து ஒரு வயதான கிளியின் இறுதியைப் பற்றிய கதை.

கிளி வயது அதிகமாக ஆகிவிட்ட காரணத்தால் இறக்கவில்லை. தாய் கிளிகளின் உலகத்தை எதிர்த்து தற்கொலை செய்துகொள்ளவுமில்லை.

இந்த தாய்க்கிளி கொல்லப்பட்டது.

இந்த வயதான கிளியை நான் எப்படி பார்த்தேன், அதன் முடிவை நான் எப்படி தெரிந்து கொண்டேன்... இவைதான் இந்த கதையின் மையக்கரு.

ஏராளமான வருடங்களுக்கு முன்னால் நான் மலயாற்றூருக்குச் சென்றேன்.என் தாத்தாவைப் பார்ப்பதற்காக.

Advertisment

ss

இந்த தாத்தாவின் குணம் தலையையும் வாலையும் கொண்டது. சில வேளைகளில் நல்ல தாத்தா. சில நேரங்களில் கோப குணம் கொண்ட தாத்தா.

இந்த தாத்தாவுடன் மூன்றுவார காலம் நான் அப்போது தங்கினேன்.

பிற்காலத்தில் அவர் எனக்கு பல விஷயங்களைக் கற்றுத்தர முயன்றார். பிரார்த்தனைதான் பிரதான விஷயம்.

"சிவம் சிவகரம் சாந்தம் சிவாத்மானம், சிவோத்தமம்...''

"சர்வமங்கள மங்கள்யே, சிவே சர்வ்வார்த்த ஸாதிகே.....''

இப்படி...

Advertisment

பிரார்த்தனைக்குப் பிறகு, அவர் எனக்குக் கற்றுத் தந்தது... விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். "கவுளிகாத்ர தென்னை என்றால் என்ன? பப்ளிஷ் ஆரஞ்சை நீ சாப்பிட்டிருக்கியா? பசுவிற்கு அளிக்கப்படும் புல் பாலாக எப்படி மாறுகிறது? பசுவின் சாணத்திற் கும் மலத்திற்கும் இடையே இருக்கும் வேறுபாடு என்ன?'' பிறகு... தாத்தா என்னையும், என் தந்தையும் அவரின் மகனுமான விஸ்வநாத ஸ்வாமியையும் ஒப்பிடுவார்.

"மதிப்பெண்கள் குறையிறப்போ, விஸ்வம் உன்னை அடிப்பானா?''

"அடிப்பாரு.''

"அதற்கான உரிமை அவனுக்கு இல்லை. காரணம்... பள்ளியின் இறுதித் தேர்வில் அவன் மூன்று முறை தோற்றிருக்கிறான்.''

"உனக்கு நீச்சல் தெரியுமா?''

"தெரியாது.''

"ஆற்றில் நீந்துவதற்குக் கற்றுக்கொள்ளாமற் போனாலும், வாழ்க்கையில் நீந்துவதற்குக் கற்றுக்கொள்ளணும். புரியுதா?''

"இல்ல....''

Advertisment

சிறுவனாக இருந்த காலத்தில் இப்படிப்பட்ட கனமான வார்த்தைகளைக் கூறினால், என்னால் எப்படி புரிந்துகொள்ள முடியும்?

ஒரு வாரத்திற்குள் எனக்குத் தோன்றியது... இந்த தாத்தா மிகவும் வெறுப்பை அளிக்கக்கூடிய மனிதர் என்று.தாத்தா தூங்கும்போது, நான் கடை வீதிக்குச் சென்றேன்.

மூங்கில் கூண்டுகளில் அடைக்கப்பட்ட பைங்கிளிகளை விற்பனை செய்யக்கூடிய தமிழ் பேசும் ஒரு மனிதனை நான் பார்த்தேன். அந்தத் தமிழனின் கையில் விற்பனைக்காக மயிலின் தோகைகளும் இருந்தன.ஒரு கிளியைச் சொந்தமாக வாங்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உண்டானது. கையில் காசு இல்லை.

விலையையும் கேட்கவில்லை.

அந்தக் காலத்திலேயே நல்ல வியாபாரியாக இல்லாமலிருந்த நான் கையில் கிடந்த அரை பவுன் மோதிரத்தைக் கொடுத்து விட்டு, ஒரு கிளியை வாங்கினேன்.

வீட்டிற்கு வந்தேன். அந்த கிளியை தாத்தாவிற்குத் தெரியாத வகையில் ஒரு மூலையில் கட்டி தொங்கவிட்டேன்.

கிளிக்கு என் தாத்தாவின் மீது மரியாதை இல்லை அல்லவா? அது ஓசை எழுப்பி,ஆரவாரம் உண்டாக்கியது.

அழைக்கப்படாத ஒரு பச்சைக்கிளி வீட்டிற்கு வந்திருக்கும் விஷயத்தை தாத்தா எப்படியோ தெரிந்துகொண்டார்.

தாத்தாவின் நல்ல குணம் கொண்ட தலை தாழ்ந்தது. கோப குணம் கொண்ட வால் எழுந்தது.

"நீ கிளியை வாங்கினாயா?''

"வாங்கினேன்.''

"ஓசையைக் கேட்டு சொல்லல. கடை வீதியிலிருந்து வந்த கிட்டு நாயர், நீ இந்த தாய்க் கிளிக்காக மோதிரத்தை மாற்றிய விஷயத்தைச் சொன்னார். நான் உன்னைச் சபிக்கிறேன். அடுத்த பிறவியில் நீ கிளியாக இருப்பாய்.

அசைவதையும் பறப்பதையும் உயிருடன் இருப்பதையும் அடைத்து வைப்பதற்கு நமக்கு உரிமையில்லை.'' இவ்வளவையும் கூறிவிட்டு, தாத்தா என் பச்சைக் கிளியைத் திறந்து விடுவதற்கு முயற்சித்தார். நான் அழுது கொண்டே, என் சிறிய கைகளால் தாத்தாவை இடித்தேன்.

தொடர்ந்து கெஞ்சினேன்...

"இரண்டு நாட்களுக்கு நான் கிளியை வைத்திருக்கிறேன்!''

"சரி'' என்று கூறினார் தாத்தா.

மறுநாள் சுற்றி வந்து ஏணியில் ஏறி பரணை அடைந்தபோது, தானியங்கள், அரிசிப் பெட்டிகள் ஆகியவற்றிற்குப் பின்னால் பார்த்த ஒரு பொருள்... யாரோ ஒரு கலைஞன் தேக்கு, ஈயம் ஆகியவற்றைச் சேர்த்து உண்டாக்கிய அழகான பறவைக் கூண்டு... தூக்கிப் பார்த்தபோது, என்னைவிட அதிக எடையைக் கொண்டிருந்தது.

கூண்டிற்குக் குறுக்காக நீளமான மரத் துண்டும்,பறவை ஆடி விளையாடக்கூடிய இரண்டு ஊஞ்சல்களும் இருந்தன.

நான் ஒரு அதிகாரம் கொண்டவனைப்போல அந்த கூண்டைக் கையில் வைத்தவாறு தாத்தாவிடம் கேட்டேன்: "இது யாரோட கூண்டு?''

தாத்தா அடிபணிந்தார். "உன் வயதில் நான் ஒரு பெண் கிளியை வாங்கினேன். அதற்காக அப்போது உண்டாக்கிய கூண்டு இது.''

"அப்படின்னா... தாத்தா... நான் என் கிளியை இந்த கூண்டில் அடைக்கட்டுமா?''

தாத்தா எதுவும் கூறவில்லை.

தாத்தாவின் இன்றைய சொற்பொழிவும் பழைய செயலும் ஒன்றாக இல்லையே!

என் பச்சைக்கிளி அரண்மனையைப் போலிருந்த அந்த கூண்டிற்குள் கைதியாக ஆனாள். அதற்கு முந்திரிப் பருப்பையும் பூவன் பழத்தையும் ஜாதிக்காய் பலகாரத்தையும் கிராம்பையும் முந்திரிப் பழத்தையும் நான் கொடுத்தேன்.

இடையில் அவ்வப்போது முந்திரிப் பழத்தைத் தருவதற்காக தாத்தாவும் வருவார். ஒருநாள் தாத்தா கேட்டார்:

"பெண் கிளி பேசும். உனக்குத் தெரியுமா? எல்லா பெண் கிளிகளும் பேசாது. நாம் கற்றுத் தரணும்.''

கிளியின் கல்வியை ஆரம்பித்து வைத்தது தாத்தாதான்.

அது அறிவாளியான பெண் கிளியாக இருந்தது. அதனால், அது மூன்று நாட்களுக்குள் கூற ஆரம்பித்தது.

"சிவம் சிவகரம் சாந்தம்...''- தாத்தாவிற்கு பெண் கிளியை மிகவும் பிடித்து விட்டது. இந்தச் சமயத்தில்தான் என் கஸின் பாலு அங்கு வந்து சேர்ந்தான். அவனும் கிளிக்குக் கற்றுத்தர ஆரம்பித்தான். "டேய்... போடா...' ஆந்தை...''

கிளி அதையும் கற்றது.

தாத்தாவிற்குக் காலில் களிம்பைத் தேய்ப்பதற்காக வந்து போகும் ஒரு வயதான மனிதர் இருந்தார்- கிட்டு நாயர். என்ன காரணம் என்று தெரியவில்லை..

கிட்டு நாயரைப் பார்க்கும்போது, பெண் கிளி கூறும்: "ஆந்தை... ஆந்தை...."

ஒருநாள் கிட்டு நாயர் என்னிடம் கூறினார்: "சின்ன ஸ்வாமி... கிளியிடம் கொஞ்சம் மரியாதையாக பேசச் சொல்லுங்க''.

நான் கிளியிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டேன்: "கிட்டு நாயரைப் பார்க்குறப்போ, தங்கமான கிளியே...நீ சிவம் சிவகரம் சொல்லு.''

தாத்தாவுடன் இருந்த மூன்றாவது வாரத்தில் இந்த கிளிக் கூண்டிற்குள் பெண் கிளி இறந்து மல்லாந்து கிடக்கிறது.

அது தற்கொலை இல்லை என்பதையும்,அதிக வயது காரணமாக இறக்கவில்லை என்பதையும்... சிறுவனாக இருந்தாலும்... என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.நான் அழுதுகொண்டு நிற்கும்போது, தாத்தா கழியை ஊன்றியவாறு நடந்து வந்தார். தாத்தா கேட்டார்: "நீ ஏன் அழுறே?''

நான் பதில் கூறவில்லை.

கேள்வி மீண்டும் கேட்கப்பட்டது.

அப்போதும் நான் பேசவில்லை.

அப்போது தாத்தா கூறினார்: "மனிதனாக இருந்தாலும், கிளியாக இருந்தாலும்... நல்ல வார்த்தைகளைக் கூறவேண்டும். இந்த கிளி எதற்கு கிட்டு நாயரை "ஆந்தை... ஆந்தை...' என்று சொன்னது?''