ஆயிரம் ஆயிரம் துப்பாக்கிகள்
அவன் என்கிறபோது மரியாதையை
மத்திய அரசு தந்தால் என்ன?
மாநில அரசு தந்தால்தான் என்ன?
அணையா நெருப்பும்
அஞ்சேல் என்ற சொல்லும்
உடையானை-
ஒரு வார்த்தையாய்ச் சுருக்கினால்
’படையானை!’
அருட்பெருஞ்ஜோதிக்கு
அர்த்தம் தேடாமல்
இருக்கும் இடத்தை எல்லாம்
வடலூராக மாற்றியவன்.
நட்பு மதம்... ஈகைச்சாதி...
செல்விருந்துக்கு சிறப்புச்செய்து
நாளும் வரும் விருந்துக்கு வாசல்
திறந்தவன்
நல்விருந்தானான் வானத்தவர்க்கு!
நதி நீர்ப் பங்கீடு கேட்டு
’காவிரி கெடக்குது வறண்டு
எதுக்குக் குடுக்கனும் கரண்டு’
-என்று நான் கோஷம் எழுதிய
நெய்வேலிப் போராட்டத்தை
நேர்த்தியாய் நெய்தவன்
திரையுலக ஆளுமைகளை
ஒரு குடையின் கீழ் செய்தவன்....
தோல்வியால் சோர்ந்து
துவண்டிருந்த ‘கலைஞரை’
கடற்கரைக் காற்றாய்
கருணை ஊற்றாய்
புத்துணர்ச்சிப்
பொங்கலிட்டு-விழாவில்
பொன் எழுதுகோல்’ நட்டு
சாதனைச் சரித்திரம் படைத்த சத்ரியனை-
எப்பிறப்பில் காண்போம் இனி?
சென்னைத் திரையுலகம் தேடிவரும்
சின்னஞ்சிறு பறவைகளை
சேகரித்துக் காப்பாற்றும்
வேடந்தாங்கல் ஒன்று
ராஜாபாதர் தெருவில் இருந்தது.
சினிமாச் சிவிகையில் புதியவர்களை
சிங்காரித்து ஏற்றிவிட்டு
தரையில் படுத்துறங்கும்
தர்மராசர் கலாசாலை அது.
கதை சொல்லப்போனால்
காலை உணவும்
மாலை இடப்போனால்
மதிய உணவும் கட்டாயம்!
வீட்டுக்குப் போனால்
விருந்து தராமல் -அவன்
விடை தந்ததில்லை.
அவன் அரிசி ஆலை -
மதுரையில் என்றாலும்
அன்னசாலை
அவன் இருந்த இடம் எல்லாம்!
ப்
வறுமையைத் தீர்க்க
விஜயம் செய்வான்
கஷ்டம் நீக்க விஜயம் செய்வான்
அநீதி போக்க விஜயம் செய்வான்
இங்கு பெயர்ச்சொல் ஒன்று
வினைச்சொல்லாய்ப்
பெருமையைப் பெற்றது!
காந்தம் -கனத்த இரும்புகளிடம்
கல்வியும் கற்றது.
காவிய கால காயசண்டிகையை
அந்த மணிமேகலையை
கண்டதில்லை அவன்.
ஆபுத்திரனையும்
அருகில் பார்க்கவில்லை
ஆனால்;
அமுத சுரபி’மட்டும் எப்படி வந்தது அவன் கையில்?
இடைவிடாத படப்பிடிப்பால்
85 களின் இரவுகள் தோறும்
அவன்
உறக்கமின்றி நடித்துக்கொடுத்த
ஊமை விழிகள்-பேசின.
திக்குமுக்காடிக் கொண்டிருந்த
திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு
திசைகாட்டிய
கலங்கரை விளக்கம் அவன்.
தோரணை மிடுக்கு
-தோற்றப்பொலிவுடன்
நன்மைக்காக போராடியவனாக
நடித்த போதெல்லாம்-அந்த
நடை, உடை, பாவனையை
பின்பற்ற முயன்ற
உண்மைக் காவல் உயர் அதிகாரிகள்
இப்போது இறுதியாய்
மக்கள் பூத்த மயான நேரத்திலும்
பின்பற்றி நடந்தார்களே...
சுத்தமான அரசியல் செய்ய நினைத்தும்
சூழ்ச்சிச் சூறாவளிகளால் சுருண்டும்
தமிழையும் தேசியத்தையும்
தாங்கி நின்ற தமிழன் அருகில்
ஆத்மார்த்தமாய் அழுதபடி நிற்பது
அந்த வீரப் பிரபாகரனின்
வேதனை அடையாளமோ?
கிருமிப்போரில்
சரிந்தவர்கள் சடலம் புதைக்க-
தன் கல்லூரி வளாகத்தையே
கல்லறையாக்கச் சம்மதித்த
கர்ணனின் ஆத்மா-தன்
ஆயுள் முடிந்தும்
கல்லறை என்ற பெயரில்
அரசு நிலத்தை வாங்க
ஆசைப்படவில்லையே...
ரேசன் பொருட்களை
வீதி வீதியாய்ச் சென்று
வீடுதேடிக் கொடுப்பேன்
என்றவன்
இப்போது விடைபெற்றான்
வீதிவீதியாய்ச் சென்று...
தீராத நோய்களுடன்
திணறிக்கொண்டிருந்த
கடைசி மணித்துளிகளில்
மருத்துவ அறையின் வாசலில்
குரூரப் பசியுடன் வந்து நின்ற
கொரோனா ராட்சதனுக்கு
சாப்பிடக் கொடுக்க
எதுவுமே இல்லை என
சங்கடப்பட்டவனிடம்
கொரோனா
‘உன் உயிரைத் தருவாயா?’-என
உருகிக் கேட்டவுடன்...
தலை அசைத்து சைகையால்
வாவென்று அழைத்து வரவேற்று-
தன்னையே தந்தானோ
தவப்புதல்வன்... தர்ம மகன்?