தொன்மைமிகு தென்மொழியான தமிழில் மட்டுமல்ல: ஆங்கிலத்திலும் வடமொழியிலும் இந்தியிலும் வல்லுனனாகி, நாட்டின் விடுதலைக்காகப் பத்திரிகை ஆசிரியனாகி, பதிப்பாசிரியனாகி, நூல் வெளியீட்டாளனாகி, மொழிக்காக, நாட்டிற்காக அருந்தொண்டு ஆற்றினார் பாரதி. பாரதியின் எண்ணம், சொல், செயல் ஆகிய அனைத்தும் மனிதநேயத்தை வெளிப்படுத்துவனவாகவே அமைந்திருக்கின்றன. மகாகவி பாரதியின் மனிதநேயச் சிந்தனைகள் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மனிதநேயம் - பொருள் விளக்கம் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது அக்கறை காட்டவேண்டும். எனக்கென்ன வந்தது என்று இருந்துவிடாமல் நம்மால் இயன்ற உதவிகளை முடிந்த அளவிற்கு செய்தல் சமூகதிற்கு நலம்பயக்கும்.
மனிதநேயம் என்பதற்கு “சமூக ரீதியில் சகமனிதன் மீது கொள்ளும் அன்பு, மதிப்பு போன்றவை (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.1091) என்று கிரியா குறிப்பிடுகிறது.
நேயம் என்பதற்கு அன்பு என்று பொருள் தருகிறது தமிழ்மொழி அகராதி(ப.916).
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு முடிந்த வரையில் உதவி செய்து வாழ்வதுமட்டுமே மனிதநேயமாகும்.
பாரதியின் படைப்புகளில்..
சங்ககாலந்தொட்டு இன்றும் தமிழ் இலக்கியவாதிகள் மனிதநேயத்தைப் பற்றிக் கூறிவந்துள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி பாரதி, தமக்கு முன்னர் வாழ்ந்த இலக்கியவாதி களின் மனிதநேயத் தின் முழுமையான பரிணாம வளர்ச்சி யாகவே வாழ்ந்து காட்டியுள்ளார் எனலாம்.
பாரதியின் தேசபக்திப் பாடல்கள், தன் வரலாற்றுப் பாடல்கள், பொதுமைப் பாடல்கள் முதலானவற்றில் மனிதநேயச் சிந்தனைகளை பெரிதும் போற்றமுடிகிறது. சங்க இலக்கியம் முதல் இன்றுள்ள இலக்கியம் வரை பெரும்பாலான இலக்கியங்களின் மையப் புள்ளியாக மனிதநேயமே அமைந்திருக்கிறது.
பாரதியின் பெருங்கருணை
இந்த உலகத்தில் ஒருவரும் உணவில்லாமல் பிச்சை எடுக்கக்கூடாது. பிச்சை எடுக்க நேர்ந்தால் கடவுளே நாசமாகட்டும் என்கிறார் திருவள்ளுவர். இதே கோபம் பாரதிக்கும் வருகிறது.
“தனியொருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்பதே அந்தக் கோபம்.
மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? என்ற இவ்வெண்ணம் பாரதியின் பெருங்கருணையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. ஒருவேளை உணவுக்கும் வழியின்றி தெருப்புழுவைப்போல் மனிதன் தூக்கி எறியப்படுவதைக் கண்டு மனம் குமுறுகிறார்.
“பகுத்தறிவுள்ள மனிதனின் மனத்தில் எல்லா உயிர்களை நோக்கியும் பொங்கி எழும் அன்பின் ஊற்றே மனிதநேயமாகும். நேயம் என்பது வெற்று இரக்கத்தோடு முடிந்துவிட்டால் அது முனை மழுங்கிப்போய் விடுகிறது. ஒரு நாய்கூட தான் ஈன்ற குட்டியை எவரேனும் தொட முயன்றால் சீறிப் பாய்கிறது. மனிதநேயம் என்பதும் அன்பின் புலம்பலோடு நின்றுவிடாமல் போர்க்குணத்தோடு பொங்கியெழ வேண்டும்.(பாரதியார் கவிதைகளில் மனிதநேயம்,பக்.22-23).மனிதநேயத்தை மனதில் வைத்தே இத்தகைய போர்க்குணம் பாரதியிடமிருந்து வெளிப்படுகிறது எனலாம். பாரதியின் மனிதநேயப் பின்னணி எத்தகையது என்பதை பின்வரும் பகுதியிலிருந்து முழுமையாக உணர்ந்து கொள்ளலாம்.
பாரதியின் மனிதநேயப் பின்னணி
சிற்றிலக்கியங்கள் சிறுசிறு மன்னர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டன. நாட்டைப் பற்றியும், மக்களின் இயல்பைப் பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் அவை விளக்கின. சிற்றிலக்கியக் காலம் முடிந்த பிறகு இலக்கியத்தின் புதிய அறிவுக்கண்கள் திறந்தன. வீடு,ஊர் , நாடு என்னும் எல்லைகளைத் தாண்டி உலகளாவிய பரப்புக்கு இலக்கியவாதியின் விழிகள் உயர்ந்தன. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்பவற்றிலிருந்து விலகி, அந்நிய நாடுகளைத் தம் விழிகளால் அளக்கும் நிலைக்கு இலக்கிய வாதிகள் வந்தனர். அந்நியராட்சியில் ஏற்பட்ட போக்குவரத்து, தொலைதொடர்புச் சாதன வாய்ப்புகளால் உலகம் சிறுத்துப் போனது.
குதிரையில் ஏறி மன்னர்கள் போராடிய வீரத்தைப் பாடிய நிலை மாறி விண்ணில் செலுத்தப்படும் அணுகுண்டு ஏவுகணையைப் பாடவேண்டிய நிலை வந்தது.
இத்தகைய சூழலில் தான் பாரதி கவிதை பாட வந்தார். ஒரு படைப் பாளியின் எழுத்துக்கள் முன்கூட்டியே திட்ட மிட்டு உருவாக்கப் படுவதில்லை. தன்னைச் சுற்றிலும் உள்ள உலகத்தின் ஒவ்வோர் அசைவும் அவனைப் பாதிக்கின்றன. அந்தப் பாதிப்பின் சின்னங் களாகவே அவன் படைப்புகள் காட்சியளிக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இங்கு நிலவிய சமுதாய, அரசியல், பொருளாதார நிலைகள் வேறு. அந்நியர் வரவுக்குப் பின் அரசியல்நிலை பாதிப்படைந்தது. பொருளாதார நிலை சீர்கெட்டுப் போனது. சமுதாய அளவில் மட்டும் சில பிற்போக்குத் தனங்களை அந்நியர் அகற்றினர். விதவைகள் உடன்கட்டை ஏறுவதைத் தடுத்து அவர்களுக்கு உரிமைகள் வழங்கினர். இவ்வாறு பல்வேறு துறைகளிலும் அவர்கள் உண்டாக்கிய மாற்றங்களை அன்றைய படைப்பாளிகள் நோக்கினர். மனித மேன்மைக்காக எழுதுவோனே சிறந்தவனாகி றான். வெள்ளையர் காட்டிய நெறிகளில் இந்திய மேன்மைக்கு எவை பயன்படுமோ அவற்றையெல்லாம் பாரதி போன்ற கவிஞர்கள் பாடத்தயங்கவில்லை(பாரதியும் மனிதநேயமும் பக்.28-29) .
காணிநிலம் வேண்டும் யாருக்கு?
தனக்குக் காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியிடம் பாரதியார் விண்ணப்பிக்கிறார்.
காணிநிலம், அதில் அழகான மாளிகை, நல்ல கேணி, அங்குச் சில தென்னை மரங்கள், குயிலோசை ஆகியவற்றைப் வேண்டும் பாரதி, பாடலின் கடைசி அடியில் தம் மனிதநேய உணர்வை, “ பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தை பாலித் திட வேணும்” என்று வெளிப்படுத்திவிடுகிறார். தன்னுடைய நன்மைகளுக்காகவே இறைவனிடம் வேண்ட ஆரம்பித்து உலகில் இருப்பவர்களுக்கும் நன்மையைச் சேர்த்தே வேண்டுகிறார். இதிலிருந்து பாரதியின் பக்திசார்ந்த மனிதநேயம் வெளிப்படுகிறது.
தேசபக்தி பாடல்களில்...
சொந்த நாட்டிலேயே அடிமைகளாக வாழ்ந்து வந்த சமயம் உரிமை களை இழந்து பொறி யற்று இருந்தோம். எல்லா வளமும் நலமும் கொட்டிக்கிடந்த போதிலும் தேசத்தில் சுதந்திரக் காற்று இல்லை. வாடி தளர்ந்துபோன நிலையில் வக்கற்று இருந்தோம். இந்நிலையில் பாரதி தேச நன்மைகளுக்காக சொல், எழுத்து, செயல் ஆகிய வடிவங்களில் மனிதநேயத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவை இரக்கமாகவும், உருக்கமாகவும், ஆதங்கமாகவும், ஏக்கமாகவும், கண்டிப்பாகவும், சபிப்பாகவும், எதிர்ப்பாகவும் சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போன்று வெளிப்படுகின்றன. சொந்த சகோதரர்கள் துன்பத்தில் இறப்பதைக் கண்டும் இரக்கம் கொள்ளாதோரை பாரதி கண்டிக்கவே செய்கிறார். அரசியல் போலிகளை இனம் கண்டு அவர்தம் குற்றங்களை அம்பலப்படுத்தவும் செய்கிறார். பாதகம் செய்வோரை மிதிக்க அறிவுரை தரவும் செய்கிறார்.தேசத்தின் நல்வாழ்வுக்குத் தடைகளாக உள்ள அனைத்தை யும் பாரதி எதிர்த்தார். அவருடைய கவிதைகள் உலகளாவியன. “அவர் மானுடத்தை முழுமையாக நோக்குபவர். வடக்கையும், தெற்கையும், கிழக்கை யும், மேற்கையும், பிராமணர்களையும், தாழ்த்தப் பட்டவர்களையும், கற்றவரையும், கல்லாதவரையும் அவருடைய முழுமையான மானுடப் பார்வை விருப்பார்வமுடன் தழுவுவது. புகழார்ந்த நாகரிகத்தைப் பாரம்பரியமாகப் பெற்றுள்ள தமிழ் மக்கள் உலகத்தை பாரதியார் கண்கள் கொண்டு காண்பாராக. குறுகிய உட்கரு மனப்பான்மையில் இருந்தும் அற்ப சமூக சம்பிரதாயங்களிலிருந்தும் விடுபட்டு நடப்பாராக “ என்று பெ.சு .மணி கூறுகிறார் ( பாரதியார் கவிதைகளில் மனிதநேயம், ப.35.).
“முப்பதுகோடியும் வாழ்வோம் வீழில் முப்பதுகோடி முழுமையும் வீழ்வோம்” என்பது மனிதநேயத்தின் பாற்பட்டது. அடிமைத்தளையிலிருந்து தேசம் விடுதலை அடைய வேண்டும். அப்படி விடுதலை அடைந்ததும் வெள்ளிப் பனிமலையின் மீது உலவி, கடலில் கப்பல் விட்டு, பள்ளித்தலமனைத்தும் கோயில்கட்டி வாழ முயலலாம் என்று ஏங்குகிறார்.
பெண்முன்னேற்றத்தில்..
மண்வளத்துடன் நாடு வளரவேண்டுமெனில் பெண்நலம் பாதுகாக்கப் படவேண்டியது அவசியமானது. இதனை அறிந்திருந்த பாரதி, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்கிறார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிக்கப்படவேண்டும். புதுமைப் பெண்கள் உருவாக வேண்டும். அனைத்துத் துறைகளிலும் செம்மை மாதர் செழித்தோங்க வேண்டும் என்கிறார்.
முடிவுரை
வானமும் வையமும் நலம் பெற்று வாழவேண்டும். சாதி வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்பது பாரதியின் வெறித்தனமான மனிதநேயம். “உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்”, “சாதி இரண்டொழிய வேறில்லை”, “காக்கைக் குருவி எங்கள் சாதி”, “உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா” இவை போன்ற இன்னும் உள்ள அவரது பாடல்கள் முழுமையும் பாரதியின் மனிதநேயத்தைப் பறைசாற்றுகிறது எனலாம். மொத்தத்தில் பாரதியின் உடல், பொருள், ஆவி அனைத்துமே மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறது என்பது துணிபு.
துணை நின்ற நூல்கள்: கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, பாரதியார் கவிதைகள், ப,
பாரதியார் கவிதைகளில் மனிதநேயம், வர்த்த மானன் பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு, ஏப்ரல் 2010.