பொதுவாக பார்க்கக்கூடிய கடைசி அளவுகளை வைத்து பரிசோதித்துப் பார்த்தால், டாக்டர் ஜவஹருக்கு அழகு சற்று குறை வென்று யாருமே கூறுவார்கள். குறிப்பாகலி அந்த மருத்துவமனைக்கு சிகிச்சை தருவதற்காக வரக்கூடிய மற்ற டாக்டர்களுடன் அவரை ஒப்பிட்டுப் பார்த்தால், ஜவஹர் உடலமைப்பிலும் இயல்பிலும் ஒரு காட்டெருமையாக இருந்தார். அவருடைய திட்டுதல்களில் ஏராளமான கெட்ட வார்த்தைகள் இருந்தன. அழகான நர்ஸ்கள் எந்தச் சமயத்திலும் அவரைப் பார்ப்பதோ, பணியில்லாத வகையில் அவருடன் உல்லாசமாக இருப்பதற்கு முயற்சிப் பதோ இல்லை. அழகிய இளம் பெண்களின் இந்த வேறுபாடு அவரை பெண்களை வெறுக்கக்கூடிய ஒரு மனிதராக்கிவிட்டிருந்தது. அதனால் பல நேரங்களில் அவர் வசதி படைத்த விலைமாதுகளைத் தேடிச்சென்று, அவர்களைப் பல ஆழமான ரீதிகளில் அவமானப்படுத்தி திருப்தியடைந்து கொண்டிருந்தார்.
வீட்டில் மனைவிக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் பணம் சம்பாதிக்கக்கூடிய தன்னுடைய திறமையைப் பற்றி மதிப்பு இருக்கிறதென்ற விஷயம் அவருக்குத் தெரியும். வீட்டிற்கு அவர் செல்லும்போது மனைவியும் தம்பியின் மனைவியும் மருமக்களும் வணக்கத் துடன் எழுந்து நிற்பதென்பது பொதுவான விஷயமாக இருந்தது. பணத்தின்மீது கொண்டி ருந்த மதிப்பு மட்டுமே, இரவில் நான்கு மணிக்கு ஒரு உறக்கத்திற்குப்பிறகு அழகான தன்னுடைய மனைவியை, தன் சரீரத்திற்கு மனமில்லா மனதுடனாவது கீழ்ப்படியச் செய்வதற்குத் தூண்டுகிறது என்பதும் அவருக்குத் தெரியும். இப்படிப்பட்ட அறிவும் அது வளர்க்கக்கூடிய கசப்பும் அவருடைய தடித்து உலர்ந்த உதடு களின் ஓரங்களைக் கீழே இறங்கச் செய்தன. சிறுவயதில் உதட்டின் முன்பகுதியை சரி செய்வதற்காகச் செய்த அறுவை சிகிச்சையின் ஒரு அடையாளம் ஒரு வரப்பினைப்போல அந்த மேலுதட்டை இரண்டாகப் பிரித்துவிட்டது. முழுமையாக மூடமுடியாத அந்த வாயின் பற்களை அவர் வெற்றிலை போட்டு கறுப்பாக்கினார்.
ஜவஹருக்கு முப்பது வயது வந்தபோது அவருடைய தந்தை கூறினார்: "ஜவஹர்... இனி நீ இந்த குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள ணும். நான் ஓய்வெடுக்கப் போறேன்.''
புராணத்தில் வரும் இளவரசனைப்போல ஜவஹர் தன் தந்தையின் முதுமையையும் தன்மீது ஏற்றுக்கொண்டார். தலை வழுக்கையானது. அவருடைய சரீரம் தடித்துக்கொண்டு வந்தது. எனினும், அவர் வசதிபடைத்த நோயாளிகளை சிகிச்சை செய்து குணப்படுத்தினார். அவர்கள் பணத்தையும் பரிசுப் பொருட்களையும் அவருக்குத் தந்தார்கள். டாக்டர் ஜவஹர் கோடீஸ்வரரானார்.
முன்னூற்று மூன்றாம் எண் அறையிலிருந்த நோயாளியான பெண் தன்னைக் காதலிப்பதாகக் கூறியபோது, ஒருநிமிட நேரம் அவள் தன்னைக் கிண்டல் பண்ணுவதாக ஜவஹர் நினைத்தார். ஆனால், அவள் அவருடைய கை விரல்களை ஒவ்வொன்றாக எடுத்து முத்தமிட்டாள். அவர் வெட்கத்தால் முகத்தைத் திருப்பிக்கொண்டார். அன்று அவளுடன் சேர்ந்து அவர் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டார். லண்டனில் இருந்த போது தான் அனுபவிக்க நேர்ந்த தனிமையைப் பற்றி அவர் அவளிடம் கூறினார். அவளுக்கு இதயத்தில் புற்றுநோய் இருக்கவேண்டுமென்றும், அறுவை சிகிச்சைக்குப்பிறகு சீக்கிரமே அவள் இறந்துவிடுவாளென்றும் அப்போது அவர் நம்பினார். அதனால் அந்த நட்பின் இறுதி விளைவுகளைப் பற்றி அவர் சிந்தித்துப் பார்க்க வேயில்லை. ஆனால், அவளுக்குப் புற்றுநோய் இல்லை. அவள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிச் சென்றபோது, ஜவஹரின் இதயத்தில் இனிமையான ஒரு நினைவு இடம் பிடித்தது. அவள் கவிதை எழுதக்கூடியவளாக இருந்ததால், பொதுவாக கவிதைகள் எழுதுபவர் களுக்கு இருக்கக்கூடிய பைத்தியக்காரத் தன்மை அவளுக்கு இருந்திருக்கும் என்று அவர் தனக்குள் கூறி, பார்த்துக் கொண்டார். தைரியசாலியான எந்தப் பெண் தன் முகத்திற்கு அழகு இருக்கிற தென்று கூறுவாள்? கறுத்து, தடித்து, வழுக்கைத் தலையைக் கொண்ட தானா அழகன்? அவளு டைய முகத்தை தன் சிந்தனைகளிலிருந்து வேருடன் பிடுங்கியெறிய அவர் ஒரு முயற்சி செய்தார்.
அவளுக்கு சிகிச்சை செய்வதற்காக அவளுடைய வீட்டிற்குச் செல்லும்போது, அவளுடைய கட்டிலுக்கருகில் அமர்ந்திருக்கும்போது, ஜவஹர் தன் கண்களைத் திருப்பிக்கொண்டார்.
"என் கண்களை நீங்க ஏன் பார்ப்பதில்லை?'' அவள் கேட்டாள்.
"ஈர்க்கப்படுறதுக்கு நான் ஆசைப்படுறதில்லை.'' அவர் கூறினார்.
ஒரு சாயங்கால வேளையில் இருண்ட வாசலில் வைத்து அவள் அவரை முத்தமிட் டாள். சூரியகாந்தியைப்போல தன்னை நோக்கித் திரும்பிய அந்த முகத்திலும் அந்த சிவந்த கண்களிலும் அவள் தொடர்ந்து முத்த மிட்டாள்.
"என்னை கஷ்டப்படுத்தாதே''. அவர் முணு முணுத்தார். "என்னையே என்னால கட்டுப் படுத்த முடியாம போயிடும்.''
அன்று மெல்லிய ஒரு சட்டையை மட்டுமே அணிந்திருந்த அவருடைய மார்பில் வளர்ந்து நின்றிருந்த சுருண்ட ரோமங்களை அவள் பார்த்தாள். அன்றிரவு வேளையில் மரத்திற்கு அடியில் இலைகள் விழுந்து கிடப்பதையும், அந்த இலைகளில் தான் படுத்திருப்பதையும் அவள் கனவுகண்டாள். மறுநாள் காலையில் வாசலில் அவர் வீசியெறிந்த ஒரு சிகரெட் துண்டை அவள் பார்த்தாள். அதை எடுத்து முத்தமிடுவதற்கு அவள் விரும்பினாள். ஆனால், இரண்டாவது நிமிடத்தில் நியாயமான பொறாமையுடன் அதை மிதித்து நசுக்குவதற்கு அவள் ஆசைப்பட்டாள். இறுதியில் அதைப் பொறுக்கியெடுத்து அவள் தன் நகைப்பெட்டிக்குள் வைத்துக்கொண்டாள்.
ஒருநாள் அவர் கூறினார்: "நீ ஒரு இதய நோயாளி. நான் உன் டாக்டர்... அதை நீ மறந்துடாதே. நான் சாதாரண ஒரு மனிதன்.... என்னை சோதிக்காதே.'' அவருடைய தடிமனான கை விரல்கள் அவளுடைய நிர்வாணமான மார்பகத்தையும் அடிவயிறையும் இயந்திரத்தனமாகத் தடவிக் கொண்டிருந்தன.
படுக்கையறையிலிருந்து வெளியே வந்தபோது, அவளுடைய கணவன் கேட்டான்:
"டாக்டர்... அவளுக்கு... குறிப்பிட்டுச் சொல்ற மாதிரி நோய் எதுவும் இல்லையே?''
ஜவஹர் தலையை ஆட்டினார்.
"ஒண்ணுமில்ல.'' அவர் கூறினார்.
இன்னொரு நாள் அவர் அவளிடம் கூறினார்: "இல்லை... நான் எந்தச் சமயத்திலும் உன் காதலனா இருக்கமாட்டேன். நம்முடைய உறவு... டாக்டருக்கும் நோயாளிக்குமிடையே இருக்கக் கூடிய உறவு மட்டுமே... அதை விரிவுபடுத்துறதுக்கு எனக்கு உரிமை இல்லை.''
அவள் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
ஏதன் தோட்டத்தில் வைத்து ஏவாள் இவ்வாறு அழுதிருக்கலாம்லி தன்னைப் படைத்த கடவுளைக் காதலிக்க முயற்சித்து, தோல்வியைச் சந்திக்க நேர்ந்தபோது...
வேகமாக ஜவஹர் எழுந்து அந்த அறையை விட்டுச் சென்றார்.
"நீங்க இனிமேல் இங்க வரமாட்டீங்களா?'' அவள் கேட்டாள். வாசலில் இருந்தபோது, அவர் அவளுடைய கேள்வியைக் கேட்டார். ஆனால், அவரைத் திரும்ப கொண்டுவருவதற்கு அந்த கேள்விக்கு பலமில்லை.
பிறகு... எந்தச் சமயத்திலும் அவரைப் பார்க்காமல் இருப்பதற்கு அவள் முயற்சித்தாள். தன் தாயும் தந்தையும் வசிக்கக்கூடிய நகரத்தில் இரண்டு மாதகாலம் அவள் வாழ்ந்தாள். ஆனால், திரும்பி வந்தபோது, அவளுக்கு மீண்டும் சோர்வும் மூச்சடைப்பும் உண்டாயின. அவளுடைய கணவன் ஜவஹரை வரவழைத் தான்.
அவர் மெலிந்தும், களைத்தும் காணப்பட்டார். அவளைச் சோதித்துப் பார்ப்பதற்கு மத்தியில் அவர் இடையில் அவ்வப்போது இருமிக் கொண்டிருந்தார். ஒருமுறைகூட அவர் அவளு டைய முகத்தைப் பார்க்கவில்லை.
"ஏன் இந்த அளவுக்கு மெலிஞ்சிட்டீங்க?'' அவள் கேட்டாள். அவர் பதில் கூறவில்லை.
மூச்சு அடைப்பதைப்போல, அவள் சிரமப் பட்டுக் கொண்டிருந்தாள்.
"ஜவஹர்... என்மேல உங்களுக்கு கோபமா?'' அவள் கேட்டாள்.
அவர் திடீரென்று தன் ஸ்டெதாஸ்கோப்பை நகர்த்தி வைத்துவிட்டு, அவளுடைய கரங்களில் தளர்ந்து விழுந்தார்.
"என்னைவிட்டுபோயிடாதே... எந்தச் சமயத்திலும் என்னைவிட்டுப் போயிடாதே.'' அவர் கூறினார்.