். அவர்களின் விரல்கள் எந்தத் திசையையோ சுட்டிக்காட்டுகின்றன. நாம் திகைத்து நிற்கிறோம். கள்வர்களின் கைளில் வீட்டுச் சாவியைக் கொடுத்துவிட்டு வெளியேறியவர்கள் போல் கலங்கி நிற்கிறோம்.
கவிராயரின் திரைப்பாடல்களை இன்றைய காலகட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போதுதான் அவற்றின் வீச்சை உணர முடியும்.
தமிழ்நாட்டைச் சந்தைக்கடையாக மட்டுமல்ல சுடுகாடாகவும் மாற்றத்தான் சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால்
மொழி மேலே வழிவைத்தே
முடிமன்னர் ஆண்ட தமிழ்நாடு-வட
மொழியான ஆரியத்தால்
அழியாத கலைவாழும் தமிழ்நாடு’’
என்றும்
வையம் பெறும் மாந்தர் யார்க்கும்
வாழும் நெறி சாற்றும்
பொய்யாமொழி தந்த தெய்வப்
புலவன் வந்த நாடு’’
என்றும் கவிராயர் பாடிய வரிகள் காற்றோடு கலந்து போய்விடுமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. தமிழர்களின் தனிப்பெரும் பண்பாட்டின் மீது தொடர்ந்து வெவ்வேறு வழிகளில் தாக்குதல்களை நடத்துகிறார்கள்.
கவிராயரின் பாடல்களில் இனஉணர்வும், மொழியுணர்வும் இயல்பாக வந்து விளையாடுகின்றன. காதல், தத்துவம், பொதுவுடைமை என்று பல்வேறு தரிசனங்களை நமக்குத் தருகின்றன.
உள்ளே ஒண்ணு வெளியே ஒண்ணு
உலகம் இதுதாங்க
உண்மை பொய்யும் ரெண்டும் கலந்த
உலகம் இதுதாங்க’’
என்று எதார்த்த உலகை எடுத்துச் சொல்கிறபோதும் சரி...
கன்னம் இரண்டும் முகம் பார்க்கும் கண்ணாடி
என்றும்
அமுதே சிந்தும் நிலவே உந்தன்
அருகே தோணும் சொர்க்கம்’’
என்றும்
“வெண்ணிலா குடைபிடிக்க
வெள்ளிமீன் தலையசைக்க
விழிவாசல் வழிவந்து
இதயம் பேசுது’’
என்றும்
அழகைத் தாங்கி வந்த பீடமோ,- மாறன்
அணியும் ரத்ன மணிக்கிரீடமோ?- காதல்
கலையை யோதும் பள்ளிக் கூடமோ?- இன்பக்
கடலில் ஆடவந்த ஓடமோ?
என்றும் காதலின் இன்பக் கதவைத் திறந்து வைக்கும்போதும் சரி கவிராயரின் கற்பனைகள் நாணத்தில் சிவக்கின்றன. பெண்களைக் குறித்த கவிராயரின் பார்வையைக் குறித்துச் சில எதிர்க்கருத்துகள் உண்டு. என்றாலும்
“ஆணும் பெண்ணும் சமரசம்தான்
ஆருயிர் உடல்போலயே எந்நாளும்’’
என்று கவிராயர் பாடியதோடு "ரத்தக்கண்ணீர்' படத்தில் “"பெண்களே! உலகப் பெண்களே!' என்று தொடங்கி
ஒரு பெண்ணுக்கு ஐந்துபேர் நாடுவதும்
ஒருபாவி அறுபதாயிரம் பெண்கள்
உரிமை பறிப்பதும் சரிதானோ?
பெண்ணினத்தைத் தாழ்த்தும் சதியன்றோ
இருளில் உள்ளது பாழும் உலகம்
மகளிர் வேதனை என்று விலகும்?
என்றும் கேட்டதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
உடுமலையாரின் பாட்டுப்பயணம் திராவிட இயக்கத்தோடு இணைந்து நடந்தது. அதனால்தான் அறிஞர் அண்ணா இரவென்றும் பகலென்றும் பாராமல் ஓயாதுழைத்துக் குறைவான கூலியோடு வாழும் திராவிடப் பாட்டாளிகளின் எழுச்சிக்காகப் பகுத்தறிவு முரசு கொட்டும் பாடல்களைத் தீட்டி வருபவர் உடுமலை நாராயண கவி’ என்று எழுதினார்.
திராவிடம் என்றாலே இன்று சிலருக்குத் தீயில் விழுந்தது போலிருக்கிறது. ஆனால் கவிராயருக்கோ அதுதான் சிந்தனையாக இருந்தது. திரைத்துறையில் உடுமலையார் இருந்தபோதும் தனிப்பாடல் ஒன்றில் இளைஞர்களுக்கு!’’ என்ற தலைப்பில் தேசப்படங்கள் சரித்திரங்கள் பார்க்காமல்
சினிமாப் படங்களைப் பார்க்கின்றீர்-அதில்
வேஷம் போடும் ஸ்டார்கள் வீட்டுப்புறம் உள்ள
ரோட்டைச் சர்வே செய்து அளக்கின்றீர்!’’
என்று சுருக்கென்று எழுதினார். ஆட்சிக் கட்டிலின் ஆசை யாரை விட்டது?
என்று உரக்கப் பாடிவிட்டுப் போய்விட்டார்.
திராவிட இயக்கங்கள் போதுமான அளவுக்கு
அவரை கொண்டாட மறந்து விட்டன என்பதுதான் வருத்தத்திற்குரியது.