"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு'
என மரணத்தைச் சாதாரண உறக்கம் போன்றது என்று வள்ளுவர் எளிதாகச் சொன்னாலும், சிலரின் மரணத்தை வெறும் உறக்க மாக நம்மால் எண்ண முடியவில்லை. மரணம் கொடூரமானது. நிரந்தர வலியைத் தருவது என்பதை நாம் ஒவ்வொரு மரணத்திலும் உணர்கிறோம். அந்த வகையில் இப்போது நாம் இரட்டை வலியை அனுபவித்துக்கொண்டி ருக்கிறோம்..
ஒரே நேரத்தில் இரண்டு இலக்கிய ஆளுமைகளைக் காலம் களவாடிச் சென்றதால் ஏற்பட்ட இரட்டை வலி.
ஒருவர், தமிழ் வாசகர்களின் இதயத்தைத் தன் கவிதை கசியும் சிறுகதைகளாலும் புதினங்களாலும் கொள்ளையடித்த எழுத்தாளர் பிரபஞ்சன்.
இன்னொருவர், தமிழ் இலக் கியத்தின் உயரத்தையும் அறிவுத் தளத்தையும் உயர்த்திய ஆய்வறிஞர் க.ப. அறவாணர். இந்த இரண்டு தீபங் களும் ஒரு சேர அணைந்ததால் தமிழர்களின் நெஞ்சம் இருண்டு போயிருக்கிறது.
பிரபஞ்சன், நம் அன்பிற்குரியவர். இறவா எழுத்துக்குச் சொந்தக்காரர். மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா, காகித மனிதர்கள், பெண்மை வெல்லும் என்பது போன்ற அவரது புதினங்கள், இலக்கிய உலகால் கொண்டாடப்படுகின்றன. ’அவரது வானம் வசப்படும்’ புதினம், அவருக்கு சாகித்ய அகடமி விருதைப் பெற்றுத் தந்தது. எண்ணற்ற விருதுகளையும் பெருமையையும் எழுத்தால் பெற்றவர் அவர். பிரபஞ்சனின் படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் என பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப்படித் தன் தொடர் சாதனைகளால், தான் பிறந்த புதுவை மண்ணுக் குப் பெருமை தேடித்தந்தவர் பிரபஞ்சன்.
இதையெல்லாம் உணர்ந்த மரியாதைக்குரிய புதுவை முதல்வர் நாராயணசாமி, பிரபஞ்சன் இருக் கும்போதே அவரைக் கொண்டாட எண்ணினார். அவருக்கு அரசு சார்பில் 10 லட்ச ரூபாயை கடந்த மே 2-ந் தேதி, ஒரு மிகப்பெரிய விழாவை நடத்தி, பிரபஞ்சனிடம் வழங்கினார். அதோடு, பிரபஞ்சனின் பிறந்தநாளான ஏப்ரல் 27-ஆம் தேதி அவர் வீட்டிற்கே சென்று அவரை நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தார்.
பிரபஞ்சன் மறைந்ததை அறிந்து மனம் வருந்திய அவர், பிரபஞ்சனை அரசு மரியாதையோடு தகனம் செய்ய ஆணையும் பிறப்பித்திருக்கிறார்.
பாரதிக்குக்கூட இப்படி ஒரு அரசு மரியாதை அவன் வாழ்ந்த காலத்தில் கிடைக்கவில்லை. புதுவையில் பிறந்த புரட்சிக் கவிஞருக்குக்கூட, அன்றைய ஆட்சி யாளர்கள் இப்படியொரு அரசு மரியாதை கொடுக்கவில்லை.
புதுவையில் முதன்முதலில் அரசு மரியாதையோடு வழியனுப்பி வைக்கப்பட்ட இலக்கியவாதி என்ற பெருமை, நம் பிரபஞ்சனுக்குக் கிடைத்திருக்கிறது. அதற்குக் காரணம், இலக்கியத்தையும் இலக்கியவாதியையும் மதிக்கத் தெரிந்த முதல்வராக நாராயணசாமி அங்கே இருப்பதால்தான்.
ஏற்கெனவே, புதுவையில் பிறந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்று, நக்கீரன் சார்பில் முன்னெடுக் கப்பட்ட கோரிக்கையையும் பெரு மனதோடு ஏற்றுக்கொண்டு அதற்கான அறிவிப்பையும் சட்ட சபையில் அறிவித்தவர் நாராயணசாமி.
நேர்மை, தெளிவு, உறுதி என நடைபோடும் புதுவை முதல்வர், பிரபஞ்சனுக்கு அரசு மரியாதை தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டபோது, உடனடியாக அதை ஏற்றுக்கொண்டு, அதற்கான அரசாணையைப் பிறப்பிக்கச் செய்திருக்கிறார். இதற்காகவே தமிழ் மக்கள் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
பிரபஞ்சன், என்மீது பேரன்பு கொண்டவர். நக்கீரன் குழுமத்தின் ஆஸ்தான எழுத்தாளராகவே ஒரு காலத்தில் திகழ்ந்தவர். நக்கீரனில் "வந்தனா அலமேலு' என்ற புனைபெயரில் அவர் எழுதிய பசி, பெண்’ ஆகிய தொடர்கள், வாசகர் கள் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்றன. அது பெண் வாசகர்களையும் இளைஞர் களையும் பெருமளவில் வசீகரித்தது.
அதோடு, ’பிரபஞ்சன் பக்கம், கழுதைக்கு அஞ்சுகால்’ உள்ளிட்ட அரசியல் விமர்சனத் தொடர் களையும் சுடச்சுட எழுதி, நக்கீரன் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றார்.
நக்கீரன் குழுமத்தில் இருந்து அப்போது வெளிவந்த ’சிறுகதைக் கதிரிலும்’ பெரும் பங்களிப்பைச் செலுத்தியவர் அவர்.
நக்கீரன்மீது மிகுந்த அக்கறைகொண்டவர் பிரபஞ்சன். அதே போல் நக்கீரனும் அவர்மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தது. அவருக்கு இயன்றதை எல்லாம் செய்துகொடுத்தது. நக்கீரனைப் போலவே பல்வேறு இதழ்களும், இலக்கிய இதயங்களும் அவரை வாரி எடுத்து அரவணைத்தன. எனினும், வாழ்வை அணுவணுவாய் ரசித்த அவரை, அவர் ரசித்த சில வேண்டாத பழக்கங்கள் வீழ்த்தத் தொடங்கின.
தொடர்ச்சியாகப் புகை பிடிக்கும் பழக்கமுடைய பிரபஞ்சனை, கடந்த ஆண்டு நுரையீரல் புற்று தாக்கியது. அவரை அவரது நண்பரும் ஊடக வியலாளருமான பி.என்.எஸ். பாண்டியன்தான் அருகில் இருந்து அக்கறையோடு கவனித்து வந்தார். நோயின் தீவிரத்தால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் பிரபஞ்சன். அங்கு டாக்டர் யுவராஜும் டாக்டர் தாமோதரக் குமாரும் தீவிரமாகக் கண்காணித்து சிகிச்சை கொடுத்தனர். இதனால் தீபாவளி சமயத்தில் வீட்டிற்கு வந்து, மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார். கஜா புயல் வந்த நேரத்தில் அவர் மீண்டும் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார். அங்கும் பாண்டியன், பிரபஞ்சனின் நிழலாக இருந்து, அவருக்குத் துணை நின் றார். இறப்பதற்கு முதல்நாள், "எனக்கு ஒண்ணும் இல்லை. அடுத்தகட்ட வேலையை நான் பார்க்கவேண்டும். புறப்படவேண்டிய நேரம். என்னை நல்லபடியாகக் கவனித்துக் கொண்ட டாக்டர்களுக்கு தனியாக ஐந்து ஆயிரம் ரூபாயைக் கொடுங்கள்'’ என்று தன் நண்பர்களிடம் நெகிழ்ச்சி யாய்ச் சொல்லிலியிருக்கிறார் பிரபஞ்சன். அதுதான் அவரது கடைசி உரையாடல் என்கிறார்கள்.
தீவிர சிகிச்சை அளித்தும், பலனில்லாமல் 21-ஆம் தேதி பிரபஞ்சத்தோடு பிரபஞ்சமாகக் கலந்துவிட்டார் பிரபஞ்சன். லட்சக் கணக்கில் ஆன அவரது மருத்துவத் துக்கான பில்லைக் காட்டி, "இதில் ஏதேனும் டிஸ்கவுண்ட் செய்யமுடியுமா?' என மனக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் தனசேகரனிடம் பாண்டியன் கேட்டபோது, பில்லை வாங்கி, அதில் 100% டிஸ்கவுண்ட் என்று எழுதிக்கொடுத்து திகைக்க வைத்தி ருக்கிறார் டாக்டர் தனசேகரன்.
பிரபஞ்சனை அரசு மரியாதை யோடு தகனம் செய்யவேண்டும் என காங்கிரஸ் புதுவை எம்.எல்.ஏ.க் களான தி.மு.க. சிவா, காங்கிரஸ் லஷ்மிநாராயணன் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களும் தேசிய மீனவர் சம்மேளன இளங்கோவன், ’மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சுகுமாரன், பி.என்.எஸ். பாண்டியன் போன்றவர்களும் வைத்த கோரிக்கை புதுவை அரசால் உடனடியாக ஏற்கப்பட்டிருக்கிறது.
பிரபஞ்சனின் மரணச் செய்தி, இலக்கிய உலகையே புதுவையில் கண்ணீரோடு கூடவைத்தது. முன்னணி எழுத்தாளர்கள், கவிஞர் கள், படைப்பாளர்கள், அரசியல் வாதிகள் என அனைவரும் அங்கே குவிந்தனர். நானும் சென்று பிரபஞ்ச னுக்கு அஞ்சலிலி செய்தேன். அந்த இறுதி ஊர்வலம் இலக்கிய ஊர்வலமாகவே இருந்தது. சன்னியாசித் தோப்பு மயானத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு பிரபஞ்ச னின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது.
இதேபோலத்தான் தமிழறிஞர் க.ப. அறவாணன் அவர்களின் மறைவும், தமிழுக்கும் தமிழருக்கும் பேரிழப் பான மரணமாக அமைந்துவிட்டது.
அய்யா அறவாணர், தலைநிமிர் தமிழராக உலகமெங்கும் உலா வந்தவர். தமிழின் பெருமையை உலகிற்கும் தமிழரின் பெருமையைத் தமிழருக்கும் சொல்ல, தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.
1941 ஆகஸ்ட் 9-ல், திருவாரூர் மாவட்டம் கடலங்குடியில் பிறந்த அவருக்கு பெற்றோர் இட்டபெயர் கிருஷ்ணமூர்த்தி. பின்னர் அவரது தாத்தாவின் பெயரான அருணாச்ச லம் என்ற பெயரை அவரது குடும்பம் அவருக்குச் சூட்டியது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அவர் காலெடுத்து வைத்தபோதும் அவர் அருணாச்சலமாகத்தான் இருந்தார். தனித்தமிழ் மீது ஆர்வம் கொண்டு, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "தென்மொழி'யில், எழுதத் தொடங் கியபோதுதான் அவர் அறவாண னாக, அழகிய பெயரை சூட்டிக் கொண்டார்.
இவரது இலக்கிய ஆற்றலைக் கண்ட முரசொலி மாறன், இவரைப் பற்றிக் கலைஞரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, கலைஞரின் கவனம் அவர் பக்கம் திரும்பியது.
அவரின் நேர்மையையும் தமிழ் நெறியையும் உணர்ந்த கலைஞர், அறவாணர் மீது பேரன்பு கொண்டார்.
அதனால் அவர் எதிர்பார்க்காத நிலையில், அவரை மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தராக அமர்த்தினார் கலைஞர்.
இன்று இதுபோன்ற பதவிகளைக் குறிவைத்து கல்வியாளர்களும் பேராசிரியர்களும் பணமூட்டை யோடு துரத்திக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அய்யாவின் நிலை அப்படி இல்லை. அவரைத் தேடி பதவியே ஓடிவந்தது. காரணம், தகுதிகொண்ட முதல்வராகக் கலைஞர் இருந்ததால் தகுதியான அறவாணர் துணைவேந்தரானார்.
இப்படித் தகுதியின் காரண மாகத் துணைவேந்தராக அமர வைக்கப்பட்ட அறவாணர், சும்மா இருக்கவில்லை. சிறைக் கைதிகள் மனம் திருந்திப் பண்பட, அவர் களுக்குக் கல்வி வழங்கவேண்டும் என்று நினைத்து ஒரு திட்டத்தை வகுத்து கலைஞர் கவனத்துக்குக் கொண்டுபோனார். அந்தத் திட்டத்தைப் பார்த்த கலைஞர் மனம் மகிழ்ந்துபோய் உடனடியாக அதை அமல்படுத்தினார். சிறைத் தண்டனை பெற்ற ஒரு நிரபராதிப் பேராசிரியரையே இத்திட்டத்தில் ஈடுபடுத்தினார் அறவாணர். அன்று அறவாணர் கலைஞர் மூலம் கொண்டுவந்த திட்டம்தான், இன்று ஆயிரக்கணக்கான சிறைவாசிகளை பட்டதாரிகளாக்கி இருக்கிறது. இன்று சிறைச் சாலைகளில் கல்வி வாசனை வீசுவதற்கும், கைதிகள் பண்பட்டவர்களாய் வெளியே வருவதற்கும் காரணமானவர் நம் அறவாணர்.
அதேபோல் சமூகவியல் கல்லூரி களை உருவாக்கி, வாழ்வில் பல வகையிலும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு கல்வி எனும் சிறகு கொடுத்த பெருமையும் அறவாணரையே சாரும்.
அவர் பணிக்காலத்தில் விடுப்பே எடுக்காதவர். தன் மகனது திருமணத்தைக்கூட தன் பணிக்கு இடையூறு இல்லாத வகையில் அதிகாலையிலேயே நடத்திவிட்டு, உடனே பணிக்குச் சென்ற மாமேதை. பல்கலைக்கழக வாகனத் தைச் சொந்தப் பணிகளுக்குப் பயன்படுத்தாத நேர்மை யாளர், தன் மகள் திருமணத் திற்கு வரும் தன்னுடன் பணியாற்றும் நண்பர்களை "பல்கலைக்கழக வாகனத் தில் வராதீர்கள்' என்று எச்சரித்திருக்கிறார்.
கடலங்குடி என்ற குக்கிராமத்தில், ஒரு தேநீர்க் கடைக்காரரின் மகனாகப் பிறந்த அறவாணர், தனது விடாமுயற்சியாலும், ஓயாத உழைப்பாலும், தீராத தமிழ் வேட்கையாலும்' கூர்மையான ஆய்வறிவாலும் 22 நாடுகளுக்குப் பலமுறை பறந்து சென்று, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, 114 அரிய நூல்களை தமிழ்ச் சமூகத் திற்குக் கொடையாய்க் கொடுத்தி ருக்கிறார். தென்னாப்பிரிக்க நாடான செனடாலிலில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்து, திராவிட ஆப்பிரிக்க பண்பாட்டுக் கூறுகளுக்கிடை யிலான ஒற்றுமையையும் தொன்மையையும் தன் ஆய்வுகளில் நிறுவியிருக்கிறார் அறவாணர். அவரது இணையரான தாயம்மாள் அறவாணரும் சிறந்த ஆய்வறிஞர் ஆவார். இவரும்’அவ்வையார்- அன்று முதல் இன்றுவரை, திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு என்பது உள்ளிட்ட நூல்களை எழுதியதோடு, தனது கணவரின் ஆய்வுகளுக்கு உறுதுணை புரிந்துவந்தார்.
இலக்கியத் தளத்தில் நின்று தமிழரின் வரலாற்றையும் பண் பாட்டையும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்த நிலையில்தான், அறவாணரைக் காலக் கழுகு கொத்திக்கொண்டு போயிருக்கிறது.
நீரிழிவு நோயால் கால் விரல் கள் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை எடுத்து வந்த அவர், மாரடைப்பு காரணமாக மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 23-ஆம் தேதி மரணத்தைத் தழுவியிருக்கிறார்.
’போரியல் களஞ்சியம்’ எனும் பெரும் ஆய்வு நூலை எழுதிக் கொண்டிருந்தார் அவர். உலக நாடு களில் போர்க் கலைகள் எப்படி இருக்கிறது? அவர்களில் இருந்து தமிழர்களின் போர்க்கலை எவ்வகையில் உயர்ந்து நின்றது? போரிலும் பண்பாடு காத்த இனமாகத் தமிழினம் எவ்வாறெல் லாம் உயர்ந்து நின்றது என்பதை ஆய்வு செய்துவந்தார். அந்த ஆராய்ச்சி நூலை எழுதி முடிப்பதற்குள், அவரது வாழ்க்கை ஏடு கருணையற்ற காலத்தால் முடித்து வைக்கப்பட்டு விட்டது.
ஒட்டுமொத்த உலகத் தமிழர் களையும் கலங்கடித்த மரணம் இது. எல்லாத் திசைகளில் இருந்தும் இரங்கல்கள் கண்ணீர்த் துளிகளாய் உதிர்ந்துகொண்டே இருக்கிறது. இரங்கல் தெரிவித்தவர்களில் அறவாணரின் மாணவரான கவிஞர் வைரமுத்து... ""தமிழே வாழ்வாகவும் வாழ்வே தமிழாகவும் வாழ்ந்து கழிந்தவர் பேராசிரியர் க.ப. அறவாணன். தமிழர்களின் அடையாள மீட்சிக்கு தன் ஆராய்ச்சியைப் பயன்படுத்தியவர். பல முனைவர் பட்ட ஆய்வாளர்களையும் பேராசிரியர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர். ஒரு துணை வேந்தராய் நேர்மையின் சின்னமாய் நிர்வாகம் வழங்கியவர். தமிழர்கள்மேல் நிகழ்ந்த பண் பாட்டுப் படையெடுப்பு என்று அவர் படைத்திருக்கும் அரிய ஆய்வு நூல் இருண்டுகிடந்த காலத்தின் கண்களைத் திறந்தது.
கற்றல் - கற்பித்தல் என்ற இரண்டு பெரும்பொருளில் அவரது வாழ்வு நிகழ்ந்தது. சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் அவருக்கு நான் மாணவன் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. கார்ல் மார்க்ஸ் இறந்தபொழுது ‘"என் நண்பன் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டான்'’ என்று எழுதினார் ஏங்கல்ஸ். க.ப. அறவாணன் இறந்த பொழுது இதோ என் பேராசிரியர் எழுதுவதை நிறுத்திக்கொண்டார் என்று எழுத வேண்டியிருக்கிறது''’ என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
பெருமக்கள் பலரும் அஞ்சலிலி செலுத்திக்கொண்டிருந்த நிலையில், சென்னை அமைந்த கரையில் இருக்கும் அவரது தமிழ்க்கோட்டம் இல்லத்துக்கு நானும் சென்று என் வீரவணக் கத்தை அப் பெருமகனாருக்குச் செலுத்தினேன்.
அவரது துணைவியார் தாயம் மாள் கண்ணீரும் கம்பலையுமாக அழுது புலம்பியதைக் காணச் சகிக்க வில்லை. இலக்கிய வானில் சேர்ந்து பறந்த அன்றில் பறவைகளில் ஒன்று, இன்னொன்றைத் தவிக்க விட்டுவிட்டுப் பறந்துவிட்டது.
தம் படைப்புகளால் தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய பிரபஞ்ச னையும் அறவாணரையும் ஒரே நேரத் தில் இழந்திருக்கிறோம். இவர்களின் இழப்பைக் காலம்தான் ஈடுகட்ட வேண்டும்.
ஆழ்ந்த இரங்கலுடன்,
நக்கீரன்கோபால்