கிழக்கு ஆஃப்ரிக்காவின் கம்பாலா நகரத்தில் எனக்கு கடுமையான மலேரியா காய்ச்சல் உண்டான சூழலில்தான் டாக்டர் குமாருடன் அறிமுகமானேன். டாக்டர் குமார்தான் எனக்கு வைத்தியம் பார்த்தார். கம்பாலாவில் மிகவும் திறமைவாய்ந்த ஒரு இந்திய டாக்டர் என்பதைத் தாண்டி, டாக்டர் குமாரைப் பற்றி அங்கு யாருக்கும் தெரியவில்லை.
கம்பாலாவுக்கு வந்து அவர் தொழில்செய்ய ஆரம்பித்து ஐந்து வருடங்களாகிவிட்டன. அவர் இந்தியாவின் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதோ, இருண்ட ஆஃப்ரிக்காவிற்கு அவர் வந்துசேர்ந்ததற்குப் பின்னாலிருக்கக்கூடிய ரகசியம் என்னவென்பதோ யாருக்கும் தெரியாது. மக்கள் கூட்டத்திலிருந்து வலிய விலகி, அவர் தனியாக வாழ்ந்துகொண்டிருந்தார்.
பணத்தின்மீது சிறிதும் ஆசையில்லாத ஒரு மனிதர்... ஆஃப்ரிக்காவில் அப்படிப்பட்ட ஒரு இந்திய டாக்டரைப் பார்க்கமுடியாது. கறுப்பின மக்களுக்கு அவர் இலவசமாக வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தார்.
என் மலேரியா காய்ச்சல் குணமானது. பயணத்தைத் தொடர்வதற்கான பலம் திரும்பக்கிடைத்ததும் நான் கம்பாலாவிலிருந்து புறப்படத் தீர்மானித்தேன்.
கம்பாலாவிலிருந்த பல நண்பர்களிடமும் விடைபெறுவதற்காகச் சென்றிருந்த சூழலில், நான் டாக்டர் குமாரையும் சென்று பார்த்தேன்.
"இன்றிரவு நீங்கள் என்னுடன் சேர்ந்து உணவு சாப்பிட வருவீர்களா?'' அவர் என்னை அழைத்தார். நான் சம்மதித்தேன்.
"அப்படியென்றால் இரவு ஒன்பது மணிக்கு நான் காத்திருப்பேன். வேறு விருந்தாளிகள் யாருமில்லை. நாம் இருவர் மட்டுமே...''
அன்றிரவு ஒன்பது மணிக்கு நான் டாக்டர் குமாரின் வீட்டை அடைந்தேன். மருத்துவமனையின் மேல்மாடியில் அவர் தங்கியிருந்தார்.
இரவு உணவு முடிந்து, நாங்கள் வராந்தாவில் பேசுவதற்காக அமர்ந்தோம். டாக்டரின் வாழ்க்கை ரகசியத்தைப் பற்றி விசாரிப்பதற்கு இதுதான் சரியான தருணமென்று நினைத்து, நான் அந்த கேள்வியைக் கேட்டேன்.
"டாக்டர்... உங்களுடைய பூர்வீகக் கதை என்ன? என்னிடம் கூறக் கூடாதா? நான் தொல்லைகள் கொடுக்காத ஒரு பயணி...''
மனமில்லா மனதுடன் டாக்டர் குமார் தன் சொந்தக் கதையை என்னிடம் கூறினார். அந்த கதையை டாக்டர் குமார் கூறியபடியே இங்கு எழுதுகிறேன்.
இரண்டாவது உலகப்போர் காலம்... நான் அப்போது மதராஸில் புதிதாக தொழில் செய்துகொண்டிருந்த ஒரு டாக்டர். மிகவும் மன அமைதியே இல்லாமல் அன்று சாயங்காலம் நான் மதராஸ் சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து கோழிக்கோட்டிற்கு மலபார் எக்ஸ்பிரஸ்ஸில் ஏறினேன். என் எதிர்காலத்தை பொதுவாக பாதிக்கக்கூடிய ஏதோவொன்று நடந்ததைப்போல உணர்ந்தேன்.
இளைஞனாக இருந்தாலும், திறமையான ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் என்ற பெயரை நான் பெற்றிருந்தேன். அதற்கு இன்று ஒரு களங்கம் உண்டாகியிருக்கிறது. கோடீஸ்வரரான ஒரு நாட்டுக்கோட்டை செட்டியாரின் ஒரே மகனின் காலில் ஒரு சிறிய ஆபரேஷன் செய்யவேண்டியதிருந்தது. ஆபரேஷன் என்னிடம்தான் வந்தது. நான் அதைச் செய்தேன். ஆனால், கெட்டநேரம் என்றுதான் கூறவேண்டும்- அந்த அறுவை சிகிச்சை நடந்துமுடிந்த நான்காவது நாளன்று சிறுவன் இறந்துவிட்டான். பரிசாக பெரிய ஒரு தொகை கிடைக்காமல் போய்விட்டதே என்பதல்ல என் கவலைக்கான காரணம். என் கைராசியின் மீதிருந்த நம்பிக்கை... செட்டியார்களுக்கு... என் நோயாளிகளில் அவர்கள்தான் பெரும்பாலானவர்கள்... இல்லாமல் போய்விட்டதோ என்ற பயம்தான் என்னை கவலைப்படச் செய்தது. ஒருவாரம் விடுமுறை எடுத்து நான் சொந்த ஊருக்குச் செல்ல தீர்மானித்து வண்டியில் ஏறுவதற்காக வந்திருக்கிறேன்.
என் முதல் வகுப்புப் பெட்டி காலியாகக் கிடந்தது. அதில் பர்த் முன்பதிவு செய்தவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்த அட்டையை சற்று பார்த்தேன்.
லெஃப்டினன்ட் மாத்யூஸ், மிஸஸ் மாத்யூஸ், சிங்காரவேலு- இப்படி மூன்று பெயர்கள், என் பெயர் அல்லாமல் எழுதப்பட்டிருந்தன.
என் பெட்டியையும் படுக்கையையும் ஒரு மூலையின் ஓரத்தில் வைத்துவிட்டு தமிழரான போர்ட்டர் போய்விட்டார். எனக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்த கீழ் பர்த்தில் கவலை படர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தேன்.
வண்டி கிளம்புவதற்கு இன்னும் இரண்டு நிமிட நேரமே இருந்தது. எனினும், அந்தப் பெட்டிக்குள் யாரும் நுழைந்துவருவதைப் பார்க்கவில்லை. ஒரு நிமிடம் தாண்டியவுடன், கருப்பு நிறத்தில் ப

வண்டி கிளம்புவதற்கு இன்னும் இரண்டு நிமிட நேரமே இருந்தது. எனினும், அந்தப் பெட்டிக்குள் யாரும் நுழைந்துவருவதைப் பார்க்கவில்லை. ஒரு நிமிடம் தாண்டியவுடன், கருப்பு நிறத்தில் புடவையணிந்திருந்த ஒரு இளம்பெண்ணும், இராணுவ உடையணிந்திருந்த ஒரு நடுத்தர வயதுகொண்ட மனிதரும், பெட்டியையும் சாமான்களையும் தலையில் ஏற்றி வைத்திருக்கும் ஒரு போர்ட்டர் பின்தொடர, அங்கு நுழைந்துவந்தார்கள்.
அந்த இளம்பெண் துவாலையால் முகத்தை மூடியவாறு தேம்பி அழுதுகொண்டிருந்தாள்.
இராணுவ அதிகாரியின் முகமும் கவலையில் மூழ்கியிருந்தது. லெஃப்டினன்ட் மாத்யூஸும் மனைவியும்- நான் நினைத்தேன்.
அவளுடைய தோளைத் தாங்கியவாறு அவள் வண்டியில் ஏறுவதற்கு அவர் உதவினார்.
அவள் எனக்கு எதிரே இருந்த கீழ் பர்த்தில் கவிழ்ந்துவிழுந்து சுதந்திரமாக சற்று சத்தமாக அழ ஆரம்பித்தாள்.
லெஃப்டனன்டின் பர்த் மேலே இருந்தது. ஆனால், அவர் இடைவெளியின்றி சிகரெட் புகைத்தவாறு கவலை தோய்ந்த முகத்துடன் மனைவியின் மெத்தையின் கால்பகுதியில் இடம்பிடித்தார்.
வண்டி அசைந்தது. சிங்காரவேலுவின் பர்த் காலியாகவே கிடந்தது.
பெட்டிக்குள்ளிருந்த சூழல் மொத்தத்தில் எனக்குப் பிடித்திருந்தது. கவலையில் மூழ்கியிருக்கும் மூன்று ஆன்மாக்களின் ஒன்றுசேரல்... காற்றாடி சுற்றக்கூடிய சத்தத்தையும், அந்த இளம்பெண்ணின் அவ்வப்போது வெளிப்பட்ட தேம்பலையும் தவிர, பயணிகளின் பேச்சோ ஆரவாரமோ எதுவுமே அந்தப் பெட்டியில் இல்லையே!
நான் "லைஃப்' மாத இதழை விரித்து வாசிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரம் கடந்ததும்... எனக்குத் தோன்றியது... அந்தப் பெண் தூங்குவதற்கு நினைக்கும் பட்சம், பெட்டியிலுள்ள வெளிச்சம் தொந்தரவாக இருக்குமோ என்று.
"விளக்கை அணைக்கணுமா?'' நான் மாத்யூஸிடம் கேட்டேன்.
"வேணாம்... நான் அரக்கோணத்தில இறங்கிடுவேன்.'' அவர் நன்றியைக் குறிப்பாக உணர்த்தியவாறு பதில் கூறினார்.
மாத்யூஸ் எனக்கு ஒரு சிகரெட்டைத் தந்து உபசரித்தார். அதைத் தொடர்ந்து நாங்கள் பேச ஆரம்பித்தோம். பரிதாபத்திற்குரிய ஒரு கதையை அவர் என்னைக் கேட்கச் செய்தார். அதைக் கேட்டவுடன், என் கவலை எனக்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றியது.
பர்மா போர்க்களத்தில் ஒரு வருடம் இருந்துவிட்டு, பதினைந்து நாட்கள் விடுமுறையில் அவர் வந்திருக்கிறார்.
மதராஸில் இந்த நாளன்று கப்பல் வந்துசேரும் என்று அறிவித்திருந்ததால், அவரை வரவேற்பதற்காக மனைவியும், ஏழு வயதுள்ள மகளும் கோயம்புத்தூரிலிருந்து மதராஸுக்கு வந்தார்கள்.
ஆனால், கடுமையான காய்ச்சலுடன் அந்த மகள் மதராஸுக்கு வந்திருக்கிறாள். அப்படிப்பட்ட நிலையில் மகளை மீண்டுமொரு புகைவண்டிப் பயணத்தை மேற்கொள்ளவைப்பது ஆபத்தான விஷயமாக இருக்குமென்பதைப் புரிந்துகொண்டு, அவர் ஒரு நண்பரின் வீட்டை விசாரித்து, மகளையும் மனைவியையும் அங்கு இருக்கச் செய்திருக்கிறார். அவர் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். இரண்டு நாட்கள் கடந்தபிறகும் மகளின் காய்ச்சல் குறைவதாகத் தெரியவில்லை.
இறுதியில் அவர் அவளை பொது மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்.
மகளைப் பார்த்துக்கொள்வதற்கு தாயும் மருத்துவமனை யிலேயே இருந்திருக்கிறாள்.
பதினோரு நாட்கள். சூஸி... அதுதான் அந்தச் சிறுமியின் பெயர். மருத்துவமனையில் கிடந்து, பன்னிரண்டாவது நாளன்று இறந்துவிட்டாள். அன்றைய நாளுடன் அவருடைய விடுமுறைக் காலமும் முடிந்துவிட்டது. உடனடியாக போர்க்களத்திற்குத் திரும்பி வரவேண்டும் என்ற ஓ.ஸி.யின் தந்தி, மகளின் மரணப் படுக்கையின்போது அவருக்குக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர் கல்கத்தாவிற்குத் திரும்பிச் செல்கிறார். மனைவி கோயம்புத்தூருக்கும்...
குடும்பத்துடன் இரண்டு வாரங்கள் சந்தோஷமாக இருக்கலாமென்ற ஆசையுடன் வந்த அந்த மனிதருக்கு தன்னுடைய மகளின் பிண அடக்கத்தைச் செய்துவிட்டுத் திரும்பிச் செல்லவேண்டிய நிலை உண்டாகிவிட்டது. அவருடைய வெளிறிப்போன முகம் என்னை வேதனைகொள்ளச் செய்தது.
அந்தப் பெண்ணின் நிலை அதைவிட இதயத்தை வருத்தக்கூடியதாக இருந்தது. அவள் சூஸியின் சில்க் ஆடையை மார்புடன் சேர்த்தணைத்தவாறு கவிழ்ந்து படுத்து இதயம் உருக அழுதுகொண்டிருந்தாள்.
வண்டி அரக்கோணம் ஸ்டேஷனை அடைந்தது.
லெஃப்டினன்ட் மாத்யூஸ் தன் மனைவியிடம் விடைபெறும் அந்த காட்சியைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்க என்னால் முடியவில்லை.
"க்ளாடிஸ்... க்ளாடிஸ்....'' என்று அழைத்தவாறு, அதற்குப்பிறகு எதுவுமே கூறமுடியாமல் அவர் சூஸியின் ஆடை ஒட்டிக்கிடந்த அவளுடைய மார்புப் பகுதியை இறுக கட்டிப்பிடித்தார். நான் ப்ளாட்ஃபாரத்தை நோக்கி தலையைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
ஒரு கறுத்த பன்றியைப்போல தடிமனாக இருந்த மனிதர் கம்பார்ட்மெண்டிற்குள் நுழைந்து வந்தார். அவர் சிங்கரவேலுவாக இருக்கவேண்டுமென நினைத்தேன்.
வந்தவுடனே படுக்கையை மேலேயிருந்த பர்த்தில் விரித்துவிட்டு, சிங்காரவேலு தூங்க ஆரம்பித்துவிட்டார். வேறு யாரும் அங்கிருந்து எங்களுடைய பெட்டிக்குள் நுழையவுமில்லை.
வண்டி புறப்பட்டபோது, மாத்யூஸ் என்னைப் பற்றிக்கொண்டு கூறினார்: "வண்டி கோயம்புத்தூரை அடையறப்போ பொருத்தமில்லாத நேரமாகத்தான் இருக்கும். எங்களோட வீடு ஸ்டேஷன்லயிருந்து அஞ்சு மைல் தூரத்தில இருக்கு. க்ளாடிஸ் வர்ற தகவலை அங்க யாருக்கும் தெரிவிக்கமுடியல. அதனால ஸ்டேஷன் லயிருந்து அவளுக்கொரு வண்டியை ஏற்பாடு செஞ்சு கொடுத்தா, பெரிய உதவியா இருக்கும். அவளோட மனசும் சரீரமும் ஒரேமாதிரி தளர்ந்து போய் இருக்கு.
கோயம்புத்தூரை அடையுறப்போ, மெத்தையிலிருந்து எழுந்திருக்கறதுக்கே அவளால முடியுமான்னு தெரியல. நீங்க கருணைகாட்ட முடியுமா?''
"உண்மையிலேயே என்னால முடியக்கூடிய எல்லாத்தையும் நான் செய்து தர்றேன்'' என்று நான் கூறி முடிக்கும்போது, வண்டி நகர்ந்துவிட்டிருந்தது.
சிறிதுநேரம் நான் வாசிப்பதில் மூழ்கியிருந்தேன்.
தொடர்ந்து மெதுவாக க்ளாடிஸ்ஸின் மெத்தையின் மீது சற்று கண்களை ஓட்டினேன். அவள் தளர்ந்த நிலையில் படுக்கையில் கவிழ்ந்து ஒட்டிப் படுத்திருந்தாள்.
அவளுடைய ஜரிகைக் கரையுள்ள கருப்புநிறப் புடவையின் நுனியும், இருண்டு சுருண்ட தலைமுடியும் தரையைத் தொட்டுக்கிடந்தன. பொன்நிறத்தில் மின்னிய அவளுடைய கழுத்தின் பின்பகுதியும், ரவிக்கைக்குக் கீழே முதுகின் கீழ்ப்பகுதியும் தெளிவாகத் தெரிந்தன. அந்த காட்சி மொத்தத்தில் என்னை நிலைகுலையச் செய்தது.
வண்டி அடுத்த ஸ்டேஷனை அடைந்தபோது, நான் இறங்கிச் சென்றேன். ரிஃப்ரெஷ்மென்ட் அறையிலிருந்து கொஞ்சம் சூடான காபியை வாங்கி தெர்மாஃப்ளாஸ்கில் நிறைத்துக்கொண்டு திரும்பிவந்தேன். வண்டி புறப் பட்டது. நான் க்ளாடிஸ்ஸை மீண்டுமொரு முறை பார்த்தேன். அவள் அதே நிலையிலேயே படுத்திருந்தாள்.
மேலேயிருந்த பர்த்திலிருந்து சிங்காரவேலு குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்.
அவருடைய குறட்டைச் சத்தமும் மின் விசிறியின் முனகலும் மட்டுமே பெட்டியின் பேரமைதியைக் காயப்படுத்திக்கொண்டிருந்தன.
நான் ஒரு கையில் தெர்மாஃப்ளாஸ்க்கை உயர்த்திப் பிடித்தவாறு மெதுவாக அவளுடைய மெத்தைக்கருகில் சென்று, "மிஸஸ் க்ளாடிஸ்... க்ளாடிஸ்...'' என்றழைத்தேன். என் குரலைக்கேட்டு அவள் மெதுவாக முகத்தைத் திருப்பிப் பார்த்தாள். எங்களுடைய விழிகள் நிமிட நேரத்திற்கு ஒன்றையொன்று சந்தித்தன.
"இந்தாங்க... கொஞ்சம் சூடான காபியைப் குடிங்க.'' நான் கப்பை அவளுக்கு நேராக நீட்டினேன்.
அவள் மறுப்பதைப்போல சுருளான முடியைக் கிரீடமாக அணிந்திருந்த தலையைச் சற்று குலுக்கிவிட்டு, மீண்டும் முன்பிருந்த நிலையிலேயே கவிழ்ந்து படுத்தாள்.
"மிஸஸ் க்ளாடிஸ்... மன்னிக்கணும்...'' நான் நடுங்கிக் கொண்டிருந்த கையால் அவளுடைய தோளைத் தொட்டவாறு அழைத்தேன்: "நீங்க எதுவுமே குடிக்கலன்னு எனக்குத் தெரியும். உங்களோட கடுமையான துக்கத்திற்குக் காரணத்தையும் நான் தெரிஞ்சு வச்சிருக்கேன். அழுது இதயத்தை வேதனைப் படுத்தறதால என்ன பயன்? சூஸி இனி திரும்ப வரப்போறதில்லை. அவள் சொர்க்கத்துக்கு அமைதியா பயணத்தைத் தொடரட்டும்... அவள் தெய்வத்தோட கையில போய்ச்சேர்ந்துட்டா. நீங்க எல்லாத்தையும் மறந் துடணும். கொஞ்சம் காபியைக் குடிங்க...''
அவள் அசையவில்லை. நான் கூறிய அனைத் தையும் அவள் கவனமாகக் கேட்டிருக்கவேண்டும். சிறிதுநேரம் கடந்ததும், அவள் மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்து, புடவையின் நுனியையும் தலைமுடி யையும் பின்னோக்கி ஒதுக்கிவிட்டு, பெட்டியின் நான்கு பக்கங்களிலும் சற்று விழித்துப் பார்த்தாள்.
நண்பரே... நான் ஒரு இரக்கமற்ற டாக்டர் என்று நீங்கள் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால் ஒரு உண்மை யைக் கூறட்டுமா? துக்கத்தின் உச்சத்தில்தான் பெண் மிகவும் அழகானவளாகத் தோன்றுகிறாள். துக்கத்தால் என் மனதும் பலவீனமாக இருந்தது. இரண்டு கவலையில் மூழ்கியிருக்கும் ஆன்மாக்கள் ஆழமான ஒரு ஈர்ப்பிற்கு அடிமையாயின.
க்ளாடிஸ்ஸின் சிதறிய சுருளான தலைமுடியும், வெளிறிய கன்னமும், கண்ணீரால் கழுவப்பட்டு தெளிந்த விழிகளும், தளர்ந்து நீலம்படர்ந்த உதடுகளும் உள்ள அந்த உருவம் என் மனிதத்தன்மையை அரித்துத் தின்றது. அழகை ரசிக்கக்கூடிய சூழலல்ல அது என்ற விஷயம் எனக்குத் தெரியாமலில்லை.
காரணமே இல்லாமல் என் இதயம் உணர்ச்சி வசப்பட்டு, அலைமோதிய மணல்மேட்டைப்போல இடிந்து சாய்ந்தது.
நான் சூடான காபி நிறைக்கப்பட்ட கப்பை அவளுக்கு நேராக நீட்டினேன். அவள் அதை வாங்கி முழுவதையும் குடித்தாள். நான் மீண்டும் கப்பில் காபியை ஊற்றி அவளுக்கு நேராக நீட்டினேன். அவள் வேண்டாமென தலையை ஆட்டினாள். நான் வற்புறுத்தியவுடன், அவள் அதையும் வாங்கிக் குடித்தாள்.
பேரமைதியில் சில நிமிடங்கள் கடந்து சென்றன. நான் அவளின் முகத்தையே மீண்டும் பார்த்தேன். அவளு டைய இடது பக்க கன்னத்தில் கறுத்து மினுமினுக்கும் ஒரு புள்ளி இருந்தது. அழகின் முழுமைக்கான எல்லை என்பதைப்போல இருந்த அந்த கருப்புநிறப் புள்ளிதான் என்னை மிகவும் அதிகமாகக் கவர்ந்தது.
சூஸியின் ஆடை அவளின் மடியில் கிடந்தது. நான் மெதுவாக அதைக் கையில் எடுத்தேன். க்ளாடிஸ்ஸின் கண்ணீரும், தலைமுடியின் எண்ணெய்ப் பசையும் பட்டு, அந்த சில்க் ஆடை சற்று அழுக்கடைந்திருந்தது.
நான் ஆடையைச் சுருட்டி என் பாக்கெட்டில் வைத்தவாறு கூறினேன்: "க்ளாடிஸ்... மரணத்தோட வாசனை கலந்த இதை வச்சு வழிபடவேணாம். ஒரு தந்தையா இல்லைன்னாலும், குழந்தைகளோட மரணத்தில ஒட்டிக்கிட்டிருக்குற பரிதாப நிலையை ஒரு டாக்டரின் அனுபவத்துலயிருந்து நான் தெரிஞ்சுக் கிட்டேன். நேத்து என் கையால இறக்கநேர்ந்த ஒரு பணக்காரரோட மகனின் இறுதி நிமிஷங்களை நான் எந்தக் காலத்திலும் மறக்கமாட்டேன்.''
அவள் என் முகத்தையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள். என் ஆறுதல் வார்த்தைகள் அவளுடைய இதயத்தைத் தொட்டிருக்கவேண்டும்.
வண்டி புலர்காலைப் பொழுது மூன்று மணிக்கு கோயம்புத்தூரை அடைந்தது.
"இதோ... நீங்க இறங்கவேண்டிய இடம் வந்திருச்சு...'' நான் க்ளாடிஸ்ஸின் கண்களைப் பார்த்தவாறு, அவளு டைய தோளில் தொட்டுக்கொண்டே கூறினேன். சோர்வு காரணமாக அவளால் எழுந்திருக்க முடியவில்லை. நான் அவளை மெதுவாக தாங்கியவாறு எழச்செய்தேன். திடீரென அவள் என் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு குலுங்கிக்குலுங்கி அழுதவாறு கூறினாள்: "என்னால தனியா போகமுடியாது. நீங்களும் என்கூட வாங்க...''
அவளுடைய நடவடிக்கையைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் உண்டாகவில்லை. நான் அதை எதிர்பார்த்தி ருந்தேன்.
கவலையிலும் தனிமையிலும் மூழ்கித் தடுமாறிக் கொண்டிருக்கும் அவள், அவளாக அல்லாமல் ஆகிவிட்டிருந்தாள்.
நான் ஒரு போர்ட்டரை அழைத்து அவளுடைய, என்னுடைய பெட்டிகளையும் பொருட்களையும் எடுக்கச் செய்து, ஸ்டேஷனுக்கு வெளியே வந்தோம்.
"இந்த பொருத்தமில்லாத வேளையில பயணத்தைத் தொடர வேணாம். பொழுது விடியுறவரை நாம ஏதாவது ஹோட்டல்ல இருப்போம்.'' நான் கூறினேன்.
அவள் எதுவும் கூறவில்லை. என் கையை இறுகப் பற்றியவாறு அவள் என்னுடன் வந்தாள்.
நான் ஒரு காளை வண்டிக்காரனை அழைத்து, வண்டிக்காரனிடம் நல்ல ஒரு ஹோட்டலுக்குச் செல்லும்படி கூறினேன். அவன் எங்களை "வி ஹோட்ட'லில் கொண்டுபோய் விட்டான். நான் அங்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்தேன்.
நாங்கள் கண் விழித்தபோது, மணி ஒன்பதைத் தாண்டிவிட்டிருந்தது. எதுவுமே நடக்கவில்லை என்பதைப்போல அவள் அந்த படுக்கையில் எழுந்து அமர்ந் திருந்தாள். சிறிது நேரம் கடந்ததும், அவளுடைய கன்னங் களின் வழியாக கண்ணீர் நிறைய வழிந்துகொண்டி ருப்பதை நான் பார்த்தேன். நாங்கள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
நான் காலை உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். பையன் மசாலா தோசையையும் காபியையும் மேஜையி ன்மீது கொண்டுவந்து வைத்தான்.
"முகத்தைக் கழுவிட்டு, காபியைக் குடிங்க..." என் குரலைக்கேட்டு, அவள் என் முகத்தையே சிறிதுநேரம் வெறித்துப் பார்த்தாள். தொடர்ந்து மெதுவாக குளியலறைக்கு எழுந்து சென்று, முகத்தையும் கூந்தலையும் கழுவிவிட்டு, ஆடையை மாற்றிக்கொண்டு, அவள் எனக்கருகில் வந்தமர்ந்து மெதுவாக காலை உணவைச் சாப்பிட்டாள்.
பத்து மணி அடித்தபோது அவள் பையனை அழைத் துக் கூறினாள்: "ஒரு வண்டி கொண்டு வா...''
வண்டி வாசலில் நின்றது. அவள் எனக்கருகில் வந்து முகத்தைக் குனிந்துகொண்டு பலவீனமான குரலில் கூறினாள்: "நான் புறப்படுறேன். என்னையும் இந்த சம்பவத்தையும் நிரந்தரமா மறந்திடுங்க...''
அவளை இறுதியாக ஒருமுறை முத்தமிடுவதற்கோ, அவளின் சுருண்ட தலைமுடியைச் சற்று தொடுவதற்கோ அப்போது எனக்கு தைரியம் வரவில்லை. நான் மிகவும் சிரமப்பட்டு அவளுடைய தோளை நோக்கி என் கையை உயர்த்தினேன். அவள் என் கையைத் தட்டிவிட்டாள்.
"குட்பை ஃபர் எவர்.'' தழுதழுக்க அந்த வார்த்தைகளைக் கூறிவிட்டு, அவள் வண்டியில் ஓடி ஏறினாள். அந்த வண்டி ஹோட்டலின் வாசலைக் கடந்து தெருவீதியில் சென்று மறைவதைப் பார்த்தவாறு நான் ஹோட்டலின் வராந்தாவில் செயலற்று நின்றுகொண்டிருந்தேன்.
நடந்தவை அனைத்தும் ஒரு கனவா?
2
அங்கிருந்து, ஒன்பது மாதங்கள் கடந்தோடின. ஒருநாள் எனக்கு ஒரு ஆர்டர் வந்தது- கோயம்புத்தூர் மருத்துவமனையில் என்னை அஸிஸ்டண்ட் சர்ஜனாக
நியமித்திருப்பதாக. நான் அந்த பணியைப் பெரிய உற்சாகத்துடன் ஏற்றுக்கொள்ளவில்லை.
நான் பணியில் சேர்ந்து ஒரு வாரம் கடந்தபோது, என் வாழ்க்கையையே பலமாக கசக்கிப்போட்ட சம்பவம் நடந்தது.
ஆபத்தான ஒரு பிரசவ கேஸைப் பரிசோதிப்பதற்கு, என்னை மிகவும் அவசரமாக அழைத்துக்கொண்டு செல்வதற்கு ஒரு மதிக்கக்கூடிய நிலையிலிருந்த வயதான மனிதர் வீட்டிற்குள் வந்தார். கேஸ் மிகவும் சீரியஸானது என்பதைத் தெரிந்துகொண்டதும், நான் உடனடியாக அவருடன் காரில் புறப்பட்டேன்.
தான் ஒரு ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் எனவும், கோயம்புத்தூரிலிருந்து ஐந்து மைல் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் வசிப்பதாகவும் அவர் கூறினார்.
"யாருக்கு பிரசவ வேதனை?'' நான் கேட்டேன்.
"என் மகளுக்கு...''
"அவங்களோட கணவர் எங்க இருக்காரு?''
"கணவர் ஒரு இராணுவ அதிகாரியா இருந்தார். எட்டு மாசங்களுக்கு முன்ன பர்மா யுத்தத்தில இறந்துட் டாரு... நாம இங்கதான் இறங்கணும்...''
ஒரு சிறிய பங்களாவின் வாசலில் கார் நின்றது. நாங்கள் இறங்கினோம். அந்தப் பெரியவர் என்னை பங்களாவின் கீழ்த் தளத்திலிருந்த பெரிய ஒரு அறைக் குள் அழைத்துக்கொண்டு சென்றார்.
அங்கிருந்த ஒரு கட்டிலில் ஒரு இளம்பெண் சுய உணர்வற்றுப் படுத்திருந்தாள். நான் அவளைக் கூர்ந்து ஒருமுறை பார்த்தேன். என் தலை சுற்றுவதைப்போல நான் உணர்ந்தேன். க்ளாடிஸ்! அந்த சுருண்ட தலைமுடி...
கன்னத்தில் விழுந்துகொண்டிருந்த கறுத்த ரோமக் கீற்றுகள்... இடது பக்க கன்னத்திலிருக்கும் அந்த கறுத்த புள்ளியும்....
நான் முகத்தைத் திருப்பி, தோளை நோக்கி விழிகளை உயர்த்தினேன்.
லெஃப்டினன்ட் மாத்யூஸின் இராணுவ உடை யணிந்த பெரிய ஒரு புகைப்படமும், ஒரு சிறுமியின் புகைப்படமும்...
அதுதான் சூஸியாக இருக்கவேண்டும்... என் கண்களில் பட்டன.
நான் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அமைதியாக இருப்பதைப்போல காட்டிக்கொண்டு கேஸைப் பரிசோதித்தேன்.
மிகவும் ஆபத்தான ஒரு கேஸாக அது இருந்தது. தாயின் உயிரையும், வயிற்றிலிருக்கும் குழந்தையின் உயிரையும்... இரண்டையும் காப்பாற்றுவது இயலாத விஷயம். ஒன்று- தாய். இல்லாவிட்டால்- குழந்தை. எது வேண்டும்?
சிந்திப்பதற்கு எனக்கு நேரமில்லை. அந்த குழந்தை என்னுடையது என்ற முழு நம்பிக்கை எனக்கிருந்தது.
க்ளாடிஸ்! அந்த இரவை நான் எப்படி மறப்பேன்? இறுதியில் என் சொந்த குழந்தையைக் கிழித்து அறுத்து கொலை செய்து, தாயைக் காப்பாற்ற வேண்டுமென முடிவெடுத்து நான் ஆபரேஷனை ஆரம்பித்தேன்.
இரண்டு மணி நேரம் கடந்தது. மிகவும் கவனமான என் சிகிச்சைக்குப் பிறகு, அவள் கண்களைத் திறந்தாள். அந்த மயக்கத்திற்குப்பிறகு அவள் முதலில் பார்த்ததே என் முகத்தைத்தான். ஒரு நிமிடம் அவள் என்னையே வெறித்துப் பார்த்தாள். தொடர்ந்து மிகவும் பயங்கர மான ஒரு அலறல்!
அதைத் தொடர்ந்து வலிப்பு நோய் வந்து, கடுமையான சூறாவளியில் சிக்கிக் கொண்ட மரத்தைப்போல அவள் நிலைகுலைந்து விழுந்தாள்.
இரண்டு மணி நேரத்திற் குள் க்ளாடிஸ் மரணத்தைத் தழுவினாள்...
மறுநாள் நான் ஊரிலிருந்து வெளியேறினேன். அந்த வகையில் பல இடங்களிலும் சுற்றித் திரிந்துவிட்டு, இறுதியாக ஆஃப்ரிக்காவின் இந்த இருண்ட நகரத்திற்கு வந்துசேர்ந்தேன். இதுதான் என் கதை. நண்பரே...
சொல்லுங்க... நான் இரக்க குணம்கொண்ட ஒரு டாக்டரா?