தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு
-என்கிறார் வள்ளுவப் பேராசான்.
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவை என்று இதன் மூலம் அவர் அறிவுறுத்துகிறார். இந்த மூன்றிலும் அவர் முதலில் குறிப்பிடுவது, காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கை என்பதைத்தான். இதைத்தான் அதிகாரத்தில் உள்ளவர்கள் மனதில் கொள்ளவேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raid_17.jpg)
தி.மு.க. அரசு பல்வேறு நலப்பணிகளைச் செய்து, பதவிக்கு வந்த ஆறேழு மாதங்களிலேயே மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருக்கிறது. அந்த செல்வாக்கு மேலும் வலுப்பெற, கடந்த ஆட்சிக் காலத்தில் மக்களின் வரிப்பணத்தில் கொள்ளையடித்த மாபாவிகளை, உரிய வகையில் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.
எடப்பாடி தலைமையில், தமிழகத்தையே சூறையாடிய மோசமான குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசும் காவல்துறையும் புலனாய்வு அமைப்புகளும், அவர்கள் விசயத்தில் வேண்டு மென்றே மெத்தனம் காட்டுவதாகப் பலரும் நினைக்கிறார்கள்.
மக்கள் கொடுத்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அவர்களது வரிப்பணத்தையே சுருட்டி, மோசடியில் ஈடுபட்ட துரோகக் கும்பல், இன்று எந்த பயமும் இல்லாமல் சொகுசாக உலா வந்துகொண்டு இருக்கிறது.
அவர்கள் செய்த குற்றம் சாதாரணக் குற்றம் அல்ல.
மக்கள் பணத்தைச் சூறையாடுவதும் ஈவு இரக்கமில்லாமல் கொள்ளையடிப்பதும் மிகப்பெரிய துரோக காரியமாகும்.
அதைத்தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். தொடங்கி அத்தனை அமைச்சர்களும் செய்தார்கள். மக்கள் பணத்தில் மஞ்சள் குளித்தார்கள்.
அவர்கள் வாங்கிப் போட்டிருக்கும் சொத்துக்கள், அவர்கள் நடத்தும் நிறுவனங்கள், அவர்கள் போட்டிருக்கும் முதலீடுகள் அனைத்தும் அவர்கள் உழைத்துச் சம்பாதித்தவை அல்ல.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raid1_6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raid2_1.jpg)
அவர்களின் தலைவி வழியில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு கொள்ளையடிக்கப்பட்டவை. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படவேண்டிய சொத்துக்கள். அவை அரசு கஜானா வில் வரவு வைக்கப்பட வேண்டிய சொத்துக்கள்.
காண்ட்ராக்ட்டுகளில் கொள்ளையடித்தும், கொள்முதல் விவகாரங்களில் கமிஷன் பெற்றும், மணல் மற்றும் கல் குவாரிகளைச் சுரண்டிக் கொழுத்தும், அரசுப் பணிகளுக்கு லஞ்சம் பெற்றும், பணி மாறுதல்களுக்குக் கையேந்தியும் இன்னபிற வகைகளில் தொழிலதிபர்களை மிரட்டியும், மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டியும் கொழுத்த அவர்கள், கூச்சமோ குற்ற உணர்வோ சிறிதும் இல்லாமல் உலா வருவதை எப்படி ரசிக்க முடியும்?
அவர்கள் நடத்திய படுபயங்கர ஊழலால்தான், மக்கள் அவர்களை, ஆட்சி பீடத்தில் இருந்து ஓட ஓடத் துரத்தினார் கள். இப்படிப்பட்ட ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்து நல்லாட்சி தருவார்கள் என்றுதான் தி.மு.க. அரசையும் மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். இதை மறந்துவிடக் கூடாது.
தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலேயே அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களைச் சட்டப்படி விசாரிப்போம். அதற்கான தனி நீதிமன்றங்களை அமைப்போம். ஊழல்வாதிகள் எவரையும் தப்பவிடமாட்டோம் என்று இன்றைய முதல்வர் வாக்குறுதி கொடுத்தார். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்தில் வேலுமணி சிறையில் இருப்பார் என்றெல்லாம் கூட தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிரடியாகச் சொல்லப்பட்டது.
தி.மு.க. ஆட்சி பீடம் ஏறிய வேகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறைத் தலைவராக, நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரியான கந்தசாமி நியமிக்கப்பட்டார். அதைப் பார்த்த பலரும் இனி அதிரடிக் காட்சிகளைப் பார்க்கலாம். மக்கள் வரிப் பணத்தைக் கொள்ளையடித்த அத்தனை பேரும் இனி கம்பி எண்ணப்போகிறார்கள் என்று நினைத்தார்கள்.
அந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவது போல், அ.தி.மு.க. ஊழல் முதலைகளை குறிவைத்து அதிரடி ரெய்டுகளும் ஆரம்பித்தன. ஏராளமான பணமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. ஆனால், பரபரப்பாக நடத்தப்பட்ட அந்த ரெய்டுகளுக்குப் பின், பெரிதாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது ஏமாற்றத் தையே தருகிறது.
இதுவரை 6 முன்னாள் அமைச்சர்கள், ரெய்டுக்கு ஆளானார்கள். அவர்கள் யார் யார்?அவர்களிடம் இருந்து என்னென்ன பறிமுதல் செய்யப்பட்டன?
லஞ்ச ஒழிப்புத்துறை முதலில் குறிவைத்தது, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரைத்தான். கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி சோதனைகள் தொடங்கின. கரூர் மாவட்டத்தில் உள்ள அவருக்குத் தொடர்புடைய 20 இடங்களிலும், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது வீட்டிலுமாக மொத்தம் 21 இடங்களில் 21 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் அந்த சோதனை நடந்தது. இதில் ரூ.25.56 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து, விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி விஜயலட்சுமி மீதும், அவரது தம்பி சேகர் மீதும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raid3_1.jpg)
அடுத்ததாக கடந்த ஆகஸ்ட் 10-ல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்புடைய வீடுகள், நிறுவனங்கள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னை, கோவை என பல இடங்களிலும் ஏறத்தாழ 11 மணி நேரத்திற்கும் மேலாகச் சோதனை நடந்தது. அதன் முடிவில் முக்கிய ஆவணங்களையும் கணினிகளையும் கைப்பற்றினார்கள். வேலுமணி மீது வழக்கையும் பதிவு செய்தனர். வேறு எதுவும் நடக்கவில்லை.
மூன்றாவதாகச் சிக்கியவர் மாஜி மந்திரி கே.சி.வீரமணி. அதிகமாகப் பணம் புழங்கும் வணிக வரியும் பத்திரப் பதிவுத்துறையும் அவரிடம் இருந்ததால், ஏகத்துக்கும் தில்லாலங்கடித் திருவிளையாடல்களை நடத்தினார். கடந்த செப்டம்பர் 10-ல் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர் தொடர்புடைய சென்னை, வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள 28 இடங்களில் சோதனை நடத்தினர். அவரின் சொத்து மதிப்பு முன்பைவிட 654 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்தது.
சோதனையில் 34 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 1.80 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், 5 கணினி ஹார்டு டிஸ்க், ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 4.987 கிலோ தங்கம், 47 கிராம் வைரம், 7.2 கிலோ வெள்ளிப் பொருட்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. செப்டம்பர் 15-ஆம் தேதி அவர் மீது எஃப்.ஐ.ஆரும் போடப்பட்டது. இருந்தும் அவர் ஹாயாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறார்.
நான்காவதாக "ஊழல் நாயகன்' என்று பலராலும் வர்ணிக்கப்பட்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரை நெருங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை. கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி அவருக்குத் தொடர்புடைய 43 இடங்களில் சோதனை நடந்தது. அவர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். சோதனையின் போது 27 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாகவும் அதிகாரிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர் மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆரில், விஜயபாஸ்கர் லஞ்சப் பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி, அதற்கு முறைகேடாகப் பணம் வாங்கியதாகவும், அதில் வரி ஏய்ப்பு செய்ததாக அந்த முதல் தகவல் அறிக்கை யில் கூறப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, 2017-ல் இவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய வருமான வரித்துறையினர் சோதனை செய்து, வழக்கும் பதியப்பட்ட நிலையில்தான், இந்த ஆட்சியிலும் ரெய்டு நடத்தப்பட்டது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அடுத்து முன்னாள் மின்துறை மந்திரியான பி. தங்கமணியை நெருங்கியது விஜிலன்ஸ். கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி ரெய்டைத் தொடங்கினர். மொத்தம் அவர் தொடர்புடைய 69 இடங்களுக்குள் புகுந்தனர். அப்போது, ரூ 2 கோடியே 37 லட்சத்து 34 ஆயிரத்து 458 ரூபாய் பணமும், 1.13 கிலோ தங்க நகைகளும், சுமார் 40 கிலோ வெள்ளிப் பொருட்களும், சொத்து ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் பல வங்கிப் பாதுகாப்பு பெட்டகங்களின் சாவிகள், கணினிகளின் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவையும் கைப்பற்றப் பட்டன. இதைத் தொடர்ந்து தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இருந்தும் தங்கமணி தரப்பு, எதுவுமே நடக்காதது போல் உலா வந்துகொண்டு இருக்கிறது.
=
கடைசியாக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகன் தொடர்பான 57 இடங்களில் கடந்த. 20-ந் தேதி சோதனைகள் நடந்தன. அப்போது வருமானத்துக்கு அதிகமாக 11 கோடியே 32 லட்ச ரூபாய் அளவுக்கு அவர் சொத்துக்கள் சேர்த்திருப்பது தெரியவர, கே.பி.அன்பழகன், அவர் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியே வந்தன.
-இப்படி தொடர்ந்து அ.தி.மு.க. மாஜி மந்திரிகளைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்பட்டும், எவரும் கைது நடவடிக்கைக்கு ஆளாகவில்லை. இதில் இன்னும் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டிய பலரையும் யாரும் நெருங்கவே இல்லை.
வெறும் 50 ரூபாய் திருடினால் கூட திருடியவனை மடக்கி, காவல் நிலையத்தில் வைத்து கடுமையாகத் தாக்கி "பாத்ரூமில் வழுக்கி விழ வைக்கிற' காவல்துறை, கோடி கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த இந்த பக்காத் திருடர்களையும் திருட்டு முதலைகளையும், நெருங்காமல் அவர்களை சுதந்திரமாக உலவவிடுவது, சட்டத்திற்கு மட்டுமல்ல; அறத்துக்கும் எதிரானது.
இந்த ஊழல் முதலைகளில் கரூர் விஜயபாஸ்கரை மட்டுமே அழைத்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, மற்றவர்களைப் பேருக்குக் கூட விசாரிக்கவில்லை. பிறகு எதற்கு இந்த ரெய்டுகள்? அவர்களை மிரட்டவா?
எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வை அடக்கிவைக்கும் முயற்சியாகத்தான் ரெய்டுகள் நடத்தப்படுகிறதா? என்ற மக்களின் சந்தேகத்திற்கு யார் பதில் தருவது?
யாரோ ஒருவரின் பணத்தை எவரோ ஒருவர் திருடினால் கூட, அவர்கள் அதைப் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்கலாம். ஆனால், இது மக்களின் பணம். அதைத் திருடியவர்களுக்கே தாரை வார்ப்பது போல் அமைதி காக்கலாமா?.
மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள், எப்போதும் போல எந்தப் பாதிப்பும் இல்லாமல் உலா வருகிறார்கள் என்றால், எதற்கு இப்படி ஒரு ரெய்டு? எதற்கு அரசு சம்பளத்தில் விரயமாக இப்படி ஒரு லஞ்ச ஒழித்துப்புத்துறை? நெஞ்சில் தானாய் எழும் இப்படிப்பட்ட கேள்விகளைத் தடுக்க முடியவில்லை.
-ஆதங்கத்தோடு
நக்கீரன்கோபால்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/raid-t.jpg)