உலகத்தில் காணப்படும் பொருள்களில் இருவேறு தன்மைகள் அமைந்திருப்பது இயல்பு. உதாரணமாக, இருள் - ஒளி என்ற இரு வேறு தன்மைகள் ஒரு நாளின் முழுமை. ஆனாலும், இவற்றில் ஏதோ ஒத்திசைவு இருப்பதை யாராலும் மறுக்க இயலாது. இதை நட்புமுரண் என்று கொண்டாடி வருகிறோம். ஒரு குழந்தையின் உருவாக்கத்திற்கு - பெண்மை, ஆண்மை என்ற இரண்டு கூறுகள் காரணமாகின்றன. இதில் எந்தக் கூறின் பங்களிப்பு உயர்ந்தது என்று பிரித்துப் பார்ப்பது இயற்கை விதிக்கு மாறானது.
கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர் என்று விரிவடையும் குடும்ப அமைப்பு குழந்தை வளர்ப்புக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. பெண்கள் தலைமை ஏற்ற சமூகத்தில் படிப்படியாக ஆணாதிக்கச் சிந்தனை மேலெழுந்து மகளிர் சுயமரியாதையை அழித்துக்கொண்டாலும் குடும்ப அமைப்பைப் போற்றவேண்டும் என்ற கருத்தாக்கம் உண்டானது.
ஆரோக்கியமான உணவு, அறிவுக்குத் துணைநிற்கும் கல்வி என்று எல்லாவற்றையும் குடும்பத்திற்காக இழக்கவேண்டிய நெருக்கடி உருவானாலும் அதைத் தவறாக எண்ணவேண்டிய அவசியமில்லை என்ற கருத்து ஆழமாக விதைக்கப்பட்டது.
அடிப்படைத் தேவைகள் நிறைவேறாமல் இருந்தாலும் அவற்றை இழப்பு என்று கருதாமல் ‘தியாகம்’என்ற வஞ்சக வார்த்தையால் நியாயப்படுத்தி வந்தனர். திரும்பத் திரும்ப ஒரே பொய்யைக் கேட்கும்போது ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றுவதுபோல, சமூகத்தில் சரிபாதி அளவில் இருக்கும் பெண்கள் சுயமரியாதையைவிட, தன்மதிப்பு - தன்மானத்தைக் காட்டிலும் குடும்ப அமைப்பே புனிதமானது என்று நம்பத் தொடங்கினர்.
பிள்ளை பெறும் இயந்திரத்திற்குப் படிக்கவேண்டிய அவசியம் இல்லை; கணவனின் பாலியல் இச்சைகளைத் தீர்த்து வைக்க வேண்டியவளுக்குக் கல்வி எதற்கு; சமையலறைப் பதுமைகளுக்கு வேலைவாய்ப்பு என்பது கூடுதல் சுமை என்ற நிலையில் பிரச்சாரங்கள் தொடங்கின. கடைசியில், ஆடு நனைவதற்கு ஓநாய் வருந்தும் கதையாக முடிந்துபோனது.
பிற்போக்குத்தனமான கருத்துக் களுக்குத் துணை செய்வதற்காக, அவற்றை நியாயப்படுத்துவதற்காக, இந்தக் கருத்துக்களுக்கு ஆதரவான சாத்திரங்களைப் படைத்தனர்.
சாத்திரங்களில் சொல்லப்பட்டதற்கு மாறாக நடந்தால் சமூகத்தில் அதர்மம் நிலைகொள்ளும், நாட்டில் அநியாயம் தலைவிரித்தாடும். அதிலும் குறிப்பாக, பெண்கள் தங்கள் கடமையை உணர்ந்து வாழவேண்டியது அவசியம். ஆறுகளையும், மொழிகளையும், நாட்டையும் தாயாகப் பாவித்து ஏற்றம் தரும் தேசத்தில் பெண்கள் தங்கள் தர்மத்தைக் கைவிடாமல் மேற்கொள்வது இன்றியமையாதது. ஒருவேளை ஆண் தன் கடமைகளை நிறைவற்றத் தவறினாலும், ஒவ்வொரு பெண்ணும் தனக்குச் விதிக்கப்பட்ட விதிமுறைகளுடன் வாழ்ந்தால் அவளுக்குச் சொர்க்க உலகம் கிடைக்கும் என்று நம்ப வைக்கப்பட்டனர்.
பெண

பெண் என்பவள் போகப் பொருள்; பெண் என்பவள் பேராசை பிடித்த பேய்; பெண் என்பவள் நம்பிக்கைக்கு உரியவள் அல்லள்; சூதும் பொய்யும் வஞ்சகமும் நிறைந்தவள். எப்போது வேண்டுமானாலும் தந்தையை, கணவனை, சகோதரனை ஏமாற்றிவிட்டுச் செல்லக்கூடியவள். ஆண்களைத் தன் ஆசை வலைக்குள் சிக்க வைக்கும் சாமர்த்தியசாலி. எனவே அவளுக்கு எந்த உரிமையும் தராமல் அடக்கிவைக்க வேண்டும். இல்லையென்றால் குடும்பத்திற்கு மாறாத பழியை உண்டாக்கிவிடுவாள். இந்தப் புரட்டுப் பரப்புரைக்குப் பெரிதும் துணைசெய்கிறது மனுதர்மம்.
இந்த நூலின் கருத்தைப் பார்க்கும்போது இது ஆணாதிக்க மனநிலையிலிருந்து படைக்கப்பட்டிருப்பதைத் தெளிவாக உணரமுடியும். பருவம் அடைவதற்கு முன்பே திருமணம் என்ற பெயரில் அவளை ஓர் ஆடவன் கையில் ஒப்படைத்துவிட வேண்டும். இல்லையென்றால் அவள் பிறந்த குடும்பத்திற்குத் தீராத பாவம் வந்து சேர்ந்துவிடும். பெண்கள் வேலைக்குப் போகத் தொடங்கினால் ஒழுக்கத்துடன் வாழ்வது சாத்தியமில்லை. எக்காரணத்தைக் கொண்டும் அவர்களை வேலைக்கு அனுப்பாமல் இருப்பதே சிறந்தது.
மகளிர் தாம் இறக்கும் வரையில் ஏதாவது ஓர் ஆணின் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும். அதாவது தந்தையின் பாதுகாப்பில், பிறகு கணவனின் பாதுகாப்பில், அதன் பிறகு மகனின் பாதுகாப்பில், அதன் பிறகும் தன் பெயரனின் பாதுகாப்பில் என்று ஆணின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் இருக்கவேண்டுமே தவிர அவள் சுதந்திரமாக வாழ்வது என்பது இயலாது.
பொதுவெளிகளில், அரச சபைகளில் ஒருத்தி அவமானப்படுவது, குடும்பத்திற்காக ஒருத்தியைப் பலியிடுவது போன்ற அத்தனை வன்முறைக் குப் பின்னாலும் இருப்பது என்ன? ஆதிக்க மனநிலை என்ற திமிர் பிடித்த மனோபாவம் தவிர வேறில்லை.
மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. பீஷ்மர் என்று சொல்லப்படும் கங்கையின் மகனை, அர்ச்சுனன் பாரதப் போரில் வீழ்த்தியது மிக முக்கியமான பகுதி. போர்க்களத்தில் போரிடும்போது எதிரில் ஒரு பெண்ணைப் பார்க்க நேர்ந்தால், அந்த இடத்தில் தான் அம்பு எய்ய மாட்டேன் என்று உறுதி பூண்டவர் அவர். அந்த இடத்திற்குத் திருநங்கையான ‘சிகண்டி’வருகிறாள். அவளைப் பார்த்ததும் அம்புகளைக் கீழே வீசிய தன் தாத்தன் பீஷ்மரை அம்பு தொடுத்து அவர் இறப்பிற்குக் காரணமாகிறான் அர்ச்சுனன். இந்த சிகண்டி யார் என்று மகாபாரதப் பக்கங்களைத் திருப்பினால் புரியும். இந்தத் திருநங்கை முற்பிறவியில் பீஷ்மரால் வஞ்சிக்கப்பட்டவள்.
பீஷ்மர் தன் இரண்டு தம்பிகளுக்கு மணமுடிக்க மூன்று பெண்களைச் சிறையெடுத்து வருகிறார். அவர்களுள் ஒருத்திதான் இப்போது சிகண்டி என்று பெயர் பெற்றிருக்கும் அம்பா. இவள் ஏற்கனவே ஒருவனைக் காதலிப்பதாகச் சொல்லியும் அதைக் காதுகொடுத்துக் கேளாமல் கட்டாயப்படுத்தி அழைத்துவருகிறார். கடைசியில் மற்ற இரண்டு பெண்களை இரண்டு சகோதரர்கள் மணந்துகொள்ள இப்பெண் மட்டும் கைவிடப்பட்டவளாக, பிறந்த இடத்திற்கும் செல்ல முடியாமல், காதலனையும் சேர முடியாமல் தனித்துவிடப்பட்டவளாக நின்றுவிடுகிறாள். எந்தப் போக்கிடமும் இல்லாததால் இறுதியில் பீஷ்மரையே தன்னை மணக்கும்படி வேண்டுகிறாள்.
பீஷ்மர் முற்றிலுமாக மறுத்து விடுகிறார். தான் திருமணம் செய்துகொள்வதில்லை என்று தன் தந்தைக்கு வாக்கு கொடுத்திருப்பதாகக் கூறி அவள் வேண்டுதலை நிராகரிக்கிறார். இதனால் ஆதரவற்ற அவளுக்கு மனத்தில் பழிவாங்கும் எண்ணம் மேலிடுகிறது. தன்னுடைய பரிதாப நிலைக்கு, பீஷ்மரே காரணம் என்று கோபம் கொப்பளிக்க, ‘‘என்றைக்கு இருந்தாலும் என் பொருட்டுதான் உனக்கு மரணம் நிகழும்”என்று சபித்துவிட்டு இறந்துவிடுகிறாள். அவளே சிகண்டியாக வந்து போர்க்களத்தில் பீஷ்மர் முன் தோன்றி அவர் இறப்புக்கு வித்திடுகிறாள்.
காலங்காலமாகப் பெருமை பொங்க சொல்லப்படும் இந்தக் கதையிலும் பெண் ஒருத்தியின் காதலுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்ற அநீதி ஒரு புறம்; ஒரு பெண்ணின் ஆதரவற்ற அவலநிலை இன்னொரு புறம். பெண்ணின் விருப்பத்திற்கு, வார்த்தைகளுக்கு எந்த விதத்திலும் வாய்ப்பு கொடுக்காத இந்தச் சமூகம் இதிகாசத்திலும் பேசப்படுகிறது. இதன் தொடர்ச்சியை இன்றைய நடைமுறை வாழ்க்கையிலும் காணமுடிகிறது என்பது பெரிய சோகம்!
ஆனால் இதே பழைய முறையைப் பாதுகாக்க பக்தியின் பெயரால் சமூக மூளையைச் சலவை செய்து வைத்திருக்கிறது ஆணாதிக்கச் சமுதாயம்.
பக்தியின் வண்ணம் மாறாமல், அதைக் கட்டிக் காக்கும் முழுப்பொறுப்பையும் மகளிர் தலைமேல் கொண்டு நடத்தி வருகின்றனர். குடும்பத்தில் பிள்ளைகளிடம் பக்திப் பயிரை வளர்ப்பதிலிருந்து, வழிபாட்டுக்கான எல்லா வேலைகளையும் சிரத்தையாகச் செய்து முடிப்பவள் அவள். கோவில்களிலும் பெண்களின் எண்ணிக்கையே பெரும்பாலும் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால், மதகுருமார்களாக இருக்கும் தகுதி இவர்களுக்கு வாய்ப்பதே இல்லை. வீட்டைத் தூய்மை செய்து, நிவேதனத்திற்கான பிரசாதத்தைச் சமைத்து, விளக்கேற்றி, இறைப்பாடல்களைப் பாடி, தெய்வச் சிந்தனையை வீட்டில் உண்டாக்குகிறாள். அவளுக்கு ஆன்மிகத்தில் கிடைத்த இடம் எது?
சிவபெருமானைக் கடவுளாக வழிபடும் சைவ அடியார்களான அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வரிசையில் மூவர் மட்டுமே பெண்களாக இருக்கின்ற னர். சைவ மடங்களை நிர்வகிக்கும் ஆதீனங்கள் எல்லோரும் ஆண்களே! திருமாலைத் தெய்வமாகக் கருதும் வைணவ அடியார்களான ஆழ்வார்கள் எண்ணிக்கையில் ஒரே பெண் ஆண்டாள் மட்டுமே. வைணவ சமயத்தில் போற்றப்படும் சீயர்களில் பெண் என்ற பேச்சுக்கே இடமில்லை. கிறித்துவ சமயத்தை வழிநடத்தும் போப்பாண்டவர்களில் எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இசுலாமிய மதகுருமார்களில் ஒருவர்கூட பெண் இல்லை என்பதில் எங்கே இருக்கிறது பாலின சமத்துவம்?
மாதவிடாய் நேரத்தில் பெண்கள் உடலிலிருந்து வெளிப்படும் இரத்தத்தைத் தீட்டு என்று சொல்லி இழிவுபடுத்தி வைத்திருக்கின்றனர். இயற்கையாக நடக்கும் உடலியல் மாற்றத்தைப் புரிந்துகொள்ளாமல், கடவுளுக்கு ஆகாது என்று கூறுவது எப்படி நியாயமாகும். அந்த மாதிரியான காலங்களில் இவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். இவர்களைத் தொட்டுவிடக் கூடாது. இறைவனுக்காக மாலை போட்டுக் கொண்டு, விரதமிருந்து கோயில் செல்லக்கூடியவர்கள், இந்தத் தீட்டுபட்டவரைப் பார்த்துவிடக்கூடாது என்றெல்லாம் சொல்லி வைத்திருப்பது அபத்தம்!
புறச்சூழல்கள் ஆற்றல் வாய்ந்த கடவுளைப் பாதிக்கும் என்றால் அது கடவுளாக இருக்கமுடியுமா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. தீட்டு என்ற கற்பிதங்களைத் தள்ளி வைத்துவிட்டு, கோயில் அர்ச்சனை முதலிய எல்லா வழிபாட்டு முறைகளை யும் மகளிரே நடத்தலாம் என்று சொல்லி, அதற்கு வழி அமைத்துக் கொடுத்தவரைக் கடவுளாகப் பார்க்கும் போக்கு இந்தச் சமூகத்தில் இருக்கிறது. மனிதனைக் கடவுளாகப் பார்ப்பதற்குப் பின்னால் இருக்கும் உளவியலை எப்படிப் புரிந்து கொள்வது?
இத்தனை நாட்களாகத் தன்னைத் தீட்டு என்று சொல்லி மோசமாக நடத்திய இடத்தில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கும்போது, தெய்வநம்பிக்கை இருப்பவர் அதற்குக் காரணமானவரைக் கடவுளாகப் பார்க்கும் மனநிலை தானாக உருவாகி விடுகிறது. அப்படிக் கோயில் கருவறைக்குள் வழிபாடு நடத்த மேல்மருவத்தூரில் வழி அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் வழிபாடு நடத்துவதால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.
இன்னும் உலகம் தன் இயல்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதும் பழைய பஞ்சாங்கத்தைப் பேசுவதில் என்ன பயன் இருக்க முடியும்!
பெண்ணைப் புனித நிலையில் வைத்துக் கொண்டாடுவதற்குப் பதிலாக, அவள் அழகை வியக்கும் முட்டாள்தனத்துக்குப் பதிலாக, அவளிடம் தீட்டு இருக்கிறது என்று சொல்லி இழிவுபடுத்துவதற்குப் பதிலாக, அவளைச் சக உயிராக மதிக்க வேண்டும் என்பதே மனிதநேயம் கொண்ட எல்லோருடைய விருப்பமாக இருக்கிறது. ஆனால் சமத்துவ சமுதாயத்திற்குக் குந்தகம் விளைவிப்பதில் சமயத்திற்கு மிக முக்கியப் பங்குண்டு. எல்லா அடிமைத்தனங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் எப்போதும் அவிழ்க்க முடியாத முடிச்சு போட்டு வைத்திருக்கிறது ஆணாதிக்கச் சமூகம். தற்போது கல்வியின் துணையால் இந்த முடிச்சுகளை அவிழ்க்கும் சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது.
கல்வி என்ற தடியைக் கொண்டு, சமயத்தின் பெயரால், சாதியின் பெயரால் தம்மை எதிர்க்க வரும் அடிமைத்தனங்களை, வலியுறுத்தப்படும் உளுத்துப்போன கோட்பாடுகளைத் தவிடுபொடியாக்கி வருகின்றனர்.
"வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோம் என்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடுவோம் - தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவோம் என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப சமீப காலமாக விடுதலை உணர்வு பெற்றுவருகின்றனர்.
இந்தச் சூழலில் பெண்கள் அர்ச்சகராகும் தகுதி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழ்நாட்டில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் முதல்முறையாக மூன்று பெண்கள் அர்ச்சகர்களாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்த மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளில் படித்தனர். அவர்களில் தேர்ச்சி பெற்ற 98 மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அவர்களுள் திருச்சி திருவரங்கத்தில் உள்ள பயிற்சிப் பள்ளியில் வைணவ முறைப்படி பயிற்சி பெற்ற மூன்று பெண்களான கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த ரம்யா, கிருஷ்ணவேணி , திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியைச் சேர்ந்த ரஞ்சிதா ஆகியோர் சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. அனைத்துத் தரப்பினரும் கோயிலுக்குள் செல்லமுடியாத ஒரு காலம் இருந்தது. தற்போது அனைத்துத் தரப்பினரும் கோயிலுக்குள் செல்லலாம் என்பது மட்டுமன்றி, பெண்கள் உட்பட அர்ச்சகப் படிப்பைக் கற்றுக் கொண்ட எல்லோரும் அர்ச்சகராகலாம் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதனைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பு. பாலின சமத்துவத்தை, சமூகநீதியைச் சட்டத்தின் மூலமாகத்தான் நிறைவேற்ற முடியும் என்ற ஆதங்கம் இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகச் சட்டம் இயற்றிய அரசு காட்டிய கருணை பாராட்டுதற்குரியது! நிலவிலும் கால் பதிக்க முடிந்த மகளிருக்குக் கோயில் கருவறை என்பது சிம்ம சொப்பனமாகவே இருந்தது. அந்த நிலைமாறி கருவறைக்குள் நின்று வழிபாடு செய்ய சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது. மனுதர்ம மடமைகள் இதன் மூலம் தகர்க்கப்பட்டிருக்கிறது.
இன்னும் உடல் சார்ந்து இழிவுபடுத்தும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் சமூக முன்னேற்றம் என்பது கானல்நீராகி விடும். ஆனால், இன்னொரு பக்கம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்பது முழுவீச்சில் நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் அநியாயமும் இதே மண்ணில்தான் நடக்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல உரிமை என்று பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி துணிவுடன் பேசும்போது, ஒரு பெண்ணாக அவருக்கு இருக்கும் உள்ளக்குமுறலைப் புரிந்து கொள்ள முடிகிறது. பாலின சமத்துவமும், அதற்குள் நடைமுறைப்படுத்த வேண்டிய சமூகநீதியும் இன்று மட்டுமல்ல, என்றைக்குமான தேவை!